Monday, August 23, 2010

ஓடும் நதி-சங்கமம்


ஆழமான தூக்கத்தினிடையே எப்போதும் வருபவை குறுக்குத்துறை ஆறு பற்றிய கனவுகள். கனவில் என்றில்லை, நிகழ்காலத்தில், எதையாவது அசை போட்டுக் கொண்டிருக்கும் மூளை தன்னை மறந்து ஒரு வினாடி படிமங்களற்று வெறுமை கொள்ளும் போதும், திடீரென, தவறாமல் ஆற்றுக்குப் போகும் பாதையும்,ஆளற்ற படித்துறை அமைதியும் சித்திரமாய்த் தோன்றி மறையும்.ஆறு எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும். படித்துறைகள்தான் சமயா சமயத்தில் ஓய்வு கொள்ளும்.மாடுகள் கூட குளித்துக் கரையேறிவிட்ட நண்பகல் நேரம், சலவைத்தொழிலாளிகள் கூட தங்கள் அன்றைய முதல் உணவை துறை ஓரமாய், அமர்ந்து சாப்பிடத் துவங்கியிருப்பார்கள். அவர்களுக்கு வெயில்தான் நிழல். முன்னடித்துறையின் நடுநாயகமான வட்டப்பறையில் மோதி திசை பிரிந்து செல்லும் நீரில் நடுப்பகல் வெயில் தன்னை பிரதிபலித்துக் கொண்டிருக்கும்.யாரோ பிடுங்கிப் போட்ட நாணல், யாரின் அஸ்தியுடனாவது கரைத்துவிடப்பட்ட ஓரிரு செவ்வரளிப் பூக்கள், என ஆறு எதையாவது சுமந்து செல்லும்.

ஒரு நண்பகலில் படித்துறை மண்டபத்தில், குளிக்க இறங்கும் முன் உட்கார்ந்திருந்த போது, ஒரு சேலையை ஆறு நீளமாக இழுத்துக் கொண்டு போயிற்று.அது நெளிந்து நெளிந்து போனது, பெரிய பாம்பு போல.நதிதான் பாம்புக்கு நெளிந்து நெளிந்து நகரும் வித்தையைச் சொல்லிக் கொடுத்திருக்குமோ என்று தோன்றியது. அப்படியானால் ஆறே இல்லாத ஊரில் பிறந்த பாம்புகள் எப்படி நெளியக் கற்றுக் கொள்ளும் என்று தோன்றியது.அந்த நினைப்பே ஒரு பயத்தைத் தோற்றுவித்தது.நினைப்பை உதறி விட்டு மண்டபச் சுவரில் கவனத்தைத் திருப்பினேன். கரியால் வரையப்பட்ட சித்திரங்கள், யார் யாரோ விடலைத்தனமாய் எழுதி வைத்த மோசமான வார்த்தைகள்,கடவுள் ஏன் கல்லானான்? என்று தத்துவ வரிகள் எல்லாம் தென்பட்டன.தனிமை மனிதனை என்னவெல்லாம் செய்யத் தூண்டுகிறது, இதையெல்லாம்,முன்னொரு சமயம் வந்த ஒரு வெள்ளம் அழித்து எடுத்துப் போன நினைப்பு வந்தது.

ஓயாத மழையால், அன்று ஆற்றில் வெள்ளம் போவதாகச் சொன்னார்கள்.மாலை நான்கு மணி வாக்கில் மழை சற்று வெறித்ததும், சைக்கிளை எடுத்துக் கொண்டு இரண்டு மூன்று பேர் போனோம். முன்னடித்துறையெல்லாம் மூழ்கி விட்டது.கோவிலை மூழ்கடித்துக் கொண்டு ஆறு ஓடிக் கொண்டிருந்தது.கோயிலின் சிலைகளையெல்லாம் வழக்கம் போல மேடு ஒன்றில் இருக்கும் சிறிய கோயிலுக்கு எடுத்து வந்திருந்தார்கள்.அங்கேதான் பூசையெல்லாம்.ஒரு சிலர் எங்களைப்போல வேடிக்கை பார்க்க வந்திருந்தார்கள்.எல்லோருமே அந்த மேட்டருகே நின்று பார்த்துக் கொண்டிருந்தோம். வழக்கமாக ஓடும் ஆறு மேற்கிலிருந்து வந்து அந்தந்தப் படித்துறையின் கட்டுமானத்திற்கேற்ப திசை மாறிக் கொள்ளும். ஒவ்வொருவரும் அவர்களுக்கென்று, எதனாலோ பழக்கமாகிவிட்ட துறையிலேயே குளிப்பார்கள்.இன்று படித்துறைகளும் அதன் மண்டபங்களும் மூழ்கி, நதி கடல் போல் கிடந்தது. திசையே தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தது.

எங்களது வழக்கமான முன்னடித்துறையில் குளிக்கும் சிலர் இன்று மேட்டருகே ஒரு ஓரமாய் தைரியமாய்க் குளித்துக் கொண்டிருந்தார்கள்.அவர்களில் ஒரு பெண், சற்று மனநிலை சரியில்லாத பெண். அவள் விருப்பமில்லாமல் ‘தொழிலுக்குதள்ளப்பட்டவள். அவள் எப்போதும் அந்தி கவியும் நேரம்தான் குளிக்க வருவாள்.அவளுக்கு வெள்ளம் பற்றித் தெரியுமா என்று புரியவில்லை.அது அவள் நேரம் என்பதால் வந்து விட்டாளா, அதுவும் தெரியவில்லை. கண் கொத்திப்பாம்பு, கண்ணை வண்டென நினைத்துக் கொத்திவிடும் என்பார்கள். கரையோர ஆண்களின் கண்களோ மார்பு கொத்தும் பாம்பு போல,பெண்ணின் உடலைப் பார்த்துக் கொண்டிருந்த போது அந்தப் பையன் வந்தான். அவன் அநாயசமாக வெள்ளத்தில் குதித்து, அதன் போக்கிலேயே சென்று, மூழ்கியிருந்த கோயிலின் உச்சித் தளத்தில் ஏறினான்.மறுபடி நீரில் பாய்ந்து, இன்னொரு ஓரமாக நீச்சலடித்துக் கரையேறினான்.எங்களருகே வந்து மீண்டும் வெள்ளத்தில் பாய்ந்தான்.அதே போல கோயிலின் மீது ஏறி மறுபடி நீந்தி வந்தான்.எங்களில் ஒருவரையும் அவன் “அன்னாச்சி வாங்க நான் கூட்டிப் போகிறேன் என்று கூப்பிட்டான். யாருக்கும் தைரியமில்லை.

அவன் மூன்றாம் முறையாகக் குதித்த போது ஒரு பெரிய வாழை மரத்தைக் குலையோடு ஆறு இழுத்து வந்தது.அந்தப் பெண், “நல்ல காயா இருக்கே, கறிக்கு ஆகுமே என்று சொன்னாள். அவன் படீரென்று பாய்ந்து அதன் பின்னால் போனான்.அவனது வழக்கமான திசை மாறியது, கோயிலைத்தாண்டி ஆறு இழுத்துக் கொண்டு போயிற்று.நெடு நேரமாக வரவில்லை.நாங்கள் கிளம்ப முயற்சித்த போது அவள், “புள்ளை வந்துரட்டுமே என்று அங்கேயே நின்று கொண்டிருந்தாள். நாங்கள் கிளம்பினோம் என்பதைவிட நழுவினோம் என்பதே பொருந்தும். சற்றுத் தூரம் வந்து திரும்பிப் பார்த்தோம். அந்தச் சின்னக் கோயிலின் வாசலில், மங்கலான மாலை வெயிலில், உடலை ஒட்டி இறுகக் கட்டிய ஈரச் சேலை, கறுத்த மேனியைச் சிலையென மாற்றியிருக்க, தெற்கிலிருந்து வந்து கொண்டிருக்கும் அவனைப் பார்த்தபடி, ‘கன்னியாகுமரி போல நின்றாள்.

ஒவ்வொரு ஊரிலும், இது போல எத்தனையோ படித்துறைகளையும்,அதில் ‘நாசூக்காய் ஆடை மாற்றும் பெண்களையும்’, நாகரீகமின்றி உடல் கொத்தும் கண்களையும், கால்ப் புண்களை மீன்கள் கடிக்க, கந்தை கசக்கிக் கட்டும் மனிதர்களையும் பார்த்தபடி; மண்டபங்களையும் ‘மண்டப மணிமொழிகளையும் வெள்ளங்கள் தோறும் கழுவியபடி, ஆறு ஓடிக் கொண்டே இருக்கிறது.அது சொல்வதைக் கேட்கும் முன் அது நம்மைக் கடந்து விடுகிறது.ஆனால் எல்லாவற்றையும் அது கடலின் காதில் போட்டு வைக்கிறது. கடல் தன் ஓயாத, ஆயிரமாயிரம் நாவால், பேச்சால் அதை சொல்லிக் கொண்டே இருக்கிறது.

கடலில் அலைகளும், கரையில் கதைகளும் ஓய்வதேயில்லை


Visitors