வேற்றூர்ப் புழுதி
வழிப்போக்கனைப்
புரிந்து கொண்ட வெயில்
சற்றே மேகத்துள் மறைந்தது
ஊரொன்றை நெருங்கும்
ஒற்றைத் தடத்தின் ஓரம்
பசியாறிக் கொண்டிருந்த ஈக்கள்
சற்றுப் பொறேன்
புதுச்சீழ் அருந்திக் கொள்கிறோம்
என்று கால் புண்களின்
மேற்படர்ந்திருந்த தூசியை மீறி
விருப்பத்துடன் வந்தமர்ந்தன
தன் காலிப் பாத்திரத்தில்
புதிய ஊரின் கதைகளை
நிரப்பும் ஆவலில்
வேண்டுகோள் மறுத்து
வழி தொடர்ந்தான்
பசுவொன்று
மரத்தடியில் ஈன்ற தன்
புதிய கன்றினை
நக்கிக் கொண்டிருந்தது
“நல்லவேளை
ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாய்
வீட்டில் குட்டி போடாமலிருந்ததே”*
என்று மகிழ்ச்சி பகிரும்
ஒருவனைக் கண்டதும்
பாத்திரம் நிரப்பிக் கொண்டான்
நிழலில் அருகமர்ந்து
வழிப்போக்கனைப் புரிந்து
கொண்ட வெயில்
மேகம் நீங்கியது.
-கலாப்ரியா
* பசு, ஞாயிற்றுக்கிழமை வீட்டில் கன்று போட்டால், வீட்டுக்கு நல்லதில்லை என்று அதை வெளியே (மேய்ச்சலுக்கு) அனுப்பி விடுவது இங்குள்ள நம்பிக்கை.