Tuesday, December 29, 2009

ஓடும் நதி-12


சாலையோரம் பழைய டயர்களை, ஒரு சிறிய கோபுரம் போல அடுக்கி வைத்திருந்தால்...மரக்கிளையில் குட்டி டயர் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தால்....அருகிலேயே ஒரு வல்கனைசிங் ஒர்க்‌ஷாப் இருக்கிறது என்று மூளை தானகவே தெரிந்து கொண்டு விடுகிறது.(இருட்டாய் இருந்தால் கூட `பச்சை-TASMAC-போர்டை’- கண்டுபிடித்து கால்கள் தள்ளாட்டமில்லால் சென்று தள்ளாடித் திரும்புகிறது) மூளையின் இடது புறமே இதையெல்லாம் நிர்ணயம் செய்கிறது என்கிறார்கள்.சாலையின் இடது புறமாகச் செல்கிறோமோ இல்லையோ, மூளையின் இடது புறமாகச் செல்ல வேண்டும் போலிருக்கிறது.
நான் வழக்கமாக என் வாகனத்தின் சக்கரங்களுக்கு காற்றழுத்தம் சரி பார்க்கச் செல்லும் கடையில் ஒரு பையன். பேச்சு வராது. ஆனால் பேசிக் கொண்டே இருப்பான். சைகை புரியாவிட்டால் அருகில் நிற்கும் ஏதாவது காரின் பின்புறத்தில் படிந்திருக்கும் தூசி அழுக்கில் எழுதிக் காண்பிப்பான்.ஒருநாள் என் பெயரைக் கேட்டான். நானும் எழுதினேன்.எழுதும் போது கை அழுக்காகும் என்று தடுத்தான்.பரவாயில்லை என்று சைகையில் காட்டி விட்டு எழுதினேன். விருவிருவென்று மூக்குத்தியணிந்த ஒரு பெண் முகம் வரைந்து, ஏதோ சைகித்தான். புரியவில்லை. நான் என் புனைப் பெயரை எழுதியிருந்தேன். நீங்கள் என்ன பெண்ணா என்று கேட்டிருக்கிறான்.அவனே புரிய வைத்துவிட்டான்.நீங்கள் புத்தகம் எழுதுகிறவரா என்று கேட்டான்.கையைப் பிடித்து அழைத்துப் போய் அருகே இருந்த குப்பைகளைக் காண்பித்தான்.அது அறுவடைக் காலம்.அழகாக அங்கங்கே நெற்பயிர் முளைத்திருந்தது.
``தவறி விழுந்த நெல் மணிகள்
குப்பையென்று பார்த்தா முளைக்கும்.....’’.என்று நான் எழுதி யது நினைவுக்கு வந்தது..அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.அதை அவன் வாசித்திருக்கவே நியாயமில்லை. அவன் எதற்காக அதைக் காண்பிக்கிறான் என்று தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும், புரிந்து கொள்ள முடிந்தது.
எனக்கு, தூத்துக்குடியில் பிரம்மசாரி வாழ்க்கை வாழ்ந்த போது ஆத்துர்ப் பிள்ளை கடையில் சாப்பிட்ட காலம் நினைவு வந்தது.புதிதாக ஒரு சிறுவனைச் சேர்த்திருந்தார். சாப்பாடு, இடம், வாரத்திற்கு கால்க் கட்டி லைஃப்பாய் சோப், மற்றும் சன்லைட் சோப். இது தான் கூலி.இரண்டு நாள் அமைதியாக இருந்தான். அப்புறம் வாடிக்கையாளர்களிடம் கலகலவென்று பழக ஆரம்பித்து விட்டான்.அவனிடம் முதலாளி கடுகடுவென்றுதான் இருப்பார்.அவனோ கண்ணாலும் முகத்தாலுமே பேசி விடுவான்.”நேற்று செகண்ட் ஷோ வா, மேற்படி சரக்கு உண்டுமா இல்லேன்னா சினிமா மட்டும்தானா“ என்றெல்லாம் பேசி விடுவான். பால்ச்சட்டி தேய்த்துக் கழுவதுதான் கடினமான வேலை. இவன் அந்த வேலை செய்யும் போது பேசினால் மட்டும் பிள்ளவாள் ஒன்றும் சொல்ல மாட்டார்.அப்போது கண்ணால் பேசினதையெல்லாம் வாயால் சொல்லி நாம் புரிந்ததை உணர்த்தி விடுவான்.சாப்பிட்டு விட்டு ஒருநாள் இலையை எடுக்காமல் கை கழுவ வந்து விட்டேன். முதலாளி சொல்லத் தயங்கிக் கொண்டிருந்தார்,பையன் வெடுக்கென்று சிரித்துக் கொண்டே சொன்னான்,” எண்ணேன், மணிப்பர்ஸ மறந்துட்டுப் போறிங்களே” என்று. ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த அனைவரும் சிரித்து விட்டனர், ஆத்தூர்ப் பிள்ளை உட்பட.
கடையநல்லூரின் ஒரு கடையில் இதே போல் ஒரு பையன்.இன்னும் என்னவோ வாங்க வேண்டுமே என்று யோசித்துக் கொண்டிருந்தால், ”சார் மணிபர்ஸா” என்பான். சிரித்துக் கொண்டே, ”ஆமாடா” என்றால். ஒரு தாளில் பொதிந்து கொடுப்பான். நிரோத்.
வங்கியில் அன்று நல்ல கூட்டம்.கொஞ்சம் அறிமுகமான பெண் வாடிக்கையாளர், நகைக் கடனுக்காக தன் பத்து வயது மகனுடன் வந்திருந்தார்.பையன் பொறுமையின்றி எதையோ கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தான்.வாயிலுக்கு எதிர்த்த இருக்கை எனக்கு.என்ன கேட்கிறான் என்றேன் அவரிடம்.அவள் சிரித்துக் கொண்டே, ”போ போய் விளையாடித் தொலை” என்றாள்.அவன் உற்சாகமாக வாயிலில் விரித்திருந்த பெரிய கயிற்று மிதி பாய் அருகே சென்று அதை லேசாக உதறினான். மென்மையான தூசி வழுவழுத்த தரையில் படிந்தது. ஆட்காட்டி விரலால் அதை அங்குமிங்கும் ஒன்று கூட்டினான். ஒரு சில நொடியில் ஒரு அழகான மான் வந்திருந்தது, துள்ளியோடும் புள்ளி மான்.அந்தப் பெண் சிரித்தாள். ”இப்படித்தான் சார், கோலப் பொடி, இந்த மாதிரிப் பொடீத் தூசியைக் கண்டா விட மாட்டான்,இடியாப்பத்துக்கு மாவு சலிச்சா ஓடீ வந்துருவான், சல்லடையச் சுத்திப் படியும் மாவைக் கண்டா கொண்டாட்டமா இருக்கும்; இங்க பெரிய ‘டோர் மேட்’டா கிடக்கா புள்ளைக்கி சந்தோஷம் பிடி படலை” என்றாள். நான் உற்சாகப் படுத்தி நிறையப் பேசினேன். இரண்டு பேருக்குமே மகிழ்ச்சி.
பத்துப் பதினைந்து வருடம் ஆகியிருக்கும். விகடன் பத்திரிக்கையில் வந்திருந்த என் பேட்டியையும் படத்தையும் பார்த்து விட்டு, ”என்னை நினைவிருக்கிறதா, இன்னும் அதே கிளையில் தான் இருக்கிறீர்களா” என்று நலம் விசாரித்து, பத்திரிக்கையில் வந்திருந்த என் புகைப் படத்தை அப்படியே பென்சிலால் வாஷ் டிராயிங் மாதிரி வரைந்து அனுப்பி இருந்தான் வெளிநாட்டிலிருந்து.
படமும் கடிதமும் எங்கோ பத்திரமாக ஒளிந்திருக்கிறது.

Tuesday, December 22, 2009

ஓடும் நதி-11


அது என்ன வேடிக்கையோ. காலையில் உத்தியோகக் கத்தி தலையை நெருங்குகிற எட்டரை, எட்டேமுக்கால் மணிக்குத் தான், மனசுக்குள் ஏதாவது எழுத வேண்டும் போல, பல பொறிகள் தோன்றும். இன்னும் கால் மணி நேரத்துக்குள் குளித்து, சாப்பிட்டுக் கிளம்ப வேண்டும் என்னும் போது அருவியாய் யோசனை கொட்டும். ஒரு காலையில் “தசாவதானியின் மீதெறிந்த பூக்கள்” என்று ஒரு ‘வார்த்தைக் கூட்டம்’ மனதில் தோன்றியது.
பசி வேறு. ”இன்னும் குளிக்கப் போகலையா” என்ற மனைவியின் எச்சரிப்புக் கேட்டவுடன், ”அரைத் தம்ளர் காபி கொடேன் இந்தா வந்துருதேன்...” என்று மேசையடியில் அமர்ந்து பேனாவைத் தேடினால், காணும்; ஒளிந்து கொண்டு விட்டது. சூடான காபியைக் கையில் பத்திரமாய்த் தந்து விட்டு, மேசைக் குப்பைகளுக்கிடையேயிருந்து இரண்டு பேனாக்களை தேடியெடுத்து சிரித்தபடி கையில் திணித்து, ஏற்கெனவே மேசையில் இருந்த எச்சில்த் தம்ளர்கள் இரண்டை எடுத்துக் கொண்டு போனாள். அவ்வளவுதான் மணி எட்டேமுக்கால், எங்கே பேனாவைத் திறக்க என்று நினைத்தேன். ”துண்டும் புது சோப்பும் பாத் ரூமில் வச்சாச்சு,கைக்குட்டையைத் தேடாதீங்க பேண்ட் பாக்கெட்டிலெயே வச்சுட்டேன்..... மீதிக் காஃபி ஃப்ளாஸ்கில் இருக்கு...” அடுக்களையிலிருந்து குரல் வந்து கொண்டே இருந்தது.யோசனை முந்தின நாளுக்குப் போனது.
நேற்று அவள் பணியாற்றும் பள்ளிக்கு ஒரு தசாவதானி வந்திருந்தார்.அவதானிகளுக்குப் பெயர் பெற்றது இந்தப் பகுதி. அஷ்டாவதானம் (எண் கவனகம்) செய்வது சற்று சாதாரணமானதாகக் கருதப்படும். ஆனால் அதுவே ரொம்பக் கடினம். தசாவதானத்தை நேரில் பார்க்கும் ஆவலில் நான் போன போது நேரம் கடந்து விட்டிருந்தது.அநேகமாக முடியும் நிலை.ஐந்து இலக்க எண்ணை இன்னொரு ஐந்து இலக்கத்தால் ஒரு ஆசிரியர் கரும்பலகையில் எழுதிப் பெருக்கிக் கொண்டிருந்தார். அதற்கான விடையை கவனகர் ஏற்கெனவே சொல்லி இருந்தார்.அவர் கையில் இருந்த சாக் பீஸ் துண்டில் ஒரு சிலை செய்து கொண்டிருந்தார். அவருக்கு இடது புறம், வலது புறம், பின்னாலிருந்து மூன்று மாணவர்கள் செவ்வந்திப் பூவை அவர் மேல் எறிந்து கொண்டிருந்தார்கள். அந்தப் பூக்களின் எண்ணிக்கையை கடைசியில் சொல்வாராம்.
பாரதியாரின் பாடல்களில் முதல் எழுத்தைச் சொன்னால் பாடலைப் பாடினார். யாரோ `ஆ’ என்று சொல்ல “ஆஹா கரும்புத் தோட்டத்திலே....” என்று பாடினார்.”புளியோதரை....என்று ஆரம்பித்து சுண்டல்” என்று முடியும் வெண்பா ஒன்று, யார் அப்படிக் கேட்டது தெரியவில்லை, பாடினார்.மாணவர்கள் எல்லாம் பலமாகச் சிரித்தார்கள். அதைக் கேட்டு வாங்கி வைத்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்தேன், அவர் பெயர் விபரங்கள் எல்லாம் வாங்க வேண்டுமென்று நினைத்தேன். ஒன்றும் செய்யவில்லை. இராமையா என்று லேசாக நினைவு. இதே பெயரில் பிரபலமான கவனகர் உண்டு. அவரும் பதின் கவனகர் (தசாவதானி). செய்குத் தம்பி பாவலர், ஒரு சதாவதானி (100 கவனகங்கள் செய்வாராம்)அவருடைய நூல்களை கலைஞர் நாட்டுடமையாக்கி இருக்கிறார்.
நிகழ்ச்சி முடிந்ததும் அருகில் போய் நானும் இன்னும் சில ஆசிரியர்களும் பேசிக் கொண்டிருந்தோம். அவரால் சோடசோஅவதானம் (பதினாறு கவனகங்கள்)கூடச் செய்ய முடியும், ஆனால் அதற்கு மூளைக்கு நிறைய காற்று, அதாவது ஆக்ஸிஜன் தேவை, கொட்டாவி விட்டுட்டா கவனம் எல்லாமே போயிரும், அதற்காக சிரசாசனம் செய்த படியே கவனகம் செய்ய வேண்டும் என்று சொல்லிகொண்டிருந்தார். எல்லோருக்கும் ”அப்பாடியோவ்” என்றிருந்தது. அப்போது மாணவர்களிடம் வசூலான பணத்தை ”இவ்வளவு இருக்கிறது” எனச் சொல்லிக் கொடுத்தார்கள். பணிவுடன் வங்கிக் கொண்டார். அருகில் நின்ற என்னிடம், மெதுவாக நான் இன்னும் அதிகமாக வரும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன் என்றார்.கஷ்டமாக இருந்தது.
நேரம் நிற்கவா செய்யும், மணி ஒன்பது. அவசர அவசரமாக நாட் குறிப்பில்

”தசாவதானியின்
மீதெறிந்த
பூக்கள்....”

மேடையேறிய
தசாவதானி
வீட்டுக் கவலை பற்றியும்
‘எண்ணி’க்கொண்டிருந்தால்
அது எத்தனையாம்
அவதானம்.-

என்று ஒரு குறிப்புப் போல எழுதி வைத்துவிட்டுக் குளிக்க விரைந்தேன். நேற்று ஊறுகாய் வைக்கவில்லை இன்றும் மறந்து விடாதே: கொஞ்சம் குளிர்கிற மாதிரி இருக்கே வெண்ணீர் போட்டிருக்கலாமோ என்று சொன்ன படியே அவளைக் கடந்து போனேன். ”ஆமா பத்து கை இருந்தாலும் உங்களுக்கு காணாதே” என்று அவள் சொல்லவும், நான் தலையில் தண்ணீரை விடவும் சரியாய் இருந்தது.

Tuesday, December 15, 2009

ஓடும் நதி-10


இரண்டு அணிகளாகப் பிரிந்து விளையாடும் விளையாட்டுக்களுக்கு இரண்டு பெரிய பையன்கள் தாமாகவே தலைமை ஏற்று விடுவார்கள்.அல்லது அவர்களை ஏற்றுக் கொண்டு விடுவோம்.அப்புறம் கிட்டத்தட்ட சம உடற்பலம், சமவயது உள்ள இரண்டிரண்டு பேராகச் சேர்ந்து கொண்டு தங்களுக்குள் இரண்டு பூக்கள், இரண்டு விலங்குகள், இரண்டு தாவரங்கள், இரண்டு நடிக, நடிகைகள், என்று தேர்ந்தெடுத்துப் பேசி முடித்து, சேக்காளித்தனம் பொங்க, ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டுக் கொண்டு அணித்தலைவர்களிடம் சென்று “உத்தி உத்தி, யார் உத்தி” என்று கேட்க வேண்டும். அவர்களில் ஒருவன் ”என் உத்தி” என்பான்.”மல்லிகைப் பூ வேணுமா, ரோஜாப்பூ வேணுமா”, கேட்பார்கள் இரட்டையர். மல்லிகைப் பூ என்று ‘தலை’ சொன்னால்,மல்லிகைப்பூ என்று பெயரைச் சூட்டிக் கொண்டவன் அவன் பக்கம் சேருவான். அடுத்த ஜோடி, ”சிவாஜி வேணுமா எம்ஜியார் வேணுமா?” பதிலுக்கேற்றார்ப் போல் ஒருவன் மறு அணியில் சேருவான்.உத்திக்கு பேர் தேடுவதில் எப்படியும் இரண்டு பேர் துடுக்குத் தனமாக கெட்டவார்த்தைப் பேர்களை சூட்டிக்கொள்வது தவறாது.தங்கள் பெயரையே மாற்றிச் சூட்டிக் கொள்வதும் உண்டு.
அப்புறம் ஆட்டம் ஆரம்பிக்கும். கபடியோ, குச்சிக்கம்போ (சில ஊர்களில் ‘கிட்டிப்புள்’ என்று பேர்.) பேந்தா கோலிக்காயோ...எந்த வெயிலையும், மழை ஈரத்யையும், பொருட் படுத்தாமல் தொடரும். மைதானம் இருந்தால் அங்கே, இல்லையென்றால் நடுத் தெருதான் மைதானம்.கபடி விளையாட்டை ஒரு காலத்தில் சடுகுடு என்று விளையாடிக் கொண்டிருந்தார்கள்,
வெத்திலடி, வெத்திலை
நரம்படி வெத்திலை
பறிக்கப் போன இடத்துல
புடிச்சு வச்சு நொத்துல...நொத்துல..நொத்துல...என்று பாடி வருவார்கள். இல்லையென்றால்
சடுகுடு மலையில ரெண்டானை
தவறி விழுந்தது கிழட்டானை...கிழட்டானை...கிழட்டானை....
இதெல்லாம் எங்கள் தலைமுறையிலேயே வழக்கொழிந்து விட்டது.

கொடை,திருவிழா என்று அம்மன் கோயிலிலோ, சுடலைமாடன் கோயிலிலோ கால் நட்டு, பந்தல் போட்டுவிட்டால் போதும், நான்கு பந்தல்க்கால்களை நான்கு பேர் பிடித்துக் கொள்ள, நடுவில் ஒருவன். ‘’ஏந்தலைக்கி எண்ணெய் ஊத்து, எருமை மாட்டுக்குப் புல் போடு”...என்று பாட்டுப் பாடிக் கொண்டே கண்காணிக்க, நான்கு பேரும் தூணுககுத் தூண் மாறுவார்கள். மாறும் போது நடுவில் நிற்பவன் யாரையாவது தொட்டு விட்டால், அவன் நடுவிற்கு வந்து விடுவான். மறுபடி விளையாட்டு தொடரும். இதே போல் ‘பிள்ளை பெத்து‘, என்றொரு விளையாட்டு. பூப்பறிக்க வருகிறோம்.....என்றொரு விளையாட்டு, அப்புறம் கல்லா மண்ணா, கள்ளன் போலீஸ், வாட் வாட் கலர் ஈஸ் ?... கறுத்த கோழி தீட்டு. இதெல்லாம் ரொம்பச் சின்ன வயது விளையாட்டுக்கள்.
விளையாட்டுக்கள், எப்படி எப்பொழுது ஆரம்பிக்கும், கொஞ்சம் கொஞ்சமாய் ஆர்வம் வடிந்து எப்போது நிற்கும்... யாரும் சொல்ல முடியாது.பெரும்பாலான விளையாட்டுக்கள், தொட வருபவனை நிர்ணயிக்க ”ஷாட், பூட், த்ரீ” யில் ஆரம்பிக்கும். இந்த ”வடிகட்டும் முறை”யைக்(ELIMINATION PROCESS !) கண்டு பிடித்தது யார், எந்தக் காலத்தில் என்பது ”நதி மூலம் ரிஷிமூலம்.” விளையாட்டுகள் எல்லாமே கடைசியில் தொட்டுப் பிடித்து விளையாடுவதில்த் தான் முடியும்.பெரியவர்கள் அவர்கள் விளையாடிய தலைமுறையை மறந்து விட்டு, இப்போது கிட்டிப் புள்ளோ, முத்துச் செதுக்கியோ, தெருவில் விளையாடுவோரைப் பார்த்து மண்டையை உடைச்சிராதீங்கலே போங்கலே, போயி வீட்டுக்குள்ள உக்காந்து வெளையாடுங்கலே என்று சத்தம் போட்டுத் துரத்துவதும் தலைமுறைகளாய்த் தொடர்கிறது.(மெரீனாவில் கிரிக்கெட் விளையாடத் தடையாமே.) எங்கள் தெருவில் ஒரு பையன். தந்தை ஆசிரியர்.வெளியே போகவே விடமாட்டார்.அவன் வீட்டை ஒட்டி நீளமான மண் நடைபாதை. அதில் ஒரு புறம் மதில் போலச் சுவர்; மழை விழுந்து பாசி பிடித்துக் கருத்திருக்கும். நாங்கள் உற்சாகமாய் விளையாடுவதை ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருப்பான்.அவன் எப்போது தெருவுக்கு வருவான் என்றே தெரியாது. திடீரென்று பார்த்தால் அந்தக் கருத்த சுவரில் எழுதிப் போட்டிருப்பான்... ”விரைவில் வருகிறது அரையாண்டுத் தேர்வு” அல்லது ”......முழு ஆண்டுத் தேர்வு”.அதன் உளவியல் நீண்ட நாட்களுக்குப் பின்னரே புரிந்தது.
இந்தத் தலைமுறைக் குழந்தைகள் மீது வெயில் படுவதுமில்லை, அவர்களை மழைச் சாரல் நனைப்பதுமில்லை. அவர்கள் வீடியோ பார்லர்களிலோ, வீட்டுக்குள்ளோ கணிணி முன் உட்கார்ந்து வீடியோ கேம் விளையாடுகிறார்கள்.லட்சக் கணக்கில் வீடியோ விளையாட்டுக்கள் வந்தாயிற்று. முதலிடத்தில் இருக்கிற ‘FALL OUT-3’ போன்ற விளையாட்டுகளை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது.ஆனால் குழந்தைகள் நன்றாகவே விளையாடுகிறார்களாம்.அதில் வருகிற வால்ட் 101,என்ற அணுக் கதிர் வீச்சிலிருந்து தப்பிக்க உதவும் அரண் போல இப்போதே சில அடுக்கு மாடிக் குடியிருப்புகளில், பூகம்பம் வந்தால், தப்பிக்கவென்றே ஒரு பாதிக்கப் படாத தனி அறை -‘ஸ்ட்ராங் ரூம்’- இருக்கிறது.(பலர் அதை பூஜை அறையாக உபயோகித்து கடவுளை பத்திரப் படுத்தி வைத்திருக்கிறார்கள்.)
அணு ஆயுதங்களிலிருந்து காத்துக்கொள்ள எட்டி யோசிப்பதெல்லாம் சரி தான்.வெயிலையும் மழையையும் குழந்தைகளிடமிருந்தும், குழந்தைகளை அவற்றிடமிருந்தும் மறைத்து வைப்பதுதான் வருத்தமாக இருக்கிறது.சமீபத்தில் ஒரு சென்னை நண்பர் குழந்தைகளுடன் செப்பறைக் கோயிலுக்குப் போய்விட்டு, ”அருகில் அழகான ஆறு இருக்கிறது போவோம் வாருங்கள்” என்றேன். அவரது பையன் கேட்டான், “அங்கிள் யூ மீன் சிக்ஸ்”.

Tuesday, December 8, 2009

ஓடும் நதி-9


அந்தக் கால வார இதழ்களில் ஓவியர் தாணுவின் கேலிச் சித்திரங்கள் ரொம்பப் பிரபலம்.அவரது சற்றே தடிமனான கோடுகள் சிரிப்பையும் சிந்தனையயும் தூண்டக் கூடியவை. ஆர்.கே. நாராயணனுக்கு மிகவும் நெருக்கமானவர் தாணு. பிற்காலத்தில், இப்போது பிரபலமாகப் பேசப் படக்கூடிய பிரில்லியண்ட் டூட்டோரியல் கல்லூரியை நிறுவியவர்.
எங்களது நண்பரும் ஓவியருமான சக்தி கணபதிக்கு அவர்தான் ஆதர்ஸம். சக்தி கணபதி, மகிழ்ச்சிக்கண்ணனுடன் இணைந்து `ஷங்கர்ஸ் வீக்லி’ பாணியில் தமிழில் ஆரம்பித்த `கிண்டல்’ என்ற அரசியல், கார்ட்டூன் இதழ் தான் திருவாளர் சோவுக்கும், துக்ளக் இதழுக்கும் முன்னோடி. ஆரம்பித்த வேகத்திலேயே இதழ் நின்று போனது. சக்தி, சமீபத்தில் இறந்து போய் விட்டார். மகிழ்ச்சிக் கண்ணன் துக்ளக் இதழிலிலேயே பணி யில் சேர்ந்தார்.
தாணு, அப்பொழுது (அறுபதுகளின் கடைசி) உத்தரப் பிரதேசத்தில் இந்தியாவிலேயே, முதன் முறையாக ‘பெரிய்ய’ அமைச்சரவை அமைந்த போது `மாகாராஜன் கப்பல்’ என்ற தலைப்பில் ஒரு கார்ட்டூன் வரைந்திருந்தார்.அளவான கோடுகள். ஒரு பெரிய கப்பல், வரிசையாக எம்.எல்.ஏக்கள் உள்ளே நுழைந்த வண்ணமிருக்கிறார்கள்.கப்பலில் உ.பி. என்று எழுதியிருக்கும். தன் 86 ஆவது வயதில் தாணு மறைந்து இன்றோடு சரியாக இரண்டு வருடங்கள் ஆகிறது. அவரது கப்பல் கார்ட்டூன் மனதை விட்டு அகலவே இல்லை.
இன்று உலகிலேயே மிகப் பெரிய கப்பலான OASIS OF THE SEAS பின்லாந்திலிருந்து தன் கன்னிப் பயணத்தைத் துவக்குகிறது.பதினாறு அடுக்கு கப்பல். 6300 பேர் தங்கக் கூடிய 2700 அறைகள், இரண்டரை வருட உழைப்பு, ஒன்னரை பில்லியன் டாலர் செலவு. நான்கு நீச்சல் குளம், கால்ஃப் மைதானம், திராட்சைக் கொடிகளுடன் கூடிய ஒரு குட்டிப் பனந்தோப்பு.......இதைப் பற்றியே கூகிள் தேடலில் லட்சக்கணக்கான தகவல்கள் உலவ ஆரம்பித்து விட்டது.
இனி இதை விடப் பெரிய கப்பல் தயாரிப்பது பற்றி உலகம் யோசிக்க ஆரம்பித்து விடும். மிதவை விதி தோன்றும் முன்னரே நாவாயும், ஓடங்களும் ஓடத் துவங்கிவிட்டன.`கால் வல் நெடுந்தேர் பற்றியும்,’ கடாரம் கொண்டான் பற்றியும் நம்மிடம் பதிவுகள் உள்ளன. `வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும், ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்..’ என்று திரையிசை பாடியாகி விட்டது.
கப்பல் என்பது ஒரு தொன்மையான உருவகமாக, படிமமாக எங்கேயும் உலவிக் கொண்டிருக்கிறது.கப்பல் என்றதும் நங்கூரம் பற்றி நினைவுக்கு வருகிறது. சில பொருட்கள் தங்கள் ஆதி வடிவத்தைப் பெரும் பாலும் இழப்பதில்லை. அதில் நங்கூரமும் ஒன்று. சிற்சில மாற்றங்கள் எற்பட்டுள்ளனவே தவிர அநேகமாக அது தன் ஆதி வடிவத்தை இழக்கவில்லை.எப்படிச் சக்கரங்கள் மனிதனின் அற்புதக் கண்டு பிடிப்போ, அப்படியே கடலோடிகளின் நங்கூரமும். எனக்கென்னவோ மனிதனின் கண்டு பிடிப்புக்களில் மிக உன்னதமானது ஸ்க்ரூ என்கிற திருகாணி என்றே தோன்றுகிறது. (மரை தேய்ந்ததை மறந்து போனவர்கள் சங்கத்திலிருந்து யாரேனும், ஏதேனும் தத்துவம் மச்சி தத்துவம் சொல்லலாம்).
கப்பல் சாதாரணர்களின் ஆச்சரிய விஷயங்களில் ஒன்று. அதை அரசியலாக ஆக்கிய வ.உ.சியை நாம் நடுத்தெருவில் (நடுக்கடலில்?) விட்டது ஆச்சரியமே இல்லாத விஷயம். குழந்தைகளைக் கொஞ்சுகிற தாய்மார்கள், ``என்னைப் பெத்த ராசா’’ என்பார்கள், அப்புறமாய் `என்னைப் பெத்த துரையில்லா’ என்பார்கள். என் அம்மா என்னவோ ``என்னைப் பெத்த கப்பலு.’’என்று தான் சொல்லுவாள்.இத்தனைக்கும் அவள் ஒரு சின்னத் தோணியையாவது பார்த்திருப்பாளா என்பது சந்தேகம்.ஆனால் அவ்வப்போது ஒரு தோணிக்காரனின் மகனைப் பற்றிய கதை சொல்லுவாள். `ஒரு ராசாவுக்கு பட்டத்து யானை என்ன எடை இருக்கும் என்று எடை பார்க்கத் தோன்றியது. அவர் மந்திரிக்கு கட்டளை இட்டு விட்டு அந்தப்புரம் போய்விட்டார். மந்திரி பிரதானிகள் மணடையைப் பிய்க்கிறார்கள். நாட்கள் பல கடந்தும் வழி தெரியவில்லை. ராசா மறக்கிற மாதிரி தெரியவில்லை. தண்டோரா போடச் சொல்லிவிட்டார். ஒரு தோணிக்காரனின் மகன், சின்னப்பையன், முன் வந்தான். பட்டத்து யானையும் பலரும் பின் தொடர ஆற்றங்கரைக்கு கூட்டிப் போனான். யானையைப் படகில் ஏற்றி அது மூழ்கும் உயரத்திற்கு சுண்ணாம்பால் படகில் அடையாளம் இட்டான். யானையை இறங்க வைத்து விட்டு அந்தச் சுண்ணாம்பு மட்டத்திற்கு படகு மூழ்கும் வரை மணலை நிரப்பச் சொன்னான். இப்போது மணலை நிறுத்தால் அதுதான் யானையின் எடை’ என்றானாம். இதே கதை குஜராத்தி நாடோடிக் கதைகளிலும் இருக்கிறது. அங்கிருந்து அம்மாவிடம் எந்தக் கப்பலேறி வந்தது தெரியவில்லை.
அம்மா சாகக் கிடந்தாள். எனக்குத் தகவல் வந்து நான் போய்ச் சேர்ந்ததும், என்னிடம் அவள் தலையை என் மடியில் எடுத்து வைத்துக் கொள்ளும் படி சொன்னார்கள். செய்தேன். அவள் வாய் `என்னயப் பெத்த கப்பலு’, என்று முனு முனுக்கிற மாதிரி தெரிந்தது.கொஞ்ச நேரமே அப்படி வைத்திருந்தேன், பின்னர் வெளியே வந்து விட்டேன்.
அம்மாவிடம் அவ்வளவு ஒட்டுதலாய் இல்லாத ஒரு மதினியாரின் மடியில் தான் அவள் உயிர் பிரிந்தது. அப்பாவின் கடைசி நொடியிலும் அந்த மதினி மட்டுமே அருகில் இருந்தாள். இது என்ன முரண் என்று இன்று வரை விளங்கவில்லை. இதுதான் ``வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடமோ....”

Tuesday, December 1, 2009

ஓடும் நதி-8


தி.ஜானகிராமன் எழுதியிருப்பார், ஒரு நாள் பூராவும் உள்ளங்கை ரேகைகளையே பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று. பார்ப்பதற்கும், வியப்பதற்கும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. அபூர்வம் எங்கேயும் எப்பொழுதும் நம்மைச் சுற்றியும் நம்மிடமுமே இருக்கிறது.நாமோ ``பூர்வமானவைகளைப் பற்றியே யோசித்து, முந்தினவைகளையே நினைத்துக்’’ கவலைக் குழியில் விழுந்து கிடக்கிறோம்.
ஒரு தனிமையான மதியப் பொழுது, தொலைக்காட்சி செய்திகளில் மனம் பதியவில்லை.மறுநாள் அருகில் உள்ள பராசக்தி மகளிர் கல்லூரியில் கவிதை பற்றி ஒரு உரையாடலுக்கு கூப்பிட்டிருந்தார்கள். ஜானகிராமனின் வரிகள் நினைவுக்கு வர, கை ரேகையையே பார்த்துக் கொண்டிருந்தேன். (என்ன பேச என்று கைகளைப் பிசைந்து கொண்டிருந்தேன் என்பதே பொருந்தும்) தொலைக்காட்சியில் அமெரிக்க அதிபர் இடது கையால் கையொப்பமிடும் காட்சி ஒன்றைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.இதற்கு முன்னிருந்த இரண்டு மூன்று அமெரிக்க அதிபர்களும் (இப்போது ஒபாமாவும்) இடது கைக்காரர்கள். ஆனால் இவர்கள் யாருக்கும் இடதுசாரிச் சிந்தனை என்றால் ஜென்மப் பகை.
இடதுசாரி என்ற பெயர்ச்சொல், ப்ரிட்டிஷ் பார்லிமெண்டிலிருந்து ஏன், எப்படி உருவாகி வந்தது, வலது கை கொடுப்பதைக் கண்டு கொள்ளாத ”கர்ணனின் இடது கை”, ஆண்டு தோறும் ஆகஸ்ட் 13 இடது கைக் காரர்களின் நாளாகக் கொண்டாடப் படுவதாக ரீடர்ஸ் டைஜெஸ்டில் படித்தது......என்று இடது கை பற்றிய யோசனைகளாய் மனதுக்குள் ஓடிற்று.


கைகளிரண்டில்
இடது கையை எனக்குப் பிடிக்கிறது
ஏனெனில்
இதற்கே உடலின் அந்தரங்கங்கள்
நன்கு அறிமுகம்

விளையாட்டு மும்முரத்தில்
சாக்கடையில் விழும் பமபரங்கள்
கோலிக்காய், குச்சிக் கம்பு
எதுவானாலும் யோசியாமல்
துழாவி எடுத்துத் தரும்.

சாமி படக்காலண்டர் மாட்ட
சுவரில் ஆணி அடிக்கையில்
அதைப் பிடித்துக்கொள்ளும்
வலது கை தப்புச்செய்தால்
வலுவாய்ச் சுத்தியலடி வாங்கிக் கொள்ளும்......

என்று பரபரவென்று மனசிற்குள் கவிதை வரிகள் ஓடியது. இன்னும் கொஞ்சம் வரிகளும் உணடு.... இப்போது சரியாய் நினைவில்லை.
உடனேயே கல்லூரி முதல்வர் அவர்களுக்குப் போன் செய்து நாளை, மாணவிகளை ``இடதுகை’’ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதி வரும்படிச் சொல்ல முடியுமா என்று கேட்டேன்.அவர்கள் தயங்கினார்கள். இப்போது சொன்னால் எங்கே எழுதப் போகிறார்கள் என்று. பரவாயில்லை, ஒன்றிரண்டு பேராவது எழுதி வந்தால்கூடப் போதும், அதை வைத்துக் கொண்டு உரையாடலைத் தொடர்வது சுலபம்.நன்றாகவும் இருக்கும் அவர்களுக்கும் விவாதத்தில் ஒரு ஈடு பாடு இருக்கும், முடியாவிட்டாலும் பாதகமில்லை என்றேன்.அரை மனதாய் சம்மதித்தார்கள்.
மறுநாள் மேடையில் அமர்ந்ததுமே பத்துப் பதினைந்து கவிதைகளைக் கொடுத்தார் முதல்வர். வேகமாக வாசித்தேன்.எல்லாமே நல்ல முயற்சியாக இருந்தது.
``தலைப்பைப் பார்த்ததுமே
மளாரென்று
எழுதி விட்டேன்”.- என்று ஒரு கவிதை.இன்னொரு கவிதையில் –வயலில் உழும்போது
இடதுகைதான் ஏரைப் பிடிக்கிறது.
வலது கை சாட்டையைப் பிடிக்கிறது....என்று அற்புதமான படிமம் ஒன்று வந்திருந்தது. தொடர்ந்து, அறுவடையிலும் வலது கை அரிவாளைத்தான் ஏந்துகிறது... என்று எழுதியிருந்தார் ஒரு கிராமத்து மாணவி.எனக்கு என் கவிதை வரிகள் குறித்து வெட்கமாய் இருந்தது.அவற்றை வைத்துக் கொண்டு, கொஞ்சம் எனக்கே திருப்தி வருகிற மாதிரிப் பேசி முடித்தேன்.முதல்வருக்கு வியப்பு, நம் மாணவிகளா இதை எழுதியது என்று. இரண்டாவது சரி சார், முதல்க் கவிதை புரியவில்லயே, அதனால்த் தான் தேர்ந்தெடுத்தீர்களா என்று சிரித்துக் கொண்டே கேட்டார். இல்லை அந்த மாணவியை அழையுங்கள், அவருக்கு இடது கைப் பழக்கம் இருக்கும் என்றேன். அழைத்தார். சிரித்தபடியே வந்த மாணவியிடம் கேட்டேன், நீங்கள் இடக்கை பழக்கம் உள்ளவரா?, என்று. இல்லையே என்றார். அப்படியானால்..... என்று தயங்கிய போது சொன்னார், நான் இரண்டு கையாலும் நன்றாக எழுதுவேன் என்று.முகத்தில் ஒரு அசாத்தியக் குறும்பு தென்பட்டது.நான் சொன்னேன், கால் என்று தலைப்புச் சொன்னால், நீங்கள் காலால் கூட கவிதை எழுதுவீர்கள் என்று.சுற்றி நின்ற எல்லோரும் சத்தமாகச் சிரித்துப் பலமாய் கரவொலி எழுப்பினர்கள், இரண்டு கைகளாலும்.

Tuesday, November 24, 2009

ஓடும்நதி-7


ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை படம் வெளிவந்த சமயம் ஒரு வார இதழில் விமர்சனம் எழுதியிருந்தார்கள்,``கைக்குட்டைக்குப் போதாத நூலை வைத்துக் கொண்டு சேலை நெய்யப் பார்த்திருக்கிறார்கள்,’’ என்று. ஒரு சின்னப் பொறி பெரிய கதையாகி விடும். இல்லை, சின்னக் காட்சி பெரிய காரியத்தை உணர்த்தி விடும். டெல்லியில் என்று நினைவு, ஒரு சிறிய குறும்படம் 70 களின் கடைசியில் பார்த்தேன்.பிலிம்ஸ் டிவிஷன் படமாகக் கூட இருக்கலாம்.
டெல்லியின் காலை நேரப் பரபரப்பு. பஸ் நிறுத்தம் ஒன்றில், வழக்கம் போல் பஸ், ஸ்டாப்பில் நிற்காமல் தள்ளிச் சென்று நிற்கிறது. நடுத்தர வார்க்கம் ஓடிச் சென்று அடித்துப் பிடித்து ஏறுகிறது. டெல்லி நடை முறைப்படி, நடத்துனர் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு சீட்டுத் தருகிறார். கஷ்டப்பட்டு வாங்கிக் கொண்டு உள்ளே திணிந்து கொள்கிறான் ஒருவன். இன்னொருவன், இருவருமே ஒரே அலுவலகத்தில் பணியாற்றுகிறார்கள், ஏன், டிக்கெட்டெல்லாம் எடுக்கிறாய்,யார் கேட்கப் போகிறார்கள், நானெல்லாம் டிக்கெட்டே எடுப்பதில்லை என்று சொல்லுகிறான்.
முதலாமவன் மாலையிலும் இதே போல் அடித்துப் பிடித்து பஸ்ஸுக்குள் ஏறுகிறான்.நண்பன் சொன்னது நினைவுக்கு வருகிறது, டிக்கெட் எடுக்காமலேயே பயணம் செய்கிறான். எதையோ ஜெயித்து விட்ட நடை பாவனையோடு, வீட்டை நெருங்குகிறான். தூரத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளிடமிருந்து பிரிந்து, இவனது குழந்தை இவனை நோக்கி ஓடி வருகிறது. அப்பா, நாங்கள் பஸ் விளையாட்டு விளையாடுகிறோம், நீ வைத்திருக்கும் டிக்கெட்டைக் கொடேன் என்று கேட்கிறது. முகம், தோற்றுப் போன முகம், தொங்கிப் போகிறது. நடை வாடி விடுகிறது. படம் முடிகிறது.?
இப்போதெல்லாம் சில விளம்பரங்களே அழகிய குறும்படம் போலிருக்கிறது. வோடாஃபோனின் ஜூஜு விளம்பரங்களை ரசித்திராதவர் யாராவது இருப்பார்களா. அதைத் தனியே பார்க்கிறவர்கள் மௌனமாகவும், குழந்தைகளோடு பார்க்கிறவர்கள் சத்தமாகவும், சிரிக்காமல் இருக்கமாட்டார்கள். அப்படி சிரிக்காமல் இருந்தால், அவனை ``இசைக்கு இளகாதவன் கொலையும் செய்வான்,’’என்கிற ஷேக்ஸ்பியரின் வரிகளில் சிறை வைக்க வேண்டும். அதே ஃபோன் விளம்பரத்தில் வருகிற `PUCK’ நாய்க்குட்டி, எங்க ஊர்ப் பாஷையில் ‘தோக்குட்டி’, செய்கிற மௌனக் கெட்டிக்காரத் தனங்கள் யாரைத்தான், சீரியல் அழுகையிலிருந்து மீட்டு சிரிப்பில் கட்டிப் போடாது.
ஹேவெல் மின் வயருக்கு ஒரு விளம்பரம் போடுகிறார்கள். பின்னணியில், கட்டப் பட்டுக் கொண்டிருக்கும் ஒரு ஸ்கைஸ்க்ராப்பர் அரை இருளில் மூழ்கி இருக்க அதன் முன், இரவுச் சாப்பாட்டுக்கான சப்பாத்தியை, ஒரு இரும்பு வலையின் கீழ் தீ எறிய அதற்கு மேல், போட்டுக் கொண்டிருக்கிறாள், ஒரு இளம் தாய்.கை சூடு பொறுக்க முடியவில்லை.அவளது குட்டிப் பையன் கொஞ்சம் தள்ளிச் சென்று ஒரு துண்டு மின் வயரை எடுத்து, இடுக்கி போல் வளைத்து, தாய்க்கு உதவியாய்க் கொடுக்கிறான். தாய், ``சாலப் பரிந்து பால் நினைந்தூட்டும் தாய்’’, நன்றிப் பெருக்கும், பெருமிதமும் பொங்கும் முக பாவத்தோடு மகனுக்கு உணவை நீட்டுகிறாள்.
நொடிக் கணக்கில் மட்டுமே தொலைக் காட்சித் திரையில் ஓடுகிற விளம்பரம், வருடக் கணக்கில் நீளுகிற தொடர்களை விட எவ்வளவோ பிரமாதமாய் இருக்கிறது. (அதில் வருகிற அந்த இளந்தாயின் முகச்சாயல், எனக்கு தாயின் வாசனையை தவறாமல் எழுதுகிற ஒரு கவிஞரை உள்ளூர நினைவு படுத்தும்.)
தாய் என்றதும், அம்மா சொல்லுகிற சொலவடைகள் நினைவுக்கு வருகிறது. ``நாய்க்கு வேலையும் இல்லை உக்கார நேரமுமில்லை’’ என்று அடிக்கடி சலித்துக் கொள்ளுவாள்.ஒரு நாயின் முழு நாள் அசைவுகளையும் `டிஸ்கவரி சானல்‘ பாணியில், இடை விடாமல் கண்காணித்த ஒருவனின் அல்லது ஒருத்தியின் ஐந்தே ஐந்து வார்த்தைகள் எப்படி ஒரு, நேரத்தை வீணடிப்பவனின் வாழ்க்கையைச் சொல்லி விடுகிறது.
``மச்சு நெல்லும் கொறையக் கூடாது, மக்கமாரு மொகமும் வாடக்கூடாது’’அப்படீன்னா முடியுமா, ஏதாவது ஒண்ணு வேணும்ன்னா ஏதாவது இன்னொன்னைக் குடுத்துத் தான ஆகனும் என்பாள்.யாராவது என்னக்கா எப்படியிருக்கே என்று கேட்டால், யாரு கண்டா ``எண்ணெ(ய்) முந்துதோ, திரி முந்துதோ” எப்படியும் ஒரு முடிவு வந்து தானே ஆகனும் என்பாள்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடின மாதிரி,
வாழ்க்கையெல்லாம் வெறும் கேள்வி மயம்-இதில்
வளர்ந்தது சமுதாயம் இங்கு
வந்ததன் பின்னே கேள்வியிலேயே
வாழ்வதுதான் நியாயம்... என்று கேள்விகள் சொல்லித்தந்து தலை முறை, தலைமுறையாய் நகர்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையினைக் `க்ளிக்’கும் குறும்படங்கள் தான் சொலவடைகளோ.

Wednesday, November 18, 2009

ஓடும் நதி-6


ஒரு ஹைகு

வாண வேடிக்கைகள் முடிந்து
பார்வையாளர்கள் கலைந்து சென்று விட்டனர்
ஆகா! இருள் எவ்வளவு விசாலமாக இருக்கிறது
-ஷிகி
வாண வேடிக்கையை ரசிக்கிறது ஜனம்.வெறும் இருளை வியக்கிறது ஒரு மனம்.

பிரம்மாண்டமான அருவியும் அழகு. தாமரை இலை மேல், ஒட்டாமல், ஒவ்வொரு காற்றுக்கும் உருண்டு கொண்டிருக்கிற நீர் முத்தும் அழகு.ஆண்டுக் கணக்காய் எழுதப் படுகிற காவியமும் அழகு. ஒரு நொடியில் வந்துவிடுகிற ஹைகு வும் அழகு. அந்த ஒரு நொடிக்கு வர பல காத்திருத்தல்களை வாழ வேண்டியதுமிருக்கும். இயற்கையின் அபூர்வக் கணம் ஒன்று அதை நொடியில் வரிகளாய்ப் பதிவு செய்யவும் வாய்ப்புத் தரும்.

நண்பரென்று தோளில் கைபோட்டுக் கொள்ள முடியாது. நண்பர் போல அன்பாகவேதான் பழகுவார்.வாழ்க்கையில் மூத்த போராளி என்று சொல்லலாம்.அந்தப் பெரிய குளத்தின் கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.குளத்தைப் பற்றி நான் தான் சொன்னேன். அறையை விட்டு எங்காவது சென்று அந்த மாலைப் பொழுதைக் களித்து வரலாம் என்று திடீரென்று தோன்றி குளக்கரைக்கு வந்திருந்தோம். அவர் ஒரு அரசு அதிகாரி. எங்களுக்குச் சற்றுத் தள்ளி அவருக்கான அரசு ஜீப். ஜீப் டிரைவர், நேரமாகுமா, சற்று தள்ளிச் சென்று புகை பிடிக்கலாமா என்று யோசிப்பது போல் தெரிந்தது. நண்பர், நீங்கள் காலார நடந்து விட்டு வாருங்கள் என்று சொன்னதும் கிளம்பிவிட்டார்.
பேச்சு, தாரா சங்கர் பானர்ஜியின் ‘கவி’ நாவல் பற்றி ஆரம்பித்து, வங்காள நாவல்கள், வங்காளப் படம், என்று நீண்டது. ‘நீலகண்ட பறவையைத் தேடி.’நாவலைப்.பற்றி பிரமாதமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். தன்னிடம் இருப்பதாகவும் அதை அவசியம் படிக்க வேண்டுமென்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.புதையல் கிடைத்த மகிழ்ச்சி எனக்கு.
திடீரென்று, தான் குவளை மலரையே பார்த்ததில்லை, அது பற்றி இலக்கியத்தில் தான் படித்து வியந்திருக்கிறேன், என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதோ, நடூக்குளத்தில் ஒரு பச்சைத் தீவாய் மிதந்து கொண்டிருக்கிறதே அவை தான் குவளைச் செடிகள் என்றேன்.அதனருகே, ஒரு எருமை கழுத்தளவு நீரில் அதைத் தின்று கொண்டிருந்தது. நீண்ட கால இலக்கியச் சித்திரம் ஒன்று இப்படி சிதைந்து போவதை நம்ப முடியவில்லை போலிருந்தது அவர் முகம். நிஜமாகவா என்று சத்தமாய்ச் சிரித்த படி கேட்டார். ஜீப் டிரைவரும் சிரித்த படி பக்கத்தில் வந்தார். சிரிக்கிறவர்களைக் கண்டால் எல்லாருக்கும் சிரிப்பு தொற்றிக் கொண்டு விடும்.
அவரிடம் நண்பர் சொன்னார் அதுதான் குவளை மலராம் என்று. ‘இதை நீர்க் குவளைம்பாங்க’ என்றார் அவர். கரையோரம் நின்று கொண்டிருந்த சிறுவன் குளத்தில் இறங்கி மாட்டை கரைக்குப் பத்தி விட்டு விட்டு. ஒருகை குவளைச் செடியையும் கொண்டு வந்தான். அழகான லாவண்டர் நிறத்தில் பூத்திருந்தது. நானுமே அப்போதுதான் அருகாமையில் வைத்துப் பார்த்தேன்,இதழ் நடுவில் ஒரு அழகிய கண்ணை. மறுபடியும் ஆச்சரியம் எங்கள் கண்களில் விரிந்தது. எங்கள் வியப்பைக் கண்டு வியப்படைந்த சிறுவனுக்கு நண்பர் காசு கொடுத்தார். அவன் வாங்க மறுத்து விட்டு அவசரமாய் மாட்டின் அருகே சென்றான். அதன் முதுகில் ஒரு பெரிய அட்டை ஒட்டிக் கொண்டிருந்தது.அதை தார்க் குச்சியால் தள்ள முயற்சித்தான். நன்றாக ஒட்டிக் கொண்டிருந்தது. டிரைவர் ஒரு தீக்குச்சியைக் கிழித்து அட்டை மேல் வைத்தார், பட்டென்று கிழே விழுந்தது. மாட்டிலிருந்து ரத்தம் கொட்டியது.அதை குவளைச் செடியாலும் பூவாலும் துடைத்தான்.
நண்பர் விடை பெற்றார். நான் அவரது அறைக்கு வந்து `நீலகண்ட பறவையைத் தேடி’ நாவலை வாங்கிச் செல்கிறேனே என்று உடன் சென்றேன். அறையில் மறுபடி பேசிக் கொண்டிருந்ததில் நேரம் கடந்து விட்டது. இனிமேல் டவுண் பஸ்கள் இருக்காது. நானும் டிரைவரும் பேசிக் கொண்டே நடந்தோம்.இந்தக் கதையை நான் படிச்சிருக்கேன், ஐயா ஒரு முறை ஜீப்பில் வைத்துவிட்டுப் போகும் போது., என்றார். இதில் வருவது போல என் அண்ணனும் ஒரு மனநிலை சரியில்லாதவன்.எங்களோடு தான் இருக்கிறான். எங்கள் குழந்தை என்றால் அவனுக்கு உயிர். என் மனைவி அவன் அருகே மகன் போனால் தடுக்க முயற்சிப்பாள். பத்திரப் படுத்தி வைத்திருக்கிற பழைய உணவுப் பொருள் எதையாவது குழந்தைக்கு ஊட்டி விட்டு விடுவான்,என்று அங்கே போகாதே என்பாள். இதைக்கேட்டதும் அண்ணன் வெறி கூடி விடும். பாஷையே இல்லாமல் உளறிக் கத்துவான். அண்ணன் மனைவியும் எங்களுடன் தான் இருக்கிறாள்.அவள தன் கணவனை கிட்டத்தட்ட அடிக்கிற மாதிரிப் போனால்தான் அவன் பயந்து அமைதியாவான்.
இரவானால் அவன் மனைவி அழ ஆரம்பித்து விடுவாள்..நீங்க சின்ன வயசுக்காரராக இருக்கிறீர்கள், உங்களிடம் சொல்லக் கூடாது, நாங்கள் புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்தே தூங்க மாட்டோம்.,தூங்கி வருஷக் கணக்காச்சு என்றார். ராத்திரி ஆனாலே எனக்கு வீட்டுக்கு சீக்கிரம் போகிற பதட்டம் வந்து விடும். ஆனா நம்ம உத்தியோகத்தில் இது முடிகிற காரியமா தம்பி. ஐயாகிட்ட இதையெல்லாம் சொல்லீராதீங்க என்று கேட்டுக் கொண்டார். இன்று வரை சொல்லவில்லை, இந்தக் கதையை.

Tuesday, November 10, 2009

ஓடும்நதி-5


வேதமும் கோயிலும் இந்த மண்ணின் அகராதியில் உள்ளதுதான். வேதக்கோயில் என்றால் சற்று அந்நியப் பட்டு விடுகிறது..``அவங்க வேதக்காரங்க’’ என்றால் அர்த்தம் மாறுபட்டு விடுகிறது. எங்களது வேதக் கோயில் பள்ளிக் கூடத்திலிருந்து, நாளைக்கு பளையங்கோட்டைக்கு கூட்டிப் போகிறோம் எல்லாரும் நாலணா கொண்டு வந்து விட வேண்டுமென்று என்று நாலாம் வகுப்பு பால் மாணிக்கம் சார் சொன்னார். நல்ல அழகான கருப்புக் கலரில் இருப்பார். குரல் நன்றாக இருக்கும்.அவரே சொல்லிக் கொள்ளுவார், பேர் தாம்லெ வெள்ளையா வச்சுட்டாரு எங்க அப்பா.
மறுநாள் பாளையங்கோட்டையில் இருந்த விழியிழந்தோர் பள்ளிக்கு அழைத்துச் சென்றார்கள்.அவர்கள் பாய் நெய்வதையும் கூடை முடைவதையும் அதிசயமாகப் பார்த்ததுக் கொண்டிருந்தோம். நாங்கள் போன அன்று அங்கே விளையாட்டு விழா. ஓட்டப் பந்தயப் பாதையில் கயிறுகள் கட்டி அதற்குள் ஓடினார்கள் அங்குள்ள மாணவ்ர்கள்.ஆனால் ஒருவர் உடல் கூட கயிற்றில் படவில்லை, பாருங்கடா என்று சார் சொன்னது நன்றாய் நினைவிருக்கிறது.
பல வருடங்கள் கழித்து, அந்த வளாகத்தில் உள்ள சர்ச் சில் ஒரு கல்யாணம். நானும் வண்ணதாசனும் போயிருந்தோம் அன்று மாணவர்கள் யாரும் தென்படவில்லை. விடுமுறையோ அல்லது விடுதியை விட்டு வரவில்லையோ தெரியவில்லை. அந்த வேதக் கோயிலின் சுவர்கள் பளிச்சென்றிருந்தது. ஒரு அசாத்திய மௌனத்தை உணர்த்திக் கொண்டிருந்தது. திருநெல்வேலி டயோசிசன் கோயில்களில் சொரூபங்கள் இருக்காது. ஆனால் ஐயர் பிரசிங்கிக்கும் மேடை, பாடல்கள் பாடுவோரின் இடம் இவற்றில் சிறிது அலங்காரம் இருக்கும்.இங்கே அது கூட எளிமையாக இருந்தது.சில சர்ச்சின் பக்கவாட்டுச் சுவர்களில் ஒனறிரண்டு படங்கள், இயேசுவின் ‘ராப் போஜனம்’ இயேசு ஆட்டுக் குட்டியுடன் உள்ள சித்திரம் என்று ஏதாவது இருக்கும்.
ஆனால் இங்கே எதுவுமில்லாமல் சுவர்கள் வெண்மையாய்ப் பளிச்சென்று இருந்தது.ஏன் என்ற கேள்வி என்னைப் போலவே வண்ணதாசனின் மனத்திலும் ஒடியிருக்க வேண்டும்.திருமணம் முடிந்து வெளியே வந்த போது ப்லைண்ட் ஸ்கூல் சர்ச் என்பதால் படங்கள் எதுவுமில்லையோ என்று கேட்டு விட்டு அமைதிக்குள் புகுந்து கொண்டார், அவர். இருக்கலாம் என்று நானும் நினைத்துக் கொண்டேன்.சொல்லவில்லை.
நாலைந்து வருடங்கள் கழித்து. ஜான்ஸ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், மறு நாள் வெள்ளி விழா சுதந்திர தினக் கொண்டாட்டங்கள், விடுமுறை. லைப்ரரியில் சில புத்தகங்களைத் தேடிக் கொண்டிருந்ததால் சற்று நேரமாகி விட்டது.அப்போது ஜெயராஜ் சார் அவசரம் அவசரமாக வந்தார்.மற்ற மாணவர்கள் எல்லாரும் போய் விட்டார்களோ,இப்ப தான் முதல்வர் ஒரு பொறுப்புச் சொன்னார். நாளை ப்லைண்ட் ஸ்கூலில் ஃப்லாக் ஹாய்ஸ்ட் பண்ணனுமாம், நீங்க வர முடியுமா என்று அங்கிருந்த எங்கள் இரண்டு மூன்று பேரிடம் கேட்டார். யாரோ, சாப்பாடு போடுவீங்களா, இல்லேன்னா வெறும் மிட்டாய் கொடுத்து அபனுப்பிருவீங்களா என்று விளையாட்டாகக் கேட்டார்கள். நான் எங்கள் வீட்டில், விருந்தே ஏற்பாடு செய்கிறேன் என்று உற்சாகமாய்ச் சொன்னார்.திரும்பத் திரும்ப கேட்டார், ஃப்ரெண்ட்ஸ் வர முயற்சி பண்ணுங்களேன் என்று. ஒரு விடுமுறை நாளை வீணடிக்க யாருக்கும் மனமில்லை. அமைதியாக இருந்தோம்.
அவர் முகத்தில் தெரிந்த எதிர்பார்ப்பு, மனதை என்னவோ செய்தது.நான் வருகிறேன் என்றேன்.இன்னும் இரண்டு மூன்று பேர் நங்களும் வாரோம் சார் என்றார்கள்.கல்லூரியை விட்டு சற்று தூரம் வந்த பின்னும் சைக்கிளில் பின்னாலேயே வந்து சொன்னார்,வீட்டில் மதிய விருந்து ஏற்பாடு செய்து விடுகிறேன் என்று.அதெல்லாம் வேண்டாம் சார் வந்திருதோம் என்று உறுதியளித்து விட்டுக் கிளம்பினோம்.
காலையில் சார், அந்த விழியிழந்தோர் பள்ளியின் வாசலில் காத்திருந்தார்.நல்ல வெயில் வந்து விட்டிருந்தது. பள்ளியின் மாணவர்கள் சற்று நிழலிலேயே அமர்ந்திருந்தனர். கல்லூரி முதல்வர் அவர்களே வருக வருக என்று ஒரு கரும் பலகையில் எழுதி வைத்திருந்தது. எங்களைத் தவிர கொஞ்சம் இளங்கலை பயிலும் மாணவர்களும் வந்திருந்தனர்.வேகமாக மாணவர்களை அணிவகுத்து நிற்கச் செய்து விட்டார்கள், அந்த ஆசிரியர்கள். பிரம்புடன் நின்ற ஒருவரிடம், பிரம்பை ஒளித்து வைக்கும் படி பள்ளி நிர்வாகி ரகசியமாய்ச் சொன்னார். அது எங்களைப் பார்த்ததனால் என்று நினைத்தேன். தூரத்தில் சர்ச் மூடியிருந்தது. ஒரு ஜன்னல் கூட திறக்கப் படவில்லை.
ஜெயராஜ் சார் கொடியேற்றினார். ஸ்கூல் சல்யூட் என்று உரக்கக் கத்தினார் பிரம்பை ஒளித்து வைத்தவர்.எங்களிடம் தம்பிகளா பலமா கைதட்டுங்க என்றார்.தட்டினோம் இன்னும் பலமா தட்டுங்க, என்றார். ஜெயராஜ் சார் ‘ப்ளீஸ்’ என்கிற மாதிரியில் பார்த்தார். பலமாகத் தட்டினோம். இப்போது அந்த மாணவர்களும் கை தட்ட ஆரம்பித்தனர். கைதட்டலை நாங்கள் நிறுத்திய பின்னும் அவர்கள் தட்டிக் கொண்டிருந்தார்கள்.கொடி பட்டொளி வீசிப் பறந்தது.அவர்கள் அருகே போய் என்னவோ செய்தார்,பிரம்பு சார்.ஓரிரு நிமிடங்களில் அமைதியாகி விட்டது வளாகம்.இனிப்பை வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.ஜெயராஜ் சார், ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு வாங்க பக்கத்திலதான் இருக்கு என்றார். ஒட்டு மொத்தமாக மறுத்தோம்.. நான் என்றுமில்லாத வேகத்தோடு சைக்கிளை மிதித்தேன்.
வீட்டுக்கு வந்ததும் எழுதினேன், ஒரு அடித்தல் திருத்தலில்லாமல் ஒரு கவிதையை. கனமான இதயம் கொஞ்சம் மட்டுப்பட்டது மாதிரி இருந்தது.

குருடர் பள்ளியில்
கொடியேற்றம்


விழியுள்ள கணவான்
விழாக் கொடியேற்ற
வெள்ளி விழாவென்று
களித்தனர்-சுற்றி நின்ற
கண்ணற்றவர். (15.08.1972)

Tuesday, November 3, 2009

ஓடும் நதி-4


தபால்காரர் நந்த கோபால், காலைநேர விநியோகக் கடிதங்களை எடுத்துக் கொண்டு, எங்கள் தெருவுக்குள் வரும் போது அநேகமாய் உச்சி வெயிலாய் இருக்கும். வண்ணதாசன் அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருப்பார்.அவரது அன்பகம் வீட்டுக்கு எப்படியும் ஒரு கடிதமாவது இருக்கும். அவருக்கு தவறாமல் பெங்களூரிலிருந்து அன்பழகன் தினமும் எழுதி விடுவார்.இல்லையென்றால் சோவியத் நாடு பதிப்பகத்திலிருந்து புத்தகம், அல்லது செய்திமடல் கட்டாயம் இருக்கும்.
எனக்கு ஒரு கால கட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பாகங்களிருந்து எம்.ஜி.ஆர் மன்றக் கடிதங்கள் சில இருக்கும். கவிதைகள் பிரசுரமாக ஆரம்பித்த காலங்களில், ‘மாறா அன்புடன்’ பாலகுமாரனோ, சுப்ரமணிய ராஜுவோ, நா.விச்வநாதனோ தவறாமல் எழுதியிருப்பார்கள். மாலை நாலு மணி வாக்கில் இரண்டாவது விநியோகத்துக்கு ஒரு காத்திருத்தல், என அப்போது ஒரு நாளில் இரண்டு முறை மட்டுமே எதிர்பார்த்திருந்தால் போதும். எங்கள் வீடு தெருவின் மேற்குக் கடைசியில் இருந்தது. கிழக்கிலிருந்து நந்த கோபால் நெருங்க நெருங்க உள்ளம் கிடந்து அடித்துக் கொள்ளும். இவ்வளவுக்கும் அவர் எந்தக் காதல் கடிதங்களையும் கொண்டு வந்தது கிடையாது.இது தவிர விரைவு அஞ்சல் என்று ஒன்று உண்டு. அதிகமாக பத்துப் பைசா தபால்த் தலை ஒட்டி ‘எக்ஸ்ப்ரெஸ் டெலிவெரி’ என்று எழுதி விட்டால்ப் போதும்.ஒரு நாளின் பகலில் எப்போது வேண்டுமானாலும் கொண்டு வந்து கொடுப்பார்கள்.
என் நினைவுக்குட்பட்டு எனக்கு வந்த ஒரே ஒரு எக்ஸ்ப்ரெஸ் கடிதம் மதுரைப் பல்கலைக் கழகத்திலிருந்து வந்தது, ”தினசரிகளில் நீ தவறுதலாக புள்ளியல்த் தேர்வில் தோல்வி என்று பிரசுரமானது தப்பு, நீ வெற்றி பெற்று விட்டாய், உனக்கு அடுத்த எண்ணுடையவரே தோல்வி”.அன்று திருநெல்வேலியில் தேரோட்டம்.தேரை இழுத்து தெருவில் விட்டு விட்டு வந்த உற்சாகத்தோடு இதுவும் சேர்ந்து கொண்டது.ஆனால் கொஞ்ச நேரத்தில், பாஸாகிப் ஃபெயிலான சீனிவாசகம் அவனுக்கு வந்த அதன் நகலோடு, பாவமாக என்னைத் தேடி வந்த போது, எல்லாரும் நீ ஃபெயிலாகவே ஆகியிருக்கலாம் என்றார்கள்.அவன் மிக மிக நேர்மையான போலீஸ் டி.எஸ்.பி யாகப் பணியாற்றி சமீபத்தில் இறந்து போனான்.

இப்போதென்றால், கைப்பேசியோ மின்னஞ்சலோ, முகப்(பு)புத்தகமோ, ட்விட்டரோ எப்போது வேண்டுமானாலும் நீளமாகவோ, குறுகலாகவோ அஞ்சல் வரலாம், கணினியைத் திறந்தால் போதும். கைப்பேசியைத் தான், நாம் படிக்கும் அறையோ, பாட்டாசலோ, சமையலறையோ, கக்கூஸோ பிரிவதேயில்லையே.
நாம் சில கடிதங்களை எதிர் பார்த்துக் காத்திருப்போம்., அலுவலகத்திலிருந்து வரும் போதே கடிதம் ஏதாவது வந்ததா என்று கேட்டபடியே வருவோம். ஆமா என்று நீட்டுவார்கள். ரீடர்ஸ் டைஜெஸ்டிலிருந்து குப்பையாக ஏதாவது புத்தக விளம்பரம் வந்திருக்கும்.’ச்சை’ என்றிருக்கும். ஆமா உங்களுக்கு தினம் ஏதாவது காசோலையா வரும் என்று கேலி செய்வாள் மனைவி. 28 வருடத்திற்கு முன், ஒரு நாள், கவிஞர் மீரா என்னுடைய முதல்க் கவிதைத் தொகுதிக்கு அது விற்ற கணக்கும், ராயல்ட்டியாக 165/- ரூபாய்க்கு ஒரு வரைவோலையும் அனுப்பியிருந்தார். நான் பெற்ற முதலும் கடைசியுமான ராயல்டி அதுதான். மகிழ்ச்சியாக இருந்தது.
சுஜாதாவுக்கு என் ‘’உலகெல்லாம் சூரியன்’’ என்ற தொகுப்பிற்கு முன்னுரை எழுத முடியுமா என்று கேட்டு கடிதம் எழுதியிருந்தேன், அதிலுள்ள தயக்கத்தை புரிந்து கொண்டாரோ என்னவோ, ‘’என்ன கலாப்ரியா, கரும்பு தின்ன ராயல்ட்டியா’’ என்று ஒரு வரி கார்டில் எழுதிப் போட்டுவிட்டு, மூன்றே நாளில் அற்புதமான முன்னுரை ஒன்றை கணினியில் அச்சாக்கி அனுப்பியிருந்தார். தமிழில் கணினியில் எழுதுவதை அவர் துவக்கி வைத்திருந்த நேரம அது.
என் மனைவி சரஸ்வதி, குழந்தை பாரதியைப் பிரசவித்திருந்த சமயம். ஒரு நண்பர், ஒரு கார்டு எழுதியிருந்தார்.”கலாப்ரியா, உங்கள் பெயர், உங்கள் துணைவி பெயர், உங்கள் புதிய மகவின் பெயர் மூன்றிலும் கலைமகள் இருக்கிறாள், மூவருக்கும் லட்சுமி கடாட்சம் பொங்கட்டும்” என்று. அவர் ரசிகமணி டி.கே.சியின் பெயரர், திரு.தீப.நடராஜன்.
கதாசிரியர் வண்ணதாசனுக்கு நீண்ட காத்திருப்புக்குப் பின் நல்ல வேலை கிடைத்தது. அதையொட்டி அவரின் மூத்த சகோதரர் கணபதி (எங்களுக்கெல்லாம் அவர் தான் குரு) ஒரு கடிதம் எழுதியிருந்தார். அப்போது நா.பார்த்தசாரதி அவரது தீபம் இதழில், ‘தேவதைகளும் சொற்களும்’ என்று ஒரு பிரபலமான சிறு கதை எழுதியிருந்தார்.கணபதி அண்ணனின் இன்லேண்ட் கடிதத்தில் நான்கே வரி எழுதியிருந்தது.
‘’தேவதைகளும் சொற்களும் எப்போதாவதுதான் கிடைக்கிறார்கள். சமயத்தில் தேவதைகள் கூட தென் பட்டு விடுகிறார்கள்.....ஆனால் வார்த்தைகள்.... அவைதான் கிடைப்பதில்லை..வாழ்த்துக்கள் கல்யாணி...,” என்று
(வலைப் பதிவுகளில், நீலப்பற்களில், ட்விட்டரில் சணடையிட்டுக் கொள்கிறவர்கள் இதை வாசிக்கக் கடவார்களாக)

Wednesday, October 28, 2009

ஓடும்நதி-3


காலையிலிருந்தே நண்பரது கைப்பேசியில் அழைப்பு வரத் தொடங்கி விட்டது. இரவு நெடு நேரம் ஆகியிருந்தது, உறங்க. வழக்கம் போல் எனக்கு சீக்கிரமே விழிப்புத் தட்டி விட்டது. சார் இருக்கிறாரா, சந்திக்க வரச் சொல்லியிருந்தார். எத்தனை மணிக்கு வரட்டும் என்று கேட்டு நாலைந்து அழைப்புக்கள் வந்தன. தூங்குகிறார் எழுப்பட்டுமா என்று கேட்டால் வேண்டாம், நான் அப்புறம் அழைக்கிறேன் என்று வைத்து விட்டார்கள்.அவர் அரைத் தூக்கத்தில் இருந்தார். அதை அணைத்து வைத்து விடுங்கள், என்று சொல்லி விட்டு தூங்க ஆரம்பித்து விட்டார்.தரையில், இறைந்து சிகரெட் துண்டுகளை ஒரு ஓரமாகத் தள்ளி விட்டு, இன்னொரு இளைய நண்பர் படுத்திருந்தார். பல வாதப் பிரதி வாதங்களுடன் உற்சாகமாய்த் தொடங்கிய முன்னிரவு. நிகொடினும் ஆல்கஹாலும் புது இலக்கியச் சண்டையை ஆரம்பித்து வைத்திருந்தன. சில பழைய மனஸ்தாபங்கள் கை குலுக்கிக் கொண்டிருந்தன. யார் புகைத்த சிகரெட் என்று தெரியாமல் இப்போது அவை சேர்ந்தும் தள்ளியும் கிடந்தன.

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற மாதிரி ஆகிவிட்டது அந்த இரவு. நண்பர் மிகச் சிறந்த வாசிப்பாளர். அருமையாக உரை நிகழ்த்துபவர். அவரது உடல் நிலை கருதி என் அறையில் என் பொறுப்பில் விட்டுப் போயிருந்தார்கள்.நண்பரும், ‘’எங்க ஊர்க்காரர் நாங்க பேசிக் கொண்டே தூங்கி விடுவோம்’’ என்று சொல்லியிருந்தார்.மணி பத்துக்கு மேல் ஆகி விட்டது.பேச்சு, வால்காவிலிருந்து கங்கை வரை நூல் பற்றி அருமையாகத் தொடங்கியது. அதில் வருகிற ‘பிரபா’ கதையில், தன் அழகாலும் இளமையான காதலாலும் கவி அஸ்வகோஷின் எழுத்துக்களுக்கு இறவாப் புகழ் கூடுதலாய்க் கிட்டும் என்று உணர்கிறாள் அவன் காதலி ‘பிரபா’. அஸ்வகோஷ், வயது முதிர்ந்து, கூன் விழுந்து, பல் போன தன்னுடன் வாழ நேர்ந்தால், அவன் கவிதையின் இளமை காணாமல்ப் போய்விடக் கூடும் என்றும் அஞ்சி சரயூ நதியின் வெள்ளத்திற்கு தன்னை ஒப்புக் கொடுத்து உயிர் விடுகிறாள். ‘’என்னைப் பொறுத்தவரை உன் இதயத்தின் பாராட்டுதலே சகலமும்’’ என்று தட்டழிகிற அஸ்வகோஷ் தன்னைத் தேற்றிக் கொண்டு சாகாப்புகழ் பெற்ற காவியங்களை எழுதி அவள் தியாகத்தை நியாயப் படுத்தியது வரலாறு.
பேச்சின் சுவாரஸ்யம், இருக்கிற போதையைக் குறைத்து விட்டது. நண்பருக்கும் அப்படித்தான் இருக்கவேண்டும். லாட்ஜ் பையனை அழைத்து ஏதாவது கிடைக்குமா என்று கேட்டார். அவன், மணி பத்தரைக்கு மேல் ஆயிட்டு அதெல்லாம் ஒன்னும் கிடைக்காது என்று சொல்லிக் கொண்டே போய்விட்டான்.வாங்க தம்பி எனக்குத் தெரியாத மதுரையா, எங்க தட்டினா என்ன கெடைக்கும்ன்னு தெரியும் என்று சட்டையைப் போட்டுக் கொண்டு கிளம்பிவிட்டார்.சொன்னது போலவே, லாட்ஜுக்குப் பக்கத்தில் இருந்த சந்தில் நுழைந்து, தட்டுங்கள் திறக்கப் படும் என்று உணமையிலேயே எழுதி வைத்திருந்த ஒரு கதவைத் தட்டிச் சரக்கை வாங்கிக் கொண்டே அறைக்குத் திரும்பினோம்.மறுபடி பேச்சு சுவாரஸ்யம் பிடித்தது. இப்போது ஸ்வாசம் என்ற இந்திப் படம் பற்றி. அதில் ஒரு சிறுவனும் தாத்தாவும். சிறுவனுக்கு கண்ணில் வந்திருக்கிற புற்று நோயை அகற்றா விட்டால் உயிருக்கே ஆபத்து என்கிற நிலை.நாளை அறுவை சிகிச்சை, தாத்தாவும் பேரனும் ஆஸ்பத்திரியை விட்டு அன்று மாலை காணாமல் போகிறார்கள்.
மருத்துவனை அல்லோலகல்லோலப் படுகிறது. இரவில் தாத்தாவும் பேரனும் அமைதியாகத் திரும்பி வருகிறார்கள். பத்திரிக்கைக் காரர்களின் கேள்வியில் அரண்டு போயிருக்கிற டாக்டர் சத்தம் போடுகிறார், கிராமத்து தாத்தாவை. சிறுவனை தூங்க வைத்து விட்டு அவர் அமைதியாகச் சொல்லுகிறார், நாளை முதல் அவனுக்குப் பார்வை இருக்காது அவன் கடைசிப் பார்வையில் பதிபவை ஏன் இந்த மருத்துவமனையின் சுவர்களாகவும், ஜன்னலாகவும், மருந்து பாட்டில்களாகவும் இருக்க வேண்டும். கொஞ்ச நேரம் பூங்கா,மரம், செடி, கொடி அங்கே விளையாடும் குழந்தைகள், என்று அவன் நினைவு நல்லவைகளாலேயே நிரப்பப் பட்டிருக்கட்டுமே என்று தான் அவனை பூங்காவுக்கு அழைத்துச் சென்றதாகச் சொல்லுவார். இதை நான் சொன்னதும் நண்பர் சொன்னார், உங்களுக்குத் தெரியுமா, கொஞ்ச வருடங்களுக்கு முன் எனக்கு கண்ணில் ஒரு சீக்கு வந்தது. எனக்கு பார்வை போய் விடுமோ என்று பயம் வந்து விட்டது. பார்வை போவதற்குள் சிலப்பதிகாரம் முழுவதையும் மனப்பாடம் பண்ணி விடவேண்டுமென்ற வெறியுடன், வலியைப் பொருட்படுத்தாமல், மனைவி, குழந்தைகளின் அறிவுரையையும் பொருட் படுத்தாமல் ராவாப் பகலா முயற்சித்தேன் தெரியுமா, என்று..எனக்கும் இளைய நண்பருக்கும் புல்லரித்தது.இளைய நண்பர் என்னிடம் மிச்சமிருக்கா என்று கேட்டார்.என் கையில் கொஞ்சம் இருந்தது. பேராசிரியர் இந்தாருங்கள், என்று அவர் தம்ளரை நீட்டினார்.இளைய நண்பர் உபயோகித்து எறிந்த தமளரைத் தேடினார், சும்மா இதிலேயே சாப்பிடுங்கள் என்று நீட்டினார். நான் இளைய நண்பரிடம் கேட்டேன்
இந்த, மூத்த கிழவனின் கவிதை வரிகளைக் கேட்டிருக்கிறாயா,

‘’என்னுடைய இளஞ்சாராயத்தை
என் கோப்பையுடனேயே
ஏற்றுக்கொள்
இன்னொன்றிற்கு மாற்றுகையில்
இந்த நுரைகள் மறைந்து விடலாம்’’

யாரு அண்ணாச்சி அது என்று அவர் அதிசயித்துக் கேட்கும் முன்பே பேராசிரியர் சொன்னார், ‘’தாகூர்’’.

.

Thursday, October 22, 2009

ஓடும் நதி...2


டவுண் மார்க்கெட்டின் பின் புறம், அந்தத் தெருவின் கடைசி. மார்க்கெட்டிற்குப் போய் விட்டு வந்தால், அதை தெருவின் ஆரம்பம் எனலாம். மார்க்கெட்டின் பின்புறமும் தெருவிலும் அழுகிய காய்கறிகளும், இலை தழைகளும், குவிந்து ஒரு மணம் வீசிக் கொண்டிருக்கும்.முனிசிபாலிட்டியின் குப்பை வண்டிகளை இழுக்கும் மாடுகள், அதை அப்படி ஆசையாய் மேயும். அவைகளெல்லாம் புஷ்டியாய், பெரிய கொம்புகளுடன் ஒரே ஜாடையில் இருக்கும். பார்த்தாலே சொல்லிவிடலாம் இது முனிசிபாலிட்டி மாடு என்று. தெருவில், பூட்டியே இருக்கிற ஒரு அம்மன் கோயில். அது அம்மன் கோயிலென்பதே வெகு நாள் கழித்துத்தான் தெரியவந்தது.அதன் நடையில் ஒரு பைத்தியக்காரி உட்கார்ந்து தனக்குத் தானே பேசிக் கொண்டிருப்பாள்.எப்பொழுதும் எச்சில் ஒழுகுகிற வாய், கழுத்தில் குப்பையிலிருந்து எடுத்து அணிந்து கொண்ட, நாரும் அங்கங்கே வாடிய பூக்களும், உள்ள சில பூமாலைகள். நினைத்தாற் போல் எழுந்து, யாருடனோ வாதிட்டுச் சண்டையிடுவது போல், மொழியற்ற பாஷையில் பேசிக் கொண்டு, வேகமாய் இரண்டு தரம் தெருவை அளந்து விட்டு வந்து, மறுபடி கோயில் நடை. இரண்டாம் முறை மது விலக்கு நீக்கப் பட்ட சமயம் என்று நினைவு, திடீரென்று பார்க்கையில் பெரிய வயிற்றைச் சுமந்து கொண்டு தெருவை அளந்து கொண்டிருந்தாள்.கொஞ்ச நாளில் மார்க்கெட் குப்பையில் ஒரு குழந்தை பிணம்.மாடுகள் மேயாமல் தள்ளி நின்று கொண்டிருந்தன. உடையெங்கும் ரத்தத்துடன் எதுவும் நடக்காதது மாதிரியில், நீதி கேட்பது போல்,வடக்கும் தெற்குமாக அவள்.

‘’வித்தியாசமான ஊர்க் குணாதிசயங்கள்
இந்தப் பைத்தியங்கள்.....’’

இன்னொருவன் ஒரு பழைய தையல் மெஷினை கன்னாபின்னாவென்று சங்கிலியால் சுற்றி ஒரு பூட்டைக் கொறுத்துத் தோளில் சுமந்து கொண்டே திரிவான்.தையல் மிஷினும் சங்கிலியும் கை பட்டுப் பட்டு, பளபளவென்றிருக்கும். மிஷினில் பெயிண்டோ பெயரோ இருக்காது. காணாததற்கு அவன் உயரத்திற்கு தோளில் ஒரு பை. அதில் புதிதும் பழையதுமான துணிக் குப்பைகள்.அவனைப் பார்க்கையில் ‘’தையற்காரன் புறக்கணித்த புது வெள்ளைத் துணி போல....’’என்கிற ஞானக் கூத்தனின் கவிதை வரிகள் நினைவுக்கு வரும்.
தென்காசியில் ஒருவன். என் சின்ன வயதில் பார்த்தவன்.சாக்கடைக்குள் நின்று கொண்டு, சாக்கடைச் சுவரின் மேற்பகுதியில் எரு தட்டிக் கொண்டிருப்பான்.’’எரு தட்டற மாதிரி தட்டறியே...’’என்று சொல்வதற்கு எதிராக, கர்ம சிரத்தையோடு, சாணியை முட்டானாக உருட்டாமல், அழகான பந்து போல் உருட்டி, சுத்தமான வட்டமாக எரு ‘‘தயாரித்து’’க் கொண்டிருப்பான். கை விரல் பதிந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பது போல் இருக்கும்.கிட்டத்தட்ட இருநூறு அடி நீளச் சாக்கடை அவன் ராஜ்ஜியம்.இவர்களுக்கெல்லாம் நோயோ, நோக்காடோ வரவே வராது என்பது போல் நீண்ட காலம் அதே இடத்தில்,கண்ணில் பட்டுக் கொண்டிருந்தான்.இருபது வருடம் கழித்து அந்த ஊருக்கே குடி பெயர்ந்த போது, அவனைக் காணவில்லை.
அதற்குச் சமீபமாக ஒரு வீட்டில் என் அலுவலக நண்பர் வீடு இருந்தது.அவரைப் பார்க்கப் போன போது அங்கே சீட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது.வெவ்வேறு வயதில் ஆட்கள் அமர்ந்து பேச்சும் கும்மாளமுமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்.சீட்டு விளையாட்டுக்கென்றே ஒரு கலகலப்பு உண்டு. நல்ல சீட்டுக்களாக வராதவன் மட்டும் சற்று நேரம் அமைதியாய் இருப்பான்.நல்ல சீட்டுகளாய் வந்து எதை எங்கே சேர்க்க என்று திண்டாடுகிறவனும் அமைதியாய் இருப்பான்.அது ‘’புள்ள முழிக்கிற முழி பேளறதுக்குத்தான்..’’என்கிற திண்டாட்ட அமைதி.விஷயம் தெரிந்தவர்கள் ‘’எப்பா இந்த ஆட்டைக்கி நான் வரலைப்பா...’’என்று சீட்டைக் கவிழ்த்திவிடுவார்கள்.
ரசிகமணி டி.கே.சிக்கு நெருக்கமான ஒரு வித்துவான் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்தார், குழந்தை மாதிரிப் பேசிக் கொண்டிருந்தார். ‘’யாரோ ஸ்ரீதேவீன்னு ஒரு புள்ளையாம், ராதிகான்னு ஒரு புள்ளையாம் படங்கள்ல்ல போடு போடுன்னு போடுதுகளாமே..... டி.ஆர் ராஜகுமாரியெல்லாம் பக்கத்துல நிக்க முடியாதேமே..’’.நீங்க என்ன அண்ணாச்சி லலிதா, பத்மினி மாதிரி ரெண்டு கேரளாக் குட்டிகள் அம்பிகா, ராதான்னு வந்தாச்சு. இவ்வளவு பொது அறிவு கூட இல்லையே என்றார், இன்னொருவர்.எனக்கும் என் நண்பருக்கும் சிரிப்பாக வந்தது.அது தர்க்க பலமில்லாத உண்மை போல கூடத் தோன்றியது. (இப்பொழுது சமீபமாக டி.வியில் போட்ட ஒரு புதுப் படத்தைப் பார்த்த போது, இது யாரு இந்த நடிகை, என்று என் குழந்தைகளிடம் கேட்டேன். அவை கோரஸாகச் சொல்லின, ‘’யாரா? இந்த ஜெனரல் நாலெட்ஜ் கூட இல்லை, நீ எல்லாம் ரிடையராகப் போறே..’’)
நான் நண்பரிடம் கேட்டேன், இங்க அந்தக் காலத்துல ஒருத்தன் எரு தட்டிக் கொண்டு இருப்பானே அவன் என்ன ஆனான் என்று. ஒரு பெரியவர் உற்சாகமாகச் சொன்னார், நீங்க அவனைப் பாத்திருக்கீங்களா, பாவிப்பய என்ன அழகா எரு தட்டுவான் தெரியுமா, காம்பஸ் வச்சு வரைந்த மாதிரி.நாலு நாள் மழை தொடர்ந்து பெஞ்சுது தம்பி, சீஸன் மழை மாதிரியே இல்லை, அடை மழை அது. பாவிப்பய இடத்தை விட்டு நகராம அங்கனயே கிடந்து செத்துப் போனான். அதை விடக் கூத்து முனிசிபாலிட்டிக்காரன் அவனை எடுத்துட்டுப் போறப்ப எங்கள்ட்ட, எருவுக்கு காசு கூடக் கொஞ்சம் குடுங்க சாமின்னு வாங்கீட்டுப் போனான். பாவிப் பய, பாவிப்பய....என்று பாவியாக அடுக்கிக் கொண்டே சீட்டைக் கவிழ்த்தினார்.
-இன்னும் விரியும்

Sunday, October 18, 2009

ஓடும் நதி.....


பாளையங்கோட்டை இலந்தைக் குளத்தை இப்போது மூடப் போகிறார்களாம்.அதில் மாநகராட்சியில் இருந்து, ஏதோ கட்டப் போகிறார்களாம். ஏற்கெனவே வேய்ந்தான் குளத்தை மூடி புதுப் பஸ்ஸ்டாண்ட் கட்டியாயிற்று..ஜன நெரிசல் நம்மை பல வழிகளில் சிந்திக்க வைக்கிறது.ஊர் என்ற ஒரு வட்டத்தை விட்டு, கூட்டுக்குடும்பம் என்ற ஒருவகையான பாதுகாப்பை விட்டு, சிதற வைக்கிறது. ஆற்றோரச் சுடுகாடு என்பதெல்லாம் போய், இப்போது அந்தந்த ’குடியிருப்புகள்’ அருகேயே, பம்ப் செட், குளியல் தொட்டி இத்யாதிகளுடன் அங்கங்கே சுடுகாடுகள் வந்து விட்டன.இப்போ என்ன வேலை பார்க்கிறாய் என்றால்,’ரியல் எஸ்டேட்’ என்று சொல்லி ஒரு விசிடிங் கார்டை நீட்டுகிறார்கள் பலர்.
எனக்கு தோன்றுவதுண்டு. இந்த புதுப் பஸ் ஸ்டாண்டுகளை சாலையின் இரு புறமும் இரட்டை பஸ் ஸ்டாண்டாகக் (twin bus stand) கட்டலாமே என்று.போவதற்கு ஒன்று, வருவதற்கு ஒன்று. நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள கிராமங்களில் இப்படித்தானே பஸ்ஸ்டாப்புகள், தானாகவே அமைந்துள்ளன. மக்கள் அதைத் தெளிவாகத்தானே புரிந்து வைத்திருக்கிறார்கள்.ஆனால் நாம் ஏறுகிற வழியையும் இறங்குகிற வழியையும் அததற்கெனறே உபயோகிக்கிறோமா என்ன. அதனால் நம்மை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. நகுலன் ஒரு கவிதையில் சொன்னது மாதிரி
.’’......இந்த மனதை வைத்துக் கொண்டு
ஒன்றும் செய்ய முடியாது. ‘’
அப்போது நான் தூத்துக்குடியில் வேலைக்கு சேர்ந்த புதிது. வார விடுமுறையில் ஊர் வந்திருந்தேன். வண்ணதாசனை அந்த ஞாயிற்றுக் கிழமைக் காலை வீட்டிற்குப் போய் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கையில் காண்பிதார். ஒரு பெரிய அட்டைப் பெட்டி நிறைய புத்தகங்கள், இருந்தன. கிட்டத் தட்ட இரண்டு வருட காத்திருப்பிற்குப் பின், வண்ண தாசனின் முதல் கதைத் தொகுதி,’’கலைக்க முடியாத ஒப்பனைகள்’’, அஃக் பரந்தாமனால் பிரமாதமாக அச்சாக்கம் செய்யப்பட்டு வந்திருந்தது. அந்த அசாத்தியத் தாமதம் அந்த மகிழ்ச்சியை சற்று மழுங்க வைத்திருந்தது. இரண்டு வருடம் முன்பு, நான் தான் அந்த ஸ்க்ரிப்டையும், ஆயிரத்திச் சொச்சம் பணத்தையும் சேலத்தில் நேரில் கொண்டு போய் பரந்தாமனிடம் கொடுத்து வந்திருந்தேன். அதை எப்படி விற்பனை செய்வது,எதில் விளம்பரம் செய்வது, என்று எங்களுக்கு தெரியவில்லை. அப்போது இலக்கியப் பத்திரிக்கை என்று கணையாழியும் தீபமும்தான் வந்து கொண்டிருந்தன. நான் மதுரை மீனாட்சி புத்தக நிலையத்தில் கொண்டு போய் கொஞ்சம் கொடுத்து வருகிறேன் என்று சொன்னேன்.விஜயா பதிப்பகம் கூட அப்போது இல்லை.
ஒரு பிரதியை வாங்கிக் கொண்டு வந்தேன். அன்று காலையில் மழை பெய்து வெயிலின் உருக்கம் தெரியாமல் சற்று ரம்மியமாய் இருந்தது.புத்தகம் கையில் இருப்பது, ஏதோ கடன் கேட்ட பணம் கிடைத்தது போல் சந்தோஷமாயிருந்தது. எங்காவது வெளியே போகலாம் என்று தோன்றியது.கையில் புத்தகத்துடன் சந்திப் பிள்ளையார் முக்குக்கு வந்து, நின்று கொண்டிருந்த ஒரு டவுண் பஸ்ஸில் ஏறினேன்.அது பாளை பஸ் ஸ்டாண்டில் நின்றது. இறங்கினேன், எங்கே போவது எனறு தெரியவில்லை. ஒரு சிகரெட் பற்ற வைத்தேன்.என்னுடன் மதுரைப் பல்கலையில் வேலை பார்த்த ஒரு சிநேகிதி, தன் டாக்டர் கணவருடன் பெருமாள் புரத்தில் இருப்பதாக கடிதம் எழுதியிருந்தாள்.இலந்தைக் குளம் கரை வழியாக பெருமாள் புரத்திற்கு நடந்து போய் விடலாம். அங்கே ஒரு தந்தி அலுவலகத்தில் தினக் கூலியாக 3.ரூபாய்30பைசாவுக்கு வேலை பார்த்த போது அப்படி நடந்து போவது வழக்கம். உமாவின் நினைவோடு நடக்கத் தொடங்கினேன். பாதிக்கு மேல் நடக்க முடியவில்லை.பசியோடு புகைத்த சிகரெட் காரணாமாய் இருக்கலாம். ஒரு பனை மரத்தின் அடியில் நின்றேன்.குளத்தில் குறைவான தண்ணீரே கிடந்தது. ஒரு வட்டாக்கை (ஓட்டாஞ்சல்லி) எடுத்து தண்ணீரில் தவளைபோல் சாய்த்து எறிந்தேன். அது குபுக்கென்று முங்கி விட்டது.
கொஞ்சம் தள்ளி நாலைந்து சிறுவர்கள் செம்புலப் பெயல் நீரில் ஒரு பழைய துணியை வைத்து மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.அவர்கள் பை, பனை மூட்டில் கிடந்தது.இன்று ஏது வகுப்புகள் என்று நினைக்கும் போது, பொட் பொட்டென்று தூரல் விழுந்தது. குளத்தில் ஆங்காங்கே துளி விழுந்து சிறு சிறு நீர் வட்டங்கள் உண்டாயிற்று. மழை வலுத்தது. புத்தகத்தை இடுப்பில், வேஷ்டிக்குள் சொருகிக் கொண்டு பக்கத்தில் இருந்த ஒரு மரத்தடிக்கு ஒடினேன். பெரிய மழையாயில்லை, நனையாமலிருக்க மரமே போதுமானதாய் இருந்தது. புத்தகத்தை எடுத்துத் திறந்தேன், தற்செயலாக ‘தனுமை’ கதை விரிந்தது. உமாவிடம் பகிர்ந்து கொண்ட கதை. மூடி விட்டு எதிரே பார்த்தேன். இலந்தைக் குளம் மகாப் பெரிய அர்த்தங்களோடு விரிந்து கிடப்பதாகப் பட்டது.
அதை மூடப் போகிறார்களாம்.(குங்குமம்-19.12.2009 தமிழ் வார இதழ்.)

Sunday, October 11, 2009

நினைவின் தாழ்வாரங்கள்-50


``பாட நினைத்தது பைரவி ராகம்
பாடி முடித்தது யாவையும் சோகம்’’
கண்ணதாசனின் இந்த வரிகள் படத்தில் வரும். இசைத் தட்டில் இருக்காது. `மயங்குகிறாள் ஒரு மாது’ படம் என்று நினைவு.

அந்திமழை.காமிற்காக திரு இளங்கோவன் எழுதுங்கள், எழுதுங்கள் என்று வருடக் கணக்காக கேட்டுக் கொண்டிருந்தார்.சந்தியா பதிப்பகம் நடராஜனும் உரை நடை எழுதுங்கள் என்று பல காலமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.
முயற்சிப்போமே என்று ஆரம்பித்து ஒரு வருடம் ஓடி விட்டது.முசல் புடிக்கிற மூஞ்சியத் தெரியாதா என்ன, அண்ணாச்சி வேட்டைக்காரன் பற்றி எழுதுவாரு என்றார் ஒரு நண்பர்.. நாற்பதோடு முடித்து விட நினைத்திருந்தேன்.அதை நெருங்கும் போது இன்னொருவர்,இப்போது தான் புதிய பூமியே வருகிறது. இனிமேல் ரிக்‌ஷாக் காரன், இதயக் கனி எல்லாம் வர வேண்டுமே..... என்று மெயில் அனுப்பியிருந்தார், கடல் கடந்து. ஒரு தரை டிக்கெட் ஆசாமி எழுதும், வெறும் எம். ஜி. ஆர் புராணம் என்று நினத்து இருக்கலாம், அந்த ட்ரெஸ் சர்க்கிள், கிங்ஸ் சர்க்கிள்ஸில் அமர்ந்து படம் பார்க்கும் எலைட் ஆடியன்ஸ்.
அது உண்மையாயும் இருக்கலாம், போதுமடா சாமி என்று வணக்கம் போட நினைத்த சமயத்தில் சிலர் ரொம்ப நல்லாருக்கு.சினிமாவை வைத்து காலகட்டத்தை நன்றாகக் கொண்டு வருகிறீர்கள் என்றனர். வண்ணதாசன் ஒரு விடியற்காலம், தூக்கத்திலிருந்து எழுப்பி வாழ்த்தை மட்டும் சொல்லுகிறேன் வேறெதுவும் சொல்ல விரும்பவில்லை என்று சொன்னார்.நெகிழ்ச்சியில் தொண்டை அடைத்தது.
என் கவிதையில் சொல்லமுடியாததை, அதன் பின் புலம் என்று நான் நினைத்த, நான் என்ன வாக என் ஆதிகாலத்தில் இருந்தேன் என்று பாசாங்கில்லாமல் சிலவற்றைச் சொல்வது தான் என் நோக்கமாயிருந்தது. ஆனால் நினவின் ஆழத்திலிருந்து ஏதேதோ, எடுக்க எடுக்க வந்து கொண்டே இருந்தது.பெரும் பாலும் (99 சதவிகிதம்?) உண்மை சார்ந்த நிகழ்வுகளையே எழுதினேன்.சில நெருங்கிய நண்பர்களின் அவலங்களை, குறிப்பாக அவர்கள் வீட்டுப் பெண்களின், என் பட்டினி நேரங்களில் சோறு போட்டவர்களின், துயரங்களைச் சொல்லும் போது மட்டும் பெயர் இடம் என்று சற்று புனைவு கலக்க வேண்டியிருந்தது. தவிரவும் புனைவு இல்லாமல் எழுத்து சாத்தியமே இல்லை. ஜி.நாகராஜன் சொல்லாததை நான் சொல்லி விடவில்லை. கல்யாணியண்ணன் எப்பொழுதும் எனக்குச் சொல்வது போல், வண்ண நிலவன் எழுதாததை நான் எழுதி விடவில்லை.
சிலவற்றை எழுதி விட்டு இரண்டு மூன்று நாட்கள், பழைய வலியை, பட்டினியைப் புதுப்பித்துக் கொண்டு அவஸ்தைப் பட்டிருக்கிறேன்.எனக்குப் பிடித்தமான பழைய நண்பர்களை இதன் மூலம் திடீரென்று கண்டடைந்தேன்.சுகுமாரன் போன்ற நண்பர்கள் இதன் ஆரம்பத்தில் சில திருத்தங்கள் சொன்னார்கள். எல்லோருக்கும் என் நன்றி. கொஞ்ச நாள் கழித்து இது வேறு ரூபத்தில் தொடரக் கூடும் என்று சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன்.

Friday, October 2, 2009

இப்படம் நாளை கடைசி.....

சிவா தள்ளி நின்று கொண்டிருந்தான்.எங்கள் ஊரில் அது மிகப் பெரிய தியேட்டர். அதன் முதலாளி அப்பாவுக்கு நண்பர். அப்பா இப்போதெல்லாம் எங்கேயும் போவதில்லை. காலையில், பழக்க தோஷம் கரணமாக நாலரை மணிக்கு எழுந்து விடுவார். இன்னோரன்ன காரியங்களை முடித்து விட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினால், இருட்டு பிரியும் முன்பே ஆற்றுக்குப் போய் விடுவார். குறுக்குத் துறை முருகன் கோயிலில் இவர் போய்த்தான் சங்கம் பண்டாரத்தையே எழுப்புவார் என்று அவரது நண்பர்கள் கேலி செய்வார்கள். அவன் எழுந்து காலையில் சங்கொலி எழுப்பி வெளி நடை திறக்க வைப்பான்.அப்புறம் தான் திருப் பள்ளியெழுச்சி எல்லாம்.
தலைவரின் நூறாவது படத்திற்கு ஒரு மலர் தயாரிக்க வேண்டுமென்று அம்மன் சன்னதித் தெரு நா.சு.கா. சுடலை முத்து சொன்னான்.அப்படியே தயாரித்து அதை அந்த முதலாளியிடம் கொடுக்கும் போது நான் இன்னார் மகனென்று சொன்னேன்.அவர், ஏய் கெடுத்தியெ கதைய, இது ஒங்க கொட்டகைல்லாப்பா என்று சிரித்துக் கொண்டே சொன்னார். என் படிப்பு, மார்க் விவரமெல்லாம் கேட்டார். அப்போது நான் மறுபடி நன்றாகப் படிக்க ஆரம்பித்திருந்தேன். சரி, படிப்பை விட்ராதியும், அப்பாவைல்லாம் கிட்டமுட்ட கண்ணிலயே காணலையே, வரச் சொல்லும்.பாக்கியத்துக்கு கல்யாணம் வச்சுருக்குன்னு சொல்லுங்க, ரொம்ப சந்தோஷப் படுவார் தம்பி என்றார்.உலகமே கைக்குள் வந்து விட்ட உணர்ச்சி அன்று.அந்த அபாக்கியவதி சட்ட பூர்வ வாரிசு இல்லை.
நீரும் நெருப்பும் படத்திற்கு முதலாளி ஊரில் இல்லை. டிக்கெட் கிடைப்பது சற்று கஷ்டமாயிருந்தது. சிவா அன்று தானும் முதல் காட்சிக்கு வருவதாகச் சொன்னான்.பொதுவாக அவன் அப்படி வரமாட்டான். நாங்கள் சொன்னோம், சரி அப்ப படம் அவ்வளவுதான் கூவீரும், என்று. நல்ல கூட்டமிருந்தது. மேனேஜர் உனக்கு வேணும்ன்னா சொல்லு, பெஞ்சு டிக்கெட்டில போய் உக்காந்துக்கோ. ஹை கிளாஸ் டிக்கெட்டெல்லாம் கேக்காத, ஐயா ஊரில இல்லை, என்று கை விரித்து விட்டார்.சரி இரண்டு டிக்கெட் குடுங்க என்றேன்.ஏய் உனக்கே டிக்கெட் இல்லை, சும்ம நீயா போய் இருக்கிற பெஞ்சுல உக்காரு,என்றார். சிவாவிடம் சொன்னேன். ஏல நாம பெஞ்சுல உக்காந்து படம் பாத்தா ராசி கிடையாதுல என்றான். ஏன் காவல்காரன் பாக்கலியா என்றேன்.அது ப்ளாக் அண்ட் ஒயிட்டுரா என்றான்.
அவன் சொல்லுகிற செண்டிமெண்டெல்லாம் ஆச்சரியமா இருக்கும்.அப்போதுதான் அவர், சைக்கிள் கேட் வழியாக தியேட்டர் உள்ளே போனார்.சிவா அந்தா அவங்களைக் கூப்பிடு என்றான். நான் அண்ணாச்சி, அண்ணாச்சி என்றேன்.காக்கி சட்டை போட்டு வேஷ்டி கட்டி இருந்தார்.நல்ல வழுக்கைத் தலை. என்னடா என்றார் அதற்குள் சிவா அருகில் வந்திருந்தான்.ரெண்டு சோஃபா டிக்கெட் வாங்கித் தாங்க என்றான்.அதே சமயம் முட்டி மோதி பெஞ்சு டிக்கெட் எடுத்து வந்த பிச்சுமணி சொன்னான், க்கோவாலு வா ஏன்ட்ட டிக்கெட் இருக்கு, ஏம் மடியில உக்காந்து பாரு, சோஃபா மாதிரி இருக்கும் என்று. அவர் ஒன்றுமே சொல்லாமல் உள்ளே போய் விட்டார். சிவா தள்ளிப் போய் நின்றான். அவனிடம் போய் என்ன, நான் பெஞ்சுக்கு போயிரவா என்றேன். பேசாம இருல, கண்டவன் கூடல்லாம் சாவாசம் வைக்காதல, என்றான். அவனுக்கு பிச்சுமணி பேசியது பிடிக்கவில்லை.
ஐந்து நிமிடம் ஆகியிருக்கும், அவர் வெளியே வந்து, என்னை கையைக் காட்டி கூப்பிட்டார்.இரண்டு டிக்கெட்டைக் கொடுத்தார் நான் பணம் தருவதற்குள் மறுபடி உள்ளே போய் விட்டார்.சிவா, வா என்றான். `’பணம்.....’’ என்றேன், அதெல்லாம் வாங்க மாட்டாங்க, பேசாம வா என்று ஒரு டிக்கெட்டை மட்டும் என்னிடம் கிழித்துக் கொடுத்து விட்டு வேகமாகப் போய்விட்டான்.எனக்கு கோபமாய் வந்தது.நாங்கள் தனித் தனி சீட்டில் உட்கார்ந்துதான் பார்த்தோம். நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.அவனுடன் அருகருகே உட்கார்ந்து பார்த்த கலர்ப் படம் எதுவும் ஃபெயிலியரா ஆகியிருக்கா என்று. படம் நன்றாயில்லை. இடைவேளையில், மாடி வெராண்டாவில் நின்று கொண்டிருந்த என்னருகே வந்தான். போப்பா, ஆனந்தன் கூட அழகான ஸ்வார்ட் ஃபைட் இருக்கும்ன்னு பார்த்தா, அவனைக் கேலிக் கூத்து பண்ணீட்டாரே உங்க ஆளு என்றான். ஏன், உங்க ஆளு இல்லையா என்றேன்.அவன் மீதிருந்த கோபம் போய் விட்டது.
கீழ போய் வா கலர் குடிப்போம் இங்க கூட்டமாருக்கு என்று தரை, பெஞ்ச் டிக்கெட் அருகிலுள்ள ஸ்டால் பக்கம் போனான். அங்கே அந்த வழுக்கைத் தலை ஆள் படு சுறு சுறுப்பாக முறுக்கு வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தார்.கூட்டம் உனக்கு எனக்கு என்று ஐந்து பைசாவும், பத்து பைசாவுமாக நீட்டிக் கொண்டிருந்தது. எட்டணா கொடுத்து ஒரு முறுக்கு என்பவர்களையும் அதை வாங்கிப் போட்டு, மீதமும் முறுக்கும் கொடுத்து வேகமாக சமாளித்துக் கொண்டிருந்தார்.சிவா மறு படி வா, மேலே போய் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று பதிலுக்கு காத்திராமல்ப் போய் விட்டான். நான் அவனை படம் முடியும் வரை பார்க்கவில்லை, கலரும் குடிக்கவில்லை. படம் முடிந்து வருகையில் மேனேஜர் பார்த்தார், ஏய் ஏது டிக்கெட் என்று கேட்டார். நான் சொன்னேன். யாரு முறுக்கு போடுகிறவரா குடுத்தார், என்று கேட்டுக் கொண்டே அவரருகே நின்ற சோஃபா டிக்கெட் கொடுப்பவரைப் பார்த்தார். அவரிடம் யாருய்யா உம்ம சகலனா என்றார். அவர் ஆமாய்யா, ஒரு நாளும் கேக்க மாட்டாரு, இந்த தம்பிக்கின்னு சொல்லலையே என்றார். நான் ஏதோ வில்லங்கம் போலிருக்கு என்று கூட்டத்தோடு கலந்து தியேட்டரை விட்டு வெளியே வந்து விட்டேன்.ஒரே எரிச்சலாய் இருந்தது.
சிவாவைப் புரிய முடியவில்லை. சிவா என்னை விட மூத்தவன்.நான் பி எஸ் சி முடித்த பின்னும் அவன் பி.ஏ. வில் பாக்கி வைத்திருந்தான்.அவன் அப்பாவுக்கு சொந்தமான சிறிய ஓட்டல் இருந்தது. அதை இப்போது கவனித்துக் கொள்கிறான்.அவனது தம்பி எனது வகுப்புத் தோழன்.அவன அவனது அம்மா தாத்தா வீட்டில் வளர்ந்தான்.அவன் சிவாவின் அம்மா ஜாடையில் இருப்பான்.சிவா அப்பா ஜாடை.சிவா வீட்டில் எல்லா இசைக் கருவிகளும் இருக்கும். வயலின், மிருதங்கம்., வீணை, புல் புல் தாரா.சிவா வாய்ப் பாட்டு படித்தவன். அவன் வீட்டில் இருந்து அந்த இசைக் கருவிகளைத் தட்டிக் கொண்டிருப்போம். புல் புல் தாராவில், ‘அன்று வந்ததும் இதே நிலா....’ பாட்டு வாசிக்க சிவா சொல்லித் தந்தான் அதற்கென்று சினிமா பாட்டுப் புத்தகம் போல் ஒரு புத்தகம் வரும். ஐம்பது பைசா. ஜங்ஷன் கண் கண்ணாடிக் கடையில் மட்டும் அவை கிடைக்கும். அங்கேதான் இசைக் கருவிகளும் கிடைக்கும். அது என்ன காம்பினேஷனோ. ஜெனித் ஆப்டிகல்ஸ், கிரசெண்ட் ஆப்டிகல்ஸ் கடைகளில் இவை கிடைக்கும். அதில் பாடலை அசை பிரித்து அதற்கு மேல் எண்கள் எழுதியிருக்கும்.புல் புல் தாரவில் அதே போல் எண்கள் உள்ள ரீடை அமுக்கினால் பாட்டை வாசிக்கலாம்.
எனக்கு அந்த ஒரு அடி மட்டும் தெரியும்.அதெற்கெல்லாம் ஞானம் வேணும்லெ என்பான் சிவா. உண்மைதான். அவன் அம்மாவோ அதெல்லாம் இல்ல ராசா பழகுனா வந்துட்டுப் போது. நீ மட்டும் என்ன கச்சேரி பண்ணுற வரைக்கும் வந்துட்டு ஒங்க அத்தைக்கி பயந்து பாட்டை விட்டுட்டியெ என்று சிரிப்பாள். இதைச் சொல்லும் போது அவன் சித்தி, எங்கிருந்து வருவாளோ அவள், சிரிப்பாய் சிரிப்பாள்.சிவா கோபமாய் வெளியேறி விடுவான்.அந்த சித்தி அழகாய் இருப்பாள். சுருண்ட முடி,மூக்குத்தி போட்டிருப்பாள். அவள் என்றாவது அதைக் கழற்றி வைத்திருந்தால், போ சித்தி உடனே மூக்குத்தி போட்டுட்டு வா என்பான் சிவா.அவ்வளவு பொருத்தமாய் இருக்கும்.சிவாவின் அம்மா பெரிய மூக்குத்தியாக போட்டிருப்பாள். ஒங்க அம்மாட்ட அந்த வைரத்தை தரச் சொல்லேன் என்பாள் சித்தி. இந்தா வச்சுக்கயேன் என்பாள் அவன் அம்மா. அவன் அம்மா மதியச் சாப்பாட்டுக்கு முன் தான் குளிப்பாள். தணிவான் வீடு. பட்டாசல் இருட்டாய் குளுமையாய் இருக்கும்.காலையிலிருந்து வெற்றிலை போட்ட வண்ணமிருப்பாள்.பக்கத்திலெயே சாறு துப்ப வெண்கல சாளஞ்சி. அது பளபள வென்று விளக்கி இருக்கும். சட்டை அணிந்திருக்க மாட்டாள். வெறும் மல்பாடி போட்டு தூணில் சாய்ந்த மாதிரிக்கி உட்கார்ந்திருப்பாள்.
மத்தியான சாப்பாட்டுக்கு,அவன் அப்பா வந்து விட்டால் சகல சத்தமும் அடங்கி விடும்.சிவா அமைதியாய் வெளியேறி விடுவான். அவர் தலைவாசலுக்குள் நுழையும் வரை சிகரெட்டைப் புகைத்த படியே வருவார்.வாசனையே சொல்லி விடும் அவர் வந்து விட்டார் என்று. அவர் வந்த சிறிது நேரத்தில் சிவாவின் அம்மா குளிக்க எழுந்து விடுவாள்.நான் அவன் அப்பா வந்தது தெரியாமல் ஒரு நாள் ரேடியோவில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன். சித்தி தான், ஏய் சோமு இங்க வா ஒரு சின்ன உபகாரம் செய்யனும் என்று அழைத்தாள். அவள் வீடு அடுத்த வீடு.அங்கே போனதும் பேசிக் கொண்டே அடுப்படி வேலையை கவனித்துக் கொண்டிருந்தாள். ஒரு கட்டு வீடு அது.என்னமோ சொன்னீங்களே என்றேன். சொன்னாக சோத்துக்கு உப்பில்லைன்னு.காலேஜ் படிக்கெ விவரம் தெரியலையே என்றாள். உண்மையிலேயே தெரியவில்லை. சிவா கெளம்புனா நீ, அவன் சேக்காளி மட்டும் அங்க இருக்கலாமா, என்றாள்.அப்போது உள்ளூரின் பிரபல பாடகரின் மனைவி, சித்தி வீட்டுக்கு வந்தாள்.வாங்க மதினி என்று சித்தி வரவேற்றாள். என்ன ஜோலி நடக்கு, என்றபடி உள்ளே வந்தவள், இது யாரு தம்பி என்று சிரித்த படியே கேட்டாள்.இவனா சிவா சேக்காளி, சொள்ள மாடன் கோயில் தெரு என்றாள்.
நான் கேட்கும் முன்பே சித்தி சொன்னாள் இதான் சிவாவோட அத்தை. இவக கிட்ட தான் சிவா பாட்டுச் சொல்லிக்கிட்டான் என்றாள். ஆகா இப்படி அததையக் கண்டா சிவா வெட்கப் பட்டான் என்று தோன்றியது.பத்மினி பிரியதர்சினி என்று ஒரு நடிகை உண்டு அவளைப் போலிருந்தாள் அத்தை. சொன்னேன். பத்மினி என்று எடுத்துக் கொண்டார்கள் போல.இவன் சிவா மாதிரி கிடையாது போல இருக்கெ, நான் என்ன பத்மினி மாதிரியா இருக்கேன் என்று சிரித்தாள்.எனக்கு பாட்டு சொல்லித் தாங்க அப்படீன்னா என்றேன். எங்க எதாவது பாடு பார்ப்போம் என்றாள். பாட்டு வரவில்லை.பாடு பாடுன்னா பாட்டுக்காரனும் பாட மாட்டான், தானே பாடுனா தலை தெறிக்கப் பாடுவான்கிற மாதிரி, கேட்டா யாருக்கும் வராது. உன் குரல்லாம் ஒடஞ்சி போச்சே, வேணும்ன்னா என்னான்னு தெரிஞ்சுக்கலாம், என்று சொன்னாள்.சித்தியிடம் எதோ குசுகுசுவென்று பேசி விட்டு அகன்றாள். போகும் போது தம்பி வீட்டுக்கு வாங்க, சொள்ள மாடன் கோயில்த் தெருன்னா யாரு வீடு, என்றாள். சொன்னேன். அப்படியா அப்ப அவுகளூக்கு தெரிஞ்சுருக்கும் என்ற படியே போனாள். நான் அவளது இடுப்பு மடிப்பையே பார்த்துக் கொண்டிருந்தேன். சித்தி சிரித்தாள், பாத்தது போதும், சாப்பிடுதியா சமையல் ஆயிட்டு என்றாள். நான் வெட்கத்துடன் கிளம்பினேன்.
நீரும் நெருப்பும் சினிமா போய் வந்த அன்று மாலை சிவா வீட்டுக்கு வந்தான்.வா ஜங்ஷன் பாலஸ்டி வேல்ஸ் தியேட்டரில் பணக்காரக் குடும்பம் போட்டிருக்கான்.ரெண்டு பாட்டு கேட்டுட்டு வரலம் என்றான். சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினோம். குமார வேலும் கூட வந்தான். அவன் வீடு சிவா வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி இருந்தது, ஸ்கூலில் என் கிளாஸ் மேட். பாலஸில் படம் பார்க்க சிவாவுடன் போவது ஒரு சுகம். அங்கே அவுட் பாஸ் என்று தருவார்கள். பாதிப் படத்தில் அவுட் பாஸ் வாங்கிக் கொண்டு வெளியே வரலாம் பக்கத்து சுல்தானியா ஓட்டலில் சாப்பிட்டு விட்டு மறுபடி படம் பார்க்கலாம். அங்கே எப்போதும் பழைய படம்தான் போடுவார்கள். மாலைக் காட்சி ஏழு மணிக்கித்தான் ஆரம்பிப்பார்க்ள். சவுண்ட் சிஸ்டம் பிரமாதமாக இருக்கும்.பணக்காரக் குடும்பம் படத்தில் வருகிற இது வரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா.... பாட்டு ரொம்பப் பிடிக்கும் எனக்கும் சிவாவுக்கும். உண்மையில் அது காதலிக்க நேரமில்லை படத்துக்காக ஒலிப்பதிவு செய்யப் பட்ட பாடலாம்.மலரென்ற முகமின்று சிரிக்கட்டும் பாடல் பணக்காரக் குடும்பம் படத்திற்காக பதிவு செய்யப் பட்டதாம். இல்லைன்ன உங்க ஆளு படத்துல இப்படிப் பாட்டு வருமாலெ என்பான் சிவா. இந்தா வந்துருக்கில்லா என்பேன் நான். ஏன், ரகசியம் பரம ரகசியம் பாட்டு பெரிய இடத்துப் பெண் படத்தில் வரலையா என்றால் அது வேற இது வேறடா ஒனக்குப் புரியாதும்பான்.
அந்தப் பாட்டு முடிந்ததும், வா சாப்பிட்டுட்டு வருவோம், என்று கிளம்பினான். இப்படம் நாளை கடைசி என்று வாசலில் உள்ள போஸ்டரின் குறுக்காக சிறிதாக ஒட்டிக் கொண்டிருந்தாகள். சுல்தானியா ஓட்டலில் பிரியாணி நன்றாய் இருக்கும். ஆனால் மத்தியானம் தாண்டா பிரியாணி சாப்பிடனும். ராத்திரி ரொட்டி தாண்டா என்று ரொட்டியே ஆர்டர் கொடுத்தான்.ஓசியில சாப்பிடதுக்கு என்னதுன்ன என்ன எதையாவது சொல்லு என்றேன்.அப்படிச் சொல்லாத, நீ வேணூம்ன்னா பிரியாணி சாப்பிடு என்றான். வேண்டாம் என்றேன்.சாப்பிட்டு விட்டு வெளியே வந்ததும் இன்னம படம் போகணுமா என்றான்.வேண்டாம் வீட்டுக்குப் போகலாம் என்றேன்.
இரு ஒரு சின்ன வேலை அந்தா மீனாட்சிபுரத்தில ஒரு ஆளைப் பாத்துட்டுப் போயிருவோம், அம்மா கொஞ்சம் பணம் கொடுக்கச் சொல்லி குடுத்து விட்டுருக்கா, முதல் சந்து தான், என்றான்.
சரி என்று போனோம். அது இருட்டாய் இருந்தது. ஏதோ மூத்திரச் சந்து போல இருந்தது. நீங்க ரெண்டு பேரும் இங்கயே ரோட்டில நில்லுங்க. என்று போனான்.நான் குமார வேலிடம் கேட்டேன். இங்க யாரு இருக்கா, என்று. சிவா கிட்ட கேட்டிராத, அவன் அம்மாவோட முதல் மாப்பிள்ளை, முறுக்கு வியாபாரம் பண்றாரு. தியேட்டருக்கெல்லாம் முறுக்கு இவருதான் போடுதாரு, என்றான். அவருக்கு குழந்தைகள் இல்லை, இவனிடம் ரொம்பப் பிரியம், என்றான்.அதற்குள் இரண்டு பேரும் நாங்கள் நின்ற வெளிச்சத்துக்கு வந்தார்கள். சைக்கிள்ளயா வந்தீங்க பாத்துப் போங்கடே என்றார். இப்போது நல்ல வெள்ளை சட்டை அணிந்திருந்தார்.வேஷ்டியும் சட்டையும் நன்றாக வெளுத்துத் தேய்த்திருந்தது. சிவா அவரிடம் பதிலேதும் சொல்லாமல், சைக்கிளில் ஏறினான்.மூன்று பேரும் டவுண் வரும் வரைக்கும் பேசவே இல்லை. என் மூளைக்குள் ‘இப்படம் நாளை கடைசி’ என்று, என் குரல் வாசித்துக் கொண்டே இருந்தது.

Wednesday, September 23, 2009

எமது அடுத்த தயாரிப்பு.....
மூக்கம்மாள், பெயருக்கேத்த மாதிரி, அழகான மூக்குத்தி அணிந்திருப்பாள். வீட்டில் பெண்கள் அது நல்ல விலையுள்ள மூக்குத்தியாகத் தான் இருக்கும் என்று பேசிக் கொள்ளுவார்கள்.வித விதமான சேலைகள் கட்டி வருவாள். அவளுக்கென்ன, வெளுக்கப் போடுகிற யார் சேலையையாவது உடுத்திக் கொள்ளவேண்டியதுதானெ என்றும் பேசிக் கொள்ளுவார்கள். யாரு வீட்டு உருப்படி, ஜவுளிக் கடை சங்கர பாண்டிய முதலியார் வீட்டு அழுக்கா, என்று கேட்பார்கள். சிரித்துக்கொள்ளுவாள். முன் கொசுவம் வைத்துச் சேலை கட்டி இருப்பாள். சட்டை அணியமட்டாள். ஆனால் பச்சை குத்திய இடது தோளை மட்டுமே பார்க்க முடியும். வேறு எதுவும் தெரியாது.
ஆறு மாததுக்கு அதாவது, ஒரு பூவுக்கு ஒரு தடவை அரைக் கோட்டை நெல் கூலி வாங்க மூக்கன், அவள் கணவன் வருவான்.அவ்வப்போது அழுக்கு எடுக்கவும் வருவான்.இதுக்கு மட்டும் வா, மூனு மாசத் துணி அந்தா அங்க மாடாக்குழியக் காத்துட்டு கிடக்கு,வண்ணாத்திய வரச் சொல்லு என்று பெண்களில் யாராவது சொல்லுவார்கள். மாத விடாய்த் துணிகளை, ஒரு பொட்டலமாக சேலையில் சுற்றி, கக்கூஸில் ஒரு மாடக்குழியில் வைத்திருக்கும்.அதை பெரும்பாலும் மூக்கம்மாவின் இரண்டாவது மகள் எடுத்துப் போவாள். மூத்த மகள் ஒருத்தி எடுக்கும் போது அதிலிருந்த தேள் கொட்டி விட்டது. அந்த வாடைக்கு சர்வ சாதரணமாகப் பூரான் இருக்கும்.தேள் அபூர்வமாக இருந்தது.பாவம் துடித்துப் போய் விட்டாள்.

அப்பா, போத்தி ஓட்டலில் சர்வராக வேலை பார்க்கும் சுப்ரமணியனைக் கூட்டி வரச் சொன்னார். அவன் நன்றாக ஹோமியோபதி வைத்தியம் பார்ப்பவன். ஆளும், கட்டு மஸ்தான உடலுடன் அழகாக இருப்பான்.அங்கே சர்வர்கள் யாரும் சட்டை அணியக் கூடாது. வேஷ்டியை மறைத்து ஒரு துண்டு, பூனூல், இதுதான் யூனிஃபார்ம். சுப்ரமணியன் எப்போதும் கட் அண்ட் ரைட்டாக இருப்பான். அன்றைய ஸ்பெஷலை ஒப்பிப்பான் எது வேண்டுமோ அதை வேகமாகக் கொண்டு வருவான். வளவள பேச்செல்லாம் வைத்துக் கொள்ளமாட்டான்.அவன் தேள்க் கடிக்கு ஓமியோபதி மருந்து தருவான் அவன் வந்து நாடி பிடித்துப் பார்த்துவிட்டு மாத்திரைகள் கொடுத்தான். அடித்துப் போட்டிருந்த தேளைப் பார்த்து அய்யய்யோ நல்ல ராஜாத் தேளால்லாக் கொட்டியிருக்கு, என்று அரைமணி நேரம் இருந்து வெவ்வேறு மருந்தைக் கொடுத்தான்.அப்பாவிடம், பண்ணையாரே போத்தியிடம் சொல்லீருங்க நேரமானதுக்கு திட்டுவார், அப்புறம் யாருக்கு வைத்தியம்ன்னு சொல்லவேண்டாம், என்று கேட்டுக் கொண்டான்.அவன் சீக்கிரமே மிலிட்டரியில் வேலை கிடைத்துப் போய் விட்டான். இருந்திருந்தால் கடை முதலாளிக்கு உறவாகியிருப்பான்.

அம்மாசி பவுர்ணமி என்றால் சாப்பாடு வாங்கவும் மூக்கம்மாளின் இரண்டாவது மகள்தான் வருவாள்.அவள் அதிகம் பேசமாட்டாள்.மூத்தவள் நல்ல சிகப்பு. இரண்டாமவள் மூக்கம்மாவை உரித்து வைத்த மாதிரி இருப்பாள்.மூக்குத்தியணியாமலேயே மூக்குத்திக்குப் போட்ட துவாரம் பெரிதாக, மூக்குத்தி மாதிரியே இருக்கும்.மூக்கம்மாவிடம் இது பற்றி வீட்டுப் பெண்கள் கேலியாகச் சொல்லும் போது ஆமா ஆச்சி, பெரியவளுக்கு கல்யாணத்துக்கே எல்லாம் சரியாப் போச்சு, இவளுக்கு இன்னமதான் சேக்கணும் இல்லென்னா, ஏம் மூக்குத்திய போட்டு அனுப்ப வேண்டியதுதான். என்பாள் சலிப்புடன்.மூக்கம்மா வெள்ளை கொண்டுவந்தால் எப்படியும் ரெண்டு துணி மாறி இருக்கும். குறி உங்க வீட்டு இது மாதிரித் தானே இருக்கு என்பாள். ஒவ்வொரு வீட்டுக்கும் பிரத்யேக குறி இருக்கும்.வண்ணான் மை என்று அப்போது கடையில் கிடைக்கும். ஒரு அணா இருக்கும். பழைய ஊசி மருந்து பாட்டிலில் நிரப்பி வண்ணான் ஒருவன் பொதி சுமக்கிற படம், ஒரு பாவமான சிகப்புக் கலரில் அச்சடித்திருக்கும்.அதை வைத்து துணிகளில் குறி இடுவார்கள். வெளுத்ததும் நல்ல ரோஸ் கலரில் மாறிவிடும். அழியவே அழியாது.ஒரு சின்னக் கோடு. அதன் மேல் ஒரு புள்ளி, அல்லது இரண்டு மூன்று புள்ளிகள்.ஒரு பெருக்கல் குறி அதில் ஒரு புள்ளி, இரண்டு புள்ளிகள். Iஇப்படி ஒவ்வொரு வீட்டுத் துணிக்கும் ஒவ்வொரு விதமாகப் பல குறியீடுகள். கடையில் கிடைக்கும் மை இல்லையென்றால் கடுக்காயை ஊற வைத்து, அதை நைத்து அதன் சாற்றைத் தொட்டு குறி போடுவார்கள். அது கறுப்பாக இருக்கும்.

பெரிய அண்ணன் மகன் பெரிய கந்தனுக்குச் சாளவாய்.எப்போதும் எச்சில் கடை வாயிலிருந்து லேசாக ஒழுகிக் கொண்டிருக்கும். சாளவாய் வடிக்கிற குழந்தைகள் பிற்காலத்தில் நன்றாகப் பேசும் என்பார்கள்.அவன் அப்படி ஒன்றும் பேசவும் இல்லை, படிக்கவும் இல்லை.காச நோய் வந்து பாவம் சின்ன வயதிலேயே செத்துப் போனான்.அவனுக்கு வண்ணாத்தி கையால் எட்டு வீட்டுச் சோறு ஊட்டி அவள் முந்தானையால் துடைத்தால் சாளவாய் ஒழுகுவது நின்று விடும் என்று யாரோ சொல்லக் கேட்டு பெரிய மதினி, ஒரு அம்மாவாசைக்கு சோறு வாங்க வந்த மூக்கம்மாவிடம் சோறூட்டச் சொன்னாள்.மூக்கம்மா, அப்ப உங்க வீட்டுச் சோற்றை அப்புறமாப் போடுங்க, அதில உங்க வீட்டுச் சோறு சேரக் கூடாது என்றபடி அவள் பாத்திரத்தில் கிடந்த பல வீட்டு உணவுகளை ஒரு கும்பாவைக் கேட்டு வாங்கி அதில் போட்டு பெரிய பெரிய கவளமாக ஊட்டினாள். பையனுக்கு ருசியாய் இருந்தது போல, அவுக் அவுக்கென்று தின்றான்.மூக்கம்மாவின் கடைசி மகள், பத்து வயது போல இருக்கும், வட்ட முகம், பாவாடை சட்டை போட்டிருந்தது.அவள் அம்மாவினருகே நின்று கந்தன் சாப்பிடுவதைப் பார்த்து சிரி சிரியென்று சிரித்தது.வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்கும் போது அதன் முன்கையின் செம்பட்டை முடி மினுங்கியது.
மூக்கம்மா அதைச் சத்தம் போட்டாள்.சாப்பிடற புள்ளையக் கண் வைக்காத மூதேவி என்று.இன்னும் கொஞ்சம் சாப்பிடுதியா ராசா என்று கேட்டதற்கு கந்தன் சரியென்று தலையாட்டினான். அம்மா, போதும் போதும், ஒரு சாஸ்திரத்துக்கு சாப்பிடனும் அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு மூக்கம்மா, ஓஞ்சேலைய வச்சு வாயயைத் தொடச்சு விடு, என்றாள். மூக்கம்மா அழகாக நறுவிசாகத் தொடைத்து விட்டாள்.ஆச்சி இந்த மாசம் எண்ணையே தரலையே, இருந்தா குடுங்க இன்னா இந்தா மூதேவி புள்ளைய பாருங்க, தலை எப்படி காடாச் செம்பட்டையா கெடக்கு, துறைக்கி வர்ற புள்ளைக்கி கூட இப்படி செம்பட்டை மயிரா இருக்காது என்று சொல்லி நாக்கை கடித்துக் கொண்டாள்.ஆற்றுத் துறையில் வெயிலில் நின்று துணி துவைக்கிறதைச் சொல்கிறாள் என்று புரிய நேரமாயிற்று.ஐயா கறில்லாம் சாப்பிடுவாக போலெ இருக்கு என்றாள், மூக்கம்மாள் திடீரென்று என்னைப் பார்த்து.
கொஞ்ச நாளைக்கு முன் புதிதாகத் திறந்திருந்த, ராசையா நாடாரின் ஆபிரகாம் ஓட்டலில் ரொட்டி சப்பிடப் போயிருந்தேன். அதற்கு முன்னலெல்லாம் வண்டிப் பேட்டை சாய்பு கடைதான்.அதுவும் பழனியும் நானும் போய் இரண்டு ரொட்டியை ஆளுக்கு ஒன்றாகத் தின்று விட்டு வருவோம். சால்னாவில் கறியெல்லாம் கிடையாது. அதைத் தின்று விட்டு வந்தே ரகசியமாய் புஜத்தை மடித்து பலம் கூடியிருக்கா என்று பார்த்துக் கொள்ளுவோம்.ஆபிரகாம் ஓட்டல் என்று கழுவேற்றி முடுக்குத் தெருவில் ஆரம்பித்திருக்கிறார்கள் என்று இஞ்சிக் குமார் அண்ணாச்சி சொன்னார். என்னப்பா வண்டிப்பேட்டை, ரொட்டியா அது, வரட்டு வரட்டுன்னு. இங்க போய் பரோட்டா சாப்பிட்டுப் பாருங்கப்பா என்றார். அதிலிருந்து அங்கே போவோம்.இரண்டு ரொட்டியும் ஆட்டுக்கறி சால்னாவும் 90 பைசா தான்.சுக்கா வருவல் தனியாக ஐம்பது பைசா.அதெல்லாம் சாப்பிடமாட்டோம். அன்று அங்கே சாப்பிடும் போது மூக்கனின் மகன் வந்து என்னருகே உட்கார்ந்து ஆர்டர் பண்ணினான். இலையெல்லாம் போட்டு பரிமாறி சாப்பிட ஆரம்பிக்கும் போது தான் என்னைக் கவனித்தான். ஐயா வாங்க நீங்களா, என்ன வெறும் புரோட்டா தின்னுகிட்டு இருக்கீங்க, ஏய் இங்க ஒரு வருவல் குடு என்றான்.வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்கவில்லை.வருவல் பிரமாதமாக இருந்தது.அவனே பில்லை கொடுத்து விட்டான். அசடு வழிய வெளியே வந்தேன்.அவன் தனியே லாண்டரி வைத்திருக்கிறான்.அவன் தான்- சின்ன மூக்கன் அவன் பெயர்- சொல்லியிருக்க வேண்டும் மூக்கம்மாவிடம்.நான் வெளியே ஓடி வந்து விட்டேன்.எங்கே, சின்னமூக்கன் காசு கொடுத்ததையெல்லாம் சொல்லி விடுவாளோ என்று பயம்.

கொஞச காலத்தில் வயலெல்லாம் போர்ய் விட்டது, குந்தித் தின்னா குன்றும் காலியாயிரும் என்கிற கதைதான்.நெல்லுக்கு வெளுக்கும் வண்ணான் வரவே இல்லை.துணிகளில் அவன் போடுகிற குறி மறந்தே விட்டது. ‘’மதினிக்கு வந்த சீக்கு, பல ஔஷதங்கள் கொடுத்தும் குணத்துக்கு வராமல் இறந்து போனாள்’’.துஷ்டி வீட்டில் மாத்துக் கட்டவும், பாடையை எடுத்துப் போகையில் கொஞ்ச தூரத்துக்கு மாத்து (சேலை)விரிக்கவும் வண்ணான் வரணும்.ஏற்கெனவே சாவுச் செலவுக்கே சங்காச்சியிடம் தான் அப்பா பணம் வாங்கி வரச் சொல்லியிருந்தார்.இப்போது என்னை தனியாக அழைத்து மூக்கன் வீடு தெரியும்லா அங்க போய் தாக்கல் சொல்லீட்டு வந்திருதியா, சீக்கிரம் போ அவன் துறைக்குப் போயிராமெ என்றார்.
மூக்கன் வீடு செக்கடித் தெரு என்கிற புகழேந்தித் தெருவில் இருந்தது.அதன் முகப்பில் நாலைந்து வண்ணார்கள் குடும்பம் இருந்தது. தெருவின் மத்தியில், காலிமனையில் ஒரு பழைய செக்கு உண்டு.அது அடியில் சாய்ந்து விழப்போவது போல் நிற்கும். அதன் உலக்கை (ஆளு நல்லா செக்கொலக்கை மாதிரி இருக்கான் என்று கனமான ஆட்களைப் பார்த்துச் சொல்லுவார்கள்) அந்தக் காலி மனையினை ஒட்டி தெருவில் கிடக்கும். அதன் மேல் எப்போதும் ஒரு ஆள் சோகமாய் அமர்ந்திருப்பார், பல் குத்திய படி. பம்மென்ற பரட்டைத் தலை, பூனூல். அவர் தான் எண்ணெய்ச் செட்டியாரின் கடைசி வாரிசு என்றார்கள்.

அதற்கெதிரேதான் கோயில்ப்பிச்சை சார் வீடு. அங்கே பதினோராம் வகுப்புக்கு, கணக்கு டியூஷன் படித்தேன். கடைசி மூன்று மாதம். நன்றாக கோச்சிங் தருவார்.பெயிலாக வேண்டியவன் கணக்கில் 76 மார்க் வாங்கி இருந்தேன், எஸ் எஸ் எல் சியில். அவருக்கு , தோள் மார்பு கை காலெல்லாம் ஒரே முடியாயிருக்கும். பட்டப்பெயரே மயிர் மாணிக்கம்.அவர் பனியனைக் கழற்றினால் ஒரு கூடை முடி அள்ளலாம் என்பாள் அவளது இரண்டாவது இளம் மனைவி.ஜங்ஷனிலிருந்து வருகிற போஸ்கோ ராஜிடம் தினமும் கூடை பின்னுகிற வயர்,முகப் பவுடர் என்று எதாவது வாங்கி வரச் சொல்லுவாள்.அவனுக்கு டியூஷன் ஃபீஸ் கிடையாது. டீச்சர் உத்தரவு.அவர் வீட்டுக்கு டியூஷன் படிக்கப் போகும் போது சொல்லுவார்கள்,எண்ணெய்ச் செட்டியார்களின் கடைசி வாரிசு அந்த சுபாவமான ஆள் என்று.

நான் மூக்கன் வீட்டுக்கு போன போது ஆள் அரவமே தென்படவில்லை. அடுப்படிப் புகை மட்டும் வீடு முழுக்கப் பரவி இருந்தது. தார்சாலில் நின்று மூக்கம்மா, என்று இரண்டு சத்தம் கொடுத்ததும், அது யாரு என்று அவளின் சின்ன மகள் வந்தாள். பாவாடை தாவணி, நன்றாக அலங்கரித்த முகம். பளிச்சென்று இருந்தாள்.கையில் ஒரு பூனைக் குட்டி. என்னைப் பார்த்து அது ம்யாவ் என்றது. அவளுக்கு என்னை அடையாளம் தெரிந்து விட்டது. ஐயா உக்காருங்க, யாருமே இல்லையே, துறையில நிப்பாகளே இப்ப, ஒங்க வீட்ல துணியே எடுக்கலையே நாங்க, என்று அடுக்கினாள். முகம் பூராவும் சிரிப்பு.நான் விஷயத்தைச் சொன்னேன்.அப்படியா சமாச்சாரம், என்று சொன்னவள் பூனைக்குட்டியை அங்கு ஏகத்துக்கும் கிடந்த அழுக்கு மூட்டைகள் மேல் செல்லமாய் எறிந்து விட்டு, இருங்க என்று வெளியே போனாள்.பூனை ஒரு சின்ன அலறலுடன் விழுந்து புரண்டது.எழுந்து வந்து என் காலடியில் உரசிக் கொண்டு நின்றது.அடுப்படியிலிருந்து இன்னொரு பெரிய பூனை ம்யாவ் என்றது. எனக்கு பயமாய் இருந்தது.
கையில் ஒரு காபித் தூக்குடன் வந்தாள்.அண்ணந்தான் கடையில நின்னுச்சு,சொல்லிருக்கேன் இந்தா வந்துரும்.காபி குடுக்கச் சொல்லிச்சு. டீக்கடையில வங்கினது தான். இந்தாங்க என்று தூக்குடன் நீட்டினாள்.ஐயோ, எங்கம்மா சோறு ஊட்டுனாகளே அதோட அம்மாவா, ஏன் என்ன செஞ்சுது,எங்க அம்மா மாதிரியே மூக்குத்தி போட்டிருப்பாகளெ என்று வாய் ஓயாமல் பேசியது.அடிக்கடி மாராப்பை ஒரு விரலால் தளர்த்தி மறுபடி இறுக்கிக் கொண்டாள், ஒரு மேனரிஸம் மாதிரி. தூக்குச் சட்டியோடு காபி குடிக்க திண்டாட்டமாய் இருந்தது.அதற்குள் சின்ன மூக்கன் வந்துவிட்டான்.ஐயா வாங்க போவோம் என்றான்.நான் பாதிக் காபியை கீழே வைத்து விட்டு கிளம்பினேன். பூனை அதைப் பார்த்து ஓடி வந்தது.அவள் அதை காலால் தள்ளி விட்டாள் இதைப் பூராவும் குடிக்கலையே என்றாள்.இல்லை தேடுவாங்க என்று கிளம்பினேன்.சற்றுத் தள்ளி வந்து திரும்பிப் பார்த்தேன், அந்தப்பெண், அந்த சின்னத் தார்சாலிலேயே நின்று கொண்டிருந்தது. அதற்குப் பின்னால் சுவரில், இவ்வளவு நேரமும் மறுபடி மறுபடி வாசித்துக் கொண்டிருந்த தந்திப் பேப்பர் விளம்பரம்.நானிலம் போற்றும் நான்காவது வாரம், மோகன் புரொடக்‌ஷன்ஸ் ஆசை முகம். மூன்று எம்ஜியார்,நின்று கொண்டிருந்தார்கள்.முழுப்பக்க விளம்பரத்தில் பாதியில் எமது அடுத்த தயாரிப்பு,எம்ஜி.ஆர், சரோஜா தேவி நடிக்கும் இன்ப நிலா. சீநி சோமுவின் அழகான டிசைன், படம் ஏதுமில்லாமல் வெறும் லெட்டரிங் மட்டும்.

Tuesday, September 15, 2009

சம்மதமில்லையென்றால் ஏது வழக்கு....


தற்செயலாகத் தான் அது நடந்தது. என் ஆயுளில் நான் ஆலங்கட்டி மழையைப் பார்ப்பது அதுதான் முதல் தடவை.வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை மத்தியானம். வீடு, ஓட்டு வெக்கையில் தகித்துக் கொண்டிருந்தது. அறை வீட்டில் சாமான்கள் ஒன்றும் இல்லை.எல்லாம் விற்றுத் தின்றாகி விட்டது.ஒன்றிரண்டு டிரங்குப் பெட்டிகள் இருந்ததன.ஒரு பழைய ஜாடி, பாரி கம்பெனி ஜாடி. முன்பு அதில் நல்லெண்ணை இருக்கும்.இப்போது ஒன்றும் இல்லை.அம்மாவுக்கு அதன் மேல் ஒரு பிரியம். காணாததற்கு, ஒரு முறை அபூர்வமாய் ஐ.எஸ். மாச்சாடோ பல்க்கிலிருந்து மண்ணெண்ணை கிடைத்து, அதை அதில் தான் நிரப்பி வைத்திருந்தோம்.நான் வேலைக்கு சேர்ந்த புதிது. நான் வேலை பார்த்த வங்கியில் கணக்கு வைத்திருந்த பெரிய மண்ணெண்ணை வியாபாரக் கடை அது. தற் செயலாக ஒரு ஃபோன் செய்தேன். ஒரு பெரிய பேரல் மண்னெண்ணை அனுப்பிவிட்டார்கள். அது வந்த பிறகு எனக்கு வேண்டாம், உனக்கு வேண்டாம், என்கிறார்கள். எங்களிடம் ஒரே ஒரு ஐந்து லிட்டர் டின் மட்டுமிருந்தது.பணமும் அவ்வளவாய் இல்லை. இருந்த பணத்திற்கு வாங்கி இந்த ஜாடியில் விட்டு வைத்தேன்.அம்மாவுக்கு அதில் சம்மதமே இல்லை. யாரிடம் கேட்டாலும், என்னடே நீ யாவாரம் பாக்கியா என்ன, என்று கேலி செய்தார்கள்.
பின் வீட்டு ரேவதி,என் பெயரைச் சொல்லி, அவங்க கஷ்டப் பட்டு கொண்டு வரச் சொல்லியிருக்காங்க, அன்னக்கில்லாம் தவியாத் தவிச்சவங்க இன்னக்கி வேண்டாம்ன்னு சாதாரணமாச் சொல்லுதீங்களே என்று சொல்லிக் கொண்டிருப்பது கேட்டது. அவள் அம்மாவைச் சத்தம் போட்டு பத்து லிட்டர் வாங்க வைத்தாள். அதற்குமே பணத்திற்கும்,பாத்திரத்திற்கும் கஷ்டப்பட வேண்டியதாய்த்தான் இருந்தது. மண்ணெண்ணை பேரலை மூன்று கால் சைக்கிளில் கொண்டு வந்தவன் ரொம்ப நல்ல மாதிரி, சார் ஏன் கஷ்டப் படுதீக, நானே ரெண்டு தெருவில் நல்ல விலைக்கி வித்துருவேன், என்றான்.நான் கடையில் சொல்லட்டுமா என்று கேட்டேன். நீங்களே எடுத்துக்கிட்டதாச் சொல்லுங்க, நான் பிறாமணக் குடித் தெருவில் பத்து நிமிஷத்தில் வித்துருவேன், எனக்கும் ரெண்டு காசு கிடச்ச மாதிரி ஆச்சு என்று போய் விட்டான்.நான் ரேவதியிடம் போய் நன்றி சொல்ல புறவாசல் போனேன்.பின் வீட்டு குச்சுகள் ஒன்றில் அவள் தன் அம்மாவுடன் வாடகைக்கு இருந்தாள்.ராஜபாளையத்தில் அவளது அப்பா மில்லில் வேலை செய்து வந்தார்.அவள் சர்வீஸ் கமிஷன் தேர்வில் பாஸ் செய்து, பாளையங்கோட்டையில் ஒரு அலுவலகத்தில் பணியற்றினாள்.இந்தப் பெண் பிள்ளைகள் எப்படி பாஸ் பண்ணி விடுகிறது என்று நினைத்திருக்கிறேன்.அவள் மட்டும் இல்லை இன்னொரு சிறிய வீட்டில், தேவியும் காளியம்மாளும் இருந்தார்கள். அவர்களும் அதே ஆஃபீஸ்தான், அதே ஊர்ப் பக்கம்தான். ரேவதி மூலமாகத்தான் அவர்கள் இங்கே குடி வந்தார்கள்.
ரேவதி ஒல்லியாய் இருப்பாள்.தீர்க்கமான முகம்.நல்ல வெள்ளை நிறம். தலை முடி, அவ்வளவு இருக்காது.மார்பும் சிறியது.ரெடிமேட் பாடி அணியமாட்டாள். அவள் தங்கை தைத்ததைத் தான் அணிவாள்.அவள் தங்கை ஊரில் அப்பாவுடன் இருந்தாள்.புறவாசலில் ஒரு குளியலறை உண்டு.அங்கே உள்ள அடிபம்பை, முன் வாசல் உள்ள பம்புடன் இணைத்திருப்பார்கள். தண்ணீர் அடிக்க, சற்று சிரமமாய் இருக்கும்.பெரும்பாலும் ஆண்கள் எல்லாரும் முன் வாசல் பம்பில் குளிப்போம். அதற்கு மறைப்பெல்லாம் கிடையாது. உள்ளாடைக்கு மேல் துண்டு கட்டிக் கொண்டு குளிப்போம். தலை துவட்டுகிற போது ஜட்டி, அல்லது அண்டிராயர் மட்டும், அவசர அவசரமாக துவட்டுவேன். நான் குளிப்பது எப்போதும் எட்டேமுக்கால் வாக்கில் இருக்கும்.ரேவதி மற்றும் பெண்கள் குளிப்பது பாத் ரூமில்.ஆனால் அவர்கள் துணி துவைக்க முன் வாசல் பம்ப்பே வசதியாய் இருக்கும்.என் அண்ணன் குழந்தைகள் யாரிடமாவது, உங்க சித்தப்பா குளிச்சாச்சா என்று கேட்டுவிட்டு, ரேவதி ஒரு வாளி துணியோடு வருவாள்.என்னிடம் நேரடியாக எதுவும் பேசியதில்லை.நானும், பேசியதில்லை.வாடகை கொடுக்கும் போது மட்டும், அவங்க, உங்க சின்னமகன், இருக்காங்களா என்று அம்மாவிடம் கேட்பாள். பெரும்பாலும் காலை வேளையில்,நான் இருக்கும் சமயத்தில் தான் தருவாள். அவள் பழக்கமே,தேவிக்கும், காளியம்மாளுக்கும்.அம்மா அதை வாங்கி என்னிடம் கொடுத்து விடுவாள்.ஏதாவது செலவுக்கு, கேட்பதென்றால், தயக்கத்துடன் தான் கேட்பாள். சமயத்தில் ‘வள்’ளென்று விழுந்து விடுவேன். இப்போது, அம்மாவை வதைத்த, அந்தக் காலைப் பொழுதுகளைப் பற்றி நினைத்தால்,மனசு அப்படிக் கஷ்டப் படுகிறது. செகம் பூரா ஆளலாமே திரும்பி நல்லா சாகலேமே..என்ற ஒப்பாரி எவ்வளவு உன்னதமான வரிகளை உள்ளடக்கியது.
கோடை காலத்தில் இரவில் வீட்டிற்குள் படுக்க முடியது தார்சாலில்த் தான் படுப்பேன். காலையில் பெரும்பாலும் சீக்கிரம் எழுந்து விடுவேன்.ராத்திரிக் கச்சேரிகள் முடித்து, படிக்க சற்று நேரமாகி விட்டால் சற்று நேரமாகி விடும்.அநேகமாக தேவி, தினமும் தெருவில் விழும் ஆற்றுத் தண்ணீர் இரண்டு குடம், எடுப்பாள்.தேவி பொது நிறமாயிருப்பாள். சற்று பயந்த சுபாவம் போல் முகமிருக்கும். ஆனால் வீட்டுக்குள் கலகலப்பாய் இருப்பாள்.எப்பவாவது புறவாசல்ப் பக்கம் போனால், காளியம்மாளைக் கேலி செய்து கொண்டிருப்பாள். ஒரு நாள், அம்மனோ சாமியோவ்,அத்தையோ மாமியோ....காளிஅம்மன் பரம்பரைக்கு கல்யாணமா....என்று `நான்’ சினிமாப் பாட்டைப் பாடி கேலி செய்து கொண்டிருந்தாள்.என்னைக் கண்டதும் வீட்டிற்குள் ஓடி விட்டாள்.ரேவதியின் அம்மா, எப்போதும் போல் சளசளத்துக் கொண்டிருந்தாள், ஆம்மா தேவி, நீ வேணுன்னா பாத்துக்கிட்டெ இரு,காளிக்குத்தான் சீக்கிரம் கல்யாணம் தெகையும்...என்று.
காளி அம்மாள் நல்ல கருப்பு. பல் சற்று எடுப்பாய் இருக்கும், ஆனால் சிரித்த முகம் போலிருக்கும், பற்கள் அவ்வளவு தெரியாது.மறைக்க முடியாத மார்பு. அற்புதமாகக் கோலம் போடுவாள். அழுத்தமான, தடிமனான கோடுகளாய் இருக்கும். குத்தாகக் கோலப் பொடியை அள்ளிக் கொள்ளுவாள்.மூன்று விரல் இடுக்கு வழியாகக் கோலப் பொடி வழியும். அழகாக அதை கண்ட்ரோல் செய்வாள்.நான்கு புறமும் ஒன்று போல் இருக்கும்.எந்த இடத்திற்கு எந்தக் கோலம் என்று கணக்காகப் போடுவாள்.இரண்டு மூன்று முறை அவள் கோலம் போடுவதை பார்த்துக் கொண்டிருந்தேன். எந்தக் கூச்சமும் இல்லாமல் கருமமே கண்ணாகப் போட்டுக் கொண்டிருந்தாள்.
விடியலில் வாசலில்
கோலமிடுவள்
நெஞ்சில் இரு
மஞ்சள் தாமரைகள் பூத்தன
சூரியனாய்ச் சுடும் முன் நிமிர்ந்தாள்
நான் சொன்னேன் –இனி
பெரிய கோலமாய்ப் போடப் பழகேன்...என்ற என் கவிதை வரி நினைவுக்கு வரும். ஆனால் இவை சற்று கருப்புத் தாமரைகள்.

ஒரு பொங்கலுக்கு, எங்கள் வீட்டில் ரெண்டு மாக்கோலம் போடுங்களேன் என்று விளையாட்டாகக் கேட்டு விட்டு வெளியே போய் விட்டேன், பாவம் அவர்கள் பொங்கலுக்கு ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்தது தெரியாமல்.வெளியே போய் விட்டு வரும் போது, வீட்டின் பாட்டாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் காளியம்மாள். ரேவதி, தேவி, ரேவதியின் அம்மா, எல்லோரும் ஆச்சரியமாய் லயித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.புகையடித்துக் கறுத்துப் போன செங்கல்த் தரையில்,பளீஈரென்று மெழுகி, மூன்று கோலங்கள். இரண்டு புறமும் சுதர்சனச் சக்கரம் போல் இரண்டு கோலங்கள். நடுவில் ஒரு அன்னப் பறவை. சுற்றி, அப்படி யொரு அழகாய் பார்டர். ஏதோ கோயில் விதானத்தைப் பார்ப்பது போலிருந்தது.அடிப் பாவிகளா விளையாட்டாய்ச் சொன்னதற்கு இவ்வளவு சிரமமா, என்று தோன்றியது.ஐயய்யோ ஊருக்குப் போகலையா, நான் சும்மால்லா கேட்டேன், உங்களுக்கு எதுக்கு சிரமம், என்று குழறினேன்.மூன்று பெண்களையும் வீட்டுக்குள் பார்ப்பதே சந்தோஷமும் கூச்சமுமாய் இருந்தது. அதுக்கென்ன,``மச்சு நெல்லும் குறையக் கூடாது, மக்க மாரு முகமும் வாடக் கூடாதுன்னா முடியுமா’’ பொட்டப் புள்ளைங்க கோலம் போடறதா அதிசயம் என்று பாட்டி -ரேவதியின் அம்மா- சொன்னாள். எம்மா நீங்க வேற, அப்புறம அவங்க எங்க ரெண்டு பேரையும் போடச் சொல்லீறப் போறாங்க, எங்களுக்கு ஒத்தைக் கம்பி கூட இழுக்கத் தெரியாது என்று ரேவதி சிரித்துக் கொண்டே சொன்னாள்.ஆம்மா நீங்க ரெண்டு பேரும் ‘’தோளுக்கு மேல தொன்னூறு தொடச்சுப் பாத்தா ஒண்ணுமில்லை’’ன்ன்ன கதை மாதிரிப் பட்டவளுகல்லா.என்றாள், பாட்டி. இரண்டாம் கட்டிலிருந்து அம்மா எல்லாவற்றையும் அமைதியாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள், சிரிக்கலாமா கூடாதா என்ற மாதிரியில்.மூன்று பெண்களும் சிரித்த படியே கிளம்பினார்கள்.காளியும் தேவியும் வாரோம் சார் என்றார்கள். ரேவதி, வர்ரேன்ங்க என்றாள்.
கோடைக்காக தாசாலில் நான் படுத்திருப்பேன். தேவி ஆத்தண்ணி எடுத்து வருபவள், அன்று விடிந்தும் தூங்கிக் கொண்டிருக்கும் என்னை எந்தக் கோலத்தில் பர்த்தாளோ, மறு நாளிலிருந்து, தண்ணீரெடுக்க நங்கையாரை வேலைக்கு வைத்துக் கொண்டாள்.நங்கையார்தான் கிண்டலாய்ச் சொன்னாள். நீங்க ஒங்க பாட்டுக்கு தூங்குங்க, எனக்கு மாசம் பத்து ரூவாயவது கெடைக்கும் என்று. எனக்கு அதிலிருந்து புறவாசல் பக்கம் போகவே கூச்சமாயிருந்தது.
அறை வீட்டில் படுத்திருந்தேன்.பின்னால் குச்சு வீட்டின் முன்ன்னால் ஒரு திண்ணை உண்டு, அதில் உட்கார்ந்து ரேவதி, காளியம்மா, தேவி, பாட்டியம்மா எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று மழை பட படவெனக் கொட்டியது. குச்சு வீட்டு தகரக் கூரையில் கணகணவென்று சத்தம் கேட்டது நான் அவசரமாக வெளியே வந்தேன். மழையோடு ஆலங்கட்டிகள், அரைக் கோலிக்காய் மாதிரி,திடமான நீர்க் குமிழி போல், விழுந்தது. நான் அது வரை பார்த்ததே இல்லை. ஆச்சரியத்தோடு மழையில் நனைந்து பொறுக்கினேன்.அதை எடுத்து ரேவதியிடம் ஏங்க இங்க பாருங்க ஐஸ் மழை என்று நீட்டினேன். பேச்சை விட்டு விட்டு, மார்ச் சேலை நழுவுவதையும் பொருட்படுத்தாமல் ஓடி வந்து, என் அதே ஆச்சரியத்தோடு கையை வேகமாக நீட்டினாள். அதற்குள கட்டிகள் கரையத் தொடங்கி, துகள் போல் ஆகியிருந்தது. அந்த வெண்ணிறக் கையில் குளிர்ச்சியான துகளை, நன்றாகத் தொட்டுக் கொடுக்கும் போதுதான் தொடுகை பற்றிய பிரக்ஞை வந்தது. அப்போது கூட ரேவதி குழந்தை போலத்தான் அதை வாங்கினாள்.காளியம்மாளும் முன்னால் வந்து ரேவதியின் கையிலிருந்ததை வாங்க முயற்சித்தாள். அது நீராகிப் போயிருந்தது.தேவி பாட்டியின் பின்னால் நின்றாள்.முகம் லேசான சிரிப்புடன் சலனமில்லாமல் இருந்தது.ஏங்க, வேற விழுந்தா எடுங்கங்க என்றாள். நான் பொறுக்கினேன். இப்பொழுது கட்டிகள் குறைந்து விட்டன.மழை வலுத்து விட்டது. ஒன்றிரண்டு கட்டிகளை எடுத்து ரேவதியின் கையில் கொடுத்தேன்.அதை அவள் காளியின் கையில் கொடுத்தாள். ரேவதியின் அம்மா,ஏய் இந்தா இவளே, பெரியவளே,இங்கிட்டு வா என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போனாள்.அம்மா நனையாதடா, இந்த மழை உடலுக்காகாது என்றாள்.அதில் வேறு அர்த்தமுமிருந்த மாதிரி இருந்தது.
நான் உள்ளே வந்து தலை துவட்டிக் கொண்டிருந்தேன்.அறை வீட்டின் வலைச் சன்னல் வழியே பார்த்தேன்.தேவியும் காளியும் அமைதியாக திண்ணையில் அமர்ந்து, மழையை பார்த்துக் கொண்டே, பாட்டியம்மா சத்தம் போடுவதையும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த தம்பிக்கி கல்யாணம் வச்சாச்சுடி பெரியவளே, ஒனக்கு ஒரு இது வேண்டாமா, இப்படியா கையக்கைய நீட்டி வாங்குவ, அது என்ன நினைக்கும் என்று சொல்லுவது கேட்டது. எனக்கு கல்யாணம் முடிவாகியிருந்தது. சரிம்மா, விடும்மா, அவங்களுக்கு என்னைப் பத்தி தெரியும் எனக்கும் அவங்களைப் பத்தி தெரியும்., என்று சொல்லி விட்டு வெளியே வந்து மழையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.இப்ப ஐஸ் விழலைல்லெ என்று தேவியிடம் கேட்டாள்.அவள் பேசவில்லை.காளியம்மாள் ஜன்னலைப் பார்த்தாள். நான் விலகிக் கொண்டேன்.

Saturday, September 5, 2009

கேள்விக்கு பதிலேதய்யா....

பொங்கலுக்கு புது ஓலை, வாசலில் வண்டியில் வைத்து விற்பார்கள். ராஜவல்லிபுரமென்றால், பனை ஓலையும் மட்டையும் ஏகத்துக்கு வீட்டிலேயே கிடைக்கும்.பொங்கலுக்கு அடுப்புக் கட்டி பாட்டப்பத்திலிருந்தும், விளாகம் பச்சேரியிலிருந்தும் வண்டியில் கொண்டு வந்து விற்பார்கள். இதெல்லாமுமே காலையில் கொண்டு வருவர்கள்.பாட்டப்பத்து கட்டியென்றால் அச்சுவெல்லக் கட்டி போல இருக்கும். விளாகம் என்றால், உருளையாக இருக்கும்.எங்கள் வீட்டில் பாட்டப் பத்து கட்டியையே வாங்குவார்கள். தெருவில் அதற்கே கிராக்கியும் அதிகமிருக்கும். காலையிலேயே வாங்கினால்த் தான் நல்ல லடசணமான கட்டியாகப் பார்த்து வாங்க முடியும்.இல்லையென்றால், சிலது ஏறுக்கு மாறாக இருக்கும்,பானை வைக்க தோதுவாய் இருக்காது. ஏழு கட்டி வாங்குவார்கள். மூன்று பானை பொங்கலிடலாம்.சிறு வீட்டுப் பொங்கலுக்கு மூன்று சிறிய உருளைக் கட்டிகளை இலவசமாகத் தருவார்கள். அதுவும் காலையில் சீக்கிரம் வாங்கினால் மட்டுமே கிடைக்கும்.
ஒரு வருடம் சிறு வீட்டுப் பொங்கலுக்கு, நாமே கட்டி போட்டாலென்ன என்று போன வருடத்து கட்டியை உடைத்து,தண்ணீர் விட்டு குழைத்து, அச்சுக்கு சிறிய போணியொன்றைத் தேர்ந்தெடுத்து,புறவாசலில் வைத்து நானும் சில நண்பர்களும் மும்முரமாக ஈடு பட்டுக் கொண்டிருந்தோம்.வளவில் உள்ளவர்கள் எல்லாம், என்னடே பொங்கக் கட்டியா எங்க வீட்டுக்கு ஆர்டர் குடுத்தா கிடைக்குமா, என்று கேலியும் உற்சாகப் படுத்துதலுமாகக் கேட்டுப் போனார்கள். போணியில், பிசைந்த மண்ணை அடைத்து, கவிழ்த்தினால் பாதி மண், கட்டியாக விழுந்தது. மீதி போணியிலேயே ஒட்டிக் கொண்டது.
பிள்ளையார் சதுர்த்திக்கு, அரசடிப் பாலம் வாய்க்கால் அருகே, களி மண்ணில் பிள்ளையார் சிலை செய்து விற்பார்கள். காலையிலேயே, ஒரு வண்டி களிமண்ணைக் கொண்டாந்து இறக்கி இருப்பார்கள்.அந்தக் களி மண்ணை எங்கிருந்து கொண்டு வருகிறார்கள் என்பது, எங்களுக்கு பெரிய அதிசயமாய் இருக்கும். ஒரு கல் கரம்பை இருக்காது. வழக்கமாக செய்து விற்க ஒரு வேளார் தான் வருவார். ஆள் ஒடிசலாய், வயிறு டொக்கு விழுந்து இருக்கும்.தார் பாய்ச்சிக் கட்டிய வேட்டி, பூணூல், ஒரு பலகை போட்டு உட்கார்ந்து வேக வேகமாகப் பிள்ளையார் செய்து கொண்டே இருப்பார்.லங்கோடு எதுவும் கட்டியிருக்கமாட்டார். விரை இரண்டும் பலகையை உரசிக் கொண்டே இருப்பது லேசான வேஷ்டி வழியேதெரியும். இதைப் பார்ப்பதும் சிரிப்பதும், ஒரு விளையாட்டு.பரமசிவன் பிள்ளை சார் போடுகிற புதிர்கள் ஞாவகத்துக்கு வரும்.ரசம் மணப்பதேன், ரத்தம் சொட்டுவதேன்? ரெண்டுக்கும் ஒரே விடை, யாராவது சொல்லுங்கலெ என்பார் வகுப்பில். எவனாவது ‘பெருங்காயத்தால்’ என்பான். யேய் சொல்லிட்டீங்களே,என்பார். எனக்கு அவர் போடுகிற இந்த விடுகதைகள் அவரது ‘நீதி போதனை வகுப்பில்‘ வழக்கமாகக் கேட்டவை தான். ஒரு கிளாஸில் அவர் கேட்டார். தச்சன் புடுக்கு தேய்வதேன், தாசி முலை பருப்பதேன்...?அவர் கேட்டதும் கிளாஸ்ஸே ஹேயென்று சிரித்தது.ஏல சிரிக்காதிங்கலே. நீங்கள்ளாம் படுக்காளிப் பயலுகள்ளே, என்றார். சொல்லிவிட்டு அமைதியாய் இருந்தார்.
சார் சார் விடை சொல்லுங்க சார் என்று கூச்சல்.. ஏல உங்களுக்கா தெரியாது, போங்கலே என்றார். தெரியாது சார் சொல்லுங்க சார் சொல்லுங்க சார், என்றோம். இன்னா இப்ப பாரு இவஞ் சொல்லீருவான் என்று கிளாஸ் லீடர் சம்முவத்தை எழுப்பி விட்டார். சம்முவம் இரண்டாவது வருடம் அதே வகுப்பில் படிக்கிறான். அவன் நாணிக் கோணி நின்றான். பாத்தியாலெ இவனுக்குத் தெரியும்லெ. ஏலெ, சொன்னாத்தான் உக்காரலாம், இல்லேன்னா நில்லு என்று சொல்லிவிட்டு கண்ணை மூடிக் கொண்டார். கொஞ்ச நேரம் கழிச்சு கண்ணை முழிச்சு கேட்டார், ஏலெ சொன்னானாலே, மொத்த வகுப்புமே இல்ல சார், இல்ல சார் என்றது.சம்முவம் பட்டென்று ‘பல கை’ படுவதால் என்று சொன்னான். புரிந்தவர்கள் எல்லாம் பயங்கரமாக சிரித்தோம்.ஏல, கணபதியா பிள்ளை பையன் தானெ, வா நீ. ஒங்க ஐயாட்ட சொல்லுதேன்,நாளைக்கி போத்திக் கிளப்புக்கு வருவாருல்லா என்றார். சம்முவம் தலையைத் தொங்கப் போட்டபடி நின்றான்.சரி சரி வா அந்த வீசாறியெ எடுத்து வீசு, இங்க வந்து என்றார்.சம்முவம் அவர் நாற்காலிக்கு அருகில் நின்று கொண்டு விசிறியை வைத்து வீச ஆரம்பித்தான், சார் கண்ணை மூடி பொய்த் தூக்கம் ஆரம்பித்தார்
வேளார் ஒரு அகலச் சட்டியில் தண்ணீர் வைத்திருப்பார். வாங்குகிற காசை அதில் தான் போடுவார், மூங்கிலில் ஒரு கத்தி மாதிரி சிறிதாக வைத்திருப்பார். அதை அந்த தண்ணீரில் லேசாக முக்கி பிரபை மற்றும் பிள்ளையாரின் கிரீடங்களில் நுணுக்கமான கோடுகளிட்டு அழகாக்குவார்.காலையில் விலை சற்று அதிகமிருக்கும். நாம் கொண்டு போகிற பலகையில் பிள்ளையாரை வைத்து கொஞ்சம் களிமண்ணை அடியில் அண்டை கொடுத்தது போல் அப்பி வைப்பார். பிள்ளையார் சக்கென்று உட்கார்ந்து கொள்ளுவார்.இதுதான் சக்குப் பிள்ளையாரோ. ஏண்டா சக்குப் பிள்ளையார் மாதிரி உக்காந்திருக்கெ என்று பெருசுகள் கேலி செய்வது இதைத் தானோ என்று தோன்றும். இது தவிர ஒரு பித்தளை அச்சு வைத்திருப்பார்.அதில் எண்ணெய் தடவி, களி மண்ணை நன்றாக அமுக்கிச் செலுத்தி பலகையில் கவிழ்த்தி அச்சை உருகுவார். அந்தப் பிள்ளையார் ரொம்ப அழகாக இருக்கும்.அப்பா ஒரு வருடமாவது அதை வாங்கி வந்து பூஜை செய்ய மாட்டாரா என்றிருக்கும்.அப்பா, சாதாரணப் பிள்ளையாரை மட்டும் ஒரு வருடம் வாங்க சம்மதித்தார்.
நான் போணியில் தடவ, அடுக்களைக்குள் எண்ணெய் எடுக்கப் போனேன். அம்மா எதுக்கு என்று கேட்டு விட்டு,ச்சீ மூதேவி நீங்க அடுப்புக் கட்டி போட்ட லச்சணம் போதும்.போடா என்று விரட்டி விட்டாள். நான் போணியில் தண்ணீரைத் தடவி ஒரு மாதிரியா அச்சுப் போட்டு விட்டேன்.வெற்றிகரமாக வெயிலில் காயவைத்துவிட்டு, கை கால் கழுவி மத்தியானச் சாப்பாட்டுக்கு உட்கார்ந்தேன். காலையில் ஆரம்பித்தது மத்தியானம் ஆகியிருந்தது.கையெல்லாம் செம்மண் காவி. நக இடுக்குகளில் கொஞ்சம் மண். மண் வாசனையோடு சாப்பிட்டு விட்டு அவசர அவசரமாக புறவாசல் ஓடினேன். அடுப்புக் கட்டிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சைசில், தரையோடு உட்கார்ந்திருந்தது. நிறையத் தண்ணி விட்டுட்டியோ அம்பி கோபாலா என்று பின் வீட்டுக் கார, சரக்கு மாஸ்டர் சுப்பிரமணிய ஐயர் கேட்டார். புள்ளையார் புடிக்க கொரங்காயிடுத்தாடா என்று சிரித்தார். போம்யா என்று கத்தி விட்டு ஓடி வந்தேன்.
அந்த வருடம் பொங்கலுக்கு முன்பே பதினோராம் தேதியே பணத்தோட்டம் வந்து விட்டிருந்தது.அதனால் பொங்கலன்று எங்கும் போகவில்லை. திடீரென்று பாச்சா, தெருவுக்கு வந்தான்.அவனை நான் தான் அழைத்திருந்தேன். ஆனால் மறந்து விட்டேன்.எனக்கு தெரு நண்பர்களுடன் இருக்கையில் ஸ்கூல் நண்பர்கள் வந்தால் பிடிக்காது.இவர்கள் ஏதாவது கேலி செய்தால் என்ன செய்வது, என்று பயமாயிருக்கும்.(பாச்சாவை யாருல இது வெள்ளைப் பாச்சா என்றார்கள்). நாளைக்கு கிளாஸ் போனால் அவர்கள் சண்டைக்கு வருவார்கள். பாச்சா வீடு பேட்டை ரோடில் இருந்தது.ஆறாம் வகுப்பிலிருந்தே பழக்கம். பேட்டை ரோடு அப்போதெல்லாம் அழகாயிருக்கும். ப்ரிட்டிஷ் காலத்து சிமெண்ட் ரோடு, வழு வழுவென்று இருக்கும்.அதிலும் கம்பாநதி மண்டபம் தாண்டி விட்டால், ரெண்டு புறமும் மரமும் வயலும் குளிர்ச்சியாக இருக்கும்.
சின்ன வயசில் புதிதாக பொங்கலுக்கு வருகிற ஓலையில், காற்றாடி செய்து அதைக் கையில் பிடித்தவாறே, பேட்டை ரோட்டில் ஓடுகிற சுகமே தனி.அப்போதெல்லாம் அவ்வளவு பஸ்கள் கிடையாது. ஒரே ஒரு ஏழாம் நம்பர் பஸ் ஓடும்.எட்டாம் நம்பர் குறுக்குத் துறைக்குப் போகும்.அது பெரும் பாலும் ஒரு லொட லொட பஸ். ஏழாம் நமபர் பேட்டை எட்டாம் நம்பர் ஓட்டை என்று ஸ்கூல் வழியாகப் போகும் எட்டாம் நம்பர் பஸ்ஸைக் கேலி செய்வோம்.காற்றாடி என்று இல்லை. வட்டு கிடைத்தாலும், சைக்கிள் ரிம், சைக்கிள் டயர், எல்லாம் வட்டுகள், அதை உருட்டிக் கொண்டே ஓடுவது, ஒரு விளையாட்டு. அதிலும்,ப்ளைமவுத் (ப்ளிமத்) காரே கிடைத்த மாதிரிதான்.அதில் சோடா பாட்டிலை மூடியிருக்கும் சிப்பியை தகடு போல் சப்பி, நடுவில் ஓட்டை போட்டு,(ப்ளைமவுத்) வட்டில் அடித்து விட்டால், வண்டி ஜல் ஜல் என்று ஓடும். அது மட்டுமல்ல அடுத்த தெருவுக்கெல்லாம் வட்டை ஓட்டிக் கொண்டு போனால் இந்த ‘சோடாச் சிப்பி’ லைசென்ஸ் இருக்க வேண்டும். இல்லையென்றால் வட்டை பிடுங்கி வைத்துக் கொள்ளுவார்கள், அந்தத் தெரு பையன்கள்.
அப்படி ஒரு வட்டு எனக்கு அபூர்வமாக கிடைத்தது.ஆனால் அதில் சோடாச் சிப்பி அலங்காரம் செய்ய வழியில்லை. கொஞ்சம் ஒல்லியான வட்டு. ரொம்ப ஆசையாய் பேட்டை ரோட்டில் ஓட்டிக் கொண்டு போனேன். தடி வீரன் கோயில் தெருப் பையன்கள் பிடித்துக் கொண்டார்கள். எங்கலே லைசென்ஸ் என்று.நான் படு வேகமாக ஓடி கம்பாநதி மண்டபத்தருகே நின்று மூச்சிரைக்க திரும்பிப் பார்த்தேன்.இன்னும் அவர்கள் அந்த தெரு முனையிலேயே நின்று கொண்டிருந்தார்கள்.சுற்றிக் கொண்டு, பழனித் தெரு வழியாகப் போனால் அது, இதை விட சண்டியர்கள் நிறைந்த தெரு.இன்னக்கி வட்டு அம்பேல் என்று நினைத்த போது, பாச்சா வீடு பேட்டை ரோட்டில் என்று சொன்ன நினைவு வந்தது.
கம்பாநதி மண்டபம் தாண்டி, போய்க் கொண்டிருந்தேன், வீடு எதுவும் இருப்பதாகவே தெரியவில்லை. வயலாக இருந்தது. வயலுக்குள் கொஞ்சம் தள்ளி வீடு மாதிரியும் இல்லாமல், மண்டபம் மாதிரியும் இல்லாமல், ஒரு பெரிய கட்டிடமாய் ஒன்று இருந்தது.அதை விட்டால் தூரத்தில் பேட்டை தர்ஹாப் பள்ளி வாசல் தான்.
அந்த வீடு மாதிரியான, வீட்டின் முன் நின்று எட்டிப் பார்த்தேன்.பாச்சா மாதிரியே வெள்ளைப் பாச்சாவாக ஒரு பெண், என்ன வேணும் என்றாள். நான் பாச்சா என்று இழுத்தேன்....இருக்கான், உள்ள வாப்பா என்றாள்.நான் வட்டோடு உள்ளே வருவதைப் பார்த்துச் சிரித்தாள்.அவன், பின்னால் வயல் வெளிகளில் நின்றிருந்தான், அவன் அப்பாவுடன்.அங்கிருந்து கையைக் காண்பித்தான். அருகே வரும்படி. வயல் மாதிரி இல்லை. திரடாக இருந்தது.நல்ல புல். ஒரு ஈச்சமரம் இருந்தது. ஒரு சமாதி, பார்க்க பயமாக இருந்தது. சமாதி சாய்ந்து இருந்தது.அருகே இருந்த ஒரு மரம், பூவரசா, மஞ்சணத்தியா நினைவில்லை,அதன் வேர் அதைச் சாய்த்திருக்கும். அவன் நின்ற இடத்திற்குப் போனேன், கையில் வட்டு.அவன் அப்பா வாயில் வெற்றிலை அதக்கி இருந்தார்.திரட்டுக்கு கொஞ்சம் தள்ளி வழுக்கு ஓடை ஓடிக் கொண்டிருந்தது.கொஞ்சம் மேடாக இருந்த இடத்தில் பெரிய பனை ஓலையில் சொளவு மாதிரிக் கிடந்தது.பாச்சா கையில், ஒரு கயறு கட்டிய வாளி.அவன் அப்பா ஓலையை எடுத்து பதனமாக தள்ளி வைத்து விட்டு, வாளியை வாங்கி இன்னும் கவனமாக ஓலைக்கடியிலிருந்த குழியொன்றில் இறக்கி தண்ணீர் சேந்தி, ஒரு குடத்தில் விட்டார்.குடிக்க இது தான், என்றார் அப்பா.
ஊத்துத் தண்ணி, என்றான் பாச்சா.நான் அருகே போனேன், மண்ணச் சரிச்சிராம பாருங்க தம்பி என்றார் அவன் அப்பா.நல்ல களிமண் பதமாக இருந்தது, அந்த இடம்.ஒரு அழகான ஊற்று.சுற்றி கரம்பை வெட்டி வைத்து புல் அழகாக, வட்டமாக வளர்ந்திருந்தது.ஒரு சேலைத் துணியை ஊற்றின் சுவரையொட்டி வைத்திருந்தது. ஈரத்தில் அது சுவற்றோடு ஒட்டியிருந்தது.பளிங்கு மாதிரி தண்ணீர் சேலைக்கு மேலாகக் கிடந்தது, இரண்டு வாளி முங்கும் அளவுக்கு. நான் இன்னும் அருகே போய் எட்டிப் பார்க்க முயன்ற போது பாச்சா தடுத்து விட்டான்.அப்பா சத்தம் போடும் என்று.அவனிடம் வட்டு பற்றிய பயத்தைச் சொன்னேன்.சரி இங்க இருக்கட்டும். நான் எங்க அப்பா யாவாரத்துக்குப் போகும் போது கொண்டு வந்து தாரேன் என்றான். அவன் அப்பா ஓம வாட்டர், பேனா மை என்று தயாரித்து விற்கிறார்.வீட்டுக்குள் வந்த போது, சுவர்களிலெல்லாம் கீறலாய் இருந்தது.இதுக்குள்ளதான் ஒரு பாம்பு போச்சு நேத்து, வெளியெவே வரலை என்றான் பாச்சா.அருகே பாட்டில்களை கழுவிக் கொண்டிருந்தாள் அந்த அம்மாள். இன்னொரு வயதான பெண், குழிஅம்மி மாதிரி ஒன்றில் எதையோ அரைத்துக் கொண்டிருந்தாள். அதே போல் எங்கள் வீட்டில் மருந்து அரைக்கும் குழி அம்மி ஒன்று உண்டு.வட்டைப் பிரிய மனமில்லாமல் வந்தேன். தடி வீரன் கோவில் தெரு முக்கில் எந்தப் பையன்களையும் காணும்.
பாச்சாவுக்கு பாயாசம், எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தேன். அம்மா பொங்கல்ச் சோறு சப்பிடுவானா என்று கேட்டாள். சரி என்று தலையாட்டினான். விரும்பிச் சாப்பிட்டான்.எங்கள் வீட்டில் பொங்கலுக்கு, படையல் சாப்பாடு. வீட்டின் இறந்து போன கன்னிப் பெண்களை நினைத்து செய்வது. பெரும்பாலான வீடுகளில் அதை ஆடி மாசம் தனியே செய்வார்கள்.புளிக்குழம்பும் அவியலும் கேட்டு வாங்கிச் சாப்பிட்டான், பாச்சா .மறு நாள் ஸ்கூலுக்கு வந்ததும், வீட்டில் சத்தம் போட்டதாகச் சொன்னான். ஏன் என்றேன், படைத்ததை சாப்பிடக் கூடாது என்றான்.
அடுத்து இரண்டு மூன்று வகுப்புகளுக்கு, அவன் என் பிரிவில் இல்லை.திரும்ப டென்த் படிக்கிற போது என்னுடன் D செக்‌ஷனுக்கு வந்தான்.அவன் கையெழுத்து நன்றாக இருக்கும். கிளாஸில் யாரும் நோட்ஸ் கொடுத்தால் வேகமாக எழுதி விடுவான்.நாங்கள் ஓரிரு வரிகளை விட்டு விட்டு, அப்புறம் அவன் நோட்டைப் பார்த்து எழுதுவோம்.
அந்த வருஷம் திருநாளுக்கு அவன் வீட்டிற்கு சாப்பிடக் கூப்பிட்டான். கரிக்காத் தோப்பு சக்கரியாவும் கூப்பிட்டான். அவன் வீட்டில் பிரியாணி. இவன் வீட்டில், நெய்ச் சோறாம். இதுதான் முகத்தில் அடிக்காது., எங்க வீட்டுக்கெ வாரும் என்றான்.சக்கரியா வீடு ரொம்பத் தூரம். பாச்சா வீட்டுக்கு வருவதாகச் சொன்னேன்.மத்தியானம் வாரும் என்றிருந்தான்.
நான் போன போது பாச்சா வீட்டில் இல்லை.அவன் பாட்டி மட்டும் இருந்தாள்.வீடு இப்போது சுத்தமாக இருந்தது. இப்போது சில மோட்டார் செட்டுகளும், குழாய்களும் கிடந்தன. அவனது அப்பா இப்போது பம்ப் செட் ரிப்பேர் பார்க்கிறார் என்று சொல்லியிருந்தான். வயல் எல்லாம் அப்போதுதான் அறுவடை முடிந்திருந்தது.பேட்டைக் குளம் வரை சைக்கிளில் போய் வரலாமா என்று நினைத்த போது,கையில் இலையோடு காதர் சைக்கிளில் வந்தான். என் சைக்கிள்.18’’ கட்டை சைக்கிள்.வாசலில் நிறுத்தியிருந்தேன்.வந்ததுமே சிரித்த படியே கேட்டான், சைக்கிளுக்கு லைசென்ஸ் வச்சுருக்கேரா என்று. உண்மையிலேயே சைக்கிளுக்கு முனிசிபாலிட்டியில் இரண்டு ரூபாய் கட்டி லைசென்ஸ் எடுக்க வேண்டும், அப்போது. நானும் சிரித்தேன். ஆமா இப்ப அந்த ஊத்து இருக்கா என்று. இல்லை இல்லை, அதெல்லாம் மூடியாச்சு,இப்ப தண்ணிக்கி ரொம்ப கஷ்டம். பின்புறம் போக முடியாது, சுவரு வச்சுட்டாங்க. பள்ளிவாசல் கிணற்றிலிருந்துதான் எடுக்கோம். அங்கயே ஒரு ஆத்தண்ணி பைப்பு இருக்கு அதிலிருந்து குடிக்க எடுத்துக்கிடுதோம் என்றான்.கொஞ்சம் இருக்கேரா அப்பாவைக் கூட்டீட்டு வ்ந்திருதேன், பக்கத்தில எங்கயோ போனாரு என்று சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.எனக்கு நல்ல பசியாய் இருந்தது.அந்த வீட்டிற்கு ஒரு வெளிச்சுவர்.அடுத்தாற் போல் காலி இடம் அதில் தான் பம்பு, குழாய் இத்யாதிகள் கிடந்தன.அதேபோல் காலி இடம் மூன்று புறமும் கிடந்தது.
பாச்சா போனதும், வீட்டினுள் அந்த அம்மா வந்தாள்.கொஞ்சம் சங்கோஜத்துடன் வந்தாள்.என்னைக் கடந்து போய்,பக்கவாட்டு காலியிடத்தில் நின்று அவன் பாட்டியிடம் ஏதோ கேட்டாள்.அநேகமாய் தண்ணீர் கேட்டிருக்க வேண்டும்.அவள் சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள்.முடியாது போ, கண்ட இடத்தையும் நாற அடிக்காதெ, அந்தக் கரி முடிவான் எங்கயோ போய்ட்டான் போலருக்கு, நீயும் போறதுதானெ என்று சத்தம் போட்டாள். இன்னுமொரு பெண் குரல் கேட்டது.அதுவும் இவளை சத்தம் போட்டது. நான் என்ன வேலைக்காரியா, அப்படியே நில்லு, அவன் வந்து கழுவி விடுவான். என்று.. கொஞ்ச நேரத்தில் வார்த்தைகள் தடித்தது.நான் கிளம்பலாம் என்று நினைத்த சமயத்தில், அந்த அம்மாள், விறு விறுவென்று வந்தது, கூத்தியாளக் கூடவே வச்சுருக்காரு,நம்மளை அறுத்துவிடும்ன்னா கேக்காரா, நாமளும் புள்ளை படிப்பு முடியட்டுமேன்னு பாத்தா, குண்டி கழுவக் கூட விடமாட்டங்காளுக,தண்ணி சுமக்கறது பூரா நானு, பாக்கட்டுமே, 'பூ.. லை' ஊர் பூராவும்,என்று சொன்ன விருத்தியில், என் முன்னால் ஒரு தொட்டியில் கிடந்த அழுக்கு தண்ணீரை ஒரு செம்பில் கோதி, ரோட்டுக்கு வந்து கொஞ்சம் தள்ளி ஒரு மரத்தருகே போய், திரும்பிக் கொண்டு கழுவ ஆரம்பித்தாள். சைக்கிளை எடுக்க வந்தவனுக்கு அவளின் வெள்ளைப் பின்புறம் தெரிந்தது. தலையைக் கவிழ்ந்து கொண்டேன்.பாச்சாவின் ஏம் வந்துட்டேருவே நேற்று, என்ற மறு நாள்க் கேள்விக்கு என்னிடம் பதிலில்லை.

Visitors