Wednesday, August 26, 2009

....வீடில்லை நட்பாள்பவர்க்கு..

பசுமை நிறைந்த நினைவுகளே, பாடித் திரிந்த பறவைகளே....இந்த பாடலை பாடி நடிக்கும், நாயக, நாயகி இருவரும் மாணவர்கள் போல தெரியாவிட்டாலும்...நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இதன் ராகமும், பாவமும், கல்லூரியின் கடைசி நாளை, கண்ணில் நீருடன் நினைவுக்கு கொண்டு வரத் தவறுவதேயில்லை,. ‘’எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ என்கிற வரி’’ இன்னும் ஒரு அற்புதம்.
இந்துக் கல்லூரியில் கடைசி நாள். எல்லோரும் இரண்டு இரட்டை மாட்டு வண்டி அமர்த்திக் கொண்டு, லுங்கி, உட்புறத்தை வெளிப் புறமாக்கி அணிந்த சட்டை., என்று நிறைய கோமாளித் தனங்களுடன், பேட்டை மீனாட்சி தியேட்டரில் இருந்து கிளம்பினோம். எங்கள் மாட்டு வண்டிகளுக்கு முன்னால், தியேட்டர் விளம்பர வண்டிக்கு வழக்கமாக வாசிக்கிற தப்பட்டை.,(டண்டனக்கான் போட்ட், போட்ட். தலைய வெட்டி தூக்க். தூக்க் ) புதுப் படமென்றால் வாசிக்கிற கிளாரினெட், பேன்ட் வாத்தியக் கோஷ்டியின், டப்பாங் குத்துப் பாட்டு, ‘’இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்......’’முதலில் சற்று தயக்கமாய் இருந்தது,அப்புறம் பஸ் ஸ்டூடண்ட்ஸ் எல்லாரும் பஸ்ஸை நிறுத்தி இறங்கி எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.இந்த யோசனையைச் சொன்னவன் சேது மாதவன்.
அவன் ஜங்ஷனிலிருந்து வருவான்.ரொம்ப நல்ல பையன்.கை விரல் நகங்களைக் கடித்துக் கொண்டே இருப்பான். பத்து விரலிலும் தேடித் தேடிக் கடிப்பான்.ஏல இன்னம கடிக்கதுக்கு விரல் தானல இருக்கு, என்றால், தன் மஞ்சள் பல்லைக் காட்டி சிரிப்பான்.ஆற்றங்கரை வரை வந்து கரையிலேயே உட்கார்ந்து மற்றவர்களின் துணிகளுக்கு காவல் இருந்து விட்டு குளிக்காமலே வந்து, வீட்டில் குளித்துவிட்டுக் கல்லூரி கிளம்புவான் என்று அவன் பக்கத்து வீடுகளிலிருந்து வரும் நண்பர்கள் கேலி செய்வார்கள்.அவன் தங்கை பானுமதியோ அண்ணா, அவன் வீட்டிலயும் குளிக்க மாட்டாண்ணா என்று கேலி பண்ணுவாள்.
எங்கள் தெருவிலேயே இன்னும் ஒருவன் உண்டு. குற்றாலம் கிளம்பினால், முதல் ஆளாக கிளம்புவான். குற்றாலம் வந்ததும், மெயின் ஃபால்ஸில் ஒரு காக்காய்க் குளியல் போடுவான் துண்டு கூட சரியாக நனைந்திருக்காது. வந்து தலை துவட்டி விடுவான். அவன் தலை துவட்ட, துண்டை தலையில் போட்டு முகம் மறைந்ததுமே, எல்லாருக்கும் சிரிப்பு பொங்கி விடும்.தலை துவட்டி முடிந்ததும், எல்லோரும் தங்கள் உடமைகளை அவனிடம் கொடுத்து விடுவோம்.வாட்சுகளை அவன் கையில் மாட்டி விடுவோம். ஒரு தோளில் வேஷ்டிகள், மறு தோளில் சட்டை பனியன்கள், என்று ஒரு கோட் ஸ்டாண்டாக நிற்பான். அதற்கப்புறம் என்ன சொன்னாலும் செய்தாலும் ஒரு அருவியிலும் குளிக்க மாட்டான்.இன்னக்கி மழை பெஞ்சு புதுத் தண்ணி வருது, இது ஒடம்புக்கு ஒத்துக்காது என்று சீரியாஸாகச் சொல்லுவான்.எப்பவுமே ஊத்துத் தண்ணி அருவில வந்தாதான் நல்ல குளிக்கணுமென்பான். நாங்களும் ஆமா, ஆமா என்று சொல்லிவிடுவோம்.இல்லையென்றால் யார் சட்டை பணம் துணி மணி யெல்லாம் பார்த்துக் கொள்ளுவது.
ஒரு தடவை ஆ.பழனி, ஒரு பவுண்டு இஞ்சி(12 அவுன்ஸ் ஜிஞ்சர் பரீஸ்) வாங்கி வந்திருந்தான்.அப்போது எமெர்ஜென்ஸி நேரம். மது விலக்கு அமலிலிருந்தது.யாருக்கும் தெரியாது. அது இருக்கும் பையை கோட்ஸ்டாண்ட்டிடம் கொடுத்து விட்டு குளிக்க வந்து விட்டான்.அது லேசாக கசிந்து வாசனை குப்பென்று பரவியிருக்கிறது, ஒரு போலீஸ் மூக்கு மோப்பம் பிடித்து விட்டது.கோட்ஸ்டாண்டைத் தவிர எல்லாரையும் அந்தப் போலிஸ்காரர் ஏய் வாயை ஊது என்று சொல்லிக் கொண்டிருந்ததை அருவியில் குளித்துக் கொண்டே பார்த்துவிட்டான்,பழனி. அத்தானோவ் கோட்ஸ்டாண்டிடம் சரக்கு இருக்கே, பக்கத்தில போலீஸ் விசாரிக்கிற மாதிரீருக்கே என்று கையைப் பிசைந்தான், இதை கோட்ஸ்டாண்ட் தம்பி, எங்களுடன் குளித்துக் கொண்டிருந்தவன், கேட்டு விட்டான். கெடுத்துட்டிங்களே கூ... மவனுவளா, சொல்லியாவது தொலைச்சிருக்கலாமில்லா என்று சத்தம் போட்டவாறே விறு விறுவென்று அவனருகே போய், அந்தப் பையை பிடுங்காத குறையாய், வாங்கி தள்ளி வந்து வேறு இடத்தில் பையயை வைத்து விட்டு சம்பந்தமில்லாதவன் போல, கோட்ஸ்டாண்டை நகர்த்தினான். ஏய்ய் பைய்யி, பைய்யி என்றவனை சும்மா இரு என்று கண்ணால் சைகை செய்து கூட்டிப் போய் விட்டான். பை. அனதையாய் கிடந்தது.அதற்குப் பக்கத்தில், காவலாய் போலீஸ்காரர்.
நாங்கள் எல்லாருமே, ஒரு ஆறு ஏழு பேர் இருப்போம், குளித்துவிட்டு, அருவியை விட்டு தள்ளி வந்த பிறகு, என்ன விவரம் என்று பழனியைக் கேட்க, அவன் சொன்னான், ஒரு பவுண்டு இஞ்சி கிடைச்சுது, நட்டுப்பய அருணா வச்சுருந்தான். அப்படியே வாங்கீட்டு வந்துட்டேன். வேற துட்டு கூட கையில இல்லையே. நீங்க போயிட்டே இருங்க, நைசா எடுத்துட்டு வந்துருதேன், என்று சொல்லச் சொல்ல கேட்காமல் அருவிக்கருகே போய்விட்டான்.இங்கிருந்து பார்க்கையில் போலீஸிடம் ஏதோ சல்யூட் அடித்துப் பேசிக் கொண்டிருந்தான்.இரண்டு பேரும் எங்களை நோக்கி வந்தார்கள், போலீஸ்காரர் கையில் பை. ஏய்ய், நம்மள, என்னமோ மாட்டிவிட்டுட்டான்ம்ப்பா, என்று எங்களுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது.
வந்தவன், எதற்கோ என்னைக் கையை காண்பித்தான்.நீங்க என்ன செய்றீங்க தம்பி என்று கேட்டார் போலீஸ்காரர், நான்.. நான் .. என்று இழுக்கும் போதே பழனி சொன்னான், அதான் பேங்கில வேலை பாக்காகன்னம்லா என்றான். நான் பேங்க் இண்டர்வியூ போய் வந்திருப்பதென்னவோ உண்மைதான். இன்னும் வேலையெல்லாம் கிடைக்கவில்லை., ஆமா சார் பேங்க் எம்ப்ளாயீ என்றேன்.இந்தாங்க பை, ரூவா நிறைய இருக்கோ கனமாருக்கே பை என்றார், இல்லை சார் எண்ணெய் பவுடரெல்லாம் இருக்கு என்றேன்.
அதற்குள் கோட்ஸ்டாண்ட், போலீஸைப் பார்த்து, வாங்க சார் ஒரு டீ சாப்பிடலாம் என்றான். அதெல்லாம் வேண்டாம். ஒழுங்கா ஊர் போய்ச் சேர்ற வேலையப் பாருங்க என்று சொல்லிவிட்டு விசிலை எடுத்து ஊதியவாறே போய்விட்டார்.செண்பகாதேவி அருவிக்குப் போய் எல்லாத்தையும் காலி பண்ணிருவோம்ப்பா என்று பழனி சொன்னான். ஒண்ணூம் வேண்டாம் நீ பொத்திக்கிட்டு வா.. என்று சொன்னாலும் மேலே போய் எனக்கு உனக்கு என்று அதை காலி பண்ணிவிட்டார்கள். என்ன, பழனிக்கு, வாங்கிய காசு கூட கொடுக்கப் படவில்லை.
சேது மாதவன் சுமாராகப் படிப்பான். ஆனால் எழுத்து கண்கொண்டு பார்க்க முடியாது.அவன் விரல் நகம் போல மொட்டையாய் இருக்கும்.மூன்று பக்கம் எழுத வேண்டியதை முக்காப் பக்கத்தில் நுணுக்கி விடுவான்.திருத்துகிறவன் பாடு ரொம்பச் சங்கடம்.அநேகமாய் எல்லா பேப்பரையும் செப்டம்பர் தேர்வில் எழுதித்தான் பாஸ் பண்ணூவான்.அப்போதெல்லாம் மார்ச்சில் பெயிலானவர்களுக்கு செப்டமப்ரில் தேர்வு வைப்பார்கள். மார்ச் பரீட்சை எழுதி முடித்து ஹாலை விட்டு வெளியே வரும் போது, என்னடா மாப்பிள, ‘கம் செப்டம்பாரா’ என்று கேட்போம்.இல்லையென்றால், ‘’COME SEPTEMBER’’படத்தில் வருகிற theme music கிடார் டியூனை (video baar-இல் முதல் படத்தை க்ளிக் செய்யுங்கள்) வாயால் வாசிப்போம், இல்லையென்றால், அதன் அப்படமான காப்பியான ‘’அன்பே வா’’(பெயர் கூட காப்பி, செப்டம்பரே வா= அன்பே வா) வில் வரும் தீம் மியூசிக்கை இசைப்போம்.சேதுவுக்குப் பேரே செப்டம்பர் சேது மாதுவன்.
எங்கள் மாட்டு வண்டி ஊர்வலம் கல்லூரியை நெருங்கும் போது நல்ல கூட்டமும், உற்சாகமும் கூடிவிட்டது.எங்கள் உற்சாகம் வாசிப்பவர்களையும் தொற்றிக்கொண்டது.அதே பாட்டுத்தான். இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்.......எப்படித்தான் பார்த்தாலும்,எப்படித்தான் கேட்டாலும், இவ்வளவுதான்.... ..உலகம் இவ்வளவுதான். அப்போது அந்தப் படமும் பாடலும் பிரபலம். வேதா இசை. எல்லாமே ஒரிஜினல் டியூன். வேதா ஒரு நல்ல இசையமைப்பாளர், அன்பு எங்கே, பார்த்திபன் கனவு, அதே கண்கள், என்று அருமையாக, சொந்தமாக, படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவரை மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் இந்தி டியூனை காப்பி அடிக்க வைத்து விட்டார்கள். நாகேஷ் கதாநாயகன்.விஜயஸ்ரீ ஆடுகிற இந்தப் பாடல் காட்சியும் பிரபலம்.எல்லா ரிக்கார்ட் டான்சுகளிலும், இதைத்தான் கடைசி ஹை லைட் பாடலாகப் போடுவார்கள்.
முதன் முதலில், ரெகார்ட் டான்ஸை லைட் ஹவுஸ் ஸ்டுடியோ பாய் தான் நடத்தினார்.ஸ்ரீபுரம் அருகே ஒரு பழைய லாரி ஷெட்டை உள்ளடக்கி இருந்த காலியிடத்தில் போட்டிருந்தார். நாங்கள், லாலா மணி , சண்முக வேல், கண்ணன் என்று நாலைந்து பேர் போய் காத்துக் கிடந்தோம். போலீஸ் ரெய்டு வரும் என்று தாமதமாகிக் கொண்டிருந்தது. ஒரு நூறு பேர் போல அந்த இடத்தின் அருகாமையில்- அப்போது இரவில் அந்த இடம் அவ்வளவு வெளிச்சமான பிரதேசமாய் இருக்காது- அங்கங்கே கலைந்து நின்று கொண்டிருந்தோம்.அப்போது பாய் வந்தார், வாயில் சிகரெட் தொங்க பேசிக் கொண்டிருந்தார்.கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்...டி.எம்.எஸ் பாட்டை வெறுமனே ஒலி பரப்பிக் கொண்டிருந்தார்கள்.ஆளுக்கு ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு உள்ளே அனுப்பினார்.உள்ளே என்ன நடக்கப் போகிறது என்று ஒன்றுமே தெரியாது.ஐந்து ரூபாய சரியாகக் கொடுக்க வேண்டும்.இல்லையென்றால் நாலுபேருக்கு இருபது ரூபாய், சில்லறை மிச்சம் தருகிற சோலியெல்லாம் கிடையாது. யாரோ கேட்டார்கள், ‘’வாப்பா, போலீஸ் வராதுல்லலா,’’ அட போப்பா, இங்க என்ன அவுத்துப்போட்டா ஆடப் போறோம். சினிமாப் பாட்டுக்கு ஆட்டம் அவ்ளவுதான்.. என்று ரூபாயை வாங்கி பைக்குள் போடுவதிலேயே குறியாக இருந்தார்.
நாங்கள் பின் வரிசையில் போய் உட்கார்ந்து கொண்டோம். சும்மா, சவுக்கு கட்டையை கால் மாதிரி நட்டு, அதன் மேல் ஒரு பலகை, அது சொர சொரவென்றிருந்தது.முன்னால் ஒரு சின்ன 10க்கு 10 மேடை மூன்று புறமும் தென்னந்தட்டி.. நிகழ்ச்சி இது மூன்றாவது நாள். இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் போலீஸ் ரைடு வந்து,ப்ரோக்ராம் நடக்கவில்லையாம். இன்று மூன்றாவது நாள். பக்திப் பாட்டாகப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.மேடை இருட்டாக இருந்தது. நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து பார்த்தால் முன்னாலுள்ளவர்களின் தலை சற்று மறைக்கத்தான் செய்யும்.ஆனால் போலீஸ் வந்தால், பின்புறமாக ஓடி விடலாம்.அப்படியே தச்சநல்லூர் கொண்டு போய் விட்டு விடும் அந்த வயல் வெளி.சிவசக்தி தியேட்டர் பிற்காலத்தில் அந்த பகுதியில் வந்தது.
கார்த்திகை விளக்கு திருக் கார்த்திகை விளக்கு என்று ஒரு பாட்டைப் போட்டு ஒருத்தன் ஒரு காவடியை வைத்துக் கொண்டு சும்மா சுற்றி வந்தான், மேடையில். ஓவென்று ஒரே கூச்சல் அவன் பாதியிலெயே போய் விட்டான். நான் வாசலைப் பாத்தேன் அங்கே .பாய் இல்லை ரூபாயை பிரித்துக் கொண்டு போய் விட்டார்.ஐம்பது அறுபது பேர் இருப்போம்.எனக்கு பயமாய் இருந்தது.மணியிடம் சொன்னேன்.போயிருவமா, என்று. பயப்படாதலெ,பாலம் போலீஸ் ஸ்டேஷன்ல தம்பி ஜெயராமன் சம்பந்தாருதாம்லெ இன்ஸ்பெக்டர், ஒன்னைய மட்டும் விடச் சொல்லிருவோம் என்றான் கேலியாய். ஆனால் எல்லாருக்கும் பயமிருந்தது. இரண்டாவது பாட்டு, சிவந்த மண் படத்திலிருந்து ‘’ஒரு நாளிலே உறவானதே...’ ஒரு பெண் சட்டை போடாமல், காஞ்சனா மாதிரி,மார்பு இருக்கிற மாதிரியே இல்லை. முதலில் காவடி எடுத்தவன் இப்போது சிவாஜி ரோலில், கூட்டம் கொஞ்சம் ஆசுவசமானது.
மூன்றாவது பாட்டு மறுபடி காவடி, வந்தான். ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்....பாதியில் ஒரு பெண் சால்வார் கம்மிஸுடன் சேர்ந்து கொண்டது.அடுத்தாற் போல் ஈரச் சேலையுடன் ஒரு பெண், சட்டை அணியாமல். பிரேஸியர் மட்டும் அணிந்து கொண்டு, ஆடை முழுதும் நனைய நனைய மழை அடிக்குதடி ....என்ற பாட்டுக்கு ஆடியது. எல்லாருக்கும் ஜிவ்வென்றிருந்தது...ஏய்ய் .. என்று விசில் பறந்தது.
அடுத்தாற் போல இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்..பாட்டு. அந்தப் பாட்டு முழுமைக்கும் அந்தப் பெண் கைகளின் பெருவிரல்களையும்,ஆட்காட்டி விரலையும் சேர்த்து, ஒரு சாய்சதுரம் போல பாவனையில், உடலின் பல கவர்ச்சி உறுப்புகளையும் கட்டமிட்டுக் காட்டியது. எல்லாருக்கும் உற்சாகம் கொப்பளித்தது. இது பற்றி சண்முகவேல் மற்றும் லாலா மணி ஆகியோருக்கு தெரியும் போல, வாலெ இவ்வளவுதான், போவோம். இன்னமே ஒன்னும் கிடையாது என்று கிளம்பினார்கள். அது போலவே, மேடை அதற்கப்புறம் உயிர் பெறவே இல்லை. இருளிலேயே, தட்டுத் தடுமாறி அவசர அவசரமாக வந்தோம். வெளியே நிறைய பேர் விசாரித்துக் கொண்டிருந்தார்கள், என்ன என்ன ஏதாவது காம்பிக்காங்களா......
பின்னால், ஆமா ஆமா காம்பிக்காங்க, போங்க என்று கேட்டது, திரும்பிப் பார்த்தேன்., கோதண்ட ராமன், பி.ஏ. தமிழ் லிட்டரேச்சர் மாணவன்.எப்படி ஹாஸ்டலிலிருந்து வந்தான் தெரியவில்லை.கோயில் பட்டி பக்கம் ஊர்.ஹாஸ்டலில் தங்கி இருந்தான்.அப்போது நான் கொஞ்சம் கவிதை எழுத ஆரம்பித்திருந்தேன்.
கல்லூரிப் பாடமதில் கம்பனது ராமகாதைச்
சொல்லூற்றைக் கவிச்சாற்றை சுவைக்கின்ற நேரமதில் நாமொரு ராம நல்லோனின் உறவேற்போம்
நாமவரை இனிதே வரவேற்போம்...
என்று எம்.ஜி.ஆர். கல்லூரி வந்த போது நீண்ட வாழ்த்துக் கவிதை எழுதி, வண்ண தாசனின் ஓவியங்களுடன் எம்.ஜி ஆரிடம் கொடுத்தேன்.அதிலிருந்து தமிழ் மாணவர்களிடையே நான் சற்று பிரபலமாகி விட்டேன். நான் கணிதவியல் மாணவன்.
கல்லூரி வளாகத்துக்குள் எங்கள் ஊர்வலம் சுற்றி வரும் போது கோதண்டராமன் இணைந்து கொண்டு அழகாக ஆட்டம் போட ஆரம்பித்து விட்டான்.ரெக்கார்ட் டான்ஸ் ஸ்டைலில்.
கொஞ்ச நாள் முன்னால், கணிசமான விடுதி மாணவர்கள். பக்கத்து கிராமத்தில் குடியேறியிருந்த பர்மா அகதிகள் குடிசைகளுக்கு சென்று வரத் தொடங்கியிருந்தனர். உண்மையில் பர்மா அகதிகள் என்ற பெயரில் ஊர்ருக்குள்ளிருந்து விரட்டப் பட்ட சிலரும் இருந்தனர்.ஓரொருத்தராகப் போய் வந்து, விஷயம் பரவி நிறைய பேர் போக ஆரம்பித்திருந்தனர் கொஞ்ச நாளில் அங்கே போனவர்களெல்லாம் காலை அகட்டி நடக்க ஆரம்பித்திருந்தனர்.
நான் வீட்டுக்கு போவதற்காக ஹாஸ்டல் அருகேயுள்ள சைக்கிள் ஷெட்டிலிருந்து சைக்கிளை எடுத்துக் கொண்டிருந்தேன், கோதண்ட ராமன் காலை அகட்டி அகட்டி வந்தான், ஏய் என்னப்பா, நீயும் சுத்தமல்லி போய் தொட்டில் கட்டீட்டு வந்திட்டியா என்றேன் சிரித்த படி.கேலி பண்ணாதப்பா,ஆமா ஒனக்கு டவுண்தான அங்க வேலுப்பிள்ளையோ யாரோ இதுக்கு ஒரு டாக்டர் இருக்காறேமே தெரியுமா, அவர்ட்ட போகணுமேன்னான். வேலுப்பிள்ளல்லாம் இல்ல,வேற பேரு. இடத்தைக் காமிக்கேன் நீயே போய்க்கோ. அவரு தாறு மாறா ஏசுவாருப்பா என்றேன்.சரி உங்கூட சைக்கிள்ளல வாரேன்னான். எப்பா எனக்கு டபுள்ஸெல்லாம் வைக்கத் தெரியாது..நீ வேண்ணா ஓட்டீட்டு வான்னேன்.ரொம்ப கஷ்டப் பட்டு ஓட்டி வந்தான்.சாமி சன்னதியில் அவர் ஆஸ்பத்திரி. அவர் உண்மையில் ஒரு கம்பவுண்டர். பொம்பளைச் சீக்கு ஸ்பெஷலிஸ்ட். கொஞ்சம் முரட்டு வைத்தியம். பெனிடியூ மாதிரி லாங் ஆக்டிங் பெனிசிலின் போடுவார், வேற ஒண்ணும் கிடையாது, என்று டாக்டர் பாலு சொல்லுவான்.
நான் கீழேயே நின்றேன். மாடியில் ஆஸ்பத்திரி போய் நீண்ட நேரம் கழித்து வந்தான். யப்பா யாத்தா என்று முனகியபடி.. மனுஷன் என்னப்பா இந்த ஏச்சு ஏசுதாரு, தனி ரூமுக்குள்ள போனதுமே ஆரம்பிச்சுட்டாருப்பா, இறுத்தி புண்ணைத் தொடைக்காரு, வலிக்கின்னா, ஆங் நொட்டும் போது இனிச்சுதோ ன்னு ஏசுதாருன்னான். எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.
சரஸ்வதி கபேயில் சப்பாத்தி வாங்கிக் கொடுத்தான்.இன்னமெ இந்த சோலியே கூடாதுப்பா என்று புலம்பிக் கொண்டே இருந்தான்.ப்ரதர், வேற என்னமும் வந்திருமோ என்றான். அப்படீன்னா? என்றேன். இல்ல, இந்த குஷ்டம் அப்படி இப்படீங்காங்களே. எனக்கு இன்னும் சிரிப்பு வந்தது.அவன் முகம் வாடியது. அதெல்லாம் ஒண்ணுமில்லை வேனுன்னா என்ஃப்ரெண்டு டாகடர் கிட்ட கேட்போம் என்றேன். சரி நீங்க கேளுங்க என்று சொல்லிவிட்டு பக்கத்தில் வந்த, சுத்தமல்லி பஸ்ஸில் ஏறினான்.ஏய் நேரா ஹாஸ்டலுகுப் போ, சுத்தமல்லி அமுதாட்ட போயிராதெ என்றேன். பாத்தேரா ஒமக்கும் எல்லாம் தெரியும் போலிருக்கே என்றான். பஸ் நகர்ந்தது.
கல்லூரியை விட்டுப் பிரியும் போது,,என்னுடைய ஆட்டோகிராஃப் புத்தகத்தில், நாடாது நட்டலில் கேடில்லை, நட்ட பின் வீடில்லை நட்பாள்பவர்க்கு என்ற குறளின் கடைசி இரண்டு சீர்களை மட்டும் எழுதிக் கையொப்பமிட்டான், ரொம்ப புதுமையாய் தோன்றியது.

’’வீடில்லை நட்பாள்பவர்க்கு’’
-அன்புடன்
கோதண்டராமன்.

Visitors