Monday, April 23, 2012

நன்றி : காட்சிப்பிழைமலர்ந்தும் மலராத....


     சபாபதியும் நானும் ரிக்கார்ட் ஒலி பரப்புவதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். சித்ரா ஒலிபெருக்கி அப்போது புதிதாகத் தொடங்கப் பட்ட ‘கம்பெனி. அப்போது (1962) 78 R.P.M(revolutions per minute) ரிக்கார்டுகள் பெரியவை. ஒரு பக்கத்திற்கு, மூன்று அல்லது மூன்றரை நிமிடம் ஓடக்கூடிய   ஒரு பாட்டு இருக்கும். பெரிய பாடல்கள் என்றால் மறு  பக்கத்தில் தொடரும். ‘ப்ளேயரைநிறுத்தி ஊசியை விலக்கி, மறுபுறத்தை திருப்பிப் போடவேண்டும்.
பிற்காலத்தில் 45 R.P.M.,EXTENDED PLAY. (E,P).பக்கத்திற்கு இரண்டாக நான்கு பாடல்கள்.33 1/3 R.P.M,. LONG PLAY (L.P) எல்லாம் வந்து விட்டன. எல்.பி ரெகார்டில் ஏழு எட்டு பாடல்கள் ஒரு பக்கத்திற்கே இருக்கும்.

     தாயைக் காத்த தனயன் வந்த புதிது. அதன் பாடல்களை போட்டுக் கொண்டிருந்தார் ஒலிபெருக்கிக்காரர். முதல் நாள் மாலையிலேயே ஆரம்பித்தாயிற்று. கல்யாண வீடு காலையில்த்தான். நாங்கள் இருவரும் மாலையில் பெரும்பாலுமும், காலையில் சீக்கிரமாகவேயும் அருகே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். கிராமஃபோன்  ரிக்கார்டின் தேய்ந்த ஊசி, அது போட்டு வைத்திருக்கும் குட்டி டப்பா இதில் ஒன்றையாவது வாங்குவதும் (அல்லது சுடுவதும்) எங்கள் நோக்கம். அநேகமாக ‘கம்பெனிக்காரர்வேடிக்கை பார்க்கும் ‘பையன்களை விரட்டி விட்டு விடுவார். இவர் விரட்டவில்லை. காலையில், சபாபதியை நம்பி, “டேய் தம்பி, இதைக் கொஞ்சம் பாத்துகிடுதியா நான் ரெண்டு இட்லியப் பிச்சுப் போட்டுட்டு வந்திருதேன்.. என்று பொறுப்பை ஒப்படைத்து விட்டுப் போனார். அதற்குள் எப்படி மெதுவாக ஊசியை எடுக்கவும் வைக்கவும் வேண்டும், எப்படித் திருப்பிப் போட வேண்டும் என்று விளக்கினார்.
அந்தப் பாட்டு முடிந்து, வெற்றிகரமாக ரிக்கார்டை எடுத்து விட்டு புதிய ரிக்கார்டை சர்வ ஜாக்கிரதையுடன் போட்டான் சபாபதி.காவேரிக் கரையிருக்கு.. கரை மேலே பூவிருக்கு..என்று படத்திலேயே பிரபலமான பாட்டு ஒலி பெருக்கியில் முழங்கியது.சபாபதி முகத்தில் சந்தோஷம் கொப்பளித்தது. பாட்டை திருப்பிப் போட்டான்.ஒலிபெருக்கி அலறியது.
“ நடக்கும் என்பார் நடக்காது
  நடக்காதென்பார் நடந்து விடும்
  கிடைக்கும் என்பார் கிடைக்காது
  கிடைக்காதென்பார் கிடைத்து விடும்

  தொடுத்த பந்தல் அழகு பார்த்து
  துள்ளும் ஒருவன் மனமிங்கே
  பிரித்த பந்தல் கோலம் கண்டு
  பேதை கொண்ட துயரிங்கே.. துயரிங்கே

  அறுந்து போன உறவறியாமல்
  அழைப்பு கொடுக்கும் மனமிங்கே
  ஆசைக் கயிறு அறுந்ததாலே .......
ஏல எவம்ல அவன், பாட்டுப் போடற நாயி....என்று தெருவில் கோபத்துக்குப் பேர் போன  அண்ணாச்சி ஒருவர், ‘பாடல் ஒலிபரப்பிக் கொண்டிருந்த இடத்துக்கு வரவும், பாதிப் பந்தியில் எழுந்து, எச்சிக் கையோடு கம்பெனிக்காரன் வரவும் சரியாக இருந்தது.சபாபதியும் நானும் ஆளுக்கொரு திசைக்கு ஓடினோம்.
சபாபதி இப்போது உயிருடனேயே இல்லை.
     அப்போதெல்லாம்,. படத்தில் ஏழு பாடல்கள் வைப்பது.. ஒரு செண்டிமெண்ட். இசைத்தட்டு வருகையில் பக்கத்திற்கு ஒன்றாக ஆறு பாடல்களை மூன்று ரிக்கார்டுகளில் பதிவு செய்தால் ஒரு பாடல் மிச்சமாகி விடும். அதை மிகச் சிறந்து விற்பனையாகும் ஒரு பாடலுடன் மறு பதிவு செய்து வெளியிடுவார்கள், கொஞ்ச நாள் கழித்து. இது அதனால், அப்படி நடந்த கூத்துத்தான். இதற்காவே எட்டுப்பாடலை கம்போஸ் செய்து கொள்வார்கள். அப்படியான எட்டாவது பாடல் படத்தில் வராது. சிலோன் ரேடியோவில் மட்டும் போடுவார்கள். அங்கே படம் இந்தியாவில் ரிலீஸான கொஞ்ச நாட்கள் கழித்தே வெளி வரும். அதனால் அவர்களுக்கு படத்தில்  பாடல்க் காட்சி உண்டா என்று கவலையில்லை. மதராஸ், திருச்சி, வானொலியில் இப்படிப் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது என்ற விதியே உண்டுமாம்.இங்கே நிறைய வேடிக்கையான விதிகள் உண்டு.
     தாய் சொல்லைத்தட்டாதே படத்தில் பி.சுசிலா பாடிய பாடலொன்று
“ என்னடி சொன்னா ராஜாத்தி-அவ
  எங்கடி வந்தா ராஜாத்தி...என்று அழகான கவ்வாலி மெட்டில் ஒரு பாடல உண்டு. படத்தில் வராது.  படத்தில் ஜெமினி சந்திரா என்ற ஒரு நடிகை எம்.ஆர் ராதா கொள்ளைக்கூட்டத்தில் ஒரு ஆட்டக்காரியாக வருவார். அந்தப் பாத்திரத்தின் பெயர் ராஜாத்தி.படத்தில் ஒரு வசனம் கூட வரும்இதுதான் அந்த திருச்சி ஹோட்டலில் ஆடிய நடனக்காரியா... என்று அசோகன் கேட்க, அவ திருச்சிலெ என்ன தேவ லோகத்தில கூட ஆடுவா...என்று எம் .ஆர் ராதா சொல்லுவார். இந்தப்பாடல் படமாயிற்றா தெரியவில்லை ஆனால் இந்தப் பாடலின் அதே மெட்டில் கே.வி.மகாதேவன் நிறையப் பாடல் போட்டிருப்பார். வானம்பாடியில் “யாரடி வந்தார் என்னடி சொன்னார், ஏனடி இந்த உல்லாசம் / காலடி மீது ஆறடிக் கூந்தல் மோதுவதென்னடி சந்தோஷம்...என்று ஒரு பாடல் வரும். வேட்டைக்காரனில் “கண்ணனுக்கெத்தனை கோயிலோ, காவலில் எத்தனை தெய்வமோ, மன்னனுக்கெத்தனை உள்ளமோ,  மனதில் எத்தனை வெள்ளமோ...  என்று ஒரு பாடல் வரும்.
    
பாலும் பழமும் படத்தில்
தென்றல் வரும் தூது வரும்
திருமணம் பேசும் சேதி வரும்
மஞ்சள் வரும் ஓலை வரும்
மாலையும் குங்குமமும் சேர்ந்து வரும்.
என்று பி.சுசிலா, சரோஜா தேவிக்கான செல்லக்குரலில் பாடிய துள்ளல் பாடல் ஒன்று உண்டு. ரிக்கார்டுகளில் இருக்கும். படத்தில் கிடையாது.சிலோன் ரேடியோவில் போடுவார்கள். அநேகமாக இந்த இரண்டு படத்தில் வராத பாடல்களையும் சிலோன் ரேடியோவில் காலை ஒலிபரப்பு முடியப் போகும் 9.55 க்குத்தான் போடுவார்கள். அப்படிப் போடும் இன்னொரு பாடல்
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் எங்கே-நீ
வாராதிருந்தால் உன்னைப் பாராதிருந்தால்
நெஞ்சம் மாறாதிருப்பேன் இல்லையோ...


காதலைத் தேடி நானழுதேனோ
காரணத்தோடு தான் சிரித்தேனோ
உன்னைக் கண்ட போது நினைவுகள் ஏது
நீ வந்த பின்னே நிம்மதி ஏது.. நிம்மதி ஏது...


உறவறியாமல் நானிருந்தேனே
உறவொன்று தந்தாய் நீயறியாமல்
கனவுகள் எல்லாம் நீ வளர்த்தாயே
கையில் வராமல் பறித்து விட்டாயே பறித்து விட்டாயே
சுசிலாவின் உருகும் சோகக் குரலில் மனசைப் பிழிந்து அழவிடும் பாடல். படம் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை.படத்தில் கிடையாது.படத்தில் இதற்குப் பதிலாக “ என்ன என்ன வார்த்தைகளோ.. சின்ன விழிப்பார்வையிலே... பாடல் இடம் பெற்றதாக மெல்லிசை மன்னர் டி.கே ராமமூர்த்தி ஒரு நேர்ப் பேச்சில் குறிப்பிட்டார். கிட்டத்தட்ட “நீராடும் கண்கள் இங்கே...பாடலின் சாயலில் ராமமூர்த்தி, தனியே இசைஅமைத்த ‘மூன்றெழுத்து படத்தில்  ஒரு பாடல் வரும்
“ காதலன் வந்தான் கண்வழி சென்றான்
  கண்களை மூடு பைங்கிளியே,,, பைங்கிளியே..
பஞ்சவர்ணக் கிளி படத்தின் சில ரிக்கார்டுகளில் ஒரு பாடல் உண்டு படத்தில் கிடையாது.ஆனால் அந்தப் பாடல் “ ஜி.என் வேலுமணியின் அடுத்த படமான “ செல்வமகள்படத்தில் இடம் பெற்றிருந்தது. அது-“குயிலாக நானிருந்தென்ன குரலாக நான் வரவேண்டும்...-பாடல்
      மதுரை வீரன் படத்தில்  பாரதியாரின்
தீர்த்தக் கரையினிலே அந்த செண்பகத்தோட்டத்திலே... பாடலை டி.எம். சௌந்தரராஜன் பாடுவதாக இசைத்தட்டுகளில் இருக்கிறது படத்தில் கிடையாது. எம்.ஜி.ஆர் வேண்டாம் என்று சொல்லி விட்டதாகச் சொல்லுவார்கள்.ஆனால அவரது சக்கரவர்த்தித் திருமகள்  படத்தில் பாரதியாரின் நாலு வரிப் பாடல் ஒன்று படாரென்று வந்து போகும்.
“ டில்லித் துருக்கர் செய்த வழக்கமடி-பெண்கள்
  திரையிட்டு முகமலர் மூடுவது..

“தீரத்தக் கரையினிலே பாடலை டி.ஆர் மகாலிங்கம் உச்சஸ்தாயியில் பாடிய பாடல் விளையாட்டுப் பொம்மை படம் என்று சிலோனில் சொல்லுவார்கள் ஆனால படமே வரவில்லை என்று நினைக்கிறேன்.
     ஜெயகாந்தன் தயாரித்து இயக்கிய “புதுச் செருப்பு கடிக்கும்படத்தில் எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடும் “ சித்திரப்பூ சேலை சிவந்த முகம்...என்று அருமையான பாடல், படம் முடிந்தும் வெளிவரவில்லை.பாடல்: ஜெயகாந்தன், இசை: எம்.பி சீனிவாசன்.
அதேபோல் செம்மீன் புகழ் ராமு காரியத் இயக்கத்தில் ராமண்ணா தயாரிப்பில் சினிமாஸ்கோப் என்றெல்லாம் விளம்பரப்பட்ட படம் “கரும்புதி ஜானகிராமன் கதை- வசனம். இசை சலில் சவுத்ரி. பாடல் திங்கள் மாலை வெண்குடையாய்...என்று வரும் சிலப்பதிகாரப்பாடல். ஜேசுதாஸ் தனியாகவும் பி.சுசிலா தனியாகவும் பாடும் இரண்டு  பாடல்கள் அற்புதமானவை.பாடல் அடிக்கடி ஒலிபரப்பாகும்
எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் ஆறு பாடல்கள்தான். (படம் 21 ரீல் என்று நினைவு, அப்போதைய நிலவரப்படி 18 ரீல்தான் ஸ்டாண்டர்ட்) நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் பாடல் இரண்டு பக்கப் பாடல். அதனால் படம்  வெளியாகி 100 நாட்கள் எலலாம் ஓடிய பிறகும் பெண் போனால்....பாடல் இசைத்தட்டில் வரவே இல்லை. 100 நாட்களுக்குப் பிறகு... பாடலின் இடையிடையே எம்.ஜிஆரும் சரோஜா தேவியும் ( டி.எம்.எஸ்ஸும்- சுசிலாவும் ) oh my sweet heart என்பது போல ஆங்கில வசனமெல்லாம் பேசுவது மாதிரி மறுபடிப் பதிவு பண்ணி, இரண்டு பக்க இசைத்தட்டாக வெளிவந்தது.ஆனால் நன்றாக விற்கவில்லை.
     பல பாடல்களின் மூன்றாவது சரணம் இசைத்தட்டில் இருக்காது. படத்தில்தான் இருக்கும்.  கேட்டுக் கேட்டு பாட்டு பிரபலமாகிவிட்ட பிறகு ஓரிரு வருடம் கழித்து, இரண்டாம் முறை படம் வரும் போது போய்ப் பார்த்தால், மூன்றாவது சரணம் மனதில் ஒட்டாமல் இருக்கும். ‘அன்பே வா படத்தில் ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்..பாடலில் மூன்றாவது சரணம்,
“ பாவலன் மறந்த பாடலில் ஒன்று
 பாவையில் வடிவில் பார்த்ததும் இன்று
 தலைவனை அழைத்தேன்
 தனிமையைச் சொன்னேன்
 தழுவினன் குளிர்ந்தேன்....என்று படத்தில் வரும். அப்போதைய இசைத் தட்டுகளில் இது இருக்காது.
 வசந்த மாளிகை படத்தில் ‘மயக்கமென்ன...” பாடலில்
“ பாடி வரும் வண்ண நீரோடை-உன்னை
 பாத பூஜை செய்து வர
 ஓடி வரும் அந்த ஓடையிலே-என்
 என் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர.....என்கிற மூன்றாவது சரணம் படத்தில் உண்டு. இசைத்தட்டில் இருக்காது. படகோட்டி படத்தில்,
தொட்டால் பூ மலரும் பாடலில்
“ பழரசத் தோட்டம்
 பனிமலர்க் கூட்டம்
 பாவை முகமல்லவா

 அழகிய தோள்கள்
 பழகிய நாட்கள்
ஆயிரம் சுகமல்லவா...என்ற சரணமும் அப்படித்தான்.

     வீரத்திருமகன் படத்தின் பாடல்கள் அத்தனையும் அற்புதமானவை. அதில் “ உண்மைக்குள் பொய்யை வைத்தான்...
என்று எம்.எஸ்.விஸ்வநாதன் - பி.லீலா (லீலா என்று நினைவு) பாடுகிற அற்புதமான பாட்டு ஒன்று படத்தில் வரும். முதல் நாள் இருந்தது ஓரிரு நாட்களில் படத்தின் நீளம் கருதி ( படம் ஏற்கெனவே சவ்வாய் நகரும்) நீக்கி விட்டார்கள். இந்தப் பாடலை சிலோனில் ஒலிபரப்புவார்கள். இது எம்.எஸ்.வி.க்கே நினைவு இருக்குமோ என்னவோ. ஆனால் அருமையான பாடல். அழகான கடல்ப் புறத்து மெட்டு. இது போக சி.எல் ஆனந்தன் ‘குரங்காட்டம்ஆடுகிற “ அத்தை பெற்றெடுத்த பெண்ணுமில்லையே/ என்னை மந்தியென்று சொல்லி விட்டாயே...என்று டி.எம்.எஸ் பாடுகிற பாடல்க் காட்சியும் வெட்டப்பட்டது..
மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே...என்கிற டூயட், “பூவா தலையாபடத்தில் முதல் ஓரிரு நாட்கள் இருந்தது. அதில் ஜெமினிகணேசன் வழக்கமான ஸ்டைலில் ஜிப்பா, பைஜாமா போட்டுக் கொண்டு கையை இடுப்பில் வைத்தபடி பாடுவார்.முதல் நாள் முதல்க் காட்சியில் ஒரே கேலிக்கூச்சல் எழுந்தது. அப்புறம் அதை வெட்டி விட்டார்கள். அதை அடுத்து வந்த ‘இரு கோடுகள் படத்தில் நாகேஷ் ஒரு ஜோக் அடிப்பார். ஜெமினி கணேசனைப் பார்த்து, “ சார் நீங்க பார்க்கிறதுக்கு ஜெமினிகணேசன் மாதிரியே இருக்கீங்க சார்... நீங்க அவரைப் பர்த்திருக்கீங்களா.. இல்லையா... பை தி பை நீங்க அவரைப் பார்த்தா சொல்லுங்க இன்னமே இந்த ஜிப்பா போட்டுகிட்டு இடுப்பில கைய வச்சுகிட்டு டூயட்டெல்லாம் பாட வேண்டாம் என்று சொல்லிருருங்க சார்.. என்பார். பாலசந்தரின் முத்திரை இது.

     உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் ஏற்கெனவே பத்துப் பாடல் என்று நினைக்கிறேன். ஆனால் இன்னும் பதிவு செய்து இசைத்தட்டுகளில்க் கூட வெளிவந்து படத்தில் இடம் பெறாத பாடல்கள் இரண்டு உண்டு.
“ உலகம் சுற்றும் வாலிபனோடொரு
  பயணம் வந்தவள் நான்
  உறவுப் பாடலப் பாடவும் ஆடவும்
  உரிமை கொண்டவள் நான்..பி.சுசிலாவும் டி.எம்.எஸ்ஸும் பாடிய பெரிய பாடல். இன்னொன்று சுசிலா மட்டும் பாடுவது சிரிப்புக்கிடையே பாடுவது போல் வரும். பாடல் மறந்து போயிற்று. இது தவிர உ.சு.வாலிபன் படத்திற்கு முதலில் இசையமைப்பாளரகப் போட்டது குன்னக்குடி வைத்தியனாதனை.( ஆகா தமிழ் சினிமா இசை எப்படி தப்பித்தது என்று பாருங்கள்.)அவர் இசையமைப்பில்
 சிவந்த வானம் எங்கும் ஒன்றுதான்
 வசந்த காலம் எங்கும் ஒன்றுதான்.. என்கிற மாதிரியில் ஒரு பாடல் பதிவானது.

     கர்ணன் படத்திற்கென ஒரு அருமையான டூயட் பாடல் உண்டு.
மஹாராஜன் உலகை ஆளுவான்-இந்த
மஹாராணி அவனை ஆளுவாள்


மஹாரஜன் உலகை ஆளுவான் அதில்
மஹாராணி மயங்கி ஆடுவாள்

புலவர் பாட அரசர் கூட அறிஞர் நாட வாழுவான்
புதுமை கூறும் மனைவி கண்ணில் உலக இன்பம் காணுவான்.

இதுவும் படத்தில் வரவில்லை.

வசந்த மாளிகை படத்தில்
 அடியம்மா ராசாத்தி சங்கதி என்ன நீ
 அங்கேயே நின்னுகிட்டா என் கதி என்ன

“அடேயப்பா ராசப்பா சங்கதி என்ன- நீ
 ஆசையோடு அணைச்சுக்கிட்டா எங்கதி என்ன என்று ஒரு பாடல் படத்தில் கிடையாது.

ஒளிவிளக்கு படத்திற்காக
“ என்னம்மா பொன்னம்மா
 பக்கம் வாம்மா வாம்மா..என்று ஒரு பாடல் பதிவானது... அதற்குப் பதிலாகத்தானோ என்னவோ கடைசி நேரத்தில் நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க... பாடல் எம்.ஜி.ஆரின் விருப்பத்தின் பேரில் சேர்க்கப் பட்டதாக செய்திகள் அடிபட்டது. ஒளிவிளக்கில் மறைந்த பாடல்  எதிர் நீச்சல் படத்தில் நாகேஷ் ஜெயந்தி ஆடும் மேடைப் பாடலாக  வெளிவந்தது. கே.பால சந்தருக்கு மேடைப் பாடல் ஒரு செண்டிமெண்ட். பீம்சிங்கிற்கு ஒரு குரூப் டான்ஸ் கட்டாயம் படத்தில் வேண்டும்.
      இரு கோடுகள் படத்தில் “ நானொரு குமாஸ்தா... நான் பாடுவேன் தமாஷா... பாடலுக்குப் பதிலாக கொஞ்சம் சீரியஸ்ஸான பாடல் இருந்தது. பாடல் மறந்து விட்டது. உரிமைக்குரல் படத்தில் விழியே கதை எழுது ...சோகப்பாடலாகவேதான் படமாக்கப் பட்டிருந்தது. எம்.ஜி.ஆர் “என்னய்யா பாட்டு, படத்தில் ரிச்னெஸ்ஸே இல்லையே என்று அதை பம்பாய் ஒளிப்பதிவாளர் “ரவிகாந்த் நகாய்ச்சை வைத்து தந்திரக் காட்சிகள் எல்லாம் சேர்த்து “ரிச்ச்சானகாதல் பாட்டாக்கி விட்டார். இதைப் பற்றி கணையாழி இதழ்ப் பேட்டியில் வந்திருக்கிறது. அந்த படப்பிடிப்பின் இடையே எடுத்த பேட்டி அது.
எம்.ஜி.ஆர் பாடலைப் பற்றி அதிகம் கவனம் செலுத்துவார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால அவரை ‘கன்வின்ஸ் பண்ணி ஒரு பாடலை வைப்பது பெரிய கஷ்டம். மகாதேவி படத்தில் “ மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு வாழ்வது நமது சமுதாயம், மரண பயங்கரம் சூழ்ந்து வந்தாலும் மாறி விடாதே ஒரு நாளும்....என்று ஒரு பாடல் அதில் மகாபாரதக் கதையான அபிமன்யு கதையை கண்ணதாசன் சூழலுக்காகப் பயன் படுத்தி எழுதினாராம். எம்.ஜி.ஆர் அதை நீக்கச் சொன்னாராம். காலில் விழாத குறையாக கண்ணதாசன் சமாதானப் படுத்த, எப்படியும் தொலை என்று எழுந்து போனாராம். அந்தப் பாடல் பட்டி தொட்டியெல்லாம் அப்படிப் பிரபலமாயிற்று.அதற்காகவே அந்தப் படத்திற்கு ரசிகர்கள் உண்டு.
மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு
வாழ்வது நமது சமுதாயம்,
மரண பயங்கரம் சூழ்ந்து வந்தாலும்
மாறி விடாதே ஒரு நாளும்
ஆராரோ அன்பே ஆராரோ

போர் என்று கேட்டவுடன் விஜயனின் தேவி
புவியாளப் பிறந்த மகன்தனை அழைத்தாள்
சீருலவும் முகம் பார்த்தாள் சிந்தை கொண்டாள்
சித்தரித்தாள் தலை முடித்தாள் திலகமிட்டாள்

வில்லொடு கணையும் ஏந்தி நடந்தான்
விஜய குமாரன் அபிமன்யு
வீரனின் பிரிவில் சுபத்திரை கொண்ட
வேதனை சொல்லும் தரமன்று

கௌரவர்கள் படை கண்டான் விஜயன் மைந்தன்
கைக்கணைக்கு விருந்தென்று மனம் மகிழ்ந்தான்
தாயிட்ட திலகமும் தந்தையின் வீரமும்
தன் துனையாய்க் கொண்ட மகன் சிரித்து நின்றான்

கடலலை போலே சேனைகள் கண்டும்
கலங்கிடவில்லை அபிமன்யு
மடிவதென்றாலும்  மானம் காக்க
மடிவதில்தானே உயர்வென்றான்...

நாற்படைகள் சூழ்ந்திருந்தும் நடுவில் அந்த
நாயகனாம் துரோணர் தம்மைக் காணவில்லை....
துரோணர் எங்கே துரோணர் எங்கே என்றான்
தோளிடையே வில்லொடும் துரோணர் வந்தார்....
.
     இன்னும் நிறைய இருக்கிறது. இதையெல்லாம் வேலை மெனக்கெட்டு ஒரு காலத்தில் விவாதித்துக் கொண்டிருப்போம்.. அப்பொழுது இதை விடச் சிறந்த பொழுது போக்கு ஒன்றுமே கிடையாது.’ Gossip and worry are the outcome of restless mind” என்று ஜே.கிருஷ்ண மூர்த்தி சொல்வது போல அரட்டைக் கச்சேரிக்கு சினிமா ஒரு பெரிய தீனி. இன்று அரட்டைக் கச்சேரியின் இடத்தை வீட்டுக்குள் தொலைக் காட்சி சீரியலும், வெளியே டாஸ்மாக்கும் எடுத்துக் கொண்டு விட்டது.
Visitors