சுஜாதா விருதுகள்
உயிர்மை பதிப்பகமும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து சுஜாதா பெயரில் ஆறு விருதுகளை கடந்த பிப்ரவரி 27 அவரது இரண்டாவது நினைவு தினத்தன்று அறிவித்தன. சுஜாதா பெயரில் சிறுகதை, கவிதை, நாவல், உரைநடை, சிற்றிதழ்,இணையம் ஆகிய ஆறு பிரிவுகளில் அறிவிக்கப்பட்ட இந்த விருதுகளுக்கு நடுவர்களாக முறையே இந்திராபார்த்தசாரதி, ஞானக்கூத்தன், வாஸந்தி,பிரபஞ்சன், திலீப்குமார், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் செயல்பட இணக்கம் தெரிவித்தனர். ஒவ்வொரு பிரிவிலும் மார்ச் 31ஆம் தேதிவரை கிடைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் நடுவர்களுக்கு அனுப்பப்பட்டன. நடுவர்கள் அவற்றை ஆராய்ந்து கீழ்க்கண்ட இறுதி முடிவை அறிவித்தனர்.
சுஜாதா உரைநடை விருது: கலாப்ரியா
நூல்: நினைவின் தாழ்வாரங்கள்
தேர்வு: பிரபஞ்சன்
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
தமிழின் முக்கிய நவீன கவிகளில் ஒருவரான கலாப்ரியாவின் தன் வரலாறு போன்ற கட்டுரைகள் அடங்கிய ‘நினைவின் தாழ்வாரங்கள்’ எனும் பெயரிய புத்தகம், அண்மைக் காலக் கட்டுரை நூல்களில் சிறந்ததாகத் தயக்கமின்றிச் சொல்லும் விதத்தில் அமைந்திருக்கிறது.
கவிஞர் கலாப்ரியா, தன் முதல் வசன முயற்சியாகிய இத் தொகுப்பில் பாரிய வெற்றியை அடைந்திருக்கிறார். ஒரு அந்தரங்கமான நண்பனுடன் அல்லது சினேகிதியிடம் சௌகரியமான இடத்தில் இருந்துகொண்டு, பதற்றம் இல்லாத மனநிலையில் பகிர்ந்துகொண்ட உரையாடல் தொனியில் கட்டுரைகள் அமைந்து அவைகளின் மெய்ம்மைத் தன்மையில் ஒளிர்ந்து, தம் பூச்சற்ற வெளிப்பாட்டில் வாசகர்களைப் பேரன்போடு தழுவிக் கொள்கின்றன. அன்பின் ஈரம் படரும் தமிழ் வசனம் கலாப்ரியாவுடையது.
கலாப்ரியா என்கிற கவி ஆளுமையை உருவாக்கும் சின்னச் சின்ன நிகழ்ச்சிகள் ஒரு ஆவணம் போல இந்த நூலில் பதிவாகி இருக்கிறது. அண்ணா காலமான அறுபதுகளின் தொடக்கம் முதலாகத் தமிழ் அரசியல், சினிமா என்று விரியும் தமிழ்ச் சமூகத்தின் ஜீவனுள்ள மனித வரலாறாக ‘நினைவின் தாழ்வாரங்கள்’இருக்கிறது. தமிழ் வாழ்க்கையை, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் ஒளிப்படமாக, தமிழ்ப் பொதுவாழ்வில் ஒரு உள்ளார்ந்த மாறுதல் நடந்தேறிய ஒரு காலத்தின் மனசாட்சியுடன் கூடிய ஆவணமாகவும் இந்தப் புத்தகம் சிறப்பு பெறுகிறது.
விருதுகள் வழங்கும் விழா 3.05.2010 அன்று சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் மாலை 6.00 மணிக்கு நடைபெறும்.
சுஜாதா சிறுகதை விருது: ஜெயந்தன்
நூல்: நிராயுதபாணியின் ஆயுதங்கள்
தேர்வு: இந்திரா பார்த்தசாரதி
வெளியீடு: வம்சி
சுஜாதா கவிதை விருது: ரமேஷ் பிரேதன்
நூல்: காந்தியை கொன்றது தவறுதான்
தேர்வு: ஞானக்கூத்தன்
வெளியீடு: காலச்சுவடு
சுஜாதா நாவல் விருது : ம.காமுத்துரை
நூல்: மில்
தேர்வு: வாஸந்தி
வெளியீடு: உதயகண்ணன்
சுஜாதா சிற்றிதழ் விருது: Dr.G.சிவராமன்
சிற்றிதழ்: பூவுலகு
தேர்வு: திலீப்குமார்
சுஜாதா இணைய விருது :லேகா
வலைப்பதிவு: யாழிசை www.yalisai.blogspot.com
தேர்வு : எஸ்.ராமகிருஷ்ணன்