ஸகி- 2
______________
சில விஷயங்கள் திரும்பத் திரும்ப நிகழும்.சில விஷயங்கள் அபூர்வமாக நிகழும். சில விஷயங்களைக் கட்டமைக்க, கடந்து செல்ல, புவி வாழ்க்கை நீண்ட காலத்தை எடுத்துக் கொள்ளும். சில சமயம்,சொடுக்கும் நேரத்தில் நடந்து விடும்.சந்திப்பு, நொடியிலும் நட்பு காலகாலமாக நீளுவதும் இந்த சூத்திரத்தின் அடிப்படையில்தான் போலும்.ஆனால் அந்த ’நொடி நேரம்’ நல்லதாய் வாய்க்க வேண்டும்.
ஒரு நண்பர் அந்த ஊரில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தார்.அந்த ஊர் பற்றி அவருக்கு இன்னும் ஒன்றும் தெரியாது.ஒரு நண்பரின் முகவரியை சொல்லி அனுப்பி இருந்தேன்.அவர் பணியில் சேர்ந்த அன்று ஒரு இரண்டு வரிக்கடிதம் எழுதியிருந்தார்.”நான் சுகமாக வந்து சேர்ந்து விட்டேன். இந்த ஊர் டூரிங் டாக்கிஸில் இன்று முதல் ’சரத் பாபுவின் தேவதாஸ்’படம் ஓடுவதாக போஸ்டர் பார்த்தேன்.”எனக்குப் புரிந்தது நிச்சயம் அவர் அன்று ‘பொழுதைக் கழிப்பதாக” தேவதாஸ் படம் போய், தன்னையே அலைக்கழித்து திரும்புவார் என்று
தேவதாஸ் படம் முதலில் வந்த போது மூன்று அல்லது நான்கு வயது இருக்கும்.ஆனால் அதை 1970 –களில் ஒருமுறை ரத்னா டாக்கீஸில் திரையிட்ட போது, வண்ணதாசன், அந்த நண்பர்,நான் மூன்று பேரும் போனோம். இப்படி ஒரு படம் இருபத்தி ஐந்து வருடத்துக்கு முன்பே வந்திருக்கிறதாஎன்று ஆச்சரியமாய் இருந்தது.அன்று படம் கடைசி, இரண்டாம் காட்சிக்கு, நானும் நண்பரும், மறுபடி போனோம். சாப்பிட்டிருந்தோம் ஆனால் சாப்பிடவில்லை. படத்தில் பார்வதியை விட ‘சந்திரமுகி’க்காகவே நாங்கள் வெகுவாக உணர்வுகளை இழந்திருந்தோம்.
இதே போல் ‘நான் ராஜவல்லிபுரத்துக்குப் போய்க் கொண்டிருந்த போது தாழையூத்து சூப்பர் டாக்கீஸ்-அது அப்போது டூரிங் டாக்கிஸ்-துலாபரம் போஸ்ட் ஒட்டி இருந்தார்கள்.ஒரு தெருவிளக்கினடியில் நிழலுருவாய் கத்திக் குத்துப்பட்ட ஏ.வி.எம் ராஜன்,குனிந்து இருக்கிற மாதிரி 60க்கு நாற்பது சைஸ் போஸ்டர் ஒட்டியிருந்தர்கள்.பரணி டிசைன்,பண்ணியது. அன்று இரவு படம் பார்த்தோம்.மனப்பாரம் புதுப்பித்துக் கொண்டேன்.தேர்வுக்கு படிப்பதற்காகத்தான் அந்த கிராமத்திற்கே போயிருந்தேன்.மறு நாள் கிளம்பி விட்டேன்.
ஒரு வகையான அழுகுணிப் படிமங்களாகச் சொல்ல என்ன காரணம் என்று நீங்கள் யோசிக்கலாம். இப்படியான விஷயங்களுடன் நாம் அதிகமாக ஒன்றி விடுகிறோம். அதில் நம்மை ஆதாரமாகக் கவர்வது அதில் பொதிந்துள்ள கலை நயமே.தேவதாஸ் படத்தின் இயக்குநர்-வேதாந்தம் ராகவய்யா என்ற தெலுங்குக்காரர். அவர்தான் ‘அடுத்தவீட்டுப்பெண்’ நகைச்சுவைப் படத்திற்கும் இயக்குனர்.அஞ்சலிதேவியின் பல படங்களுக்கு அவர்தான் இயக்குநர்.அவர் பிற்காலத்தில் இயக்கிய படம் நாகேஷ் நடித்த ‘உலகம் இவ்வளவுதான்’தேவதாஸிற்கு அவர்தான் இயக்குநர் என்றால் நம்ப முடியாது.
இசக்கி அண்ணாச்சியின் கலையும் அப்படிப்பட்டதுதான்.நான் அவருடன் அவரது துயரக் கணங்களையும் பகிர்ந்து கொண்டவன்.அவரது கலைப்படைப்புகளில் ஒரு இழப்பின் சாயலை இனங்கண்டு கொண்டவன்.’’ஆற்றங்கரை.மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும்..’’என்கிறதன் நிலையாமையை பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.
ஒரு சம்பவம். அவருடன் பழக்கமேற்பட்ட சில காலம் கழித்து. அநேகமாக நெல்லை தென்காசி பகுதிகளில் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக அதிகாலை நேரத்தில் வித்தியாசமாக ’வெம்பா’ என்கிற மஞ்சு படர்ந்திருந்தது.ஏதோ ஒரு இயற்கை விசித்திரம். நான் அதைப் படம் பிடித்தேன்.கொஞ்சநாள்கழித்து இசக்கி அண்ணாச்சியைப் பார்க்கிறபோது, “அண்ணாச்சி இந்த மாதிரி மூன்று நாட்களாக வெம்ப படர்ந்திருந்ததே பார்த்தீர்களா.. என்றேன். ”ஆமா என்ன இப்படிக் கேட்டுட்டீங்க, என்று அவரது வெளிச்சமாயிருந்த ‘டார்க் ரூமி’ற்குள் போனார். நாலைந்து பெரிய புகைப் படங்களை எடுத்து வந்தார். சிந்து பூந்துறை ஆறும், உடையார்பட்டி ரோடும், வெம்பாவில் குளித்துக் கொண்டிருந்தது. அபூர்வமான படங்கள். நான் எடுத்ததை நினைத்து வெட்கமாய் உணர்ந்தேன்.சிரித்துக் கொண்டே “விடுவனா.. அபூர்வமான விஷயம்ல்லா” என்றார். ஒருபடத்தை கொடுங்கள் என்றேன். சிரித்து மழுப்பியபடி மறுபடி உள்ளே கொண்டு போய் வைத்துவிட்டு வந்தார்.அதுதான் அண்ணாச்சி.
அண்ணாச்சி இன்று இல்லை... ஆனால் நினைவுகள்...அது புகைப்பட்மாய் நெஞ்செங்கும் நிறைந்திருக்கிறது.ஏனோ மறுபடி தேவதாஸ் பாடல் நினைவுக்கு வருகிறது
”கனவிதுதான் நிஜமிதுதான் என
யார் சொல்லுவார்-விதி
யார் வெல்லுவார்.”