Monday, May 6, 2013

நன்றி காட்சிப்பிழை திரை, மே2013


உதவும் கனவுகள்

அண்ணனுக்குப் பெயர் தி.க. மீனாட்சி சுந்தரம். கூப்பிடுவது  சீனி அண்ணன். வீட்டிலேயே அவன்தான் ரொம்பவும் கறுப்பு. பக்கத்து வீட்டு ஆச்சி ஒருத்தி அடிக்கடிச் சொல்லுவாள், பாலைக் குடுத்து போட்டுட்டா, கரிக்கட்டை மாதிரி அவன் பாட்டு ஒரு தொந்தரவும் தராமல் பட்டாசலில் உருண்டுகிட்டு கிடப்பான், சின்னப் புள்ளையில..அவன் அழுது நான் பார்த்ததே இல்லை...நீயும் இருக்கியே புளு புளுத்தான்..,அம்மா பின்னாலாயே வந்துர வேண்டியது....வீட்டுக்கு, வீட்டுக்கு என்று ராகம் பாடி அவளை பேசவிடாம இழுத்துட்டுப் போயிர வேண்டியது...” என்று என் சிறு பருவத்தில் என்னை ஏசுவாள்.சீனி அண்ணன் எனக்கு நிறையச் சொல்லித் தந்தான்.அவனுக்கு உகந்த நேரம் மதியம் சாப்பாட்டுக்குப் பிறகான நேரம். இரண்டு மணியிலிருந்து மூன்று அல்லது மூன்றரை வரை பேசிக் கொண்டிருப்பான்.பக்கத்து வீட்டு சின்னத் தாத்தாவும் வந்து பேசிக் கொண்டிருப்பார்.தாத்தா பொது விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்பார்.அவர் ஹார்வி (மில்) துரையிடம் வேலை பார்த்தவர். அண்ணனும் அவருக்கு சமமாகவே பேசிக் கொண்டிருப்பான். சினிமா பற்றிப் பேச்சு வரும்போது அவர் “சரி என்னத்தையும் கொஞ்சம் கண்ணசருவோம்...” என்று சொல்லிக் கொண்டே எழுந்து போய் விடுவார்.
அதற்கப்புறம் நாங்கள் சினிமா பற்றிப் பேசிக் கொண்டிருப்போம்.நாங்கள் என்ன. அவன் பேசிக் கொண்டிருப்பான். நான் கேட்டுக் கொண்டிருப்பான். அல்லது சந்தேகம் போல் எதையாவது கேட்பேன்.” ஆமாண்ணேன்...மதுரை வீரன் படத்திற்கு அன்னக்கே ஒரு விளம்பரம் போட்ருந்தாங்களே... இன்னக்கி ஏன் மறுபடியும் அதே விளம்பரத்தைப் போட்டிருக்காங்க என்பேன்.” ஏலெ அது படம் வந்ததுக்குடா...இப்ப படத்தோட ‘ஒலிச்சித்திரம்’ வந்திருக்கு அதுக்காக வேற விளம்பரம் போட்ருக்காங்க...” என்பான். ஒலிச்சித்திரம்ன்னா...என்று இழுப்பேன்...கோபமோ எரிச்சலோ பட மாட்டான். பொறுமையாவே சொல்லுவான். படத்தோட கதை-வசனத்தைச் சுருக்கமாக்கி ரெக்கார்டில் போட்ருக்காங்க...” என்பான். முதல் சினிமாஸ்கோப் படமாக திருநெல்வேலிக்கு வந்த ஹெலன் ஆஃப் டிராய் பாப்புலர் டாக்கீஸில் வந்த போது திரையை எல்லாம் அகலமாக்கி இருந்தார்கள். அந்த வேலை நடப்பதற்காக இரண்டு நாள் கொட்டகைக்கு விடுமுறை விட்டிருந்தார்கள்.அவன் என்னை அழைத்துக் கொண்டு போய் அதைக் காண்பித்தான். என்னைச் சாக்கிட்டு அவனும் பார்க்க வந்தான் என்பதுதான் உண்மை.ஹெலன் ஆஃப் டிராய் படத்தின் ஃபிலிம்களை ஆப்பரேட்டர் நாராயண பிள்ளையிடம் கேட்டு வாங்கி வந்து என்னிடமும் நண்பர்களிடமும் கண்பித்தான்.உருவங்களின் உடல், முகமெல்லாம் ஒல்லியாய், ஒடுங்கி நீளமாய் இருந்தது.வழக்கமான, (35 மி.மி) படத்தில் அப்படி இருக்காது.என்னிடம் காண்பித்ததை விட அவனது நண்பர்களிடம் காண்பிப்பதே முக்கியம் என்பது அப்புறமாய்ப் புரிந்தது.
நாராயணபிள்ளை சகலமும் தெரிந்தவர்.எங்கள் வீட்டில் ஃபேன் ரிப்பேர், வயரிங் வேலைகள் எல்லாம் அவர்தான் பார்ப்பார்.அப்போதெல்லாம் மாட்னி காட்சிகள் அதிக நாள் ஓடாது.103 நாட்கள் ஓடிய நாடோடி மன்னன் வெறும் 28 நாள்தான் பகல் காட்சி ஓடியது . அதனால் நாராயணபிள்ளை பகலில் இந்த மாதிரி வேலைகளுக்குப் போய் வருவார்.அவர் ப்ரொஜக்டர் கேபினுக்குள் நுழைந்த மறு நிமிடமே வேஷ்டியை அவிழ்த்து வைத்து விட்டு வெறும் காக்கி டிராயர் மட்டும் போட்டுக் கொள்வார். கையில் ஒரு பனை ஓலை விசிறி.அதை வைத்து அடிக்கடி வீசிக் கொள்வார்.பெரும்பாலும் டிராயரை உசத்திக் கொண்டு தொடை இடுக்கில் வீசிக் கொள்வார். “ ஒரு முறை ஒருவர், என்னவே நாராயணா, டிராயருக்குள்ள ஒரு ஃபேன் போடச் சொல்லுவோமா முதலாளிய..” என்றார்.ஆமா அண்ணாச்சி வெந்து நீருது, கல்யாணக் காய்கறில்லா,வதங்காமக்  குளிச்சியா வச்சிருக்க வேண்டாமா..” என்றார். நான் பக்கத்தில் நின்றவன், பகீரெனச் சிரித்தேன். டொப்பென்று பொடதியில் ஒரு அடி விழுந்தது. அப்பா.இந்தக் காலத்துப் புள்ளைகள நம்பக் கூடாது என்றார் நராயணபிள்ளை.இன்னொரு அடி விழுந்தது முதுகில்.

 பாப்புலர் டாக்கீஸில் அப்பாவுக்கு எப்போதுமே, எங்கே செல்லவும் சலுகை உண்டு.ஆனால் அடிக்கடி போக விட மாட்டார்.என்னை அழைத்துக் கொண்டு போகிறேன் என்றால் தடை சொல்ல மாட்டார்.அதனாலேயே அண்ணன் சில படங்களுக்கு என்னை அழைத்துப் போவான்.அவனுடன் அவனது நண்பர்கள் ஓரிருவரும் வருவார்கள்.பரமசிவன், கணேசன் என்று அண்ணனுக்கு இணை பிரியாத சினேகிதர்கள்.மூவருடனும் ஒரு பொங்கல் அன்றைக்கு ‘மஞ்சள் மகிமைமுதல்க் காட்சிக்கு, கடுமையான கூட்டத்தோடு போனோம்.அப்பாவுடன் போனால் சோஃபா டிக்கெட்டுக்கு கூட்டிப் போவார். இலவசம் தான். அண்ணன் மூன்று பேருடன் போனதால் பெஞ்சுக்கு கூட்டிப் போனான். மறுநாள் அப்பா அவனைச் சத்தம் போட்டார். சினிமா போகிறதென்றால் சின்னப் பையனை பெஞ்சுக்கு எல்லாம் எப்படி கூட்டிப் போகலாம் என்று. இதில் என்ன இருக்கு என்று எனக்கு கஷ்டமாக இருந்தது.
       அண்ணன் வேறு தியேட்டர்களில் நடக்கும் படங்களுக்கு தரை டிக்கெட்டிற்குத்தான் அழைத்துப் போவான்.இது அப்பாவுக்கும் தெரியும் ஆனால் இதை ஒன்றும் சொல்ல மாட்டார். தெரிந்த தியேட்டரில் எதற்கு ‘கௌரவக் குறைச்சல்’ என்று நினைத்திருப்பார் போல்.அண்ணன் எல்லாப் படங்களுக்கும் இந்த ஆறு வயதுப் பையனை அழைத்துப் போகமாட்டான்.மாயாபஜார்,அலிபாபாவும் நாற்பது திருடர்களும், ஜெயகோபி, யார் பையன்,எங்கள் வீட்டு மகாலட்சுமி,பாகப்பிரிவினை, ஹரி தாஸ் (மறு வெளியீட்டின் போது) போன்ற படங்களுக்குத்தான் அழைத்துப் போவான். ஹரிதாஸ் இயக்கியவர்தான் மகாதேவி படம் எடுத்து இயக்கிய சுந்தர்ராவ் நட்கர்னி என்று சொல்லுவான்.அலிபாபா படத்திற்கு டைரக்‌ஷன் டி. ஆர்.சுந்தரம்.அவர் யாரென்று விளக்கிக் கொண்டிருந்தான், படம் ஆரம்பிக்கும் முன்னால். அவர்தான் ‘மாடர்ன் தியேட்டர்ஸ்நடத்துபவர்.ஸ்டுடியோ வைத்திருப்பவர்தான் முன்பெல்லாம் படத்தையும் இயக்குவார்கள். ஏ.வி.மெய்யப்பச் செட்டியார்தான் முதலில் ஏவியெம் படங்களை இயக்கிக் கொண்டிருந்தார். எஸ்.எஸ்.வாசன், தன் சில ஜெமினி படங்களை இயக்கினார்.நாகிரெட்டி அப்படி இயக்கவில்லை, அவரது சகோதரர் நாகிரெட்டி ஒரு இயக்குநர். கே.வி. ரெட்டி என்பவர்தான் விஜயா வாஹினியின் ஆரம்ப காலப் படங்களை இயக்கினார்.மிஸ்ஸியம்மா எல்.வி.பிரசாத் இயக்கி பெரும் வெற்றி கணட படம்.
ஏ.வி.எம் படங்களை அங்கே எடிட்டராக இருந்த எம்.வி ராமன் பின்னாளில் இயக்கினார்.பெரும்பாலும் நல்ல எடிட்டர்களாக இருந்தவர்கள் நல்ல டைரகடராகவும் இருந்தார்கள்.ப.நீலகண்டன்,பீம்சிங்,கே,சங்கர், அவரது தம்பி கே நாராயணன்.என்று பலர்.தேவர் பிலிம்ஸ் படங்களுக்கு சாண்டோ சின்னப்பா தேவர் தம்பியான எம்.ஏ.திருமுகம்தான் இயக்குநர்.அவர் ஒரு நல்ல எடிட்டராக இருந்தவர். தேவர் படங்களுக்கு எடிட்டிங்கே தேவையிருக்காது என்று பேசிக் கொள்வார்கள். திருமுகம் மனசிலேயே கட் பண்ணி படத்தை எடுத்து விடுவார், ஃபிலிம் ரோல் செலவே ஆகாது என்று சொல்வார்கள். சில இயக்குநர்கள் ரோலை சுட்டுத் தள்ளி விடுவார்கள்.நான் அவனில்லை(பழைய படம்) படத்தினால் நொந்து போயிருந்த ஜெமினி கணேசனிடம் கேட்டார்களாம் “ சார் உங்க படத்திற்கு,ரொம்ப ஃபிலிம் செலவாமே என்று. அவர் சொன்னாராம்,இல்லையே ஒரு லட்சம் அடிக்கு ஒரு அடி குறைவுதானே என்று. அப்படி பிலிம் விழுங்குபவர்களும் இருக்கிறார்கள்.ஆயிரத்தில் ஒருவன் (பழைய படம்) வெளிப்புறப் படப்பிடிப்பு கோவா அருகே கார்வார் என்ற இடத்தில் 41 நாட்கள் நடந்தது.அது பற்றிய சிறப்புச் செய்தி படங்கள் அடங்கிய கட்டுரைத் தொகுப்பு பேசும்படம் இதழில் வந்தது.அதன் தலைப்பு  41 நாட்களில் 45000 அடி.அன்றைய (1965) கணக்கிற்கு , அதாவது 18 ரீல் படத்திற்கு 15000 அல்லது 16000 அடிகள் அதிகம்.மூன்று படங்களை கோவாவில் மட்டுமே எடுத்து வந்திருந்தார் பந்துலு.இது போக ஸ்டுடியோவில் எடுத்தது தனிக் கணக்கு.
       பந்துலுவின் படமான முதல் தேதி படத்திற்கு ப.நீலகண்டன் இயக்கம். நீலகண்டன் படம் என்றாலே ஒரு கனவுப்பாடலில்லாம் இருக்காது.அது அவருக்கு ஒரு செண்டிமெண்ட் மாதிரி.பீம்சிங்கிற்கு எப்படியும் ஒரு குரூப் டான்ஸ் வேண்டும்.ஏ.வி.எம் படமென்றால் ஒரு மேடை நாடகமோ கதா காலட்சேபமோ வேண்டும். ப.நீலகண்டன் படத்திற்குப் போகும்போதே கனவுக் காட்சி இருக்கும் என்று எதிர் பார்த்துப் போவோம்.ஆனால் படம் பார்க்கிற உற்சாகத்தில் அதை மறந்து விடுவோம்.பாடல் முடியும் போது அது கனவாக முடிந்திருக்கும்.பார்த்தியாலே...என்று சொல்லிச் சிரித்துக் கொள்வோம்.கண்ணன் என் காதலன் படத்தில்,மின்மினியைக் கண்மணியாய்க் கொண்டவனை பாடல் படத்தில் திடீரென்று வரும்.” ஓஹோ, படத்தில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்குக் கல்யாணம் ஆகி விட்டதல்லவா,குழந்தை பிறந்து தாலாட்டுகிறார்கள் போலிருக்கிறது என்று நினைப்போம்.ஆனால் யாரும் எதிர்பாராமல் அது கனவு என்று காட்டி ரசிகர்களை திகைக்க வைப்பார்.முதல்தேதி’ படம் முழுவதுமே ஒரு கனவு என்று முடியும்.அதனாலேயே அது பெரும் வெற்றி பெற்றது.நீலகண்டனின் உதவியாளர் ஜெகனாதன் பின்னாளில் நல்ல படங்கள் தந்தார்.புட்டண்ணாகனகல், பாரதிராஜா எல்லோரும் அவரிடம் உதவியாளராக இருந்திருக்கிறார்கள்.மோகன் காந்தி ராமன் என்றொரு உதவியாளர் பின்னாளில் ரவிச்சந்திரனை வைத்து எம்.ஜி.ஆர் பாணியிலான படம் எடுத்தார் அது நன்றாக ஓடியது. அதாவது திருநெல்வேலியில் மூன்று வாரம் ஓடினால் அது ஹிட்.மோகன்காந்திராமன், தனியாக் 10 படங்களுக்கு மேல் எடுத்தாலும், ’’67-ல் என்.எஸ் கிருஷ்ணன்’’ படம் போல எம்.ஜி.ஆர் படங்களிலிருந்து காட்சிகளை வெட்டி ஒட்டி,எம்.ஜி.ஆர் முதல்வராக இருக்கும் போது ஒரு படம் எடுத்தார். அதை எம்.ஜி.ஆர் தடுத்து விட்டார். அது சமீபத்தில் வந்தது.
முதல் தேதி படத்திற்கு அப்புறம் பந்துலு (தங்கமலை ரகசியம்) தானே இயக்க ஆரம்பித்து விட்டார்.அவரது உதவியாளர் சிங்க முத்து,வசனகர்த்தாவும் உதவியாளருமான ஆர்.கே. ஷண்முகம் ஆகியோரும் படங்கள் இயக்கினார்கள்.சிங்க முத்து, தயாரிப்பாளர் பி.ஏ தாமஸ் உடனிணைந்து ‘தலைவன்படம் இயக்கினார். எம்.ஜி.ஆர் படங்களில் ஆக மோசமான படம் அது. ஆர்.கே ஷண்முகம் ஏகப்பட்ட பில்ட் அப் கொடுத்து “பாப்பாத்தி’ என்று படம் எடுத்தார்...பம்பாய் சிகப்பு விளக்கு பகுதியில் இருந்து மீட்டு வந்த ஒரு பெண்தான் கதாநாயகி என்றெல்லாம் ரீல் விட்டார். படம் பெட்டிக்குள் போய் விட்டது.பந்துலு போல தயாரிப்பாளரே இயக்குநர் ஆக இருக்கும் படங்கள் நிறைய உண்டு. ப்ரொடியூஸர்&டைரக்டர் என்று போட்டுக் கொண்டு எஸ்.எம் ஸ்ரீராமுலு நாயுடு நல்ல படங்கள் தந்தார்.கோவையில் பக்ஷிராஜா ஸ்டுடியோஸ் ஆரம்பித்து நடத்தியவர். இதே போல் போட்டுக் கொண்டு எம். நடேசன் நிறைய படங்களெடுத்தார்.நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் பேனரில் அன்பு, ஆசை,மன்னாதி மன்னன்,அன்புவழி என்றெல்லாம் எடுத்தார்.அவருக்கு கேமிரா பற்றிக் கூட ஒன்றும் தெரியாது என்பார்கள்.
       தயாரித்து இயக்கியவர்களில் டி.ஆர்.ராமண்ணா முக்கியமானவர்.பிரபல எழுத்தாளர் விந்தன் கதை வசனத்தில் எம்.ஜி.ஆர் சிவாஜி இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக் கிளியை முதலில் எடுத்தார். படம் கொஞ்சம் புரட்சிகரமாக இருந்ததால் ஓடவில்லை.ராமண்ணா புரட்சியை மூட்டை கட்டி வைத்துவிட்டு.
குலேபகாவலிஎன்ற மசாலா படத்தை எடுத்தார்.விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசையமைப்பில் பாடல்களும் சண்டைக் காட்சிகளும் மூன்று கதாநாயகிகளுமாக படம் ஜேஜே என்று ஓடியது.கூண்டுக்கிளி படத்திற்கு இசை கே.வி.மகாதேவன். அதற்கு அவர் போட்ட பாடல் “ மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ/இனிக்கும் இன்ப இரவே நீ வா வா ..என்ற பாடல்.இதை குலேபகாவலியில் இணைக்க மனப்பூர்வமாக ஒத்துக் கொண்டதாக விஸ்வநாதன் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.ராமண்ணாவின் உதவியாளர் ‘கனக‌ஷண்முகம் . இவருக்கு நீ படம் இயக்கும் வாய்ப்பை ராமண்ணா கொடுத்தார். இதேபோல் எல்.வி.பிரசாத் தனது உதவியாளரான ஸ்ரீகாந்த் என்பவருக்கு,இதயக் கமலம்இயக்கும் வாய்ப்பை அளித்தார். அது ‘ மேரா சாயா’ என்ற இந்திப் படத்தின் அப்பட்டமான தழுவல்தான் என்றாலும் சுவாரஸ்யமாக எடுத்திருந்தார்.
       உதவி இயக்குநர்களாக இருந்து இயக்குநர்களாகி வெற்றி பெற்றவர்கள் சிலரே. ஏ.வி.எம்.நிறுவனம் போலவே, சேலத்தில் ‘ரத்னா ஸ்டுடியோ
” என்று வைத்து நிறையப் படங்கள் எடுத்தவர்கள் எம்.ஏ.வி பிக்சர்ஸ்.எம்.ஏ.வேணு இதன் உரிமையாளர்.இவர் ம.பொ.சி யின் தமிழரசுக்கழக ஆதரவாளர்,மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்து வெளியேறியவர்.சம்பூர்ண ராமாயணம் உட்பட டவுன்பஸ்,முதலாளி பணம் பந்தியிலே, சிவகாமி, செங்கமலத்தீவு எனப் பல படங்கள் எடுத்தவர்.சம்பூர்ணராமாயணம் படத்தை இயக்கியவர் கே.சோமு, திரைக்கதை வசனம் எழுதிய ஏ.பி.நாகராஜன் இவரது உதவியாளராக இருந்தவர் . நாகராஜன்  தனியாகவும் இயக்கியிருக்கிறார்.சம்பூர்ண ராமாயணத்திற்குப் பின்,மக்களைப்பெற்ற மகராசி, தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலைஆகிய படங்களின் மூலம் தனிதன்மையை நிரூபித்தவர். இவர் இயக்கிய ‘பெண்ணரசி’ படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர் மறுத்து விடவே தானே கதாநாயகனாக நடித்தார்.அதற்கு முன்பும் நடித்திருக்கிறார். இவரது உதவியாளர் கே.கே..சம்பத் குமார் ஒன்றிரண்டு படங்கள் எடுத்து தோல்வியே கண்டார். ஏ.பி.என்னின் வாழ்க்கையுமே தோல்விதான். தமிழரசுக்கழக அனுதாபியான என் சீனி அண்ணன் எம்.ஏ.வி.பிக்சர்ஸ், ஏ.பி.நாகராஜன் பற்றி தண்ணீர் குடிக்காமல் பேசிக் கொண்டிருப்பான்.
பீம்சிங், ஏ.வி.எம்-கிருஷ்ணன் பஞ்சு பள்ளியிலிருந்து வந்தவர். மிகப் பிரபலமான வெற்றிப் படங்களின் டைரக்டர்.இவருடைய உதவியாளர்கள் திருமலை- மகாலிங்கம் இன்னொரு இரட்டையர்களாக நிறையப் படங்கள் இயக்கினார்கள்.கிருஷ்ணன் பஞ்சுவின் உதவியாளர் பட்டு சில படங்களில் சோபித்தார். பீம்சிங்கின் இன்னொரு உதவியாளர் ராமனாதன், பட்டத்து ராணிஎன்றொரு படம் இயக்கினார்.நீண்ட நாளைக்குப் பின் பானுமதி கதாநாயகியாக நடித்தார்.படம் நல்ல கதையமைப்பு இருந்த நினைவு. அவர் இந்திப் பட உலகிற்குப் போனதாகச் சொன்னார்கள். ஏ.வி.எம்மின் எடிட்டிங்கில் இருந்தவர், இயக்குநர் கே. சங்கர்.இவரை பக்த ராவணாவுக்கு இயக்குநராக்கினார் செட்டியார்.அப்புறம் வாசு மேனனின் ஒரே வழி படத்தை இயக்கினார். அடுத்து அவர் இயக்கிய ‘கைராசிஅபார வெற்றி.கண்ணதாசனின் சிவகங்கைச் சீமை படத்தை நன்றாக இயக்கியிருந்தார்.எனக்குத் தெரிந்து தமிழின் வரலாற்றுப் படங்களில் இயல்பும் சரித்திரமும் இருந்தது இது ஒன்றில்த்தான்.மற்றதெல்லாம் ஜெய்ப்பூர்,மைசூர் அரண்மனைகளில் தமிழ்க் கலாச்சாரத்தை அடகு வைத்து ஆடவும் ஓடவும் விட்டவைதான். கே. சங்கரின் தம்பியான கே.நாராயணன் நல்ல எடிட்டர். அவர் ‘வரப்பிரசாதம் போன்ற ஓரிரு படங்களை இயக்கினார்.கே.சங்கரிடம், நல்ல கலைஞரான விஜயன், பாலாஜியின் ஃபார்முலாப் படங்களின் மூலம் வீணடிக்கப்பட்டார்.பாலாஜியின் ரீமேக் படங்களினால் வீணடிக்கப்பட்ட இன்னொரு இயக்குநர் சி.வி.ராஜேந்திரன். ஸ்ரீதரின் சகோதரரும் உதவியாளருமான இவர்அனுபவம் புதுமைபடத்தின் மூலம் நல்ல இயக்குநராக வந்தார்.பி.என்.சுந்தரமும் இவரும் சேர்ந்து அந்தப் படத்தைப் பிரமாதப் படுத்தியிருந்தார்கள்.
ஏ.வி.எம் பள்ளியிலிருந்து வந்த இன்னொரு உதவியாளர், ஏ.சி.திருலோகச்சந்தர். முதல்ப் படமான வீரத் திருமகனில் சரிவைச் சந்தித்தாலும் அடுத்த படமான, நானும் ஒரு பெண்ணில் எழுந்து விட்டார்.தொடர்ந்து இயக்கவும் தயாரிக்கவுமாக பரபரப்பாக இயங்கியவர் என்ன ஆனார் தெரியவில்லை. அவரிடமிருந்து வந்த உதவி இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் மிகப் பெரிய வெற்றி அடைந்தவர்.கன கச்சிதமான இயக்குநர். ஸ்ரீதர் உதவியாளராக இருந்த பி.மாதவன் மணிஓசை மூலம் இயக்குநர் ஆகி பிரபலமானார். மாதவன் படங்களுக்கு எடிட்டராகப் பணியாற்றிய தேவராஜன் ‘தேவன்’ என்ற பெயரில் சில படங்கள் இயக்கினார். மாதவனுடைய உதவியாளர்கள் தேவராஜ்-மோகன் பாலூட்டி வளர்த்த கிளி மூலம் அறிமுகமான நினைவு.அன்னக்கிளி இவரை உயரத்தில் வைத்தது.
பல எம்.ஜி.ஆர் படங்களுக்கு எடிட்டராக இருந்த சி.பி.ஜம்புலிங்கம்,ஜம்புஎன்ற பெயரில் கே.ஆர் பாலனின் நாம் மூவர், சபாஷ் தம்பி,போன்ற படங்களுக்கு இயக்குநராக இருந்தார். நாம் மூவர் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் நடித்தது.முல்லை சக்தி யின் கதைக்கு திரைக்கதைவசனம் ‘முள்ளும் மலரும்மகேந்திரன்.எம்.ஜி.ஆரின் நம் நாடு படம் ஜம்புலிங்கத்தின் சிறந்த படம்.ங்க வீட்டுப்பிள்ளையில் இவரது எடிட்டிங் ஒரு அற்புதம்.இவரது மகன் சி.ஜே பாஸ்கர் சின்னத் திரையின் பிரபல டைரக்டர்.
கே பாலசந்தரிடம் உதவியாளராக இருந்த என்.எஸ் மணியம், உனக்கும் எனக்கும் படத்தை இயக்கி தனியாக ‘பொன் வண்டுபடம் மூலம் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரானார். இரண்டும் நன்றாக ஓடியது.அப்புறம் கியாஸ்லைட் மங்கம்மா போன்ற படங்கள் தயாரித்தார்.அது வெளி வந்ததா என்றே நினைவில்லை.
இன்னும் எத்தனை எத்தனையோ உதவி இயக்குநர்கள், தங்கள் ஆயிரம் கனவுகளுடன் உதவிக் கொண்டே இருக்கிறார்கள்.அவர்களுக்கு உதவும் கரங்கள் நீட்டத்தான் ஆள் இல்லை.இவர்களின் உதவும் கனவுகள் இல்லையென்றால், சினிமாவே இல்லையெனலாம். சினிமா, அரசியல் என்று என்னுடைய அறிவை அகலப்படுத்திய சீனி அண்ணனும் உதவ ஆளில்லாமல்த்தான் இல்லாமல்ப் போனான்.அல்லது நான்  கைவிட்டேன் என்று கூடச் சொல்லலாம்.செகம் பூரா ஆளலாமே திரும்பி நல்லாச் சாகலாமே என்ற ஒப்பாரிதான் நினைவுக்கு வருகிறது.

Visitors