Tuesday, November 10, 2009

ஓடும்நதி-5


வேதமும் கோயிலும் இந்த மண்ணின் அகராதியில் உள்ளதுதான். வேதக்கோயில் என்றால் சற்று அந்நியப் பட்டு விடுகிறது..``அவங்க வேதக்காரங்க’’ என்றால் அர்த்தம் மாறுபட்டு விடுகிறது. எங்களது வேதக் கோயில் பள்ளிக் கூடத்திலிருந்து, நாளைக்கு பளையங்கோட்டைக்கு கூட்டிப் போகிறோம் எல்லாரும் நாலணா கொண்டு வந்து விட வேண்டுமென்று என்று நாலாம் வகுப்பு பால் மாணிக்கம் சார் சொன்னார். நல்ல அழகான கருப்புக் கலரில் இருப்பார். குரல் நன்றாக இருக்கும்.அவரே சொல்லிக் கொள்ளுவார், பேர் தாம்லெ வெள்ளையா வச்சுட்டாரு எங்க அப்பா.
மறுநாள் பாளையங்கோட்டையில் இருந்த விழியிழந்தோர் பள்ளிக்கு அழைத்துச் சென்றார்கள்.அவர்கள் பாய் நெய்வதையும் கூடை முடைவதையும் அதிசயமாகப் பார்த்ததுக் கொண்டிருந்தோம். நாங்கள் போன அன்று அங்கே விளையாட்டு விழா. ஓட்டப் பந்தயப் பாதையில் கயிறுகள் கட்டி அதற்குள் ஓடினார்கள் அங்குள்ள மாணவ்ர்கள்.ஆனால் ஒருவர் உடல் கூட கயிற்றில் படவில்லை, பாருங்கடா என்று சார் சொன்னது நன்றாய் நினைவிருக்கிறது.
பல வருடங்கள் கழித்து, அந்த வளாகத்தில் உள்ள சர்ச் சில் ஒரு கல்யாணம். நானும் வண்ணதாசனும் போயிருந்தோம் அன்று மாணவர்கள் யாரும் தென்படவில்லை. விடுமுறையோ அல்லது விடுதியை விட்டு வரவில்லையோ தெரியவில்லை. அந்த வேதக் கோயிலின் சுவர்கள் பளிச்சென்றிருந்தது. ஒரு அசாத்திய மௌனத்தை உணர்த்திக் கொண்டிருந்தது. திருநெல்வேலி டயோசிசன் கோயில்களில் சொரூபங்கள் இருக்காது. ஆனால் ஐயர் பிரசிங்கிக்கும் மேடை, பாடல்கள் பாடுவோரின் இடம் இவற்றில் சிறிது அலங்காரம் இருக்கும்.இங்கே அது கூட எளிமையாக இருந்தது.சில சர்ச்சின் பக்கவாட்டுச் சுவர்களில் ஒனறிரண்டு படங்கள், இயேசுவின் ‘ராப் போஜனம்’ இயேசு ஆட்டுக் குட்டியுடன் உள்ள சித்திரம் என்று ஏதாவது இருக்கும்.
ஆனால் இங்கே எதுவுமில்லாமல் சுவர்கள் வெண்மையாய்ப் பளிச்சென்று இருந்தது.ஏன் என்ற கேள்வி என்னைப் போலவே வண்ணதாசனின் மனத்திலும் ஒடியிருக்க வேண்டும்.திருமணம் முடிந்து வெளியே வந்த போது ப்லைண்ட் ஸ்கூல் சர்ச் என்பதால் படங்கள் எதுவுமில்லையோ என்று கேட்டு விட்டு அமைதிக்குள் புகுந்து கொண்டார், அவர். இருக்கலாம் என்று நானும் நினைத்துக் கொண்டேன்.சொல்லவில்லை.
நாலைந்து வருடங்கள் கழித்து. ஜான்ஸ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், மறு நாள் வெள்ளி விழா சுதந்திர தினக் கொண்டாட்டங்கள், விடுமுறை. லைப்ரரியில் சில புத்தகங்களைத் தேடிக் கொண்டிருந்ததால் சற்று நேரமாகி விட்டது.அப்போது ஜெயராஜ் சார் அவசரம் அவசரமாக வந்தார்.மற்ற மாணவர்கள் எல்லாரும் போய் விட்டார்களோ,இப்ப தான் முதல்வர் ஒரு பொறுப்புச் சொன்னார். நாளை ப்லைண்ட் ஸ்கூலில் ஃப்லாக் ஹாய்ஸ்ட் பண்ணனுமாம், நீங்க வர முடியுமா என்று அங்கிருந்த எங்கள் இரண்டு மூன்று பேரிடம் கேட்டார். யாரோ, சாப்பாடு போடுவீங்களா, இல்லேன்னா வெறும் மிட்டாய் கொடுத்து அபனுப்பிருவீங்களா என்று விளையாட்டாகக் கேட்டார்கள். நான் எங்கள் வீட்டில், விருந்தே ஏற்பாடு செய்கிறேன் என்று உற்சாகமாய்ச் சொன்னார்.திரும்பத் திரும்ப கேட்டார், ஃப்ரெண்ட்ஸ் வர முயற்சி பண்ணுங்களேன் என்று. ஒரு விடுமுறை நாளை வீணடிக்க யாருக்கும் மனமில்லை. அமைதியாக இருந்தோம்.
அவர் முகத்தில் தெரிந்த எதிர்பார்ப்பு, மனதை என்னவோ செய்தது.நான் வருகிறேன் என்றேன்.இன்னும் இரண்டு மூன்று பேர் நங்களும் வாரோம் சார் என்றார்கள்.கல்லூரியை விட்டு சற்று தூரம் வந்த பின்னும் சைக்கிளில் பின்னாலேயே வந்து சொன்னார்,வீட்டில் மதிய விருந்து ஏற்பாடு செய்து விடுகிறேன் என்று.அதெல்லாம் வேண்டாம் சார் வந்திருதோம் என்று உறுதியளித்து விட்டுக் கிளம்பினோம்.
காலையில் சார், அந்த விழியிழந்தோர் பள்ளியின் வாசலில் காத்திருந்தார்.நல்ல வெயில் வந்து விட்டிருந்தது. பள்ளியின் மாணவர்கள் சற்று நிழலிலேயே அமர்ந்திருந்தனர். கல்லூரி முதல்வர் அவர்களே வருக வருக என்று ஒரு கரும் பலகையில் எழுதி வைத்திருந்தது. எங்களைத் தவிர கொஞ்சம் இளங்கலை பயிலும் மாணவர்களும் வந்திருந்தனர்.வேகமாக மாணவர்களை அணிவகுத்து நிற்கச் செய்து விட்டார்கள், அந்த ஆசிரியர்கள். பிரம்புடன் நின்ற ஒருவரிடம், பிரம்பை ஒளித்து வைக்கும் படி பள்ளி நிர்வாகி ரகசியமாய்ச் சொன்னார். அது எங்களைப் பார்த்ததனால் என்று நினைத்தேன். தூரத்தில் சர்ச் மூடியிருந்தது. ஒரு ஜன்னல் கூட திறக்கப் படவில்லை.
ஜெயராஜ் சார் கொடியேற்றினார். ஸ்கூல் சல்யூட் என்று உரக்கக் கத்தினார் பிரம்பை ஒளித்து வைத்தவர்.எங்களிடம் தம்பிகளா பலமா கைதட்டுங்க என்றார்.தட்டினோம் இன்னும் பலமா தட்டுங்க, என்றார். ஜெயராஜ் சார் ‘ப்ளீஸ்’ என்கிற மாதிரியில் பார்த்தார். பலமாகத் தட்டினோம். இப்போது அந்த மாணவர்களும் கை தட்ட ஆரம்பித்தனர். கைதட்டலை நாங்கள் நிறுத்திய பின்னும் அவர்கள் தட்டிக் கொண்டிருந்தார்கள்.கொடி பட்டொளி வீசிப் பறந்தது.அவர்கள் அருகே போய் என்னவோ செய்தார்,பிரம்பு சார்.ஓரிரு நிமிடங்களில் அமைதியாகி விட்டது வளாகம்.இனிப்பை வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.ஜெயராஜ் சார், ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு வாங்க பக்கத்திலதான் இருக்கு என்றார். ஒட்டு மொத்தமாக மறுத்தோம்.. நான் என்றுமில்லாத வேகத்தோடு சைக்கிளை மிதித்தேன்.
வீட்டுக்கு வந்ததும் எழுதினேன், ஒரு அடித்தல் திருத்தலில்லாமல் ஒரு கவிதையை. கனமான இதயம் கொஞ்சம் மட்டுப்பட்டது மாதிரி இருந்தது.

குருடர் பள்ளியில்
கொடியேற்றம்


விழியுள்ள கணவான்
விழாக் கொடியேற்ற
வெள்ளி விழாவென்று
களித்தனர்-சுற்றி நின்ற
கண்ணற்றவர். (15.08.1972)

Visitors