Sunday, December 18, 2011

விளக்கு விருது, தேவதச்சனுக்கு

கவிஞர் தேவதச்சன், 1970 களிலிருந்து கவிதை எழுதி வருபவர்.தொடர்ந்து இன்று வரை துடிப்பாகவும் உயிருடனும் எழுதிக் கொண்டிருப்பவர்களில் அவர் முக்கியமான ஒருவர். தமிழின் மிக முக்கிய கவியாக நான் அவரைக் கருதுகிறேன்.அன்றாடக் காட்சிகளைக் கூட தன் கவித்துவ வீர்யத்தால் அற்புதமான தத்துவச் சிந்தனைக்கு உட்படுத்தி விடுகிறவை அவருடைய கவிதைகள். அவருடன் கவிதை பற்றிப் பேசிக் கொண்டிருப்பது ஒரு பேரனுபவம்.அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத மனிதர். எதையும் எப்போதும் யாரிடமும் ‘கோரியதே கிடையாது.அவரது அணுக்கத்தில் பல நவீன எழுத்தாளர்கள் உருவாகி இருக்கிறார்கள் அல்லது பட்டை தீட்டப் பட்டிருக்கிறார்கள். அவருக்கு இந்த ஆண்டு “ விளக்குவிருது கிடைத்துள்ளது.
     முற்றிலும் தகுதியான ஒருவருக்கு இப்பரிசை ‘விளக்குஅமைப்பினர் வழங்கியுள்ளமைக்கு அவர்களுக்கு பாராட்டுக்களும். தேவதச்சனுக்கு எனது வாழ்த்துக்களும்.

தேவதச்சன் கவிதைகள்

நாற்பது வயதில் நீ நுழையும் போது, உன்
ஓப்பனைகள் ஆடைகள் மாறுகின்றன
சட்டையை தொளதொள வென்றோ
இறுக்கமாகவோ போடுகிறாய்
தலைமுடியை நீளமாகவோ
குறுகவோ தரிக்கிறாய்devathachan
உன்னிடமிருந்து பறந்து சென்ற
இருபது வயது என்னும் மயில்
உன்
மகளின் தோள் மீது
தோகை விரித்தாடுவதை
தொலைவிலிருந்து பார்க்கிறாய்
காலியான கிளைகளில்
மெல்ல நிரம்புகின்றன,
அஸ்தமனங்கள்,
சூரியோதயங்கள் மற்றும்
அன்பின் பதட்டம்

*

கைலாசத்தில்
புதரோரம்
ஒட்டாமல் கிடந்த
சிவனின் இடது பாகமும்
பார்வதியின் வலதும்
சரிந்து பூமியில் விழுந்தன
சாமிகளின் உடம்பில்லையா
காலங் காலங் காலமாய்
அழுகிக் கொண்டிருக்கிறது
தம் வீடுகளில்.

*

காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்
காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன
வெட்ட வெளியில்
ஆட்டிடையன் ஒருவன்
மேய்த்துக் கொண்டிருக்கிறான்
தூரத்து மேகங்களை
சாலை வாகனங்களை
மற்றும் சில ஆடுகளை.

*

பழத்தை சாப்பிட்டு விடு
நாளைக்கென்றால் அழுகிவிடும்
என்றாள் அம்மா
வாங்கி விண்டு
உண்டேன்
இன்றை.

Visitors