மதுரைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது அதன் மாணவர் விடுதியில், தமிழ் நிஜ நாடக இயக்குநர், முனைவர் மு.ராமசாமியின் அறையில் பெரும்பாலும் தங்கிக் கொள்வேன், அவர் அப்போது ஆராய்ச்சி மாணவர்.சுப்புராஜ், கண்ணன், ராஜாசங்கர், மு.சிவலிங்கம், சந்திரபோஸ், ஜி.பாலச்சந்திரன்(தற்போது பிரபல ஐ.ஏ.எஸ் அதிகாரி, இஸ்ரோவில் பணி புரிகிறார், அவருடைய சஃபாரி உடையொன்றை பெரும்பாலும் நான்தான் அணிந்து கொள்வேன்.) என்று சகமனதுக்காரக் கூட்டம் எங்களைச் சுற்றி இருக்கும். காலை நேரம், டாய்லட் அருகே, ஒரே கலாட்டாவாக இருக்கும். இதில் ஒருவர் மட்டும் ’உள்ளே’ போனால், வருவதற்கு நேரமாகும். வந்ததும் புதுப் புது ஐடியாக்களாகச் சொல்லுவார்.பாலச்சந்திரனும் நானும் அவர் செல்லும் ’அறைக்கு’ “ஞானபீடம்” என்று பெயர் சூட்டி, எழுதியும் வைத்தோம்.
உண்மையில் இங்கேயும் சரி, முடி திருத்தகத்திலும் சரி, திடீர் மழைக்கு சாலையோரம் எங்காவது ஒதுங்கி நிற்கும் போதும் சரி, நம்மால் எதையாவது, யோசனை செய்வதை விடுத்து வேறு ஏதாவது செய்ய முடியுமா. சலூனில், கண்ணாடி., கண்ணாடிக்குள் கண்ணாடி என்று பிம்பங்களை சற்று நேரம் வேடிக்கை பார்க்கலாம். அல்லது ஏதாவது ஒரே காலண்டர் படங்களைத் திரும்பத் திரும்பப் பார்க்கலாம். சிறு வயதில் அப்பா கொண்டு விட்டு விட்டு சென்று விடும், ’திருமலை சலூனி’ல் என் முறையை விழுங்கி, பெரியவர்கள் எல்லாம் சிகை திருத்திச் சென்று கொண்டேயிருக்க, நான் சிறிதாக ஒட்டியிருக்கும் ”தாயுள்ளம்”-டைரக்ஷன், ராம்னாத் சினிமா விளம்பரத்தையே அதில் ஆடிக் கொண்டிருக்கிற மாதுரிதேவியையே பார்த்துப் படித்துக் கொண்டேயிருப்பேன். கொஞ்சம் வளர்ந்த பின், பாலன் கடையில்” சொந்த ஊரே சொர்க்க பூமி” டப்பிங் பட போஸ்டர். பாலன், நன்றாக முள் எடுப்பான்.அதற்கென்றே அவ்வப்போது அவன் கடைக்கு, வெதனத்தோடு காலை நொண்டிக்கொண்டே பெண்கள் உட்பட பல ஆட்கள் வருவார்கள்.
சவரம் செய்து தேய்ந்து போன கத்திகளை, நகம் வெட்டவும், முள் எடுக்கவும், தோதுவான வகையில் வைத்திருப்பான். இடுப்பின்,வெள்ளி அரைநாண் கொடியில் ஒரு முள் வாங்கியும், சாவிகளுடன் எப்போதும் தொங்கும்..முள்ளை எடுத்து விட்டு, அந்த இடத்தில் உப்புத்தூளை வைத்து நன்றாக அழுத்தி அடைப்பான்.அப்புறம் பீடியைப் பற்றவைத்து உற்சாகமாய் ஒரு இழுப்பு வலித்து விட்டு, அதில் கனியும் கங்கை, உப்பை யொட்டி, பட்டும் படாமலும் காட்டுவான்.முதலில் ஒன்றும் தெரியாது,அரை நிமிஷத்தில், அவன் முள்ளுக்காக கிளர்ந்த இடத்தில் சுரீரென்று சூடு தைத்து, செய்தி மூளையில் உணரப்பட்டு ”ஸ்ஸ்ஸ்” என்று காலை, இழுத்துக் கொள்வோம்.”இப்ப முள்ளுமுனை எதுவும் இருந்தாலும் செமிச்சுப் போயிரும்” என்பான், பாலன்.இந்த வேடிக்கைகள் தவிர்த்தால், சிகை திருத்தகத்தில் “சிந்தித்துக் கொண்டிருப்பதை”த் தவிர ஒன்றும் செய்ய முடியாது.சில சமயம் ஒரே நினைவுகள் சொல்லி வைத்தாற்போல் வரும். பிரபல எழுத்தாளரும், தோழியுமான இந்துமதி, ஒரு சமயம் சொன்னார், ‘பெண்களுக்கு சில அனுபவங்கள் வாய்ப்பதில்லை, அதில் ஒன்று இந்த மாதிரி சிகையலங்காரக் கடை அனுபவம்” என்று. அவள் சொன்ன நாளிலிருந்து, சுமார் முப்பத்திஐந்து வருடமாக எப்போது சலூனுக்குப் போனாலும் ’இந்துமதி’தன் அழகிய கண்களுடன், நினைவுக்கு வரத் தவறியதே இல்லை.
ஒரு திடீர் மழைச் சமயம்,சாலையில் நடந்து கொண்டிருந்தவர்கள், ஒரு சிறிய பெட்டிக்கடைக்கு முன்பிருந்த ஓலைச் சாய்ப்பில் அவசர அவசரமாக ஒதுங்கினோம்.என்னருகே ஒருவன், வர்ணம் சொட்டும் ஒரு அரையங்குல ப்ரஷ்ஷுடன் நின்றான்.எதிர்த்த சுவரில் அவன் பாதியில் விட்டு வந்திருந்த தேர்தல் (வாக்குறுதி)வாசகங்களை மழை கரைத்துக் கொண்டிருந்தது..அவன் அமைதியாயொரு சிகரெட் வாங்கிப் பற்ற வைத்தான். கொஞ்சமே புகைத்திருப்பான், சாய்ப்பிலிருந்து சொட்டிய மழைத்துளி, சிகரெட்டில் பட்டு முழுதும் வீணானது. அர்த்த புஷ்டியுடன் இருவரும் பார்த்துக் கொண்டோம் ஒன்றும் பேசிக்கொளவில்லை,
வர்ணத் தொலைக் காட்சி வந்த புதிது. ராமானந்த் சாகரின் மெகா சீரியலான ‘ராமாயணம்’ ஒளி பரப்பாகிக் கொண்டிருந்தது.எங்கள் இடைகால் கிராமத்தையெல்லாம், அப்போது டி.வி எட்டிக்கூடப் பார்க்கவில்லை.மதுரையில் நண்பன் வீட்டில் ’விருந்துக்கு ஒதுங்கிய’ நேரத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன். அன்றையக் கதைப் பகுதியில் சீதை அசோகவனத்திலிருக்கிறாள், மழையைப் பார்த்தபடி.’விருந்து வந்தால் என்ன செய்வானோ ராமன்’ என்று கம்பன் சொல்வதை நினைத்துக் கொண்டிருக்கிறாளோ என்னவோ. ராமன்,சபரியின் பர்ணசாலையில், லக்ஷ்மணன், சுக்ரீவன், அனுமன் புடை சூழ, ஆனால் அமைதியாய்ப் பெய்யும் மழையை, சோகமாய்ப் பார்த்தபடி. அடுத்த காட்சி, பரதன் நந்தியம்பதி அரண்மனையில்; அவனும் மழையைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.....இப்படிப் பல காட்சிகள். அந்த எபிஸோட் முழுக்க ஒரு வசனம் கூடக் கிடையாது...எல்லாமே, எல்லாருமே மழையைப் பார்த்து ஏதோ சிந்தனை வயப்பட்ட படியே, சோகமாய் இருக்கிற மாதிரி அற்புதமாய் அமைந்திருந்தது. வள்ளுவரும் ஒரு மழைநாளில்த்தான் சிந்தை பறி கொடுத்து ’வான் சிறப்பு’ பற்றி ஒரு அதிகாரமே எழுதியிருப்பாரோ...யார் கண்டது, ”எடுப்பதூஉம் கொடுப்பதூஉம்” எல்லாம் மழையல்லவா.