Monday, June 14, 2010

ஓடும் நதி- 36


பஸ்ஸுக்காக காத்திருந்தேன்.பஸ் பிடித்து ரயில்நிலையம் போய், ரயிலைப் பிடித்து, சென்னை போகவேண்டும்.ரயிலில், எஸ்-3 கோச்சில், 18 வது இருக்கை. இல்லையே திரும்பி வரும்போதல்லவா எஸ்-4 கோச்சில், 18 வது இருக்கை.... ரயில் டிக்கட்டை..எடுத்துப்பார்க்க யோசனை...அது தவறி கீழே விழுந்து விட்டால்..அது இருக்கிறதா பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். சரி, கிரெடிட் கார்ட், டெபிட் கார்டு இருக்கிறதா, இதெல்லாம்,பேண்ட்டின் டிக்கெட் பாக்கெட்டில் பத்திரமாக, உடலோடு ஒட்டி இருக்கிறது. டெபிட் கார்டின் PIN எண் என்ன? நினைவிருக்கிறது. வேலைக்குச் சேர்ந்த வருடமும் அதுவும் ஒன்று. நல்ல வேளை (ஏ.டி.எம்மைக் கண்டுபிடித்த பாரனின் மனைவி அவரிடம் கேட்டுக் கொண்டதால்) 43 வருடமாக,அதை நான்கு இலக்க எண்ணாகவே இன்னும் வைத்திருக்கிறார்கள், அவர் வாழ்க...ஒரு காரியம் மறக்கக் கூடாதென்று கைக்குட்டையில் முடிச்சுப் போட்டு வைப்போம். எதற்குப் போட்டோம் என்று மறந்து விடுவோம். அதேபோல் கிரெடிட் கார்டின் பின்நம்பர்........அதை எங்கேயோ குறித்து வைத்திருக்கிறேன். எங்கே..... நினைவுபடுத்த வேண்டும்.

என், எஸ்.எஸ்.எல்சி தேர்வு எண் நன்றாய் நினைவில் இருக்கிறது-92447. பி.யு.சி எண் -9357. என்னுடன் பி.யு.சி படித்த ஒரு .ஹாஸ்டல் சினேகிதன், அவனது வகுப்பு வரிசை எண் 104. மறந்து போகாமலிருக்க, ஒரு குறிப்பிட்ட புத்தகத்தின் 104-105-ம் பக்கங்களுக்கிடையே, ஒரு புது ஐந்து ரூபாயை ஒளித்து வைத்திருப்பான், அவசர காலத்தில் உபயோகமாயிருக்கும் என்று. ஒரு அவசர நேரத்தில் பார்த்தால், அந்தப் பக்கங்களை உள்ளடக்கிய தாள்களையே காணும். சக தோழர்கள் பத்திரமாகஆட்டை போட்டு, தனிப்பிறவி பார்க்கப் போய் விட்டார்கள். படம் பார்த்து விட்டு வந்து, படத்தில் ‘சஸ்பென்ஸ்பிரமாதம்,வில்லன் யாரென்றே கண்டுபிடிக்க முடியாது என்று அவனிடமே சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

.செல் போனின் பத்து இலக்க எண்ணை பதினொன்றாக அதிகரிக்கப் போகிறார்கள்.ஒரேயடியாக பன்னிரண்டாகவே ஆக்கி விடலாம். இப்போது தான் அதை செல்பேசியே நினைவில் வைத்துக் கொள்கிறதே. ஆமா, செல்பேசியை எடுத்துக் கொண்டோமா? ஆம், இருக்கிறது. அதற்கு சார்ஜர் எடுத்து வைத்தோமா. ஒப்பனைப் பொருட்கள் பையில், ஒன்று எப்போதும் உண்டு...அது இருக்கும். நினைவாக லாட்ஜ் அறையைக் காலி செய்யும்போது, சார்ஜரை வெளியே எடுத்திருந்தால், மறுபடி அதை உள்ளே வைத்துக் கொள்ளவேண்டும்.இப்படி ஏதேதோ தோன்றிக் கொண்டே இருந்தது.கணிணி மூலம் எடுத்த ரயில் டிக்கெட்.அந்த வலைத்தளத்திற்கு ஒரு பதிவுப் பெயர், அதனுள் நுழைய ஒரு பாஸ்வேர்ட். ஈ-பேங்கிங்கிற்கு ஒரு பாஸ்வேர்ட். அதன் மூலம், எல்.ஐ.ஸி, கிரெடிட்கார்டுக்கு பணம் அனுப்ப, ஒரு பின் நம்பர். அலுவலக ரோல் நம்பர், அலுவலகத்தில் கணினிக்கு ஒரு பாஸ் வேர்ட். அதை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.மாற்றிய ஒன்றிரண்டு நாட்களுக்கு, பழகி வந்த பழைய எண்ணை மறக்கத் தெரியாத மனம்; அதோடு ஒரு போராட்டம்.

என்னுடைய, நொரநாட்டியம் புடிச்ச(கச்சிதத்தை எதிர்பார்க்கிற) ஒரு பெரிய மேலதிகாரி, புத்தாண்டில், புதிய HOE &CO மேஜை நாட்காட்டி வாங்கியதும் முதல் வேலையாக, முதல் நான்கு ஐந்து நாட்களுக்கு, “வருடத்தைக் கவனிஎன்று எழுதி வைப்பார். அப்படியும், அவர் பார்வைக்கு வருகிற கோப்பில் கடந்த வருடத்தைப் போட்டு ஒன்றிரண்டு தவறாமல் வந்து மாட்டிக் கொள்ளும். HOE &CO காலண்டரில் அந்த வருடத்திய கோல்டன்நம்பர் என்று ஒன்றைக் குறிப்பிட்டிருப்பார்கள். அதற்கேற்றாற் போல கிரேக்கத்தில் ஒரு ‘பஞ்சாங்கம்இருக்கிறதாம். 2010-ன் கோல்டன் நம்பர்- “15

எண்களின் ஆதிக்கத்தால் இப்போதெல்லாம், சொந்த ஊரின் தபால் பின்கோடு எண், சொந்த வீட்டு எண்,சொந்த வாகனங்களின் எண்கள் எல்லாமே மறந்து விடுகிறது. ஒருமுறை வாகன சோதனையின் போது, ஒரு காவல்துறை அதிகாரி, வண்டி எண் என்ன என்று கேட்டார்.தடுமாறுவதைப் பார்த்து, நானே பார்த்துக் கொள்கிறேன், சார் எத்தனை வண்டி வச்சுருக்கீங்களோஎன்று சிரித்தபடி வழியனுப்பினார். “இல்லை ஒரு வண்டிதான் என்று அசடு வழிந்தேன்.இன்னும் பஸ் வந்த பாடில்லை.நேரமாகி விட்டதே, இன்று வழக்கமான மூன்றாம் பிளாட்ஃபாரத்தில் ரயில் வருமா இல்லை வேறா. ரயில் எண் என்ன, அதற்கு போகும் போது ஒரு எண், வரும்போது ஒரு எண்.வரும் போது 2661 என்றால் போகும்போது 2662.

சலிப்பும் எரிச்சலும் மேலிட்டுக் கொண்டிருக்கும்போது, பஸ் ஸ்டாப்பில் ஒரு ஒற்றை மாட்டுவண்டி வந்து நின்றது. வழக்கமாக நகரிலிருந்து பலவித சரக்குகளும் ஏற்றி வரும் வண்டி. வண்டிக்காரர் பஸ்ஸ்டாப்பை ஒட்டியிருந்த கடைக்கு ஏதோ சரக்கு இறக்கி விட்டு, கடையில் ஒரு வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட்டார். பஸ், தள்ளிச்சென்று நிற்குமோ, நிற்காமலே போய்விடுமோ, வண்டி இடைஞ்சலாய் நிற்கிறதே என்று குழம்பிக் கொண்டிருந்தேன். வண்டிக்காரர் சாவகாசமாய் பழத்தை தின்று விட்டு, மூச்சு விட்டபடி நின்ற மாட்டிற்கு தொலியைத் தின்னக் கொடுத்தார். தன் முரட்டு நாக்கால் அதை வளைத்து வாங்கி முழுங்கி விட்டு மீண்டும் பெரு மூச்சு விட்டது.கடையில் ஒரு ஓரமாய் ஒரு அட்டைப்பெட்டியில் சாப்பிட்டுப் போட்ட பழத்தொலிகளை வைத்திருப்பார்கள். மாட்டிடம், இன்னும் வேணுமாடா என்று பேசிக்கொண்டே அதிலிருந்து தொலிகளை எடுத்து உண்ணக் கொடுத்து விட்டு, கையில் ஒட்டியிருந்த பழத் துணுக்குகளை மாட்டின் முதுகில் தடவிக் கொண்டே என்னைப் பார்த்துச் சிரித்தார். எதற்கோ மாடும் தொடையைச் சிலிர்த்தது. எண்களின் உலகுக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம், என்று எண்ணிக் கொண்டிருந்தேன், பஸ் வந்தது, ஒரு எண்ணைத்தாங்கி....