Sunday, July 15, 2012

மாற்றான் தோட்டத்து மல்லிகை.....


                                                                           1965 ஜூன் அல்லது ஜூலை மாதமாயிருக்கும்..இந்தி திணிப்புக்கு எதிரான மாணவர்போராட்டங்களெல்லாம் ஓய்ந்து, (லேசாகசலசலப்பு ஏற்பட்டாலும் பக்தவத்சலானார் விடுமுறை விட்டு விடுவார்.. அதெல்லாம்ஓய்ந்து.). ஒரு வழியாய் கல்லூரிபள்ளிகளெல்லாம் தொடர்ந்து இயங்க ஆரம்பித்திருந்தன.அரை மனதுடன் பள்ளிகளுக்குச்சென்று கொண்டிருந்தோம்.பள்ளி இறுதி வகுப்பான எஸ்.எஸ்.எல்சி வகுப்பு. அநேகமாகப் பாடங்கள் எல்லாம்ஆரம்பித்து விட்டன.ஆனாலும் ஒரு கண்டிப்பான பள்ளிக்கூடமென்ற பேர் சற்றே மங்கி மாணவர்களின் கை ஓங்கியிருந்தது.ஏதாவதுகண்டிப்பு காட்டப் போய் பசங்க, போராட்டம் அது இது என்று ஆரம்பித்துவிட்டால், என்னசெய்வது என்று அரசும்,பள்ளிகளும் யோசித்தன.சாதாரணமாக மதியம் 12.45க்கு விடப்படும்மதிய உணவு இடைவேளையின் போது பக்கத்திலுள்ள பெரிய தியேட்டருக்கு சென்று, பார்த்தஸ்டில்ல்களையேவோ அல்லது புதிய படத்தின் ஸ்டில்களையோ பார்த்து விட்டு, லேசாகபெண்கள் டிக்கெட் பக்கம் யாராவது அக்காமாருங்கநிக்காங்களான்னும் பார்த்துவிட்டு 1.45 ஸ்டடிக்கு ஓடியே வருவோம்.இப்போது கொஞ்சம்,குளிர்விட்டுப் போய் சாவகாசமாய் வரத் தொடங்கியிருந்தோம்.சிலர் துணிந்து மாட்னிக்காட்சிக்கே போய் விட ஆரம்பித்திருந்தனர்.நாலைந்து நாட்களாய்  தியேட்டரின் உச்சியிலிருந்து ராட்சத பலூன்ஒன்றைப் பறக்கவிட்டு அதில், மேலிருந்து கீழாக வாழ்க்கைப்படகுஎன்று அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.கிட்டத்தட்டஇரண்டு மூன்று  மைல் சுற்றளவுக்கு,டவுண்,பளையங்கோட்டை,தச்சநல்லூர்என எல்லா  ஊர்களுக்கும் பலூன் நன்றாகத்தெரிவதாக அந்தந்த ஊர் மாணவர்கள் வியந்தோதிக் கொண்டிருந்தார்கள்.எப்பொழுதுமே ஜெமினிஸ்டுடியோஸ் படங்களுக்கு விளம்பரங்கள் பிரம்மாண்டமாகவும் ஏதாவது புதுமையாகவும்இருக்கும். இதற்கு பலூன் விளம்பரம் புதிதாய் இருந்தது. ஏற்கெனவே ஜூல்ஸ்வெர்னின் ‘AROUNDTHE WORLD IN 80 DAYS’ நாவல் பற்றிக்கேள்விப் பட்டிருந்தோம்.அதில் இதே போல ஒரு பலூனில் உலகைச் சுற்றி வருவார்கள் என்றுகேள்விப் பட்டிருந்தோம்.ஒரு ஆசிரியர்,அந்த சினிமா பிரமாதமாக இருக்கும் என்று சொல்லுவார்.எங்களுக்கு பத்தாவது வகுப்பில் ‘20 thousand leagues under the sea’ என்ற ஜூல்ஸ் வெர்னின் நாவல் பாடமாக இருந்தது.அந்தப் படம் பார்வதி டாக்கீஸில் வந்த போது அவர், வகுப்பு முழுவதையும்.(பதினோராவதுவகுப்புக்கு அவர் சோஷியல் எடுப்பார் அந்த வகுப்பு அண்ணன்மார்களையும் சேர்த்துக் கொண்டு) சனிக்கிழமை காலைக் காட்சிக்கு அழைத்துக் கொண்டுபோனார்.அதற்காகவே இரண்டு நாட்கள் அந்த நான்டீடெயில்(ட்) புத்தகத்தை உற்சாகமாகநடத்தி முடித்தார்.அப்படியும் படம் புரியவில்லை. அதற்காக சார்வாள்அருகே அமர்ந்து பார்க்க விரும்பினோம். ஆனால் சார்வாள்வேறு இருவரை பிரியமாகவைத்துக் கொண்டார். இடைவேளைக்குப் பின் அந்தப் படத்தையே பார்த்து, ‘அண்ணன்மார்கள்ரசித்துக் கொண்டிருந்ததாக பள்ளிக்கூடம் பூராவும் ஒரே கிசுகிசு’. “நல்லவேளை நீங்க தப்பிச்சீங்கடாஎன்று எங்களைச் சிலர்கிண்டல் செய்தார்கள்.வாழ்க்கைப்படகு படம் ஜிந்தகிஎன்ற இந்திப்படத்தின் ரீமேக். அதுவும் ஜெமினியின் படம்தான். அதில்வைஜயந்தி, ராஜ்குமார் நடித்திருப்பார்கள்.ராஜ் குமார் ஒரு அருமையான நடிகர்.தமிழில்அவர் பாத்திரத்தை முத்துராமன் நன்றாகவே செய்திருப்பார்.எஸ்.எஸ்.வாசன்காங்கிரஸ்காரர்.விகடனில் அப்போது இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி எதிரானகருத்துக்கள் வந்திருந்தது. பள்ளிக்கூடத்தில் சில நோட்டிஸ்கள் சுற்றில் இருந்தது.இந்திக்கு வால் பிடிக்கும் வாசனின் படத்தைப் பார்க்காதீர்கள்......  என்று ஆரம்பித்து பெரியநோட்டீஸாகவே இருக்கும்.அந்த நோட்டீஸின் பிரதிகளை தியேட்டரில் படம் ரிலீஸாகும்அன்று, மதியம்முதல்க்காட்சியின் போது விநியோகித்துக் கொண்டிருந்தார்கள்.எங்களுக்கும் கொஞ்சம்நோட்டீஸ்கள் தரப்பட்டிருந்தது.இந்த நோட்டிஸ் விவகாரமும் படத்திற்கான எதிர்ப்பும்ஏற்கெனவே மற்ற பெரிய நகரங்களில் பரவி இருந்தது.அதனால்த்தான் பலூன்விளம்பரம் பெரிதாக இருந்தது.அந்த நோட்டீசில் எப்படி ஜி.என்.வேலுமணிதயாரித்த,  ஷம்மிகபூர், சாதனா நடித்து கே.சங்கர் இயக்கிய ராஜ்குமார்என்றஇந்திப் படம்  இந்திக்காரர்களால் திட்டமிடப் பட்டுதோல்வியடைய வைக்கப்பட்டது, என்றெல்லாம் எழுதப்பட்டிருந்தது. உண்மையிலேயே ராஜ்குமார்என்ற படம் வேலுமணியைப்போண்டியாக்கிவிட்டது.அவரைப்போல பல தமிழ்த் தயாரிப்பாளர்கள் இப்படி இந்தி சினிமா பக்கம்ஒதுங்கி இங்கே சம்பாதித்ததைக் கரியாக்கிய கதை,காலந்தோறும்  நிறைய உண்டு. ஸ்ரீதர், தேவர், நாகிரெட்டியார் எனஒரு லிஸ்ட் உண்டு. வடக்கேயும் தமிழ்த் தயாரிப்பாளர்கள் கலைஞர்களுக்கு எதிரான அலைஎப்போதுமே அடித்து வந்தது..லதாமங்கேஷ்கரைத் தாண்டி யாரும் இங்கிருந்து போய் பாடிவிடமுடியாது. அடுத்த வீட்டுப்பெண் படத்தின் தழுவலான படோஸான்போன்ற மஹ்மூத் படங்களிலெல்லாம் தமிழ்க்கலாசாரத்தைக் கிண்டலடிக்கிறகாட்சிகள் நிறைய உண்டு.வாழ்க்கைப்படகு படத்திற்குப் பெரியகூட்டமில்லை.அதிகம் போனால் தரை டிக்கெட்டுக்கு மட்டும் இரு நூறு முன்னூறுபேர்,கியூவில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களிடம் நோட்டிஸ்களை விநியோகித்துக்கொண்டிருந்தோம்.இரண்டு போலீஸ்காரர்கள் சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்தார்கள்.மளமளவென்று 100 நோட்டிஸ்கள் வரை கொடுத்து விட்டோம்.இந்தி எதிர்ப்புப்போராட்டத்தின் போதும், இதே போல் நோட்டீஸ்கள் வரும்  தியாகி அரங்கநாதன் தீக்குளித்து இறந்தது...”(படிக்கும் போதே நரம்புகள் முறுக்கேறும்) நெல்லையிலும் தில்லையிலும்துப்பாக்கிச் சூடு...என்று திருநெல்வேலியின் அப்போதைய எம்.எல்.ஏயின்கணவர் துப்பாக்கியால் சுட்டதாக ஒரு செய்தி உண்டு.. அதை எல்லாம் மறுபடி நோட்டிஸாகஅடித்து கல்லூரி மற்றும் பள்ளி நண்பர்களின் வீடுகளுக்கு கத்தை கத்தையாக, ரகசியமாகக்கொண்டு சேர்ப்போம்.இந்த வேலைக்கு பொடியர்கள்தான் பொருத்தமானவர்களாய் இருப்போம். ஒருஅசட்டுத் துணிச்சலில் போய் விடுவோம் ஆனால் (அதிலிருந்தே) போலீஸைக் கண்டால் சற்றுகலவரம்தான். இந்த, ’சினிமாபார்க்காதீர்கள்நோட்டீஸை வாங்கிய பாதிப்பேருக்கு அதில் என்ன இருக்கிறது என்று விளக்க வேண்டிஇருந்தது.ஒருத்தர் கூட, ’அப்படியா சங்கதிஎன்று கியூவை விட்டு வெளியே வரவில்லை. போலீஸ்தான் அருகில் வந்தது. நான் கியூவோடுகியூவாக நின்று கொண்டேன்.மற்றவர்கள் நழுவி விட்டார்கள்.போலீஸ் நகருவதாகத்தெரியவில்லை.கியூதான் நகர்ந்தது.கையிலும் பத்துப் பதினைந்து நோட்டீஸ்இருந்தது.வேறு வழியில்லை, டிக்கெட் கவுண்டர் அருகே வந்து விட்டேன்.நல்லவேளை பையில்எட்டணா இருந்தது.நோட்டிஸை மடித்து டிராயர் பையில் திணித்து விட்டு, டிக்கெட்எடுத்துக் கொண்டு தியேட்டருக்குள் போனேன். மணி இரண்டு ஆகி விட்டது இனிமேல்ஸ்கூலுக்கும் போக முடியாது.புஸ்தகங்கள் இல்லாமல் வீட்டுக்கும் போகமுடியாது.தியேட்டருக்குள் போவதைத்தவிர வேறு வழியில்லை.ஒருவர் வேய், நீரு தானேஇந்த நோட்டீஸைக் கொடுத்தேரு நீரே வந்துட்டேரு..என்றுகிண்டலடித்தார்.படம் முதலில் நன்றாக இருந்தது. ஆயிரம் பெண்மை மலரட்டுமே....பாடலெல்லாம் விஷயத்தையே மறக்கடித்து விட்டது. அப்புறம் பூகம்பம் ஊரேகாலியாவது என்று வழக்கமான ஜெமினி ஸ்டுடியோ படமாக மாறி விட்டது...மணியும் நாலரைஆனது.பாதியில் எழுந்து ஒரே ஓட்டம் ஸ்கூலுக்கு.ஸ்கூல் முடிந்திருந்தது. கிளாசில்போய் எனது இடத்தில் பார்த்தால் புத்தகப்பை மட்டும் இருக்கிறது புத்தகங்கள்,நோட்டுக்கள் ஒன்றையும் காணோம்.பல மாதிரியாய் சிந்தனை ஓடியது. வாத்தியார்எடுத்து வைத்துக் கொண்டிருப்பாரோ அல்லது ஹெட் மாஸ்டரைப் பார்க்கவேண்டியிருக்குமோ...அப்படியென்றால்..பையை மட்டும் வைப்பானேன் என்று பயம் கிடந்துஅடித்தது. பேய் முழி முழித்துக் கொண்டு கிளாஸை விட்டு ஸ்கூல் கிரவுண்ட் பக்கம்பார்த்தேன்.வழக்கமாய்ச் சிலர் ஸ்கூல் முடிந்ததும் ஏதாவது விளையாடிக்கொண்டிருப்பார்கள்.கபடி, வாலிபால், ஹாக்கி, என்று டீம் ப்ராக்டிஸ் நடக்கும்.கபடிக்கோர்ட்டிலிருந்து ஹரி கிருஷ்ணன் கையைக் காண்பித்தான்.அவன் அவுட் ஆகி ஓரமாய்உட்கார்ந்திருந்தான்.அவனை நோக்கிப் போனேன்.எங்கெல போய்ட்டே,ரெண்டாவது பிரீய்ட்லதான் பொக்கைவாயன் கேட்டாரு, லெட்ரின் போயிருக்கான்னுசொன்னேன்...என்னலே நீயே சினிமாவுக்குப் போயிட்டியாஎன்றான்.என்புக்கையெல்லாம் காணும்லே என்றேன். போடா மூதேவி உன்னைய மாதிரி நினைச்சியா.. உன்புக்கையெல்லாம் என் பையில வச்சு எடுத்துக்கிட்டு வந்துட்டேன்..உன் அழுக்குப் பையைஎந்த நாய் தொடப்போகுதுன்னு அதை மட்டும் வச்சுட்டேன்.என்றான்.அவன் சிவாஜி ரசிகன், அதனால்த்தான் அந்த உன்னைய மாதிரி நினைச்சியா...டயலாக். இதுவே வேற சூழலா இருந்தா.. சணடை பிடித்திருப்பேன்...இப்ப,நண்பேண்டா பாணியில கட்டிப் பிடிச்சுட்டு வந்தேன்.போராட்டம் முடிந்து கொஞ்ச காலத்திற்கு தமிழகம் எங்கேயும்இந்திப் படங்களே போடவில்லை. விவிதபாரதியில் சங்கம்பாடல்களைக் கேட்கும்போதும், ஸ்க்ரீன், ஃபிலிம்ஃபேர், ஸ்டார் அன்ட் ஸ்டைல்போன்ற பாலிவுட் மேகசின்களில் தீரஜ் சௌதா எடுத்த அற்புதமான புகைப்படங்களைப் பார்க்கும்போதும் கொஞ்சம் தேட்டமாக இருக்கும்.ஆனால் அரசியல் நிலைப்பாடு என்பது வேறு அல்லவா. சேத்கோவிந்த தாஸ், சாஸ்திரி, மொரார்ஜி என்று இந்தியைத் திணிப்பதில் தீவிரம் காட்டியகாங்கிரஸ்காரர்களைப் பற்றிக் கேட்கையில்,இந்தி மீதே வெறுப்பு வரும். எல்லாம் கொஞ்சநாள்த்தான்.சங்கம், லவ் இன் டோக்கியோ, ஈவினிங் இன் பாரிஸ், ஏப்ரல் ஃபூல்,என்றெல்லாம் இந்திப் படங்களில் நடிகைகளின் தாராளம், ஜப் ஜப் பூல் கிலே,கும்நாம்படப் பாடல்கள், தமிழ் மக்களின் விரதத்தைக் குலைத்துவிட்டது.அநேகமாய் படம் வெளியாகி ஒரு வருடம் கழித்துதிருநெல்வேலி லக்ஷ்மியில் சங்கம்படம் திரையிட்டார்கள்.இரண்டு இண்டெர்வல்கள்,ஷங்கர்ஜெய்கிஷனின் இசை.இங்கே மறைப்பதை, வடக்கில் நீச்சல் உடை தாராளமாய்க் காட்டுகிறார்வைஜயந்திமாலா என்று படத்திற்கு நல்ல கூட்டம். படம் நீளமோ நீளம். உட்காரமுடியவில்லை. அப்படியொரு நான்குமணி நேரப்படம் தமிழில் வந்திருந்தால் கிழிகிழியென்று கிழித்திருப்பார்கள்.இரண்டு இடை வேளையென்றுதான் பேர், பாதிநேரம்மக்கள் வெளியேதான் இருந்தார்கள் பாட்டையாஸ்டாலில்நல்ல வியாபாரம்.பொதுவாக இந்திப்படம் பார்க்கையில் ஜெயப்ரகாஷ் என்று ஒரு நண்பர்வருவார்.அவர் பட்டாளத்திலிருந்து ஓய்வு பெற்றவர். அவ்வப்போது கதை, அர்த்தம் என்றுசொல்லுவார்.ஆள் ரொம்ப ஒல்லியாக இருப்பார்.ஆனால் அந்த எலும்புக்கென்று எங்கிருந்தோஒரு பலமிருக்கும்கும்நாம்படம்பார்க்கும் போது என்று நினைவு. படம் சஸ்பென்ஸ் படம். பிரிண்ட் மோசமான ப்ரிண்ட்,அறுந்து அறுந்து போய்க் கொண்டிருந்தது.ஏய் தம்பிகளா ஹெலன் டான்ஸ் ஒண்ணு வருமேhttp://www.youtube.com/watch?v=AGNSzhFkQn0அதாவது உருப்படியாயிருக்குமா, இல்லாட்டி அவ ட்ரெஸ்மாதிரி குட்டையாஆக்கிருவானுகளோஎன்று சொல்லிக் கொண்டிருந்தார்.அப்போது பின்னாலிருந்துஎரிச்சலான குரல் வந்தது. பேசாம படத்தைப் பார்க்க விடுங்கய்யா,” என்று. ஏய் சும்மா இருங்கப்பா அண்ணாச்சி வஜனத்தைக்கவனிக்காருல்லா..என்று நான் சொன்னதும்,. என்ன நக்கலா என்று அந்தஆள் என் காலரைப் பிடிக்கவும்,பட்டென்று அண்ணாச்சி எழுந்து லௌடே கே பால்என்று அவனை கழுத்தோடு தூக்கிப் பிடித்தார்.இவருக்கா இந்தபலம் என்றுபக்கத்தில் இருந்தவர்களெல்லாம் அசந்து போய் விலக்கி விட்டார்கள். அவன் எழுந்தேபோய் விட்டான்.அண்ணாச்சி சாந்தமாக, “ஏல ஏற்கெனவே இங்க அரைப் படம்தான் போடுதான்அதையும் அவனைப் பார்க்க விடலியேடா..சரி இன்னக்கி வேணும்ன்னா ராத்திரி அல்வாதிங்காம துக்கம் அனுஷ்டிப்போம்என்று படத்தில் மூழ்கிவிட்டார்.  அப்படியொரு ஜாலியான மனுஷர்.எங்களை விட மூத்தவர்.வழக்கமாய் ஒரு தையல்க்கடையில் உட்கார்ந்திருப்பார்.கடையில்காஜா எடுக்கும் பையனுக்கு அண்ணாச்சி என்றால் உயிர். அவர் வரும் வரை கடை இறுக்கமாய்இருக்கும்.மாஸ்டரிடம் எடுத்ததற்கெல்லாம் குட்டு வாங்கிக் கொண்டேயிருக்கவேண்டும்.அவர் வந்து விட்டால் சிரிப்பும் கும்மாளமுமாய் மாறி விடும்.பயலுக்கும்அடி விழாது.எல்லோரும் சிரிப்போம், அண்ணாச்சி பேசாமல்இருப்பார். அவர்தான் எதையாவது சொல்லி சிரிப்பையே வெடிக்க வைத்திருப்பார்.சரியாகபன்னிரெண்டு மணிக்கு டெய்லர், வீட்டுக்கு போய் விடுவார்.என்னத்தையோரெண்டு பருக்கைய திண்ணு தண்ணி குடிச்சிட்டா... அவ சோலி எது உண்டோ அதைப்பாப்பால்லா...என்று சொல்லிக் கொள்வார். பகல் பன்னெண்டு மணிக்கு மூடு வர்றது உங்களுக்கும் துறைக் கழுதைக்கும் தாம்வேய்....என்பார் அண்ணாச்சி. பையன் விழுந்து விழுந்துசிரிப்பான். இந்த முறை செல்லமாய் அடி அண்ணாச்சியிடமிருந்து விழும்.அண்ணாச்சியைபடத்திற்குக் கூட்டிக் கொண்டு போவதற்குள் தாவு தீர்ந்து விடும்.பரபரப்பேகாட்டமாட்டார். ஏல டிக்கெட்டுக்கு சொல்லியிருப்பீங்க.. ரெண்டரைமணிக்குத்தான் படம் போடுவான். இங்கன இருக்கிற தியேட்டருக்கு மெதுவா நடந்தாக்கூடபத்து நிமிஷத்தில போயிரலாம்...இந்தா ரெண்டு சில்லு தேங்காய் கேட்டா வாங்கிக்கொடுத்துட்டு வந்திருதேன்...என்பார்.ஒல்லி உடம்பில் சட்டை கூடப் போடாமல்ஒரு ஈரிழை சிட்டித் துண்டைப் போர்த்தி இருப்பார்.தேங்காய் வாங்கிக் கொடுத்து கறிக்குஅரைச்சு சமையல் முடித்து சாப்பிட்டு விட்டு சட்டையை மாட்டியபடியே வருவார்...நேராமாயிட்டுதாடே..என்றபடி. மணி 2.20 ஆகியிருக்கும். தியேட்டரைநெருங்கவும். படம் போட மணி அடிக்கவும் சரியாய் இருக்கும். டிக்கெட்டை வாங்கிவைத்துக் கொண்டு காத்திருப்பவன் ஏசுவான், “ஏம்ல இவ்வளவு நேரம், டிக்கெட்கிடைச்சாலும் இடம் கிடைக்கவேண்டாமா..என்று.அவனும் அண்ணாச்சிதலையைப் பார்த்ததும் அடங்கிருவான்..சரி சரி வாங்க போகலாம்என்பான். ஏல, புறப்படுகிற நேரத்தில மதினி ஒரு ரகசியம்சொல்லணும்ன்னா அதான் கொஞ்சம் லேட்டு கல்யாணம் ஆனா வீட்டு அருமை தெரியும்டா உங்களுக்கெல்லாம்..என்று சொல்லிக் கொண்டே வருவார்.என்ன ரகசியம் அண்ணாச்சி என்றால்.. மூதேவி, அவசரத்தில காதுக்குப் பதிலா உதட்டுல சொல்லுதா.. சரியாக் கேக்கலை..என்பார்.ஆனால் அண்ணாச்சிக்கும் மதினிக்கும்அப்படியொன்றும் ஒட்டுதல் கிடையாது. மதினி நல்ல அழகாயிருப்பார்.அண்ணாச்சி மாட்னி ஷோவந்தால் மதினி தனியே ஆறு மணி காட்சிக்கு வருவாள்.குழந்தைகளும் கிடையாது.சமயத்தில்தியேட்டரை விட்டு வெளியே வரும்போது, மதினி சர்வ அலங்கார பூஷிதையாக எதிரேசினிமாவுக்குப் போவார்.ரெண்டு பேரும் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.நாம் என்னமாவதுகேட்டால், “ ஏல மாட்னி நானா, ஆறுமணி ஷோ அவளா, ரெண்டுபேருமா செகண்ட் ஷோ உண்டுலே,இன்னக்கி..வெற்றிகரமா மூனு காட்சிகள்டாஎன்பார். அண்ணாச்சிஅவ்வப்போது கல்லூர்பிள்ளை கடையில் மதியச்சாப்பாடு வாங்கிக் கொண்டு போவார்,மதினிக்கும் சேர்த்து.அப்போது டெயிலர் கிண்டல் பண்ணுவார். இப்ப, எந்தக்  கழுதை, எந்த துறைக்குப் போகுதாம்என்று. அண்ணாச்சி வாயே திறக்காமல் போய் விடுவார்.ரொம்ப நாளாய் டெயிலர் கடைப் பக்கமேபோகவில்லை.அப்படித்தான் நடக்கும். ஏதாவது ஒரு தொடர்பு அறுந்து இன்னொரு கம்பெனியில்ஐக்கியமாகி விடுவோம்.அப்புறம் அது நின்று போய் இன்னொன்றோ, மறுபடி பழைய குழுவோதொடரும். ஒரு பேண்ட்டை மாற்றித் தைக்கக் கொண்டு போனேன். ராயல்டாக்கீஸில் தலாஷ்என்று ஒரு இந்திப் படம்போட்டிருந்தார்கள். ஷர்மிலா டாகூர் நடித்த்து.வடக்கேபிரமாதமாய் ஓடியது.இதைத்தான் ராமன் தேடிய சீதையாகதமிழில் எடுக்கிறார்கள் என்று பேச்சு அடிபட்ட்து. ஜிக்ரிதோஸ்த்படத்தைத்தான் மாட்டுக்கார வேலனாகஎடுத்திருந்தார்கள். பூல் அவுர் பத்தர் படத்தைதான்,’ஒளிவிளக்காக எடுத்திருந்தார்கள்.ஹிமாலயா கி கோத் மேம்-புதிய பூமியாகியிருந்தது. தலாஷ் என்றால் தேடல் என்று அர்த்த(மா)ம்.ராமன் தேடியசீதை- ஒரு வேளை அப்படி இருக்கலாமென்று அதற்குப்போக  நினைத்திருந்தேன். நிச்சயமாகஜெய்ப்பிரகாஷ் போவார் என்றும் நினைத்தேன். ஆனால் கடையில் யாருமில்லை.கடைகளையிழந்து இருந்தது. புதிதாய் ஒரு காஜாப் பையன் சேர்ந்திருந்தான். இவன் சற்றுபெரியவனாயிருந்தான்.இவனைக் குட்டினால் இவன், டெயிலரையே கத்திரிக் கோலால் குத்திவிடுவான் போலிருந்தது.சம்பிரதாயமாய்ப் பேசி விட்டு, ”ஜெயப்பிரகாஷ்அண்ணாச்சிய எங்க காணும்,” என்றேன். போய்யா,அண்ணாச்சி வீட்டுக்குப் போய் உடனே பாரு.. போ...என்றுவிரட்டாத குறையாய்ச் சொன்னார்.போனேன்.வீடு தெருவடி வீடுதான், எப்போதும் திறந்திருக்கும்தெருவைப் பார்த்த ஜன்னல் சாத்தியிருந்தது. வழக்கமாக ஜன்னல் வழியாகத்தான் அவரைஅழைப்பது. பக்கத்து முடுக்கு வழியாக உள்ளே போய்க் கூப்பிட்டேன்.வீட்டுக் கதவும்சாத்தியிருந்தது. அதற்குமேல் ஒரு கருப்புச் சேலையை திரை மாதிரிப் போட்டிருந்தது. அத்தானையா தேடுதீங்க, அவரைப் பார்க்க முடியாதேஎன்று, எதிர்த் திண்ணையில் அமர்ந்திருந்த அவரது மச்சினன் சொன்னார். என்ன உடம்புக்குஎன்றேன். ஏதோ நாய் கடிச்சிருக்கு, பார்க்காம விட்டுட்டாக...வெஷம் பரவிட்டு...என்றார். அப்போது கதவை லேசாகத் திறந்தபடி மதினி வந்தார்,தலையெல்லாம் கலைந்துபோய், அழுது வீங்கின முகத்தோடு. கையில் சாப்பாடோ தண்ணீரோ வைத்திருந்தாள். தண்ணீரோ வெளிச்சமோபட்டவுடன்.. ஊ.. ஊ என்று என்று சத்தம்பலமாகக் கேட்டது.லேசாக எட்டிப் பார்த்தேன்.. சுவரையொட்டி, அண்ணாச்சிஎலும்புக்கூடாய்க் கிடந்தார்... உடலை முறுக்கிக் கொண்டு ஊ... ஊ என்று சத்தம்போட்டார். அய்யோ, வங்கய்யா... இந்தப் பக்கம் வாங்கய்யா..வெளிச்சம்பட்டாலே நாய் மாதிரியே குரைக்காகளேஎன்று மதினி அலறினார்.பயந்து போய் முடுக்குவழியே தெருவைப் பார்க்க நடந்தேன்.மணி பகல் ரெண்டரையை நெருங்கிக் கொண்டிருந்தது.ராயலில்தலாஷ்படம் ஆரம்பித்திருக்குமோ என்று தோன்றியது.ச்சேய், என்ன நினைப்புடா..சட்டென்று மனசுக்குள் ஒரு வெறுப்பும்சூழ்ந்த்து
Visitors