நான் படித்த பள்ளியில், L.D.S (Literary Debating Society) வகுப்புகள் என்று, மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமை தோறும், கடைசிப் பிரியடில் நடைபெறும். பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, கதை சொல்லுதல், மோனோ ஆக்ட், என்று ஒவ்வொரு வகுப்பிலும் நடைபெறும். ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.ஆண்டுக்கு ஒரு முறை மொததப் பள்ளிக்கும் சேர்த்து, போட்டிகள் மாதிரி நடைபெறும்.அதில் ஓவிய, கட்டுரைப் போட்டி எல்லாம் உண்டு. தேர்வானவர்களுக்கு பெரிய பள்ளிக் கூடம் என்கிற மெயின் ஸ்கூலில் நடைபெறும் விழாவில் பரிசளிப்பார்கள்.வருடாவருடம் வண்ணதாசன் ஓவியப் போட்டியில் ஒரு பரிசு வாங்குவார்.
எட்டாம் வகுப்பு படிக்கும் போது என்று நினைவு, நானும் கட்டுரைப் போட்டிக்கு பெயர் கொடுத்தேன். நான் தேர்ந்தெடுத்த ஒரு தலைப்பு ”நூலகமும் அதன் பயன்களும்”.அடிக்கடி மார்க்கெட் லைப்ரரி என்கிற நூலக ஆணைக்குழு நூலகத்துக்குப் போவதுண்டு.அங்கே சுவரில் நூலகத்தைப் பற்றிய பொன்மொழிகளை, தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒட்டி வைத்திருப்பார்கள், அவைகளை எல்லாம்.ஒரு தாளில் எழுதி எடுத்து வைத்திருந்தேன். ’கார்லைல்’ பொன் மொழி ஒன்று, இன்னும் ஒன்றிரண்டு, எல்லாவற்றையும் ஒரு “அண்ணாச்சி’’யிடம் கொடுத்து, மொழிபெயர்ப்பு செய்து வாங்கினேன். அவர் தன் பங்கிற்கு ஒன்றை எழுதித் தந்தார்.”நீ தூங்க வேண்டுமென்றால் கலாசாலைக்குச் செல், கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் நூலகத்திற்குச் செல்” என்கிற மாதிரியில் வரும்.
கட்டுரை எழுதும் போது மற்றதெல்லாம் மறந்து விட்டது.இது மட்டும் மறக்கவில்லை.அப்படியும் ’கலாசாலை’ என்று எழுதவில்லை, அந்த வார்த்தையும் மறந்து விட்டது, ”பள்ளி” என்று எழுதினதாக நினைவு.இரண்டு வாரம் கழிந்தது பரிசளிப்பெல்லாம் முடிந்து விட்டது. எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. ”மாணவர் கட்டுரை மலர்”- புத்தகத்தைப் பார்த்து எழுதிய ஒருவனுக்கு கிடைத்தது. தமிழ் சார் வகுப்பு, காலையில் மூன்றாம் பிரியட் வந்தது.பசி நேரம், பொதுவாக அவர் அதில் வகுப்பு எடுக்க மாட்டார், ஏதாவது வாசியுங்கள் என்று சொல்லி விட்டு பேசாமல் ஓய்வெடுப்பார். திடீரென்று அவர், ”ஏல யாருல அது ’’தீனாக் கானா சோமசுந்தரம்” என்றார். நான் எழுந்து நின்றேன்.”அடே நீங்க தானா, இங்க வாங்க கொஞ்சம்” என்றார்.ஒரு பூனைக் குஞ்சைப் போல அவர் அருகே சென்றேன். “ஓஹ்ஹோ, பள்ளிக் கூடத்துக்கு தூங்கத் தான் வாறியோ, லைப்ரரியிலேயே படிச்சுருவியோ”என்று கேட்டு விட்டு, பிரம்பை எடுத்து விளாசிவிட்டார்.சுருண்டு விட்டேன்.அப்புறமாக, ”மத்தப் படி நல்லாத்தான் இருந்தது..” என்று சமாதானப் படுத்தினார்.ஆனாலும் நான் அதற்கப்புறம், ரொம்ப நாளைக்கு கட்டுரைப் போட்டி பக்கமே போவதுமில்லை. அந்தப் பொன் மொழி ’எழுதி’த் தந்த அண்ணாச்சியைக் கண்டாலும் ஒளிந்து கொள்வேன்.
ரொம்ப காலத்திற்குப் பின் “மிரர்’’ அல்லது ’டைஜஸ்ட்’ பத்திரிக்கையில் ஒரு துணுக்கு படித்தேன். மேலை நாட்டு நகர் ஒன்றில் ஒரு பெரிய நூலகத்தை, இன்னும் விசாலமான கட்டிடத்திற்கு மாற்ற முடிவு செய்து, அதற்கான பிரம்மாண்டமான கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது.இனி புத்தககங்களை எல்லாம் புதிய நூலகத்திற்குக் கொண்டு சென்று முறையாக அடுக்க வேண்டும்.அது ஒரு சவாலாகவும், அதிகச் செலவு பிடிக்கும் வேலையாகவும் இருந்தது. நூலக நிர்வாகிகளுக்கு ஒரு யோசனை உதித்தது.ஒரு அறிவிப்பு வெளியிட்டார்கள்,”நூலகத்தின் உறுப்பினர்களோ அல்லது விருப்பமுள்ள யாராயிருந்தாலும் நூலகரை அணுகி, பத்து புத்தகங்கள் வரை, தங்கள் விலாசத்தை தந்து விட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.இரண்டு வார அவகாசத்தில் அதை திருப்பித் தரவேண்டும். ஆனால் அதை புதிய கட்டிடத்தில் கொண்டு வந்து தரவேண்டும்.மாணவர்கள், சிறுவர்கள், யார் வேண்டுமானாலும் இதில் பங்கு பெறலாம்” என்று அறிவித்தார்கள்
அந்த நூலகத்தில் உறுப்பினராவது மிகவும் கடினம்.இந்த அறிவிப்பு எல்லோரையும் கவர்ந்தது.போட்டி போட்டுக் கொண்டு நூல்களை எடுத்துச் சென்று பயன் படுத்திவிட்டு,புதிய நூலகத்தில் கொண்டு வந்து பொறுப்பாகத் திருப்பிக் கொடுத்தார்களாம். செலவும் குறைவானதாம், புத்தங்களை வகைமை மாறாமல் அடுக்குவதும் எளிதாயிருந்ததாம்.நம்ம ஊர் என்றால் இப்படி புத்தகங்களை திரும்பத் தருவோமா, தெரியவில்லை.(இன்றைய கால கட்டத்தில் நூலகம் பக்கம் போவோமா, அதுவும் தெரியவில்லை.) கடையில் கிடைக்காத நல்ல புத்தகத்தை வாங்க சிறந்த வழி நூலகத்தில் வாடகைக்கு எடுத்து விட்டு, தொலைந்து விட்டதாக அபராதம் கட்டுவது. அதை விட எளிதான வழி.... அது எல்லோருக்கும் தெரிந்தது....சமீபத்தில் ஒரு செய்தி. (ஹி..ஹி.. நெட்டில் படித்தது) அமெரிக்காவை உருவாக்கிய சிற்பி ஜார்ஜ் வாஷிங்டன், நியூயார்க் சொசைட்டி லைப்ரரியில், 5.10.1789 அன்று, படிப்பதற்கு எடுத்த, இரண்டு புத்தகங்களைத் திருப்பித் தரவேயில்லையாம். அதற்கான அபராதம், இன்றையக் கணக்கில் மூன்று லட்சம் டாலர்கள். அவர் மட்டும் என்றில்லை, பல அதிகாரிகளும் அமைச்சர்களும் திருப்பித் தரவேண்டிய நூல்கள் நிறைய உள்ளனவாம். புத்தகப் புழுக்கள் எல்லோருமே இப்படித்தான் போலிருக்கிறது.அந்த நூலகத்தின் ”தலைமை நூலகர் சொல்வதெல்லாம், அபராதம் எப்படியோ போகட்டும், வாஷிங்டனின் வாரிசுகள் யாராவது, அந்த இரண்டு புத்தகங்களையும் திருப்பித் தந்தால் அதுவே மகிழ்ச்சியான காரியம்”, என்கிறாராம்.