இரவில் நீண்ட நேரம் விழித்துப் படித்ததின் கண் எரிச்சல் ஆற்றில் குளித்த பின், சற்றே தணிந்திருந்தது,.முன்னடித் துறையில் ஏழு ஏழரை மணிக்கு வழக்கமாய் வருகிறவர்கள் தென்பட்டார்கள். காங்கிரஸ் முதலியார் வீட்டு ஆச்சிக்கு அநேகமாகக் கூன் விழுந்து விட்டது.ஆனாலும் ஆற்றில் குளிப்பதை விடவில்லை.காலையில் கடுங்காப்பி, ஒரு தம்ளர் குடிப்பாள்.நல்ல பெரிய ஐஸ் தம்ளர், செம்புத் தம்ளர்.பளபளவென்று விளக்கி வைத்தது.நன்றாக ஆற வேண்டும்.முதலியாருக்கு இரண்டு மனைவிகள்.மூத்தவளிடம் மட்டும் ஆச்சி காபி கேட்பாள், ``போட்டாச்சாழ்ழா’’.அநேகமாய் ஆச்சி பேசுகிற வார்த்தை ஒரு நாளில் இது மட்டும் தானாய் இருக்கும்.காபி வந்தவுடன் குடித்து விட்டு, என்ன மழையானாலும், குளிரானாலும் ஆற்றுக்கு நடக்க ஆரம்பித்து விடுவாள்.முன்னடித்துறையில் தான் குளிப்பாள்.அங்கே இழுப்பு ஜாஸ்தியாக இருக்கும். பாறைகளும் அதிகம்.குளித்துப் பழக்கப் பட்டவர்கள், பாறைகளில் காலை அழுந்திக் கொண்டு, சுழித்து ஒடுகிற தண்ணீரை எதிர்த்து, அது தலையையும் தோளையும் தழுவிப் போகிற சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாலே போதும், அவ்வப்போது பாய்ந்து வருகிற தாமிரவருணியின் ஒரு வாய்த் தண்ணீர்,இதமாய் நாவையும், ருசி அரும்புகளையும் இனிப்பாய் நனைத்து, குளுமையாய் வெறும் வயிற்றில் பரவி நிறைய, பசியாவது ஒண்ணாவது.
.பொதுவாக காலை நேரத்தில், முன்னடித் துறையில் மாடு குளிப்பாட்ட மாட்டார்கள்.பத்துப் பதினோரு மணிக்குத் தான் குளிப்பாட்டுவார்கள். காலையில் கூட்டம் அதிகம் இருக்கும்.மாடுகள் மிரண்டு தண்ணீருக்குள் இறங்காது.தவிரவும் குளிப்பவர்களும் சத்தம் போடுவார்கள், ``மாடு குளிப்பாட்டற நேரமா இது, கிழக்க தள்ளிப் போனா என்ன’’என்று.. இப்படித்தான் அன்னக்கி, சித்திரை விசு. ஆற்றில் கூட்டம் நிறைய இருந்தது.தண்ணீரும் வட்டப் பாறைக்கு மேல் ரெண்டு முழத்திற்கு ஓடிக் கொண்டிருந்தது.வட்டப் பாறையை நெருங்க முடியவில்லை.என்னை விட பலசாலிகளான பெரிய கோபால், கனகு எல்லாம், வழக்கம் போல் படியிலிருந்து விரால்(டைவ்) அடித்து அந்த வேகத்திலேயே, ரெண்டு தம் பிடித்து நீந்தி வட்டப் பாறைக்குப் போய் விட்டார்கள்.நானும் அதே போல் விரால் அடித்து தண்ணீருக்குள்ளிருந்து எழுந்து நீந்த ஆரம்பிக்கும் முன் தண்ணீர் இழுத்துக் கொண்டு போயிற்று, சற்றுத் தள்ளி முள்ளுப் பாறைக்கு அருகே தான் நிலை கொள்ள முடிந்தது.அதுவும் குளிப்பதற்கு சுகமான இடம். கிட்டத்தட்ட எதிர்க் கரை. அண்ணாத்தை வீட்டு ஆச்சி அங்கே தான் குளிப்பாள்.அங்கே அவ்வளவு இழுப்பு இருக்காது. கழுத்தளவு ஆழம் இருக்கும்.அங்கே நின்று கொண்டு சௌகரிமாயும் குளிக்கலாம். சௌகரியம் என்றால், உடுத்தி இருக்கிற துண்டை தண்ணீருக்குள்ளேயே அவிழ்த்து சர்வாங்கமமும் தண்ணீரில் நனைய குளிக்கிற பெரிசுகள் நிறைய உண்டு.யார் யார் இப்படிக் குளிக்கிறார்கள் என்று வேடிக்கை பார்ப்பது எங்கள் பொழுது போக்கு.தவிரவும் படியில் நின்ற படி, சாமர்த்தியமாய் உடை களைந்து, பாதிச் சேலையை மார்பு வரை சுற்றி, கடைசிப் படியில் அமர்ந்து அழுக்குத் துணிகளுக்கு, செல்லம் சோப், சன்லைட் அல்லது 501 சோப் எதையாவது போடும் பெண்களைப் பார்க்கலாம். மீதிச் சேலை ஆற்று நீரில் நெளிந்து நெளிந்து அளைந்து கொண்டிருக்கும்.சோப்பெல்லாம் போட்டு துவைத்து முடித்ததும் தான் குளிக்க, ஆற்றில் இறங்குவார்கள்.கையால் தண்ணீரை விலக்கி விட்டு தண்ணீர் மட்டத்திலேயே, ஆற்றில் சலாரென்று இறங்கும் அழகு, தலைமுறை தலைமுறையாய், ஆறும், படித் துறையும், ஆண்களும் ரசிக்கிற அழகு.
படிகள் நல்ல உயரத்தில் இருக்கும். மாடுகள் படிகளில் இறங்கத் திண்டாடும், மிரண்டு பெரு மூச்சு விடும், பின்னாலிருந்து கொஞ்சம் வாலை முறுக்கி தள்ள வேண்டும்.அப்படித் தள்ளிய போது மாடு கால் மடங்கி ஆற்றுக்குள் விழுந்து விட்டது.அதைப் பத்திக் கொண்டு வந்தவன் சற்றுச் சின்னப் பையன். தும்பை விட்டு விட்டான்.மாடு தண்ணீரில் இழுபட்டுச் செல்கிறது. குளித்துக் கொண்டிருக்கிற ஆணும் பெண்ணும் கரைக்கும் நடு ஆற்றுக்கும் ஒதுங்குகிறார்களே தவிர மாட்டைப் பிடிக்க ஆளில்லை.ஆச்சி, முள்ளுப் பாறை அருகே குளித்துக் கொண்டிருந்தவள், ஒரே பாய்ச்சலில் மாட்டின் கயிற்றைப் பற்றி விட்டாள்.ஆச்சிக்கு ஆற்றின் அந்தப் படித்துறையிலுள்ள சுழியெல்லாம் அத்துப் படி.ஆற்றின் போக்கிலேயே மாட்டை இழுத்துக் கொண்டு போய், இரு நூறு அடி தள்ளிப் போய் கரை ஏற்றிவிட்டு தானும் ஏறி, மாட்டை மண்டபத்துத் தூணில் கட்டிப் போட்டாள். அவளுடைய வெள்ளைச் சேலையில் மாடு பயத்தில் எருவியது.அப்பவும் அவள் மாட்டைத் தடவிக் கொடுத்து ஆசுவாசப் படுத்தினாள். அவளது மொத்த உருவமும் பசுவின் பின் கால் பருமன் கூட இருக்காது.இருநூறு அடி நீளப் படித் துறையின் ஆணும், பெண்ணும், சிறுசும் பெரிசும். ஆச்சியை திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தது.ஆச்சி திரும்பவும் ஆற்றுக்குள் இறங்கினாள். பெண்களில் சிலர், ஆச்சி இதைக் கட்டிகிட்டு அதைக் கொடுங்க சீலயைச் சோப்பு போட்டுத்தாரோம் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்.எங்களுக்கு ஒன்றுமே ஒடவில்லை.சும்மாவே நின்று கொண்டிருந்ததில் தலை உடம்பெல்லாம் துவட்டாமலே காய்ந்து போயிருந்தது.
ஆச்சி குளித்துவிட்டுக் கரை ஏறினாள்.சம்புடத்திலிருந்து திருநீரெடுத்து நெற்றி நிறையப் பூசிக் கொண்டு சூரியனைப் பார்த்தும்,குறுக்குத்துறை முருகன் கோயிலைப் பார்த்தும் ஒரு கும்பிடு போட்டு விட்டு நடக்கத் தொடங்கினாள்.நாங்களும் ஆச்சி பின்னாலேயே நடந்தோம்.வழக்கத்தை விட பத்து நிமிடம் முன்னதாகவே தெருவுக்குள் ஆச்சி பின்னாலேயே வந்துவிட்டோம். முதலியார் வீட்டு வாசலில் அவரது இரண்டாம் சம்சாரம் நின்று கொண்டிருந்தாள்.ஆச்சி சேலையின் சாணிக் கரையைப் பார்த்து,``எங்கெயும் விழுந்துட்டீகளா, சொன்னா கேட்டாத்தானே, இப்ப அங்க ஓடற தண்ணீதான் வீட்டுக்கே வருதே’’ என்று நிறுத்தாமல்சொல்லிவிட்டு ``நீங்கதான் ஆச்சியக் கூட்டிட்டு வாரிங்களாப்பா’’ என்று கேட்டாள்.எங்களுக்கு கோபமும் சிரிப்புமாக வந்தது.நான் சொன்னேன்,``சித்தி, அவதான் எங்களைக் கூட்டீட்டு வாரா,’’ என்று. மற்றவர்கள், ஆளாளுக்கு நடந்த கதையை விஸ்தாரமாக விவரித்தார்கள்.அதற்குள் தெருவே கூடி விட்டது.ஆச்சி ஒரு வார்த்தை பேசவில்லை.வேறு சேலை மாற்றிக் கொண்டு பெரிய கோயிலுக்கு கிளம்பி விட்டாள். ``சாப்பிட்டீகளா இல்லையா, என்ற ‘சித்தி’யின் கேள்விக்கு தலையை லேசாக ஆட்டினாள்.யாரோ மெதுவாகச் சொன்னார்கள், ஏல என்ன நீயும் சித்தீங்க, அந்த வழில உனக்கு வேற முறையில்லா வரும், என்று சொல்ல சத்தமாக சிரித்தபடியே நாங்களும் வீடுகளுக்கு கிளம்பினோம்.
ஆச்சியின் ஆற்று மகாத்மியம் முடிந்து கொஞ்ச நாள் ஆகியிருக்கும்.அன்று ஆற்றுக்குப் போக சற்றுத் தாமதமாகிவிட்டது.படித்துறையில் வேறு முகங்களாகத் தென்பட்டது.சுப்புலட்சுமி என்கிற சுப்பக்கா வாளி நிறையத் துணியுடன் எங்களுக்கு முன்னால் அப்போதுதான் வந்து படித்துறையில் தன் இடத்தைத் தேடிக் கொண்டிருந்தாள்.ஒவ்வொருவருக்கும் ஒரு இடம் வசதியும், வாகுமாக இருக்கும். அதில் யாராவது அழுக்குத் துணிக்கு சோப்பு போட்டுக் கொண்டிருந்தாலோ, கீழ்ப் படியில் நின்றபடி, காலின் அழுக்கை, மேல்ப் படியோடு அழுத்தி நசுக்கிய கடைசித் துணுக்குச் சோப்பில் தேய்த்து. அகற்றிக் கொண்டிருந்தாலோ, சற்று நேரம் கரையிலேயே காத்திருப்பார்கள்.`என்ன, மதினி. உங்க பட்டா இடத்தை வேற யாராவது பாத்தியதை கொண்டாடறாங்களா,’’என்றேன். திரும்பிப் பார்த்துவிட்டு , ``வா நீயா, ஆமா பட்டாவும் பாத்தியதையும் படிக்குத்தான், ஆத்தண்ணிக்கி என்ன பாத்தியதை,’’ என்றாள்,சுப்பக்கா. அவளுக்கு சுந்தரர் தெரு.பார்வதி டாக்கீஸ் பக்கத்து வீடு.எங்கள் தெருப் பையன்களுக்கு அவளைத் தெரியாது.கல்லூரி நண்பர்கள் மூலம் அறிமுகம்.பல்லவன் நடராஜனுக்கு ரொம்பப் பழக்கம்.பல் சற்று எடுப்பாய் இருக்கும்.பல்லன் என்றுதான் முதலில் பெயர். அவன் ரொம்பக் கேட்டுக் கொண்டதின் பேரில் சற்று கௌரவமாக பல்லவன் நடராஜன் என்று கூப்பிடுவோம்.அதாவது ஆள் இருந்தால்,பல்லவன், இல்லை என்றால் பல்லன்.தவிரவும் ``பசை நடராஜன்’’ என்று வேறு ஒருவன் கல்லூரி வகுப்பில் இருந்தான்.அவன் இன்னொரு சிநேகிதனின் ஸ்கூட்டரில் தினமும் பின்னால் அமர்ந்து ஓசி டிக்கெட்டில்வருவான். எப்பவும் அவன் கூடவேதான் பசை மாதிரி ஒட்டிக் கொண்டிருப்பான்.
ரத்னா, பார்வதி தியேட்டர் என்றால் பல்லவன் தான் டிக்கெட் எடுக்க முடியும்.அவன் தெருவில் தான் பார்வதி டாக்கீஸ் மேனேஜர் நெட்டலிங்கம் பிள்ளை இருந்தார்.ரொம்ப கண்டிப்பான ஆள். டிக்கெட்டே வெளியே வராது.அடுத்து என்னென்னெ படங்கள் அவர் தியேட்டரில் வரப் போகிறது என்று ஷெட்யூல் போட்டால் வெளியே யாருக்கும் தெரியாது.இதைத் தெரிந்து கொள்ள ஒவ்வொரு தியேட்டர் காரர்களும் , ஒவ்வொரு விநியோகஸ்தர்களும் `கஜக் கர்ணம்’ வச்சாலும் நடக்காது.ரத்னா, பார்வதி தியேட்டரில் காலேஜை கட் அடித்துவிட்டு சினிமா பார்க்கப் போனால், புஸ்தகத்தையும் சைக்கிளையும் நடராஜன் சுப்பக்கா வீட்டில் வைக்கச் சொல்லுவான்.நான் முதன் முதலாக் எதிர் நீச்சல் படம் பார்க்கப் போன போதுதான் அக்கா அறிமுகம்.தெருப் பைப்பில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்கள், நாங்கள் சைக்கிளை அவள் வீட்டு வாசலில் ஸ்டாண்ட் போடு நிறுத்திக் கொண்டிருக்கும் போது. `அக்கா மாமா எங்க’ என்று நடராஜன் கேட்டான்,இந்தா கும்பகர்ணன் தூங்குதாகல்லா, என்று பட்டாசலில் தூங்கிக் கொண்டிருந்த அவள் கணவனை, முகத்தை அசைத்துக் காண்பித்தபடியே, அவர் மேல், குடத்திலிருந்து ஒரு கை தண்ணீரை எடுத்துச் செல்லமாய்த் தெளித்தாள்.`ஏ மூதேவி நான் தூங்கலைட்டீ, என்று லுங்கியால் தண்ணீரைத் துடைத்தபடியே எழுந்தார். அவள் முகத்தை அசைக்கும் போதுதான் பார்த்தேன்.அவளது இடது நாடியின் ஓரத்தில் கனத்த, கரும்பச்சை நிறத்தில் ஒரு மருவை.அவளுடைய நீள முகத்துக்கு அது எடுப்பாக இருந்தது.ஒல்லியான உடல். சின்ன மார்பு, மூக்குத்தியுடன் அபூர்வமான. எளிமையான அழகு. ``இது யாரு’’ என்று கேட்டாள். `இவனா, சோமு, ஏங்கூட படிக்கான்,ஆனா உண்மையிலேயே நல்லாப் படிப்பான் என்றான். `அதான பார்த்தேன்,முகத்துல கொஞ்சம் வேற களை இருக்கேன்னு பார்த்தேன்,‘’ என்றாள். எனக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.நான் பேச வாயெடுப்பதற்குள் வாடா படம் போட்றப் போறான்.என்று நடராஜன் கூப்பிட்டான்.``பாலச் சந்தர் படம்ல்லா, வேற டிக்கெட் இருக்கா’’என்று சுப்பக்கா கேட்டாள்.நான், ``வேணுன்னா நீங்க போங்க மதினி’’ என்று சொன்னேன்.``ஹை, ஹை, அதுக்குள்ள மதினின்னுட்டான் பாரு ஓம் ஃப்ரெண்டு’’ என்று சொல்லிச் சிரித்தாள். நான் அவரைப் பார்த்தேன் அவர் முகத்திலும் அதே சிரிப்பு.``நீங்க போங்க நான் செகண்ட் ஷோ பாத்துகிடுதேன், ஆம்ப்பிளை டிக்கட்டை வச்சுகிட்டு ஐய்யா தியாகம் பண்ணுதாரு’’ என்றாள்.படம் பார்க்கையில் நடராஜன் சொன்னான், ``பாவம் அவங்களுக்கு குழந்தை இல்லை,மாமா லயன் பஸ்ஸில் கண்டக்டரா ஓடுதாரு’’என்று.சைக்கிளை எடுக்கப் போகையில் கேட்டாள்,``படம் எப்படியிருக்கு,’’என்று. அதில் படம் நல்லாயிருக்கணுமே என்ற ஆதங்கம் தொனித்தது. ``நீங்க என்ன நாகேஷ் ரசிகையா என்று கேட்டேன்.’’இல்லை, தங்கவேலு ரசிகை’’ என்றாள்.அந்த இடக்கு ரொம்பப் பிடித்தது.``ஏய், ஏய் அவங்க பாலச்சந்தர் ரசிகைப்பா,’’என்றான் நடராஜன்.``ஆமா அப்பதையே சொன்னாங்கல்லா’’ என்று சற்று அசடு வழிந்தேன்.
அப்புறம் அவளை அப்பப்ப வெள்ளி, செவ்வாய் புட்டாரத்தி அம்மன் கோவிலில் பார்ப்பேன்.ராத்திரி பூசைக்கு தவறாமல் வருவாளாம்.அப்படி முதல்த் த்டவை அங்கே பார்த்த போது அக்கா, மதினி என்று குழப்பிக் கொண்டிருந்தேன்.அவளைப் பர்க்கும் போதெல்லாம். அவள் முகத்தின் மரு கவனத்தை ஈர்க்கும்.ஏனோ அதையே பார்க்க வேண்டும் போலிருக்கும்.``இதைத்தான் எல்லாரும் பார்க்கீங்க’’ என்று ஒரு தரம் வருத்தப் படுகிற குரலில் சொன்னாள். இல்லையில்லை அது உங்களுக்கு ரொம்ப அழகாருக்கு என்று சொல்லத் தோன்றியது. சொல்லவில்லை.``நீ பேசாம மதினின்னே கூப்பிடப்பா’’, ``நீ என்ன....’’ என்று எதையோ சொல்ல வந்தவள் சிரித்தபடி அடக்கிக் கொண்டாள்.குழந்தை இல்லை என்பதற்காகத்தான் புட்டாரத்தி அம்மன் கோயிலுக்கு வருகிறாள் போலிருக்கிறது என்ற நினைப்பு என் மற்ற சிந்தனைகளைக் கலைத்து விடும்.
மதினிக்கு படித்துறையில் அவள் இடம் கிடைத்துவிட்டது.நாங்களும் குளிக்க இறங்கி விட்டோம்.நான் முள்ளுப் பாறைக்கு அருகே குளித்துக் கொண்டிருந்தேன்.சுப்பக்கா சேலையின் ஓரத்தைக் வாயில் வைத்துக் கடித்து முன்புறம் பூராவையும் மறைத்தபடி, பாவாடை நாடாவை அவிழ்க்க முயன்று கொண்டிருந்தாள். ஜாக்கெட்டும் பாடியும்முதுகை மட்டும் மறைத்துக் கொண்டிருந்தது.பாவாடை நாடாவின் சுருக்கு முடிச்சு, நுனியை மாற்றி இழுத்ததால் இறுக்கமான முடிச்சாக விழுந்து விட்டது போலிருக்கிறது. திண்டாடிக் கொண்டிருந்தாள்.இதற்குள் படித்துறையின் கழுகுக் கண்கள் உடலைக் கொத்த ஆரம்பித்திருந்தன.ஆற்றைப் பார்த்துத் திரும்பினாள், இங்கேயும் கழுகுகளுக்கென்ன பஞ்சம்.சேலை நுனி வாயிலேயே இருக்க, நிமிர்ந்து ஒவ்வொரு முகமாகப் பார்த்து என் முகத்தில் வந்து பார்வை நின்ற மாதிரி இருந்தது.``ஈனச் சென்மங்கப்பா’’ என்று சொல்லிக் கொண்டே ஆற்றில் விழுந்து முங்கிய படி எங்கள் அருகே வந்து விட்டாள். `ஏல சோமு மூதேவி, துண்டு இருந்தா குடுலே’’ என்று என்னருகே சத்தம் கேட்டது.தலை மட்டும் தண்ணீருக்கு வெளியே தெரிய காலை நீருக்கடியில் உதைத்து தத்தளித்துக் கொண்டிருந்தாள். என்னிடம் துண்டு இல்லை. யாரோ என்னிடம் எறிந்தார்கள். நான் அவளிடம் நீட்டினேன்.தண்ணீருக்குள்ளாக சின்ன மார்புகள் தொய்வில்லாமல் தெரிந்தது.காலை வெயிலில் முகத்தின் மரு கருப்பாக மின்னியது.துண்டை மார்பில் சுற்றி மறைத்தபடி கரைக்கு நீந்திப் போனாள்.பால் தந்திராத மார்பு என்று, கெட்ட சாதி மனசுக்குத் தோன்றியது.
லுங்கி ஒன்றை எடுத்துத் தலை வழியே அணிந்து, மற்ற துணிகளையெல்லாம் வாளிக்குள் திணித்து, நான் கொடுத்த துண்டை சப்பென்று படித்துறையிலேயே எறிந்து விட்டு,விறு விறுவென்று கரையேறி ஆற்றை விட்டு நீங்கினாள்.எல்லாரும் எதை எதையோ பேசியபடி வந்து கொண்டிருந்தார்கள். `ஏல உனக்கு அவளைத் தெரியுமா, உன்னை பேரைச் சொல்லி ஏசினாளே’என்று கேட்டதற்கு மட்டும் ``சீச்சீ ஏசெவெல்லாம் செய்யல’’ என்று மட்டும் சொன்னேன்.தெரு வீடு எதுவும் பிடிக்கவில்லை.சரி லைப்ரரி புஸ்தகத்தை ரிட்டர்ன் பண்ணீட்டு வருவோம் என்று மார்க்கெட் லைப்ரரிக்கு கிளம்பினேன்.லைப்ரரி லீவு.என்ன செய்யறது தெரியலை. கால் போன போக்கில் பெரிய கோயிலுக்குள் நுழைந்தேன். பதினோரு மணிப் பகல். கோயிலில் ஆளே இல்லை.மத்தியானச் சோற்றுக்கு கீழப்புதுத்தெரு சத்திரம் வீட்டில் சீட்டு வாங்கிய நாலைந்து பேர், வயித்துக்கில்லாதவர்கள் மாக்காளை அருகே உட்கார்ந்திருந்தார்கள்.சீட்டை வாங்கிக் கொண்டு உண்டக் கட்டி தருவார்கள்.அப்படியே நடந்து தெற்குப் பிரகாரம் வழியே அம்மன் கோயில் வந்தேன்.அநேகமான் சன்னதிகளில் எண்ணெய் வற்றி, தீபங்களின் திரி கருகிக் கொண்டிருக்கிற வாசனை வந்தது. அம்மன் சன்னதி இருட்டிக் கிடந்தது.அப்படியே சுற்றி, அம்மன் சன்னதிக்குப் பின்னால் உள்ள கருமாரி தீர்த்தத்துக்கு வந்தேன்.அது ஒரு அழகும் தனிமையும் குளுமையுமான இடம்.அங்கெ வைத்து சிலர் கருமாதிச் சடங்குகள் செய்வார்கள். மணடபமும் படிகளும்,தண்ணீரும் சுத்தமாக இருக்கும்.தூணில் சாய்ந்து உட்கார்ந்து படிக்க வசதியாயிருக்கும். சன்னதித் தெரு அம்பிகள் சமயத்தில் அங்கே அமர்ந்து பாடங்கள் படித்துக் கொண்டிருப்பார்கள்.நானும் ஒரு தூணில் சாய்ந்து கையிலிருந்த புத்தகததைப் புரட்ட ஆரம்பித்தேன்.அருகில் லேசான விசும்பல் மாதிரிக் கேட்டது. திரும்பினேன். சுப்பக்கா. சுப்புலக்ஷ்மி என்ற சுப்பக்கா. நன்றாகச் சேலை கட்டி இருந்தாள். வாளித்துணியெல்லாம் துவைத்துப் பிழிந்து வைத்திருந்தாள்.இங்கே வந்து அவ்வளவையும் செய்திருக்க வேண்டும்.``அக்கா, மதினி’’ என்று உளற ஆரம்பித்தேன்.``போடா நீயும்தான் பார்த்தேல்ல..’’என்று அழ ஆரம்பித்தாள்.ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.நினைவில் தண்ணீருக்குள் மார்புத் தோற்றம் நிழலாடியது. ``சரி வீட்டுக்கு வாங்க ‘’ என்றேன். சொல்லக் காத்திருந்தவள் போல் எழுந்து நடந்தாள்.அம்மன் சன்னதிக்குள் சென்று குங்குமம் எடுத்துக் கொண்டு வந்தாள். நான் கூடவே போனேன்.``நான் வீட்டுக்குத்தான் போறேன், பயப் படாதே நீ வர வேண்டாம்’’ என்றாள்.நான் சற்றுத் தள்ளிப் பின் தொடர்ந்தேன்.ஒன்றும் சொல்லவில்லை வீடு வரை சென்றேன்.அவள் வீட்டுக்குள் போனதும் நான் வாசலில் நின்று கொண்டேன்.அவள் கணவர் ``என்னம்மா இவ்வளவு நேரமா, நான் ஆத்துக்கே போய்ப் பார்த்துட்டு வந்துடேன்’’.என்று கேட்டு விட்டு என்னைக் கவனித்தவர், ’’ஏய், இவனே வாப்பா’’ என்றார்.பெயர் நினைவுக்கு வரவில்லை போலிருக்கிறது.நான் தார்சாலில்க் கிடந்த கட்டிலில் அமர்ந்தேன். எங்கே, நம் நாடு படம் பாக்க வந்தியா,ஒரே கூட்ட்டமால்ல இருக்கு, அவனை எங்க, என்று பேசிக் கொண்டிருந்தார். அவள் உள்ளிருந்து வந்து கையிலிருந்த குங்குமத்தை அவரிடம் நீட்டினாள். அப்படியே கோயிலுக்குப் போய்ட்டேனென்று சொல்லிவிட்டு, என்னிடமும் நீட்டினாள். எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டு கிளம்பினேன்.ஏற்கெனெவே நெற்றியில் குங்குமம் இருந்ததைப் பார்த்து அவள் லேசாகச் சிரிப்பது மாதிரி இருந்தது. பார்வதி டாக்கீஸிலிருந்து விசில்ச் சத்தமும் பாட்டும் கேட்டது.``நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்.. நான்..’’
Sunday, February 8, 2009
காலமகள் மடியினிலே ஓடும் நதி...
Subscribe to:
Posts (Atom)