Thursday, October 22, 2009
ஓடும் நதி...2
டவுண் மார்க்கெட்டின் பின் புறம், அந்தத் தெருவின் கடைசி. மார்க்கெட்டிற்குப் போய் விட்டு வந்தால், அதை தெருவின் ஆரம்பம் எனலாம். மார்க்கெட்டின் பின்புறமும் தெருவிலும் அழுகிய காய்கறிகளும், இலை தழைகளும், குவிந்து ஒரு மணம் வீசிக் கொண்டிருக்கும்.முனிசிபாலிட்டியின் குப்பை வண்டிகளை இழுக்கும் மாடுகள், அதை அப்படி ஆசையாய் மேயும். அவைகளெல்லாம் புஷ்டியாய், பெரிய கொம்புகளுடன் ஒரே ஜாடையில் இருக்கும். பார்த்தாலே சொல்லிவிடலாம் இது முனிசிபாலிட்டி மாடு என்று. தெருவில், பூட்டியே இருக்கிற ஒரு அம்மன் கோயில். அது அம்மன் கோயிலென்பதே வெகு நாள் கழித்துத்தான் தெரியவந்தது.அதன் நடையில் ஒரு பைத்தியக்காரி உட்கார்ந்து தனக்குத் தானே பேசிக் கொண்டிருப்பாள்.எப்பொழுதும் எச்சில் ஒழுகுகிற வாய், கழுத்தில் குப்பையிலிருந்து எடுத்து அணிந்து கொண்ட, நாரும் அங்கங்கே வாடிய பூக்களும், உள்ள சில பூமாலைகள். நினைத்தாற் போல் எழுந்து, யாருடனோ வாதிட்டுச் சண்டையிடுவது போல், மொழியற்ற பாஷையில் பேசிக் கொண்டு, வேகமாய் இரண்டு தரம் தெருவை அளந்து விட்டு வந்து, மறுபடி கோயில் நடை. இரண்டாம் முறை மது விலக்கு நீக்கப் பட்ட சமயம் என்று நினைவு, திடீரென்று பார்க்கையில் பெரிய வயிற்றைச் சுமந்து கொண்டு தெருவை அளந்து கொண்டிருந்தாள்.கொஞ்ச நாளில் மார்க்கெட் குப்பையில் ஒரு குழந்தை பிணம்.மாடுகள் மேயாமல் தள்ளி நின்று கொண்டிருந்தன. உடையெங்கும் ரத்தத்துடன் எதுவும் நடக்காதது மாதிரியில், நீதி கேட்பது போல்,வடக்கும் தெற்குமாக அவள்.
‘’வித்தியாசமான ஊர்க் குணாதிசயங்கள்
இந்தப் பைத்தியங்கள்.....’’
இன்னொருவன் ஒரு பழைய தையல் மெஷினை கன்னாபின்னாவென்று சங்கிலியால் சுற்றி ஒரு பூட்டைக் கொறுத்துத் தோளில் சுமந்து கொண்டே திரிவான்.தையல் மிஷினும் சங்கிலியும் கை பட்டுப் பட்டு, பளபளவென்றிருக்கும். மிஷினில் பெயிண்டோ பெயரோ இருக்காது. காணாததற்கு அவன் உயரத்திற்கு தோளில் ஒரு பை. அதில் புதிதும் பழையதுமான துணிக் குப்பைகள்.அவனைப் பார்க்கையில் ‘’தையற்காரன் புறக்கணித்த புது வெள்ளைத் துணி போல....’’என்கிற ஞானக் கூத்தனின் கவிதை வரிகள் நினைவுக்கு வரும்.
தென்காசியில் ஒருவன். என் சின்ன வயதில் பார்த்தவன்.சாக்கடைக்குள் நின்று கொண்டு, சாக்கடைச் சுவரின் மேற்பகுதியில் எரு தட்டிக் கொண்டிருப்பான்.’’எரு தட்டற மாதிரி தட்டறியே...’’என்று சொல்வதற்கு எதிராக, கர்ம சிரத்தையோடு, சாணியை முட்டானாக உருட்டாமல், அழகான பந்து போல் உருட்டி, சுத்தமான வட்டமாக எரு ‘‘தயாரித்து’’க் கொண்டிருப்பான். கை விரல் பதிந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பது போல் இருக்கும்.கிட்டத்தட்ட இருநூறு அடி நீளச் சாக்கடை அவன் ராஜ்ஜியம்.இவர்களுக்கெல்லாம் நோயோ, நோக்காடோ வரவே வராது என்பது போல் நீண்ட காலம் அதே இடத்தில்,கண்ணில் பட்டுக் கொண்டிருந்தான்.இருபது வருடம் கழித்து அந்த ஊருக்கே குடி பெயர்ந்த போது, அவனைக் காணவில்லை.
அதற்குச் சமீபமாக ஒரு வீட்டில் என் அலுவலக நண்பர் வீடு இருந்தது.அவரைப் பார்க்கப் போன போது அங்கே சீட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது.வெவ்வேறு வயதில் ஆட்கள் அமர்ந்து பேச்சும் கும்மாளமுமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்.சீட்டு விளையாட்டுக்கென்றே ஒரு கலகலப்பு உண்டு. நல்ல சீட்டுக்களாக வராதவன் மட்டும் சற்று நேரம் அமைதியாய் இருப்பான்.நல்ல சீட்டுகளாய் வந்து எதை எங்கே சேர்க்க என்று திண்டாடுகிறவனும் அமைதியாய் இருப்பான்.அது ‘’புள்ள முழிக்கிற முழி பேளறதுக்குத்தான்..’’என்கிற திண்டாட்ட அமைதி.விஷயம் தெரிந்தவர்கள் ‘’எப்பா இந்த ஆட்டைக்கி நான் வரலைப்பா...’’என்று சீட்டைக் கவிழ்த்திவிடுவார்கள்.
ரசிகமணி டி.கே.சிக்கு நெருக்கமான ஒரு வித்துவான் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்தார், குழந்தை மாதிரிப் பேசிக் கொண்டிருந்தார். ‘’யாரோ ஸ்ரீதேவீன்னு ஒரு புள்ளையாம், ராதிகான்னு ஒரு புள்ளையாம் படங்கள்ல்ல போடு போடுன்னு போடுதுகளாமே..... டி.ஆர் ராஜகுமாரியெல்லாம் பக்கத்துல நிக்க முடியாதேமே..’’.நீங்க என்ன அண்ணாச்சி லலிதா, பத்மினி மாதிரி ரெண்டு கேரளாக் குட்டிகள் அம்பிகா, ராதான்னு வந்தாச்சு. இவ்வளவு பொது அறிவு கூட இல்லையே என்றார், இன்னொருவர்.எனக்கும் என் நண்பருக்கும் சிரிப்பாக வந்தது.அது தர்க்க பலமில்லாத உண்மை போல கூடத் தோன்றியது. (இப்பொழுது சமீபமாக டி.வியில் போட்ட ஒரு புதுப் படத்தைப் பார்த்த போது, இது யாரு இந்த நடிகை, என்று என் குழந்தைகளிடம் கேட்டேன். அவை கோரஸாகச் சொல்லின, ‘’யாரா? இந்த ஜெனரல் நாலெட்ஜ் கூட இல்லை, நீ எல்லாம் ரிடையராகப் போறே..’’)
நான் நண்பரிடம் கேட்டேன், இங்க அந்தக் காலத்துல ஒருத்தன் எரு தட்டிக் கொண்டு இருப்பானே அவன் என்ன ஆனான் என்று. ஒரு பெரியவர் உற்சாகமாகச் சொன்னார், நீங்க அவனைப் பாத்திருக்கீங்களா, பாவிப்பய என்ன அழகா எரு தட்டுவான் தெரியுமா, காம்பஸ் வச்சு வரைந்த மாதிரி.நாலு நாள் மழை தொடர்ந்து பெஞ்சுது தம்பி, சீஸன் மழை மாதிரியே இல்லை, அடை மழை அது. பாவிப்பய இடத்தை விட்டு நகராம அங்கனயே கிடந்து செத்துப் போனான். அதை விடக் கூத்து முனிசிபாலிட்டிக்காரன் அவனை எடுத்துட்டுப் போறப்ப எங்கள்ட்ட, எருவுக்கு காசு கூடக் கொஞ்சம் குடுங்க சாமின்னு வாங்கீட்டுப் போனான். பாவிப் பய, பாவிப்பய....என்று பாவியாக அடுக்கிக் கொண்டே சீட்டைக் கவிழ்த்தினார்.
-இன்னும் விரியும்
Sunday, October 18, 2009
ஓடும் நதி.....
பாளையங்கோட்டை இலந்தைக் குளத்தை இப்போது மூடப் போகிறார்களாம்.அதில் மாநகராட்சியில் இருந்து, ஏதோ கட்டப் போகிறார்களாம். ஏற்கெனவே வேய்ந்தான் குளத்தை மூடி புதுப் பஸ்ஸ்டாண்ட் கட்டியாயிற்று..ஜன நெரிசல் நம்மை பல வழிகளில் சிந்திக்க வைக்கிறது.ஊர் என்ற ஒரு வட்டத்தை விட்டு, கூட்டுக்குடும்பம் என்ற ஒருவகையான பாதுகாப்பை விட்டு, சிதற வைக்கிறது. ஆற்றோரச் சுடுகாடு என்பதெல்லாம் போய், இப்போது அந்தந்த ’குடியிருப்புகள்’ அருகேயே, பம்ப் செட், குளியல் தொட்டி இத்யாதிகளுடன் அங்கங்கே சுடுகாடுகள் வந்து விட்டன.இப்போ என்ன வேலை பார்க்கிறாய் என்றால்,’ரியல் எஸ்டேட்’ என்று சொல்லி ஒரு விசிடிங் கார்டை நீட்டுகிறார்கள் பலர்.
எனக்கு தோன்றுவதுண்டு. இந்த புதுப் பஸ் ஸ்டாண்டுகளை சாலையின் இரு புறமும் இரட்டை பஸ் ஸ்டாண்டாகக் (twin bus stand) கட்டலாமே என்று.போவதற்கு ஒன்று, வருவதற்கு ஒன்று. நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள கிராமங்களில் இப்படித்தானே பஸ்ஸ்டாப்புகள், தானாகவே அமைந்துள்ளன. மக்கள் அதைத் தெளிவாகத்தானே புரிந்து வைத்திருக்கிறார்கள்.ஆனால் நாம் ஏறுகிற வழியையும் இறங்குகிற வழியையும் அததற்கெனறே உபயோகிக்கிறோமா என்ன. அதனால் நம்மை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. நகுலன் ஒரு கவிதையில் சொன்னது மாதிரி
.’’......இந்த மனதை வைத்துக் கொண்டு
ஒன்றும் செய்ய முடியாது. ‘’
அப்போது நான் தூத்துக்குடியில் வேலைக்கு சேர்ந்த புதிது. வார விடுமுறையில் ஊர் வந்திருந்தேன். வண்ணதாசனை அந்த ஞாயிற்றுக் கிழமைக் காலை வீட்டிற்குப் போய் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கையில் காண்பிதார். ஒரு பெரிய அட்டைப் பெட்டி நிறைய புத்தகங்கள், இருந்தன. கிட்டத் தட்ட இரண்டு வருட காத்திருப்பிற்குப் பின், வண்ண தாசனின் முதல் கதைத் தொகுதி,’’கலைக்க முடியாத ஒப்பனைகள்’’, அஃக் பரந்தாமனால் பிரமாதமாக அச்சாக்கம் செய்யப்பட்டு வந்திருந்தது. அந்த அசாத்தியத் தாமதம் அந்த மகிழ்ச்சியை சற்று மழுங்க வைத்திருந்தது. இரண்டு வருடம் முன்பு, நான் தான் அந்த ஸ்க்ரிப்டையும், ஆயிரத்திச் சொச்சம் பணத்தையும் சேலத்தில் நேரில் கொண்டு போய் பரந்தாமனிடம் கொடுத்து வந்திருந்தேன். அதை எப்படி விற்பனை செய்வது,எதில் விளம்பரம் செய்வது, என்று எங்களுக்கு தெரியவில்லை. அப்போது இலக்கியப் பத்திரிக்கை என்று கணையாழியும் தீபமும்தான் வந்து கொண்டிருந்தன. நான் மதுரை மீனாட்சி புத்தக நிலையத்தில் கொண்டு போய் கொஞ்சம் கொடுத்து வருகிறேன் என்று சொன்னேன்.விஜயா பதிப்பகம் கூட அப்போது இல்லை.
ஒரு பிரதியை வாங்கிக் கொண்டு வந்தேன். அன்று காலையில் மழை பெய்து வெயிலின் உருக்கம் தெரியாமல் சற்று ரம்மியமாய் இருந்தது.புத்தகம் கையில் இருப்பது, ஏதோ கடன் கேட்ட பணம் கிடைத்தது போல் சந்தோஷமாயிருந்தது. எங்காவது வெளியே போகலாம் என்று தோன்றியது.கையில் புத்தகத்துடன் சந்திப் பிள்ளையார் முக்குக்கு வந்து, நின்று கொண்டிருந்த ஒரு டவுண் பஸ்ஸில் ஏறினேன்.அது பாளை பஸ் ஸ்டாண்டில் நின்றது. இறங்கினேன், எங்கே போவது எனறு தெரியவில்லை. ஒரு சிகரெட் பற்ற வைத்தேன்.என்னுடன் மதுரைப் பல்கலையில் வேலை பார்த்த ஒரு சிநேகிதி, தன் டாக்டர் கணவருடன் பெருமாள் புரத்தில் இருப்பதாக கடிதம் எழுதியிருந்தாள்.இலந்தைக் குளம் கரை வழியாக பெருமாள் புரத்திற்கு நடந்து போய் விடலாம். அங்கே ஒரு தந்தி அலுவலகத்தில் தினக் கூலியாக 3.ரூபாய்30பைசாவுக்கு வேலை பார்த்த போது அப்படி நடந்து போவது வழக்கம். உமாவின் நினைவோடு நடக்கத் தொடங்கினேன். பாதிக்கு மேல் நடக்க முடியவில்லை.பசியோடு புகைத்த சிகரெட் காரணாமாய் இருக்கலாம். ஒரு பனை மரத்தின் அடியில் நின்றேன்.குளத்தில் குறைவான தண்ணீரே கிடந்தது. ஒரு வட்டாக்கை (ஓட்டாஞ்சல்லி) எடுத்து தண்ணீரில் தவளைபோல் சாய்த்து எறிந்தேன். அது குபுக்கென்று முங்கி விட்டது.
கொஞ்சம் தள்ளி நாலைந்து சிறுவர்கள் செம்புலப் பெயல் நீரில் ஒரு பழைய துணியை வைத்து மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.அவர்கள் பை, பனை மூட்டில் கிடந்தது.இன்று ஏது வகுப்புகள் என்று நினைக்கும் போது, பொட் பொட்டென்று தூரல் விழுந்தது. குளத்தில் ஆங்காங்கே துளி விழுந்து சிறு சிறு நீர் வட்டங்கள் உண்டாயிற்று. மழை வலுத்தது. புத்தகத்தை இடுப்பில், வேஷ்டிக்குள் சொருகிக் கொண்டு பக்கத்தில் இருந்த ஒரு மரத்தடிக்கு ஒடினேன். பெரிய மழையாயில்லை, நனையாமலிருக்க மரமே போதுமானதாய் இருந்தது. புத்தகத்தை எடுத்துத் திறந்தேன், தற்செயலாக ‘தனுமை’ கதை விரிந்தது. உமாவிடம் பகிர்ந்து கொண்ட கதை. மூடி விட்டு எதிரே பார்த்தேன். இலந்தைக் குளம் மகாப் பெரிய அர்த்தங்களோடு விரிந்து கிடப்பதாகப் பட்டது.
அதை மூடப் போகிறார்களாம்.
(குங்குமம்-19.12.2009 தமிழ் வார இதழ்.)
Subscribe to:
Posts (Atom)