Sunday, March 20, 2011

நன்றி: எஸ்.ராமகிருஷ்ணன்....


தாகூரும் கலாப்ரியாவும்

கவிஞர் கலாப்ரியாவின் ஒடும் நதியை வாசித்துக் கொண்டிருந்தேன், குங்குமம் இதழில் தொடராக வந்த போது வாசித்திருந்தாலும் ஒரே புத்தகமாகப் படிக்க நன்றாக இருக்கிறது, அந்திமழை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது, மருதுவின் அரிய ஒவியங்களுடன் உருவாக்கப்பட்ட சிறப்பான புத்தகமது,

கலாப்ரியாவின் உரைநடை தன்னியல்பான வசீகரத்துடனிருக்கிறது . இந்தப் புத்தகத்திற்கு வண்ணதாசன் எழுதியுள்ள முன்னுரை சமீபத்தில் நான் படித்த மிகச்சிறந்த முன்னுரை, வரிக்கு வரி அடிக்கோடிடத் தூண்டுகிறது, எனது புத்தகங்களுக்கு நானே முன்னுரை எழுதிக் கொள்கிறேன், வேறு எவரும் எழுதியதேயில்லை, இப்போது கல்யாணி அண்ணனிடம் முன்னுரை வாங்குவதற்காகவே ஒரு புத்தகம் எழுதலாம் போலிருக்கிறது,

கலாப்ரியாவின் இந்தக் கட்டுரைகளை உரைநடைக்கவிதைகள் என்று தான் சொல்ல வேண்டும், அவ்வளவு கவித்துவமான விவரணைகள். அடங்கியும் பீறிட்டும் எழும் உணர்வெழுச்சிகள். வாழ்வனுபவத்திலிருந்து உருவான உண்மைகள். நம்மைச் சுற்றி நிகழும் நுண்மையான தருணங்களைச் சுட்டிக்காட்டுகின்றன இந்தக்கட்டுரைகள்

இதில் இலக்கியஇரவு என்ற கட்டுரையில் அவர் மேற்கோளாக காட்டுகின்ற தாகூரின் கவிதையை வாசித்த போது நெகிழ்ச்சியடைநது போனேன், மிக அற்புதமான கவிதையது

என்னுடைய இளஞ்சாராயத்தை

என் கோப்பையுடனேயே

ஏற்றுக் கொள்

இன்னொன்றிற்கு மாற்றுகையில்

இந்த நுரைகள் மறைந்து விடலாம்

கவிதையை வாசிக்கையில் மனம் பரிதவிப்பு கொள்கிறது, இந்த ஆதங்கம். அக்கறை எவ்வளவு முக்கியமானது , நுரையோடு தருவது என்பது உயர்ந்த பட்ச அன்பு இல்லையா,

இதைப்பற்றி யோசிக்கையில் தாகூரைப்பற்றி பல ஆண்டுகாலமாக தொடர்ந்து பேசிக் கொண்டேயிருப்பவர் கலாப்ரியா என்று தோன்றியது,

எனது கல்லூரி நாட்களில் கலாப்ரியாவை முதன்முறையாக சந்தித்தேன், அன்றிலிருந்து பல சந்தர்ப்பங்களில் அவரோடு உரையாடியிருக்கிறேன், வீட்டிற்கு சென்று தங்கி இரவெல்லாம் பேசியிருக்கிறேன், என்னை எழுதத் தூண்டியதுடன் தொடர்ந்து இன்றுவரை என் படைப்புகளை அக்கறையோடும் அன்போடும் உடனே வாசித்துப் பகிர்ந்து கொள்பவர் கலாப்ரியா, அவ்வகையில் அவரும் எனது ஆசான்,

குற்றாலம் கவிதைப்பட்டறையின் போது ஒரு முறை அவர் தாகூரின் கவிதையை மேற்கோளாகக் காட்டியது நினைவில் இருக்கிறது, அப்போது அரங்கில் பலரும் எஸ்ராபவுண்ட். ஆலன்கின்ஸ்பெர்க். ஆக்டோவியா பாஸ் என்று பேசிக் கொண்டிருக்கையில் தாகூரின் கவிதை வரிகளை கலாப்ரியா நினைவு கூர்ந்தது மிகவும் பிடித்திருந்தது,

அதன் பிறகு அவரது சில தனிப்பேச்சில். இலக்கிய உரையாடல்களில் தாகூரை எடுத்துச் சொல்வதைக் கேட்கும் போதெல்லாம் வியந்திருக்கிறேன், தாகூரைப் பற்றி கலாப்ரியா பேசும் போது அவரது முகம் மாறிவிடும், குரலில் ஒரு பரவசம் கூடிவிடும், அவர் சொல்லும் வரிகள் உருவாகும் பிரமிப்பும் வியப்பும் நிகரற்றது, ஒரு மகாகவியின் மீதான தனது தீராத அன்பை வெளிப்படுத்துகிறார் என்பதை கேட்பவர்கள் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும், தாந்தேயைப் பற்றி போர்ஹே எழுதும் போது இதே பரவசமும் வியப்பும் கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறேன்

கலாப்ரியாவின் கவிதைகளில் வரும் சசியைப் போல அவரது இன்னொரு கனவுக்காதலி தாகூர் என்றே சொல்வேன்

தாகூரின் வரிகளும் தாகூரின் வாழ்க்கையும் கலாப்ரியாவிற்குள் ஆழமாக வேர் விட்டிருக்கின்றன, ஒருவகையில் தாகூரின் கவிதையுலகினை கலாப்ரியா முன்னெடுத்துப் போகிறார் என்றும் சொல்லலாம் , அது வெறும் பாதிப்பில் எழுதப்படுவதில்லை, ஆழ்ந்த ஈடுபாட்டில் உருவாவது, இசையில் தனது ஆசான் பாடும் முறையிலே சீடனும் பாடுவது போன்ற ஒரு பரம்பரை, ஒரு பின்தொடரல். அல்லது ஒரு மயக்கம்,

தமிழின் நவீன கவிஞர்கள் பலரையும் நான் சந்தித்துப் பேசியிருக்கிறேன்,ஒருவரும் ஒரு வரி கூட தாகூரைப்பற்றி பேசி நான் கண்டதேயில்லை, கலாப்ரியா ஒருவரே தாகூரை ஆழ்ந்து கற்று தொடர்ந்து தாகூரின் கவிதைகளைக் கொண்டாடி வருகிறார், கலாப்ரியாவின் கவிதையுலகில் தாகூரின் வாசனை இருந்து கொண்டேயிருக்கிறது, சந்தனத்தை தொட்ட கையில் மணமிருப்பதை போல,

எனக்குத் தாகூரின் கவிதைகளை விடவும் அவரது சிறுகதைகள் அதிகம் பிடிக்கும். அதிலும் குறிப்பாக கல்லின் வேட்கை என்ற சிறுகதை மிகவும் பிடித்தமானது, ஆனால் தாகூரின் கவிதைகளைப் பற்றி கலாப்ரியா சொல்லும் தருணங்களில் எல்லாம் உடனே அவரது கவிதைகளை வாசிக்க வேண்டும் என்ற உத்வேகம் உருவாகும், எங்காவது தேடி வாசித்துப் பார்ப்பேன், ஆனால் அதில் அதிகம் மனம் ஒன்றிப்போகாது, அப்படியே விட்டுவிடுவேன்,

தாகூரின் 150 வது ஆண்டை ஒட்டி இந்த ஆண்டு அவரது புத்தகங்களுக்கு பல புதிய பதிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன, அதில் Stray birds என்ற கவிதைப் புத்தகத்தை வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன், என்னை முழுமையாக இழுத்துக் கொண்டு போய்விட்டது, மிக முக்கியமான கவிதை புத்தகமது, இதை வாசித்து முடிக்கையில் தாகூர் இந்தியாவின் மஹாகவி என்பதை முழுமையாக உணர்ந்தேன், இப்போது அவரது கவிதைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன், இக்கவிதைகள் என்னைப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன, எவ்வளவு உன்னதமான வரிகள்., பக்தி இலக்கியத்தின் தொடர்ச்சியும் நவீன பிரக்ஞையும் ஒருங்கே கொண்ட மனது உருவாக்கியது போலிருக்கிறது,

தாகூரின் உரைநடையைத் தொடர்ந்து வாசித்த போது நான் கண்ட ஒரு அம்சம் அவரது மையப்படிமமாக இருப்பது வீழ்ச்சி, குறிப்பாக குடும்பம் அல்லது சமூகம், இரண்டிலும் ஏற்படும் எதிர்பாராத நெருக்கடியும் அதை எதிர்கொள்ளும் முறையுமே அவரது களங்கள், இக்கதைகளில் ஒரு விசித்திரம் அல்லது ஒரு எதிர்பாராத திடுக்கிடல் வந்து போகும், கதையை இயல்பான நிகழ்வுகளின் வழியே சித்தரித்துக் கொண்டே வந்து சட்டென ஒரு பெரிய வீழ்ச்சியை. துக்கத்தை அல்லது மீறலை அநாயசமாக சாதித்துவிடுவார், அப்போது அடையும் திகைப்பு நம்மை உலுக்கிவிடும், அது தான் அவரது உத்தி.

அதே அம்சத்தின் தொடர்ச்சியை கலாப்ரியாவின் கவிதைகளிலும் காணமுடிகிறது.

சினேகிதனின் தாழ்வான வீடு

கறுப்பேறிப் போன
உத்திரம்,
வீட்டின் வளர்ந்த பிள்ளைகளுக்கு
கையெட்டும் உயரத்தில்.
காலேஜ் படிக்கும் அண்ணன்
அதில் அவ்வப்போது
திருக்குறள்,
பொன்மொழிகள்
சினிமாப் பாட்டின்
நல்லவரிகள் – என
எழுதியெழுதி அழிப்பான்
எழுதுவான்.
படிப்பை நிறுத்திவிட்டு
பழையபேட்டை மில்லில்
வேலை பார்க்கும் அண்ணன்
பாஸிங்ஷோ சிகரெட்டும்
தலைகொடுத்தான் தம்பி
விளம்பரம் ஒட்டிய
வெட்டும்புலி தீப்பெட்டியும்
உத்திரத்தின்
கடைசி இடைவெளியில்
(ஒளித்து) வைத்திருப்பான்.
அப்பா வெறுமனே
பத்திரப்படுத்தி வந்த
தாத்தாவின் – பல
தல புராணங்கள்
சிவஞானபோதம்
கைவல்ய நவநீதம்
சைவக்குரவர் சரித்திரங்கள்
பலவற்றை,
வெள்ளையடிக்கச் சொன்ன
எரிச்சலில், பெரிய அண்ணன்
வீசி எறியப் போனான்.
கெஞ்சி வாங்கி
விளக்கு மாடத்தில் அடைத்ததுபோக
உத்திர இடைவெளிகளில்
ஒன்றில் தவிர
அனைத்திலும்
அடைத்து வைத்திருப்பாள்
அவன் அம்மா.
முதல்ப்பிள்ளையை
பெற்றெடுத்துப் போனபின்
வரவே வராத அக்கா
வந்தால்-
தொட்டில் கட்ட
தோதுவாய் – அதை
விட்டு வைத்திருப்பதாயும்
கூறுவாள். . . . . . . . . . . . .
நின்றால் எட்டிவிடும்
உயரம்
என்று சம்மணமிட்டு
காலைக் கயிற்றால் பிணைத்து -
இதில் தூக்கு மாட்டித்தான்
செத்துப்போனார்
சினேகிதனின்
அப்பா.

இக்கவிதையும் ஒரு வீழ்ச்சியுற்ற குடும்பத்தின் சித்திரமே, அதன் கடைசிவரி தான் மற்ற வரிகளைத் தாங்கி நிற்கிறது, ஆனால் அப்படியொரு வரியை ஆரம்ப வரிகளை வாசித்துக் கடக்கையில் நாம் எதிர்பார்க்கவே முடியாது, நிசப்தமான குளத்தின் மீது எங்கிருந்தோ வீசி எறியப்பட்ட கல்லை போல அது மொத்த நிகழ்வையும் சமன்குலைக்கிறது, கவிதையை வாசித்து முடிகையில் கசப்பான வேப்பிலைச் சாற்றை ஒரு மிடறு குடித்தது போன்றிருக்கிறது , கவிஞன் தன் குரலை உயர்த்தாமல் மரணத்தையும் மற்றொரு நிகழ்வாகவே சொல்கிறான், அந்த மரணம் நம்மை உலுக்குகிறது, அதிலிருந்து திரும்பி முதல் வரியை நோக்கி கண் நகர்கையில் எல்லா வரிகளும் பற்றி எரியத்துவங்குகின்றன, கவிதை உருவாகும் விந்தை இது தானே,

தாகூரின் கவிதைகளின் மையம் உலகை வியத்தலும் தன்னிலை துறத்தலுமே. தன்னை எப்போதுமே ஒரு இலையாக. ஒரு பூவாக. ஒரு அலையாக, அல்லது ஒரு பாடும் பறவையாகவே தாகூர் முன்வைக்கிறார், அதாவது தனது செயல்பாடுகள் யாவும் எவராலோ இயக்கப்படுகின்றன, தான் வெறும் கருவி என்பதே அவரது எண்ணம், அதே நேரம் உலகின் பரவசத்தை முழுமையாக அனுபவிப்பதுடன் சகமனிதர்களின் சுகதுக்கங்களைப் பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்பதை தனது விருப்பமாக கொண்டிருக்கிறார்

தாமரை இலையின் அடியில் உள்ள பெரிய துளி நீ

நான் அதன் மேல் உள்ள சிறிய துளி என்றது பனித்துளி

குளத்தை பார்த்து,

என்ற தாகூரின் கவிதை வரி இதுவரை மனதில் இருந்த குளம் பற்றிய சித்திரத்தை முழுமையாக அழித்து எழுதுகிறது, குளம் ஒரு பெரிய துளி என்பது ஒரு கண்டுபிடிப்பு, இந்த விந்தையை எளிய சொற்களால் உருவாக்கி காட்டுவதே தாகூரின் கவித்துவம்,

அதே விந்தை கலாப்ரியாவிடமும் உள்ளது, அவரது புகழ்பெற்ற கவிதையான பிரிவுகளை வாசித்துப் பாருங்கள்

பிரிவுகள்

நாளை இந்தக் குளத்தில்
நீர் வந்து விடும்
இதன் ஊடே
ஊர்ந்து நடந்து
ஓடிச் செல்லும்
வண்டித் தடங்களை
இனி காண முடியாது
இன்று புல்லைத்�
தின்று கொண்டிருக்கும்
ஆடு, நாளை
அந்த இடத்தை
வெறுமையுடன்
சந்திக்கும்
மேலே பறக்கும்
கழுகின் நிழல்
கீழே
கட்டாந்தரையில்
பறப்பதை
நாளை பார்க்க முடியாது
இந்தக் குளத்தில் நாளை
நீர் வந்து விடும்

இக்கவிதையில் கழுகின் நிழல் பறக்கும் கட்டாந்தரையை நீர் வந்து நிரப்பிவிடும் என்ற வரியின் வழியே உருவாகும் உணர்வெழுச்சி மிகவும் அபாரமானது, குளத்தின் நீரற்ற சித்திரம் யாவையும் நீர் வந்து அழிந்துவிடுகிறது என்ற அவரது பார்வை தாகூரின் கவித்துவ சாதனைக்கு நிகரானதே

அன்றாட வாழ்க்கையில் இருந்து மேல் எழும்பியே நவீன கவிதைகள் எழுதப்படுகின்றன என்ற பொதுக்கருத்தியலை உதறியவர் கலாப்ரியா, அவரது கவிதைகள் தினசரி வாழ்விலிருந்தே துவங்குகின்றன, ஆனால் அதற்குள்ளாக அடைப்பட்டுவிடுவதில்லை, அவை எளிய நிகழ்வுகளின் வழியே மகத்தான தரிசனத்தைத் தருகின்றன,

தாகூரின் இளமைகாலம் பற்றிய ஒரு நூலை வாசித்திருக்கிறேன், அவரது இளம்பருவத்து காதல்கள். இசை. கவிதை மற்றும் ஒவியத்தின் மீதான ஈடுபாடு . கூட்டுகுடும்பத்தில் இருந்து வளர்ந்த் நினைவுகள் யாவும் ஒன்றிணைந்து இருக்கும், அது போன்ற ஒரு வாழ்க்கையே கலாப்ரியாவிற்கும் இருந்திருக்கிறது, அவையே அவரது கவிதைகளின் அடித்தளம் அதுவே தான் புரண்டு ஒடி இன்று உரைநடையாகியிருக்கிறது.

இக்கட்டுரைகள் சுய அனுபவங்களாக எழுதப்பட்ட போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்ள எழுதப்பட்டவையில்லை, அதில் அவரும் ஒரு பாத்திரம் அவ்வளவே, மற்றபடி அவர் எப்போதுமே நிராகரிப்பின் வலியை. புறக்கணிப்பின் வேதனையை. நேசமற்று போன புறச்சூழலை. வாழ்ந்து கெட்ட குடும்பங்களின் மௌனத்தையே எழுதிப் போகிறார், அவரது மனம் தனக்குள்ளாக ஒரு பெருந்துக்கத்தில் அமிழ்ந்து கிடக்கிறது, சாவுவீட்டில் எல்லா பூக்களின் வாசனையும் மாறிவிடுவதைப் போல அது ஒரு புரிந்து கொள்ள முடியாத நிலை,

பதின்வயதும் இளமைப் பருவ நினைவுகளும் மட்டுமே அவருக்கு கொண்டாட்டத்தின் பகுதியாக இருக்கிறது, அவருக்கு வாழ்க்கை பரிசாகத் தந்திருப்பது அதிகம் வலியையும் கசப்பையும் தான் போலும்,

ஆனாலும் அவர் அவற்றைப் பற்றி புகார் சொல்வதில்லை, அலுத்துக் கொள்வதில்லை, தனது பிரச்சனைகள், நெருக்கடிகளைக் கூட நிதானமாக. மறுப்பின்றி ஏற்றுக் கொள்ளவும் எழுதவும் முடிகிறது என்பதே அவரது எழுத்தின் வெற்றி,

கலாப்ரியாவைப் போலவே தாகூரை நேசிக்கும் இன்னொருவரையும் இங்கே அடையாளம் காட்ட விரும்புகிறேன் அவர் கனடாவில் வசிக்கும் சி. ஜெயபாரதன், தமிழில் விஞ்ஞானம் குறித்து மிக அழகாகவும் நுட்பமாகவும் எழுதிவருபவர் , இவரே ஒரு விஞ்ஞானி .

தாகூரின் கீதாஞசலியை அருமையாக மொழியாக்கம் செய்திருக்கிறார், இணையத்தில் நெஞ்சின் அலைகள் என்ற வலைப்பக்கத்தை நடத்தி வருகிறார் , திண்ணை இணைய இதழில் தொடர்ச்சியாக இவரது படைப்புகள் வெளியாகின்றன,

ஜெயபாரதன் தாகூரின் பக்தனைப் போலவே இருக்கிறார், அவரது இணையதளம் எங்கும் தாகூரின் வரிகளை நிரம்பியிருக்கின்றன, தாகூரின் மெய்தேடலையும் இயற்கை ரசனையையும் வியந்து போற்றுகிறார் ஜெயபாரதன், ஒரு விஞ்ஞானி இப்படி இருப்பது கூடுதல் வியப்பளிக்கிறது

தமிழ் சூழலில் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களை கொண்டாடி வருவது போல லத்தீன் அமெரிக்காவில் உள்ள கவிஞர்கள் தாகூரைக் கொண்டாடி வருகிறார்கள், சமகால லத்தீன் அமெரிக்க கவிதைகளுக்கு தாகூர் ஒரு முக்கிய பாதிப்பாக இருக்கிறார் என்று ஒரு கட்டுரையில் வாசித்தேன், குறிப்பாக ஸ்பானிய கவி விக்டோரியா ஒகம்பேயுடன் அவரது நட்பு குறித்து தனி புத்தகமே வெளியாகியிருக்கிறது,

1925ம் ஆண்டு தாகூர் பெருநாட்டின் அழைப்பை ஏற்று லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு பயணம் செய்தார். பயணத்தின் போது உடல் நலமில்லாமல் போகவே அர்ஜென்டினாவில் அவர் சில மாதங்கள் தங்கி ஒய்வு பெற்றார். விக்டோரியா ஒகம்பே அப்போது இளங்கவிஞர். அவர் தாகூரையும் காந்தியையும் மிகவும் நேசித்தவர். ஒகம்பே தேர்ந்த இலக்கிய வாசகர். ஆகவே தாகூரை ஆந்த்ரே ழீடின் மொழியாக்கத்தில் வாசித்திருக்கிறார். நோய்மையுற்ற தாகூரை தன் வீட்டிற்கு அழைத்து போய் தங்க வைத்து பராமரித்திருக்கிறார். அப்போது தாகூருக்கு வயது 66.

ஒகம்பேயின் இயற்கை எழில் நிரம்பிய வீடு தாகூரிற்கு ரொம்பவும் பிடித்து போனது. காலை வெளிச்சத்தில் அங்குள்ள மலர்களை காண்பது அவருக்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தது. விக்டோரியாவின் பெயரை விஜயா என்று தாகூர் மாற்றி அழைத்தது அவருக்கு பிடித்திருந்தது.

தாகூரின் ஒவியங்களை பாரீஸில் கண்காட்சி வைத்தபோது ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் மறுபடி சந்தித்து கொண்டார்கள். விக்டோரியா ஒகம்பே சர் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்தார். சர் என்றால் தெற்கு என்று பொருள். அந்த இதழின் வழியே தான் போர்ஹே, ப்யூன்டஸ் கொர்த்தசார் போன்ற முக்கிய எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். போர்ஹேக்கும் ஒகம்பேவிற்கும் ஆழ்ந்த நட்பிருந்தது. அவரும் தாகூரை வாசித்திருக்கிறார்

ஒகம்பே தாகூரை தனது மானசீக குருவாக கொண்டிருந்தார். கடிதங்களில் அதை தெளிவாக வெளிப்படுத்துகிறார். அந்த அளவு தாகூரின் பாதிப்பு ஸ்பானிய இலக்கிய உலகில் உள்ளது,

தாகூரின் கட்டுரைகள், சிறுகதைகள் இரண்டையும் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டு சலுகை விலையில் தந்தது, ஆனாலும் யாரும் வாங்கி படிக்கவேயில்லை, இந்தப் புத்தகக் கண்காட்சியில் இருபத்தைந்து ரூபாய்க்கு கிடைத்தது, த,நா,குமாரசாமி தன் வாழ்நாளை தாகூரை மொழியாக்கம் செய்ய செலவு செய்திருக்கிறார், அவர் கதியும் நிர்கதியே, இப்படித் தானிருக்கிறது தமிழ் சூழல்

தாகூரின் Stray birds தமிழில் தனித்தொகுப்பாக வந்திருக்கிறதா என்று தெரியவில்லை, ஆனால் தாகூரை அறிந்து கொள்ள விரும்புகின்றவர்கள் அவசியம் படிக்க வேண்டிய முதல் புத்தகம் இதுவே, ஒரு வரி இரண்டு வரி கவிதைகளால் ஆன இதை யாராவது முழுமையாக மொழியாக்கம் செய்தால் சந்தோஷமடைவேன்,

ஒடும் நதியின் கட்டுரைகளைப் பற்றி எழுத நினைத்து மனம் தாகூரிலும் கலாப்ரியாவின் கவிதைகளிலும் சென்று விட்டது, அது தான் நதியின் போக்கும், நாம் விரும்பும் படி ஒடுவது நதியில்லை தானே

••