Monday, May 14, 2012

நன்றி : காட்சிப்பிழை திரை, மே 2012


திரைக்குப் பின்னால்......
யோசித்துப் பார்த்தால் அரை நூற்றாண்டு ஆகி விட்டது.அப்போதெல்லாம் கால் ஆண்டுத்தேர்வோ, அரை, முழு ஆண்டுத் தேர்வுகளோ, எல்லா விடுமுறைக்கும் தென்காசிக்குப் போய் விடுவேன் அங்கே எங்கள் சகோதரி வீடும், அண்ணியாரின் வீடும் இருந்தது. அண்ணியாரின் வீட்டில்தான் நன்றாகப் பொழுது போகும். அக்காவுக்கு திருமணம் ஆன புதிதில் அவர்கள் வீட்டில் மின்சாரமே கிடையாது. அண்ணியாரின் தம்பிகள் இருவர், என்னை விட மூத்தவர்கள் என்றாலும், என்னிடம் அன்பாக இருப்பார்கள். அவர்கள் பக்கத்து வீட்டில் ஒரு நகைக் கடை அதிபர். அப்போது அவருடைய நகைக்கடை அங்கே பிரபலம். அதனால் அவர் வீடு ஜே ஜே என்று கிடக்கும். மத்தியானவேளை சாப்பாட்டுக் கடையெல்லாம் முடிந்ததும் அந்த வீட்டு அம்மாவும் அவர்கள் மகளும் ரேடியோவை, நல்ல பெரிய மேஜிக் ‘ஐஉள்ள மர்பி ரேடியோ,  அலற விட்டுக் கொண்டு ஹாய்யாக பட்டாசலில் படுத்திருப்பார்கள்.பகல் மூன்று மணி ஆனதும் சிலோன் -வர்த்தக ஒலிபரப்பு- ரேடியோவில் அற்புதமான பாடல்கள் போடுவார்கள். நான்கு மணிக்கு, ‘எவெரெடி இசைக்களஞ்சியம் (அதுவே பின்னால் பாண்ட்ஸ் இசைக்களஞ்சியமாக மாறியது, ஸ்பான்சர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள்,ஸ்பான்சர்கள் என்பதெல்லாம் இப்போதைய வார்த்தைகள்.)
     அருமையான பிரம்பு நாற்காலிகள் கிடக்கும். அதை ரேடியோ அருகே போட்டுக் கொண்டு நாங்கள் உட்கார்ந்து விடுவோம்.அப்போது தென்காசியில் இரண்டு தியேட்டர்கள்தான் உண்டு. ஒன்று ஊரின் வடக்குப் புறமாக இருக்கும் பாக்கியலக்ஷ்மி தியேட்டர். இன்னொன்று தெற்கே இருக்கும் பரதன் தியேட்டர்.அவர்கள் அதை வடக்கு கொட்டகை, தெற்கு கொட்டகை என்பார்கள்.ஒரு பாடல் முடிந்து அடுத்த பாடலுக்கு முன், விளம்பரம் ஒலிபரப்பாகும் போதே அடுத்து என்ன பாட்டு, எந்தப் படத்திலிருந்து போடுவார்கள் என்பதை வைத்து ஒரு விளையாட்டை உண்டு பண்ணியிருந்தார்கள். அந்தப் பாடல் இடம் பெறும் படம் எந்தக் கொட்டகையில் வந்தது, வடக்கு கொட்டகையிலா தெற்கு கொட்டகையிலா என்று யூகித்துச் சொல்ல வேண்டும். பாடலை அறிவித்தவுடன் “ ஹேய் இது வடக்கு கொட்டகையில் வந்தது என்று கூவுவார்கள். அதைச் சரியாகச் சொன்னவருக்கு “ஒரு பாய்ண்ட். கொஞ்சம் சிகரட் அட்டைகளை முதலிலேயே ஆளுக்குப் பத்தாக பிரித்துக் கொள்வோம்.தோற்றவர்கள் ஜெயித்தவ்ர்களுக்கு ஒரு அட்டையைக் கொடுத்து விடவேண்டும். இதில் வேடிக்கை என்னவென்றால் எனக்கு அந்த ஊரில் எந்த தியேட்டரில் என்ன படம் வந்தது என்று தெரியாது.அவர்கள் சொன்னதைத்தான் நம்ப வேண்டும்.சமயத்தில் ஏமாற்றினால் அக்கா வந்து விடுவாள் அந்த விளையாட்டுக்கு.ஏல ஏமாத்துராங்கடா... தாய் மகளுக்கு கட்டிய தாலி வடக்கு கொட்டகையில்தான் வந்தது...தெற்கு கொட்டகையில் வந்தது என்று சும்மா சொல்லுதாங்க, என்பாள்.கொஞ்ச நேரம் அக்காவின் மேற்பார்வையில் நியாயமாக நடக்கும். அப்புறம் அம்மா விழித்துக் கொண்டு விட்டால் சத்தம் போட்டு விடுவார். “ஏட்டி, அப்பா முழிக்கிற நேரம் ஆயிட்டு, போ அடுப்பை பத்த வை காபி போடனும்என்று கிளப்பி விடுவாள்.அப்பாவும் மாடியில் இருந்து இறங்கி வருவார்.சில நாள் அம்மாவும் மாடிக்குப் போய் விடுவாள். அப்போது அக்கா சந்தோஷமாய் விளையாடுவாள். அம்மாவும், பூனை போல் இறங்கி வந்து அடுப்படிக்குப் போய் காபி போட ஆரம்பிப்பாள்.
     திருநெல்வேலிக்கு வந்து இந்த விளையாட்டை அறிமுகப் படுத்த நினைத்தேன். அது எடுபடவில்லை. ஏனென்றால் இங்கே தியேட்டர்கள் அதிகம். 1960-ல், பாலஸ்-டி- வேல்ஸ், (என்ன ஆங்கில விசுவாசம்), ரத்னா, ராயல், பாப்புலர் என்று நான்கு இருந்தன. இவை தவிர பாளை அசோக் டாக்கீஸ் அங்கே பழைய படமும், சனி, ஞாயிறு தவறாமல், குறைந்த கட்டணத்தில் இந்தி,ஆங்கிலப் படமும் போடுவார்கள்.1960 பிப்ரவரியில் பார்வதி டாக்கீஸ் ஆரம்பித்தார்கள்.அப்பொழுதெல்லாம் புது தியேட்டர்கள் என்றால் ஆரம்பப் படமாக சிவாஜி கணேசன் படம்தான் போடுவார்கள். பார்வதி டாக்கீஸ் ஆரம்பிக்கும் போது இரும்புத்திரைவெளியிட்டார்கள். 1962-ல் லக்ஷ்மி தியேட்டர் ஆரம்பிக்கும் போது “பார்த்தால் பசி தீரும் படம் போட்டார்கள்.எனக்குத் தெரிந்து எந்த தியேட்டரும் எம்.ஜி.ஆர் படத்துடன் ஆரம்பிக்கவில்லை. ரொம்ப வித்தியாசமாக திருநெல்வேலியின் மிகப்பெரிய தியேட்டரான சென்ட்ரல் தியேட்டர் ஆரம்ப தினத்தன்று, ‘போலீஸ்காரன் மகள்படம் திரையிட்டார்கள். என்னடா இது சரியான அழுகுணிப்படத்தைப் போய் போடுகிறார்களே என்று பெண்கள் பேசிக் கொண்டார்கள்.
     திருநெல்வேலியின் முதல் தியேட்டர் பாப்புலர் டாக்கீஸ்தான். அதுவும், முதலில் நாடகக் கொட்டகையாகத்தான் இருந்தது.நெல்லை கணபதி விலாஸ் தியேட்டர் என்று பெயர்.ராயல் டாக்கீஸும் பழமையான தியேட்டர்தான். இதில் சிந்தாமணி படம் பிரம்மாண்டமாய் ஓடியதை அடுத்து அந்தப் பணத்தில் மதுரையில் ராயல் டாக்கீஸாரால் கட்டப் பட்டதுதான் “ சிந்தாமணிடாக்கீஸென்பார்கள்.இப்போது லக்ஷ்மி, பார்வதி, ராயல், பாலஸ் என அநேகமான தியேட்டர்களை மூடி விட்டார்கள்.
     அப்போதெல்லாம் சினிமா தியேட்டர்கள் நல்ல வருமானம் தரக்கூடியவை. விநியோகஸ்தர்கள் பாடுதான் சற்றுத் திண்டாட்டமானது. தியேட்டர் நடத்தி நாலு காசு பார்த்தவர்கள் தாங்களே,விநியோகம் செய்தால் என்ன என்று இறங்குவதும் உணடு. பழம் தின்று கொட்டை போட்ட பல விநியோகஸ்தர்கள் இடையே அவ்வப்போது இப்படிச் சில சில புதுப் பணக்காரர்களும் நுழைவார்கள்.அவர்களால் நீண்ட நாள் தாக்குப் பிடிக்க முடியாது. அவர்களைத்தான் தயாரிப்பாளர்கள் குறி வைப்பார்கள். படம், ப்ரீ வியூ காட்டும் போது பல “சந்தோஷங்களைஏற்பாடு செய்து ஆளை அமுக்கி விடுவார்கள்.படத்தில் சென்சாருக்கு முந்திய சில கிளுகிளு“ காட்சிகளும் இருக்கும். அப்படி ஒரு புது விநியோகஸ்தர், பக்கத்திலும், படத்திலும் நடிகையின் ஆடைக் குறைப்பில் ஜொள்ளு விட்டு ஏகப்பட்ட விலைக்கு வாங்கி விட்டார், ஒரு படத்தை. அந்தப்படத்தில் அப்படிக் காட்சிகளே இல்லை. தன் முதல்ப் படத்தில், ஒரு வெள்ளி விழாக் காதாநாயகனான ஒரு நடிகர், தனது இரண்டாவது படமான அதில், வில்லனாக நடித்திருந்தார். கதாநாயகி நடிகையோ பிரபலமாகிக் கொண்டிருந்தவர். பிரபல நடிகர்களுடனும் இயக்குநர்களுடனும் நடிக்க ஆரம்பித்து விட்டார். படத்தில் ஆடைக் குறைப்பைக் கேள்விப்பட்ட மிகப்பெரிய நடிகர்கள் இருவரும்,அறிமுகப்படுத்திய இயக்குநரும் படத்தில் வரும் அக்காட்சிகளை நீக்கி விடும்படி தயாரிப்பாளரை(அவரும் புதியவர்) நடிகை மூலம் வற்புறுத்த, சத்தமில்லாமல் தானே சென்ஸார் செய்து விட்டார் தயாரிப்பாளர். அவர்தான் இசையமைப்பாளரும், பாடல்கள் பிரமாதமாயிருக்கும். இங்கே படம் ரிலீஸாகையில், அந்த விநியோகஸ்தகக் கம்பெனி மேனேஜர், ஒரு ஆற்றங்கரையில் கதாநாயகியைக் காண்பிக்கும் போது, இப்போ அப்படி வரும், இப்படி வரும் என்று எங்கள் அருகில்  அமர்ந்து முதல் நாள், முதல்க் காட்சியில் சொல்லிக் கொண்டிருந்தார். ஒன்றும் வரவில்லை. நாங்கள் சத்தமாகவே கிண்டல் செய்து கொண்டிருந்தோம். அவருக்கு சற்று காது மந்தம்.அவரும் அசட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தார்.
சில விநியோகஸ்தர்கள் சில ஏரியாக்களில் சக்கைப் போடு போடுவார்கள். அவர்கள் தங்கள் எல்லைகளை புதிய ஏரியாக்களுக்கும் விரிவு செய்வார்கள்.உதாரணமாக மதுரை- ராமநாதபுரம் ஏரியாக்களில் சேது பிலிம் டிஸ்ட்ரிப்யூட்டர்கள் பிரபலம்.திருநெல்வேலிக்கும் தங்கள் விநியோக எல்லையை விரிவு படுத்தினார்கள்.ஆனால இங்கே அவர்களால் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. எனக்கு, சேது பிலிம்ஸில் உதவி மேனேஜராக இருந்தவர், பஷீர் என்று கம்பம் ஊர்ப் பக்கத்துக்காரர், நண்பர். அவருடன் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பேன்.அவர்களைப் போலவே மதுரையில் பிரபலமான ஒரு கம்பெனியினர், சுப்பு ஃபிலிம்ஸ் என்று நினைவு, திருநெல்வேலிக்கு ஒரு படத்தை எடுத்திருந்தனர். (அப்போதெல்லாம் திருநெல்வேலிக்கு எம்.ஜி.ஆர் பட ரேட்டே 100000/-தான். சிவாஜி படம் என்றால் இதற்கு நெருங்கி வரும். இந்த ரேட் கூடிக் கொண்டே போனது. அடிமைப் பெண் நான்கு லட்சத்திற்குப் போனது). நான் சொல்லும் பிரஸ்தாபப் படத்தை, திருநெல்வேலியின் பிரபலமான விநியோகஸ்தர் 50.,000/-ரூபாய்க்கு கேட்டு, பிறகு விட்டு விட்டனர், அவர்களின் முதல் மதிப்பு, திருநெல்வேலி - கன்னியாகுமரி ஏரியாவுக்கு ஐந்து வருடத்திற்கு, 40000/- ரூபாய்தான். படம் நன்றாயிருப்பதாகத் தோன்றவே 10000/ அதிகம் தருவதாகச் சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் கம்பெனியில் மெட்ராஸ் சென்று படத்தைப் பார்த்து விலை பேசி முடிப்பதெல்லாம் ஒரு மேனேஜர். அவர் ஒரு  அய்யர். அவர் ரொம்பக் கெட்டிக்காரர், எங்கள் குடும்ப நண்பர்.அவர் ஒரு விலை சொல்லி விட்டால் அதைத் தாண்டி யாரும் வாங்க முன் வர மாட்டார்கள். அய்யரின் திருநெல்வேலி ரேட் 50000/- என்றால் மதுரைக்கு அதன் ரேட் 80000/ மட்டும்தான்.இதனால் அவர் படம் பார்க்க விரும்புகிறார் என்றால், படத்தயாரிப்பாளர்களே பயப்படுவார்கள். மனுஷன் ஏதாவது ஒரு ரேட்டைச் சொல்லிட்டார்ன்னா போச்சே.. அதுக்கு மேல் ஒரு பைசா கூட எவனும் தர மாட்டானே, என்பார்களாம்.அப்படியும் என் இருபது வயதில் அவருக்கு வயது அறுபதுக்கும் மேல் இருக்கும்.ஆனால் அவரது ரசனை ரொம்பவும் புதிதானது.தில்லானா மோகனாம்பாள் படத்திற்கு அவர் சொன்ன விலையைக் கேட்டு ஏ.பி.என் னே அசந்து போனாராம், நம்ம படம் அவ்வளவு நல்லா வந்திருக்கா என்று.( அது எடுக்கப் பட்டுக் கொண்டிருக்கும் போது ஸ்டுடியோ வட்டாரங்களில் இன்னொரு ‘பாசமலர்தயாராகிறது என்ற பேச்சு அடிபட்டது.அது பற்றி பின்னொரு கட்டுரையில் பார்க்கலாம்) அதன் பிறகுதான் சுதாரித்து நல்ல விலைக்கு ஏரியாக்களை விற்று நிறைய லாபம் சம்பாதித்தார் என்பார்கள். ஆனால் அய்யரின் கம்பெனி அதை வாங்கவில்லை.அவர்கள் ரொம்ப முண்ட மாட்டார்கள்.அப்படியே விட்டு விட்டாலும் இரண்டாவது ஐந்தாண்டு உரிமையை சத்தம் காட்டாமல் வாங்கி விடுவார்கள்.
எனக்கு தெரிந்த ஒருவர், கே ஆர். விஜயா, அப்போது விஜயாவுக்கென்று ஒரு மார்க்கெட் இருந்தது, படம் ஒன்றை
(ஆயிரத்தில் ஒருத்தி)  விநியோக உரிமைக்காக,பார்க்க எண்ணினார்.நான் தற்செயலாய் சென்னையில் இருந்தேன். என்னையும் ப்ரீவியூவுக்கு அழைத்திருந்தார்.ஆனால் அன்று ‘அய்யர்கேட்டதாலேயே படம் போடுகிறார்கள். வடக்கு உஸ்மான் ரோடில் ஒரு ப்ரிவியூ தியேட்டர். நாங்கள் போனதும் அய்யர் வந்தார். அவரிடம் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன்.நீ கிருஷ்ணன், (அது அவரது மகன் எம் .ஐ.டி யில் பி.டெக் படித்துக் கொண்டிருந்தான். நான் எம்.எஸ்.சி பெயிலாகிவிட்டு சுற்றிக் கொண்டிருந்தேன்.) ஃப்ரெண்டு இல்லியோ.... படிச்சிண்டுதானே இருந்தே, என்ன, இப்ப பட பிஸினஸ்சில் இருக்கியா என்றார். ஆமாமா படிக்கிறேன், சும்மா நண்பர் கூட வந்தேன், என்றேன். அவர் அருகில் உட்கார வைத்துக் கொண்டார். முக்கால்வாசிப் படம்தான் பார்த்திருப்பார். படம் நன்றாக இல்லை. அசோகனின் ஓவர் ஆக்ட் சகிக்க முடியவில்லை.படத்தை நிறுத்தச் சொல்லிரலாமா.. என்று கேட்டார். எனக்கு படமாவது முழுதாகப் பார்ப்போமே என்று ஆசை. அதற்கு முன் புதிய பூமி, கண்ணன் என் காதலன் (ரீரிக்கார்டிங் சமயம்) என்று சில படங்களை கொஞ்சம் கொஞ்சம் ப்ரீவியூ பார்த்ததுண்டு. அய்யர் எழுந்து விட்டார்.விளக்குகளைப் போட்டு விட்டார்கள். அய்யர்,
முதலாளி கிட்ட பேசி விட்டுச் சொல்லுகிறேன் என்று கிளம்பினார். நான் கார் வரை போனேன். திடீரென்று “எவ்வளவுவே உம்ம ரேட், சொல்லும் பார்ப்போம் என்று கேட்டுச் சிரித்தார்.
     அய்யய்யோ எனக்கு என்ன தெரியும், என்று அசடு வழிந்தேன். “சும்மா சொல்லும் வே என்றார்.நான் 45 என்றேன். ஏயப்பா பரவாயில்லையே., நான் ரேட்டைச் சொன்னா வருத்தப் படுவா, அதெல்லாம் தாங்காது... வரட்டா..  என்று சொல்லாமலேயே கிளம்பி விட்டார். நண்பர், அய்யர் என்ன சொல்லுகிறார் என்று துளைத்தார். ஒண்ணுமே சொல்லலை என்று வடிவேலு பாணியில் சத்தியம் செய்தும் நம்பவில்லை. அதை ஐம்பதுக்கு, ஒரு ஆள் ஏற்கெனவே கேட்டு விட்டதாகவும் அதற்கு மேலிருந்தால் பேசலாம் என்று படத்துக்காரர்கள் சொன்னார்களாம். அய்யர் கணக்கு தப்பவில்லை. ஐந்து வருடம் முடிந்தும் கூட, முதல் கூடத் தேறவில்ல அந்தப் படம்.
     இன்னொரு படம் பற்றிப் பார்த்தோமே, அந்தப் படத்தை அய்யரின் மதிப்பாகிய 50000/ தை விட் அதிகமாக,மதுரை சுப்பு பிலிம்ஸார் 60000/- என்று முடித்து விட்டனர்.படம் வந்து நாலைந்து நாட்கள் ஆனது. படம் பயங்கர ஹிட். தரை டிக்கெட் முழுவதும் பெண்களுக்கே என்று தினமும் மாலைக் காட்சிக்கு போர்டு வைக்கிற அளவுக்கு கூட்டம் அலை மோதியது. திடீரென்று பஷீர் சொன்னர்,உமக்கு விஷயம் தெரியுமா..இந்தப் படத்தை மதுரை சுப்புச் செட்டியாரிடம், ஒரு லட்சம் என்று பேசி வினியோக உரிமையை,மறுபடி அய்யர் வாங்கி விட்டார், இங்கே ஒருத்தனுக்கும் தெரியாது என்று.கம்பெனிகளுக்குள் அவ்வளவு போட்டி உண்டு. அந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கும் தியேட்டர்க் காரர்களுக்கும் அய்யர் கம்பெனிக்கும் ஆகவே ஆகாது.. 70 நாட்களுக்கு மேல் ஆகியும் நன்றாக ஓடிக் கொண்டிருந்த “குழந்தையும் தெய்வமும் “ படத்தை, விரைவில் வரப்போகும் நான் ஆணையிட்டால் படத்திற்காக, சீக்கிரமே டிக்கெட் கவுண்டரை மூடுவது, சீக்கிரமே படத்தைப் போடுவது என்று பல கலாட்டா செய்து தூக்க முயற்சித்தார்கள், தூக்கியும் விட்டார்கள்.. இதனால் வினியோகஸ்தருக்கும் தியேட்டர்காரர்களுக்கும் மனக்கசப்பு. அதற்குப் பிறகு அவர்கள் படம் எதுவும் இங்கே திரையிடப்படவே இல்லை.
இதெல்லாம் எல்லா தியேட்டரிலும் சகஜம். ரகசியப் போலீஸ்115, படத்துக்காக ஊட்டிவரை உறவு படத்திற்கு இப்படி நெருக்கடி கொடுத்தார்கள்.ஒளி விளக்கு படத்திற்காக தில்லானா மோகனாம்பாளை தூக்கி விட்டார்கள். ஆனால் இது மட்டும் முன்பே சொல்லித்தான் ரிலீஸ் செய்தார்கள். தில்லானா மோகனாம்பாள் கடைசி ( 50 வது நாள் என்று நினைவு) நாளன்று மாலைக் காட்சி ஹௌஸ்ஃபுல். எங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம். நாங்கள் மறுநாள் ஒளிவிளக்கு படத்திற்காக தியேட்டரை அலங்கரிக்க அங்கே நின்று கொண்டிருந்தோம்.
     நான்தான் சுப்பு பிலிம்ஸ் மேனேஜர் சொக்கலிங்கம் என்பவரிடம் சொன்னேன். “ சார், படத்தை, உங்க செட்டியார் வித்துட்டாராமே என்று. அவருக்கு ஆச்சரியம். என்ன தம்பி, விளையாடுறீங்களா, எனக்குத் தெரியாம செட்டியார் எப்படி விப்பாரு என்றார். இதை கேட்டுக் கொண்டிருந்த தியேட்டர் உதவி மேனேஜர் போல் ஒருவர், அவர்தான் வணிக வரி அலுவலக வேலைகளெல்லாம் பார்ப்பார். வாரம் ஒரு முறை போய் வரி கட்டிவிட்டு, ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் பின்னால் அங்கேயே இருந்து, C.T.O ஆஃபீஸ் சீல் அடித்து வரவேண்டும். அதற்கும் எங்களில் சிலர் அவருக்கு உதவிக்குப் போவோம். நாங்கள் கேட்கிற போதெல்லாம் தட்டாமல் டிக்கெட் தருவார். அவர், தம்பி சொன்னா சரியா இருக்கும்... நீங்க உடனே மதுரைக்கு கால் போடுங்கஎன்று பரபரத்தார்.மேனேஜரிடமும் சொல்லி விட்டார். மேனேஜருக்கு  அய்யர் கம்பெனி வாங்கினதில் பயங்கரக் கடுப்பு. ஃஃபோன் போட்டுப் பேசினார்கள். ஆமா, லம்ப்பா ஒரு ரூபாய்க்கு கேட்டாங்க, அஞ்சு வருஷம் ஓடினாலும் வராத ரூபாயாச்சேன்னு கொடுத்திட்டோம்.. நீங்களும் ரிப்போர்ட்டே அனுப்பலை என்றார்களாம். சரிதான் படத்தை ஓட்ட மாட்டார்களே இங்கே என்று நினைத்தோம். ஆனால் அய்யர் கம்பெனியில் என்ன மாயம் செய்தார்களோ . தியேட்டர்காரர்கள் மசிந்து விட்டார்கள்.படம் அங்கேயே 175 நாட்கள் ஓடியது எம்.ஜி.ஆர், சிவாஜி ரிக்கார்டுகளையெல்லாம் தவிடு பொடியாக்கியது, அந்த கறுப்பு வெள்ளைப் படம். திருநெல்வேலியில் மட்டும் அந்த முதல் ரன்னிலேயே ஒரு லட்சத்திற்கும் அதிகமாக விநியோகஸ்தர் பங்கு வந்தது.தியேட்டர் பங்கும் அதே அளவு வந்ததும் ஒரு சரித்திரம்.அந்தப் படம் ‘ பணமா பாசமா.தியேட்டர் லக்ஷ்மிதியேட்டர், இப்போது அதை மூடி விட்டார்கள்.175 நாட்களும் பகல் காட்சி- அதாவது தினசரி மூன்று காட்சிகள்- ஓடியது. அதற்கு முந்திய, கறுப்பு வெள்ளைப்படம் மாட்னி ஓடிய சாதனை, 63 நாட்கள் படம் தனிப்பிறவி. அதற்கு முன் நானும் ஒரு பெண் 42 நாட்கள் மூன்று காட்சிகள். அதற்கு முந்திய சாதனை, 30 நாட்கள் ‘பாசமலர்.இதெல்லாமே பெண்கள் கூட்டத்தினால் உண்டான சாதனைகள்.
     எம்ஜியார் படமென்றால் முதல் வாரம் விநியோகஸ்தர் பங்கு 80% தியேட்டர் பங்கு 20% இரண்டாவது வாரம் 70க்கு 30 என்று கூடிக் கொண்டே போகும். கடைசியில் தலைகீழாகி விடும் ஆனால் 40-60க்கு கீழ் வராது.சில படங்கள் ஓடவே ஓடாது. விநியோகஸ்தர் இல்லாமல் நேரடியாக தயாரிப்பாளரே வெளியிட்டு...ஒரு வாரமோ பத்து நாளோ ஓடி பெட்டியை எடுத்துப் போகக்கூட ஆளில்லாமல் தியேட்டரிலேயே கிடக்கும். இவர்கள் எப்போதாவது, எந்த கேப்பிலாவது இரண்டு நாளைக்கு அந்தப் படத்தை ஓட்டி, ப்ரொஜக்டர் துருவேறாமல் பார்த்துக் கொள்வார்கள்.திருநெல்வேலி லட்சுமியில்ஆசைஅலைகள்என்று ஒரு படம் எஸ்.எஸ்.ஆர், எம்.ஆர்.ராதா நடித்தது.. கே.வி.மகாதேவன் இசையில் ஒரு அருமையான பாடல் உண்டு
அன்பு என்பது இன்பமானது
அன்பு என்பது தெய்வமானது..
தியேட்டரிலேயே படப்பெட்டி கிடந்தது.அதை தயாரித்தவரும் திருநெல்வேலிக்காரர்தான். இதே போல் தியேட்டரைக் காத்துக்கிடக்கும் பெட்டிகள் ஒவ்வொரு தியேட்டருக்கும் சிலவை உண்டு.  பார்வதி டாக்கீஸில் குழந்தைகள் கண்ட குடியரசு, ராயல்டாக்கீஸில், நிறையவே உண்டு. மெரிலேண்ட் சுப்ரமணியத்தின் நீலா ப்ரொடக்‌ஷன்ஸ் படங்கள் அங்கே நிறைய உண்டு. ராஜராஜன், யானை வளர்த்த வானம்பாடி,மர்மக்கை, என்று நிறைய உண்டு. இது போக ஹரிதாஸ், கடவுளின் குழந்தை, ஆகியவையும் அங்கே உண்டு. இதில் ஹரிதாஸ், கடவுளின் குழந்தை படங்களில் ஒன்றை வருடாவருடம் நவம்பர் 14 ந்தேதி குழந்தைகள் தினத்தன்று காலை 10 மணிக்கு இலவசமாகப் போடுவார்கள். அன்று பள்ளிக் கூடங்களுக்கெல்லாம் விடுமுறை. அந்தத் தியேட்டரில் இந்தப் படம் போடுகிறார்கள், இதில் அது என்று ஒரே புரளியாய்க் கிடக்கும். அங்கும் இங்கும் ஓடுவோம். நிச்சயமாக ராயலில் போடுவார்கள். நான் ஹரிதாஸ் படமும் கடவுளின் குழந்தை படமும் பார்த்திருகிறேன்.பார்வதியில் குழந்தைகள் கண்ட குடியரசு பார்த்திருக்கிறேன். சிவாஜி கௌரவ நடிகராக வருவார்.பத்மினி பிக்சர்ஸ் பந்துலுவின் படம்.
ராயல் டாக்கீஸில் படம் முடிந்து போகையில், பெரிய குத்துப் போணியில் புளியோதரை வைத்துக் கொண்டு தரை டிக்கெட் வாசலில் வைத்து, கை நிறைய அள்ளிக் கொடுப்பார்கள்.அதற்காக ஹரிதாஸ் படத்தை இரண்டாவது தடவை முழுதாகப் பார்க்க உட்கார்ந்திருந்தோம்.ஆனால் அந்த வருடம் புளியோதரை தரவில்லை. எல்லோரும் என்னை ஏசித் தீர்த்தார்கள். இல்லையில்லை போன வருடம் கொடுத்தாங்கப்பா என்று யாரோ சொன்னதால் நண்பர்களிடம் அடி படாமல் தப்பித்தேன்.ராயல் டாக்கீஸையும் இப்போது மூடி விட்டார்கள்.சினிமாக் கொட்டகைகள் மட்டுமா, எத்தனையோ விஷயங்கள் அடைபட்டுத்தான் போயிற்று.