Sunday, March 29, 2009

நெஞ்சம் அலை மோதவே....
ட்ரான்சிஸ்டர் சேதுவிடம் இருப்பதாகச் சொன்னான்.ஆனால் என்ன நிலைமையிலிருக்கிறது என்று தெரியாது.கட்டை போட்டால் பாடலாம் .டில்லி, மதறாஸ்-1 அலைவரிசையெல்லாம் எடுக்குமா தெரியாது என்றான்.ஆளுக்கு கொஞ்சம் காசு போட்டு பேட்டரி செல் வாங்கி முயற்சிப்பது என்று வாங்கிப் போட்டோம். கான்பூர் டெஸ்ட் விறு விறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை கவாஸ்கரும் விஸ்வனாத்தும் உண்டு இல்லை என்று ஆக்கிக் கொண்டிருந்தார்கள்.வீட்டில் ரேடியோவை எப்படி யார் விற்றார்கள் என்று தெரியவில்லை. அப்பா சொல்லி பெரிய அண்ணன் தான் விற்றிருக்க வேண்டும். அப்பாவுக்கு இப்படி பழைய சாமான்களை விற்றுக் காசாக்க அவனை விட்டால் ஆள் கிடையாது. நடுவுள்ளவனுக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது. என்னிடம் சொன்னால் எதுக்கு விற்கவேண்டும் என்று சண்டை போடுவேன்.பழைய சாமான்களை விற்கிற அந்தந்தக் கடைகள் அண்ணனுக்குத்தான் பழக்கம்.
பழைய பாத்திரம் என்றால், ரயில்வே ஃபீடர் ரோடில் இருக்கிற ஒரு கடை.உண்டு. அதற்கு என்னை அப்பா அவனுடன் ஒரு நாள் அனுப்பினார். ஒரு பெரிய கிடாரம் ஒன்றை விற்கச் சொல்லி இருக்கிறார்.அதற்குப் பெரிய விலையை எதிர்பார்த்திருந்திருப்பார் போலிருக்கிறது.அண்ணன் கொண்டு வந்து தந்ததில் பணம் குறைவாயிருந்திருக்கிறது.என்னை நீ போய் எவ்வளவுக்கு விற்றான் என்று கேட்டு வா என்று அவனுடன் அனுப்பினார்.கடைக்காரர் அண்ணன் சொன்னதையே சொன்னார்.ஒரு தாளில் குறித்தும் கொடுத்தார்.எனக்கு நம்பிக்கையில்லை.சரி பணத்தை தந்து விடுகிறேன்.கிடாரத்தை திருப்பித் தாருங்கள் என்றேன். எனக்கே நான் கெட்டிக்காரத்தனமாகப் பேசிவிட்டது போலிருந்தது.அது தூரெல்லாம் இத்துப் போனது தம்பி,பிரயோசனப் படாது, உடைக்கதுக்கு அனுப்பிட்டேன், என்று பேசிக் கொண்டே கல்லாவைத் திறந்து பத்து ரூபாயை எடுத்து நீட்டினார்.
இல்லை பரவால்லை, கிடாரத்தையே தந்துருங்க, பத்து நிமிஷத்திலயா உடைச்சுருப்பாங்க, எங்க வச்சு உடைப்பாங்க நான் அங்க போய் பாக்கேன் என்றேன்.யாவாரிக்கு கோவம் வந்துட்டு, அது இந்நேரம் சப்பளிஞ்சு சாடையில்லாமப் போயிருக்கும், நீரு என்னன்னா கூடப் பொறந்தவரையே சந்தேகப் படுதேரே என்றார்.இதுக்குத்தான் இந்தச் சவங்களையெல்லாம் வாங்கப் படாதுங்கிறது.....இப்ப என்ன செய்யனும்ங்கேரு..வே பாண்டியம் பிள்ளை, இன்னமே எதையும் விக்கக் கொண்டாரதீரும்,இந்தாரும் எனக்கு அவராதம்ன்னு நினைச்சுக்கிடுதேன்.. என்று ஐம்பது ரூபாய் கொடுத்தார்.சந்தோஷமாக வாங்கிக் கொண்டு அப்பாவிடம் கொடுத்தேன்.சாயங்காலம் வீதி உலா சுத்தி வர்றப்போ அந்தச் சீட்டைக் காண்பித்து புதுப் பாத்திரக் கடை ஆண்டியப்பனிடம் விசாரித்தேன், என்னடா நீ ஏமாந்துட்டியே ஏம் பேரைச் சொல்லிருக்க வேண்டியதுதானே, அவன் களவுச் சாமான் வாங்கறவன்ல்லா இன்னும் அறுபது ரூபா வரை வரை கொடுக்கலாமே என்றான்.அப்பாவிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
இரண்டு நாள் கழித்து அண்ணனிடம் துட்டு புரளுவது தெரிந்தது.பனியன், கைக்குட்டை, செண்ட் எல்லாம் வாங்கி இருந்தான்.அப்பாவிடம் சொல்லுகிறேன் உனக்கு இதுக்கெல்லாம் காசு ஏது என்றேன்.அப்பாதான் கொடுத்தா(ர்), வேண்ணா கேட்டுக்க என்று சொல்லி விட்டு வெளியே கிளம்பினான்.அப்பா சொன்னார் ஆமா அந்த ஐம்பது ரூபாய நான் தான் அவன்ட்ட கொடுத்தேன், என்றார் அமைதியாக. ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.இந்தா என்று பர்ஸிலிருந்து ஒரு ஐந்து ருபாயை என்னிடம் தந்தார்.வேண்டாம் என்று சொல்லிவிட்டு மத்தியானச் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு நானும் கிளம்பினேன்.என்னிடம் சீட்டு விளையாட்டில் ஜெயித்த காசு கொஞ்சம் இருந்தது. இரண்டு நாளைக்குப் போதும்.துரை சிகரெட் குடிக்க கிளம்பியாச்சு, என்று அப்பா சொல்லுவது கேட்டது.ச்சேய் இன்னம சிகரெட் குடிக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.
கமெண்டரி கேட்கத்தான் பேட்டரிக் கட்டையெல்லாம் போட்டு ட்ரான்சிஸ்டர் தயார் பண்ணியது.தெருவுக்கு வந்தால் பாட்டுக் கேட்கிறது..
`` நெஞ்சம் அலை மோதவே
கண்ணும் குளமாகவே
கொஞ்சும் கண்ணன் மேல்
கோபமாய்ப் போகிறாள்...’’
என்று பி.பி.சீனிவாஸ் அற்புதமாய்ப் பாடிக் கொண்டிருக்கிறார்.என்ன, என்னாச்சு மேட்ச், கேட்கலையா என்று சேதுவிடம் கேட்டேன். அவன் அப்படிச் சிரித்துக் கொண்டிருந்தான்.பதிலே சொல்லாமல் பயங்கரமாகச் சிரித்துக் கொண்டிருந்தான்.குசன்(குஞ்சுப் பிள்ளை சன் குசன், லெட்சுமண பிள்ளை சன் லெசன்..நான் கசன், கொஞ்ச நாளாய் இப்படிக்கூப்பிட்டுக் கொண்டிருந்தோம்.)அதற்கு மேல் சிரித்துக் கொண்டிருந்தான். சண்முகநாதன் வழக்கமான அமைதியுடன், கையில் பீடியுடன் இருந்தான்.பீடி கனமாயிருந்தது.அவன் சொன்னான், 616க்கு ஏழு விக்கெட் இந்தியா டிக்ளேர் பண்ணியாச்சு.சொல்லிவிட்டு சேதுவைப் பார்த்து சிரித்தான், சற்று அமைதியாய் இருந்த சேது திரும்பவும் பயங்கரமாகச் சிரித்தான்.
யாரோ சொன்னார்கள் என்னைப் பார்த்து, இந்தா வந்துட்டான், க்ளீனா செனையேத்துவான், அவன்ட்ட குடுங்க என்று. விஷயம் புரிந்தது, புகை வாசனையும் புரிந்தது.என்னிடம் சண்முகநாதன் ஒரு ஃபில்ட்டர் சிகரெட்டையும் , பொட்டலத்தையும் தந்தான்.ஓரமாய் உட்கார்ந்து கொண்டு சிகரெட்டைப் பிதுக்கிப் பிதுக்கி புகையிலைத் தூளை முக்கால் வாசி உதிர்த்து விட்டு, அதில் பாதியை தூரக் கொட்டிவிட்டு,தூளைக் கலந்தேன்.விதையும் தூளுமாக இருந்தது.விதையை சற்று நசுக்க வேண்டியிருந்தது.சிகரெட் தாளை சப்பையாக்கி விட்டு, தூளும் புகையிலையும் கலந்த கலவையை இடது உள்ளங்கையில் வைத்து வலது கை சிகரெட்டால் கொஞ்சம் கொஞ்சமாகக் கோதி நிறைத்தேன்.கொஞ்ச நேரத்தில் சினையேற்றிய சிகரெட் தயார்.ஒன்றைத் தயார் செய்து முடிக்கவும், பாடலை சிலோன் ரேடியோவில் (ரெகார்டின் மறுபக்கத்தை) திருப்பிப் போடவும் சரியாய் இருந்தது.
`பாரா முகம் கண்டு
மாறாத் துயர் கொண்டு –மனமே
ஏமாறி ராதை போகிறாள்....
கொஞ்சும் கண்ணன் மேல் கோபமாய்ப்
போகிறாள்... ’’
இரண்டாவதை முடிப்பதற்குள் எல்லாரும் இரண்டு ரவுண்ட் முடித்திருந்தோம். இதான் பிரமாதமாருக்கு, பீடில ஏத்தினா உலஞ்சு உலஞ்சு போகுது என்றான், சண்முகநாதன்.சொல்லிக் கொண்டே உற்சாகமாய் இழுத்தான். நானும்.
`கண்ணன் வேறானான்
ராதை வேறானாள்
இன்னல்ப் புயலால்
திண்டாடலானாள்....’
எனக்கு இரண்டு போதை. டிரான்சிஸ்டரை தலையில் வைத்துக் கொண்டேன்.சேது தெருவே அதிரும் படி சிரித்தான்அவன் பையிலிருந்து பேனாவை எடுத்து நான் கையில் எழுதியிருந்த பெயரின் முதல் எழுத்து, `M’ பூதாகரமாகவும், சிறிதாகவும் மாறி மாறி வேடிக்கை காட்டத் தொடங்கியிருந்தது.வேறு பெய்ரை எழுத முயற்சித்தேன், தலை சுழன்றது எஸ்.பி. பி பாடிய புதூப் பாட்டு, பட்டிக்காட்டு ராஜா படத்தில்..`கம்பன் மகனாக நான் மாற வேண்டும், கன்னித் தமிழால் உன் புகழ் பாட வேண்டும்...’ என்று நான் பாட ஆரம்பித்தேன், குமரன் கத்தினான், ஏல, ஏல இதுக்கே இந்த வரத்து வாற, இன்னும் கம்பன் மகனா வேற ஆகனுமா... என்றான். எல்லாரும் சிரித்தார்கள். சிரிப்பென்றால், இடிச் சிரிப்பு.குமரன் ரொம்ப அழகாகப் பாடுவான்.கச்சேரிக் கெல்லாம் போவான்.
வேடிக்கை பார்க்கிற கூட்டம் அதிகமாகவே, வீட்டிற்குப் போகத் தொடங்கினோம்.மாடிக்குப் போய் படுத்தேன். தரையிலேயே படுத்தேன், விரிக்க்கக் கூட முடியவில்லை.சற்று நேரத்தில் பிரட்டிக் கொண்டு வந்தது.மாடியிலிருந்த ஒரு சின்ன மடையில் களக்கென்று கக்கினேன்.அவ்வளவுதான். திரும்ப வந்து படுத்தவன், படுத்தவன்தான்.

இரண்டு நாளாய் சண்முகநாதனைப் பார்க்கவேயில்லை.என்ன விஷயம் என்று வீட்டுக்குப் போனால், அவன் யாத்தா யம்மா என்று குறுக்குப் பிடியால் துடித்துக் கொண்டிருந்தான்.அவன் அப்படி வாய் விட்டு அரற்றுகிறான் என்றால், வலி கடுமையனதாகத்தன் இருக்க் வேண்டும்.வா டாக்டர்ட்ட போவோம். என்றேன். எல்லாம் பாத்த்தாச்சு.ஒரு மருந்துக்கும் கண்டிக்ககலை என்றாள் அவன் அம்மா.உப்புத்தரிசில யாரோ வருமம் தட்டறவன் இருக்கானாம் அவண்ட்ட கொண்டு போணும்ன்னு அவன் அத்தான் சொல்லியிருக்காக என்றாள். அதற்குள் அத்தானே வந்து விட்டார்.மாப்ளே வாரேறா அப்படீ சைக்கிள்ல வச்சு கூட்டிட்டுப் போவோம் என்றார். நானும் சரி என்று என் சைக்கிளை எடுத்துக் கொண்டு வந்தேன்.
உப்புத் தரிசு ஊருக்கு தெக்கெ தனியாய் வயல் நடுவே இருந்தது. பாண்டி அண்ணனும் கூட வந்தான்.அவனுக்கு அந்த இடமெல்லாம் பழக்கம். அது குறவர்கள் வாழ்கிற இடம். குறவர்கள் என்றால் நரிக் குறவர்கள் இல்லை.இவர்கள் வேறு. பேசுவதெல்லாம் தமிழ்தான். ஆனித்திருவிழாவில் ராத்திரி சாமி வீதி வலம் வரும் போது, சாமிக்குப் பின்னால் கடைசியில் ஒரு கப்பல் மாதிரி ஒரு வண்டி வரும்.வண்டி என்றால், நல்ல பெரியது.ஒன்னரை ஆள் உயரமிருக்கும்.அதில் இந்த குறவர் இனத்திலிருந்து மூன்று நான்கு ஆட்கள் வருவார்கள்.ஒருவன் நல்ல கிழவன் போல மேக் அப் போட்டு, சோவிப் பல் கட்டி ஏதோ கூத்துப் போல பாடிகிட்டு வருவான்.பூராவும் `அப்படியாப்பட்ட சமாச்சாரம்.’கையில ஒரு கஞ்சிரா வச்சுக்கிட்டு அருமையா தாளம் போடுவான்.கள்ளப் புருஷன் வச்சுருக்கிற `பாதகத்தி’யப் பத்தி பாடி கதை சொல்லுவான்.

`யேய் ஏய்ய்
மஞ்சணத்தி மரத்தப் பாரு
மதினி போற போக்கைப் பாரு
காலுல தணடையப் பாரு..
ஏய்ய் யேய்ய்
காலுல தண்டையப் பாரு...
கவுட்டையில... ஏய்ய் கவுட்டயில....’பாதியில விட்டுருவான் கூட்டம் மிச்சத்தை நிரப்பும். கெடுத்தானே சின்னப்பய மகன், என்ன பேசுதான் பாரு என்று சின்னப் பையன் யாரையாவது கையைக் காமிச்சுக் கூப்பிடுவான்,ஏல மகா சனங்க மத்தியில கெட்ட சொல் சொல்லலாமாடா ஓடுறா இங்க இருந்து.. என்று சொல்லிவிட்டு கதையைத் தொடருவான் , இந்த சண்டாளி பாதகத்தி, வயல்ல உக்காந்திருக்கா, ஆமடையான்காரன் பர தேசம் போயிருக்கான், வந்தாம் பாரு புள்ளிக்காரன்...வந்தவன் சோறும் கறியும் கொண்டாந்து ஊட்டுதான். ஊட்டுதான்., அப்பிடி ஊட்டுதான்.
பாதகத்தி பாடுதா
``......... ............
கொத்தமல்லீக் குழம்பு வச்சு குத்துரானே இந்தக் குத்து..யாத்தா’’
இது வரை கேட்டுக் கொண்டிருந்த பெண்கள், கிழங்கட்டைகள் எல்லாம் ச்சேய் ச்சேய் என்று சொல்லிய படியே நகரும்.இது கால காலமா நடக்கிற கூத்து தான், அவன் பாடறதும், இவங்க கேட்கிறதும் பாதீல ஓடறதும்..

(கி.ரா மாமா இதைக் கேள்விப் பட்டுவிட்டு, ஏய் முதல்ல போயி அதைப் பதிவு பண்ணிட்டு வா என்றார்கள், நான் ஊரை விட்டு வந்து ரொம்ப நாள் கழித்து. நான் விசாரித்த போது, அந்த குடும்பமே இல்லை. இருக்கிற ஒருத்தனும் பைத்தியமா திரியறான், என்று தகவல் வந்தது. அவங்களுக்காக கோயில்ல குடுத்த நிலம் கூட, பயிரேத்தாமக் கிடக்கு என்றார்கள்)

நாங்கள் போன போது திருவிழா, கொடையில் கரகமும், டான்ஸும் ஆடுகிற இரண்டு மூன்று புள்ளைகள், எதுவும் ஆட்டத்துக்கு புக் பண்ண வந்தீங்கள என்று கேட்டது.அதுவும் அங்கதான் உண்டு. இல்ல, வருமம் தட்டனும், என்றதும் ஒரு குடிசையைக் காண்பித்தார்கள்.அதற்குள், எங்கள் வீட்டுக்கு சின்னச் சின்ன கொத்தனார் வேலை செய்கிற லட்சுமணன் ஓடி வந்தான்.
ஐயா என்ன, இங்க அண்ணாச்சியும் அவுக சேக்காளிகளும் வந்திருக்காக., நீங்க இங்க வந்ததே இல்லியே..என்றான். விஷயத்தைச் சொன்னதும் குடிசைக்குள் கூடிப் போனான். ஒரு கிழவர் படுத்திருந்தார். சுற்றிலும் மண் பானைகள்.. எல்லாமே வெளியே ஈரமாய் இருந்தது.சிலவற்றில் சுண்ணாம்பால் நம்பர் எழுதியிருந்தது கிழவன் பார்வை சண்முகநாதன் முகத்தில் நிலைத்தது.அவன் முக்கலும் முனகலுமேயே காட்டிக் கொடுத்து விட்டது. நாடி பிடித்துப் பார்த்தான்.ஐயா கொல்ஸ்க்குப் போய் மூனு நாளாச்சா. ஆமா. ஐயா அபின், கஞ்சா எதுவும் உண்டுமா. நான் தலை குனிந்து நின்றேன். அத்தான், ஆமா ஆமா என்றார். அவர் பயங்கரமா சிகரெட் பிடிப்பார்.
ஏதோ காய்ந்த புகையிலை மாதிரி ஒன்றை, ஒரு துணிச் சுருட்டிலிருந்து எடுத்தான். ஒவ்வொரு பானையாகத் திறந்தான்,ஏழு என்று எழுதியிருந்த பானையில் இருந்து ஒரு புளிச்ச திரவத்தை ஒரு செம்புப் போணியில் ஊற்றினான்.இந்தாரும் இதைக் கடிச்சுகிட்டு இதை மடக் மடக்குன்னு குடிக்கணும், குடியும் என்றான். லச்சுமணன், பாட்டையா ஐய்யா வீட்டுப் புள்ளைக பாத்து என்றான். அது பற்றி கிழவன் கண்டுகொள்ளவில்லை.
இதெல்லாம் ஒன்னுமில்ல நீத்துப் பாகம்தான்.(தண்ணீர் ஊற்றிய பழைய சோறு)என்றான் லச்சுமணன். இது ஏழு நாளையப் பழையது, அது எட்டு நாள்... என்று வரிசையாகச் சொன்னான்.சண்முகநாதன் மடமடவென்று குடித்துவிட்டான்.
வெளிய காத்தாட உக்காரும் என்றான் கிழவன்.நான், பானையைத் திறந்ததுமே, பாதி வெளியே வந்திருந்தேன். அங்கே குப்புறக் கிடந்த பழைய ஆட்டுரல் ஒன்றில் உட்கார்ந்தான் சண்முகனாதன்.பதினைந்து நிமிடம் கழித்து, டர் புர்ரென்று காற்று வெளியாயிற்று, கீழிருந்து.அடுத்த இரண்டு நிமிடத்தில் கட்டியாய் வாந்தி பண்ணினான்.முகம் தெளிவடைய ஆரம்பித்திருந்தது.அவன் வாந்தி எடுத்ததை நோக்கி சில பன்றிகள் ஓடி வந்தன.முகர்ந்து பார்த்துவிட்டு திரும்பி ஓடின.பார்த்தேளா முதாலாளி, வராகங்கூட வாய் வக்ய மாட்டேங்கு.
அதற்கு அப்பறம் ரெண்டு நாள் போய் மருந்து சாப்பிட்டு வந்தான். நான் அந்தப் பக்கமே போகவில்லை.

Visitors