Tuesday, December 8, 2009

ஓடும் நதி-9


அந்தக் கால வார இதழ்களில் ஓவியர் தாணுவின் கேலிச் சித்திரங்கள் ரொம்பப் பிரபலம்.அவரது சற்றே தடிமனான கோடுகள் சிரிப்பையும் சிந்தனையயும் தூண்டக் கூடியவை. ஆர்.கே. நாராயணனுக்கு மிகவும் நெருக்கமானவர் தாணு. பிற்காலத்தில், இப்போது பிரபலமாகப் பேசப் படக்கூடிய பிரில்லியண்ட் டூட்டோரியல் கல்லூரியை நிறுவியவர்.
எங்களது நண்பரும் ஓவியருமான சக்தி கணபதிக்கு அவர்தான் ஆதர்ஸம். சக்தி கணபதி, மகிழ்ச்சிக்கண்ணனுடன் இணைந்து `ஷங்கர்ஸ் வீக்லி’ பாணியில் தமிழில் ஆரம்பித்த `கிண்டல்’ என்ற அரசியல், கார்ட்டூன் இதழ் தான் திருவாளர் சோவுக்கும், துக்ளக் இதழுக்கும் முன்னோடி. ஆரம்பித்த வேகத்திலேயே இதழ் நின்று போனது. சக்தி, சமீபத்தில் இறந்து போய் விட்டார். மகிழ்ச்சிக் கண்ணன் துக்ளக் இதழிலிலேயே பணி யில் சேர்ந்தார்.
தாணு, அப்பொழுது (அறுபதுகளின் கடைசி) உத்தரப் பிரதேசத்தில் இந்தியாவிலேயே, முதன் முறையாக ‘பெரிய்ய’ அமைச்சரவை அமைந்த போது `மாகாராஜன் கப்பல்’ என்ற தலைப்பில் ஒரு கார்ட்டூன் வரைந்திருந்தார்.அளவான கோடுகள். ஒரு பெரிய கப்பல், வரிசையாக எம்.எல்.ஏக்கள் உள்ளே நுழைந்த வண்ணமிருக்கிறார்கள்.கப்பலில் உ.பி. என்று எழுதியிருக்கும். தன் 86 ஆவது வயதில் தாணு மறைந்து இன்றோடு சரியாக இரண்டு வருடங்கள் ஆகிறது. அவரது கப்பல் கார்ட்டூன் மனதை விட்டு அகலவே இல்லை.
இன்று உலகிலேயே மிகப் பெரிய கப்பலான OASIS OF THE SEAS பின்லாந்திலிருந்து தன் கன்னிப் பயணத்தைத் துவக்குகிறது.பதினாறு அடுக்கு கப்பல். 6300 பேர் தங்கக் கூடிய 2700 அறைகள், இரண்டரை வருட உழைப்பு, ஒன்னரை பில்லியன் டாலர் செலவு. நான்கு நீச்சல் குளம், கால்ஃப் மைதானம், திராட்சைக் கொடிகளுடன் கூடிய ஒரு குட்டிப் பனந்தோப்பு.......இதைப் பற்றியே கூகிள் தேடலில் லட்சக்கணக்கான தகவல்கள் உலவ ஆரம்பித்து விட்டது.
இனி இதை விடப் பெரிய கப்பல் தயாரிப்பது பற்றி உலகம் யோசிக்க ஆரம்பித்து விடும். மிதவை விதி தோன்றும் முன்னரே நாவாயும், ஓடங்களும் ஓடத் துவங்கிவிட்டன.`கால் வல் நெடுந்தேர் பற்றியும்,’ கடாரம் கொண்டான் பற்றியும் நம்மிடம் பதிவுகள் உள்ளன. `வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும், ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்..’ என்று திரையிசை பாடியாகி விட்டது.
கப்பல் என்பது ஒரு தொன்மையான உருவகமாக, படிமமாக எங்கேயும் உலவிக் கொண்டிருக்கிறது.கப்பல் என்றதும் நங்கூரம் பற்றி நினைவுக்கு வருகிறது. சில பொருட்கள் தங்கள் ஆதி வடிவத்தைப் பெரும் பாலும் இழப்பதில்லை. அதில் நங்கூரமும் ஒன்று. சிற்சில மாற்றங்கள் எற்பட்டுள்ளனவே தவிர அநேகமாக அது தன் ஆதி வடிவத்தை இழக்கவில்லை.எப்படிச் சக்கரங்கள் மனிதனின் அற்புதக் கண்டு பிடிப்போ, அப்படியே கடலோடிகளின் நங்கூரமும். எனக்கென்னவோ மனிதனின் கண்டு பிடிப்புக்களில் மிக உன்னதமானது ஸ்க்ரூ என்கிற திருகாணி என்றே தோன்றுகிறது. (மரை தேய்ந்ததை மறந்து போனவர்கள் சங்கத்திலிருந்து யாரேனும், ஏதேனும் தத்துவம் மச்சி தத்துவம் சொல்லலாம்).
கப்பல் சாதாரணர்களின் ஆச்சரிய விஷயங்களில் ஒன்று. அதை அரசியலாக ஆக்கிய வ.உ.சியை நாம் நடுத்தெருவில் (நடுக்கடலில்?) விட்டது ஆச்சரியமே இல்லாத விஷயம். குழந்தைகளைக் கொஞ்சுகிற தாய்மார்கள், ``என்னைப் பெத்த ராசா’’ என்பார்கள், அப்புறமாய் `என்னைப் பெத்த துரையில்லா’ என்பார்கள். என் அம்மா என்னவோ ``என்னைப் பெத்த கப்பலு.’’என்று தான் சொல்லுவாள்.இத்தனைக்கும் அவள் ஒரு சின்னத் தோணியையாவது பார்த்திருப்பாளா என்பது சந்தேகம்.ஆனால் அவ்வப்போது ஒரு தோணிக்காரனின் மகனைப் பற்றிய கதை சொல்லுவாள். `ஒரு ராசாவுக்கு பட்டத்து யானை என்ன எடை இருக்கும் என்று எடை பார்க்கத் தோன்றியது. அவர் மந்திரிக்கு கட்டளை இட்டு விட்டு அந்தப்புரம் போய்விட்டார். மந்திரி பிரதானிகள் மணடையைப் பிய்க்கிறார்கள். நாட்கள் பல கடந்தும் வழி தெரியவில்லை. ராசா மறக்கிற மாதிரி தெரியவில்லை. தண்டோரா போடச் சொல்லிவிட்டார். ஒரு தோணிக்காரனின் மகன், சின்னப்பையன், முன் வந்தான். பட்டத்து யானையும் பலரும் பின் தொடர ஆற்றங்கரைக்கு கூட்டிப் போனான். யானையைப் படகில் ஏற்றி அது மூழ்கும் உயரத்திற்கு சுண்ணாம்பால் படகில் அடையாளம் இட்டான். யானையை இறங்க வைத்து விட்டு அந்தச் சுண்ணாம்பு மட்டத்திற்கு படகு மூழ்கும் வரை மணலை நிரப்பச் சொன்னான். இப்போது மணலை நிறுத்தால் அதுதான் யானையின் எடை’ என்றானாம். இதே கதை குஜராத்தி நாடோடிக் கதைகளிலும் இருக்கிறது. அங்கிருந்து அம்மாவிடம் எந்தக் கப்பலேறி வந்தது தெரியவில்லை.
அம்மா சாகக் கிடந்தாள். எனக்குத் தகவல் வந்து நான் போய்ச் சேர்ந்ததும், என்னிடம் அவள் தலையை என் மடியில் எடுத்து வைத்துக் கொள்ளும் படி சொன்னார்கள். செய்தேன். அவள் வாய் `என்னயப் பெத்த கப்பலு’, என்று முனு முனுக்கிற மாதிரி தெரிந்தது.கொஞ்ச நேரமே அப்படி வைத்திருந்தேன், பின்னர் வெளியே வந்து விட்டேன்.
அம்மாவிடம் அவ்வளவு ஒட்டுதலாய் இல்லாத ஒரு மதினியாரின் மடியில் தான் அவள் உயிர் பிரிந்தது. அப்பாவின் கடைசி நொடியிலும் அந்த மதினி மட்டுமே அருகில் இருந்தாள். இது என்ன முரண் என்று இன்று வரை விளங்கவில்லை. இதுதான் ``வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடமோ....”

Visitors