சமீபத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு “தீபாவளி ரிலீஸாக” வந்துள்ளது.
வெளியீடு: சந்தியா பதிப்பகம் சென்னை.தொலைபேசி: 044-24698979
ஈரம் முகந்த மேகம்...
கவிஞர்கள் பலருக்கு நல்ல வசனம் கை வந்திருக்கிறது. பாரதியாரின் வசனம், ஒரு நல்ல தொடக்கம். ஒரு பத்திரிகையாளரும் ஆன பாரதிக்குப் போதுமான தமிழ்ச் சொற்கள், அரசியல் தொடர்பாகக் கிடைக்காமைக்கு அவர் வருந்தியிருக்கிறார். என்றாலும் பாரதியின் வசனம், சிக்கலற்ற, தெளிவான, கலைகள் மேலான அக்கறையும், சுலபத் தன்மையும் கொண்டவை. கண்ணதாசனின் வசனம் மிக ரம்யமானவை. புது மாதிரியானவை. சராசரிக் கவிஞரான நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை, அவருடைய வாழ்க்கை வரலாறான ‘என்கதை’ மூலம் நல்ல உரைநடை நூலைத் தந்திருக்கிறார். உ.வே.சாமிநாதையரின் பொது ஜனங்களுக்கான வசனம், மிக அழகியவை. அவரது புலமை நடை மறையும் இடத்தில் மிக அழகான வசனம் தோன்றுகிறது.
கலாப்ரியா, அடிப்படையில் ஒரு கவிஞர். தமிழின் முக்கியமான கவி. திணை எனப்படும் நிலம் தொடர்பான அவர் கவிதைகள் மிகவும் கவனிக்கத் தக்கவை. தாமிரபரணி வற்றிச் சாமியார்கள் கோவணமாகச் சிறுத்துப் போனாலும், அந்த நதி தீரக் கவிஞர்களிடம் எப்போதுமே ‘நீர்வளம்’ வற்றிப் போகவில்லை. அவர்களின் மனவயல்களில் அந்த நதி பாய்ந்தே அவர்களைச் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. புதுமைப்பித்தன் முதல் இன்றைய சங்கர் ராமசுப்ரமணியன் வரை.
சங்க இலக்கியத்தில் ஒரு குறிப்பிட்ட திணையை அதிகமாகப் பாடிய கவிஞர்களை அத்திணையைக் குறித்தே, ஒரு அடைமொழியைப்போல அவர் பெயருடன் சேர்த்துச் சொல்வதுண்டு. பாலையை அதிகம் பாடிய கடுங்கோ என்பவன், பாலை பாடிய பெருங்கடுங்கோ எனப்படுகிறான். கபிலர் குறிஞ்சியில் தேர்ந்தவராக இருக்கிறார்.
அம்மரபு பற்றிக் கலாப்ரியாவை மருதம் பாடும் கவிஞர் எனலாமா என்றால்: எனலாம். மருதம் என்பது, வயலும் வயல் சார்ந்த இடமும். இது பள்ளி விளக்கம். மருத மரத்தால் பெயர் பெற்ற, பண்படுத்தப்பட்ட பூமி, மருதம். மனிதகுலம், வேட்டை மற்றும் மீன்பிடித் தொழிலுக்கு அடுத்தகட்ட வளர்ச்சியாக ஆற்று நீரைக்கொண்டு. மண்ணைப் பண்படுத்தி வயலாக்கி விவசாயம் செய்யக் கற்று, நிரந்தர இருப்பிடங்கள் கண்டு, குடும்பம் என்ற புதிய அமைப்பைக் கண்டறிந்த பூமி மருதம். அதுகாறும் சமூகத்தில் நிலைபெற்ற பாலியல் சுதந்திரம், குடும்ப நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. குடும்பத்துக்குள் இருந்த பெண்கள், குடும்ப அமைப்புக்கு வெளியில் இருந்த பெண்களால் பதற்றத்துக்குள்ளாகிறதைச் சங்கஇலக்கியமும் பதற்றத்துடனேயே பதிவு செய்கிறது. மருதம் ஒரு குறியீடாக மாறுவது இந்த இடத்தில்தான். காமம், ஒரு கடக்க முடியாத விஷயம் என்பது மாத்திரமல்லாமல், கடக்க வேண்டாத விஷயமாகவும் புரிந்து கொள்ளப்படுவது இந்தச் சூழலில்தான். காமப் பிரிவினால் ஏற்படும் ஊடல் என்பது மட்டும்தான் மருதம் என்று குறுகிய அர்த்தம் செய்து கொள்ளப்படுகிறது. அப்படி அல்ல. ஆற்றோர, நீர் நிலை சார்ந்த தட்பவெப்பச் சூழல் காமத்துக்கு உதவும்படியாக இருக்கலாம் என்று ஒரு சார் மக்கள் (மக்கள் & அறிவுலகினர்) கருதி இருக்கலாம். அங்ஙனமாகில் பாலையில் காதல் வராதா என்பதல்ல. வரும்தான். இடம் விஷயமில்லை. காதல், தாமிரபரணி வரண்டாலும் வரும்தான். அது உயிர் எழுச்சி. நிலம், அது மருதமோ, குறிஞ்சியோ, நெய்தலோ, முல்லையோ, பாலையோ, எதுவானாலும் காதல், கூடல், பிரிவு, இரங்கல் எல்லாமும் இருக்கும்தான். நீரின், தன்மை போல, காற்றின் குளிர்ச்சி போல உள்ளார்ந்த காமம், கலாப்ரியாவுக்கு நெல்லை நிலத்தில் லயிக்கிறது என்பதுதான் இக்கட்டுரைகள் சொல்லும் செய்தி. சதுக்கம் தோறும் நிற்கும் பூதங்கள் போல, வீதிகள் தோறும் வீடுகள் தோறும் யாரோ ஒரு பெண் இருந்து கொண்டு அவரின் காமத்தை விசுறுகிறாள். காகிதம் போல, விசிறப்பட்ட காற்றில் அவர் அதைப் பாசாங்கில்லாமல், அத்தியாயம் தோறும் பதிவு செய்கிறார். அம்பிகாபதியின் காமத்தை ஒரு அழகிய பாடல் இப்படிப் பதிவு செய்கிறது. உருகி | உடல் கருகி | உள் ஈரல் பற்றி | எரிவது | அவியாது | என் செய்வேன் | வரி அரவ | நஞ்சிலே | தோய்ந்த | நளினவழிப் | பெண் பெருமாள் | நெஞ்சிலே | இட்ட | நெருப்பு.
கலாப்ரியாவும் எரிந்திருக்கிறார். ஆனால், பல பத்தாண்டுகளுக்குப் பிறகு அந்த அவஸ்தைகளைப் பற்றி எழுதுவதால், மென்மையும் நிதானமுமாக அந்த வதைகளைச் சொல்ல முடிகிறது. ஆனால், அவை நிகழ்ந்த காலத்து தகிப்பை உணர வைக்க முடிந்திருக்கிறது அவரால். இது முக்கிய விஷயம்.
·
முந்தைய தொகுப்பான சந்தியா வெளியிட்டிருக்கும் ‘நினைவின் தாழ்வாரங்கள்’ என்ற கவனிப்புக்குள்ளான தொகுப்பின் அடுத்த பாகம் இந்தத் தொகுதி என்று கூறலாம். பள்ளிப்பருவமும், பதின்பருவமும் சுழன்று இளைஞராக உருமாறும் கலாப்ரியா, இந்தத் தொகுப்பில் காணப்படுகிறார்.
ஒரு குழந்தை, தன் குழந்தைமைக்கு எப்போது விடை கொடுக்கிறது? இது முக்கியமான கேள்வி. தன் பாடப் புத்தகத்துப் பக்கங்களுக்குள் வைத்த மயிலிறகு குட்டி போடாது என்று தெரிந்த அந்தக் கணத்தில் குழந்தை, குழந்தைமையை இழக்கிறது. மனித குலத்தின் பேரிழப்பு தொடங்குவது அங்குதான். ஆனாலும் இது தவிர்க்க முடியாததுதான். அந்த இழப்பை எதைக் கொண்டு இட்டு நிரப்பிக் கொள்கிறது அக்குழந்தை? கனவுகளைக் கொண்டுதான். கனவுகளை யார் தருகிறார்கள். நட்பு, சினேகம், தோழமை ஆகிய பண்புகளின் உருவமாக யார் இருக்கிறார்களோ, அவர்களே கனவுகளை அருள்கிறார்கள். அந்த நட்பு, தோழமை எதிர் & சகபாலினர்களிடம் இருந்து வருகிற போதுதான், இழப்புகள் இட்டு நிரப்பப்படுகின்றன. ஒரு ஆணுக்கு அவனது எல்லாப் பள்ளங்களும், எல்லா இழப்புகளும் அந்தப் பெண்ணின் ஒரு பார்வையில், ஒரு உணர்த்தலில் சரி செய்யப்படுகிறது.
கலாப்ரியா என்கிற ஆளுமை இப்படியான பரிசுகளால், விருதுகளால், அங்கீகரிப்பால் உருவாகி இருப்பதன் எழுத்துச் சாட்சியமாக இந்தக் கட்டுரைகள் விளங்குகின்றன.
·
திராவிட முன்னேற்றக் கழகம் வளர்த்தெடுத்த சினிமா அரசியல் (இது உம்மைத் தொகை), அக்கட்சியை 1967இல் ஆட்சியில் அமர்த்தியது. அந்த ஆண்டுக்கு முன்னும் பின்னுமாக இக் கட்டுரைகளின் அல்லது நினைவுச் சிதறல்களின் அல்லது தன் வரலாற்றுச் சித்திரங்களின் காலம் நிலை கொள்கிறது. கலாப்ரியா, தன் பதின் பருவத்தை மற்றும் இளமைப்பருவத்தைச் சொல்லிச் சென்றாலும், அக்காலத்து வரலாறும் உடன் தட்டுப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதன் அர்த்தம் அவர் தன்னை எழுதிச் செல்லும்போது தன் காலத்து, தன் சமூகத்து வரலாற்றையும் எழுதிச் செல்கிறார். இது இப்புத்தகத்தின் முக்கிய பங்களிப்பு. உதாரணத்துக்கு தமிழகத்தின் சில பகுதியில் உருவான தீப்பெட்டித் தொழில் சார்ந்த சிறு வேலைகள். மக்கள் ஜீவனோபாயம் கருதி வீட்டிலிருந்தே செய்த தீப்பெட்டிக்குக் காகிதம் ஒட்டும் வேலை. அது நீலக்கலரில் இருக்கும். அதையொட்டி பேச்சு வழக்கொன்றே ஏற்பட்டது. ‘பெண், நல்ல தீப்பெட்டி கலர்ல சேலையும் ஜம்பரும் போட்டிருக்கா’ என்பது போல. கலாப்ரியா இதைக் குறிப்பிடுகிறார். இதன் அரசியல் பின்னணி மிகவும் அவலம் பொருந்தியது. விவசாயம் என்கிற இந்தியாவின் ஜீவாதாரமான தொழிலை இந்திய அரசு பல ஜந்தாண்டுத் திட்டம் தீட்டித் திட்டமிட்டு அழித்துக் கொன்றதன் மறுதலை இந்தத் தீப்பெட்டி, பட்டாசுத் தொழில்களில் ஒரு இளம், முதிய சமுதாயமே தன்னை இணைத்துக்கொண்டது. விவசாயத்தைப் பூண்டோடு அழிக்க மண்ணை அழிக்க வேண்டுமே! அதற்கென்றே அரசால் அறிமுகப்படுத்தப்பட்டன செயற்கை உரமும் பூச்சிக்கொல்லி மருந்துகளும். கொஞ்சம்கூட மனக் குறுகுறுப்பின்றி எப்படி இருக்க முடிகிறது நம் அரசியல்வாதிகளால்? முடிகிறது. ஒரு உபரித் தகவல்.
அரிசிப் பஞ்சம் நேர்ந்து, மக்களுக்கு ரேஷனில் மைதாவும் கோதுமையும் வழங்கப்பட்டபோது, ஒரு சினிமாப்பாடல் இப்படிப் பாடியது.
‘ஒரு ஜாண் வயிறே இல்லாட்டா
உலகத்தில் ஏது கலாட்டா
உணவுப் பஞ்சமே வராட்டா - நம்ம
உயிரை வாங்குமா பரோட்டா?
சினிமாப் பாடல்கள், சினிமாப் பாத்திரங்களுக்கு மட்டும் உரியன அல்ல என்பதையும், ஒரு சமூகத்தின் நடைமுறை வாழ்க்கையின் சாரத்தைக் கட்டமைக்கும் உணர்வூக்கியாகவும் செயல்படுவன என்பதும் நிருபணமான ஒன்று. குறிப்பாக இளமைப்பருவம் பல ரசாயனங்களால் உருவாக்கப்படும் வேதியியல் கூடம். கண்ணுக்குத் தெரியாத அமிலமாகப் பாடல்கள் கலாப்ரியா உள்ளிட்ட அக்கால இளமையைக் கட்டமைத்துள்ளதைப் பல பக்கங்களில் காணலாம். நான் ஜிப்பா அணியத் தொடங்கும்போது என் மாமன், ‘என்ன மாப்பிளே, காதல் தோல்வியா’ என்றது இதற்கு மேலும் ஒரு உதாரணம். அந்தக் காலத்தில் ஜெமினி. காதல் சிக்கலுக்குள்ளாகும் போது, ஜிப்பா அணிவார். பல ஆண்டுகள் என் கனவில் பத்மினிதான் வந்து கொண்டிருந்தார். தனியாக வந்தார். அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை, ராமச்சந்திரன் என்றொரு டாக்டரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா போனார். அப்புறம் என் கனவுகளில் புருஷனோடு வந்தார் பத்மினி. ‘இனி வேண்டாம்’ என்று நானே சொல்லி அனுப்பிவிட்டேன். பல இனிய தருணங்களைப் புருஷர்கள், கலாப்ரியாவுக்கும் கெடுத்தவர்களாக இருக்கிறார்கள். கதைகளாக உருவாக வேண்டிய பல அழகிய கணங்களை, வண்ணதாசன், வண்ணநிலவன் கதைகளில் காணப்படும் பல அற்புத தருணங்களைக் கலாப்ரியாவின் இந்தக் கட்டுரைகளில் காண முடிகிறது. ஒரு நல்ல அனுபவம். அக் காரணங்களாலேயே இக்கட்டுரைகள் கனவுத்தன்மை கொண்டவையாக பரிமளிக்கின்றன.
·
சில மாதத்துக்கு முன், நானும் தொ. பரமசிவமும், கிருஷியும் குறுக்குத் துறை முன் நின்றோம். புதுமைப்பித்தன் கதைகள் உலாவிய இடம்.
ஆறு சிதைந்து இருக்கிறது. தூரத்தில் ஒரு பிள்ளையார் கோவில், சோகமே வடிவாக. ஆறு வற்றிப்போவது. ஈரம் வற்றிப் போவது. ஒரு சமூகம் தன் நெஞ்சின் ஈரத்தை வற்றடித்துக் கொண்டால், எதைக் கொண்டு அதை ஈடு செய்ய முடியும். முடியாது. எனக்கு வருத்தம் மிகுந்தது. காவிரி இரு கரையும் புரள நடந்ததைக் கண்டவன் நான். இன்று தஞ்சைக்குப் போகும் போதெல்லாம் நெஞ்சில் ரத்தம் வடிகிறது. குறுக்குத் துறையிலும் அத்துன்பத்தை அனுபவித்தேன்.
நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை. கலாப்ரியா, நேற்றிருந்தை எழுதி இருக்கிறார். ஒரு கவியின் இளம்பருவ வரலாறாக மட்டுமின்றி, ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய தென் மாவட்டத்து, தமிழக வரலாறாகவும், இது விரிகிறது. ஒரு காலகட்டத்து மனித மனத்தின் வரலாறாகவும் இது தனித்து நிற்கிறது. மனித மனதின் வரலாறாக இது இருப்பதாலேயே, ஈரம் முகந்த மேகமாக இது அழகாகக் கருத்திருக்கிறது. வானத்துக்கு அழகு செய்வது நிலவு என்று நினைப்பது தப்பு. உண்மையில் வானத்துக்கும் பூமிக்கும் அழகு சேர்ப்பது கருத்த கொண்டல்கள்தாம்.
கலாப்ரியா பொழிகிறார். நனைவோம்.
அன்புடன்.
பிரபஞ்சன்