சிவா தள்ளி நின்று கொண்டிருந்தான்.எங்கள் ஊரில் அது மிகப் பெரிய தியேட்டர். அதன் முதலாளி அப்பாவுக்கு நண்பர். அப்பா இப்போதெல்லாம் எங்கேயும் போவதில்லை. காலையில், பழக்க தோஷம் கரணமாக நாலரை மணிக்கு எழுந்து விடுவார். இன்னோரன்ன காரியங்களை முடித்து விட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினால், இருட்டு பிரியும் முன்பே ஆற்றுக்குப் போய் விடுவார். குறுக்குத் துறை முருகன் கோயிலில் இவர் போய்த்தான் சங்கம் பண்டாரத்தையே எழுப்புவார் என்று அவரது நண்பர்கள் கேலி செய்வார்கள். அவன் எழுந்து காலையில் சங்கொலி எழுப்பி வெளி நடை திறக்க வைப்பான்.அப்புறம் தான் திருப் பள்ளியெழுச்சி எல்லாம்.
தலைவரின் நூறாவது படத்திற்கு ஒரு மலர் தயாரிக்க வேண்டுமென்று அம்மன் சன்னதித் தெரு நா.சு.கா. சுடலை முத்து சொன்னான்.அப்படியே தயாரித்து அதை அந்த முதலாளியிடம் கொடுக்கும் போது நான் இன்னார் மகனென்று சொன்னேன்.அவர், ஏய் கெடுத்தியெ கதைய, இது ஒங்க கொட்டகைல்லாப்பா என்று சிரித்துக் கொண்டே சொன்னார். என் படிப்பு, மார்க் விவரமெல்லாம் கேட்டார். அப்போது நான் மறுபடி நன்றாகப் படிக்க ஆரம்பித்திருந்தேன். சரி, படிப்பை விட்ராதியும், அப்பாவைல்லாம் கிட்டமுட்ட கண்ணிலயே காணலையே, வரச் சொல்லும்.பாக்கியத்துக்கு கல்யாணம் வச்சுருக்குன்னு சொல்லுங்க, ரொம்ப சந்தோஷப் படுவார் தம்பி என்றார்.உலகமே கைக்குள் வந்து விட்ட உணர்ச்சி அன்று.அந்த அபாக்கியவதி சட்ட பூர்வ வாரிசு இல்லை.
நீரும் நெருப்பும் படத்திற்கு முதலாளி ஊரில் இல்லை. டிக்கெட் கிடைப்பது சற்று கஷ்டமாயிருந்தது. சிவா அன்று தானும் முதல் காட்சிக்கு வருவதாகச் சொன்னான்.பொதுவாக அவன் அப்படி வரமாட்டான். நாங்கள் சொன்னோம், சரி அப்ப படம் அவ்வளவுதான் கூவீரும், என்று. நல்ல கூட்டமிருந்தது. மேனேஜர் உனக்கு வேணும்ன்னா சொல்லு, பெஞ்சு டிக்கெட்டில போய் உக்காந்துக்கோ. ஹை கிளாஸ் டிக்கெட்டெல்லாம் கேக்காத, ஐயா ஊரில இல்லை, என்று கை விரித்து விட்டார்.சரி இரண்டு டிக்கெட் குடுங்க என்றேன்.ஏய் உனக்கே டிக்கெட் இல்லை, சும்ம நீயா போய் இருக்கிற பெஞ்சுல உக்காரு,என்றார். சிவாவிடம் சொன்னேன். ஏல நாம பெஞ்சுல உக்காந்து படம் பாத்தா ராசி கிடையாதுல என்றான். ஏன் காவல்காரன் பாக்கலியா என்றேன்.அது ப்ளாக் அண்ட் ஒயிட்டுரா என்றான்.
அவன் சொல்லுகிற செண்டிமெண்டெல்லாம் ஆச்சரியமா இருக்கும்.அப்போதுதான் அவர், சைக்கிள் கேட் வழியாக தியேட்டர் உள்ளே போனார்.சிவா அந்தா அவங்களைக் கூப்பிடு என்றான். நான் அண்ணாச்சி, அண்ணாச்சி என்றேன்.காக்கி சட்டை போட்டு வேஷ்டி கட்டி இருந்தார்.நல்ல வழுக்கைத் தலை. என்னடா என்றார் அதற்குள் சிவா அருகில் வந்திருந்தான்.ரெண்டு சோஃபா டிக்கெட் வாங்கித் தாங்க என்றான்.அதே சமயம் முட்டி மோதி பெஞ்சு டிக்கெட் எடுத்து வந்த பிச்சுமணி சொன்னான், க்கோவாலு வா ஏன்ட்ட டிக்கெட் இருக்கு, ஏம் மடியில உக்காந்து பாரு, சோஃபா மாதிரி இருக்கும் என்று. அவர் ஒன்றுமே சொல்லாமல் உள்ளே போய் விட்டார். சிவா தள்ளிப் போய் நின்றான். அவனிடம் போய் என்ன, நான் பெஞ்சுக்கு போயிரவா என்றேன். பேசாம இருல, கண்டவன் கூடல்லாம் சாவாசம் வைக்காதல, என்றான். அவனுக்கு பிச்சுமணி பேசியது பிடிக்கவில்லை.
ஐந்து நிமிடம் ஆகியிருக்கும், அவர் வெளியே வந்து, என்னை கையைக் காட்டி கூப்பிட்டார்.இரண்டு டிக்கெட்டைக் கொடுத்தார் நான் பணம் தருவதற்குள் மறுபடி உள்ளே போய் விட்டார்.சிவா, வா என்றான். `’பணம்.....’’ என்றேன், அதெல்லாம் வாங்க மாட்டாங்க, பேசாம வா என்று ஒரு டிக்கெட்டை மட்டும் என்னிடம் கிழித்துக் கொடுத்து விட்டு வேகமாகப் போய்விட்டான்.எனக்கு கோபமாய் வந்தது.நாங்கள் தனித் தனி சீட்டில் உட்கார்ந்துதான் பார்த்தோம். நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.அவனுடன் அருகருகே உட்கார்ந்து பார்த்த கலர்ப் படம் எதுவும் ஃபெயிலியரா ஆகியிருக்கா என்று. படம் நன்றாயில்லை. இடைவேளையில், மாடி வெராண்டாவில் நின்று கொண்டிருந்த என்னருகே வந்தான். போப்பா, ஆனந்தன் கூட அழகான ஸ்வார்ட் ஃபைட் இருக்கும்ன்னு பார்த்தா, அவனைக் கேலிக் கூத்து பண்ணீட்டாரே உங்க ஆளு என்றான். ஏன், உங்க ஆளு இல்லையா என்றேன்.அவன் மீதிருந்த கோபம் போய் விட்டது.
கீழ போய் வா கலர் குடிப்போம் இங்க கூட்டமாருக்கு என்று தரை, பெஞ்ச் டிக்கெட் அருகிலுள்ள ஸ்டால் பக்கம் போனான். அங்கே அந்த வழுக்கைத் தலை ஆள் படு சுறு சுறுப்பாக முறுக்கு வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தார்.கூட்டம் உனக்கு எனக்கு என்று ஐந்து பைசாவும், பத்து பைசாவுமாக நீட்டிக் கொண்டிருந்தது. எட்டணா கொடுத்து ஒரு முறுக்கு என்பவர்களையும் அதை வாங்கிப் போட்டு, மீதமும் முறுக்கும் கொடுத்து வேகமாக சமாளித்துக் கொண்டிருந்தார்.சிவா மறு படி வா, மேலே போய் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று பதிலுக்கு காத்திராமல்ப் போய் விட்டான். நான் அவனை படம் முடியும் வரை பார்க்கவில்லை, கலரும் குடிக்கவில்லை. படம் முடிந்து வருகையில் மேனேஜர் பார்த்தார், ஏய் ஏது டிக்கெட் என்று கேட்டார். நான் சொன்னேன். யாரு முறுக்கு போடுகிறவரா குடுத்தார், என்று கேட்டுக் கொண்டே அவரருகே நின்ற சோஃபா டிக்கெட் கொடுப்பவரைப் பார்த்தார். அவரிடம் யாருய்யா உம்ம சகலனா என்றார். அவர் ஆமாய்யா, ஒரு நாளும் கேக்க மாட்டாரு, இந்த தம்பிக்கின்னு சொல்லலையே என்றார். நான் ஏதோ வில்லங்கம் போலிருக்கு என்று கூட்டத்தோடு கலந்து தியேட்டரை விட்டு வெளியே வந்து விட்டேன்.ஒரே எரிச்சலாய் இருந்தது.
சிவாவைப் புரிய முடியவில்லை. சிவா என்னை விட மூத்தவன்.நான் பி எஸ் சி முடித்த பின்னும் அவன் பி.ஏ. வில் பாக்கி வைத்திருந்தான்.அவன் அப்பாவுக்கு சொந்தமான சிறிய ஓட்டல் இருந்தது. அதை இப்போது கவனித்துக் கொள்கிறான்.அவனது தம்பி எனது வகுப்புத் தோழன்.அவன அவனது அம்மா தாத்தா வீட்டில் வளர்ந்தான்.அவன் சிவாவின் அம்மா ஜாடையில் இருப்பான்.சிவா அப்பா ஜாடை.சிவா வீட்டில் எல்லா இசைக் கருவிகளும் இருக்கும். வயலின், மிருதங்கம்., வீணை, புல் புல் தாரா.சிவா வாய்ப் பாட்டு படித்தவன். அவன் வீட்டில் இருந்து அந்த இசைக் கருவிகளைத் தட்டிக் கொண்டிருப்போம். புல் புல் தாராவில், ‘அன்று வந்ததும் இதே நிலா....’ பாட்டு வாசிக்க சிவா சொல்லித் தந்தான் அதற்கென்று சினிமா பாட்டுப் புத்தகம் போல் ஒரு புத்தகம் வரும். ஐம்பது பைசா. ஜங்ஷன் கண் கண்ணாடிக் கடையில் மட்டும் அவை கிடைக்கும். அங்கேதான் இசைக் கருவிகளும் கிடைக்கும். அது என்ன காம்பினேஷனோ. ஜெனித் ஆப்டிகல்ஸ், கிரசெண்ட் ஆப்டிகல்ஸ் கடைகளில் இவை கிடைக்கும். அதில் பாடலை அசை பிரித்து அதற்கு மேல் எண்கள் எழுதியிருக்கும்.புல் புல் தாரவில் அதே போல் எண்கள் உள்ள ரீடை அமுக்கினால் பாட்டை வாசிக்கலாம்.
எனக்கு அந்த ஒரு அடி மட்டும் தெரியும்.அதெற்கெல்லாம் ஞானம் வேணும்லெ என்பான் சிவா. உண்மைதான். அவன் அம்மாவோ அதெல்லாம் இல்ல ராசா பழகுனா வந்துட்டுப் போது. நீ மட்டும் என்ன கச்சேரி பண்ணுற வரைக்கும் வந்துட்டு ஒங்க அத்தைக்கி பயந்து பாட்டை விட்டுட்டியெ என்று சிரிப்பாள். இதைச் சொல்லும் போது அவன் சித்தி, எங்கிருந்து வருவாளோ அவள், சிரிப்பாய் சிரிப்பாள்.சிவா கோபமாய் வெளியேறி விடுவான்.அந்த சித்தி அழகாய் இருப்பாள். சுருண்ட முடி,மூக்குத்தி போட்டிருப்பாள். அவள் என்றாவது அதைக் கழற்றி வைத்திருந்தால், போ சித்தி உடனே மூக்குத்தி போட்டுட்டு வா என்பான் சிவா.அவ்வளவு பொருத்தமாய் இருக்கும்.சிவாவின் அம்மா பெரிய மூக்குத்தியாக போட்டிருப்பாள். ஒங்க அம்மாட்ட அந்த வைரத்தை தரச் சொல்லேன் என்பாள் சித்தி. இந்தா வச்சுக்கயேன் என்பாள் அவன் அம்மா. அவன் அம்மா மதியச் சாப்பாட்டுக்கு முன் தான் குளிப்பாள். தணிவான் வீடு. பட்டாசல் இருட்டாய் குளுமையாய் இருக்கும்.காலையிலிருந்து வெற்றிலை போட்ட வண்ணமிருப்பாள்.பக்கத்திலெயே சாறு துப்ப வெண்கல சாளஞ்சி. அது பளபள வென்று விளக்கி இருக்கும். சட்டை அணிந்திருக்க மாட்டாள். வெறும் மல்பாடி போட்டு தூணில் சாய்ந்த மாதிரிக்கி உட்கார்ந்திருப்பாள்.
மத்தியான சாப்பாட்டுக்கு,அவன் அப்பா வந்து விட்டால் சகல சத்தமும் அடங்கி விடும்.சிவா அமைதியாய் வெளியேறி விடுவான். அவர் தலைவாசலுக்குள் நுழையும் வரை சிகரெட்டைப் புகைத்த படியே வருவார்.வாசனையே சொல்லி விடும் அவர் வந்து விட்டார் என்று. அவர் வந்த சிறிது நேரத்தில் சிவாவின் அம்மா குளிக்க எழுந்து விடுவாள்.நான் அவன் அப்பா வந்தது தெரியாமல் ஒரு நாள் ரேடியோவில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன். சித்தி தான், ஏய் சோமு இங்க வா ஒரு சின்ன உபகாரம் செய்யனும் என்று அழைத்தாள். அவள் வீடு அடுத்த வீடு.அங்கே போனதும் பேசிக் கொண்டே அடுப்படி வேலையை கவனித்துக் கொண்டிருந்தாள். ஒரு கட்டு வீடு அது.என்னமோ சொன்னீங்களே என்றேன். சொன்னாக சோத்துக்கு உப்பில்லைன்னு.காலேஜ் படிக்கெ விவரம் தெரியலையே என்றாள். உண்மையிலேயே தெரியவில்லை. சிவா கெளம்புனா நீ, அவன் சேக்காளி மட்டும் அங்க இருக்கலாமா, என்றாள்.அப்போது உள்ளூரின் பிரபல பாடகரின் மனைவி, சித்தி வீட்டுக்கு வந்தாள்.வாங்க மதினி என்று சித்தி வரவேற்றாள். என்ன ஜோலி நடக்கு, என்றபடி உள்ளே வந்தவள், இது யாரு தம்பி என்று சிரித்த படியே கேட்டாள்.இவனா சிவா சேக்காளி, சொள்ள மாடன் கோயில் தெரு என்றாள்.
நான் கேட்கும் முன்பே சித்தி சொன்னாள் இதான் சிவாவோட அத்தை. இவக கிட்ட தான் சிவா பாட்டுச் சொல்லிக்கிட்டான் என்றாள். ஆகா இப்படி அததையக் கண்டா சிவா வெட்கப் பட்டான் என்று தோன்றியது.பத்மினி பிரியதர்சினி என்று ஒரு நடிகை உண்டு அவளைப் போலிருந்தாள் அத்தை. சொன்னேன். பத்மினி என்று எடுத்துக் கொண்டார்கள் போல.இவன் சிவா மாதிரி கிடையாது போல இருக்கெ, நான் என்ன பத்மினி மாதிரியா இருக்கேன் என்று சிரித்தாள்.எனக்கு பாட்டு சொல்லித் தாங்க அப்படீன்னா என்றேன். எங்க எதாவது பாடு பார்ப்போம் என்றாள். பாட்டு வரவில்லை.பாடு பாடுன்னா பாட்டுக்காரனும் பாட மாட்டான், தானே பாடுனா தலை தெறிக்கப் பாடுவான்கிற மாதிரி, கேட்டா யாருக்கும் வராது. உன் குரல்லாம் ஒடஞ்சி போச்சே, வேணும்ன்னா என்னான்னு தெரிஞ்சுக்கலாம், என்று சொன்னாள்.சித்தியிடம் எதோ குசுகுசுவென்று பேசி விட்டு அகன்றாள். போகும் போது தம்பி வீட்டுக்கு வாங்க, சொள்ள மாடன் கோயில்த் தெருன்னா யாரு வீடு, என்றாள். சொன்னேன். அப்படியா அப்ப அவுகளூக்கு தெரிஞ்சுருக்கும் என்ற படியே போனாள். நான் அவளது இடுப்பு மடிப்பையே பார்த்துக் கொண்டிருந்தேன். சித்தி சிரித்தாள், பாத்தது போதும், சாப்பிடுதியா சமையல் ஆயிட்டு என்றாள். நான் வெட்கத்துடன் கிளம்பினேன்.
நீரும் நெருப்பும் சினிமா போய் வந்த அன்று மாலை சிவா வீட்டுக்கு வந்தான்.வா ஜங்ஷன் பாலஸ்டி வேல்ஸ் தியேட்டரில் பணக்காரக் குடும்பம் போட்டிருக்கான்.ரெண்டு பாட்டு கேட்டுட்டு வரலம் என்றான். சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினோம். குமார வேலும் கூட வந்தான். அவன் வீடு சிவா வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி இருந்தது, ஸ்கூலில் என் கிளாஸ் மேட். பாலஸில் படம் பார்க்க சிவாவுடன் போவது ஒரு சுகம். அங்கே அவுட் பாஸ் என்று தருவார்கள். பாதிப் படத்தில் அவுட் பாஸ் வாங்கிக் கொண்டு வெளியே வரலாம் பக்கத்து சுல்தானியா ஓட்டலில் சாப்பிட்டு விட்டு மறுபடி படம் பார்க்கலாம். அங்கே எப்போதும் பழைய படம்தான் போடுவார்கள். மாலைக் காட்சி ஏழு மணிக்கித்தான் ஆரம்பிப்பார்க்ள். சவுண்ட் சிஸ்டம் பிரமாதமாக இருக்கும்.பணக்காரக் குடும்பம் படத்தில் வருகிற இது வரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா.... பாட்டு ரொம்பப் பிடிக்கும் எனக்கும் சிவாவுக்கும். உண்மையில் அது காதலிக்க நேரமில்லை படத்துக்காக ஒலிப்பதிவு செய்யப் பட்ட பாடலாம்.மலரென்ற முகமின்று சிரிக்கட்டும் பாடல் பணக்காரக் குடும்பம் படத்திற்காக பதிவு செய்யப் பட்டதாம். இல்லைன்ன உங்க ஆளு படத்துல இப்படிப் பாட்டு வருமாலெ என்பான் சிவா. இந்தா வந்துருக்கில்லா என்பேன் நான். ஏன், ரகசியம் பரம ரகசியம் பாட்டு பெரிய இடத்துப் பெண் படத்தில் வரலையா என்றால் அது வேற இது வேறடா ஒனக்குப் புரியாதும்பான்.
அந்தப் பாட்டு முடிந்ததும், வா சாப்பிட்டுட்டு வருவோம், என்று கிளம்பினான். இப்படம் நாளை கடைசி என்று வாசலில் உள்ள போஸ்டரின் குறுக்காக சிறிதாக ஒட்டிக் கொண்டிருந்தாகள். சுல்தானியா ஓட்டலில் பிரியாணி நன்றாய் இருக்கும். ஆனால் மத்தியானம் தாண்டா பிரியாணி சாப்பிடனும். ராத்திரி ரொட்டி தாண்டா என்று ரொட்டியே ஆர்டர் கொடுத்தான்.ஓசியில சாப்பிடதுக்கு என்னதுன்ன என்ன எதையாவது சொல்லு என்றேன்.அப்படிச் சொல்லாத, நீ வேணூம்ன்னா பிரியாணி சாப்பிடு என்றான். வேண்டாம் என்றேன்.சாப்பிட்டு விட்டு வெளியே வந்ததும் இன்னம படம் போகணுமா என்றான்.வேண்டாம் வீட்டுக்குப் போகலாம் என்றேன்.
இரு ஒரு சின்ன வேலை அந்தா மீனாட்சிபுரத்தில ஒரு ஆளைப் பாத்துட்டுப் போயிருவோம், அம்மா கொஞ்சம் பணம் கொடுக்கச் சொல்லி குடுத்து விட்டுருக்கா, முதல் சந்து தான், என்றான்.
சரி என்று போனோம். அது இருட்டாய் இருந்தது. ஏதோ மூத்திரச் சந்து போல இருந்தது. நீங்க ரெண்டு பேரும் இங்கயே ரோட்டில நில்லுங்க. என்று போனான்.நான் குமார வேலிடம் கேட்டேன். இங்க யாரு இருக்கா, என்று. சிவா கிட்ட கேட்டிராத, அவன் அம்மாவோட முதல் மாப்பிள்ளை, முறுக்கு வியாபாரம் பண்றாரு. தியேட்டருக்கெல்லாம் முறுக்கு இவருதான் போடுதாரு, என்றான். அவருக்கு குழந்தைகள் இல்லை, இவனிடம் ரொம்பப் பிரியம், என்றான்.அதற்குள் இரண்டு பேரும் நாங்கள் நின்ற வெளிச்சத்துக்கு வந்தார்கள். சைக்கிள்ளயா வந்தீங்க பாத்துப் போங்கடே என்றார். இப்போது நல்ல வெள்ளை சட்டை அணிந்திருந்தார்.வேஷ்டியும் சட்டையும் நன்றாக வெளுத்துத் தேய்த்திருந்தது. சிவா அவரிடம் பதிலேதும் சொல்லாமல், சைக்கிளில் ஏறினான்.மூன்று பேரும் டவுண் வரும் வரைக்கும் பேசவே இல்லை. என் மூளைக்குள் ‘இப்படம் நாளை கடைசி’ என்று, என் குரல் வாசித்துக் கொண்டே இருந்தது.