ஒரு சிறிய அடுப்படி, அதையொட்டி ஒரு பூஜையறை, அந்தப் பாட்டியின் வசிப்பிடம் அவ்வளவுதான். பாட்டி பிடிவாதத்துக்குப் பேர் போனவள். ஒரு பெரிய வீட்டின் ஒதுக்கமான பகுதி அது. பெரிய வீடு, இன்னும் அவள் பெயரில்தான் இருந்தது.என்.வி.எஸ்.மூக்குப் பொடி, ஏரோப்ளேன் நீலம் சோப்பு, அருணகிரி விலாஸ் சீயக்காய்ப் பொடி, இது போல் ஏதாவது வாங்கித் தருவதற்கு எப்பொழுதாவது என்னைத் தேடுவாள். கண்ணில் பட்டால், வாங்கி வரச் சொல்லுவாள். இல்லையென்றால் தானே கடைக்குப் போய் வந்து விடுவாள். காது சரியாகக் கேட்காது.ஆனாலும் யார் தயவையும் எதிர் பார்க்கக் கூடாது என்று வைராக்கியம். சோப்பும், சீயக்காய்த் தூளும் அதுதான் வேண்டும். வேறு ஏதாவது வாங்கி வந்து விட்டால், எந்தக் கடையில் வாங்கினாய் என்று கேட்டு தானே போய் மாற்றி வந்து விடுவாள்.
தோசை என்றால் அவ்வளவு பிரியம். தானே ஒரு செல்லமான சின்ன உரலில் அரைத்துக் கொள்ளுவாள்.அம்மியும் அப்படி ‘சித்துச்சிறுக்’ கென்று அழகாயிருக்கும்.அம்மாவுக்கு அப்படி ஒரு அம்மி செய்ய வேண்டுமென்று ஆசை.”ஆச்சி, உனக்கு அப்புறம் இந்த அம்மியை எனக்கு கொடுத்து விடு” என்று சொல்லுவாள்.ஆச்சி சிரித்துக் கொண்டே ”அம்புட்டுத்தானே, எடுத்துக்க, ஆனா நான் தொன்னூறு வயசு வரையில சாகமாட்டேன், தெரிஞ்சுக்க” என்பாள் சிரித்துக் கொண்டே.
பாட்டி, குளித்துப் பூசை முடிக்க பதினோரு மணி ஆகி விடும்.பதினோரு மணிக்கு தோசை வாசனை மூக்கைத் துளைக்கும்.எப்போதாவது எனக்கு ஒரு தோசை தருவாள். செங்கோட்டைக் கல். கல் காய்ந்து விட்டதா என்று பாதி வெட்டிய ஒரு கத்திரிக் காயையோ, வெங்காயத்தையோ கல்லில் தேய்த்து முகர்ந்து பார்ப்பாள்.தண்ணீர் தெளித்து, கல் காய்ந்து விட்டதா என்று பார்க்க மாட்டாள்.எல்லா தோசையும் ஒருப்போல (ஒன்று போல்) வெந்திருக்கும். முதல் தோசை வெள்ளையாக, அடுத்தது, சரியான படி வெந்து; என்றிருக்காது.கொள்ளை நல்லெண்ணை விடுவாள். தொட்டுக்கொள்ள எதுவும் வேண்டாம் போலிருக்கும். ஆனாலும் ருசியான தேங்காய்ச் சட்னி அரைத்திருப்பாள்.தேங்காயை பிள்ளையார் கோயில், விடலைக்காய் குத்தகைதாரர் தியாகி அண்ணாமலையிடம் வாங்கி வருவாள்.பனங்கிழங்கை வெந்து வெயிலில் உலர வைத்து பூடு, இஞ்சி, என்று ஏதேதோ சேர்மானம் சேர்த்து பக்குவமாய் இடித்து வைத்திருப்பாள். எவ்வளவு நாளானாலும் கெட்டுப் போகாமல் அப்படி ருசியாய் இருக்கும்.
பாட்டி மரகத லிங்கம் போல் ஒன்று வைத்திருப்பாள்.அதை ஒரு சின்ன செப்புத்ததட்டில் வைத்து தினமும் குளிப்பாட்டுவாள். பூஜை முடிந்ததும், தட்டில் தேங்கும் தண்ணீரைக் குடிப்பாள். ”இது போகர் செஞ்ச லிங்கம்” என்று ஒரு தரம் சொன்னாள். போகர் என்றால் யாரென்று நான் பிற்காலத்தில் தெரிய நேர்ந்தது.அந்த லிங்கத்தை தெருவில் ஒரு பையன் திருடிக் கொண்டு போய் விட்டான். இன்னிக்கி ‘கிழக்குச்சூலமா’, அப்ப, கிழக்குத் திசையிலிருந்து வந்து யார் இங்கே விளையாடிக் கொண்டிருந்தது’ என்றெல்லாம் ஏதோ கணக்குப் போட்டு, பாட்டி சரியாகத் துப்பு வெட்டி விட்டாள். நேராக அந்தப் பையனின் வீட்டிற்குப் போய்,அவனது பள்ளிக்கூடப் பையை குப்புறத் தட்டி அதிலிருந்து லிங்கத்தை எடுத்துக் கொண்டு வந்து விட்டாள்.அவனது வீட்டில், அவள் செய்கையைப் பார்த்துக் கொண்டிருந்த யாரும் திறந்த வாயை மூடவில்லை.
பாட்டிக்கு, பாம்பு என்றால் பயம்.அடிக்கடிச் சொல்லுவாள், ”நேத்தும் தலைக்கு வைக்கிற பலகைக்கு அடியில் இருந்து,பாம்பு போச்சுடா”, என்று. ஒரு தொட்டியில் ‘ஆகாயக் கருடன்’(சீந்தல்க் கொடி) செடி ஒன்றை வளர்த்து வந்தாள். ஆனால் அவள் வசிப்பிடம் உயரமானது. பாம்பு வர வாய்ப்பு குறைவு. ”பாட்டி பயப்படாதீங்க இவ்வளவு உயரமான ‘பாம்பேறி மட்டம்’ (அஸ்திவார உயரம்) உள்ள வீடு இந்த தெருவிலயே கிடையாது’, என்றால், ”ஒன்னும் தெரியாத பச்சைப் புள்ளையிடம் பாம்பு படத்தைக் காண்பி, அது என்னமா பயப்படுதுன்னு தெரியும்”. என்பாள்.
அது எவ்வளவு உண்மை என்று தொலைக் காட்சிகள் உலகெங்கும் பிரபலமான காலத்தில் தெரிந்தது. அமெரிக்க தொலைக்காட்சியில் ஒரு சர்வே எடுத்தார்கள்,குழந்தைகள் எதற்கு அதிகம் பயப்படுகிறார்கள் என்று. புலி, சிங்கம், ஸ்க்ரீம் போன்ற முகமூடி, எலும்புக்கூடு, என்று பலவற்றைக் காண்பித்ததில் படமெடுத்து ஆடும் பாம்பு காண்பிக்கப் பட்டபோதுதான் குழந்தைகள் பயந்து, தாயையோ, தந்தையையோ கட்டிப் பிடித்துக் கொண்டார்கள் என்று, நிலையத்திற்கு தகவல்கள் வந்ததாம்.
உண்மையிலேயே பாட்டியை ஒரு முன்னிரவு நேரத்தில், வீட்டுக்கு வெளியே ஒரு பாம்பு கடித்து விட்டது.பாட்டி எவ்வளவோ சொன்னாள், ”காலில் ரொம்ப கடுக்குதுடா” என்று அவள் மகனிடம்.சுமார் முப்பது வருடம் கழித்து மகனிடம் பேசுவதாக எல்லோரும் பேசிக்கொண்டார்கள். சொல்லி விட்டு மயங்கி விட்டாள். புதிதாக வந்திருந்த ஒரு மலையாள வைத்தியர் இதற்கு நன்றாக வைத்தியம் பார்ப்பதாகக் கேள்விப் பட்டு அவரிடம் எடுத்துப் போனார்கள். அவர் நாடி பிடித்துப் பார்த்து விட்டு, “கொஞ்சம் கஷ்டமாச்சே,விஷம் நன்றாக ஏறிவிட்ட மாதி இருக்கே” என்று அவசர அவசரமாக நாலைந்து பச்சிலைகளை, கசக்கி மூக்கில் பிழிந்து, வாயைத் திறந்து ஊற்ற முயற்சி செய்தார். பாட்டி, வாயைத் திறக்க மறுத்தாள். வைத்தியர் சற்று பலத்தைப் பிரயோகித்து, திறந்தார். வாய்க்குள் லிங்கம்.அதை எடுக்கும் போது பாட்டிக்கு நினைவு திரும்பி விட்டது.வைத்தியர் அதை பாட்டி கையிலேயே கொடுத்து விட்டுச் சொன்னார், ”இது பழனியில் உள்ள லிங்கம் மாதிரி இருக்கு, இதை வாயில் போட்டுக் கொண்டதால்தான் பாட்டி தப்பித்திருக்கிறாள்”, என்று. பாட்டி முனகியபடிச் சொன்னாள், ”நான் சாகறதுக்கு இன்னும் பத்து வருஷமிருக்கு, வீட்டுக்குப் போகலாம், பசிக்கிறது, ரெண்டு தோசை சாப்பிடணும்.”
Tuesday, February 16, 2010
Subscribe to:
Posts (Atom)