Saturday, July 12, 2008

பா(ட்)டு

ப்லாக்குக்கு வேணுவனம் என்று பெயர் வைக்கலாம் என்று நினைத்திருந்தேன்.வேணுவனம் என்று ஒரு குறுங்காவியம் எழுத ஒருகாலத்தில் திட்டமிட்டிருந்தேன்.ஆயிரத்தில் ஒருவன் சினிமாவில் “ அந்த தேன் கூட்டுத் தலையன் திட்டம் போடறதோட சரிண்ணேன் “ என்று நாகேஷ் சொல்றமாதிரி திட்டம் போட்டதோட சரி. காஞ்சனை மணி தனது தோட்ட வீட்டிற்கு வேணு வனம் என்று பெயர் வைத்திருக்கிறார். ரொம்ப நல்ல மனுஷன்.அதிராம பேசுவார். அம்மா சொல்லுவா பல்லாக்கு ஏர்றதும் வாயால பல்லுடை படறதும் வாயால என்று அது மாதிரி ரொம்ப அமைதியான சுபாவம். திருநெல்வேலிக்கு வேணுவனம் என்று ஒரு பெயர் உண்டு.வேணுவனேஸ்வரி என்று என்னுடைய எட்டயபுரம் குறுங்காவிய்த்தில் ஒரு க(வி)தா பாத்திரம் வரும்.அதனால இதுக்கு எட்டய புரம் ன்னு பெயர் வைக்கலாம்ன்னு நெனைச்சேன். .அம்பிகாபதி பாட்டு மறக்காம ஞாபகம் வரும் வேணுவனம்ன்னு நினைச்சா.” வேணு கானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே கானம் வேறு காற்று வேறாய் கேட்பதில்லை”.என்று அழகான முகாரி ராகத்தில், மறக்க முடியாத பாட்டு.”கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்” பாட்டும் இந்த ராகம் தானாம். கண்ணதாசனத் தாண்டி என்ன பாட்டு வேண்டிகிடக்கு.”பாட நினைத்தது பைரவி ராகம் பாடி முடித்தது யாவையும் சோகம்” மயங்குகிறாள் ஒரு மாது படத்தில் வரும் இந்த வரிகள் இசைத் தட்டில் இருக்காது.இசைத் தட்டுகளின் காலமே வேறு.அந்தக் கால தோசைக்கல் இசைத் தட்டில் பக்கத்துக்கு இரண்டுபாட்டு. ஒவ்வொன்றும் மூன்று நிமிடம் ஓடும். சில பாட்டுக்கள் இரண்டுபுறமும் இருக்கும் நீளப் பாட்டு. ஒரு படத்துக்கு ஏழு பாடல்கள் என்பது அப்போ ஒரு சென்டிமெண்ட். இசைத்தட்டுக்கு இரண்டு பாடல்கள் என்றால், மூன்று இசைத்தட்டுக்கு ஆறு பாடல்கள் ஒரு பாட்டு மிச்சம் வரும் அது சோகப் பாட்டு என்றால் விட்டு விடலாம். இல்லையென்றால் பெரிய பாட்டாக ஒரு இசைத் தட்டின் இரண்டு புறமும் வெளியிடுவார்கள். இல்லையென்றால் ஒரு பாட்டை பதிவு செய்வார்கள் அது படத்தில் இடம் பெறாது.அப்படிப் பாட்டுக்கள் நிறைய இருக்கு.தாய் சொல்லைத் தட்டாதே படத்தில் ”என்னடி சொன்னா ராஜாத்தி……என்று ஒரு கவ்வாலி மெட்டில் ஒரு அழகானபாட்டு.பாலும் பழமும் படத்தில் “தென்றல் வரும் சேதி வரும் “என்று ஒரு பாட்டு. வெண்ணிறஆடை படத்தில் ”நீராடும் கண்கள் இங்கே போராடும் நெஞ்சம் அங்கே “….என்று அற்புதமான பாட்டு.இதெல்லாம் சிலோன் ரேடியோவில்தான் கேட்க முடியும். பெண்போனால் இந்தப் பெண் போனால்…என்ற பாட்டு எங்க வீட்டுப் பிள்ளையில் ஒரு பக்கத்துக்கும் போதாமல் இரண்டு பக்கத்துக்கும் காணாமல் ரொம்ப நாட்களாக வெளிவரவில்லை. அப்புறம் டி. எம் எஸ் ஸும் சுசிலாவும் இடைஇடையே இங்கிலீஷ் டயலாக் பேச…பாட்டை நீட்டி படம் வெள்ளி விழா ஓடும் சமயம் வெளிவந்தது. அப்புறம்extended play (E.P) என்கிற குட்டி இசைத்தட்டு வந்துவிட்டது. ஏழு பாட்டு செண்டிமெண்டும் போய் விட்டது. நாலு பாட்டு அதுவும் சுசிலா மட்டும்(கற்பகம்), என்று ட்ரெண்ட் மாறி விட்டது. ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.. பக்கத்துவீட்டிலொரு கல்யாணம். பாட்டு போடுகிறவரைச் சுற்றி எப்பவும் சின்னப்பசங்க கூட்டம் இருக்கும் போங்கலே என்று அவர் விரட்ட விரட்ட ஒன்றிரண்டு பேர் எப்போதுமிருக்கத்தான் செய்வார்கள் அப்படி நானும் சபாபதியும் நின்று கொண்டிருந்தோம். காலைப் பந்தி நடந்துகொண்டிருந்தது.ரெக்கார்ட் போடுகிறவருக்குச் சாப்பிடப்போக வேண்டும். ஏல என்று எங்களை அழைத்தார் இந்தா இதை பாத்துகிடுங்க இந்த ரெக்கார்ட இப்படி போட்டு ஊசியை இங்கனெ வைக்கனும் இந்தப் பக்கம் முடிஞ்சதும் இதை திருப்பி போட்டு மறுபடி ஊசியை வைக்கனும் சரியா நான் சாப்பிட்டுட்டு ஓடியாந்துருதேன் வேற யாரையும் விட்ரக் கூடாது என்னா என்றபடி சாப்பிடப்போனார்.எங்களுக்கானா ஒரே சந்தோஷம். “காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு” என்று தாயைக் காத்த தனயன் பாட்டு சூப்பரா ஒடுது எதையோ பெருசா சாதிச்ச மாதிரி பெருமை பிடிபடல பாட்டு முடிஞ்சது திருப்பிப் போட எங்களுக்குள் போட்டா போட்டி. சபாபதி என்னை விட பெரிய பையன் மேலும் கல்யாண வீடும் அவனுக்குத்தான் ரொம்ப நெருக்கம் நான் தான் போடுவேன்னு போட்டான் சரியாத் திருப்பி போட்டு கரெக்டா ஊசியை எல்லாம் வைத்து விட்டான். எனக்கு பொறாமை பாதி கோபம் பாதி. திமு திமுன்னு நாலஞ்சுபேர் ஓடிவர எச்சிக் கையோட ரெகார்டு போடறவர் ஓடி வர பாட்டு முழங்குது ”நடக்கும் என்பார் நடக்காது …..”என்றுஒரே ஒட்டம் ஓடினவன் தான் நான்…..சபாபதி என்ன ஆனான் என்று கூடப் பார்க்கவில்லை.இப்போது சபாபதி இல்லை இறந்து விட்டான். சமீபத்தில்…..

உதிரிகள்


வெளிவராத சினிமாப் பாடல்கள் மாதிரி பிரசுரமாகாத கவிதைகள்ன்னு பழைய நோட்டுக்களில் கவிதைக் கிறுக்கல்கள் நிறைய இருக்கு...உதிரி உதிரியாய்.... உதாரணத்துக்கு ஒன்று.

இரண்டு புறமும்
ஒவ்வொரு பாடலுள்ள
இசைத் தட்டு:
காலைப் பந்தி
முடிந்து விடுமென்ற அவசரத்தில்
வேடிக்கை பார்க்கிறவர்களுள்
கொஞ்சம் சூட்டிகையாய்த் தெரிந்த
பையனிடம்
கிராம போனைக்
கவனிக்கச் சொல்லி விட்டு
சாப்பிடச் சென்றான்
ஸ்பீக்கர் செட் ஆள்
இரண்டாம் இட்லியை
விண்ட போது
கவனமுடனும் கர்வமுடனும்
திருப்பிப் போட்டு
சுப முகூர்த்தத் திற்குச்
சற்றும் பொருந்தாத
சோகப் பாட்டைச் சுழல விட்டான்
காவலுக்கு நின்றவன்
“நடக்கும் என்பார் நடக்காது...”
(பிப்ரவரி 1993)



Visitors