சோப்புக்காய் மரம் கலாப்ரியா
(சபின்தஸ் எமார்ஜினேட்டஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட சப்பின்டேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த மரத்தின் உலர்ந்த பழங்கள் பூந்திக்கொட்டை என்றும் பூவந்திக்கொட்டை என்றும், சோப்புக்காய் என்றும் அழைக்கப்படுகின்றன. இதன் பழத்தோலில் உள்ள சப்போனின்கள், சப்பின்டோசைடுகள், ஹெடராஜெனின்கள் மற்றும் டெர்பினாய்டுகள் பூஞ்சை கிருமிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி,தோலுக்கு பிரகாசத்தையும் மென்மையும் உண்டாக்குகின்றன. )
அன்றுதான் சம்பளம் வாங்கியிருந்தேன். எங்காவது நல்ல ஓட்டலுக்குச்சென்று வழக்கத்திற்கு மாறாகச் சாப்பிடலாம் என்று தோன்றியது.கோயிலுக்குச் சென்றிருந்ததால் நேரமும் வேறு ஆகியிருந்தது. திங்கள்க்கிழமை தங்கப்பாவாடையில் அங்கயற்கண்ணியின் தருமதரிசனம் பார்ப்பதென்பது ஒரு சமீப வாடிக்கை. கோயிலுக்குப் போனால் அதன் எல்லா மூலை முடுக்கிற்கும் போய் விடுவேன். அது ஒரு கெட்ட பழக்கம்.அதன் பின்னணி பயமாபக்தியா தெரியவில்லை.மீனாட்சி கோயிலில் கடம்பவன முருகன் சன்னதி ஒன்று உண்டு. அதற்குள் எல்லாம் புகுந்து புறப்பட்டு வந்து நல்ல கால்வலி வேறு. சிம்மக்கல் கோனார் கடை வரை போகலாம்தான். பசியும் களைப்புமாய் இருந்தது. துணையென்று யாரும் இல்லை.
டெல்லிவாலா சுவீட்டில் போய் சப்பாத்தி சாப்பிடலாம் என்று மேலக் கோபுர வாசல் வழியே வந்து கொண்டிருந்தேன்.மதுரை பெர்மனட் ஃபண்ட் ஆபீஸில் ஒன்பது மணிக்கு பாராக்காரர் வாசலில் தொங்கவிட்டிருக்கும் மணியை அடித்துக் கொண்டிருந்தார்.அதுதான் அங்கே “TELL TALE CLOCK” போலும் என்று நினைத்துக் கொள்வேன். நான் தற்காலிக வேலை பார்த்த வங்கியில் “கதை சொல்லும் கடிகாரம்” ஒன்று உண்டு. ( எல்லா வங்கியிலும் உண்டு) தினமும் மாலையில் கடிகாரத்தின் கீழ்ப் புறத்தில் இருக்கும் ஒரு சிறிய அறையைத் திறந்து அதில் கடிகார டயல் போல அச்சிட்ட ஒரு வட்டத் தாளை பொருத்தி வைப்பார்கள். கடிகாரம் ஓட ஓட அந்தத் தாளும் சுற்றும்.தாளைப் பொருத்திவிட்டு அந்தப் பகுதியைப் பூட்டி விடலாம். பாராக்காரர், அதாவது வாட்ச் மேன், அரை மணிக்கு ஒரு முறை அதில் இருக்கும் ஒரு பொத்தானை அமுக்க வேண்டும் அது உள்ளே இருக்கும் தாளில் துளையிடும். காலையில் வங்கியைத் திறந்ததும் முதல் வேலையாக கடிகாரத்தைத் திறந்து அந்தத் தாளை எடுத்துப் பார்த்தால். சரியாக ஒவ்வொரு அரை மணிக்கும் துளையிட்டிருக்க வேண்டும். சமயத்தில் ஐந்து பத்து நிமிடம் கழித்து பொத்தானைஅமுக்கி இருந்தாலோ, அல்லது அமுக்க மறந்து தூங்கி இருந்தாலோ ’கதை’தெரிந்து விடும்.
மணியை அடித்து விட்டு நடையில் அமர்ந்திருந்த மூன்று பேரை எழுப்பி, விசாரிக்கும் சீருடைத்தொனியில் ‘யார், என்ன,’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்.அந்த இடம் சற்று இருளாகவே இருக்கும்.மூவரும் பதிலே பேசாமல் நகர்ந்து சற்றே வெளிச்சத்திற்கு வந்தார்கள்.ஒருவனின் நெற்றியில் சந்தனம் பூசி குங்குமம் வைத்திருந்தான். இது நம்ம, சாராய யாவாரி ‘வயித்துவலி’ மாதிரியில்லா இருக்கு என்று பார்த்தவுடன் யோசனை ஓடிற்று. அவனுக்குப் பின்னே வந்தவனின் நடையே சொல்லிவிட்டது, அது நாகு என்று. தொடையிடுக்கில் ’அரையாப்பு’ப் புண் வந்தவன் மாதிரி நடப்பான். இன்னொருவனைத் தெரியவில்லை. இவர்கள் எங்கே, இங்கே மதுரையில்.. என்று நினைத்தேன். நாகு பார்த்து விட்டான்.கேட்டேன்,என்ன செய்கிறாய் இப்போது.. என்று. மற்ற இருவரும் சிரித்தார்கள். ’வயித்து வலி’-யின் பேர் கணேசன் என்று நினைவு. அவன் தெருவிற்கும் எங்கள் தெருவிற்கும் இடையில்தான் வாய்க்கால் ஒன்று ஓடுகிறது. கோடை தவிர மற்ற நேரங்களில் அதில் தண்ணீர் நன்றாக ஓடும்.கோடையில் சாக்கடையாகி விடும்.அப்போது அந்தத் தெருவில் உள்ளவர்கள் சிலர் சாக்கடை நீர் ஓடாத திட்டுக்களில் கால் வைத்து எங்கள் தெரு வழியாக வந்து பஜாருக்குப் போவார்கள். ரொம்பச் சிலர்தான் அப்படிப் போவார்கள். டிராமா சீன் செட்டிங்க்ஸ், மேக் அப் போடுகிற கோடீஸ்வர முதலியார் பையன் அப்படிப் போகிறவர்களில் ஒருவன்.
எனக்குத் தெரிந்து டிராமா செட்டிங்க்ஸ், அரங்கப் பொருட்கள், மேக் அப் சாமான்கள் எல்லாம் வைத்திருந்தவர்களில் முதலியார் ஒருவர். ஸ்கூல் டிராமாவுக்கெல்லாம் அவர்தான் வருவார். நாங்கள் போட்ட “ கவிஞனின் வாழ்வு” டிராமாவுக்கு அவர் மகன்தான் மேக் அப் போட்டார்.இன்னொருமேகப் போடுபவர், மார்க்கெட் அருகே ’மகிழ்ச்சி மன்றம்’ புக் ஸ்டால் வைத்திருந்த புகாரி.
ஒரு நாள் முன்னிரவு தெருவில் திண்ணைப் பேச்சு மும்முரமாய் நடந்து கொண்டிருந்தபோது, வயித்து வலி, சாக்கடை மணம் வீச வாய்க்கால் பகுதியிலிருந்து, ஒரு முடுக்கு வழியே வந்தான். தெருப்பம்பு அருகே நீளமான திண்ணை. அதில் உட்கார்ந்துதான் பேசிக் கொண்டிருப்போம்.அன்றைக்கு யார் வீட்டுக்கோ கிராமத்திலிருந்து நெல் கொண்டு வந்த வண்டி அருகே நின்று கொண்டிருந்தது.டவுணைச் சுற்றியுள்ள முறப்பநாடு, செவல், பாலாமடை கிராமங்களில் இருந்து நெல் வரும்.அவர்கள் அந்தி சாயவோ, முன்னிரவிலோ கொண்டு வருவார்கள். இரட்டை மாட்டு வண்டியில் 13 மூடை வரும்.அதற்கு மேல், ’சால மிகுத்துப் பெய்ய முடியாது’. வண்டி அச்சிறுந்துவிடும்.அதை வீடுகளில் இறக்கிவிட்டு, வண்டிக்காரர்கள் செகண்ட் ஷோ பார்க்கப் போய் விடுவார்கள்.எப்படியும் – அது கார் அறுவடையாயிருந்தாலும் சரி (பிப்ரவரி மார்ச்), பிசான அறுவடையாக இருந்தாலும் சரி(ஆகஸ்ட் செப்டம்பர். அது வடக்கே குறுவை, தாளடி அறுவடைக்காலங்கள் )- தேவர் பிலிம்ஸ் தயாரித்த எம்.ஜி.ஆர் படம் ஒன்று ஓடும்.திரைப்படம் பார்த்துவிட்டு, பக்கத்தில் குளப்பிறைத் தெருவோ மாடத்தெருவோ போய் எவளிடமாவது போய் ’தரைப்படம்’ பார்த்து விட்டு பொழுது விடிய ஊருக்குக் கிளம்பி விடுவார்கள்.
அன்று அப்படிப் போகிற முறப்பநாட்டுப் பண்ணையாள் ஒருவர் தன் தரைப் பட அனுபவங்கள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்..”தூங்கீட்டுருக்கவளைக் கூப்பிட்டு நொட்ட வந்துட்டான். இங்க கந்து பிதுங்கித் தொங்குது..... நீ பதினோராவது ஆளு இன்னக்கி... சரி வந்து தொலை ”என்று சலித்துத்தான் படுத்தாளாம். தொழிலுக்கு இடையில் இவர் மணி என்ன இருக்கும் என்று கேட்க, கடுமையான கோபத்துடன், “ உள்ள ஒன்னு, வெளிய ரெண்டு...”என்று என் ‘வெதரை’ப் புடிச்சு அமுக்கினா பாக்கணும்.. யாத்தா யம்மான்னு ஒடி வந்துட்டேன். தேவடியாவுள்ளைக்கி மூனு ரூவா தெண்டம்...என்று சொல்லிக் கொண்டிருந்தார். நாங்களெல்லாம் விழுந்து விழுந்து சிரிச்சுக்கிட்டு இருக்கும் போதுதான் கணேசன் சாககடை மணக்க வந்தான்.வந்தவன் சட்டையைக் கழட்டி வண்டியில் போட்டு விட்டு. தெருப்பம்பில் கை கால் எல்லாம் கழுவினான். ஓரமாய் மூச்சுக் காட்டாமல் உட்கார்ந்திருந்த நாகுதான் அடி பம்ப்பில் தண்ணீர் அடித்தான். அவன் இருப்பதையே நான் கவனிக்கவில்லை. சைக்கிளில் இரண்டு மஃப்டி போலீஸ் வருவது தெரிந்தது. கணேசன் படக்கென்று பக்கத்திலிருந்த ‘கட்டளை ஆபீஸ்’இருட்டுக்குள் ஏறி விழுந்து மறைந்து கொண்டான்.போலீஸ் இருவருக்கும் எங்களையெல்லாம் நன்றாகத் தெரியும்.
”தம்பி வையித்துவலி இந்தப் பக்கமா வந்தானா, ரெண்டு கார் டியூப் சாராயத்தை வாய்க்காலிலெ அறுத்து விட்டுட்டு ஓடியாந்துட்டான், வாய்க்காலே நாறுது, வேற வழி கிடையாதே என்று சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பண்ணையாளை இது யார் என்றார்கள். அதற்குள் அவன் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து நின்றான்.நாங்கள் சொன்னோம். அவனை, “வாயை ஊதுலெ” என்று ஊதச் சொன்னார்கள். மெதுவாக ஊதினான். நாகுவைப் பார்த்ததும் நீ எங்க இங்க இருக்கே, ஏறு வண்டியில என்று சைக்கிளை அவனிடம் தந்தார் ஓருவர். எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது என்றான் நாகு. பொய்தான் சொன்னான். அந்த மயிரு வேறயா, உருட்டித் தொலை என்று நெட்டித் தள்ளியபடி நகர்ந்தார். அதற்குள் இன்னொரு போலீஸ் கட்டளை ஆஃபீஸின் இருளுக்குள் டார்ச். அடித்துப் பார்த்தார். ஆள் மாட்டிக் கிடுவான் என்று நினைத்தோம்.` கட்டளை ஆபீஸ் காம்பவுண்ட் அமைதியாய் இருந்தது.நடுவே ‘சோப்புக்காய் மரம்’மட்டும் லேசாக ஆடிக் கொண்டிருந்தது.
சோப்புக்காய் மரம், என்கிற நெக்கிட்டங்க்காய் மரம் என்கிற பூந்திக்கொட்டை மரம், ஒரு அபூர்வமான மரம். கட்டளை ஆபீஸ் நெல்லையப்பர் மற்றும் அவரைச் சேர்ந்த கோயில்களுக்கு எழுதி வைக்கப்பட்ட ’கட்டளைகளை’ நிர்வாகம் செய்யும் அலுவலகம்.பல நாட்கள் அது பூட்டியே கிடக்கும். பகலில் பூராவும் எங்கள் எல்லா விளையாட்டுக்குமான மைதானம் அலுவலகத்தின் முன் விரிந்து கிடக்கும்.மைதானத்தின் நடுவில்தான் சோப்புக்கா மரம். எங்கள் வீட்டு மச்சின் கடைசிப் பத்தியில் இருந்து பார்த்தால் ஆபீஸும் மரமும் மைதானமும் நன்றாகத் தெரியும். மரம் கிளாவர் வடிவத்தில் இருக்கும். சித்திரையில் புதுத்தளிர் பூக்கும். வேம்பு போல. கோடை விடுமுறைக்கு ஸ்கூல் லீவு விடும்போது அதில் காய்கள் காய்க்கத் தொடங்கும். உருண்டை உருண்டையாய் மூன்று கல் மூக்குத்தி போல மூன்று மூன்றாகக் காய்க்கும்.
அதன் தொலி, உள்ளிருக்கும் விதை, எதையும் தண்ணீருடன் சேர்த்துத் தேய்த்தால் நுரை பொங்கிக் கொண்டு வரும். எங்கள் தலைமுறையில் அதனால், அதற்கு சோப்புக் காய் என்று பெயர். நகையில் அழுக்கெடுக்க ரொம்ப உபயோகமாயிருக்கும். நகைத் தொழிலாளிகள் அதை விரும்பி வாங்குவார்கள்.அவர்கள் பூந்திக்கொட்டை என்பார்கள், பூந்தி மாதிரி இருப்பதால். கீழேவிழும் காய்களைப் பொறுக்கி அல்லது கூட்டணி சேர்த்துக் கொண்டு ஏறி உலுக்கி, பொறுக்கி அதை விற்போம்.ஒரு பக்கா நாலணாவுக்கு அதிகமாக யாரும் விற்றதில்லை. அது போதுமே 26 பைசா தரை டிக்கெட்டில் சினிமா பார்க்க.
மரம் பெரிய உயரமில்லை. அடிமரம் அதிகம் போனால் பத்தடி இருக்கும். அதில் ஏறுவதுதான் சற்றுச் சிரமம். சில டாணா(’ட’ வடிவ) ஆணிகள் ஒன்றிரண்டை அடித்து வைத்திருப்போம். அதை மிதித்துக் கொண்டு ஏற வசதியாய் இருக்கும். அதில் தெற்காகப் பிரிகிற ஒரு பெரிய கொப்பில் இரண்டு வளைவான கிளைகள் இருக்கும்.அதற்கு ராஜாராணிக் கொப்பு என்று பெயர்.அதில் உட்கார்ந்து ‘சொகமாய்’ கதை பேசுவார்கள். எனக்கு மரம் ஏற வராது.ஒரே ஒரு முறை கோபாலோ யாரோ என் இடுப்பைப் பிடித்து தாங்கிக் கொண்டார்கள். நான் தட்டுத்தடுமாறி ஏற முயற்சித்தேன். கிட்டத்தட்ட அடிமரத்தை தாண்டி விட்டேன். இன்னும் ஒரு எட்டு எட்டி கொப்பைப் பிடித்து விட்டால் ஏறிவிடலாம்... கோபால், “ப்போடா பனை ஏர்றவன் குண்டிய எவ்வளவு நேரம் தாங்க முடியும்ங்கிறது சரியாத்தானிருக்கு” என்று சொல்லி விட்டு விட்டான். அப்போது டாணா ஆணிகள் அறையப்படவில்லை.
இது நடந்து கொஞ்ச நாளிருக்கும் ஒரு மத்தியானம். தெருவில் யாருமே இல்லை.வழக்கமாய் மத்தியான வெயிலில் சோம்பேறி மடத்து’எனலில்’ உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்களோ என்று போய்ப் பார்த்தேன். இல்லை.நாகுதான் உட்கார்ந்து முழங்கையில் இருந்த சிரங்கைப் பிதுக்கி சலத்தை வெளியேற்றிக் கொண்டிருந்தான். அவன் வீடு அதன் பக்கத்தில்தான். என்னை விட ஒரு வயசோ என்னவோ சின்னவன்.அவனுக்கும் எனக்கும் வந்த சண்டையில் அவனைக் கருப்பட்டி பிடி போட்டு கீழே விழத்தட்டி விட்டேன்.ஒரு கல்லை எடுத்துக் கொண்டு துரத்தினான்.யாரோ விலக்கி விட்டார்கள். அநேகமாய் அவனது அண்ணன் என்று நினைவு.அதிலிருந்து அவனிடம் பேசுவதில்லை.மறுபடி கட்டளை ஆபீஸுக்கே வந்தேன்.சோப்புக்காய் மரத்தடி நிழல் கூப்பிட்டது.அதில் நின்றபடி என் வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தேன்.இந்த மரத்தடியில்தானே ஈயம் பூசுகிறவன் துருத்திக்கு குழி தோண்டுவான். இதில்த்தானே குட்டக்கரைக் கோனார் பசுவின் கருப்பைக்குள் அதன் வாலையே மடித்துச் செலுத்தி அதிகப் பால் கறப்பதற்கு ஏதோ வித்தை செய்வார். வாலோடு அவரது முழங்கை வரை பின் துவாரத்திற்குள் போகுமே....என்றெல்லாம் தோன்றி நளுக்கியது. திடீரென மரத்தில் ஏறிப்பார்த்தாலென்ன என்று தோன்றியது.
தெருவிலிருந்தோ வீட்டிலிருந்தோ யாரும் பார்த்தால் தெரியாத ஒரு வசத்தில் ஏறத் தொடங்கினேன்.அடி மரத்தில் முளை விட்டிருந்த ஒரு கனத்த தளிர், வசதியான உயரத்தில் இருந்தது. அதை மிதித்துக் கொண்டு ஏறினேன். எப்படியோ அடிமரத்தைக் கடந்து கிளையைப் பிடித்து ஏறி விட்டேன்.கால் மிதித்திருந்த தளிர் நசுங்கிச் சிதைந்தது.வாழ்க்கையின் ஒரு லட்சியமும் கனவுமான ராஜாராணிக் கொப்பிலும் உட்கார்ந்து விட்டேன். அங்கிருந்து வீட்டைப் பார்ப்பதும் தெருவைப் பார்ப்பதும் ஏதோ வானத்தையே அள்ளித் தந்தது போலிருந்தது.”கொஞ்சிக் கொஞ்சிப் வார்பேசி மதி மயக்கும்...” என்று விசிலில் பாடினேன்...யாரும் பார்க்கும் முன் இன்னொரு தடவை ஏறிப்பார்க்கலாமே என்று தோன்றியது.மெதுவாக மனமில்லாமல் ராஜாராணிக் கொப்பை விட்டு இறங்கத் தொடங்கினேன். ஏறுவதை விட இறங்குவதுதான் கஷ்டம் என்று ‘மூத்தோர் சொன்ன வார்த்தை’பயமுறுத்தியது. கிளையிலிருந்து அடிமரத்துக்கு கால் எட்ட மறுத்தது.மிதித்து ஏறிய முளை இல்லாததன் கஷ்டம் பகீர் என்று ஒரு பயப்பந்தை வயிற்றுக்குள் உருவாக்கியது.கிளையை இரண்டு கையாலும் பிடித்துக் கொண்டு மற்றவர்கள் தொங்கிக் குதித்து விடுவார்கள். நான் அப்படி முயற்சிக்கையில்முகம் கிளையில் உரசியது. கால் ஐந்து ஆறு அடி உயரத்திலிருந்தது.கைப்பிடி வழுகிக் கொண்டிருந்தது. சரி இன்னக்கி காலோ முட்டோ உடையப் போகுது..என்று நினைத்தேன். “எம்மே....’’என்று சத்தம் கூடப் போட்டேனோ என்னவோ... யாரோ என் கால் எட்டும் உயரத்தில் கையை வைத்து இதை மிதிச்சுக்கிட்டு இறங்குப்பா என்றார்கள்.அப்படியே செய்தேன். அதற்கும் திண்டாட்டமாய்த்தான் இருந்தது. கை உரசி காந்தல் எடுத்தது. கீழே தரையில் கால் பாவியதும்தான் பார்த்தேன்.கை கொடுத்து உதவியது நாகுதான் என்று. நன்றியோ தேங்க்ஸோ சொல்ல வாய் வரவில்லை.அவன் மறுபடி சிரங்கைப் பிசுக்கியபடி ஒன்றும் சொல்லாமல் போய்விட்டான்.அப்புறம் டாணா ஆணி அறைந்த பிறகு ஓரிரு முறை ஏறி இருக்கிறேன்.
நாகுவின் வீடும் கடையும் சிதைந்து கொண்டிருந்தது. ஒரே ஒரு அண்ணன் மட்டும் பேட்டை ஐ.டியில் டர்னராக வேலை பார்த்தார்.நாகு ஆறோ ஏழோ படிக்கையில் அவனை வீட்டை விட்டு விரட்டி விட்டார் அவனது அப்பா.அன்றுதான் அவனுக்கு நேர் மூத்தவளான அக்காவையும் விறகுக் கட்டையால் அடி பின்னி விட்டாரென்று ’கிசுகிசு’ பேசிக் கொண்டிருந்தார்கள்.அப்பா இல்லாத நேரம் மட்டும் சின்ன அண்ணனுடன் கடையில் இருப்பான். லாலா சத்திர முக்கில் நல்ல நீளமான கடை.பின் வழியாக வண்டிப்பேட்டைக்குள் வந்து விடலாம். அங்கேயே இரண்டு வண்டிப்பேட்டைகள் உண்டு. கிராமத்தில் இருந்து கமிஷன் கடைக்கு சரக்கு கொண்டு வரும் வண்டிகளை அவிழ்த்துப் போட, மாடு கட்ட, தண்ணீர் காட்ட எல்லாம் வசதிகள் உண்டு. இப்போது அது ஒரு ஜவுளிக்கடையின் கார் பார்க்கிங் என்று சொன்னார்கள்.இனிமேல் கார் பார்க் செய்ய நெல்லையப்பர் கோயில்தான் பாக்கி. அதையும் கூட யாராவது எடுத்துக் கொண்டு அவரை கம்பாநதி மண்டபத்துக்குப் போகச் சொல்லிவிடலாம்.
கடையில் பலசரக்கெல்லாம் ஒன்றும் கிடையாது. ‘சில சரக்கு’கள்தான் இருக்கும். யாராவது எக்குத்தப்பாய் பழகிய ஆட்கள் வந்தால், அவரிடம் சின்ன அண்ணன் பேச்சுக் கொடுப்பான். நாகு கோடவுனிலிருந்து எடுத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு பின் வழியாக வெளியேறி வேறு கடையில் வாங்கி வருவான்.சலுகை விலையில் சாமான்கள் வாங்க மேல மாடத்தெருவில் நிறையக் கடைகள் உண்டு.கடையை வேறு யாருக்காவது விட்டுக்கொடுத்தால் நல்ல ’நிந்தம்’(காலி பண்ணத் தரும் பகடிப்பணம்) கிடைக்கும்.அதற்காகவே மட்டும் கடையைக் காலி செய்யாமல் வைத்திருக்கிறார்கள். கடை, அண்ணன்காரன் – ஆணோ, பெண்ணோ- செய்யும் சில்மிஷங்களுக்கும் பயன் பட்டது.
கடையைக் காலி செய்த சில நாட்களுக்கெல்லாம் பின் நாகு எங்கே போனானென்றே தெரியவில்லை.மறுமுறை பார்த்த போது காலை அகட்டிக் கொண்டும் , லேசாகக் கெந்திக் கொண்டும் நடந்தான்.சின்னச்சின்னக் களவு செய்து போலீஸில் மாட்டிக் கொண்டதால் காலில் ஒரு நரம்பை உருவி விட்டார்கள் என்று கேள்வி.அவன் வயித்து வலி கணேசனுடன் சேர்ந்து விட்டான். கணேசன் அடிவயிற்றில் எப்பொழுதும் கால் டியூப் சாராயம் இருக்கும். கேட்டால் வயிறு சரியில்லை, ’உப்புசம்’மாதிரி இருக்கு வலிக்கி என்பான். நாகு தனியாய் சோப்புக்காய் மரத்தடியில் உட்கார்ந்து பீடி குடித்துக் கொண்டிருப்பான்.இரவில்க் கூட மரத்தடி இருளில் கங்கு கனிந்து தெரிந்தால் அது நாகுவாய்த்தான் இருக்கும்.
டெல்லிவாலா அருகே வரை பட்டும் படாமலும் பேசிக் கொண்டு வந்தான் நாகு. கணேசன் பேசவில்லை. நானும் அவனிடம் பேசவில்லை.இப்போது அரசே கடைகளைத் திறந்து விட்டு விட்டதால் சாராய வியாபாரம் செய்ய வாய்ப்பில்லை போலும். அவன் முகத்தில் ஒரு வாட்டம் தெரிந்தது. மூன்றாம் ஆள் மட்டும் எங்கே தங்கி இருக்கீங்க என்று திரும்பத் திரும்ப கேட்டபடி வந்தான்.நாங்க நைட்ல படம் பாத்துட்டு ரூமுக்கு வரலாமா என்று கேட்டான்.நாகு சொல்லாதே என்ற மாதிரி தலையை ஆட்டி கையால் சைகையும் காட்டினான். மரத்திலிருந்து இறங்க உதவிய அதே கை.ஒரு டீயாவது வாங்கித் தரலாம்போலிருந்தது.கேட்ட போது எதுவும் பேசாமல் நாகு தலையைக் கவிழ்த்தபடி வேகமாக நகர்ந்தான்.மற்ற இருவரும் வெவ்வேறு திசைகளில் விருட்டென்று மறைந்தார்கள்.டெல்லிவாலா கடையில் சப்பாத்தியெல்லாம் காலி.ஒரு டீயைக் குடித்துவிட்டு மெஸ்ஸுக்கு கிளம்பினேன் ”ச்சை” என்ற மனசுடன்.
மறுநாள்க் காலையில் மெஸ்ஸில் உட்கார இடமில்லை.அய்யர் இந்தாங்க பேப்பர் பாருங்க என்று மேஜைக்குள்ளிருந்து எடுத்து நீட்டினார். அது கோயிலில் பரிவட்டம் கட்டுகிற மாதிரியான மரியாதை.அதிசயித்தபடியே பேப்பரைத் திருப்பினேன்.”ஜவுளிக்கடைகளில் திருடும் கொள்ளைக் கும்பல் பிடிபட்டது” என்று பெரிதாய் செய்தி போட்டு மூன்று பேரின் படம் போட்டிருந்தது. மேலமாசி வீதியில் போலீஸார் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கிடமான மூவரைப் பிடித்து விசாரித்த போது...என்று செய்தி நீண்டது...படத்தில் நடுவில் நாகு தலையைக் குனிந்தபடி இருந்தான்.ஒரு பயம் வயிற்றுக்குள் பரவியது. சோப்புக்காய் மரத்திலிருந்து இறங்கத் தவித்த பயம் போலவே.