கண் சிமிட்டி கண் சிமிட்டி
காந்திமதிநாதனுக்கு ரெண்டு பட்டப் பேர். ஒன்று
கண்சிமிட்டி, அடிக்கடி கண்களைச் சிமிட்டிக் கொண்டே இருப்பான்.இன்னொன்று
ஒலிபெருக்கி காந்தி. அப்படி யொரு சத்தம்
குரலில். அதுவும் சண்டையென்று வந்து விட்டால் கேட்கவே வேண்டாம்.அவனுக்கும் ’பர்மா
ஸ்டோர்’ஜவுளிக்கடை ஆண்டியப்ப அண்ணாச்சி மகன்
உலகநாதனுக்கும், யார் குரலுக்கு ‘சவுண்டு’
ஜாஸ்தி என்று போட்டி வந்து விட்டால், காதைப் பொத்திக் கொண்டு விட டியதுதான். இந்த
விஷயத்தில் நான் உலகநாதன் கட்சி.அதனாலேயே காந்திக்கும் எனக்கும் இரண்டாம்
வகுப்பில் ஆரம்பித்த சண்டை நீண்டு கொண்டே போயிற்று.கொஞ்சம் சொந்தக்காரன் வேறு.
1964-பெப்ரவரியில் வந்த காதலிக்க நேரமில்லை
படத்தின் வர்ணம் கண்ணுக்குள்ளேயே நின்று கொண்டிருக்கையில், ஆகஸ்ட்டில் வந்த புதிய
பறவை படம் பிரமாதமாக ஓடியது.சிவாஜிக்கு மூன்றாவது முழு நீளக் கலர்ப்படம். ஆகப் பெரிய
பொருமலுடன் பார்த்தோம் வாத்தியார் ரசிகர்கள் எல்லாம். ’CHASE A CROOKED SHADOW’- ஆங்கிலப் படத்தின் அப்பட்டமான காப்பி என்றெல்லாம் ஆறுதல் பட்டுக்
கொண்டாலும். படமும் கலரும் பாட்டும் சிவாஜியின் நடிப்பும், எப்படா ’படகோட்டி’
படம் வரும் என்று எதிர்பார்க்க வைத்திருந்தது. எம்.ஜி.ஆருக்கு அதுதான் இரண்டாவது
கலர்ப்படம். இத்தனைக்கும் தமிழின் முதல்க் கலர்ப்படமான அலிபாபாவில் அவர்தான்
நடித்திருந்தார்.நாடோடிமன்னன் பின்பகுதி கலரில் வந்தது.இரண்டுமே கேவா கலர். ஜெமினி
கணேசனுக்குக் கூட (தமிழின் ‘முதல் டெக்னிக் கலர்’ படம் என) ’கொஞ்சும்
சலங்கை’, இரண்டாவது கலர்ப்படமாக படமாக 1962-ல் வந்து
விட்டது.1964 தீபாவளிக்கு படகோட்டி வெளிவந்தது. திருநெல்வேலியில் முதல் முறையாக
‘ஒரு நாளில் ‘5’ காட்சிகள். முதல்க் காட்சி காலை 8
மணிக்கு.ரிஸர்வேஷன் டிக்கெட்டிற்கே அடிபிடியாகக் கிடந்தது. நான் 1.66 ரூபா
டிக்கெட் வாங்கி வைத்திருந்தேன். ஒரு மனிப்பர்சில் வைத்து அதை டிராயர்ப் பையில்
போட்டுக் கொண்டேதான் எங்கும் போவேன்.அவ்வப்போது ‘இருக்கிறதா’ என எடுத்துப்
பார்த்துக் கொள்வேன்.ரொம்ப நம்பகமான’ சேக்காளிகளிடம் மட்டும் காண்பிப்பேன்.
அந்த வருடம், எப்போதும் தீபாவளிக்கு
முன்னால், அம்மா-அப்பாவின் பூர்வீகக் கிராமத்தில் நடை பெறும் வழக்கமான
திருக்கல்யாணத் திருவிழாவுக்கு அப்பா, குடும்பம் பூராவும் ராஜவல்லிபுரம் போக
வேண்டுமென்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார். அம்மாத் தாத்தா இறந்து போய்
தாத்தாவின் ஏராளமான சொத்துக்கள் அம்மா வசம் வந்திருந்தது. அம்மா என்ன, நீட்டினால்
கையெழுத்துப் போடுகிற பாவப்பட்ட ஜென்மம்.அப்பா வசம் வந்து விட்டது என்பதே
உண்மை.திருக்கல்யாண கட்டளை தாத்தாவுக்கு உரியது.’அதிகாரம்’ கைக்கு
வந்ததைக் கொண்டாட நினைத்தாரோ என்னவோ, கிளாரினெட் கச்சேரி, பட்டணப்பிரவேசம் என “அகிலாண்டேஸ்வரி
அக்னீஸ்வரர்””’’“திருக்கல்யாண உற்சவத்தை ஜாம் ஜாமென்று கொண்டாடத் தீர்மானித்து
விட்டார். சொந்தக்காரர்கள் நண்பர்கள் என ஒரு படையையே திரட்டி விட்டார்.எல்லாம் சரி
தீபாவளி அன்னிக்காவது ஊருக்கு வந்துருவோமா என்று கேட்டதற்கு “ இப்ப புறப்படப்
போறியா இல்லையா ராஸ்கல்...” என்று அடிக்காத குறையாய் சத்தம் போட்டார்.
வேறு வழி? நானும் ‘படகோட்டி’ பட டிக்கெட்டைப்
பர்ஸோடு சுமந்து கொண்டு கிராமத்திற்குப் போனேன்.அங்கே என் வயசுக்காரர்கள் எல்லாம்,
”படமே
வரலை அதுக்குள்ள டிக்கெட் கொடுக்காகளாமுல்லா... போடா இது ஏதோ நோட்டிஸு”என்று
கேலி பேசிக் கொண்டிருந்தார்கள். கண் சிமிட்டிக் காந்திதான் உதவிக்கு வந்தான். ஏல
இதுக்குப் பேரு ரிசர்வேஷன் டிக்கெட்டுடா இதை படம் போடற அன்னிக்குக் கொடுத்தா பட
டிக்கெட் தருவாங்கடா... எப்ப போனாலும் இடமும் டிக்கெட்டும் ரெடியா இருக்கும்...” என்று
விளக்கினான்.ஏழு எட்டு வருஷத்துக்கு அப்புறம் அவன் ‘சேக்கா’ போட்டான்.. அவனும்
திருவிழாவுக்குத்தான் வந்திருந்தான். இரண்டு
பேரும் நயினார் குளத்திற்குக் காலார நடந்தோம். அம்மா, குளத்தின் நடுவே இருக்கும்
வலதி அம்மன் கோயில் அருகே அருமையான கூழாங்கல் கிடைக்கும் எடுத்து வா. என்று சொல்லியிருந்தாள்.அவற்றை
அவள், உலைக்கு அரிசி களையும் போது
போட்டுக் கொள்வாள்.அப்படிப் போட்டுக் கொண்டால் அரிசியில் கிடக்கும் பொடிப் பொடிக்
கற்கள் அதோடு போய்ச் சேர்ந்து கொள்ளும், களைவது எளிதாக இருக்கும் என்பாள். (அம்மா,” கல்லு,
கல்லை இழுத்திரும்” என்பாள்,அது என்ன காந்தமா என்றால், சொல்லத்
தெரியாது, ஆனால் அதில் ஏதோ’விஞ்ஞானம்’ இருக்கிறது.)அவளுக்கு
அந்தத் தாய் மண் தந்தது வெறும் கூழாங்கற்கள்தான். வலதியம்மன் கோயில் பொத்தைக்
கற்கள் கழச்சிக்கல் விளையாடவும் ரொம்ப வாக்காக இருக்கும். பெண் பிள்ளைகள் அதைத்
தேங்காய்ச் சிரட்டையில் போட்டு ஒரு துணியால் மூடிப் பிடித்து, கை ஓயாமல் நாள்
பூராவும் குலுக்கிக் கொண்டே இருக்கும். ரொம்ப நேர/நாள் குலுக்கலுக்குப் பின் அழகான
உருண்டையான கழச்சிக்கல் கிடைக்கும். ஒவ்வொருவருக்கும் அது அவர்களின் தனிப்பெரும்
சொத்தாக இருக்கும்.
கண்சிமிட்டிக் காந்திக்கு வலதி அம்மன் கோயிலையும்,
லேசான பனி மூட்டத்திற்கிடையே சன்னமாக அலையாடிக் கொண்டிருக்கும் கடல் போன்ற
குளத்தங் கரையையும் பார்த்ததும் சந்தோஷம் பிய்த்துக் கொண்டது. கண்களை இன்னும்
வேகமாக சிமிட்டிக் கொண்டான்.”தாயேளி பிரமாதமான இடமா இருக்கேலே, வின்செண்ட்
பார்த்தான்னா பிரமாதமா எடுப்பான், நிலவும் மலரும் பாடுது பாட்டில என்னமா விளையாடி
இருப்பான் தெரியுமா, என்ன காஷ்மீர் வேண்டிக்கெடக்கு,” என்றான். நான், ”கர்ணன்
தாண்டா டாப் ’தங்க ரத்தின’த்தில
எஸ்.எஸ்.ஆரும் விஜய குமாரியும் பாடி ஆடும், “ஜாலமெல்லாம் தெரியுது ஆஹா, ஜாடையாலே
புரியுது ஓஹோ...” பாட்டில் கடல் அலையை ரெண்டா பிரிச்சிருப்பான்
தெரியுமா... “ என்றேன்.நெஞ்சில் ஓரு ஆலயம் படத்தில் பாத்திருக்கியா, கட்டிலுக்கு
அடியில் எல்லாம் காமிரா புகுந்து விளையாடும் தெரியுமா..” என்றான். ” மணிஓசை
பார்த்திருக்கியா.. கிணற்றடிச் சுவரில் உட்கார்ந்து பேசும், முத்துராமன்
விஜயகுமாரியை தண்ணீர் இறைக்கும் பானைக்குள்ளிருந்து எடுத்திருப்பான் தெரியுமா...”என்றேன்
பதிலுக்கு.அந்த ஷாட் உண்மையிலேயே நல்லாருக்கும் ஆனால் பானையை உடைத்து உள்ளிருந்து
எடுத்த மாதிரில்லாடா இருக்குமென்றான். கொஞ்சம் ‘லாஜிக்’ இடிக்கத்தான் செய்தது.
எம்.ஜி.ஆர்- சிவாஜி சண்டையா கெட்டுப் போச்சு, வம்பு வளர்ப்பானேன் என்று வின்செண்ட்
அருமையான காமிராதான் என்றேன்.விடிவெள்ளி கிளைமாக்ஸ் தீப்பிடித்த
வீட்டுக்குள்ளிருந்து சரோஜா தேவியைக் காப்பாற்றுகிற காட்சி ரொம்ப நல்லாருக்கும்.காதலிக்க
நேரமில்லை படத்தில் ஆழியாறு கெஸ்ட் ஹவுஸிலிருந்து பாலையா பார்க்க, கார் அப்படியே
தூரத்திலிருந்து பாலையாவை மையமாக்கிநகரு. காமிராவும் காரோடு நகர்ந்து மேடு போன்ற
பாதையில் ஏறி வருமொரு காட்சி போதும். நாமே காரிலிருப்பதுபோலத் தோன்றும்.நான்
அதுவரை ’உத்தம புத்திரன்’ பார்த்ததில்லை.
ஆனால் எல்லோரும் நாடோடிமன்னன் இரட்டை வேடக் காட்சிகளே ரொம்ப தத்ரூபமாக இருப்பதாகச்
சொல்வார்கள்.காந்தியும் அதை ஒத்துக் கொண்டான்.கண்ணைச் சிமிட்டிக் கொண்டே படங்களை
நல்லாப் பாத்துருக்கானே மூதேவி என்று தோன்றியது. சொல்லவில்லை. நாடோடி மன்னனுக்கு
ஜி.கே.. ராமு கேமிரா.. அதன் விளம்பரங்களிலெல்லாம் ஜி.கே ராமு பெயர் தவறாமல்
இருக்கும்.
நாடோடிமன்னன் படத்தின் கலர்க் காட்சிகளை
ஒளிப்பதிவு செய்ய W.R. சுப்பாராவை
எம்.ஜி.ஆர் கேட்டாராம்.அவர்தான் அலிபாபா மற்றும் கட்டபொம்மனுக்கு ஒளிப்பதிவு. அவர்
மறுத்து விட்டாராம். எம்.ஜி.ஆர். என்ன செலவானாலும் பரவாயில்லை ராமுவே கலரிலும்
எடுக்கட்டும் என்று ஜி.கே.ராமுவை, அவர் தயங்கிய போதும், பம்பாய் அனுப்பி கலர்
நுணுக்கங்களைக் கற்று வரச் செய்தாராம்.கட்டபொம்மனுக்கு ஒளிப்பதிவு உதவியாளர்கள்
வி.ராம மூர்த்தி மற்றும் கர்ணன். கர்ணன் அதிலிருந்துதான் கட்ட பொம்மன் மீசை வைத்துக் கொண்டார். அவரிடம்
உதவியாளராகச் சேர்ந்த எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டு மணி அண்ணனும் தன்
குருநாதரைப் போலவே கட்ட பொம்மன் மீசையுடன் சென்னையிலிருந்து வந்தார்.
படகோட்டிக்கு ஒளிப்பதிவு பி.எல்.ராய்.. டைரக்ஷன்
டி.பிரகாஷ்ராவ், நாங்கள் வின்செண்ட் ஒளீப்பதிவாக இருக்க்க் கூடாதா என்று
ஏங்கினோம். பிரகாஷ்ராவ், வின்செண்ட், ஸ்ரீதர் காம்பினேஷனில் பல படங்கள் வந்தன
அதனால் அப்படி நினைத்தோம்.ரசிக ஆசையின் ’பலனாக’, எங்க வீட்டுப் பிள்ளைக்கு, வின்செண்ட்- சுந்தரம்
ஒளிப்பதிவு. வின்செண்டின் உதவியாளராக இருந்த பி.என்.சுந்தரம் தெய்வத்தாய் போன்ற
பி.மாதவன் படங்களுக்கு( பி. மாதவன்.பி.ஏ, எஸ்.ஏ.அசோகன்.பி.ஏ, கே.பாலசந்தர்.
பி.எஸ்சி என்று போட்டுக்கொள்வது அப்போது, ’ஏயப்பா பி.ஏ’
என்று புருவந்தூக்க வைக்கிற விஷயம்.)தனியே ஒளிப்பதிவு செய்து விட்டதால், ’எ.வீ.
பிள்ளை’க்கு ஒளிப்பதிவு:வின்செண்ட்-சுந்தரம் என்று
டைட்டில் போட்டார்கள்.அற்புதமான ஒளிப்பதிவு.ஏவி.எம்மின்முதல் தமிழ்க் கலர்ப்படமான
பக்த பிரகலாதாவுக்கும் வின்செண்ட் சுந்தரம்தான் ஒளிப்பதிவு.அப்புறம் பிரிந்து
விட்டார்கள்.
வின்செண்ட் மலையாளப்படங்களை இயக்கவும் ஆரம்பித்து
விட்டார். செம்மீனில் மாரக்கஸ் பார்ட்லேயின் காமிரா அற்புதமாக் இருந்த்து.லாலா
மணிக்கு மார்க்கஸ் பர்ட்லே என்றால் ரொம்பப் பிடிக்கும். அவரது ஒளிப்பதிவில்
காட்சிகள் பளீரென்று இருக்கும். நாகிரெட்டி சக்ரபாணியின் விஜயா புரொடக்ஷன்ஸ்
படங்களுக்கு அவர்தான் ஒளிப்பதிவு. பாதாள பைரவி, மாயா பஜார், மிஸ்ஸியம்மா என்று
காமிரா, இப்போது பார்த்தால் கூட காட்சிகளில் அப்படியொரு பிசிறில்லாமல் இருக்கும்.சாந்தி
நிலையம் படத்திற்கு மார்க்கஸ் பார்ட்லேதான் காமிரா. என்ன அழகான கலர்.’பளீர்’காமிராவுக்கு
இன்னொரு நிபுணர் எம்.ஏ ரஹ்மான்.அவர் பெரும்பாலும் டி ஆர். ராமண்ணா படங்களுக்கு
ஒளீப்பதிவு செய்வார்.அவர் லைட்டிங்கையும் பிரமாதமாகச் சொல்லுவார்கள்.
காருக்கள்ளேயே ஒரு லவ் டூயட்,(”நான்
படத்தில் போதுமோ இந்த இடம்) கொஞ்சம் பெரிய சைஸ் பெட்டாப் பெட்டிக்குள்ளேயே லவ்
டூயட்(பெட்டிக்குள்ளே போட்டடைத்த பெட்டைச் சேவல்...மூன்றேழுத்து படத்தில்),
“உள்ளம் ரெண்டும் ஒன்று...” சனிக்கிரக வளையத்தில்-புதுமைப்பித்தன். இதிலெல்லாம்
கில்லாடி. ’நான்’, ’பறக்கும்பாவை’,
’மூன்றெழுத்து’
படங்களில் அவர் காமிரா ‘ப்ரைட்டாக இருக்கும்.ராஜாதேசிங்கு படத்தில் போர்க்களக்
காட்சிகளும்,இரண்டு எம்.ஜி.ஆர் வாள்ச் சண்டை போடும் காட்சியும் பெரிதும்
பேசப்பட்டவை.லைட் அண்ட் ஷேட் காட்சியிலும் அவர் புகுந்து விளையாடுவார். பெரிய
இடத்துப் பெண் பட்த்தில் அவனுக்கென்ன தூங்கி விட்டான்..பாடலும் பறக்கும்பாவை
படத்தில்,” யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
பாடலும்,அற்புதமானவை.
ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒவ்வொரு காமிரா மேன்.
பீம்சிங் என்றால் விட்டல் ராவ்.கிருஷ்ணன் பஞ்சு என்றால் மாருதி ராவ்.கே சங்கர்
என்றால் தம்பு.ஸ்ரீதர் என்றால் வின்செண்ட்.ப.நீலகண்டன் என்றால்வி.ராம்
மூர்த்தி.பி.மாதவன் என்றால் பி.என்.சுந்தரம்.ஏ.பி.நாகராகஜன் என்றால்
கே.எஸ்.பிரசாத்.இதெல்லாமே பார்க்காமலேயே சொல்லி விடலாம். மாடர்ன் தியேட்டர்ஸுக்கு
சம்பத்.தேவர் படமென்றால், ’குடும்பத்தலைவன்’ வரை
சி.வி.மூர்த்தி, அப்புறம் என்.எஸ்.வர்மா. சி.வி.மூர்த்தி குடும்பத்தலைவன் படம்
முடிந்ததும் தற்கொலை செய்து கொண்டுவிட்டார்.அவரது இல்லறத்தில் பெரிய கைகள் ’யாரோ’
கை வைத்து விட்டதால் இந்தத் தற்கொலை என்று இந்து நேசனில் ‘பெட்டிச் செய்தி’ போட்டிருந்தார்கள்
என்று சொன்னார்கள். கண்ணதாசனுக்கு ஜி.ஆர் நாதன்.அவர் காமிராவோடு படத்தையும்
இயக்குவார்.மாலையிட்ட மங்கை, கவலையில்லாத மனிதன்,வானம்பாடி, கறுப்புப் பணம்
எல்லாமே ஜி.ஆர்.நாதன் தான் ஒளிப்பதிவு மற்றும் இயக்கம்.’ வானம்பாடி
இயக்கமும் ஒளிப்பதிவும் இரண்டுமே நல்லாயிருக்கும். ஜி.கே ராமுவும் ஒளிப்பதிவுடன்
படங்களையும் இயக்கியுள்ளார்.மனைவி, சகோதரி எல்லாம் ஜி.கே ராமு. இன்னொருவர், ’கல்பனா
கலா மந்திர்’( சுத்தமான இந்திப் பெயர்)
ஆர்.ஆர்.சந்திரன்.தாய்மகளுக்குக் கட்டிய தாலி,சீமான் பெற்ற செல்வங்கள், மகாகவி
காளிதாஸ்(சிவாஜி நடித்தது) எனப் பல படங்களை தயாரித்து இயக்கி ஒளிப்பதிவு
செய்துள்ளார்..சில தயாரிப்பாளர்கள் டைரக்டர்கள் ஆக இருப்பார்கள். அவர்கள்
காமிராமேனிடம் செய்யும் அளும்பு சொல்லி மாளாது என்றெல்லாம் அப்போது கிசுகிசுக்கள்,பேட்டிகள்
வரும். ‘புரொட்யூசர்& டைரக்டர் என்று போட்டுக் கொண்டு சிவாஜி, எம்ஜிஆர்போன்ற
மன்னாதி மன்னர்களையெல்லாம் வைத்துப் படம் எடுத்த ஒருவர், குளோசப் என்றால் ‘குண்டு
லென்ஸ்’ போடாம ஏமாற்றுகிறாயா என்று சண்டை போடுவாராம்.. அதே
போல் கதாபாத்திரங்கள் (பெரும்பாலும் விட்டலாச்சார்யா பிராண்ட் நகைச்சுவைக்
காட்சிகளில்) வேகமாக ஓடுவது போன்ற காட்சிகளில் காமிரா மிக மெதுவாகச் சுழல
வேண்டு(மா)ம்.அப்போதுதான் தியேட்டரில் பார்க்கையில் பாத்திரங்கள் வேகமாக ஓடுவது
போல இருக்கும்.இதே போல ஸ்லோமோஷன் காட்சிகளை எடுக்கும்போது. காமிரா வேகமாகச்
சுழலவேண்டும்.பாத்திரங்கள் வேகமாக ஓடவேண்டும் என்கிறேன் நீ காமிராவை மெதுவாக
ஓட்டவிடுகிறாயே என்று சண்டை போட்டாராம்.
சமீபமாய், ‘முரசுடி.வி/சன்லைஃப்’
புண்ணியத்தில் பழைய பாடல்கள் ,படங்கள் பார்க்க முடிகிறது. அனுபவம் புதுமை என்றொரு
படம்,சி வி.ராஜேந்திரன் இயக்கம்,பி.என் சுந்தரம் காமிரா.முத்துராமனும் ராஜஸ்ரீயும் ”கனவில்
நடந்ததோ கல்யாண ஊர்வலம்...” என்று ஒரு பாடல்க் காட்சி. பாட்டு இசை காமிரா என
தூள் பறத்தியிருக்கிறார்கள். இத்தனைக்கும் பிரம்மாண்டமான செட் எதுவும் கிடையாது.
சும்மா, வெறும் பாலிதீன் ஷீட்கள்தான் பறக்கின்றன.லைட்டிங் அற்புதம்தான்,
பிரமாதமாக்கி இருக்கிறது.இவ்வளவுக்கும் அப்போதெல்லாம், 66-67களில் தூக்க முடியாத
மிட்சிசெல். ஏரிஃப்லெக்ஸ் காமிராக்கள்தான். அதை வைத்துக் கொண்டு அதிசயங்கள்
செய்திருக்கிறார்கள்.இந்தப் பாடலில் ஸ்லோ மோஷனும் இயல்பான மோஷனும் இணைந்து
வந்திருக்கும்.
பழைய படங்களில் காமிராமேனுக்கு சவால்கள் அதிகம்
என்பார்கள்.ஜூம் லென்ஸெல்லாம் இல்லாத காலத்திலேயே ‘பொன்முடி’ படத்தில் அருமையான
ஜூம் காட்சி வரும். காமிரா ஜே.ஜி.விஜயம் என்று பழைய காமிராமேன். ஜெனோவா, கலையரசி, ஆனந்த
ஜோதி. அன்னையின் ஆணை போன்றவைகளின் ஒளிப்பதிவு இவர்தான்.கலையரசி தமிழில் ஒன் அண்ட்
ஒன்லி சயின்ஸ் ஃபிக்ஷன். (ஷங்கரை மறந்துவிடுங்கள்) அதில் பறக்கும் தட்டு,
வேற்றுக் கிரகக் காட்சிகள் அழகாய் இருக்கும்.படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து
வெளிவந்தது. நன்றாய் ஓடவில்லை. கதை வசனம் நடோடிமன்னன் (வசனம்:கண்ணதாசன் -ரவீந்தர்)
புகழ் ரவீந்தர் என்பவர் எழுதியது.உண்மையில் இவர் ஒரு இஸ்லாமியர் என்று
ஞாபகம்.எம்.ஜி.ஆர் புதிதாகக் கட்சி ஆரம்பித்த சமயத்தில், சென்னை போன போது எம்.ஜி.ஆரைப்
பார்க்க முயன்றோம். கோவை செழியன் ஆஃபீசில் இருப்பதாகச் சொன்னார்கள்.அங்கே இல்லை.
ரவீந்தர் உட்கார்ந்து வசனம் எழுதிக்
கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர் வீட்டில் டிரைவராக வேலை பார்த்த மணி என்பவரை மீண்டும்
தற்செயலாக அங்கு சந்தித்தோம்.அவர்தான் சொன்னார் “தம்பி , இது யார் தெரியுமா,இவர்தான்
ரவீந்தர்’ என்றார். அவரிடம் பேசவில்லை அவர் மும்முரமாய்
எழுதிக் கொண்டிருந்தார்.எம்.ஜிஆர் இவர் கதை வசனம் எழுத “இணைந்த கரங்கள்” என்று
ஒரு படம் எடுப்பதாக ‘பிரம்மாண்டமான விளம்பரங்கள் வந்தது.பெரிய வேடிக்கை
என்னவென்றால் ரவீந்தர் வசனம் எழுதிக் கொண்டிருந்த கோவை செழியன் படம், “
உழைக்கும்கரங்கள்” அதற்கு வசனம் ’நாஞ்சில் மனோகரன்” என்று
படத்தில் போடுவார்கள்.முதலிலிருந்தே அப்படித்தான் விளம்பரங்களும் செய்தியும்
போட்டுக் கொண்டிருந்தார்கள்.
சினிமாவில் இதெல்லாம் சகஜம். வி.ராமமூர்த்தி
காவல்காரன் படத்திற்குப்பின் எம்.ஜி.ஆருடன் மறுபடி சேர்ந்து
கொண்டார்.வி.ராமமூர்த்தி பிரம்மாண்டமான காட்சிகளைப் பிழையில்லாமல் எடுப்பார்
என்பார்கள்.அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன், ஆயிரத்தில் ஒருவன் சிவாஜியின்
கர்ணன் எல்லாம் இவர் கை வண்ணங்கள்.எம்.ஜி ஆர் ரொம்ப நம்பக் கூடியவர் இவர் என்று
சொன்னார் எம்.ஜி.ஆரின் காரியதரிசி குமாரசுவாமி என்பவர். ‘அடிமைப் பெண்’
ஓடிக் கொண்டிருந்த சமயம்.,அவர் திருநெல்வேலி வந்திருந்த போது அவரிடம் ரசிகர்கள்
எல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். ஏன் சார் காமிரான்னா, ராமமூர்த்தி வசனம்ன்னா சொர்ணம் என்றே தலைவர்
போடுகிறார்.மாற்றலாமே என்ற போது அவர் இப்படிச் சொன்னார். சொர்ணத்தைப் பற்றியும்
நல்ல விதமாகச் சொன்னார். எங்களில் ஒருவர் சொன்னார், “அண்ணாச்சி அவரை நம்பாதிங்க..”
என்று. அது போலவே சொர்ணம் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார் என்று அவரை
நீக்கினார் எம்.ஜிஆர். இதை எப்படி திருநெல்வேலி மன்றத்துக்காரன் எவனோ சொன்னானமே
எப்படி என்று எம்.ஜி.ஆர் அமைச்சர் ஜி.ஆர். எட்மண்டிடம், கேட்டாராம்.எட்மண்ட்
எங்களிடம் சொன்னார்.
எம்.ஜி.ஆர் நம்பக் கூடிய இன்னொரு கேமிரா மேன்,
ஏ.சண்முகம் என்று ஒருவர்.சண்டைக் காட்சிகளின் வேகத்திற்கு ஈடு கொடுத்து எடுக்கக் கூடியவராம்
இவர்.சிலம்புச் சண்டையென்றால், காமிரா வேறுயாராக இருந்தாலும், இவரையும் வைத்துக்
கொள்ளுவாராம், எம்.ஜி.ஆர். ”அரசகட்டளை, தாலி பாக்கியம் ,அன்னமிட்ட கை,இதய வீணை
என்று பல படங்கள் இவர் பண்ணியதுதான். அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன்,
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படங்களில் இவர் பங்கு கணிசமானது. சில படங்களில்
டைட்டில் கார்டில் நன்றி: ஒளிப்பதிவாளர் ஏ.சண்முகம் என்றும் போடுவார்கள்.
நம்நாடு படத்திற்கு கர்ணன் ஒளிப்பதிவு என்றதும்
எங்களுகெல்லாம் ஒரே மகிழ்ச்சி.முதல்க் காட்சி “ ஆடை முழுதும் நனைய நனைய மழை
அடிக்குதடி..” பாடலின் இடையே வரும் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா
திருமணக்காட்சி. அதன் ஸ்டில்கள் பொம்மை இதழில் வந்தது.பார்த்தியா கர்ணன் காமிரவை
என்று சிலாகித்துக் கொண்டார்கள். ( ஏல இது ஸ்டில் காமிராடா என்று சொன்ன என்னை,” போடா
உனக்குத்தான் அநேகம் தெரியும்...” என்று அடக்கி
விட்டார்கள். கர்ணன் அதில் நீடிக்கவில்லை.நாகிரெட்டியின் மச்சான் ஒருவர் ’கொண்டாரெட்டி’ என்று.அவர்
ஆப்பரேடிவ் காமிராமேன். அவரை முன்னிலைப்படுத்தி கர்ணனை பின்னுக்குத் தள்ள
நாகிரெட்டி முயன்றதால் கர்ணன் விலகிக் கொண்டார். “நினைத்ததை நடத்தியே
முடிப்பவன்....நான் நான்...” பாடலுக்கான செட்டைப் பார்த்ததுமே எம்.ஜி.ஆர்
வியந்துபோய், ”பேசாமல் வி. ராமமூர்த்தியைக் கூப்பிட்டு இந்தப்
பாடலை எடுக்கச் சொல்லுங்க....அப்பத்தான் கால்ஷீட்...” என்று
சொல்லிவிட்டுச் சென்று விட்டாராம் அது வி.ராமமூர்த்தி எடுத்தது .கொண்டாரெட்டி
இல்லை. ராஜேஷ்கன்னா அதைப் பார்த்து “அப்னாதேஷிலும்” அந்தப் பாடலை
நன்றாக எடுக்கச் சொன்னாராம் . அதில் அவரணியும் ஒரு ‘ரே(ய்)பான்’ கண்ணாடி
இத்தாலியிலிருந்து விமானத்தில் வந்ததாம், நாற்பதாயிரம் ரூபாய் செலவில்.அது
இல்லாமல் நடிக்க மாட்டேன் என்றுசொல்லி விட்டாராம்.,ராஜேஷ்கன்னா.
வீட்டில் கையால்
சுற்றி சினிமா போட்டு விளையாடும் ‘சிவகாசி’ ப்ரொஜெக்டரில் காற்றாடி ஒன்று சுழலும் அது கண்
சிமிட்டுவதற்கு ஒப்பானது. அதே போல் தியேட்டர் ப்ரொஜக்டரிலும் ஷட்டர் ஒன்று உண்டு
என்று கேள்விப்பட்ட ஞாபகம்.கண் சிமிட்டி காந்தி, இதை எழுதும் போது நினைவு வந்ததில்
ஆச்சரியமில்லைதானே.