சினிமா மந்திரம்
காய்ச்சல் அல்லது காலரா
ஊசி போட்ட விளைவு என்று நினைக்கிறேன், ஆறு அல்லது ஏழு வயது இருக்கும்.
பள்ளிக்கூடம் போகாமல் வீட்டில் இருந்தேன். அப்பாவின்
சபை, வீட்டின் தார்சாலில் கூடி இருந்தது. அது வழக்கமாய்க் கூடும் வெளி வட்டம். அவரது உள்வட்டம்
மதியச் சாப்பாட்டிற்கு மேல், மாடியில் கூடும். ( உள் வட்டம் வெளி வட்டம் என்பதெல்லாம் இப்போதைய பாஷை) இங்கே பக்கத்து வீட்டில் உள்ளவர்கள்
பின்னால் புறவாசலில்க் குடியிருப்பவர்கள் என்று கூடி இருப்பார்கள். நான் பட்டாசலிலேயே படுத்திருந்தவன் அம்மாவை நச்சரித்து தார்சாலில் ஒரு பாயை
விரிக்கச் சொல்லி, வந்து படுத்துக் கொண்டு அவர்கள் பேசுவதைக்
கேட்டுக் கொண்டிருந்தேன். அப்பா அப்போது மெட்ராஸ் போய்த் திரும்பி
இருந்தார். அவ்வப்போது போய் வருவார். திருநெல்வேலி
சினிமாக் கொட்டகை சார்ந்த அவரது சினேகிதர்கள் அப்போது படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்,
குல தெய்வம் படமாக இருக்கலாம். ஷூட்டிங் எடுப்பது
பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அப்பா கைகளைப் பக்கவாட்டில் நீட்டிக்
கை தட்டுவது போல் ஏதோ செய்து காண்பித்தார், இப்படிச் செஞ்சதும்
ஷூட்டிங் ஆரம்பிக்கும். உக்கார்ந்து பார்க்கவே முடியாது,
போரடிக்கும்… என்று சொல்லிக் கொண்டிருந்தது பசுமையாய்
நினைவில் இருக்கு. அது ஏன் அப்படிச் செய்கிறார்கள் பண்ணையாரே
என்று , எனக்குத் தோன்றிய கேள்வியை அவர்களே கேட்டதற்கு ஏதோ மழுப்பலாகவே
பதில் சொன்னார்.அதற்குள் போத்தி ஓட்டலிலிருந்து எல்லோருக்கும்
ஆரஞ்சு கிரஷ் வந்து விட்டது. நானும் கேட்டதற்கு ச்சீ,
காயச்சல் கண்ணு முழிக்காமக் கிடந்தேன்னு சொன்னாங்க கூல் டிரிங் கேக்கற
ஆளைப்பாரு என்று கதை கேட்கக் கூடியிருந்தவர்களில் யாரோ சொன்னார்கள். அப்பா குளிச்சி போனதும் குடி என்று ஒரு அரைத் தம்ளர் கொடுத்தார். அதுதான் அப்பா.
அப்பா
பக்க வாட்டில் கைகளை நீட்டித் தட்டிக் கண்பித்தது, கிளாப் அடிப்பதைத்தான்
என்று பின்னாளில் புரிந்தது, அது எடிட்டிங்கில் எவ்வளவு தூரம்
பயன் படும் என்பது ரொம்பப் பின்னால் ஸ்டுடியோவிற்குள் சுற்றித் திரியும் போது தெள்ளெனத்
தெரிந்தது. கனவுத் தொழிற்சாலைக்குள் செல்லும் கனவு என்பது ஒவ்வொரு
சினிமா ரசிகனின் ஆசை. பல நண்பர்கள், மெட்ராஸ்
போக வாய்ப்புக் கிடைத்த நண்பர்கள், ஸ்டுடியோ வாசலில் தவம் கிடந்து
வெறும் காத்திருப்போடு வந்திருக்கிறார்கள். அவர்களிடமும்,
சென்னையையே மிதித்திராதவர்களிடமும், உள்ளே நுழைய
வாய்ப்புக் கிடைத்தவர்கள் சொல்லும் கதைகளுக்கு ஏக மரியாதை இருக்கும். ஆனால் அதெல்லாம் சர்வர் சுந்தரம் படம் வரும் வரை. அதில்
ஷூட்டிங் பார்த்தவர்கள் சொல்லும் கதைகளான, சினிமா மழை,
பேக் புரொஜக்ஷனில் பைக் அல்லது குதிரை ஓட்டுவது
எல்லாவற்றையும் காட்டி விட்டார்கள்.
சர்வர் சுந்தரம்
“Errand boy” ஆங்கிலப் படத்தின் தழுவல். ஜெரி லூயிஸ்
நாகேஷின் மிகப்பெரிய ஆதர்ஸம். எரண்ட் பாய் படத்தைப் பார்த்த எங்களில்
சிலருக்கு சர்வர் சுந்தரத்தின் காட்சிகள் வியப்பாக இல்லை. ஆனால்
அதில் பாலச்சந்தரின் தமிழ் முத்திரை இருக்கும். எரண்ட் பாய் சனி
ஞாயிறு காலைக் காட்சியில்தான் தியேட்டரில் காட்டினார்கள். சனிக்கிழமை ரிசல்ட் கேட்டு ஞாயிற்றுக்
கிழமை காலைக் காட்சிக்கு கடுமையான கூட்டம். அப்போதெல்லாம் காலைக்
காட்சிக்கு பாதிக் கட்டணம். அதாவது 31 பைசா
பெஞ்சு டிக்கெட்- 18 பைசா, 66 பைசா பேக்
பெஞ்சு 31 பைசா.. இப்படி. அதிக பட்ச டிக்கெட்டே
2.06 பைசாவாகத்தான் இருக்கும். அப்படியும் அந்த
ஆங்கிலப் படத்தைப் பார்த்தவர்களை விடக் கேள்விப்பட்டவர்களே அதிகம். அதனால் சர்வர் சுந்தரம் பயங்கர ஹிட் ஆகி விட்டது. அப்புறம்
ஜெரி லூயிஸ் திரு நெல்வேலி வரை பிரபலமாகி விட்டார். அவர் படமெல்லாம்
ரெகுலர் காட்சிகளாகவே திரையிட்டார்கள், ஜெர்ரியின் நட்டி ப்ரொஃபசர்.
சிண்டெர் ஃபெல்லா, போன்றவை திருநெல்வேலியில் தினசரிக் காட்சிகளாக ஒரு வாரம் ஓடின.
நட்டி புரொஃபசர் அற்புதமான படம். இன்றும்,
53 வருடங்களாக அமெரிக்க தேசிய சினிமா காப்பகத்தில் அதன் பிரதியினைப்
பத்திரமாகப் பாதுகாக்கிறார்கள். அதன் இறுதியில் காட்டப் படும்
நடிக நடிகைகள் , கலைஞர்களின் பட்டியலில், அவர்கள் நேரில் தோன்றுவார்கள்.
அதையே பொம்மை தமிழ்ப் படத்திலும் எஸ். பாலச்சந்தர்
வைத்திருப்பார்.( இதஎகெல்லாம் முன்பே மணமகள் படத்தில் கலைவாணரும்
செய்திருப்பார்)
சர்வர்
சுந்தரத்திலிருந்து சினிமாவுக்குள் சினிமாவைக் காண்பிக்கும் கதைகள், காட்சிகளுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு அதிகம் உண்டாகி விட்டது. அது ஒரு ராசியான விஷயமாகவும் பட்டது. எம்.ஜி.ஆர் குதிரையில் போகும் காட்சிகள் எல்லாம் இப்படித்தான் என்று ஒரு சாரார் சொல்ல,
சிவாஜிக்கு பாவ மனிப்பு படத்தில், “மனிதன் மாறி
விட்டான்” பாடலில் சைக்கிள் கூட ஓட்டத் தெரியாதே, ஸ்டாண்ட் போட்டுல்ல மிதிப்பார் என்று எதிரணி சொல்லும். எனக்குத் தெரிந்து வானம்பாடி படத்தில்தான்,
சினிமாவுக்காக பாடல் ஒலிப்பதிவு செய்யும் காட்சி எடுக்கப் பட்டது.
ஆனால் அதில் கே.வி.மகாதேவன்
காட்சியில் தோன்ற மறுத்து விட்டார். சர்வர் சுந்தரத்தில் விஸ்வனாதன்
மட்டும் வருவார். டி.கே.ராமமூர்த்தி மறுத்து விட்டார்.
அதற்கு அப்புறம் மைக் மோகன் படங்களில் நிறையப் பாடல்ப் பதிவு
காட்சிகள் வந்தன.
சர்வர்
சுந்தரம் வந்த சில நாட்களிலேயே எங்க வீட்டுப் பிள்ளையில் சினிமா ஷூட்டிங், ஸ்டுடியோக்கள் எல்லாம் வரும். ஒரு சண்டை ஷூட்டிங் காட்சியில்
எம்.ஜி.ஆர் எல்லோரையும் நிஜமாகவே பின்னி
எடுப்பது போல ஒரு காட்சி வரும். ஆனால் இவையெல்லாம், நிஜ சினிமாச் சண்டைகளையும் பாடல்களையும் ஃப்ரேம் ஃப்ரேமாக எடுத்துக் குவித்து,
அது எடிட்டிங்கிற்குப் பிறகே நாம் திரையில் காண்கின்ற வடிவுக்கு வருகின்றன
என்று காட்டப் பட்டதே கிடையாது. ராமன் எத்தனை ராமனடி சிவாஜி படங்களில் நன்றாக ஓடிய படம். இன்றைக்குப் பார்த்தால் அது சுத்த ஃப்ளாப் படமாக இருக்கும். சாப்பாட்டு ராமன், சென்னைக்கு வருவார். (அதற்கு எழும்பூர் ரயில் நிலையத்தை ஓவர் லேப்பாகக் காண்பித்தால்ப் போதும்)
அப்புறம் அவர் சினிமாஸ்டுடியோவிற்குள் அதே அப்பாவியாக நுழைவார்.
கருணை மிக்க ஒரு இயக்குநர் அவரைப் படிக்காத மேதையாக்கி விடுவார்.பாசமலராகி விடுவார், வீரபாண்டிய கட்ட பொம்மனாகி விஜயகுமாராக
கிராமத்திற்கே திரும்பி வந்து வில்லன்களைப் பழி வாங்குவார்.
சர்வர்
சுந்தரம் படத்தின் வெற்றித் தாக்கம் குறையாமல், பாலசந்தர் பாமா
விஜயம் எடுத்தார். ஒரு நடிகை பக்கத்து வீட்டில் குடியேறுவதால்
ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் ஏற்படும் காமெடியான குழப்பங்களை நன்றாகவே எடுத்திருந்தார்.
இதில் ஸ்டுடியோ வரவில்லையென்றாலும் நடிகையின் சொகுசு வாழ்க்கை நன்றாகக்
காண்பிக்கப் பட்டது. இதில் ராஜஸ்ரீக்குப் பதிலாக நடிக்க அன்றைய
பிரபல நடிகை அணுகப்பட்டார். ஆனால் அவருடைய கார்டியன் கதாநாயகர்
அதைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தினார்,அதனால் ராஜஸ்ரீக்கு அந்த
வாய்ப்பு கிடைத்ததாக ஒரு கிசு கிசு உலவியது. அப்போது கிசு கிசுக்கள்
பத்திரிகைகளில் வருவதில்லை ஆனால் செவி வழிச் செய்தியாக வந்து கொண்டே இருக்கும்.
இப்படி செவி வழியாக வந்தவற்றில் பல உண்மைகளாகவும் இருந்திருக்கின்றன.அப்புறம் இந்த “உண்மைகளை” நிறுவும்
பொறுப்பை பிரபல வார இதழ் “கிசிகிசு” என்ற
பெயரில் எழுத ஆரம்பித்து விட்டது. அதற்கும் ஸ்டார் ட்ஸ்ட்,
இந்தி சினிமா இதழின் ஆசிரியர் ஷோபா டே தான் பாதை போட்டவர்.
ஆண்டன்
செக்காவின் பிரபலமான கதையான ஆக்ட்ரெஸ் (நடிகை), என்பதை ஒட்டி எடுக்கப்பட்ட மீண்டும்
கோகிலா படத்தில் தீபா நடிகையாகவும் அவருக்கு வக்கீலாக வரும் கமல் வடிக்கும் ஜொள்ளைப்
பற்றியுமாக படத்தில் வரும் சினிமாக் காட்சிகள் சுவாரஸ்யமானவை. அதே போல சலங்கை ஒலியில் சினிமாவில் நாட்டிய ஆசிரியராக (உதவியாளர்) வரும் கமல் படும் பாடுகள் நன்றாக இருக்கும்.”ஒரு நாயகன் உதயமாகிறான்” என்று அறைகூவல் விடுக்கும் பாடலுடன்
சினிமா உலகில் பாக்கியராஜ் அடி எடுத்து வைக்கும் காட்சிகள் கொண்ட தாவணிக் கனவுகள் சினிமா
சம்பந்தப்பட்ட பல விஷயங்களை, குறிப்பாக ‘பாரதிராஜாவின் காரியார்த்தமான கோபம் உட்பட, நன்கு காண்பித்திருந்தது.
நான்கு
திருடர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு சினிமாப் படம் எடுக்கும் நான்கு கில்லாடிகள் தமிழில்
நல்ல நகைச்சுவைப் படங்களில் ஒன்று. ஏ.எல்.
நாராயணன் கதை –வசனம். (அதற்கு
மூலம் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை). ”பூக்கடைப் பக்கம்
டீக்கடையோரம் ஏக்கத்தோட நான் காத்திருந்தேன் என்னாத்தே நீயும் வரலை…” என்ற பாடல் கூட அவர் எழுதியதுதான். ஜெய்சங்கர்,
மனோகர். சுருளிராஜன், தேங்காய்
சீனிவாசன் ஆகிய நான்கு கில்லாடிகள் திருடிய பணத்தைக் கொண்டு, நாயகன் சி.எல்.ஆனத்தனை,
முகத்தில் ஆசிட் ஊற்றி விடுவதாக மிரட்டியும் எடுக்கும் படம்.
பாதிப் படத்தில் கதநாயகன் பண்ணும் ரவுசை வேடிக்கையாக அடக்கி படத்தை முடித்து
அதன் நூறாவது நாளுக்கு ஜெயிலில் இருந்து நாலு பேரும் வருவார்கள். அந்தக் காலத்தில் ரவுசு பண்ணிய பெரிய தலை நடிகர்களைச் சாடுகிற படமாக அமைந்திருந்தது.
அது மாடர்ன் தியேட்டர்ஸ் படம் என்பதால் தலைகளால் ஒன்றும் எதிர்ப்புக்
காட்ட முடியவில்லை.
சினிமா
உலகின் ஆடம்பர, பொய் நெருக்கடிகளிலுமிருந்து தப்பிக்க எண்ணும்
ஒரு நடிகையின் கதையாக சுமதி என் சுந்தரி வந்தது. (இதன் மூலக்கதையும்
வங்காளமோ இந்தியோதான்) இதன் டைட்டில் கார்டில் மர்லின் மன்ரோ
போன்ற ஆங்கில நடிகைகளின் அரை குறைப் படங்களைக் காட்டுவார்கள். சிவாஜி கணேசனின் சொந்தப் படமான இதில், அன்றையப் பல கதாநாயகியரின் உண்மையான ஆதங்கமாகவே
இந்தப் படத்தின் கதை இருந்தது என்று ஏதோ ஒரு பத்திரிகையில் எழுதின நினைவு. வி.கோபாலகிருஷ்ணன் சினிமா டைரக்டராக அழகாக நடித்து இருப்பார்.
அவர் ஒரு அற்புதமான கலைஞன். உண்மையிலேயே அவர் படங்களை
இயக்கி இருக்கலாம். அவ்வளவு தூரம் சினிமா பற்றித் தெரிந்தவர்.
( ஒரு முறை, ஆங்கிலப் பட இயக்குநரான டேவி லீன்
– ப்ரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வாய், லாரன்ஸ் ஆஃப்
அரேபியா..டாக்டர் ஷிவாகோ போன்ற பிரம்மாண்டங்களை இயக்கியவர்-
பற்றி பொம்மை சினிமா இதழில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார்.) ஒரு நடிகையின் கதையாக வந்து மிகச் சிறப்பாக அமைந்த இன்னொரு படம், மறுபக்கம், ரோஹிணியும் ரேவதியும் பாலு மகேந்திராவும்
சேர்ந்து சிறப்பாகச் செய்த ஒரு படம் ரோஹிணியின் நடிப்பு அபாரமாக இருக்கும். நிஜமான ஒரு தமிழ் இயக்குநரின் வாழ்வில்
நடந்தது என்று கிசுகிசுக்கப்பட்டாலும் அருமையான புனைவை உள்ளடக்கிய படம். இதே போல இயக்குநர்-கதநாயகி- மகன்
என்று ஒரு முக்கோணக் கதையான இமயம் படத்தில் சிவாஜி நடித்திருந்தார்.
எம்.ஜி.ஆர் படங்களில், சினிமாப் பாத்திர எம்.ஜி. ஆர் போக, நிஜ எம்.ஜி.ஆர் பாத்திரத்திலேயேயும் வருகிற இரண்டு படங்களில் எங்கள் தங்கம் பரவாயில்லாமல் இருக்கும். தேர்த் திருவிழா படத்தில் நாடகத்திற்கு தலைமை தாங்க வருவார். நிஜ எம்.ஜி.ஆரை சினிமா எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ரசிகர்கள் போலத் தொட்டு மகிழும் காட்சிகள் எல்லாம் வரும். நாடகமும் சரியாக இருக்காது காட்சிகளும் சரியாக இருக்காது. படத்திலும் கதையே இருக்காது. ஆனால் படத்தில் ஜெயலலிதா கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து நடிகையாகி விடுவார். அவர் சிபார்சில், எம்.ஜி ஆருக்கே சினிமாவில் வேஷம் கிடைக்கும். வாள்ச் சண்டை வீர்ராக நடிப்பார். என்னவெல்லமோ இருந்தும் படம் ஓடவில்லை.
எம்.ஜி.ஆர் படங்களில், சினிமாப் பாத்திர எம்.ஜி. ஆர் போக, நிஜ எம்.ஜி.ஆர் பாத்திரத்திலேயேயும் வருகிற இரண்டு படங்களில் எங்கள் தங்கம் பரவாயில்லாமல் இருக்கும். தேர்த் திருவிழா படத்தில் நாடகத்திற்கு தலைமை தாங்க வருவார். நிஜ எம்.ஜி.ஆரை சினிமா எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ரசிகர்கள் போலத் தொட்டு மகிழும் காட்சிகள் எல்லாம் வரும். நாடகமும் சரியாக இருக்காது காட்சிகளும் சரியாக இருக்காது. படத்திலும் கதையே இருக்காது. ஆனால் படத்தில் ஜெயலலிதா கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து நடிகையாகி விடுவார். அவர் சிபார்சில், எம்.ஜி ஆருக்கே சினிமாவில் வேஷம் கிடைக்கும். வாள்ச் சண்டை வீர்ராக நடிப்பார். என்னவெல்லமோ இருந்தும் படம் ஓடவில்லை.
அது எப்படி
என்று புரியவில்லை, சினிமாக் கதாநாயகன் என்றால் மட்டும் சினிமா
சான்ஸ் தானே தேடி வந்து விடும். சபாஷ் மாப்பிள்ளே படத்திலும்
பம்பாய் போய் எம் .ஜி.ஆர் சினிமா சான்ஸ்
கிடைத்து நடித்து விட்டு ஸாரி அடித்து நொறுக்கி விட்டு வந்து விடுவார். அதே போல் மனம் ஒரு குரங்கு படத்தில் சோ பாவப்பட்ட விஜயாவை பெரிய சினிமா நடிகையாக்கி
விடுவார். பெர்னார்ட் ஷாவின் பிக் மேலியன் – மை ஃபேர் லேடி படமாக வந்து, அதை மனம் ஒரு குரங்காக கிளை
தாவ வைத்திருப்பார் சோ. ஏணிப்படிகள் படத்திலும், கிராமத்திலிருந்து ஷோபாவை அழைத்து வந்து சினிமா நடிகையாக்கி விட்டு தான்,
தெருவில் நிற்பார் சிவகுமார். அன்றிலிருந்து இன்று
வரை சினிமாவை உள்ளடக்கிய சினிமாக்கள் நிறைய உண்டு. கறுப்புப்
பணம், தாயின் கருணை, நட்சத்திரம்,புதுப்புது அர்த்தங்கள், சிகரம், மூன்று முடிச்சு, என்று ஏகத்திற்கு உண்டு. சினிமாவுக்குள் சினிமா என்பது ஒரு வகைமையான சினிமாக்கதை அதை அவ்வப்போது திரையுலகம்
தூசி தட்டி எடுத்து முயன்று பார்க்கும்.
சமீபமாக ‘டிஷ்யூம்’ படத்தில் ஜீவா ஸ்டண்ட் மேனாக வருவார்.
சினிமாவை வைத்து எடுக்கப்பட்ட நல்ல சினிமா இது. பிரமாதமாக ஓடிய பிளாக் ஹியூமர் படமான ஜிகர் தண்டா சிறப்பாகவே வந்திருந்தது.
ஆனால் படத்தை முடிப்பதில் கே.பாலசந்தர் போல சற்றுத்
திணறி இருப்பார், சுப்புராஜ். பொதுவாக ஒரு
படம் நன்றாக, எல்லா அம்சத்திலும் நன்றாக அமைவதென்பது
– உதாரணமாக எங்க வீட்டுப் பிள்ளை, காதலிக்க நேரமில்லை,
தில்லானா மோகனாம்பாள், பாட்ஷா, சலங்கை ஒலி போல - எப்போதாவது நடக்கக் கூடியது.
நன்றாக வரவேண்டுமென்ற நம்பிக்கையில் ராசியான கைகளால் ‘கிளாப்” அடித்து ஆரம்பித்து வைப்பார்கள். அப்படியே தொடங்கினாலும் எல்லாமும் நன்றாக அமைந்து விடுவதில்லை. ஏன் ? அது சினிமாவுக்கே தெரியாத சினிமா மந்திரம்.