Tuesday, January 26, 2010

ஓடும் நதி-16




அவன், தனியாய் தெருவில் நின்று திடீரென்று ஆகாயத்தை அதிசயத்தாற் போல் பார்த்துக் கொண்டிருப்பான்.தலையை இடமாய், வலமாய் சாய்த்து, முடிகிறவரை அண்ணாந்து கண்ணைச் சுருக்கி, கண்களுக்கு மேல் கையைக் குடை மாதிரி வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பான்.
யாராவது ஒருவர் வந்து ஏய் என்னப்பா பார்க்கே,என்று யாராவது கேட்டால் ஒன்றும் சொல்ல மாட்டான். மறுபடி அதே வேலைகளைச் செய்வான்.இப்பொழுது இன்னும் ஒன்றிரண்டு பேர் தெருவில் கூடியிருப்போம்.. ஏய் என்னப்பா எதாவது ராக்கெட் தெரியுதா என்று கேட்டால்,ரொம்ப சீரியஸான குரலில் சொல்லுவான், “ஸ்புட்னிக், ஒன்னு போச்சு, என்னா வெளிச்சமா இருந்தது தெரியுமா” என்பான்.அவனை பலரும் நம்ப மாட்டர்கள் என்றாலும், கொஞ்ச நேரம் வானத்தை உற்றுப் பார்ப்பது தவறாது.தெருவில் போகிற வருகிற பெரிய ஆட்கள் கூட, என்னது என்று விசாரித்து கொஞ்ச நேரம் ஆகாயத்தைப் பார்த்து ”போய்ட்டு போல இருக்கு” என்று சொல்லி விட்டுப் போவார்கள்.
ரீல் விடுவதில் அவன் சாமர்த்தியம் யாருக்கும் வராது. அவன் சொல்லுகிறது பொய் என்று தெரிந்தாலும் எப்படியாவது நம்ப வைத்துவிடுவான்.பள்ளி இறுதித் தேர்வு எழுதி இருந்த சமயத்தில்(அப்போது எஸ்.எஸ்.எல்.சி) சென்னையில் விடைத்தாள் திருத்துமிடத்திலேயே போய் மார்க் பார்த்து விட்டார் அவன் சென்னை அண்ணன் ஒருவர். 411 மார்க்கு என்று சொல்லிக் கொண்டிருந்தான்.திருநெல்வேலியின் பெரிய கல்லூரியில் பி.யு.சி இடத்திற்கு சொல்லியாகிவிட்டது,. என்றெல்லாம் சொன்னான்.அப்போது 300 மார்க்கை தாண்டியவர்களே தெருவில் கிடையாது.கடைசியில் 201 மார்க் வாங்கி தட்டுத் தடுமாறி பாஸ் பண்ணியிருந்தான்.
தெருவில் மேற்குக் கடைசியில் ஒரு நீளமான திண்ணையில் உட்கார்ந்து வழக்கம் போல் பேசிக் கொண்டிருந்தோம். சாயந்தர வேளை. கிழக்கேயிருந்து ஓடி வந்தான்.”பெரிய கோயில் யானை லாரி மோதி செத்துப் போச்சு,ரத வீதியெல்லாம் ஒரே கூட்டமாக் கிடக்கு. பெரிய கோயிலில், இந்தியா சிமெண்ட்ஸ் கிட்டாமணி அய்யர் சுரங்கத்திலிருந்து பெரிய மிஷின் எல்லாம் கொண்டு வந்து குழி தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்” என்றான்.யாரும் நம்பவில்லை. ”நெசமாத்தான், இப்ப எங்க அம்மாட்ட சொல்லி அவளையும் கூட்டிட்டு போகப் போறேன்”என்று வீட்டைப் பார்த்து ஓடினான்.
இன்னொரு பழக்கமில்லாத ஆள் சைக்கிளில் ரத வீதியிலிருந்து வந்தார். அவரிடம், ”அண்ணாச்சி, ரோட்டில கூட்டமா இருக்கோ” என்று கேட்டோம். அவர், ”ஆமா ” என்று சொல்லி விட்டுப் போனார். சரி வாங்கடே போவோம், சும்மா கோயிலுக்காவது போய்ட்டு வரலாமே”என்று பத்துப்பேர் போலக் கிளம்பிப் போனோம் யானையைப் பற்றித்தான் வழி நெடுகப் பேச்சு.அது தினமும் தெருவுக்கு வந்து சபாபதி வீட்டில் பச்சரிசி, வெல்லம் தேங்காய் எல்லாம் தின்று போகும். அவன் வீட்டைத் தாண்டி போகாது. வெறும் அரிசியாவது கொடுக்கவேண்டும். அது காலால் லேசாக, தேவையான அளவு அமுக்கி கூந்தல் உள்ளிருந்து தேங்காயைப் பிரிப்பதே அழகாயிருக்கும்.பாகன் அதற்கப்புறம் காயை உடைத்து கீற்றாக கீறி அரிசியில் போடுவான்.அதுவரை பொறுமையாய் இருக்கும். அப்புறம் பக்கத்துப் பள்ளிக் கூடத்தின் கல்யாண முருங்கை (முள் முருங்கை) இலைகளை விரும்பி உண்ணும்.
கோயில் நெருங்க நெருங்க ஒரு அரவத்தையும் காணோம். ஆனால் யானையை வெளிப்பிரகாரத்தில் வழக்கமான அதன் கொட்டடியில் காணும். அங்கே புதைக்கிறார்களோ, இங்கே இருக்குமோ என்று கோயில் முழுக்க தேடினோம், காணவில்லை. “ஏமாத்திட்டாண்டா டூப் மாஸ்டர்”, என்று ரத வீதி சுத்தப் போனோம்.
”யானையின் பாஷையைப் பாகன் கற்றானா
பாகனின் பாஷையை யானை கற்றதா.” என்கிற இளைய பாரதியின் கவிதை வரிகள் போல, பூத்ததான் முக்கில் யானை பாகனின் முழநீள அங்குசத்திற்கு அடங்கி, காசு வாங்கி ‘காசநோய்ப்பாகனின்” கையில் கொடுத்துக் கொண்டிருந்தது. எங்கள் எல்லோர் முகத்திலும் கரி; யானைக்கரி. என்றாலும்
சட்டம், ஒழுங்கு .ஜனங்கள்
”கொஞ்சமே
வளர்ந்த தந்தங்களுடன்
கோயில் யானை காணாமல்ப் போச்சு.
நேற்றைய திருநாளில்
மிட்டாய் தந்த குழந்தையின்
பின்னால் சென்றிருக்குமெனச் சிலர்
சந்தேகம் தெர்வித்தார்

கீழ்வீட்டு புதுப்பெண்
குளியாமல் கோயில் போனதால்
இந்த அபவாதம் என்று
மேல் வீட்டுக்கிழவி
சழக்குரைத்தாள்.
தேவ யானை
ரேணுகனைப் பார்த்து
தர்மோபதேசம் கேட்கப்
போயிருக்குமென
பௌராணிகர் பிரவசனித்தார்......
என்று நீளும் ஒரு அரசியல் கவிதை எழுத இதுவே காரணமாயிருந்தது. அந்தக் ‘கதை சொல்லி’ இப்போது எங்கே இருக்கிறானோ.


Visitors