”கவிதையில் எழுதிய காவியத்தலைவி
கலையில் நிலையானாள்.....”
__________________________________
.தீபாவளி முடிந்தது. 1960 தீபாவளிக்கு மன்னாதி மன்னன். 61-தாய் சொல்லைத் தட்டாதே, 62-விக்கிரமாதித்யன்,63-பரிசு,64-படகோட்டி,65-தாழம்பூ,66-பறக்கும் பாவை,67-விவசாயி 68-காதல் வாகனம்69-நம் நாடு70-களில் நினைவு தப்பத்தொடங்கி நினைவை சினேகிதி நிறைத்துக் கொண்டுவிட்டாள்.ஞாபகம் வந்துவிட்டது.. 70 தீபாவளிக்கு காவியத்தலைவி. ஒரு வங்காள/இந்திப் படத்தின் தழுவல், சுசித்ரா சென்னும் அஷோக் குமாரும் நடித்தது..12’ ஒ கிளாக், நைட் கிளப் ஹாங்காங்(இதில் சரோஜா தேவி கதாநாயகி ஈஸ்ட்மென் கலரில் சரோஜாதேவியை முதன் முதலாகப் பார்த்த படம், ஆனால் அவளை விட ஜானி வாக்கருக்கு ஜோடியாக வரும் ஹெலன் அழகோ அழகாயிருப்பார்..1962- ஜனவரி முதல்த் தேதிஎன்று நினைவு. அன்றிலிருந்து தான் தரை டிக்கெட் 25 பைசாவிலிருந்து 26 பைசாவானது.)போன்ற படங்களில் அஷோக் குமாரை மர்மப் பட ஹீரோவாகப் பார்த்தது.ஆனால் இதில் (தாதி மா) அசோக் குமார் பிரமாதமாக நடித்திருப்பார்..தமிழில் ஜெமினி கணேசன் சொதப்பப் போகிறார் என்று நினைத்தபடி போனோம்.ஆனால் ஜெமினி அற்புதமாக நடித்திருந்தார். வாயடைத்த்ப் போயிற்று படம் முடிகிறபோது.நான் அதிகம் பார்த்த படங்களில் அதுவும் ஒன்று.அதிலும் அவள் என் அருகாமையில் உட்கார்ந்து பர்த்த படம் அந்த டிக்கெட் கூட இன்னும் டய்ரியில் பத்திரமாக இருக்கிறது. படம் பார்த்து விட்டு வந்து, கல்யாணி (வண்ணதாசன்)அண்ணனிடம் பேசிக் கொண்டிருந்த போது அவரின் நண்பர் எல்.பாலு உடனிருந்தார். அவர் ஒரு நல்ல ரசிகர். ஆங்கிலப் படங்களை விரும்பிப் பார்ப்பார். இயன் பிளெமிங்க், சேஸ் நாவல் எல்லாம் அத்துப் படி. லவ் ஸ்டோரி படத்தை சென்னையில் பார்த்துவிட்டு வந்து வாப்பாரிக்(ஆதங்கமான புலம்பல்) கொண்டிருந்தார். அப்படி ஒருபடம் தமிழில் வந்து விடாதா என்று. நான் ஒரு தியேட்டர் முதலாளியாக இருந்தால் லவ் ஸ்டோரி படத்தை மட்டுமே திரையிடுவேன் எத்தனை வருடத்துக்கும் என்று சொல்லுவார்.எரிக் செகாலின் அந்த நாவலை அவர் தந்துதான் நான் படித்தேன். (நான் முழுதுமாய்ப் படித்த ஒரே ஆங்கில நாவல் அதுவாய்த்தான் இருக்கும்.)என்னை அவருக்கு அவ்வளவாகப் பிடிக்காது. கல்யாணியும் அவரும் தோள் மட்ட நண்பர்கள்.கல்யாணியிடம் எதற்கு இந்த சின்னப்பய சாவாசம் என்கிற ரீதியில் பேசுவாரென்று கேள்வி.ரொம்ப அழகாக இருப்பார். அவர் கேட்ட முதல்க் கேள்வி ஜெமினி என்னப்பா பண்ணியிருக்கான் அந்த ரோலை. நான் பிரமாதமாப் பண்ணிருக்கான், சௌகார் ஜானகியை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டான்.. என்று சொன்னதைக் கூட நம்பவில்லை. மறுநாள் காலைக் காட்சிக்கு முன்று பேரும் போன நினைவு, இல்லை கல்யாணியண்ணன் மட்டும் வந்தாரா , நினைவில்லை. ஆனால் அதற்கப்புறம் அவர் என்னை சின்னப் பயலாகப் பார்க்கவில்லை போல் தோன்றியது.வண்ணதாசனிடம் தான் கேட்க வேண்டும். ஆனால் எனக்கு அது பிரச்சினை இல்லை. நான் அவரிடம் கற்றுக் கொண்டது நிறைய இருந்தது. சிகரெட் உட்பட. 70க்குப் பிறகு எம் ஜி ஆர் பட்ங்களும் விசேஷமாக வரவில்லை..70 பொங்கலுக்கு வந்த மாட்டுக்கார வேலன் பிரமாதமாக ஓடியது.ஆனால் எங்களுக்குப் பிடிக்கவில்லை. அதன் மூலப் படமான ஜிகிரி தோஸ்த் படத்தில் ஜிதெந்திரா-மும்தாஜ் , ஜிதேந்திரா- கோமல் ஜோடி அவ்வளவு இளமையாக இருக்கும்.ஜிதேந்திரா ஒரு காட்சியில் நீளமாக ஆங்கில வசனம் பேசுவார். எம்.ஜி ஆரும் பேசுவார் பேசுவார் என்று முதல் நாள் முதல் காட்சியில் ரொம்ப எதிர்பார்த்துக் காத்திருந்தால், ஆர் யூ எஜுகேட்டட் என்று ஒரு வார்த்தை மட்டும் பேசியதும் பொசுக் கென்று
போய் விட்டது..இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தக் கதையை பத்து, பதினைந்து வருஷத்துக்கு முன்னால் எம் ஜி ஆரிடம் சொல்லி அவர் நிராகரித்த கதை.கதை ஏ.கே. வேலனுடையது.. இந்திக்குப் போய் திரும்ப தமிழுக்கு வந்தது.வெள்ளி விழா ஓடியது.
அந்த தீபாவளிகளின் எளிமையும் மகிழ்ச்சியும் இனிமேல் என்றைக்கும் வராது...ஆவியில் எளிமை நிறைந்த பாக்கியமான காலங்கள்.. பதினெட்டு வயதின் ரசாயனங்கள் கொஞ்சம் எம்ஜியார் பைத்தியத்திலிருந்து சற்று விலக்கி வைத்தது..முற்றாக விலக்கவில்லை.எம்ஜியார் ரசிகர்களுக்குள்ளும் நாங்கள் சற்று வித்தியாசமானவர்கள். லாலாக் கடை மணி சினிமா தொழில் நுட்பம் பற்றி நன்றாகப் பேசுவான். அவன் நெல்லை கணபதியா பிள்ளையிடம் சங்கீதம் படித்து பாதியில் நிறுத்தி விட்டான். மியூசிக் பற்றி நல்ல ஞானமுள்ளவன்.ரிக்கர்ட் பிளேயரும் ரெக்கார்டுகளும் வாடகைக்கு எடுத்து அவன் வீட்டில் வைத்துப் போட்டுக் கேட்போம் கேரம் போர்ட் விளையாடிக் கொண்டே. .ஸ்ரீதர், பாலசந்தர் படமென்றால் நானும் அவனும் விரும்பி போவோம்.போலீஸ்காரன் மகள் படம் எங்கே வந்தாலும் என்னை மட்டும் அழைத்துக் கொண்டு போய் விடுவான். அதிலும் ஜங்ஷன் பாலஸ் டி வேல்ஸ் தியேட்டரில் பாட்டுக் கேட்பதற்காகவே போவோம். அங்கே வெஸ்ட்ரெக்ஸ் சவுண்ட் சிஸ்டம் பொருத்தப் பட்டிருக்கு என்பான். பாட்டை அங்கேதான் கேட்கவேண்டுமென்பான்.ஒரு பாட்டுக்காகவே படம் பார்க்கப் போவான் அந்தப் பாட்டு முடிந்ததும் நிர்தட்சன்யமாக வந்து விடுவான். காத்தவராயன் படத்தில் வரும் வா கலாப மயிலே பாட்டுக்காகவே கூட்டிப் போவான் அது முடிந்ததும் வாலே இன்னம மயிரா இருக்கு இதில என்று இழுத்து வந்துவிடுவான்.அங்கே பெரும்பாலும் பழைய படங்களே வரும். அப்புறம் ஜெமினி ரிலீஸ் படமெல்லாம் அங்கேதான் வரும். தாயில்லாப் பிள்ளை, மொகலே ஆஜம் (தமிழ்),அவனுக்கு ஒரு அலாதியான வழக்கம். எம் ஜியார் படம் முதல் நாள் முதல் காட்சி பார்க்க மாட்டான்.அவன் அப்படிப் பார்த்தால் படம் ஹிட் ஆகாது என்று ஒரு நம்பிக்கை. அதிலும் ரொம்ப எதிர் பார்க்கிற படமென்றால், ம்ஹூம் , வரவே மாட்டான்.நான் படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது இரண்டாம் காட்சிக்குப் போக நிற்பவன் என்னைக் கண்டதும் தனியே அழைத்துப் போய் படம் எப்படியிருக்கு, என்பான். நான் பெரும்பாலும் உதட்டைப் பிதுக்கிவிடுவேன்.போடா ஓண்ட்டப் போய்க் கேட்டேன் பாரு என்பான்.அவனும் அடுத்தகாட்சி பார்த்துவிட்டு வந்து நான் சொன்ன அபிப்ராயத்தையே சொல்லுவான்.இரண்டு பேரும் போடுகிற கணக்கு தப்பாது. ஐம்பது நாள் என்றால் அவ்வளவுதான்ஆறு வாரம் என்றால் அம்புட்டுத்தான்.அவனைப் பற்றி எத்தனையோ எழுதலாம். எம்ஜியார் படம் ஃபெயிலியர் ஆனதுக்கு வருத்தப் படுகிற மாதிரியே கலைக்கோவில் ஹிட் ஆகாததற்கும் தட்டுங்கள் திறக்கப் படும் தோற்றுப் போனதற்கும் வருத்தப் படுவான். சாந்தராமின் கீத் கயா பத்தரோனே படத்தை இரண்டு பேரும் வெறி பிடித்த மாதிரி தொடர்ந்து மூன்று நள் பார்த்தோம். மூன்று நாள்தான் ஓடியது.இரண்டாம் நாள் வண்ணநிலவன், வண்ணதாசன் எல்லாருடனும் பார்த்தோம்.ஸ்ரீதரை விட்டு வின்செண்ட் பிரிந்ததற்கு ரொம்ப வருத்தப் பட்டான்.வெண்ணிற ஆடை படத்திற்கு சாந்தாராம் படங்களுக்குப் பணிபுரிந்த பாலகிருஷ்ணா ஒளிப்பதிவு பண்ணுகிறார் என்று அவன் அப்படி சந்தோஷப் பட்டான். படம் பார்த்து விட்டு, போப்பா வின்செண்ட் வின்செண்ட்தான். என்றான். அதே போல் சாந்தி நிலையம் வந்த போது,.படம் பற்றி ஏகத்துக்கு எதிர் பார்த்து பயந்து கொண்டிருந்தான்.ரொம்ப நாளைக்கு அப்பறம் மார்க்கஸ் பார்ட்லே (கலர்) காமிரா,பாட்டு எல்லாம் சூப்பர், சவுண்ட் ஆஃப் மியூசிக் தழுவல், ஜெமினி ஸ்டுடியோ ஜி.எஸ் மணி தயாரிப்பு, அடிமைபெண் அம்போ வாகிடும்ல.என்றான்(அடிமைப்பெண் வந்து நாலைந்து வாரம் கழித்து வந்தது).சாந்தி நிலையம் அவ்வளவு எடுபடவில்லை. ஒரு பக்கம் சந்தோஷப் பட்டாலும், உள்ளபடியே ஒரு வருத்தம் இருந்தது.அவனுக்கு.மணியைப் போல் இன்னும் பலர் நல்ல விவரமான ரசிகர்கள் என்னைச் சுற்றி உண்டு.அதில் ஜங்ஷனிலிருந்து காலேஜுக்கு வருகிற சேது மாதவன், சுந்தரம், ரிப்போர்ட்டர்ஸ் ஹோம் பாலு எல்லாம் அற்புதமானவர்கள்.அவர்களில் சாயி காலேஜ் கிரிக்கெட் டீமில் முக்கியமானவன்.கல்லூரிகளுக்கு மத்தியிலான போட்டிகளில் அவன் தான் கதாநாயகன்.அவன் கூப்பிட்டு ஒரு போட்டிக்கு நாங்கள் பாதுகாப்பிற்காகவும் உற்சாகப் படுத்தவும் போனோம். சேவியர் கல்லூரியிலிருந்து ஒரு கும்பல் வருகிறது. நீங்கள் எல்லாம் வரவேண்டும் என்று சாயியும் ராமமூர்த்தியும் கூப்பிட்டதும் வாங்கடா போவோம் என்று கிளம்பினோம். அந்த வருடம் நியூட்ரல் வென்யூ என்று பல்கலை மட்டத்தில் முடிவெடுத்து. சங்கர்நகர் இந்தியா சிமென்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.அன்று அங்கே போய் தோற்று விட்டுத்தான் வந்தோம். சேவியர் கல்லூரியில் விஸ்வனாதன் என்றொரு பையன் ஆல் ரவுண்டராக வெளுத்துக் கட்டினான்.. அப்புறம் கிரிக்கெட் பார்க்கிற/கேட்கிற பைத்தியம் பிடித்துக் கொண்டது.
இந்தியன் நியூஸ் ரீலில் கடைசி ஒரு நிமிஷத்தில் ஸ்போர்ட்ஸ் செய்தியில் 30 செகண்ட் காண்பிப்பான் பட்டோடி ஒரு சிக்சர் அடிப்பதற்குள் நியூஸ் முடிந்து விடும் அல்லது முடித்து விடுவார்கள். இதற்காக அந்த ரீல் ஒடுகிற தியேட்டருக்கு அது என்ன படமானாலும் போவோம். தியேட்டர் மானேஜரிடம் I.N.R (INDIAN NEWS REEL) ஓடுகிறதா என்று செக் பண்ண அதிகாரி வந்திருப்பதாக பொய் சொல்வோம்..அப்படிச் சொன்னால் கண்டிப்பாக நியூஸ் ரீல் போடுவார்கள்.பாதியில் நிறுத்த மாட்டார்கள்.அந்த 68-69 எல்லாம் இனி வரவா போகிறது..இப்போது திகட்டத் திகட்ட டி.வி யில் கிரிக்கெட்...எனக்கு பார்க்கத்தான் தெரியும். சாயீ(சாயி சோபர்ஸ் என்று கல்லூரி நோட்டுகளில் `இடைவெளியில்லாமல்எழுதி’ வைத்திருப்பான்.கொஞ்ச நாள் சாயி கவாஸ்கர் என்று எழுதிவந்தான் அப்புறம் மறுபடி சாயி சோபர்ஸுக்கு தாவிவிட்டான்) இந்தியா சிமெண்ட்ஸில் அவனுக்கு வேலை கிடைத்ததாக நினைவு.ஓரிருநாள் விளையாட காலேஜ் கிரவுண்டுக்கு கூட்டிப் போனான்.இரண்டாம் நாள் மட்டும் நாற்பது ரன் எடுத்தேன் அப்புறம் ஒரு காட் அண்ட் போல்ட் கேட்ச் பிடிக்கப் போய் கை வலி பின்னி விட்டது. போடா சாயி நீயும் உன் கிரிக்கெட்டும்...ஒளிவிளக்கு என்ன வசூலோ இன்னிக்கி சாயந்தர ஷோ.நேற்றே 1.66பைசா டிக்கெட் முடியவில்லை..என்று மறுநாள் ஓடிவிட்டேன் நாலரை மணிக்கு மேல் காலேஜில் இருப்பதா....என்று போய் விட்டேன். ஆனால் கிரிக்கெட் பார்க்கிற ஆர்வம் என்னை விடவில்ல... இதோ கும்ளேயின் கடைசி மேட்ச். இன்று.என்ன ஒரு தீர்மானமான விளையாட்டு வீரன், மண்டை உடைந்தாலும், கையில் தையல் போட்டாலும் விளையாட்டைக் கை விடாத சாதனையாளன்.கும்ளேயின் திடீர் ஓய்வு மனதை என்னவோ செய்கிறது. இன்னும் ஒன்பது மாதத்தில் பணி ஓய்வை நெருங்கும் என்னை..
##
##
படிமக் கற்கள் பாவிப் பாவி
நீண்டு வந்த நினவுப் பாதை
இன்றில் நின்றதென்ன?
நாளை
மறுபடியும் அது
நிற்கப் போவதென
இன்று மீண்டும்
தொடர்வதென்ன.
(உலகெல்லாம் சூரியன் தொகுப்பு-1993)