Tuesday, April 6, 2010

ஓடும் நதி-26



ஒரு தனியார் நிறுவனத்தில் சில காலியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நடை பெற்றுக் கொண்டிருந்தது. இதை விடுத்தால், எனக்கு வேறு வேலைக்கான வாய்ப்பு மிகவும் குறைவு. வயது வேறு இருபத்தி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது.என் துயரங்களுக்கும் 26 வயது நெருங்குகிறது என்று சோகமாய் ஒரு கவிதை வேறு, தேர்வுத் தயாரிப்பின் நடுவே எழுதி முடித்த கையோடு, அமர்ந்திருந்தேன். நாங்கள் ஒரு நாலைந்து பேர் அமர்ந்திருந்தோம்.லேசாக அறிமுகமான நண்பர், பி.எல் படித்தவர் ஒருவர் என்னருகே அமர்ந்திருந்தார், ‘கோட், சூட் என சர்வாலங்காரங்களுடன் எனக்கு முன்பாக அமர்ந்திருந்தார்.நானே துவைத்து நானே தேய்த்துப் போட்டுக்கொண்ட உடை,. கையில் ஏகப்பட்ட குறிப்புகள் ஆகியவற்றுடன் நான். நிறைய சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார், “அவசரநிலை எப்போது பிரகடனப்படுத்தப் பட்டது, சார் ”25.06.1975....பன்னாட்டு நீதி மன்றம் எங்கே சார் இருக்கு”.....’’ஹேக்’’..... இப்படி நிறையக் கேள்விகள்....முடிந்த வரை சொல்லிக் கொண்டிருந்தேன்.

முன்னர் நடந்திருந்ததாகச் சொல்லப்பட்ட பல இண்டர்வியூ கதைகள் நினைவில் ஓடிக் கொண்டிருந்தன....ஒரு ஐ.ஏ.எஸ், நேர் முகத் தேர்வில், ஒரு வேட்பாளர், தேர்வு அறைக்குள் நுழைந்து அனைவரையும் வணங்குகிறார், அமரச் சொல்கிறார்கள், அமர்கிறார்.பல கேள்விக் கணைகளுக்குப் பின், யாரோ மின் விசிறியின் அளவைக் கூட்ட, திடீரென மேஜையிலிருந்த காகிதங்கள் பறக்கின்றன, தேர்வுக்கு வந்த மாணவர்(வேட்பாளர்) சட்டென்று எழுந்து காகிதங்களைப் பொறுக்கி மேஜையில் வைக்கிறார்.தேர்வாளர் ஒருவர் சொல்கிறார்,நீங்கள் வந்தது கலெக்டர் பணிக்கா, டவாலி பணிக்கா? சிரித்தபடியே, நீங்கள் செல்லலாம் என்கிறார்.அடுத்தவருக்கும் இதே சோதனை.அவர் அசையாமல் இருக்கையிலேயே இருக்கிறார். தேர்வாளர், “காகிதங்கள் பறக்கின்றனவே, ஒரு மாவட்ட ஆட்சியாளர் மேஜையில் எவ்வளவு முக்கியமான ஆவணங்கள் இருக்கும், அவை பறந்து போகின்றன, நீங்கள் சும்மா இருக்கிறீர்களே, ஒரு அசாதாரண மௌனத்திற்குப் பின்,நீங்கள் போய் வாருங்கள், என்கிறார். மூன்றாமவர் உள்ளே வருகிறார், அதே கதை அரங்கேறுகிறது. தேர்வுக்கு வந்தவர், மேஜையிலிருக்கும் அழைப்பு மணியை அடிக்கிறார், டவாலி உள்ளே வருகிறார்,இந்தக் காகிதங்களை எடுத்து அடுக்குங்கள், விசிறியின் வேகத்தைக் குறையுங்கள் என்கிறார். கதை அவருக்கு நல்லபடியாக, சுப முடிவாக முடிகிறது....

தேர்வு நடை பெறும் இந்த மாடிக்கு எத்தனை படிகள் (நான் ஏற்கெனவே எண்ணி விட்டேன் -15 !) ஏறி வந்தாய்.?இப்படிப் பல கதைகள் நினைவில் ஓடிக் கொண்டிருந்தன.”..... நண்பர் மெதுவாகக் கேட்டார்.. ஆர்யபட்டா துணைக் கோள் எப்போது ஏவப்பட்டது சார்,.... 19.04.1975. அடுத்து, ஆர்யபட்டான்னா யாரு சார்நான் அமைதியாக இருந்தேன். அதை விளக்க வேண்டுமென்றால்....கால் மணி நேரமாகும்..நல்ல வேளை அவரை அழைத்து விட்டார்கள்..நான் தப்பித்தேன்.

என்னிடம்,ஸ்டாம்ப் சேகரிக்கும் பொழுது போக்குக்கு என்ன பெயர் கேட்டார்கள்,பிலெட்டலிஎன்றேன்.அந்த நிறுவனத்தைப் பற்றிக் கேட்டார்கள்..சொன்னேன்.எந்த ஆங்கில எழுத்து அதிகம் உபயோகிக்கப்படுகிறது என்று ஒருவர் கேட்டார். ’E’ என்று சொன்னேன்.அதுவரை வெற்றிலை போட்டுக் கொண்டிருந்த ஒருவர் திடீரெனக் கேட்டார்,தமிழ்ல்ல எந்த எழுத்துப்பா அதிகம்..யூஸாறது.நான், “அதிகமாய், துணையெழுத்தாகிய ` உபயோகமாகும.

அடுத்து உபயோகமாகும் என்றேன்.நீ என்ன ப்ரிண்டிங் ப்ரஸ்ஸில ஜோலி பாத்திருக்கியா என்று கேட்டார். எல்லோரும் சிரித்தார்கள். கடைசியாய்க் கேட்டார்கள், அதிகாரி பணி இல்லாமல், கிளார்க்காகப் போட்டால் சம்மதமா என்று, சரிஎன்றேன்.நான் வெளியேறுகிற போதும் அவர்,, பையன் ப்ரஸ்ஸில ஜாப் பாத்துருப்பான் போல, அதான் கரெக்டாச் சொல்லிட்டான் என்று சொல்வது கேட்டது.

உண்மைதான். பிரஸ்ஸில் வேலை என்று பார்க்கவில்லை, ஆனால் என்னுடைய, வண்ணநிலவனுடைய எஸ்தர் புத்தகங்கள் அச்சாகும் போது கொஞ்சம் கம்போசிங் படித்திருக்கிறேன். நானே சுமாராக கம்போசிங் செய்வேன்.எட்டு, பத்து, பன்னிரெண்டு என்று பல வித பாய்ண்டுகளில் ( ஃபாண்ட் சைஸ்) ஈய எழுத்துக்கள், டைப் கேஸ் என்கிற கட்டம் கட்டமான மரப் பெட்டியில் இருக்கும். இந்தக் “கேஸ்களில் எழுத்துக்கள், அச்சுக் கோர்க்க தோதுவாய் தட்டச்சு விசைப்பலகை போல், ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் இருக்கும் அகர வரிசையில் இருக்காது. இந்த ஒழுங்கு ஊருக்கு ஊர் மாறுபடவும் செய்யும். டைப் கேஸில் வும் `துணையெழுத்தும் அதிகம் கிடக்கும்.அதே போல் ஆங்கிலத்தில் ‘E’. அந்த ஞாபகத்தில் தான் பதில் சொன்னேன்.இப்போதைய டி.டி.பி காலத்தில் அதெல்லாம் எங்கே போயிற்றோ.இப்போது துணை எழுத்தை மட்டும் தனியாக தட்டச்சு செய்ய சிரமப் படுகிறது.அடிக்கடி ஒரு கனவு வரும்: குளித்து விட்டு தலை துவட்டினால், ஈரத்துண்டில், பேன் மாதிரி குத்துக்குத்தாய் ஒரே ஈய எழுத்துக்கள்; அத்தனையும் துணை எழுத்துக்கள். எடுப்பார் கைப்பிள்ளை போல், எதனுடாவது சேரும்போதுதான் அர்த்தம் பெறும் துணைஎழுத்துக்கள்.

எனக்கு ஒரு வழியாய், கிளார்க் வேலை கிடைத்தது. அந்த ஆர்யபட்டா வழக்கறிஞ நண்பருக்கு அதிகாரிப் பணி கிட்டியது.அவர் இப்போது துணைப் பொது மேலாளராக இருக்கிறார்.