Thursday, October 7, 2010

ஸகி-3,கவிஞர். கங்கை கொண்டான்


கங்கைகொண்டான், கோவை போத்தனூர்க்காரர். வானம்பாடி நண்பர்களில் எங்களுடன் முதலில் அறிமுகமானவர்.ரொம்ப அற்புதமான மனுஷன்.

விளையாட்டு மைதானத்தில்

ஓடி ஓடி

கோப்பைகளை ஜெயித்தவனை

பின்னங்கால் பிடரியில் பட

ஓட ஓட விரட்டி

கோப்பைகள் ஜெயித்துக்

கொண்டிருக்கின்றன”...

என்கிற ரீதியில் கசடதபற(1971) இதழில் ஒரு கவிதை எழுதியிருந்தார். ’வானம்பாடி’ இதழின் வளர்ச்சிக்கு ஆத்மார்த்தமாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களில் ஒருவர்.’கூட்டுப் புழுக்கள்’ என்று ஒரு அழகான கவிதைத் தொகுப்பு 1974-ல் கொண்டு வந்தார். அஃக்”- எழுத்தாயுத மாத ஏடு நடத்திய பரந்தாமன் அச்சிட்டார். அச்சை கலையாகக் கொண்டாடிய மாபெரும் கலைஞன், கவிஞர். பரந்தாமன். ..அதன் தயாரிப்பைப் போலவே கவிதைகளும் அழகாயிருந்தது. இப்போது அந்தத் தொகுப்பின் பிரதிகள் யாரிடமேனும் இருக்கிற்தா தெரியவில்லை. என்னுடைய பிரதி, ஏர்வாடி சேகர் என்கிற சுவாமிநாதனிடம் இருக்கிறதென்று நினைவு.

கங்கை சினிமா எடுக்கப் போய் நிறையப் பணத்தைக் காலி செய்துவிட்டார். இரண்டு படங்கள் இயக்கினார். நல்ல மனுஷனைக் காலம் விட்டு வைக்குமா..படங்களின் தோல்வி, கடன் சுமை, வாழ்வின் வலிகள்.. கங்கை தன்னை சாவுக்கு ஒப்புக் கொடுத்துவிட்டார்.... தன் கைப் பொருள் அனைத்தையும் விற்று தன் படத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு ஒரு பைசா பாக்கி இல்லாமல்.. தந்து விட்டு, காலிக் கோப்பைகளை சாட்சி வைத்துவிட்டு தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார்.

*** *** ***

கூட்டுப் புழுக்கள்தொகுப்புக்கு கல்யாண்ஜி (வண்ணதாசன்) எழுதிய கடிதம் ஒன்றை.. ஒரு முன்னுரை அல்லாத முன்னுரை..என்று ஒரு தனி இணைப்பாகக் கொடுத்தார் கங்கை. அது....

கங்கைப் பையா....

எனக்குக் கூட யாரிடமாவது சொல்ல வேண்டும் போலத்தான் இருக்கிறது..சம்பந்தமில்லாதவரிடம் சம்பந்தமில்லாமல் சொல்லி பாரத்தை இறக்கிக் கொள்வதுஒன்றாலேயே உடனடியாக ஒரு சம்பந்தம் ஏற்பட்டு விடுமென்றால் ஏற்படட்டுமே. பகிர்ந்து கொள்ள ஆளில்லாமல் குதிரையிடம் சொல்வோம்.ஒரு மின்னல் வேளையில் நம் கவலையைக் கஸ்டமரிடம் சொல்லிவிட்டு ஒரு ரவா ஸ்பெஷல் என்று முழங்கிக் கொண்டே “உங்களுக்கு என்ன ஸார்”, என்று பக்கத்தவரிடம் வேட்டியை மடித்துக் கட்டிக் கேட்போம்.

“ சூரியனைக் கொத்த முடியாமல்

வால் சுழித்து மேல் மிதக்கும்

பட்டத்தைக் கிழித்துவிட்டுச்

சந்தோஷப்படும்

சிட்டுக் குருவிகள்”-

என்றால் மாஞ்சாவும் நூலுமாய் அறுவடை முடிந்த வயலில் காலைத் தாளறுக்க பட்டம் விடுவோம். ஒரு நிலவடிக்கிற பின்னிரவில் சினிமா முடிந்து பெருகி வரும் ஜனவெள்ளம் கூட வடிந்து பால்க் கடைகளில் ஒதுங்கி மிச்சப்பட்ட பின் பரவின வெறுமையான வீதியில் தகர டப்பாவை வாலில் இழுத்துக் கொண்டு கழுதையாக ஓடுவோம். மார்க்கெட்டில் வாழைக்காய் கூறு கட்டி விற்கிற பையன்கள் கொஞ்சம் சுகமான கெட்ட வார்த்தைகளில் சந்தோஷிக்கட்டும். பட்சி, பறவைகள், நாரைகள், நீர்க் காக்கைகள், எல்லாம் அந்தி வானத்தில் குளப் பரப்பிற்கு மேல் தாழப் பறந்து செல்கையில் விதம் விதமாக வடிவம் மாறி மாறிச் சீர் படுவது போல நாம் அழகாக கலைந்து கொண்டிருப்போம். கலைந்து போவதில்க் கூட அழகாயிருப்போம். இந்த வாத்தியான்களை அப்படியே விட்டு விடுவோம். நீ அழகாகச் சொல்லியிருக்கிறாயே, ‘பொழிலின் முன்னோட்டமாக -உழைப்பு உனக்கு இயல்பானது, பழக்கத்தில் வந்தது என்று அந்த உழைப்பு மாத்திரம் எனக்கும் இயல்பாக வரவேண்டும். நீ பையனாகவே இரு. கற்றுக் கொள்ளத்தான் இந்த வாழ்க்கை.நேற்று ஒரு சலிப்பான தினம். வேகமாகக் காற்றடிக்கிற ரோட்டில் புழுதி ஒரே பக்கம் ஜமுக்காளமாய் சுழல்கிறது போல, எது எதற்கோ எனக்குள் கொஞ்சம் சுருட்டிக் கொண்டு, வேஷ்டி நாற்காலியில் இழுபடுவது கூட பொறுக்க முடியாமல், நாற்காலியிடம் எரிச்சல் படுகிற தினம் மனம். சின்னதுக்குச் சுகமில்லை, இவளுக்கும்.தாத்தா ஆஸ்பத்திரியில். டாக்டரிடம் வீட்டில் வேலை பார்க்கிற பையன் கிளினிக்கிற்கு வந்திருந்தான்.பத்துப் பதினான்கு வயதிருக்கும். அவனுடன் பேசியதால் அல்லது அவன் பேசியதால் ஏற்பட்ட சந்தோஷத்தில் எல்லாம் அடித்துக் கொண்டு போய் விட்டது.அவன் தாறுமாறாகப் பாடின இந்திப் பாடலகள், செய்த விமர்சனங்கள், மெடிகல் ரெப்ரெசென்டேட்டிவ் போல் செய்த அபிநயங்கள்- எல்லாம் முதல்த் தரமான மகிழ்ச்சியின் கணங்கள். நான் அந்த மாதிரிப் பையனாக இருந்ததே இல்லை.இருக்கவும் முடியாது.எனக்கு எலிமெண்டரி ஸ்கூலிலேயே சிரிப்பைச் சொல்லித் தர மறந்திருக்க வேண்டும். கிலுகிலுப்பையாய்ப் பின்னாமல்-நார்ப் பெட்டியாய்ப் பின்னிப் போட்டு விட்டனர் என்னை.இப்படி ஒரு பையன் இருக்கிறது போல இதற்கு எதிரிடையான பையன்களும் இருக்கிறார்கள். தினம் தினம் என் கண்ணில்ப் படுகிற ரொம்பக் கண்ணறாவியான, ஒரு பரிதாபகரமான பையன். அவனுக்கு பத்து வயதிருக்கும். சில சமயம் சட்டை இருக்காது. சிலசமயம் டிராயருக்குப் பதில் சாரம் கட்டி இருப்பான். பாங்கிற்கு எதிரில் அல்லது ஒட்டிய வரிசையில் ஒரு ஜாதிக்காய்ப் பெட்டியில் ஈயப் பானையும் மண் ஜாடியுமாக இருந்து கொண்டு “ மோர் ஐஸ் மோர்’’ என்று கத்திக் கொண்டிருப்பான். தீனமாகக் கத்துவதால் அவன் பெயர் தீனன் எனக்கு. அவனுடைய புத்தகங்களைக் கன்றுக் குட்டி மேய்ந்திருக்கலாம். பீடி இலை முதலாளியின் வம்சங்களிடம் தன்னை சுருளக் கொடுத்த அம்மாக்களை விட்டு வெகு தூரம் வந்து மோர் விற்கலாம். இந்தப் பையனையும் நான் சிரித்துப் பார்க்க விரும்புகிறேன். பக்கத்து வீட்டில் ஒரு சின்னஞ்சிறு நாய்க்குட்டி கத்துகிறது.எல்லாப் பையன்களின் வாழ்க்கையிலும் ஒரு தடவையாவது நாய்க் குட்டியை வளர்க்கிற ஆசை வரும். பக்கத்து வீட்டில் கண்டிப்பாக ஒரு பையன் இருக்க வேண்டும். இந்த நாய்க்குட்டி தெருவில் அழுது நின்றிருக்கும் கங்கைப் பையா- உன்னுடைய தெருவில் அப்படியொரு நாய்க் குட்டி அலைந்து நின்றதில்லையா? “ இருக்கிற சனியன் போதாதுன்னு இது வேறையா என்று நீ கொண்டு வந்த நாய்க்குட்டியை, ஏசின அம்மாவே , தேங்காய்ச் சிரட்டையில் நீ அதற்கு காப்பி ஊற்றும் போது, “மண்டை வீங்கிச் செத்துப் போகும், பாவம் என்று ஈயக் கிண்ணி தந்ததில்லையா? டைகர், ஜிம்மி, மணி, இதைத் தவிர நாய்க் குட்டிகளுக்கு வேறு பெயர்கள் வைக்க முடியுமென்று படிப்புச் சத்தியமா அந்தச் சின்ன வயதில் உனக்குத் தெரியுமா?பள்ளிக்கூடம் விட்டதும் வீட்டுக்குப் போகாமல் பைக்கட்டுடன் உன் பெருமையான நாய்க் குட்டியைப் பார்க்க ‘உன் சேக்காளிநான் வருகிறேன் கிழிந்த சாக்குடன் விளையாடிக் கொண்டிருக்கும் அதை எனக்கு தூக்கி வந்து காட்டு. சூட்டிகம் இருக்கிறதா என்று அதன் காதைப் பிடித்துப் பார்க்கிறேன், நீ இல்லாத சமயத்தில் அல்லது உன் அனுமதியுடன். எழுது வேறு நல்ல விஷயங்கள் பற்றி என்று முடித்திருக்கிறாய். புழுக்களாய் துவங்கிப் பட்டுப் பூச்சிகளாக முடிவது நல்ல விஷயங்கள் இல்லையா?

உன் நெல்லை-6

கல்யாணி 20.6.74

கல்யாண்ஜி/ வண்ணதாசனின் கடிதங்களே தனீ இலக்கியம் அவை ஏற்கெனவே இரண்டு தொகுதிகள் வந்துள்ளன. மூன்றாவது தொகுதி தொகுக்கப்பட்டு வருகிறது. தங்களிடமுள்ள வண்ணதாசனின் கடிதங்களை, முடிகிற விரைவுடன், நண்பர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். பிரதி எடுத்த பின் பத்திரமாக திரும்ப அனுப்பி வைப்பார், நண்பர்:

திரு. கே.சண்முக சுந்தரம்,

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,

களக்காடு-627501

திருநெல்வேலி மாவட்டம்.

கை பேசி: 99442 60299

Visitors