Sunday, March 8, 2009

பெண்ணாகப் பிறந்து விட்டால் சொல்லாத நினைவிருக்கும்....



ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லமாட்டேம்ப்பா, என்று சிறு வயதில் சொல்லிகொள்ளுவோம். இப்ப பேரைக் கூட சொல்லிருவேன் ஊரைச் சொல்லுறது சிலாக்கியமாப் படலை.அது நண்பனின் வீட்டு மாடி. நண்பன்னா எனக்கு ரொம்ப பிடிச்சவன்.மாறுதல் உத்தரவை வாங்கிக் கொண்டு அந்த ஊருக்குப் போய் இறங்கும் போது, கையில் காசே கிடையாது. பத்து அல்லது பதினைந்து ரூபாய் இருக்கும்.என்ன தைரியத்தில் அப்படிப் போனேன் என்று இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது.கானா முருகன் அந்த ஊரில்தான் வேலை பார்த்து வந்தான். திங்கள்க் கிழமை காலையில் அவனுடன் கிளம்புவதாகத்தான் திட்டம். முந்தின நாள்க் கொண்டாட்டம் சற்று தூங்க வைத்து விட்டது.அது என்னவோ புதிதாய் ஒரு சரக்கு. ஆக்மே(acme) என்று பெயர்.ஏ எல் சீனிவாசன் ஆரம்பித்த கம்பெனி என்றார்கள்.ஆரம்பித்த கொஞ்ச நாளில் மது விலக்கு மறுபடி வந்து விட்டது. இது திருட்டுச் சரக்கு.அதுதான் கள்ளச் சந்தையில் அப்போது புழங்கிக் கொண்டிருந்தது.ஊரின் பழம் பெரும் குடும்பங்களில் ஒன்று அது. வீடே இரண்டு தெருவுக்கு, கொசவந்தட்டித் தெருவில் இருந்து தெற்கு ரதவீதி வரை இருக்கும்.அவர்கள் வீட்டில் யாருக்கோ மது பெர்மிட் உண்டு.அது இன்னமும் தொடர்கிறது.அந்த வீட்டின் கடைசிப் பையன், எனக்கு ரெண்டு மூன்று செட் முந்தியவன்.என்னுடன் எட்டாம் வகுப்பு படித்தான்.ஆள் சற்று உயரமாய் இருப்பான். என்னுடன் படிக்கிற வருஷம், நல்லூரிலோ எங்கோ போர்டிங் ஸ்கூலில் படித்து விட்டு அங்கேயும் பெயிலாகி மறுபடி எங்கள் பள்ளிக்கே வந்து சேர்ந்திருந்தான்.கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருப்பான். அதுக்குப் பேர் மாப்பிள்ளை பெஞ்சு.நடிகை ராஜ சுலோச்சனா என்றால் உயிர். குமுதம் படம் வந்து பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்த படம், கவிதா. ராஜசுலோச்சனா கதா நாயகி. படம் எடுபடவில்லை. பாட்டுக்கள் கேவியெம் மாமாவின் இசையில் பிரமாதமாய் இருக்கும். நம்பியாரும் புஷ்பலதாவும் பாடுகிற உள்ளே இருக்கும் பொன்னம்மா வெளியெ வந்து சொல்லம்மா என்ற பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.அப்புறம் `பறக்கும் பறவைகள் நீயே....’அப்புறம் `கண்ணுக்குள்ள ஒன்னுருக்கு, ஒன்னுக்குள்ள பொண்ணுருக்கு பொன்னுகிட்ட என்னதான் இருக்கு...தமிழின் முதல் பங்க்ரா டான்ஸ் பாட்டு.அந்தப் படத்தை, கட் அடித்து, முதல் நாள் பார்த்துவிட்டு வந்து கிளாஸ் வாத்தியார் கணேச அய்யரிடம் ஏச்சு வாங்கிக் கொண்டிருந்தான்.
ராஜ சுலோச்சனாவுக்கு கடிதம் எழுதி அதற்கு முகவரியை என்னை எழுதச் சொன்னான். என் எழுத்து ஒன்றும் அப்படி நன்றாயிருக்காது, அப்போது. பின்னாடிதான் தெரிந்தது கடிதம் எழுதியிருந்ததே, என் முகவரியை வைத்து, என்று. டி.கே. சோமசுந்தரம், மூன்றாம் பாரம் பி, கீழக்கிளை, என்று உள்ளே எழுதியிருக்கிறான்.அது ரிடர்ன் லெட்டெர் ஆஃபீஸ் போய் திரும்பி வந்து விட்டது, இனொரு கவருக்குள் வைத்து,ஆர்.எல்.ஓ கவரில் டி.கே. சோமசுந்தரம் என்று விலாசம் எழுதி வந்து விட்டது. கணேச அய்யர் என் காதை துளை போட்டு விட்டார்.ஆர். எல்.ஓ கவரில் மேல் ஓரத்தில் ஆங்கிலத்தில் ராஜ சுலோச்சனா என்று எழுதியிருந்தது.அப்புறம் விஷயத்தையெல்லாம் அழுத படியே சொன்ன பிறகு, சரி சரி உக்காருல. என்றார். அவரும் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டார்.பன்னிரெண்டே முக்காலுக்கு காலை வகுப்புகள் முடியும். அய்யர் கால் மணி முன்னதாகவே முடித்துவிட்டு இப்படி யார் பக்கத்திலாவது வந்து உட்கார்ந்து கொள்ளுவார்.பெரும்பாலும் முத்துக் குமார் பக்கத்தில்தான் உட்காருவார். அல்லது டி எஸ் ஆவுடையப்பன்.. மெதுவாக தொடையை தடவிக் கொடுத்துக் கொண்டே இருப்பார்.என்னருகே உட்கார்ந்து அதை ஆரம்பித்ததும் கூச்சமாய் இருந்தது. கெக்கென்று சிரித்து விட்டேன். ஏல அசடு, சிரிச்சுக் கெடுக்காதலே என்று ஆவுடையப்பன் பக்கம் போய் விட்டார்.அங்கிருந்து சத்தம் போட்டுச் சொன்னார், ஏல இப்ப சரோஜாதேவின்னு புதூக் குட்டில்லாம் வந்திருக்காளே அவளுக்கு காய்தம் போடாம என்னலே எவளோ கிழவிக்கு போட்டிருக்கேன்னார்.எனக்கு யானைப் பாகன் சரோஜாதேவி நினைவுக்கு வந்து போனாள். `பதினாறும் நிறையாத பருவ மங்கை, காதல் பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை....’ என்று டி.எம்.எஸ், நினைவில் பாடி முடிக்கும் முன், கிளாஸ் ஹோவென்று சிரித்தது.சுடலைமுத்து, அவன்தான். கடிதம் எழுதியது, மட்டும் சிரிக்கவில்லை.
சுடலை முத்துவிடம் போய், அவன் இப்போது பாட்டில் வியாபாரம் பார்க்கிறான், நான்தான் வாங்கி வந்தேன். கிட்டப்பாவுக்கு ஆண்குழந்தை பிறந்திருக்கிறது. அதற்கான கொண்டாட்டம். அதில் தலை கொடுத்திருக்கவேண்டாம்.வாங்கிக் கொடுத்த பரவசத்திற்காக எனக்கு ரெண்டு ரவுண்டு ஊத்திக் கொடுத்தார்கள்.சாப்பிட்ட எல்லாருமே தெருவில் எனக்கு மூத்த செட். கன்னா பின்னாவென்று போதை ஏறிப் படுத்தவன். கடுமையான தலைவலியோடு எழுந்தேன்.அதற்குள் கானா முருகன் போய் விட்டிருந்தான்.அங்கே அலுவலகத்தில் வந்து பார்ப்பதாகச் சொல்லிப் போயிருக்கிறான்.பஸ்ஸிலிருந்து இறங்கி, வங்கி எங்கே இருக்கிறது என்று விசாரித்துக் கொண்டிருந்தேன்.வீதியில் ஒரு இறுதியாத்திரை ஊர்வலம் வந்தது. `....................’ சமுதாயத்துக்குப் பாத்தியப் பட்ட இறுதி யாத்திரை வண்டி என்று கோணல் மாணலாக எழுதியிருந்த வண்டியில் வைத்து தள்ளி வந்து கொண்டிருந்தார்கள்.அப்படி வண்டியை நான் அது வரை பார்த்ததில்லை.கேள்விப் பட்டிருக்கிறேன். நல்ல கூட்டம் பின் தொடர்ந்து வந்தது.நான் விசாரித்த பெட்டிக் கடைக் காரர் அதைப் பார்ப்பதிலேயே கண்ணாயிருந்தார்.ஊர்வலம் அவரைக் கடந்த பின்தான், என்ன கேட்டிய, என்று என் பக்கம் திரும்பினார் பேசிக் கொண்டே, தனிச்சையாக கையில் ஒரு சிகரெட் பாக்கெட்டை எடுத்திருந்தார்.நான் வில்ஸ் கொடுங்க என்று கேட்க வேண்டியதயிற்று.அப்புறம் எனக்கு வழி சொன்னார். ஒரு வகையில் இது ஒரு சௌகரியம், ஒரு சிகரெட் வாங்கி பல தகவல்களையும், நூறு ரூபாய்க்கு சில்லறையும் வாங்கி விடலாம்.பாவம் இந்த அம்மா கையெடுத்துக் கும்பிடலாம் போல அழகாயிருக்கும்,குழந்தை உண்டாகியிருக்கு ரெண்டு உசிரும் போய்ட்டு.இந்தா கடையை எடுத்து வச்சுட்டுப் போக வேண்டியதுதான். நான் சிகரெட்டை பற்ற வைக்க முயன்ற போது சொன்னார். சிகரெட் முடியறதுக்குள்ள பேங்கு வந்துரும், சொல்லிக் கொண்டே தீப்பெட்டியை நீட்டினார்.நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.
மாலையில் வங்கி முடியும் முன்பே கானா.முருகன் வந்து விட்டான். அவன் ஒரு ரூம் பார்த்து வைத்திருப்பாதாகச் சொன்னான். அவன் சைக்கிளில் பின்புறம் ஏறிக் கொள்ளச் சொன்னான். நான் தயங்கினேன்.அப்போது சைக்கிளில் டபுள்ஸ் போகக் கூடாது.எம்.ஜி ஆர் ஆட்சியில்தான் அதை நீக்கினார்.இந்த ஊர்ல இதையெல்லாம் கண்டுக்க மாட்டாங்க சும்ம வா என்றான் முருகன்.கானா முருகன் என்றால் கானா பாட்டெல்லாம் பாட மாட்டான்.இனிஷியல், க. அவன் கூட்டிப் போன இடத்தில் கையை விரித்து விட்டார்கள்.சரி வா எங்க ஆபிஸ்ல இன்னக்கி ஒரு பொழுது கழிச்சுட்டு நாளைக்கி வேற இடம் பாத்துரலாம்,என்றான்.அவன் ஆபிசில் தங்கிக் கொள்ளலாம். ஆனால் மற்ற சௌகரியங்களுக்கு கஷ்டம்.முனிசிபல் பார்க்குக்கு வரணும். எனக்கு எந்திரிச்சவுடன் கக்கூஸ் போகணும்.சரி நான் ஊருக்கே போய்ட்டு வந்திருதேன் என்றேன், ஒண்ணரை மணி நேரப் பயணம். நேரம் வேறு ஆகிக் கொண்டிருந்தது. வா இங்க இன்னொரு இடத்தில பார்ப்போம், என்றான். அப்போதுதான், மாப்பிள எங்கல இந்தப் பக்கம் என்று உயிர் நண்பன் வந்தான்.என்னல மாப்பிள உங்க ஊர்ல தங்கறதுக்கு இடமில்லையேலே என்றேன். கொஞ்ச நேர தயக்கதிற்குப் பின் எங்க வீட்ல, எடுப்பு கக்கூஸ்தான் அதான் யோசிக்கேன் என்றான். அப்பறம் எங்க வீட்ல மட்டும் என்ன வாழுதாம் என்றதும் பொறவென்ன வா என்று கட்டியணைத்துக் கொண்டான்.இன்னமும் வாத்தியார் ஆளாத்தான் இருக்கியா என்றான். `பொறவு’ என்றேன்.அதான பார்த்தேன் நம்மளாவது மார்றதாவது என்று மறுபடி கட்டி அணைத்துக் கொண்டான்.திருநெவேலியில் ஒன்பது வரைக்கும் என் கூடத்தான் படித்தான்.சொந்த ஊர் இதுதான். அவன் அப்பாவுக்கு இங்கே மாறுதல் ஆனதும் இங்கே வந்து விட்டான். அவன் அம்மா அப்படி சமைப்பாள்.புளி இல்லாக் கறி என்கிற பொரிச்ச குழம்பு வச்சான்னா வளவு பூரா எக்கா, மதினி, என்று கேட்டு வந்து வாங்கிப் போகும்.கொஞ்சம் கனத்த உடம்பு. அற்புதமான முகம், தங்கத்தக்கன்னா, தங்கம் மாதிரித்தான் இருப்பாங்க. கொஞ்சம் ரத்தக் கொதிப்பு உண்டு. முகம் சிரித்துக் கொண்டே இருந்தாலும்,அசதியா இருக்கற மாதிரியே இருக்கும். நாங்கள் பள்ளி விட்டு அவன் வீடடு வழியாகத் தான் வருவோம். அநேகமான தினங்களில் அங்கே போவேன். அவன் ஏதாவது எம்.ஜி ஆர் பட ஃபிலிம், பாட்டுப் புஸ்தகம் வைத்திருப்பான். இரண்டு பேரும் சேர்ந்து ஒரு ஆல்பம் தயாரித்துக் கொண்டிருந்தோம்.பேப்பரில் வருகிற எம்.ஜி.ஆர் பட்ங்களை வெட்டி அதில் ஒட்டி வைப்போம்.சில அபூர்வ ஸ்டில்களை நான் அவனுக்குக் கொடுத்தேன்.அன்று சிந்திய ரத்தம் பட ஸ்டில், பேசும் படத்தில் வந்தது. ஒரு கூட்டத்தினரைப் பார்த்து எம்.ஜிஆர் முழங்கிக் கொண்டிருக்கிற மாதிரி, பரணி லே அவுட் பண்ணியது.நான் தான் அவனுக்கு கொடுத்தேன் அதிலிருந்துதான் அது இருவரின் ஆல்பமாயிருந்தது.ஊர் மாற்றிப் போகும் போது அதை என்னிடமே தந்துவிட்டான். ஊரில் அவன் தாத்தா ரொம்பக் கண்டிசனானவராம். ரொம்ப நாள் வரை அது எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்று கடிதம் போட்டுக் கொண்டிருந்தான்.
அங்கே போனப்புறம்தான் தெரிந்தது, அது ஒரு பெரிய சந்தை மடம் என்று. கீழ்ப் பகுதியை வாடகைக்கு விட்டிருந்தார்கள். மாடியில் தான் நாங்கள் இருந்தோம்.கீழே ஒரு இஞ்சினியர், அவரது மனைவி, இரண்டு குட்டிப் பிள்ளைகள்.பெரியவள் பெயர் பாரதி. சின்னக் குழந்தை பெயர் மறந்துவிட்டது.அவங்க பேர் பத்மா. ``கீழ் வீட்டுப் பத்மாக்காவின் மேலுதட்டு மரு கூடச் சந்தனம்’’ என்று ஒரு கவிதையில் எழுதியிருப்பேன்.அப்பா, செண்பகப் பூ என்று முதன் முதலில் பார்த்ததும் தோன்றியது.மேலே மாடியில் நாங்கள் அடிக்கிற கூத்தை, உதிர்க்கிற கெட்ட வார்த்தைகளை, எப்படி சகித்துக் கொண்டிருக்கிறார் இஞ்சினியர் என்று தோன்றும்,அவரை விட பத்மாக்காவின் காது எப்படி கூசாமல் இருக்கிறது என்று தோன்றியது.முதலில் அவனது உள்ளூர் நண்பர்களின் கைதான் ஓங்கியிருந்தது.சாயந்திரம் ஆனால் ஒரு பெருங்கூட்டமே கூடிவிடும். ஏழு ஏழரை மணிக்கு நடராஜனும். வரதனும் கையைச் சொறிய ஆரம்பித்து விடுவார்கள்.ரொம்ப வேண்டாம் ஆளுக்கு மூன்று ரூபாய் இருந்தால் போதும். ரெண்டு அவுன்ஸ் இஞ்சி. நல்லவேளை நண்பன் கொஞ்ச நாளாய் இதை நிறுத்தியிருந்தான். ஆனால் அவன் என்னிடம் கேட்டான், ஏல நீ எப்படி? ம், ரெடி போவோம் என்றேன். மற்றவர்கள் எல்லாம் அந்த மெடிக்கல் ஸ்டோரின் பக்கவாட்டிலிருந்த வண்டிப்பேட்டை வழியாக ரகசியமாகப் போகும் போது நண்பன் நேராகக் கடையில் போய் உட்கார்ந்தான். கடைக்காரர் வாங்க என்ன அதிசயமாருக்கே என்றார். மாப்பிளை ஊர்லேருந்து வந்திருக்கான்.என்றதும் அவர் மரியாதையுடன் பார்த்து, உக்காருங்க சார் என்றார்.எனக்கு மட்டும் ஒருகிளாஸ்ஸில் வந்தது. சார் பழமா, சாக்லேட்டா என்றார். நான் ஆரஞ்சு வில்லை என்றேன். ஏயப்பா பெரிய கை போல இருக்கெ என்று சிரித்துக் கொண்டு கடைப் பையனை வங்கி வரச் சொன்னார். எனக்குப் புரியவில்லை. திருநெவேலியில் இதுதான் வழக்கம்.ஜிஞ்சர் பரீஸில் தண்ணீரை விட்டதும் பாதாங்கீர் நிறத்துக்கு வந்து விடும்.உறைப்பு கடுமையாக இருக்கும்.ஒரே மடக்கில் குடிக்க வேண்டும்.நற நற வென்று இரண்டு ஆரஞ்சு வில்லையைத் தின்றால், மூன்று ரூபாய்க்கு சொர்க்கம் தான், என்ன விடியக்காலம்தான் கொல்லக்கிப் போகும் போது கங்கு வைக்கும்.நான் அவர்களுடன் நன்றாக நெருங்கி விட்டேன்.நான் வந்த பின் கொஞ்சம் கெட்ட வார்த்தைகளை சத்தமாகப் பேசுவதில்லை.
அந்த மாத வாடகையை பாரதி கொண்டு வந்தது., மாடி ஏறி.
வரும் குழந்தையைப் பார்த்து நான் என்னையறியாமல், என்ன பத்மா என்ன விஷயம் என்று சொன்னதும் கீழிருந்து சத்தமாகச் சிரிப்பு கேட்டது.சிரித்துக் கொண்டே பத்மாக்கா வீட்டுக்குள் ஓடினார்கள்.அப்புறம்தான் நண்பன் சொன்னான், ஏல என்ன அந்த அம்மா பேரைச் சொல்லுதே என்று.எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. ஒரு திங்கள்க் கிழமை ஊரிலிருந்து காலையில் வந்தவன், வழக்கத்துக்கு மாறாக அலுவலகம் போகாமல் வீட்டுக்கு வந்தேன்.நண்பன் வீடும் அதையொட்டி இன்னொரு வீடும் அந்தக் காம்பவுண்டில் இருந்தது. பக்கத்து வீட்டுப் பெரியவர், ப.சிங்காரம் மாதிரியே இருப்பார், சத்தமாக திருவருட்பா பாடிக் கொண்டிருந்தார்.நல்ல தொண்டை. பத்மாக்கா அவர்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தாள்.வழக்கமாக் எங்கள் தலையைக் கண்டதும் மெதுவாக உறுத்தாமல் உள்ளே சென்று விடுவாள்.இன்று நின்று கொண்டிருந்தாள்.நான் மாடி ஏறப் போனவன் அவளைப் பார்த்தேன். சிரித்த படி தலையை மட்டும் அசைத்து அடுத்த வீட்டைக் காண்பித்தாள்.அங்கிருந்து என்ன வருகிறது கேட்கிறாயா என்பது போலிருந்தது.. அவள் கையில் ஃபெமினா இருந்தது. இடுப்பில் சீப்பு ஒன்றைச் சொருகியிருந்தாள்.மீண்டும் தோன்றியது, `செண்பகப் பூ.’என் கையில் புதிதாக மேனகா காந்தி ஆரம்பித்திருந்த சூர்யா இந்தியா பத்திரிக்கையும், சன்டே பத்திரிக்கையும் இருந்தது.சூர்யா சற்று கனமாக இருந்தது.அது என்னது என்று சைகையில் கேட்டாள். நான் அவளிடமே நீட்டினேன்.இரண்டையும் வாங்கிக் கொண்டாள்.சூர்யாவில் பெரு நகரங்களில் காணப் படும் ஹோமோ செக்ஸ் பற்றிய கட்டுரை இருந்தது., அதைத் தர கூச்சமாயிருந்தது.ஆனால் அவள் இரண்டையும் ஃபெமினாவோடு சேர்த்து வைத்துக் கொண்டு சாயங்காலம் தந்தால் போதுமில்லியா என்று முதல் தடவையாகப் பேசினாள். நான் தலையை ஆட்டி விட்டு ஏறும் போது, சாயந்தரம் பத்மாட்ட கொடுத்து விடுதேன் என்று சொல்லிச் சிரித்தாள். முதலில் புரியவில்லை, நான் மேலுதட்டு மருவையே பார்த்துக் கொண்டிருந்தேன்.சரி சரி பாரதிட்ட கொடுத்து விடுதேன், என்று மறு படி சிரிப்புக்கிடையே சொன்னதும் தான் சை என்று உதட்டைக் கடித்துக் கொண்டேன்.
பின் வாசலுக்கு, அதாவது டாய்லட் போக வேண்டுமானால் கீழ் வீட்டை ஒட்டிய முடுக்கு வழியாகப் போக வேண்டும். அங்கே ஒரு கதவு உண்டு, அதை வீட்டுக்குள்ளிருந்து வந்து அவள்தான் திறக்க வேண்டும்.அதற்காக அவள் அடுப்பில் ஏதேனும் கைச் சோலியாய் இருந்தால், அப்படியே போட்டுவிட்டு வந்து திறக்க வேண்டும் .இது ஒரு பெரிய தொந்தரவு. காலை நேரத்தில் துப்புரவுத் தொழிலாளி வந்து போகும் வரை அது திறந்தே இருக்கும்.அப்புறம் அதை அடைத்து விடுவார்கள்.இதற்காக நான் ஒரு வழி செய்தேன். அந்தத் தாழ்ப்பாள் நல்ல லூசாக இருக்கும், அதனால் அதில் ஒரு நூல்க் கயிற்றைக் கட்டி, தாழ்ப்பாளுக்கு நேரே நிலையில் ஒரு ஆணி அறைந்து அதை, உயரத்தில் நிலையிலிருந்த துவாரம் வழியாக வெளியே கொண்டு வந்து தொங்க விட்டேன். உள்ளிருந்து பார்த்தால் `ட’ வடிவத்தில் கயிறு தெரியும்.கயிற்றை ஆணியிலிருந்து எடுத்து விட்டால் திறக்க முடியாது. ஆணிவழியாக வந்தால் வெளியிலிருந்து லேசாகத் திறந்து விடலாம். இதை நான் உண்டாக்குவதை அடுப் படியிலிருந்து சிரித்த படியே பார்த்துக் கொண்டிருந்தாள்.இதுக்குப் போய் இவ்வளவு மெனக்கெடனுமான்ன மாதிரி.
அப்புறம் என்னிடமிருந்து ப்ரதித்வந்தி, ஃபவுண்டன் ஹெட் எல்லாம் கேட்டு வாங்கிப் படித்தாள்.அய்ன் ரேண்ட் பிடிக்காத பெண்ணுண்டா என்று சொன்னாள்.(நான் இன்று வரை படித்தது கிடையாது.)அவளுடைய கருப்பு பிரா பின் வாசல்க் கொடியில் ஒருநாள் விட்டு ஒரு நாள் காயும். நமக்குத்தான் நாக்கில் சனியாயிற்றே. ஏங்க இந்த உள்ப் பாடி உங்கள்ட்ட ஒன்னுதான் இருக்கா என்று கேட்டு விட்டேன். அதை அவளிடம் நெருங்குவதற்கான வாய்ப்பாகவும் யோசித்தேன் என்றும் சொல்ல வேண்டும்.படாரென்று அதைக் கொடியிலிருந்து உருகி எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று கதவைக் கோபமாகச் சாத்தினாள்.அந்தக் கனத்த கதவு சாத்தப் பட்ட சத்தம் கேட்டு பக்கத்து வீட்டு ஆச்சியும் தாத்தாவும் என்ன என்ன என்று ஓடி வந்து விட்டார்கள்.அப்புறம் எல்லாப் போக்கு வரத்தும் நின்றுபோயிற்று. குழந்தைகள் கூப்பிடுவது கூட நின்று போயிற்று.
ஒரு மாதம் இருக்கும், வழக்கத்துக்கு மாறாக அன்று கீழிருந்து கெட்ட வார்த்தை ஒன்று இரவு பதினோரு மணி வாக்கில் கேட்டது.நானும் நண்பனும் மட்டும் தான் இருந்தோம்.மாடியிலிருந்து வீட்டுக்குள் போகவும் ஒரு படி இருந்தது.அதன் கதவை இங்கிருந்து திறக்க முடியாது. அந்தக் கதவின் விம்பல் வழியாக நானும் நண்பனும் பார்த்தோம்.அவனுக்கு அதில் இஷ்டமில்லை.அவனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணுடன் காதலில் இருந்தான், அதனால்த் தான் அவன் குடிப்பதை நிறுத்தியிருந்தான்.வேறு பெண்களைப் பார்ப்பதும் கிடையாது.எனக்கும் சௌந்தர்ய உபாசனை தவிர்த்து பெரிய ஆர்வமில்லை(?) அவர் கையில் பெல்ட்டோ கயிறோ இருந்தது.நாங்கள் நின்ற இடம் குப்பை கூளமாயிருந்தது. எங்கள் கால்கள் அதன் மீது உராயும் சப்தம் கேட்டிருக்க வேண்டும் அவள்தான் எங்கள் பக்கம் திரும்பினாள். அவரிடம் வாயைப் பொத்தி சைகை செய்து விட்டு எரிந்து கொண்டிருந்த ஒற்றை பல்பை அணைத்தாள். இருளில் விசும்பல் கேட்டது.
நாங்கள் சமையல் செய்து சாப்பிட அரம்பித்திருந்தோம்.. அதற்காக உரலில் மிளகாய்ப் பொடி இடித்துக் கொண்டிருந்தேன்.சமையலை புதிதாக வந்த நண்பன் ஒருவன் பார்த்துக் கொண்டிருந்தான் .தங்கத்தக்காவிடம் பயின்றவன்.பிரமாதமாக சமைப்பான்.நீண்ட நேரமாக இடித்துக் கொண்டிருந்தேன். காணாது, இன்னும் இடி என்று சொல்லிக் கொண்டே இருந்தான், போடா நீயும் உன் சமையலும் என்று சத்தம் போட்டேன், அடுப்படியிலிருந்து பத்மாக்கா சிரித்துக் கொண்டே வந்தாள்., உரலில் கரண்டியால் கிண்டி பொடியைப் பர்த்து விட்டு போறும் போறும் என்றாள்.நான் அசடாய்ச் சிரித்தேன்.சார் இல்லையா என்றேன். ஏன் மாடிப் படி வழியா பாக்கறதுதானே என்றாள். கரண்டியை ஓங்கினாள். சாரி என்று சொன்னேன். அவள் ஒரு கோடீஸ்வர வீட்டுப் பெண் என்று கொஞ்ச நாள் முன்னால் தான் தெரிந்திருந்தது.சிதம்பரம் பக்கத்தில் பெரிய அரிசி ஆலை அதிபரின் மகள்.
சார் ரொம்ப நல்லவங்க.எங்க அத்தை மகன் வந்து போனால் கொஞ்சம் வயலண்டா ஆகிடுவாரு.குவார்ட்டர்ஸ்ல இருந்த்ப்ப அடிக்கடி வருவாங்க. இங்க அதிகம் வர்றதில்லை அவர்ட்டயும் சொல்லிப் பார்த்துட்டேன்.. நீங்க வர வேண்டாம்ன்னு, எனக்குமே அவர் வருகிறதைப் பிடிக்கிறப்ப அவர் எப்படி வராம இருப்பாரு,என்று இடுப்பை பார்த்தாள்.சந்தனத்தில் குங்குமத் தீற்றல் மாதிரி நீளமாய்க் கன்றிப் போயிருந்தது.

Visitors