Thursday, June 14, 2012

நன்றி காட்சிப்பிழை திரை.ஜூன் 2012.
இன்றைய செய்தி நாளைய வரலாறு.
படத்திற்கு பெல் அடித்து விட்டார்கள். நண்பன் மணி வாட்சைப் பார்த்தான்.மூன்று மணிக்கு இன்னும் இரண்டு மூன்று நிமிடம் இருக்கிறது.இன்னும் டிக்கெட்டுகள் கொடுத்து முடிக்கப்படவில்லை.அநியாயக் கூட்டம்.முந்திய படமான நான் ஆணையிட்டால்...எதிர்பார்த்ததற்கு நேர் எதிரான தோல்வியைக் கண்டது.அதனால் காவல்காரன் படத்திற்கு முன் பதிவு( ரிசர்வேஷன்) எதுவும் இல்லை. அதnannன் காரணமாக உயர்வகுப்பு டிக்கெட்டுக்கும் கூட்டம் அடிபிடியாய் இருந்தது.ஆனால் அசாதாரணக் கூட்டமென்றும் சொல்ல முடியாது.மணி இதை பேக்பெஞ்சு டிக்கெட்டில் பார்க்க வேண்டுமென்று தீரமானித்திருந்தான். அவனுடைய செண்டிமெண்ட்டுக்கு அளவே கிடையாது. நல்ல படமாக இருக்கும், நன்றாக ஓடும் என்று எதிர்பார்க்கிற படங்களின் முதல் நாள் முதல்க் காட்சிக்கு வரவே மாட்டான். இதை ரொம்பவும் எதிர் பார்க்கவில்லை என்பதனால் முதல்க் காட்சிக்கு வந்தான்.ஆனால் பேக் பெஞ்சுக்குத்தான் போக வேண்டும் என்று சொல்லி அதற்கான ஏற்பாட்டையும் அவனே பார்த்து விட்டான்.அதில் ஏதாவது ‘ராசிக் கணக்கு வைத்திருப்பான். ஏதோ ஒரு படத்திற்குப் போகும் போது, வாசலில் விற்ற ‘அவித்த வேர்க்கடலைநான்கு பொட்டலம் வாங்கி வந்திருந்தான். படம் ஓடவில்லை. அதனால் அவித்தthum வேர்க்கடலை என்றாலே அவன் அடிக்க வந்து விடுவான்.   பெல் அடித்ததும் வாட்சைப் பார்த்தவன் விடுவிடு என்று மேலே ஆப்பரேட்டர் ரூமிற்குப் போனான் போலிருக்கிறது. அவன் அந்தத் தியேட்டரில் எங்கு வேண்டுமானாலும் போவான்.எல்லோரும் நல்ல பழக்கம்.எல்லோருக்கும் நன்றாகச் செலவழிப்பான். திடீரென்று நியூஸ் ரீல் போட்டார்கள்.பொதுவாக முதல் நாள் முதல்க் காட்சிக்கு முன்னால் நியூஸ் ரீலெல்லாம் போடமாட்டார்கள். (வெள்ளிக்கிழமை தோறும் நியூஸ் ரீல் மாறும்...இன்று போட்ட பழைய நியூஸை ஏற்கெனவே பார்த்திருந்தோம். தியேட்டரில் அதனாலும் ஒரே கூச்சல்...). படத்தைப் போடு என்று, அது வேறு கூச்சல்.மணி பாதி இருட்டில் வந்தான்... இன்னக்கி வியாழக்கிழமைடா மூனு மணி வரைக்கும் ராகு காலம் இருக்கு...அதுதான் சொல்லிட்டு வந்தேன் என்றான். நியூஸ் இரண்டு நிமிடம் ஓடியதும் பாதியிலேயே நிறுத்தி விட்டு படம் போட்டார்கள். இப்ப என்ன நீ சொல்லிட்டதாலெ,பெட்டிக்குள்ள இருக்கிற ரீலில்,  க்ளை மாக்ஸ் மாறிரவா போகுது என்றேன்.போடா மயிரு என்று சொல்லிவிட்டு. இடம் மாறி, தள்ளி உட்கார்ந்து கொண்டான். ரொம்ப நாளைக்குப் பிறகு, ‘திருடாதே படத்திற்குப் பின், இதற்கு டைரெக்‌ஷன் ப.நீலகண்டன். அநேகமா ஏழு வருடங்கள் கழித்து,அதனால் இது நல்லா இருக்கும் என்று மணி அதற்கு ஒரு கணக்குச் சொன்னான். நான் அதற்கும். ஏன் ‘திருடாதேபடத்திற்குப் பின்னால், நல்லவன் வாழ்வான் வரவில்லையா, அது நீலகண்டனின் சொந்தப் படம், ‘கொடுத்துவைத்தவள் படத்திற்கும் வசனம், ‘ப.நீ’ தானே என்றதற்கும் ஏற்கெனவே கோபித்திருந்தான்.அதற்குச் சமாதானமாக, எங்க வீட்டுப் பிள்ளை மாதிரி இதுவும் வியாழக்கிழமை ரிலீஸ் மணி, என்றெல்லாம் சொல்லியும் மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டே இருந்தான் தூக்கிவைத்த மூஞ்சியில் சிரிப்பே வரவில்லை.
படத்தின் ஆரம்பத்தில் ஒரு நல்ல பாக்சிங் சண்டை வந்தது. நாம் படத்திற்குப் பிறகு, அவர் படங்களில், பாக்சிங் சண்டையே வரவில்லை. எம்.ஜி.ஆரும் அதற்கெல்லாம் ஒரு கணக்கு வைத்திருப்பார். பத்து படங்களுக்கு இடையே சாதாரணமாக ‘சிலம்புச் சண்டை வராது. எதை எதை எப்போது ‘added attraction’  ஆக படத்தில் வைக்க வேண்டும் என்று அவருக்குத் தெரியும்.அதே போல் ‘அடித்து முழக்கி சாப்பாடு சாப்பிடுகிற காட்சிகளையும் சரியான படத்தில்தான் வைப்பார்.மணி அப்படிக் காட்சிகளைப் பார்த்ததுமே சொல்லி விடுவான், “ஏலேய் படம் வெள்ளி விழாஎன்று.அவன் சொல்லும் உதாரணம் எங்க வீட்டுப் பிள்ளை., மாட்டுக்கார வேலன்.இரண்டிலும் எம்.ஜி.ஆர் சரியான சாப்பாட்டு ராமனாக வருவார்.
பாக்சிங் சண்டையில் ஜெயித்து எம்.ஜி.ஆர், கோப்பை வாங்கியதும், நம்பியார் தன்னுடைய வீட்டில் வேலைக்குச் சேரும்படிக் கேட்பார்.பரிசு வழங்கிய போலீஸ் அதிகாரி,திருச்சி சௌந்தர ராஜன், “ மிஸ்டர் மணி, நல்ல வாய்ப்பு பயன் படுத்திக் கொள்ளுங்கள்என்று எம்.ஜி.ஆரிடம் சொல்லுவார். உடனே நான் சொன்னேன் , இரணடு சீட் தள்ளி அமர்ந்திருந்த மணியிடம், மிஸ்டர் மணி, இதுதான் சஸ்பென்ஸ், வாத்தியார் வழக்கம் போல சி.ஐ டி தான்என்று. போடா வெளங்காதவனே என்று இன்னும் தள்ளிப் போய் விட்டான்.
திருச்சி சௌந்தர் ராஜனைப் பார்க்கையில் பாவமாக இருக்கும்.அவர் ‘பணம் தரும் பரிசுஎன்ற படத்தில் கதாநாயகனாக நடித்தவர். அந்தப் படத்தை தயாரித்தவர் சாண்டோ சின்னப்பாத் தேவரின் சகோதரர், சாண்டோ எம்.எம்.ஏ. சுப்பையாதேவர்.( அவரது முதல்ப் படம் தந்தைக்குப் பின் தனயன்என்கிற மாதிரியில் ஒரு படம்) பணம் தரும் பரிசு படக் கதாநாயகி, வி.ஆர் திலகம். இவரை விட அழகாயிருப்பார் இரண்டாவது கதாநாயகி, ரமணதிலகம் என்பவர். நாங்களெல்லாம் அவரையே கதாநாயகியாகப் போடிருக்கலாமே என்று நினைத்தோம். அவர் அடுத்த படம் நடிக்கவில்லை. அதற்குள் திருமண வாழ்வில் ஈடுபட்டு விட்டார். அவரது கணவர், பாடலாசிரியர் திரு. வாலி.அந்தப் படத்திற்கு இன்னொரு பெருமை(!) உண்டு. அதில் ஒரே ஒரு பாடல்க் காட்சியில், “ பார் இது பணம் தரும் பரிசு....என்று வாலி எழுதிய பாடல் என்று நினைவு, அழகான ஒருவர் நடனமாடுவார். அவருக்காகத்தான் அந்தப் படத்திற்கே போனோம்.அது அவருக்கும் முதல்ப் படம்.அவர் சென்னை நகர தி.மு.க மேயர் சிட்டிபாபு.பாவம் அவருக்கு சினிமா முகவெட்டெல்லாம் இருந்தும் நடிக்கும் வாய்ப்பே வரவில்லை.மிசாவிலோ அதற்கு முன்பேயோ அரசியல்க் கைதியாக சிறை புகுந்தவர் சிறையிலேயே இறந்து போனார்.காவல்காரன் 1967செப்டம்பர் 7-ம் தேதி வந்தது.எம்.ஜி.ஆர் குண்டடி பட்டு ‘மறுபிறவிஎடுத்த பின், மீதமுள்ள சில காட்சிகளில் வசனம் பேசி நடிக்கிற முதல்ப்படம்.அவர்செத்துப்பிழைத்த பின்வந்த முதல்ப் படம் அரசகட்டளை.அதில் ஒரே ஒரு சணடைக் காட்சியும், முடி சூட்டுகிற காட்சியும் மட்டும் எடுத்தார்கள். இரண்டிலுமே வசனம் பேசவில்லை.
அதனால் பல வதந்திகள் உலவின. இனி அவருக்கு பின்னணிக் குரல்தான்.டி.எம்.எஸ்தான் பேசப் போகிறார் என்று ஒரு வதந்தி. இல்லையில்லை. டி.எம்.எஸ் ஸையே நம்பிக் கொண்டிருக்க முடியுமா....அதனால் எம்.ஜி.சக்ரபாணி பின்னணிக் குரல்கொடுக்கப்போகிறார் என்றார்கள்.ஆனால் எம்.ஜி.ஆரோ யாரையும் நம்பியிருக்க விரும்பவில்லை. தானே பேசினார்.அவர் பேசி நடித்து எடுக்கப்பட்ட காட்சி பற்றி விரிவாக தினத்தந்தி சினிமாக் குருவியார் எழுதியிருந்தார்.அந்தக் காட்சி வரப்போகிறது என்று படம் பார்க்கும் அனைவருக்கும் தெரிந்து விட்டது. தியேட்டர் அப்படியொரு அமைதியாய் இருந்தது.பார்த்தென் சுசிலா, பார்த்தென்... என் கோமேதகச் சிலை குப்பைல விழறதப் பார்த்தென் சுசிலா பார்தென்......என்று பேசியதும் தியேட்டர் முழுக்க ஒரே அழுகை, விசும்பல், ஒரு குரல், “தலைவா... நீங்க பேசவே வேண்டாம், பேசாமலே நடிங்க.... நாங்க பார்க்கோம்.. என்று ஒரு வலுவான குரல் கேட்டது. “ ஆமா, ஆமா பேச வேண்டாம், பேச வேண்டாம்..என்று அழுகை முழுதாய் நனைத்த குரல்கள் ஆயிரக்கணக்கில் கேட்டது. மணி என் தோளில் சாய்ந்து கொண்டான். அவன் எப்போது என் அருகில் வந்தான் என்றே உணர்வில்லை.எனக்கு எம்.ஜி.ஆரைவிட அந்த ‘சனங்களையும் அவர்கள் சங்கடத்தையும் பார்த்து அழுகை முட்டிக் கொண்டு வந்தது.அடுத்தடுத்த காட்சிகளிலும் இதே போல் ஜனக்கூட்டம் தங்கள் உணர்ச்சியைக் கொட்டியதாகச் சொன்னார்கள். நாங்களுமே பார்த்தோம். ஆனால் முதல்க் காட்சியின் போது ஏற்பட்ட பதற்றம் இல்லை.படமும் நல்ல திரைக்கதை,சஸ்பென்ஸ் ஆகியவற்றுக்காக ‘க்ளிக்ஆகி விட்டது.படம் சிம்பிள்  ஆகக் கச்சிதமாக இருந்தது.மணிக்கு சந்தோஷம்.படத்தின் வெற்றியைப்  பார்த்து ‘ராக் வாலாஎன்று தர்மேந்திராவைப் போட்டு ஹிந்தியில் கூட எடுத்தார்கள்.அடுத்த படமும் பெஞ்சுக்கே போவோம், சரியா மிஸ்டர் மணி’’ என்றேன்.  திருந்தவே மாட்டே....போடா..என்று இரவு இரண்டாம் காட்சிக்கு டிக்கெட்  சொல்லப் போய்விட்டான். வேற யாருல்லாம் வாரா..என்று கேட்டவன்,போடா நீ யெல்லாம் வர வேண்டாம்...என்று ஒரு பொய்க் கோபத்துடன் போனான். ஆனால் எனக்கும் டிக்கெட் சொல்லியிருந்தான்.செகண்ட் ஷோவில் நினைத்தேன் வந்தாய்.... பாட்டையும் அதில் வரும் பிர்க்காக்கள் பற்றியும்...விஸ்தாரமாகப் பேசிக் கொண்டிருந்தான் என்னிடம்.
திருச்சி சௌந்தர்ராஜனை நேரில் பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை. அடுத்த ஏப்ரலில் சென்னை சென்றிருந்தேன். தங்கியது எல்லாம் ‘ஜேயார் மூவிஸ்அலுவலகத்தில்தான்.அதில் என் ஒன்று விட்ட அண்ணன் ஆவுடையப்பன் ப்ரொடக்‌ஷன் மேனேஜராக இருந்தார்.அவர்கள் ‘புதிய பூமி படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.முக்கால் வாசி படம் முடிந்திருந்தது. அதுவும் பல காட்சிகள் துப்பாக்கிச்சூட்டுக்கு முன் (து.முன்/ து.பின்) எடுக்கப்பட்டவை.ஒரே ஒரு பாடல்க் காட்சி மட்டும் துபின் எடுத்திருந்தார்கள். ’’விழியே விழியே உனக்கென்ன வேலை விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை”’’..பாடல் காட்சி முடிந்து எடிட் பண்ணி வைத்திருந்தார்கள்.இரண்டு நாள் அங்கே இங்கே என்று சென்னையைச் சுற்றிப்பார்த்தேன்.அதிலும் முக்கியமாகமவுண்ட் ரோடின்சினிமா தியேட்டர்களைத்தான் ஒவ்வொன்றாகப் பார்த்தேன்.எல்லாவற்றையும் பேப்பரில் பார்த்தது. காஸினோ, பிராட்வே, மேகலா- பிளாசா,பாரத், மகாலட்சுமி,-குளோப், கிருஷ்ணா,மேகலா-சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி. மற்றும் தமிழகமெங்கும்...என்று தினத்தந்தியில் வரும் விளம்பரங்கள் பார்த்துப் பார்த்து அவற்றையெல்லாம் தேடித்தேடிப் போய்ப் பார்த்தேன்.பிளாசா தியேட்டரில் வைத்திருந்த பிக்பாக்கெட் திருடர்கள் ஜாக்கிரதை போட்டோக்கள் பார்த்ததும், தன்னைப்போல ஒரு பயம் வந்ததுஇன்றும் நினைவில் இருக்கிறது.அதுவே பழைய்ய போட்டோக்கள். அதில இருக்கும் பலர் இறந்து கூட போயிருக்கலாம்.ஆனாலும் ஏதோ ஒரு பயம்.
மூன்றாம் நாள் அண்ணனுடன் ஏ.வி.எம் ஸ்டுடியோவுக்குப் போனோம்.ஜேயார் மூவீஸ் கார் என்பதால் ராஜமரியாதையோடு போனோம். ஏவி.எம் படங்களின் திருநெல்வேலி விநியோகத்தை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். அதற்கு வின்செண்ட் என்று ஒரு மேனேஜர். அவரை அன்பே வா படத்திலிருந்து பழக்கம். ஏற்கெனவே அவரிடம் வாங்கிய கடிதம் ஒன்றும் பேண்ட் பாக்கெட்டில் பத்திரமாய் இருந்தது.ஆனால் அதற்கெல்லாம் வேலை இல்லை.புதிய பூமி படத்தில் வரும் “நாந்தாண்டி காத்தி நல்ல முத்து பேத்தி...பாடல் எடிட்டிங் நடந்து கொண்டிருந்தது.அதையே எவ்வள்வுநேரம் பார்த்துக் கொண்டிருப்பது.,கண்ணன் என் காதலன் படத்தின் ரீரிக்கார்டிங் வேலைகள்,ஏவியெம் ரிக்கார்டிங் தியேட்டரில்நடந்து கொண்டிருந்தது.அங்கே போகலாமா என்று கேட்டேன்.
சவுண்ட் ப்ரூஃப் தியேட்டரென்றாலும் கூட அதற்குக் கணிசமான தூரத்திலொரு சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது.கார்களையோ ஆட்களையோ  அந்தப் பகுதியில் அனுமதிப்பதில்லை.அந்த விளக்கு அணைந்ததும் அண்ணன் அங்கே கூட்டிப் போனார்.இசையமைப்பாளர்விஸ்வநாதன் குழுவினர்தியேட்டருக்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தனர்.தபலா வாசிக்கும் சற்றே வயதான ஒருவர், பெயர் முருகேசன் என்று நினைவு, அவரைச் சீண்டி அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். அவர் கோபத்தில் கத்திக் கொண்டிருந்தார். விச்சுவின் உதவியாளர் (சங்கர்)கணேஷ் வந்து சமாதானப்படுத்தி எல்லோரையும் உள்ளே கூட்டிப் போனார்.நானும் போனேன். வெற்றிலை போட்டபடி வெள்ளை ஜிப்பாவும், பாகவதர் கிராப்புமாய் திருச்சி சௌந்தர் ராஜன் ஒரு சோஃபா போன்ற நாற்காலியில் அமர்ந்திருந்தார்.கணேஷ், என்னப்பா சண்டை என்று விசாரித்தார்.முதலாளி வர்ற நேரமப்பா, படத்துக்கு டேட் குடுத்தாச்சு,இன்னும் ஒரு வாரம்கூட இல்லை, இன்னக்கி கடைசி சாங் பிக்சரைஸ் ஆகுது....என்று சொல்லிக் கொண்டிருந்தார்.என்னை அண்ணன் அவரிடம் அறிமுகப்படுத்தினார்.தம்பிதான் கொஞ்ச நேரம் இருந்து பார்த்து விட்டுபோவானென்றார்.அதற்கென்ன சும்மா காமெடி சீன்தான் ரிக்கார்டிங் நடக்கு...இருக்கட்டும் என்றார்.தன் அருகிலிருந்த இன்னொரு சோஃபா நாற்காலியில் அமரச் சொன்னார். சோ, சந்திரபாபு காமெடி சீனுக்கு ரீரிக்கார்டிங்க் செய்து கொண்டிருந்தார்கள்.அது முடிந்து பெங்களூருக்கு கதை நகர்வதாக ஒரு காட்சி. திரையில் விதான் சௌதா முன்னாலுள்ள வீதியில் காரொன்று போவது போலவும் காமிரா விதான் சௌதாவை நோக்கிய படியே இருப்பது போலவும் காட்சி, மௌனமாய் ஓடியது.கணேஷ் ஏதோ நோட்ஸ் கொடுத்தார். தபலாதான் முக்கிய பங்கு....கொஞ்சம் வயலின்... தபலா முருகேசன் முகத்தில் வாசிக்கும் போது அப்படியொரு மலர்ச்சியும் சிரிப்புமிருந்தது... இந்த ஆளா கொஞ்ச நேரம் முன்பு சண்டை போட்டவரென்று தோன்றியது. இரண்டு ஒத்திகைக்குப் பின் ரிக்கார்டிங் அழகாய் ஓ.கே ஆனது.பின்னணி இசையுடன் அதே காட்சியைப் பார்க்கும் போது உயிரோட்டம் கூடியிருந்தது.கணேஷ்,மாமா பிரமாதம் என்று தபலாக்காரரைப் பாராட்டிக் கொண்டிருந்தார்.
ஆர்.எம் வீரப்பன் வந்தார்.அதுவரை கால் மேல் கால் போட்டபடி என்னிடம் பேசிக் கொண்டிருந்த சௌந்தர்ராஜன் திடீரென்று எழுந்து கைகட்டி வாய் பொத்தாத குறையாய் நின்று அவரை வரவேற்றார். ஆர். எம் வீ யின் முதல் கேள்வி “இது யார்? என்பதுதான்.நானாகவேமுன் வந்து ஜேயர் மூவீஸ் என்றேன். ஊரிலிருந்து வந்திருக்கீங்களா என்றார். தென்காசி...? என்றார். ஆமா என்றேன் சௌந்தர் ராஜனுடன் தனித்துப் போனார்.அத்தனை மியூசிக் கலைஞர்களும் கணேஷும் பய பக்தியுடன் நின்றார்கள்.ஐந்து நிமிடம் தான். “சின்னவர்,ஜேயார் மூவீஸ் பாட்டு சீன் பார்க்க வருவாரு...பாத்துக்க சௌந்தர் ” இங்க வந்தாலும் வருவார்..என்று சொல்லிக் கொண்டே என்னைப் பார்த்தார்.எனக்கும் ஒரு முதலாளிங்கிற பயம் வந்திருந்தது.எப்படியோ வணக்கம் போட்டேன்.பதில் வணக்கமெல்லாம் போடவில்லை, போய் விட்டார். சௌந்தர் ராஜன், மறுபடி சோஃபாவில் “ அப்புறம்....?என்கிற மாதிரி தோரணையாய் உட்கார்ந்தார்.பிஸ்கட்டும் டீயும் வந்தது.அன்னன் குடுக்கச் சொன்னாரா என்று கேட்டார். ஆமா முதலாளி கொடுக்கச் சொன்னாங்க..என்றான். கொண்டு வந்தவன். அதாம்ப்பா அண்ணன் தானே என்றார். எனக்கு ஒன்றுமே ஓடவில்லை.  கொஞ்ச நேரம் முன்னால் பெட்டிப்பாம்பாய் நின்றவரா என்று தோன்றியது.பிஸ்கட் தின்று டீ குடித்தேன்.தம்பி காலேஜ் படிக்கிறதாச் சொன்னீங்கள்ளா... நல்லாப் படியுங்க என்றார்.நானவரிடம் பணம் தரும் பரிசு பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். ஆங்... அப்படியா நல்லா ஞாவகம் வச்சிருக்கீங்களே...என்றபடி வெற்றிலை போட ஆரம்பித்தார்.எல்லா இசைக் கலைஞர்களும் தங்கள் வாத்தியங்களை உரையில் போட்டுக் கொண்டிருந்தனர்.அண்னேன் நான் வாரேன் என்றேன்.இருங்க தம்பி, டைட்டில் கார்டுக்கு டைரக்டர் ஒரு ஐடியா சொல்லி படம் போட்டுப் பார்க்கச் சொல்லியிருக்கார் அண்ணன். கொஞ்சம் சீன் பாருங்க இப்ப டைரக்டர் (ப.நீலகண்டன்) கூட வருவார் என்றார்.இருந்தேன்.அவர் வரவில்லை.அவரை மறுநாள்தான் பார்த்தேன். ஆனால், படம் கொஞ்சம் பார்த்தேன்.
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும் பாலுடன் தேன் கனி சேர வேண்டும்...என்ற பாட்டு லலித கதியில்  மெதுவாக ஒலித்தது,(இதே பாடல் துரித கதியில் இன்னொரு காட்சியில் வரும் போதுதான் ஜெயலலிதா தானாக எழுந்து ஆடுவார்.) ஜெயலலிதா வெள்ளை ஆடையில் எம்.ஜி ஆரோடு சேர்ந்து ஆடிக் கொண்டே, (கற்பகம் படத்தில் வரும் மன்னவனே அழலாமா.....பாடல் போல,) வானில் பறப்பது போல ஒரு காட்சி ஓடியது.மாண்டேஜ் ஷாட் என்று அப்புறம் சொன்னார்கள்.இதன்மேல் டைட்டில் வரும் என்றார் சௌந்தர் ராஜன்.படம் வந்த போது அப்படி வரவில்லை. ஏதோ டைட்டில் கார்ட் இணைக்கும் போது மிஷின் கோளாறில் இந்த வெள்ளுடை அணிந்து வானில் பறக்கும் காட்சி அழிந்து விட்டதாகச் சொன்னார்கள். படத்தின் கடைசியில் ஜெயலலிதா மட்டும் அப்படி வான் மேல் பறந்து, உலகை விட்டு நீங்குவது போல் வரும்.கதைப்படி படத்தில் ஜெயலலிதா இறந்து போவார்.படத்தை ஊருக்கு வந்து ரிலீஸ் அன்று நண்பர்களுடன் பார்த்த போது இதைச் சொன்னேன்..ஏதோ புழுவைப் பார்ப்பது போல பார்த்தார்கள்.
சரியாய் எட்டு வருடம் கழித்து, தூத்துக் குடியில் வேலையிலிருந்தேன்.அப்போது எமர்ஜன்ஸி நேரம்.எங்கள் அலுவலகத்தின் மாடியிலொரு லாட்ஜ் இருந்தது.அதில் ஒரு ஹால் உண்டு.அங்கே எம்.ஜி.ஆர் மன்றத்தினர் வருவதும் போவதுமாக இருந்தார்கள்.சிவன் கோயில் சன்னதித் தெருவில் ஒரு கல்யாண மண்டபத்தில், ஏதோ பேருக்கு, அ.தி.முக பிரமுகர் வீட்டு விசேஷம்.அதற்கு மதுரைமுத்து வந்திருந்தார். நெருக்கடி நிலையின் கெடுபிடி.   இப்படி சிறிய விழாக்களை முன் வைத்தே அரசியல்க் கூட்டம் போட முடியும். முத்தண்ணன்தான் எம்.ஜி.ஆரை தி.மு.க கட்சியை விட்டு நீக்கவே ஏற்பாடு செய்தவர். பின் அவரே எம்.ஜி.ஆருடன் இணைந்து விட்டார். மத்தியானம், சாப்பாட்டு இடைவேளையின் போது அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவன் தற் செயலாய் இளமதி என்கிற திருநெல்வேலி என் அண்ணன் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்துக் காரரைச் சந்தித்தேன்.வேலை முடிஞ்சுட்டுன்னா மேல வா, கட்சியோட ஊழியர் கூட்டம் நடக்கப் போகுது என்றான் சற்று ரகசியமாக.என்னடா ரகசியக் கூட்டமா என்று நினைத்த படியே ஒரு நாலு மணி வாக்கில் போனேன். நூறு பேர் தரையிலமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். ரொம்ப சத்தமில்லாமல் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார்.மைக்கெல்லாம் இல்லை.நான் போனதும் நிறுத்தினார்.அங்கே இருந்த மன்றத் தோழர்கள் பலருக்கும் என்னைத் தெரியும். சைகையில் உள்ளேவரச் சொல்லி அமரச் சொன்னார்கள்.நான் இளமதி அருகே அமர்ந்ததும் அவர் மறுபடி பேச்சைத் தொடர்ந்தார். பேச்சை முடித்தார் என்றே சொல்ல வேண்டும்.சொன்னதெல்லாம் கவனம், .நான் இப்போ பேச்சை முடிக்கப் போறேன்....யாரும் கை தட்டீராதிங்க...என்றபடியே அண்ணாவையும் எம்ஜி ஆரையும் வாழ்த்தி முடித்தார். அவரைப் பார்த்து வணக்கம் போடுவது போல் சிரித்தேன்.இளமதி என்னை அறிமுகப் படுத்தினான், “ எல்லாம், நம்ம ஆதரவாளர்தான் பேங்கில வேலை  பார்க்கிறார் என்றான். அவர் கவனிக்கும் நிலையில் இல்லை. காரை வரச் சொல்லுங்க, முத்தண்ணன் காத்திருப்பாரு மதுரையில் ஒரு காதணி விழா, அதற்குப் போகணும் என்று கிளம்பினார்,  முன்னாள் கதாநாயகன், பின்னாள் அப்பா நடிகர், அப்புறம் எம்.எல்.ஏ., அப்புறம்.......சத்துணவு அமைச்சர்..திருச்சி சௌந்தர்ரராஜன்.


Visitors