Tuesday, March 16, 2010

ஓடும் நதி-23


கல்லூரியில் அந்தத் தமிழாசிரியரை அநியாயத்திற்கு கிண்டல் செய்வோம்.ஆனால் அவர் அசர மாட்டார்.வெள்ளிக்கிழமை மதியம் அவருக்கு இரண்டு வகுப்புக்கள்.ஒரு வகுப்பில் மிருச்ச கடிகம் வடமொழி நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு,மண்ணியல் சிறுதேர்- நடத்துவார். வசந்தசேனையின் கதை. கிட்டத்தட்ட சிலப்பதிகாரம் போலிருக்கும், ஆனால் அவ்வளவு சுவையாய் இருக்காது.இன்னொரு வகுப்பு, கட்டுரை எழுதும் வகுப்பு. ஒரு மணிக்கு அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்து, அன்றைய கட்டுரையை நூலகத்தில் உட்கார்ந்து எழுதிக் கொடுத்து விட்டு, அவரிடம் அனுமதி கேட்டால் எங்கள் மூன்று பேருக்கு அனுமதி தந்து விடுவார். (ஒழிந்தால் சரி என்றோ என்னவோ.) அப்புறம், கால் மணிநேரத்தில் எங்களை ஏதாவது புதுப் படம் ரிலீசாகும் தியேட்டரில் பார்க்கலாம்.

கல்லூரி வளாகத்தில் நிறைய வாகை மரங்கள் உண்டு. பிப்ரவரி, மார்ச்சு மாதங்களில் இலையுதிர்ந்து தழைத்து, அருமையான வாசனையுடன் பூக்க ஆரம்பித்து விடும்.அப்போதெல்லாம் இரண்டாம் ஆண்டின் முடிவில்த்தான் பல்கலைக் கழகத் தேர்வு,, அது வரை அவிழ்த்து விட்ட கன்றுகள்தான். எங்கிருந்தோ வரும் அக்காக் குருவிகள், அங்கங்கே கூவிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு வருடமும் அக்காக்குருவியின் கூவலை, என்று முதன் முதலாகக் கேட்டேன் என்று குறித்து வைப்பது வழக்கம்.( இந்த வருடம் பிப்ரவரி 18- அன்று முதல்க் கூவலைக் கேட்டேன்).நகரங்களில் இந்தக் கூவல் கேட்கிறதா... தெரியவில்லை. இனி கிராமங்களில் கூட அரிதாகி விடும் என்கிறார்கள்.

அன்றுதான் தமிழாசிரியரின் கடைசி வகுப்பு. அது ஆரம்பிக்கும் முன், சும்மா, வாகை மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த நாங்கள், பூவும் இலையுமாகப் பறித்துச் சேர்த்துக் கொண்டிருந்தோம். ஒரு அழகிய பூங்கொத்துப் போல உருவாகி விட்டது. அதற்குள் தமிழ் வகுப்புக்கான மணி அடித்தது.யாரோ என்னிடம், ஏய், மடக்கவிஞ்ஞா அவசரமா ஒரு கவிதை எழுதுடா என்றார்கள்.

குஞ்சு மிதித்துக் கோழி சாகாதென்னும்

கொஞ்சு தமிழ்க் கொள்கை போல்- கிஞ்சித்தும்

எங்கள் குறும்புகளைப் பெரிதே கொள்ளாது

மங்காத தமிழ் தந்தீர்

மாடத்து விளக்கானீர்...என்று ஏதோ எழுதிக் கொடுத்தேன். எல்லாரும் ‘உய் உய் யென்று விசிலடித்தார்கள். ஆசிரியரிடம் என்னையே கொடுக்கச் சொன்னார்கள். உண்மையில் அவரைக் கிணடலடிக்க வேண்டுமென்று ஆரம்பித்ததுதான் எல்லாமே. கவிதையையும் பூங்கொத்தையும் சந்தோஷமாக வாங்கிக் கையில் வைத்துக்கொண்டே,வாகை என்றால் வெற்றி என்று அர்த்தம். நீங்கள் தேர்விலும் வாழ்க்கையிலும் பல வெற்றிகளைக் குவிக்க இது ஒரு அச்சாரம்என்று மனப்பூர்வமாய் வாழ்த்தினார். மொத்த வகுப்புமே, வழக்கத்திற்கு விரோதமாய் அமைதியாய் இருந்தது.அக்காக் குருவி கூவுவது தெளிவாய்க் கேட்டது.

அக்காக் குருவி, சிவராத்திரி முடிந்ததும் ஒன்றிரண்டு நாளில் கூவ ஆரம்பித்து விடும்.அது கூவ ஆரம்பித்தால், வசந்தம் வந்து விடும், வேம்பும் வாகையும் பூத்துக் குலுங்கி மணம் வீச, சித்திரை வந்து விடும். அப்புறம் செங்கொன்றை, மேற்கு மலையிலும் மலை சார்ந்த இடத்திலும் பூக்க ஆரம்பித்தால். குற்றால சீசன், தென் மேற்குப் பருவ மழை தொடங்கி விடும். அப்புறம் தேக்கு மரம் தன் மேனியெங்கும் வெண்ணிறப் பூவை சூடத்தொடங்கினால் சீசன் முடிந்து விட்டது என்று அர்த்தம்.

தொடர்ந்து புரட்டாசியில் வடகிழக்கு மழை. கார்த்திகை தீபமேற்றினால், விளக்கிட்டோ மழை கிழக்கிட்டோ என்று கிழக்கு மழை முடிந்து, பனி. பனியை முடித்து வைக்க மீண்டும் சிவராத்திரி.....மீண்டும் அக்காக் குருவி....இந்த அற்புதமான இயற்கை வட்டம் கொஞ்சங்கொஞ்சமாக அழிந்து கொண்டே, இருக்கிறது.

சிவராத்திரி தோறும் இரவில் கண் விழிக்க, பரம பத சோபானம்எனும் பாம்புக்கட்ட விளையாட்டு.அப்பா அதை, ஒரு மூங்கில் குழலில் போட்டு பத்திரமாக வைத்திருப்பதை, தருவார்.அது அலுப்புத் தட்டினால்,உப்புமா தின்று விட்டு, கதை சொல்லல் ஆரம்பித்து விடுவோம்....அப்புறம் கொட்டாவி... கண் விழிப்பாவது புண்ணியமாவது.

தற்செயலாய் ஊரில் மிச்சமிருந்த ஒன்றிரண்டு பொருள்களில், அந்தப் பாம்புக்கட்டத்தைக் கண்டுபிடித்து என் குழந்தைகளிடம் காண்பிக்க எடுத்து வந்தேன். சிவராத்திரியும் சமீபித்தது....தொலைக்காட்சியை ஓடவிட்டுக் கொண்டு, குழந்தைகள் சுவாரஸ்யமாக விளையாடிக் கொண்டிருந்தன.பாதி இரவில் சத்ததையே காணுமே என்று தூங்கி விட்ட நான் விழித்துப் பார்த்தால், அவைகள் திசைக்கொன்றாய் தூங்குகின்றன. காய்களையும் தாயக்கட்டையையும் எடுத்து வைக்கும் போது... தாயக்கடைகள் தவறி விழுந்தன. அப்போது அவை இரண்டு என்ற எண்களுக்கான கோடுகளைக் காண்பித்தன..

தவறி விழுந்த தாயக் கட்டைகளும்

எண்கள் காண்பிக்கும்...என்று மனதில் தோன்றியது.தர்மர் இரண்டு கேட்டுத்தான் பாஞ்சாலியை, சூதில் தோற்றாராம்...ஆனால் இந்த இரண்டு ஒரு தற்செயல்... இதன் பின்னால் ஆட்ட விதிகள் இல்லை.. அதனால் அர்த்தமும் இல்லை...நம் அர்த்தமற்ற வாழ்வுக்கான பகடைகளை யார், எங்கே எந்த விதிகளுக்குட்பட்டு உருட்டுகிறார்கள்.... நாம் பரமபதம் அடைய முடியாதபடிக்கு பாம்புகள் ஏணியிலேயே ஏறி உறங்குகின்றனவே.