Sunday, May 17, 2009




ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி வருவதாக இருந்த படம் 22-ஆம் தேதி வந்தது.மத்தியானம் அப்பாவுடன் போன போது,பாப்புலர் தியேட்டர் முன்னால் அப்படியொரு கூட்டம்.கிழக்குக் கடேசி கேட் வழியே சைக்கிள் டிக்கெட்டிற்கும் கூட்டம்.அப்படித் தான் போனோம்.இன்னும் படப் பெட்டி வரவில்லை என மேனேஜர் ராஜு அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.உலக உரிமை: செட்டியார் பிலிம்ஸ், மதுரை, என்று போட்டிருந்தது, சில போஸ்டர்களில்.அப்பா கேட்டுக் கொண்டிருந்தார், நமக்கு டிஸ்ட்ரிப்யூஷன் மட்டும் தானா என்று.ஆமா, ஆனா படம் பிரமாதமா வந்திருக்காம், அய்யர் பேசீட்டு வந்திருக்கார், ஏரியா கமிட் ஆயிரும் என்றார். ராஜு. இதெல்லாம் பின்னாளில் தெரிந்து புரிந்து கொண்ட வார்த்தைகள்.மாலை நாலு மணி வரை பெட்டி வரவில்லை.அப்பா வா போவோம் என்றார்.நான் மறுத்தேன்.என் பெரிய மதினியின் தம்பி வேலு அத்தான் சொல்லியிருந்தார், லீவுக்கு வரும் போதே, நீ முதல் நாளே பார்த்திருலெ என்று.புதுமைப் பித்தன் படத்தை மூன்றாவது நாள், ஞாயிறுக் காலைக் காட்சியில், அநியாய வெக்கையில் பார்த்த போது அப்பாவுடன் அவரும் வந்திருந்தார்.அது மூன்றாம் வகுப்பு படிக்கையில்.
காணாததற்கு என்னுடன் கூடப் படிக்கும் வாசமுத்து வேறு உசுப்பேற்றியிருந்தான், ஏல நீயெல்லாம் அந்தக் கூட்டத்தில போனா சட்னியாயிருவேலெ.. என்று. எனக்கு தியேட்டரை விட்டு வெளிய வர மனசில்லை.மறுத்து அழுவது போல் முடியாது என்றேன்.சோபா டிக்கெட் வாசலில் பகவதியா பிள்ளை நின்று கொண்டிருந்தார்.அவர் தலை முடி சுருள்சுருளாக இருக்கும்.. கிட்டடத்தட்ட சினிமாக் கதாநாயகன் முடி போல இருக்கும்.கையில் பகவதி என்று பச்சை குத்தியிருப்பார்.அவரிடம் சொன்னார் அப்பா, பகவதி இவனை பாத்துக்க, என்று. ஒங்க அப்பாவுக்கு போத்தி ஓட்டலில் காபி குடிக்க நேரமாயிட்டுரே என்று, அவர் என்னை விட்டு விட்டுப் போன பின், சாமியா பிள்ளை என்னிடம் கிண்டலாகச் சொன்னார்.அவர்தான் உதவி மேனேஜர்.அவரிடம் தான் பாஸெல்லாம் இருக்கும். சோபா டிக்கெட்டில் எஸ் கே முதலாளி, நாகுப் பிள்ளை, என்று சிலர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களிடமிருந்து தள்ளி உட்கார்ந்திருந்தேன்.ஒரு சோபாவில் மூன்று பேர் உட்காரலாம்.நான் ஒரு ஓரத்தில் எலிக் குஞ்சு போல உட்கார்ந்திருந்தேன், எங்கே வெளியே அனுப்பி விடுவார்களோ என்று பயம்.எட்டு மணி வாக்கில் படப் பெட்டி வந்து விட்டதாக பரபரப்பு ஏற்பட்டது தான் தாமதம், என்னைச் சுற்றி கூட்டம் அப்பி விட்டது. படபடவென்று லைட்டையெல்லாம் அணைத்து படம் ஓடத் தொடங்கியது. திரையில் ஒரு பெண்ணும் ஆணும், சிலையாய் இணைந்து தி.மு.க கொடியைப் பிடித்தபடி, வட்ட மேடையில் திரும்பிய போது,.தியேட்டரில் விசிலும் கும்மாளமும் காதைப் பிளந்தது. நன்றாய் நினைவிருக்கிறது,ஒளிப்பதிவு ஜி.கே. ராமு என்று எழுத்து (டைட்டில்) போடுகிற போது கைதட்டல் பலமாய் இருந்தது. பின்னால், வேலு அத்தானோடு ஒரு முறை பார்க்கிற போதுதான், ஜி,கே. ராமு பற்றியும், படத்தின் கலர்ப் பகுதிக்காக, எம் ஜி ஆர் அவரை பம்பாய்க்கு, கலர்த் தொழில் நுட்பம் படித்து வர அனுப்பி வைத்த கதை பற்றியும் தெரிய வந்தது.டபிள்யூ ஆர் சுப்பாராவ்,( அலிபாபா படத்திற்கு கேமரா மேன்) அதைப் பண்ணித்தர மறுத்து விட்டார், என்றெல்லாம் செய்திகள் வந்திருந்தனவாம்.வசனம் கண்ணதாசன்-ரவீந்தர், என்று போட்ட போதும் கை தட்டுகள் எழுந்தது. படம் போய்க் கொண்டே இருந்தது.`மன்னன்எம்ஜியார்’ பழரசம் அருந்தி மயங்குகிற கட்டத்தில் இதுதான் போஸ்டரில் இருக்கிறது என்று நினைவு வந்தது.சந்திர பாபு வாயிலிருந்து கோழிக் குஞ்சை எடுக்கிற கட்டத்தில் விழுந்து விழுந்து சிரித்தது பசுமையாய் நினைவிருக்கிறது.
`வீர மாமுகம் தெரியுதே, அது வெற்றிப் புன்னகை புரியுதே ‘ என்று க்ளை மாக்ஸ் பாட்டு வந்த போது அநேகமாய் தியேட்டர் முழுவதும் எழுந்து நின்று உற்சாக வெள்ளத்தில் ஆடிக் கொண்டிருந்தது. விசில் காதைப் பிளந்து கொண்டிருந்தது. கொண்டிருந்தது, நானும் சோபாவிலிருந்து, நசுக்கி, நகர்த்தப் பட்டு, அதன் அகலமான கைப் பிடியில் நின்று கொண்டிருந்தேன்.யாரோ விழுந்துராதலே என்று சொன்னார்கள்.படம் முடிந்து வெளியே கூட்டம் பிதுங்கிக் கொண்டிருந்தது.அடுத்த காட்சி கிடையாது என்றும், உண்டு என்றும், ஒரே தள்ளு முள்ளாய் இருந்தது.எப்படி வீட்டுக்குப் போவது என்று பயமாய் இருந்தது. ஒன்றுக்கு வேறு முடுக்கிக் கொண்டிருந்தது,கிட்டு அண்ணாச்சி எங்க அப்பா, எங்க என்று தியேட்டரில் வேலை பார்க்கும் இன்னொருவரிடம் கேட்டேன். அம்மைத் தழும்பு விழுந்த முகம் அவருக்கு. அவர் தான் நாங்கள் குடும்பத்துடன், சினிமா பார்க்கப் போனால், டீ காபி யெல்லாம் வாங்கி வந்து தருவார்.நான் கூட, ஒரு முறை அவரை அப்பா கூப்பிடுவது போல் கிட்டுப் பிள்ளை, என்று அதிகப் பிரசிங்கித்தனமாகக் கூப்பிட்டு, அப்பாவிடம் ஏச்சு வாங்கியிருக்கிறேன்.அது புதையல் படம் பார்க்கிற சமயம்.இன்று பயத்தில் மரியாதையாக விசாரித்தேன். அதற்குள் பெரிய அண்ணன் வந்து விட்டான்.வீட்டில் எல்லாரும் விழித்துக் கொண்டிருந்தார்கள்.மதினி, வரிசையார் என்று அழைப்பதுதான் வழக்கம், ஏலே நாடோடிமன்னம் பாத்துட்டியா. கெட்டிக்காரந்தாண்டே..சரி சரி சாப்பிட வா என்று கூப்பிட்டார்கள்.மற்றவர்கள் எல்லாம் ஒரு மாதிரியாக ஆனால் அமைதியாக இருந்தார்கள்.மறுநாள் என் இரண்டாவது அண்ணன்,படம் பார்த்து விட்டு பாட்டுப் புத்தகம் வாங்கி வந்தான். அவன் தமிழரசுக் கழக அனுதாபி. அவனுடைய நண்பன் தூத்துக் குடி சேது, எம்ஜியார் ரசிகன். வருடந்தோறும் திராவிட நாடு திராவிடருக்கே என்று எழுதி பொங்கல் வாழ்த்து அனுப்புவான், அண்ணனுக்கு. எல்லாவற்றையும் அவன் என்னிடம் தந்து விடுவான்.நாடோடி மன்னன் பாட்டுப் புத்தகத்தை என்னிடம் ரொம்ப நாள் கழித்தே தந்தான்.அவன் ஞாபகமாக அது என்னிடமே இருக்கிறது.
நாடோடி மன்னன் வந்தது 1958-ல். அதற்கப்புறம் படமே வரவில்லை,சீர்காழியில் இன்பக் கனவு நாடகத்தில், குண்டு மணியைத் தூக்கி நடிக்கும் காட்சியில் கால் முறிந்து, ஆஸ்பத்திரியில் இருந்தார். 1959 டிசம்பர் 31-ந் தேதி, தாய் மகளுக்கு கட்டிய தாலி, வந்தது.அந்த வருடம் படமே வரவில்லை என்ற குறை இருக்கக் கூடாது என்பதற்காக வந்த படம் என்பார்கள். அண்ணா, கதை வசனம் எழுதிய படம்.படம் ஓடவில்லை. குமுதத்தில், ஒரு பக்கம் முழுக்க ஒரு ஸ்டில் போட்டு, மறு பக்கத்தை வெறுமையாக விட்டு, கடைசியில் ஒரே ஒரு வரி, விமர்சனம், `வெட்கக் கேடு` என்று எழுதியிருந்தார்கள். சரியாக பத்து வருடம் கழித்து,எம் ஜி ஆரை, சென்னையில் நேரில் பார்த்தேன்.அதற்கு முன், 1964 –ல் தனுஷ் கோடி புயல் வீசிய போது அங்கு போய் விட்டு திருநெல் வேலியில் ஒரு மாபெரும் கூட்டத்திற்கு வந்திருந்தார்.அப்புறம் எங்க வீட்டுப் பிள்ளை வெற்றி விழாவிற்கு வந்திருந்தார்.67-ல் தி மு க ஆட்சிக்கு வந்த போது, எம்ஜியார் சிறு சேமிப்பு திட்ட துணைத்தலைவர் ஆக இருந்தார்.அப்போது சந்திரகாந்தா நாட்டியத்திற்கு தலைமை தாங்கி சிறு சேமிப்பு விழா நடத்த திருநெல்வேலி வந்திருந்தார்.அப்போது கலெக்டர் வீட்டில் மதிய விருந்து.அந்த சமயத்தில், தினமலரில் நிருபராய் இருந்த என் ஒன்று விட்ட அண்ணன் ஒருவர் அங்கே அழைத்துப் போயிருந்தார்.அப்போதுதான் முதன் முதலாக நெருக்கமாக பார்த்தது. அது பழைய ப்ரிட்டிஷ் காலத்து வீடு.அங்கே மீட்டிங் நடந்து கொண்டிருந்த அறையின் சுவர் பச்சை வண்ணமாயிருந்தது.தரையிலும் அடர் பச்சை நிறத்தில் காயர் விரிப்பு, அந்த பின்னணியில், கம்பிகளற்ற ஜன்னல் வழியாகரோஸ் நிறத்தில் எம் ஜி ஆரைப் பார்த்ததும் எனக்கும் சபாபதிக்கும் மூச்சே நின்று விட்டது. அவனும் என் அண்ணனிடம் கெஞ்சிக் கூத்தாடி உள்ளே வந்து விட்டான்.எனக்கும் அவன் வந்தது குறித்து ரொம்ப சந்தோஷம்,ஏனென்றால் நான் எம் ஜி ஆரை நேரில், அருகில் பார்த்ததுக்கு,சாட்சி வேண்டாமா?.மீட்டிங் முடிந்ததும் சாப்பிடுவதற்கு முன், அவர் சாலையில் கூடியிருந்த கொஞ்சம் ரசிகர்களின் ஆரவாரம் கேட்டு காம்பவுண்ட் வாசல் வரை வந்து கை அசைத்தார், இருங்க வாரேன் என்கிற மாதிரி.சபாபதி `ச்சேய்’ என்று உற்சாக மிகுதியில் சத்தம் போட்டான்.அவருடைய பாடி கார்ட் எங்கள் அருகே வந்து யார் என்ன என்று விசாரிக்கவும், தள்ளவும் ஆரம்பித்து விட்டார்.என் கையை லேசாக தட்டி விட்டார்.எலும்பில் வலி விண்ணென்று தெறித்தது.தர்மலிங்க அண்ணன் என்றேன், அந்த ஆள் சிரித்து விட்டார். அவர்தான் எங்க வீட்டுப் பிள்ளையில் ஒரு சண்டைக் காட்சியில் சரோஜா தேவியிடம் கைப்பையை திருடிக் கொண்டு ஓடுவார்.
எப்படியாவது சென்னை செல்ல வேண்டும், எம் ஜி ஆருடன் புகைப் படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை கிடந்து அடித்தது.தின மலர் நிருபர், சங்கரின் அண்ணன், ஆவுடையப்பன்,என்னிடம் ரொம்ப பிரியமாக இருப்பார்.சங்கரண்ணனுக்கு வேலை வாங்க உதவியது அப்பா தான்.இருவரும் எனக்கு பெரியப்பாவின் மகன்கள்.அவரது பெயரும் ஆவுடையப்ப பிள்ளை தான்.தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் பெரிய ஆர்வலர். மு.வ. வெல்லாம் நல்ல பழக்கம்.அந்தக் குடும்பத்திலும் ஏதோ கஷ்டம்.திருநெல்வேலிக்கு பிழைக்க வந்து விட்டார்கள்.ஆவுடையப்ப அண்ணான் ஜேயார் மூவிசில் ப்ரொடக்‌ஷன் மேனேஜராக வேலை பார்த்தார்.புதிய பூமி படம் படப் பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.தென்காசியில் அவனுக்குப் பழக்கமானவர்கள் எடுக்கிற படம். நம்பிக்கையான ஆள் தேவை என்பதால் அவர்கள் அழைத்து,அங்கே வேலை பார்த்து வந்தார்.எம் ஜி ஆர் குண்டடி பட்டு, படப் பிடிப்பெல்லாம் நின்று போயிருந்த சமயம், திருநெல்வேலியில்தான் அந்த அண்ணன் இருந்தார்.அப்போது அவரிடம் என் சென்னை வரும் ஆசை பற்றிப் பேசினேன். அட கிறுக்கா இதுக்கா யோசிக்கெ, அங்க கடல் மாதிரி ஆபீஸ் எடுத்துப் போட்டுருக்கோம்.நீ எப்ப வேண்ணாலும் வா, என்றார். இப்ப ரகசிய போலீஸ் ஷீட்ட்ங்க்ல பிஸியா இருக்காரு, சின்னவர்.அது முடிஞ்சதும் நம்ம படம் தான்னுருக்காரு, என்று சொல்லி ரகசிய போலீஸ் ஸ்டில் ஒன்றைக் கொடுத்தார்.என் அப்பாவிடமும் இவனை என் கூட அனுப்புங்க அவனும் மெட்ராஸெல்லாம் பாக்க, பழக வேண்டாமா, என்று அப்பாவிடமும் ஒரு நாள் அந்த அண்ணனே சொன்னார்.
அந்த இந்தாவென்று, சென்னை ஆசை அந்த வருட லீவில் நிறைவேறியது.கல்யாணிஅண்ணனின் அண்ணன் கணபதி அப்போது சென்னையில் இருந்தார்.அவருக்கு திருமணம் உறுதியாகி இருந்தது.உண்மையில் கணபதியண்ணன் தான் எங்களுக்கு எல்லா வகையிலும் முன்னோடி என்று சொல்ல வேண்டும்.அற்புதமான ஓவியர்.மிகச் சிறந்த மரபுக் கவிஞர். ப்ரஷ்ஷும் பேனாவும், கல்யாணி அண்ணனுக்கும், அவர் மூலமாக எனக்கும் அறிமுக மானதே அவரால் தான்.என் எந்தத் தொகுப்பு வந்தாலும் முதல் பிரதியை அவருக்கு `ஒம் கஜானனம் பூத கணாதி ஸேவிதம்...’என்று எழுதி அவருக்குத் தான் அனுப்பி வைப்பேன்.நான் ப்ரஷ்ஷைத் தொட்டதில்லை.அவர் நெல்லை வந்து விட்டு மெட்ராஸ் போவதாகச் சொன்னார். அப்பாவிடம் கேட்க வேண்டும்.அப்பா ஊர்ரில் இல்லை. அவர் வந்ததும் கேட்க வேண்டும், என்ன சொல்லுவாரோ,இது நடக்குமா, என்று பல சோழிகளை உருட்டிக் கொண்டிருந்தேன்.திருநெல்வேலி ரேடியோவில் பாட்டுப் போட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு விளையாட்டு, எங்களுக்கு வழக்கம்.நாம நினைக்கிறதுக்கு சாதகமான வரியுடன் அடுத்த பாடல் ஒலிபரப்பப் பட்டால், நாம நினைச்சது நடந்துரும்.`நாடோடி’ படம் நல்லா ஓடுமா என்று சபாபதியும் நானும் பேசிக் கொண்டிருந்தோம்.காகிததில் கப்பல் செய்து கடல் நடுவே ஓட விட்டேன்... என்று பாடல் போட்டார்கள்.`யேய் படம் டப்பா’’ என்று சொல்லியதை சபாபதி ரசிக்க வில்லை.ரேடியோவையே அணைத்து விட்டான். இன்று நான் எனக்காக, மெட்ராஸ் போக வாய்க்குமா என்று ரேடியோ ஜோஸ்யம் கேட்டுக் கொண்டிருந்தேன்.அனுபவி ராஜா அனுபவி படத்திலிருந்து வரும் அடுத்த பாடலைப் பாடியவர்...அடேய் டி எம் எஸ் ஸுன்னு சொல்லுங்க என்று மனசு சொல்லும் போதே, சௌந்தர் ராஜன் என்று சொன்னதும் கத்தாத குறைதான்.`மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்....’பாட்டை எனக்காகவே ஒலி பரப்பிய மாதிரி இருந்தது.
அப்பா முதலில் இப்ப ரூவா இல்லையே, என்றுதான் ஆரம்பித்தார்கள்.எனக்கு கொஞ்ச ரூவா போதும் டிக்கெட்டுக்கு மட்டும் கொடு என்றேன். சரி, தெய்வானை மகன் என்னிக்கி போறான், அவன் கூடப் போய்ட்டு வா என்றதும்,சந்தோஷம் பொங்கியது. ஏயப்பா வாயெல்லாம் பல்லாருக்கே புள்ளைக்கி என்று சின்ன அக்கா கேலி செய்தாள்.
1966-ல் தெருவில் நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து பிப்ரவரி மாதம், 11 வது வட்ட திமுக.உட்கிளையாக `மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம்’ ஆரம்பித்திருந்தோம். ஜனவரியில் ஆரம்பிப்பதாக இருந்தது, லால் பகதூர் சாஸ்திரி இறந்ததால் அதைத் தள்ளி வைத்து பிப்ரவரியில் திறந்தோம்.திருச்சி, திமு க எம் எல் ஏ , எஸ் எஸ் .மணி திறந்து வைத்தார்.கலைஞரை அழைக்கும் கனவில் ஆரம்பித்து, காஞ்சி கல்யாண சுந்தரம், காட்டூர் கோபால், என்று விசாரித்து. எஸ்.எஸ்.மணியில் வந்து நின்றது. அவருக்கு போக்கு வரத்து செலவுக்கு ஐம்பது ரூபாய் மணி ஆர்டர் நான் தான் அனுப்பி வைத்தேன்.அதிலிருந்து மன்றத்தின் கடிதப் போக்கு வரத்துக்கு நானே பொறுப்பானேன்.எங்கள் வீட்டு முகவரியான `28.சுடலை மாடன் கோவில் தெரு’அதற்கான முகவரியாயிற்று.
தென் சென்னை எம் ஜி ஆர் ரசிகர் மன்ற செயலாளர் எஸ்.கல்யாண சுந்தரம்,வடசென்னை, குமரப்ப முதலி தெரு,ஏழு கிணறு எம்ஜிஆர் ரசிகர் மன்றம், மதுரை புதுக்குயவர் பாளையம், சீத்தாரமன், சுந்தர ராஜன், வேலூர் ஆர். எஸ் மாறன்,பீப்பிள்ஸ் ஸ்டார் எம்ஜி ஆர் ஃபேன்ஸ் அசோஷியேஷன் தூத்துக்குடி, பாலகிருஷ்ணன்,திருச்சி. தா வரதராஜன். (தினத்தந்தி, டெலி பிரிண்டர் ஆபரேட்டர், பறவை சாலை, திருச்சி.)இன்னும் சேலம் , கரூர், என்று எத்தனையோ மன்றங்கள்.தினமும் தபால் வரும் , வசூல் நோட்டீஸ் வரும். நானும் இங்கே அடிக்கிற நோட்டீஸ்களை அனுப்புவேன். இரண்டு வருடத்தில் அவை நூற்றுக் கணக்கில் சேர்ந்து விட்டது. சிலர் அற்புதமான பேனா நண்பர்களாகி விட்டனர்.எல்லவற்றையும் ஒரு பெரிய கைப் பையில் எடுத்துக் கொண்டு மெட்ராஸுக்கு கணபதியண்ணனுடன் ரயிலேறினேன்..............................................................................(தொடரும்)



Visitors