Monday, August 30, 2010


ஸகி..........(1)

நாற்பது வருடங்கள் ஓடி விட்டன. இப்போது யோசிக்கையில், அந்த இருபது வயதில் என்ன முதிர்ச்சி இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.ஆனால் அந்த நேரத்து வாழ்வும் மனமும் தந்த படைப்பின் எளிமையான ஆன்மா, இப்போது அனுபவத் தர்க்கங்கள் முக்கிப் பிரசவிக்கும், தட்டுத் தடுமாறிப் பிறக்கும் சோதனைக் குழாய் படைப்புக்கு இருக்குமா தெரியவில்லை.

“உயிர் காதலிலே

உடல் மேடையிலே - இந்த

வாழ்க்கையின் முடிவெங்கே..... என்ற வரிகளை உள்ளடக்கிய

மன நாட்டிய மேடையில் ஆடினேன்

கலை காட்டிய பாதையில் வாடுகிறேன் என்ற மீண்ட சொர்க்கம் பாடலை நானும் ராமச்சந்திரனும் விரும்பிக் கேட்போம். அது எங்கள் பிராணகீதம், அந்தக் காலத்தில். அவருக்கு இந்தி நடிகை ராக்கியை ரொம்பப் பிடிக்கும்.இரண்டு பேருக்கும் நடிகை சாரதாவை ரொம்பப் பிடிக்கும்.சாரதா படங்களைச் சேகரிப்பது ஒரு இஷ்டமான காரியம், அப்போது. பொம்மைசினிமாப் பத்திரிக்கையில் நடுப்பக்கத்தில் வந்த சாரதா படம் ஒன்றை நான் கனத்த அட்டையில் ஒட்டி, என் படிக்கிற மேஜை அருகே தொங்க விட்டிருப்பேன்.அவர் அதே இதழில் வந்த சிறிய படமொன்றை மேஜையில் வைத்திருப்பார். மேஜை என்றால்,அது வக்கீல் குமாஸ்தாவான அவரது சிறிய அறையில் இருக்கும் வக்கீல் சார் வீட்டு மேஜை. அவர் வைத்திருந்த சாரதா படம் தொலைந்து போய் விட்டது.அதைக் குறித்து அவர் என்னிடம் ரொம்ப வருத்தப் பட்டார்.என்னிடமிருக்கும் பெரிய படத்தை வைத்துக் கொள்ள அவரது வாழ்வியல் சுதந்திரம் அப்போது அனுமதித்திருக்காது, அதனால் அதைத் தர முன் வந்த போது மறுத்து விட்டார்.

அந்த நாட்களின் காலைகளில், அநேகமாக என்னைப் படுக்கையிலிருந்து எழுப்புகிறவர் அவராய்த்தான் இருக்கும்.கையில் கடல்புரத்தில்; நாவலின் அத்தியாயம் ஒன்றோ இரண்டோ வைத்திருப்பார்.முந்தின இரவில் எழுதியது.கண்ணில் பீளை கூட விலகாமல் அதைப் படிப்பேன்.என்ன அற்புதமான படைப்பு, எப்படிப்பட்ட அற்புதமான கலைஞன்.அவரைப் போல், அவர் நாவலின் ஒரு அத்தியாயம் போல, ஒரே ஒரு கதை எழுதி விட்டால்ப் போதும், பேனாவைத் தூர எறிந்து விடலாம் என்றிருக்கும்.அதை அவர் இரண்டு விதமாக முடித்திருந்தார். ஒன்றில் பிலோமி இறந்து விடுவாள்.இன்னொன்றில் அவள் தனது தாயின் சிநேகிதரான வாத்தியாருடன் போய் தங்கிக் கொள்ளுவாள்.எனக்கு முதல் முடிவு பிடித்திருந்தது. வண்ணதாசன், இரண்டாவது முடிவுதான் அற்புதம், நீ சொல்கிறதை யார் வேண்டுமானாலும் எழுதி விடலாம், இதுதான் புதுசாய் இருக்கிறது, இதில்த்தான் ராமச்சந்திரனின் வியக்தி இருக்கிறது என்றார். எனக்கு அப்போதுதான் உரைத்தது. ஆமாம் இரண்டாவதில் ஒரு அபூர்வ முதிர்ச்சி இருக்கிறது என்று. வண்ணதாசனின் புதியவற்றிற்கான தாகமும், ராமச்சந்திரனுடைய அதுவும் இதுவுமான கலையும், என் அமுதிர்ச்சியும் அன்று தெளிவாகப் புரிந்தது.

வக்கீல் சார் வீடு நான் கல்லூரிக்குப் போகும் வழியில்தான் இருந்தது.ரமச்சந்திரன் இரண்டு நாளைக்கு ஒரு தரம் என்னையும் கல்யாணியையும் பார்க்க வந்து விடுவார். ஆனாலும் அவ்வப்போது திடீரென்று ஒரு போஸ்ட் கார்டு வரும், அற்புதமான வரிகளைத் தாங்கி. ஒரு கார்டில் உற்சாகம் கொப்பளிக்க எழுதியிருந்தார், அன்புமிக்க கோபால்,தொலைந்து போன சாரதா படம் கிடைத்து விட்டது, ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.அதற்காகவே அது இன்னொரு தரம் தொலையலாம் போலிருக்கிறது, என்று எழுதியிருந்தார்.மறு நாள் கல்லூரி போகிற காலை நேர அவசரத்துக்கிடையே அவரையும் அந்தப் படத்தையும் (ஏற்கெனவே பார்த்ததுதான்) பார்ப்பதற்காக அவரது அறைக்குப் போனேன்.அதைக் காட்டிக் காட்டி மகிழ்ந்தார்.

அவர் பிலிமாலயா சினிமாப் பத்திரிக்கையில் கொஞ்ச நாள் வேலை பார்த்த போது ஒரு அழகான சாரதா ஸ்டில்லை அனுப்பியிருந்தார், வேறு கடிதம் எதுவும் எழுதாமல். நினைவுகளின் சாட்சியங்களாக எல்லாமே பத்திரமாக இருக்கிறது.

“அலைக்கழிந்து போவதற்கே

மேகங்கள்

காற்று வரும் வரை

காத்திருக்கின்றன..என்று ஒரு கார்டில் எழுதியிருந்தார்.

சென்னையிலிருந்து ஒரு கடிதம், ”14.11.1973-ல் எழுதியது,மறுபடியும் ‘ஜமீலா படிக்கக் கிடைத்தது.70-ம் வருஷம் கல்யாணி, நீங்கள், நான், சுகுணா,சின்னம்மா எல்லோரும் படித்து நெகிழ்ந்து போயிருந்தோம்.ஜமீலாஒரு அமர காவியம்.தாகூரின் ‘நஷ்ட நீட(சிதைந்த கூடு) போல, மதினிக்கும் கொழுந்தனுக்கும் உள்ள உறவுகளைச் சித்தரிக்கிற உன்னதமான ஜீவனுள்ள காவ்யம். காகஸ்தானின் ஸ்தெப்பி வெளிகளில் தன்னுடைய நேசத்தைப் பாடிய ஒரு பெண்ணின் கதை. என்னுடைய மகளுக்கு நான் ஜமீலா என்று பெயரிடுவேன்......

என்று நீளும்...

ராமச்சந்திரன் என்னைப் போலவே டயரியில் கொஞ்சம் படங்கள் வரைவார். சும்மா சில முகங்கள். ஆனால் எல்லாவற்றிலும் ஒரு ஜீவன் இருக்கும்.அவருக்குப் பிடித்த இன்னொரு பாடல் ‘ராதையின் நெஞ்சமே , கண்ணனுக்குச் சொந்தமே,இதையும் “உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்.பாடலையும் கேட்கிற போது தவறாமல், தன்னிச்சையாக ராமச்சந்திரன் நினைவுக்கு வருவார்.இன்னும் வருகிறார்.கோபாலிலிருந்து கலாப்ரியா எப்படி வந்தார் என்று அவர் எழுதப்போவதாகச் சொல்வார்.கலாப்ரியாவும் கோபாலும் என்று அவரது டயரியில் எழுதிய குறிப்புகளைக் காண்பித்திருக்கிறார்.நாங்கள் டயரியைப் பகிர்ந்து கொள்வது உண்டு.மீராவின் கனவுகள்+கற்பனைகள்= காகிதங்கள், என் தொகுப்புகளுக்கு முன்னதாக வெளியாகி விட்டதே என்று ஆதங்கத்துடன் சொல்லிக் கொண்டே இருப்பார்.

அவரது படைப்புகளைப் பொறுத்தவரை இன்னும் நான் உணர்ச்சி பூர்வமான வாசகனாகவே இருக்கிறேன். அவரது கதைகளில் அழைக்கிறவர்கள்,எஸ்தர், மிருகம் எல்லாம் தமிழ்ச் சிறுகதையில் யாராலும் நெருங்க முடியாத சாதனைகள். சுருக்கமாகச் சொன்னால் , அவர் இரண்டாவது புதுமைப் பித்தன்.

அந்த இருபது வயதுகளின் நினைவுகள் அற்புதமானவை. அடைய முடியாப் பொருளின் மீது ஆசை தீராது

அபிமானம் மாறாதுஎன்கிற தேவதாஸ் வரிகளில் தன்னையே கரைத்துக் காணாமலடித்துக் கொண்டவர்கள் நாங்கள்(இருவரும்). எங்களில் அவரைப் போல அலைக்கழிந்தவர்கள் யாருமில்லை, யாரிலும் அவரை விடச் சிறந்த உன்னதமான கலைஞனும் யாருமில்லை. பழைய நினவுகளை, மனதிற்குள் கொண்டாடிக் கொண்டிருந்தாலே போதும் என்பதைத் தவிர எனக்கு இப்போதைக்கு வேறு எதுவும் தோன்றவில்லை.

இருவருக்கும் பிடித்தமான ஒரு ஆங்கிலக் கவிதையின் சில வரிகள்-

“வெற்றியடைந்தவன்

நான்

அதைக் கொண்டாடவிடமாட்டாய்

நீ.“ -CHARLES GHASLEY


Visitors