Tuesday, December 15, 2009
ஓடும் நதி-10
இரண்டு அணிகளாகப் பிரிந்து விளையாடும் விளையாட்டுக்களுக்கு இரண்டு பெரிய பையன்கள் தாமாகவே தலைமை ஏற்று விடுவார்கள்.அல்லது அவர்களை ஏற்றுக் கொண்டு விடுவோம்.அப்புறம் கிட்டத்தட்ட சம உடற்பலம், சமவயது உள்ள இரண்டிரண்டு பேராகச் சேர்ந்து கொண்டு தங்களுக்குள் இரண்டு பூக்கள், இரண்டு விலங்குகள், இரண்டு தாவரங்கள், இரண்டு நடிக, நடிகைகள், என்று தேர்ந்தெடுத்துப் பேசி முடித்து, சேக்காளித்தனம் பொங்க, ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டுக் கொண்டு அணித்தலைவர்களிடம் சென்று “உத்தி உத்தி, யார் உத்தி” என்று கேட்க வேண்டும். அவர்களில் ஒருவன் ”என் உத்தி” என்பான்.”மல்லிகைப் பூ வேணுமா, ரோஜாப்பூ வேணுமா”, கேட்பார்கள் இரட்டையர். மல்லிகைப் பூ என்று ‘தலை’ சொன்னால்,மல்லிகைப்பூ என்று பெயரைச் சூட்டிக் கொண்டவன் அவன் பக்கம் சேருவான். அடுத்த ஜோடி, ”சிவாஜி வேணுமா எம்ஜியார் வேணுமா?” பதிலுக்கேற்றார்ப் போல் ஒருவன் மறு அணியில் சேருவான்.உத்திக்கு பேர் தேடுவதில் எப்படியும் இரண்டு பேர் துடுக்குத் தனமாக கெட்டவார்த்தைப் பேர்களை சூட்டிக்கொள்வது தவறாது.தங்கள் பெயரையே மாற்றிச் சூட்டிக் கொள்வதும் உண்டு.
அப்புறம் ஆட்டம் ஆரம்பிக்கும். கபடியோ, குச்சிக்கம்போ (சில ஊர்களில் ‘கிட்டிப்புள்’ என்று பேர்.) பேந்தா கோலிக்காயோ...எந்த வெயிலையும், மழை ஈரத்யையும், பொருட் படுத்தாமல் தொடரும். மைதானம் இருந்தால் அங்கே, இல்லையென்றால் நடுத் தெருதான் மைதானம்.கபடி விளையாட்டை ஒரு காலத்தில் சடுகுடு என்று விளையாடிக் கொண்டிருந்தார்கள்,
வெத்திலடி, வெத்திலை
நரம்படி வெத்திலை
பறிக்கப் போன இடத்துல
புடிச்சு வச்சு நொத்துல...நொத்துல..நொத்துல...என்று பாடி வருவார்கள். இல்லையென்றால்
சடுகுடு மலையில ரெண்டானை
தவறி விழுந்தது கிழட்டானை...கிழட்டானை...கிழட்டானை....
இதெல்லாம் எங்கள் தலைமுறையிலேயே வழக்கொழிந்து விட்டது.
கொடை,திருவிழா என்று அம்மன் கோயிலிலோ, சுடலைமாடன் கோயிலிலோ கால் நட்டு, பந்தல் போட்டுவிட்டால் போதும், நான்கு பந்தல்க்கால்களை நான்கு பேர் பிடித்துக் கொள்ள, நடுவில் ஒருவன். ‘’ஏந்தலைக்கி எண்ணெய் ஊத்து, எருமை மாட்டுக்குப் புல் போடு”...என்று பாட்டுப் பாடிக் கொண்டே கண்காணிக்க, நான்கு பேரும் தூணுககுத் தூண் மாறுவார்கள். மாறும் போது நடுவில் நிற்பவன் யாரையாவது தொட்டு விட்டால், அவன் நடுவிற்கு வந்து விடுவான். மறுபடி விளையாட்டு தொடரும். இதே போல் ‘பிள்ளை பெத்து‘, என்றொரு விளையாட்டு. பூப்பறிக்க வருகிறோம்.....என்றொரு விளையாட்டு, அப்புறம் கல்லா மண்ணா, கள்ளன் போலீஸ், வாட் வாட் கலர் ஈஸ் ?... கறுத்த கோழி தீட்டு. இதெல்லாம் ரொம்பச் சின்ன வயது விளையாட்டுக்கள்.
விளையாட்டுக்கள், எப்படி எப்பொழுது ஆரம்பிக்கும், கொஞ்சம் கொஞ்சமாய் ஆர்வம் வடிந்து எப்போது நிற்கும்... யாரும் சொல்ல முடியாது.பெரும்பாலான விளையாட்டுக்கள், தொட வருபவனை நிர்ணயிக்க ”ஷாட், பூட், த்ரீ” யில் ஆரம்பிக்கும். இந்த ”வடிகட்டும் முறை”யைக்(ELIMINATION PROCESS !) கண்டு பிடித்தது யார், எந்தக் காலத்தில் என்பது ”நதி மூலம் ரிஷிமூலம்.” விளையாட்டுகள் எல்லாமே கடைசியில் தொட்டுப் பிடித்து விளையாடுவதில்த் தான் முடியும்.பெரியவர்கள் அவர்கள் விளையாடிய தலைமுறையை மறந்து விட்டு, இப்போது கிட்டிப் புள்ளோ, முத்துச் செதுக்கியோ, தெருவில் விளையாடுவோரைப் பார்த்து மண்டையை உடைச்சிராதீங்கலே போங்கலே, போயி வீட்டுக்குள்ள உக்காந்து வெளையாடுங்கலே என்று சத்தம் போட்டுத் துரத்துவதும் தலைமுறைகளாய்த் தொடர்கிறது.(மெரீனாவில் கிரிக்கெட் விளையாடத் தடையாமே.) எங்கள் தெருவில் ஒரு பையன். தந்தை ஆசிரியர்.வெளியே போகவே விடமாட்டார்.அவன் வீட்டை ஒட்டி நீளமான மண் நடைபாதை. அதில் ஒரு புறம் மதில் போலச் சுவர்; மழை விழுந்து பாசி பிடித்துக் கருத்திருக்கும். நாங்கள் உற்சாகமாய் விளையாடுவதை ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருப்பான்.அவன் எப்போது தெருவுக்கு வருவான் என்றே தெரியாது. திடீரென்று பார்த்தால் அந்தக் கருத்த சுவரில் எழுதிப் போட்டிருப்பான்... ”விரைவில் வருகிறது அரையாண்டுத் தேர்வு” அல்லது ”......முழு ஆண்டுத் தேர்வு”.அதன் உளவியல் நீண்ட நாட்களுக்குப் பின்னரே புரிந்தது.
இந்தத் தலைமுறைக் குழந்தைகள் மீது வெயில் படுவதுமில்லை, அவர்களை மழைச் சாரல் நனைப்பதுமில்லை. அவர்கள் வீடியோ பார்லர்களிலோ, வீட்டுக்குள்ளோ கணிணி முன் உட்கார்ந்து வீடியோ கேம் விளையாடுகிறார்கள்.லட்சக் கணக்கில் வீடியோ விளையாட்டுக்கள் வந்தாயிற்று. முதலிடத்தில் இருக்கிற ‘FALL OUT-3’ போன்ற விளையாட்டுகளை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது.ஆனால் குழந்தைகள் நன்றாகவே விளையாடுகிறார்களாம்.அதில் வருகிற வால்ட் 101,என்ற அணுக் கதிர் வீச்சிலிருந்து தப்பிக்க உதவும் அரண் போல இப்போதே சில அடுக்கு மாடிக் குடியிருப்புகளில், பூகம்பம் வந்தால், தப்பிக்கவென்றே ஒரு பாதிக்கப் படாத தனி அறை -‘ஸ்ட்ராங் ரூம்’- இருக்கிறது.(பலர் அதை பூஜை அறையாக உபயோகித்து கடவுளை பத்திரப் படுத்தி வைத்திருக்கிறார்கள்.)
அணு ஆயுதங்களிலிருந்து காத்துக்கொள்ள எட்டி யோசிப்பதெல்லாம் சரி தான்.வெயிலையும் மழையையும் குழந்தைகளிடமிருந்தும், குழந்தைகளை அவற்றிடமிருந்தும் மறைத்து வைப்பதுதான் வருத்தமாக இருக்கிறது.சமீபத்தில் ஒரு சென்னை நண்பர் குழந்தைகளுடன் செப்பறைக் கோயிலுக்குப் போய்விட்டு, ”அருகில் அழகான ஆறு இருக்கிறது போவோம் வாருங்கள்” என்றேன். அவரது பையன் கேட்டான், “அங்கிள் யூ மீன் சிக்ஸ்”.
Subscribe to:
Posts (Atom)