Tuesday, March 30, 2010

ஓடும் நதி- 25


தெருவின் கிழக்கு முகப்பில் ஒரு அடுக்குச் சுடலைமாடன் கோயில். அதனாலேயே தெருவுக்கு சுடலை மாடன் கோயில் தெரு என்று பெயர்.சுடலைமாடன் நெல்லையப்பர் கோயிலுக்கு கொடிமரம் செய்ய பாவநாச மலையிலிருந்து, ஓங்கு தாங்கான பெரிய மரத்தை வெட்டிக் கொண்டு வரும் போது மரத்தோடு கூடவே வந்து விட்டார்.இந்த இடத்தைப் பார்த்ததும் இங்கேயே இருக்கவும் தீர்மானித்து விட்டார்.அநேகமான ஊர்களில் மாடன் பெரும்பாலும் இப்படி வந்து சேர்ந்ததாகவே கதைகள் வழங்குகின்றன.

கிழக்கிலிருந்து தெருவின் முக்கால் பகுதிக்கு அவர்தான் காவல். அதற்கப்புறம் உள்ள மேல்பகுதிக்கு இன்னொரு லாட சந்நியாசி நிறுவிய பாப்பாத்தி அம்மனோ, வாசிக்க மீண்ட விநாயகரோ காவல். விநாயகர் இருப்பதால், அவர் தம்பியான சுடலை மாடன் எதற்கு என்று நினைத்திருக்கலாம். தெருவின் மேற்குக் கால்வாசிப் பகுதியில் யாராவது இறந்து போனால் அப்படியே எடுத்துக் கொண்டு மயானத்திற்குப் போய் விட வேண்டும்.சுடலைமாடன் முன்பாக வரக்கூடாது.

ஒரு சமயம் ஒரு துஷ்டி வீடு. அது கிழக்கு எல்லைக்குள்ளா அல்லது மேற்கு எல்லைக்குள்ளா, எங்கே வருகிறது என்று பெரியவர்களால் தீர்மானிக்க முடியாதபடிப் போய் விட்டதாம்.சரி கிழக்காக சுடலை கோயில் முன்பாகவே பாடை செல்லட்டும் என்று சொல்லி விட்டார்கள்.கோயில் நெருங்க நெருங்க பிணம் செக்குக் கனம் கனக்க ஆரம்பித்து விட்டதாம்.பிணந்தூக்குபவர்கள் ஐயாமாரே, இது இப்படிப் போகக் கூடாதுன்னு சாமி சொல்லற மாதிரி இருக்கே, நாங்க திரும்பட்டுமா இல்லேன்னா இங்கயே வச்சுர வேண்டியதுதான்என்று நாலு பேரும் ஒருப்போல சொல்லியிருக்கிறார்கள் .சரி திரும்பி நடந்துராதிங்க, பின்பக்கமாகவே வாங்கப்பா என்று சொல்ல அவர்களும் அப்படியே பின் நடை’(REVERSE) நடந்து வர வர பிணம் லேசாக ஆகத் தொடங்கியதாம். அன்றிலிருந்து அந்த வீடுவரை சுடலைய்யாவின் எல்கை என்று தீர்மானமானதாம்.

அதற்கப்புறம் பலரும், நானே வெள்ளி செவ்வாயில் பாத்துருக்கேன், நடுராத்திரி நேரம் தப்பி வந்தா, நாயோட சுடலை கூடவே வருவாரு, நாய் முன்னால வரும், ஐயா புகை மாதிரி பின்னால் வருவாரு. நல்ல வெள்ளை நாய். இந்த இடம் வந்தா நாய் தீயைத் தொட்ட மாதிரி சடக்குனு நின்னுரும்என்று தங்கள் தங்கள் புராணங்களைச் சொன்னார்களாம்.

சுடலையை நம்பாத ஒரு ஆங்கிலேய போலீஸ் அதிகாரி, டவுண் ஸ்டேஷனில் (நம்ம விக்ரம் ஆறுச்சாமி ஏ.சி.யா நடிச்ச ஸ்டேஷன்!) வேலை பார்த்தாராம். அவர் ஒரு செவ்வாய்க்கிழமை ராத்திரி அசால்ட்டா(திமிரா) வீட்டுக்கு வந்து கொண்டு இருந்திருக்கிறார். அவரை, அன்று ‘போட்டுத் தள்ள யாரோ பின்னாலேயே வந்திருக்கிறார்கள். போடப் போகும் சமயம் சுடலை நாயுடன் புகை ரூபத்தில் பாய்ந்து அதிகாரியை உருட்டி விட அவர் தலை தப்பியதாம்.அவர் தொப்பியை மட்டும் எவ்வளவு தேடியும் காணவில்லை.காலையில் கோயிலுக்கு ஓடோடி வந்து பார்த்தால் அவரது தொப்பி சுடலையின் தலையில் இருக்கிறதாம்.இன்னும் அந்த தொப்பியை ஒவ்வொரு கொடையன்றும் எடுத்து வைத்து அலங்காரம் செய்வார்கள்.

இப்படிப் பல புனைவுகள் எப்படி ஏற்படுகின்றன தெரியவில்லை. ஆனாலும் கொடை, கொண்டாட்டம் எல்லாம் எல்லோரையும் ஒரு மைதானத்தில் ஒன்று சேர்ப்பதை மறுப்பதற்கில்லை. சுடலை மாடன் எங்கள் தெருவுக்கென்று இல்லை, மேலரதவீதி பூராவுக்குமே பிடித்தமான, நம்பிக்கையான தெய்வம்.

மேல ரதவீதியும் வடக்கு ரதவீதியும் சேரும் இடத்திற்கு சற்றே வடக்கே இருப்பது, பிட்டாபுரத்தி என்கிற புட்டாரத்தி அம்மன்.வடக்குவாய்ச் செல்வி என்றும் நாமகரணம் உண்டு. நிறைய ஊர்களில் இப்படி வடதிசைக்காவலாக ஒரு கொற்றவை இருக்கிறது..ஒருவேளை வடக்கிலிருந்துதான் ஆபத்து வருமென்று அன்றைய தென்பாண்டிச்சீமை பயந்ததோ என்னவோ.உண்மையில் புட்டாரத்தி அம்மன் தான் நெல்லையப்பருக்கு முதல் மனைவியாம். ஏதோ ஒரு திக்கற்ற தாழ்த்தப்பட்ட சாதிப்பெண்,பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்திருக்கிறாள். தாய் மனம் பொறுக்கவில்லை, அம்மை பிரசவம் பார்க்கப் போய் தீட்டுப் பட்டு விட்டாள்.நீ இனி இந்தக் கோயிலுக்குள் வராதே என்று சுவாமி தடுத்து விட்டாராம்.அதனாலேயே புட்டாரத்தி அங்கேயே கோயில் கொண்டு விட்டாளாம். இன்றைக்கும் நெல்லையப்பர், ஒவ்வொரு ஆனி மாதமும் தேரூர்ந்து வருவார். புட்டாரத்தி அம்மன் முக்கிற்கு அருகே வரும் போது, முதல் மனைவிக்கு காட்சி தர, எப்படியாவது தேர் மண்ணில் பதிந்து நின்று விடும் என்பார்கள், கிழங்கட்டைகள். இதேபோல் விலக்கிவைக்கும் கதை நிறைய ஊர்களில் உண்டு. குற்றாலத்தில் இதே போல், இதே கதையுடன் குற்றால நங்கை, குற்றாலநாதருக்கு வடக்கே கோயில் கொண்டு இருக்கிறாள்.

எனக்கு புட்டாரத்தி அம்மனை ரொம்பப் பிடிக்கும். அவள் நினைவாக முதல்ப் பெண்குழந்தைக்கு ஆர்த்தி (AARTHY) என்று பேரிட்டேன்.இரண்டு “A” பெயரில் வந்தால், வருகைப்பதிவேட்டில் முதலில் வரும்,நேர்முகத் தேர்வென்றால் சீக்கிரமே அழைத்து விடுவார்கள் என்றெல்லாம் நினைப்பு. ஆம் சீக்கிரமே, பிறந்து ஆறு மாதத்திலேயே அழைத்துக் கொண்டு விட்டாள். தீது நன்மையெல்லாம் காளி, தெய்வ லீலையன்றோ”.

Visitors