Wednesday, July 14, 2010

ஓடும் நதி-40


ஏழாம் வகுப்பில்,ஓரியண்ட் லாங்க்மேன் பதிப்பித்த, “DAWN READER”, என்று நினைவு, ஆங்கிலப் பாடப்புத்தகமாக இருந்தது. ,ஸ்டீபன் பாலையா சார், எல்லோரும் புதுப் புத்தகமாகவே வாங்கிருங்கடா அப்பத்தான் படிக்க நல்லது, பழைய புத்தகமென்றால் கேள்விகளுக்கு விடையெல்லாம் முந்தின வகுப்பு மாணவர்கள் எழுதி வைத்திருப்பார்கள் என்று சொல்லி எல்லோருக்கும் அவரே புதிதாய் புத்தகம் வாங்கித் தந்தார்.மொத்தமாக வாங்கினதால், விலையும் சௌகரியமாய் இருந்தது.சார் ரொம்ப நல்ல மாதிரி,ஸ்கூலெல்லாம் முடிந்த பின்னும் பணம் வாங்காமல் டியூஷன் சொல்லித் தருவார்.நான் போக மாட்டேன், மாலை முழுதும் விளையாட்டில்லாவிட்டால் தெருவும் புழுதியும் என்னாவது.

அந்தப் புத்த்கத்தில், ஒரு பாடம் ‘அராக்னி(ARACHNE) என்ற கிரேக்க கதை.அது பரிட்சைக்கு கிடையாது என்பதால், வகுப்பில் நடத்துவதில்லை.அந்தக் கதையை தட்டுத் தடுமாறிப் படித்துப் பார்த்தேன்.பாதி புரிந்தது.அன்று மாலை, சாரிடம் கேட்கலாம் என்று வீட்டுக்குப் போகாமல் இருந்தேன்.சார், என்னடே காரணமில்லாம நீ இருக்கமாட்டியேஎன்றார். நான், இந்த அராச்னே கதையைச் சொல்லுங்களேன் என்றேன்.அதை அராக்னின்னு வாசிக்கணுண்டாஎன்று கதையைச் சொன்னார்..

அராக்னி அற்புதமான சித்திர வேலைப்பாடுகளுடன், பிரமாதமாகத் துணி நெய்வாள். அவளது புகழ் பெருமளவில் பரவியிருந்தது. (இப்பொழுது பட்டுச் சேலைகளில் “ராமாயண, மகாபாரதக் கதைகள் எல்லாம் வருவது போல்,) அராக்னி பல கிரேக்க புராணக் கதைகளை அவள் நெய்யும் துணிகளில் தீட்டுவாள்.அவளது அசாத்தியத் திறமையும் புகழும் அவளது அகங்காரத்தை வளர்த்தது.என்னை வெல்லுவதற்கு இந்தக் கலையின் அதிதேவதையான மினர்வாவினாலும் முடியாதுஎன்று சவால் விடுத்து வந்தாள்.இதைக் கேள்விப்பட்ட தேவதை மினர்வா ஒரு வயதான பெண்ணாக உருவெடுத்து அராக்னி முன் தோன்றினாள். நீ, உன் திறமைக்காக சந்தோஷப்படலாமே தவிர,கடவுளர்களிடம் சவால் விடக்கூடாது என்று அறிவுரை சொன்னாள்.அராக்னி பதிலுக்கு மறுபடியும் சவால் விட்டாள் உடனே சுய உருவம் அடைந்த ‘மினர்வா சவாலை ஏற்றுக் கொண்டாள். இருவருக்கும் போட்டி நடந்தது. மினர்வா தான் பொசைடன் என்ற் சமுத்திரக் கடவுளுடன் நடத்திய வெற்றிப் போரை சித்திரமாக சேலையில் நெய்தாள். அராக்னி, தலமைக் கடவுளான ஜீயஸ்ஸின் -அவர், நம்ம புராணத்து இந்திரனுக்கு அண்ணன் போல- ‘பலான இருபத்தியோரு திருவிளையாடல்களை நெய்திருந்தாள். உண்மையிலேயே அராக்னியின் சித்திரமே பிரமாதமாக இருந்தது. தோற்றுப் போன மினர்வா, நம்மை ஒரு மானுடப் பெண் வெல்வதா என்ற கோபத்தில் அராக்னியின் தறியை உடைத்து, அவள் நெய்தவற்றை கிழித்தெறிந்தாள்.அராக்னியையும் நீ “சிலந்திப் பூச்சியாகக் கடவது என்று சபித்தாள்.அன்றிலிருந்து சிலந்தி நெய்து கொண்டே இருக்கிறது. அராக்னியின் கதை, சிலந்தியின் கதை, பல ஓவியர்களைப் பெரிதும் பாதித்த புனைவு. அதைப் பல விதமாக சித்தரித்துத் தள்ளியுள்ளார்கள்.

உண்மையில் இந்த மாதிரி புனைவுகள் எல்லாம், பல நாடோடிக் கதைகளின் தொகுப்பென்றே நினைக்கிறேன்.எந்த நாட்டின் புராணமாக இருந்தாலும் இப்படிக் கதைகள், புராணத்தில் சேர்ந்து கொண்டே இருக்கின்றன.ஆதாரமான ‘கடவுள் என்கிற விஷயத்தை மட்டும் லேசாகத் தொட்டுக் கொண்டால் போதும்.

உலகின் பல ஜீவராசிகளும், சிவபெருமானிடம் சென்று ,எங்களுக்கெல்லாம் உறைவிடம் என்று எதுவும் இல்லை, எங்களுக்கு உறைவிடம் வேண்டுமென்று முறையிட்டனவாம். உடனே அவரும் ஒவ்வொரு உயிருக்கும், ஒவ்வொரு வாழ்விடத்தை ஒதுக்கிக் கொடுத்தாராம்.எல்லா உயிரினங்களுக்கும் தகுந்த இடமாக யோசித்து யோசித்துக் கொடுத்து அலுத்துப் போய் இருக்கும்போது, தாமதமாக வந்த பேன்’, ”எனக்கு ஒரு இடமும் இல்லையே நான் எங்கே இருக்க என்று கேட்டதும்,கோபத்தில் அவர்,நீ என் தலையில போய் இருந்துக்கோ, என்று சொல்லி விட்டாராம்.அதிலிருந்துதான் பேன்கள் தலையில் இருந்து கொண்டு உயிரை எடுக்கின்றனவாம்.

இதே போல் பாம்பு சட்டை உரிப்பதற்கு ஒரு கதை,தேள் கொட்டி விட்டு, ‘டபக்கென்று ஒளிந்து கொள்வதற்கு ஒரு கதை, என்று ஏகப்பட்ட கதைகள் உலவுகின்றன.இங்கே, வெள்ளகால் என்ற ஊரில் தேளே கிடையாதாம். கொண்டு போய் விட்டாலும் அவை இறந்து விடுமாம். வழக்கமாக தைப் பொங்கலுக்கு வெள்ளை அடிக்க வரும் ஒருவர் சொன்னார்.அதே போல வெள்ளையடிக்கும் முன் வீட்டை ஒதுங்க வைக்கும் போது, புழங்காமல் கிடக்கிறவைகளிலிருந்து பூரான்கள் வரும். அவர் அதை அடிக்க மாட்டார். யாராவது பெண்களைத்தான் கூப்பிடுவார்.நான் அடிக்கிறேன் என்றால், பூரானை, ஆண்கள் அடிக்கக் கூடாது சார், நான் பாம்புக்கே பயப்படாதவன், பூரானுக்கா பயப்படுவேன் என்பார், ஆமா அதுல என்ன விஷயம்ன்னு கேட்டா, “அதுல பாருங்க, யாரோ ஒரு பொம்பளை,புருஷனுக்கு பாலில் விஷம் வச்சுக் கொடுத்திருக்கா,அவன் கோமதியம்மனைக் கும்பிடுறவன், அதனால அம்மன் என்ன செஞ்சா, ஒரு பூரானை அனுப்பி நீ பாலில் விழுந்து கிட என்றாள். அதுவும் விழுந்து செத்து மிதந்ததாம். பூரான் விழுந்து கிடந்த பாலை அவன் குடிக்காமல் தூரக் கொட்டினானாம்.நல்லவேளை அவனும் தப்பிச்சான், பொம்பளையாள் பேரும் கெட்டுப் போகலை. அதனாலதான் நம்ம ஊர்ல ஆண்கள் யாரும், பூரானை அடிச்சுக் கொல்றதில்லை, என்றார், அந்தப் பிரம்மச்சாரித் தொழிலாளி.

Visitors