Sunday, April 19, 2009

பழைய கவிதை நோட்டுக்களை இப்போது பார்க்கையில் உருப்படியான காரியமாய் சிலவற்றைச் செய்திருப்பது தெரிகிறது. கவிதைகளின் கீழ் தேதி எழுதியிருக்கிறேன்.சில பக்கங்களில் டயரிக் குறிப்பு போல் எழுதி வைத்திருக்கிறேன். இவளைப் பற்றி நீளமாக எழுதி கடைசியில்...... THE TRAIN என்று எழுதி வைத்திருக்கிறேன்.முன்பெல்லாம் நாலைந்து கவிதைகள் எழுதியதும், டிக்டேஷனில் பத்துக்குப் பத்தின வாங்கின சிலேட்டை, மதிப்பெண் அழிந்து விடாமல் காப்பாற்றி வீட்டில் கொண்டு வந்து காண்பிக்கிற எலிமெண்டரி ஸ்கூல் குழந்தையின் ஆசைகளோடு கல்யாணி அண்ணனிடம் கொண்டு காண்பிப்பேன்.அவர் பாராட்டுவார். தி டிரெயின் என்பதைப் பார்த்து விட்டு சந்தோஷப் பட்டார், தி.ஜானகி ராமன், இதேபோல் நீளமாக நினைவுகளை எழுதி விட்டு... அனுமார் வால் என்று முடித்திருப்பார். அதே போல் இருக்கிறது உன்னுடைய ட்ரெயின் ஆஃப் தாட்டும் என்று சொன்ன நினைவு.
நினைவுகள் ஒன்றுக்குள் ஒன்றாக அடுங்கிக் கிடக்கு. அதை திறக்கையில் அதற்குள் மூடி வைத்த, இன்னும் நினைவுகள் வெளிக்கிளம்புகிறது.அம்மா அடிக்கடிச் சொல்லுவாள்.வீட்டில் ரயில் அடுக்குப் பாத்திரம் ஒன்று இருந்தது என்று.அது தாத்தா காலத்தது.அப்பாத் தாத்தா பி.ஏ முடித்து விட்டு, சப் ரிஜிஸ்ட்ரார் ஆக இருந்தவராம். அவருக்கு மேஜிஸ்ட்ரேட் அதிகாரமும் உண்டு.தமிழில் நல்ல பாண்டித்தியம் உள்ளவராம்.பெரிய சிவ பூசைச் செல்வர். அவருக்கு மூன்று பெண் குழந்தைகள். ஆண் வாரிசே இல்லையாம்.அதற்காக பல பூசைகள் செய்திருக்கிறார்.பதினாறு அபார்ஷனுக்குப் பின் அப்பா பிறந்தாராம். அவரது `’சிவ பூஜையில்’’ கரடியே புகுந்ததில்லை போலிருக்கிறது.அப்பா அப்படியொன்றும், தாத்தாவைப் போல் இருக்கவில்லை போலிருக்கிறது. அதை அவரே குறிப்பிட்டு அபாரமான தமிழில் ஒரு உயில் எழுதி வைத்திருக்கிறார். அதையே நாலைந்து தொடராகப் போடலாம்.நம்ம பௌத்த அய்யனார் படித்து விட்டு ஆச்சரியப் பட்டார்.இதை உடனே நாம அச்சாக்கனும் என்றார்.
கடைசியாக, கழுகு மலை போய் ’உவாசம்’(உபவாசம் /விரதம்) இருக்கனும்ன்னு முடிவு பண்ணிப் போனார்களாம்.அப்பல்லாம் வில்லு வண்டியில் தான் பிரயாணம் போகனும்.ரஜவல்லிபுரம் தான் தாத்தாவுக்கும் ஊர்.அங்கிருந்து சுமார் நாப்பது மைலாவது இருக்கும் கழுகுமலை.அம்மா ஒரு நாலைந்து கதைகளை திரும்பத் திரும்பச் சொல்லுவாள்.எப்பொழுது சொன்னாலும் ஒரே மாதிரி இருக்கும்.அதனால் அதில் பொய்யில்லை என்று தாராளமாக நம்பலாம்.நடந்த கதைகள், காபி வந்த கதை, அப்பா, உலகப் போர் சமயத்தில், சிகரெட்டாக வாங்கி அடுக்கிய கதை.மகாத்மா காந்தியை சாவடி அத்தான் வீட்டில் பார்க்கப் போனது, சாவடி அத்தான், அவளுக்கு மருமகன் முறை. அவருக்கு அப்பாவை விட கொஞ்சம் தான் வயது கூட. அவருடைய அம்மா, அப்பாவுக்கு மூத்த அக்கா.சாவடி அத்தான் சொல்லித்தான் பதினாறு அபார்ஷன் கதை தெரியும்.
தெருவில் இன்னொரு உறவினர், மாகாண சபைத் தேர்தலுக்கு ஒரு ஆளுக்கு ஒரு பவுன் கொடுத்தாராம்.பெரிய சம பந்தி போஜனம் ஏற்பாடு செய்து தலை வாழை இலையில் உப்பு வைத்ததும் அதன் மேல் ஒரு பவுனை வைத்தார்களாம். சிலர் பவுனை எடுத்துக் கொண்டதும், தெரிந்தும் தெரியாமலும், நகக் கண்ணில் லேசாக மண்ணைத் தோண்டி உப்பின் மேல் வைத்துவிட்டுச் சாப்பிட்டார்களாம்.அவர் ஜெயித்தாரா தோற்றாரா அம்மா சொன்னது நினைவில்லை.
அம்மா ஐந்தாவது வரை படித்திருக்கிறாள்.கோமதி என்ற சண்முக வடிவு என்று கையெழுத்துப் போடுவாள்.கழுகுமலைப் பயணத்திற்கு நாள் குறித்து, அப்பாச்சி இன்னும் சில பெண்கள், காவலுக்கு வேல்க் கம்புடன் இரண்டு பேர், வண்டி பின்னாலேயே, நடந்தும் ஓடியும் வர. வண்டியில் சமையலுக்கு வேண்டிய பொருட்கள்.மாட்டுக்கு வேண்டிய கூளம். பாத்திரம், பிரயாணப் பாத்திரம் மட்டும்.பிரயாணப் பாத்திரம் அல்லது ரயில் அடுக்குப் பாத்திரம். `இஃது என்னவெனில்’ ஒரு பெரிய குத்துப் போணி, அதை மூடுவதற்கு சற்றே குழிவான ஒரு பாத்திரம். அதற்குள் ஒரு சருவப் பானை, அதற்குள் பெரிய அடுக்குகள் நான்கு, சிறிய அடுக்குகள் நான்கு, ஒரு விளக்கு, இரண்டு டம்ளர்கள்,இரண்டு கரண்டிகள், ஒன்று சோறு கிண்ட, ஒன்று பால் காய்ச்ச, மற்ற உபயோகங்களுக்கு, ஒரு சோறு வடிக்கும் சிப்பில், ஒரு இட்லித்தட்டு, மூன்று குழிகள் கொண்டது.,ஒரு வேப்பிலைத்தட்டு,(இதில் விடுகிற இட்லி, தோசை போல பெரிதாக இருக்கும்.) இரண்டு சாதாரணத் தட்டுகள், என்று இருபது, இருபத்தி ஐந்து பாத்திரங்கள். ஒன்றுக்குள் ஒன்றாக கச்சிதமாகப் பொருந்திக் கொள்ளும்.இடத்தை அடைக்காது.கங்கை கொண்டான் கோயிலில் ஒரு தாவளம் போட்டு பொங்கிச் சாப்பிட்டு விட்டு.ஆற்றில் கழுவிக் காயவைத்துப் புறப்பட்டால், அடுத்து கயத்தாறு.வழியில் சத்திரங்கள் இருந்தால் அதில் தங்கல், அரிசி, தவசங்கள், கொடுத்துவிட்டுச் சாப்பாடு.
சத்திரச் சாப்பாடு நன்றாகவே இருக்குமாம். திருச் செந்தூர் போற வழியில் விஜய ராகவ முதலி சத்திரச் சாப்பாடு, அதுதான் அம்மா சாப்பிட்டதாம்.அப்படி ருசியாய் இருந்தததாம்.அங்கு கட்டிக் கொடுத்த புளியோதரை, கெட்டுப் போகாமல், திருச்செந்தூர்ப் போய்த் திரும்பிய பின்னும் ஒன்றிரண்டு நாள் உபயோகிக்கும்படி இருந்ததாம்.. அந்த தவசுப் பிள்ளையை வரவழைத்து, யாரோ உறவுக்காரப் பெண், பூப்பெய்திய சடங்குக்கு, அஞ்சாம் கிழமைக்கு, சர்க்கரைப் பொங்கலும் புளியோதரையும் செய்து போட்டார்களாம்.
கயத்தாறு தாண்டியதும் மங்கம்மாசாலைப் பாதை, பெரிய பெரிய மரங்களோடு பகல் மாதிரியே தெரியவில்லையாம்.யாரோ இரண்டு பயணிகள், காவலுக்கு வந்தவர்களுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தார்களாம்.அவர்களும் கழுகுமலை போகிறவர்கள்தானாம்.அவரகளுக்கும் சேர்த்துச் சாப்பாடு சமைத்துப் போட்டார்களாம், வழியெல்லாம்.. அவர்களும் கூட மாட ஒத்தாசையாய் இருந்தார்களாம்.கோயில் நெருங்குவதற்கு கொஞ்சம் முன்னால், வழியில் ஒரு தோப்பில் வண்டியை அவிழ்த்துப் போட்டு விட்டு, சாப்பாடு முடித்து, காவல்க் காரர்கள் சற்று கண்ணயர்ந்ததும், கூட வந்த ரெண்டு பேரும், கையில் ஆளுக்கொரு கத்தியை எடுத்தார்களாம்.பெண்கள் ரொம்பப் பயப் படவில்லையாம்.நாங்க இன்னாரு, இன்ன ஊரு,எங்கட்ட எந்த நகை நட்டும் கிடையாது ரெண்டு நாளா எங்க சாப்பாட்டை சாப்பிட்ட பொறவும் எங்களைப் பத்தி தெரியாமலா இருக்கீக,. காவல்க் காரங்களை உசுப்புனா தெரியும் சேதி என்று பயந்தாலும் அதை வெளிக்காட்டாம பேசிருக்காங்க.காவக்காரங்கள நாங்க கட்டிப் போட்டுருக்கோம்,வெத்திலையில் மருந்து வச்சு,உங்களையும் அப்படிக் கட்டிப் போட்டுட்டு போக முடியாதா என்ன.உங்க கைச் சோத்தை தின்னுட்டோம்.எங்களுக்கு ரொம்பல்லாம் ஆசை இல்லை, அந்த பிரயாணச் சட்டியை மட்டும் கொடுத்திருங்க.திரும்ப ஊர் போறவரைக்கும் ஒருத்தனும் உங்களைத் தீண்ட மாட்டாங்க. சொல்லிக்கிட்டே கழுவிக் காய வைத்திருந்த அடுக்கை ஒண்ணு சேத்துப் பூட்டி தலையில வச்சுகிட்டுப் போய்ட்டாங்களாம்.அப்புறம் தான் உங்க அப்பா பொறந்தது.பொறந்து வளந்து, பதிமூனு வயசில என்ன இந்த மனுஷன் கையில ஒப்படச்சா எங்க அம்மா,எங்க அப்பாவுக்கு இஷ்டமே இல்லை.அது நினைச்ச மாதிரியே கிட்ண பிள்ளை சொத்தையெல்லாம் அளிச்சாச்சு. நானும் கோமதி, கோமதீன்னு கையெழுத்துப் போட்டு மாளாம, ஒரே பவரா எழுதிக் கொடுத்திட்டேன், என்பாள்.
`என் ஆயிசுல அப்படி ஒரு அடுக்கு செய்யனும்ன்னு ஆசை’ என்று எப்பவும் அந்தக் கதையை முடிப்பாள்.அதற்கு ஒரு சந்தர்ப்பமும் வந்தது. நீ பாத்திருக்கியா அதை என்றால், இங்க எங்கெல அது இருக்கும், கோவால் மாமா வீட்டுல இருக்கு,நான் சரியாக் கூட பாத்த்ததில்லை என்பாள்.நானும் நினைத்துக் கொள்ளுவேன், எப்பவாவது ராஜவல்லிபுரம் போகும் போது கோபால் மாமா வீட்டுல பாக்கனும்ன்னு. அப்பா இரண்டு பெரிய குத்துப் போணியை விற்க முடிவு செய்தார்.அதை. கல்யாணம் போன்ற பெரிய விசேஷங்களுக்குத்தான் உபயோகிக்க முடியும். இப்பல்லாம் அவை சமையல் பாத்திர வாடகைக் கடையில் கிடைக்கிறது.தவிரவும் நிறைய பேர் அதை அவர்கள் வீட்டு விசேஷத்திற்கு இரவல் கேட்கிறார்கள். அடுப்பில் ஏற்றக் கூடாதுன்னு சொல்லிக் கொடுத்தாலும் கரியோடதான் கொண்டு வந்து தாராங்க.இந்த சமாதனங்களை அம்மா ஏற்றுக் கொண்டாள். ஆனால் ஒரு நிபந்தனை போட்டாள். அதில் ஒன்றை வைத்து ரயில் அடுக்கு செய்ய வேண்டும்.
அப்பா பெருமாள் கோயில்த் தெரு கண்ணாசாரியை வரவழைத்தார்.அவரிடம் அம்மா விவரமாகச் சொன்னாள்.ஒரு மணி நேரமாவது சொல்லியிருப்பாள்.அப்போது நான் காய்ச்சலில் படுத்திருந்தேன்.பக்கத்து வீட்டுக் கல்யாணத்தில் அடிக்கடி பேசுவது கிளியா பாட்டும், என்னதான் நடக்கும் நடக்கட்டுமே பாட்டும் போட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பத்தான் பணத்தோட்டம் படம் வந்திருந்தது.`தேவன் கோயில் மணி ஓசை...’என்ற மணி ஓசை பாட்டை முதல்த் தடவையிலேயே பாதியில் நிறுத்தி விட்டார்கள். `சரி ஆச்சீ, சரி ஆச்சீ. என்று ஆசாரியார் சொல்லிக் கொண்டிருந்தார். இங்க பாரும், சித்துச் சிறுக்குன்னு அழகா இருக்கணும்.ஆ பூத்துன்னு செஞ்சுரக் கூடாது...என்று பத்து தடவையாவது சொல்லியிருப்பாள்.விவரம் கேட்க வந்தவர்,சின்ன ஆசாரி, சின்னவரென்றால் மகன். கல்யாணம் ஆனவர்தான். ஆனால் அவர் எப்பவுமே டிராயர் தான் போடுவார். முழங்காலுக்குக் கீழே வருகிற காக்கி டிராயர்.சட்டையெல்லாம் கிடையாது மார்பில் பூனூல், காதில் கடுக்கண்.அவரது அப்பாவின் ஜாடை அப்படியே இருக்கும்.நான் அவரை அவரது பட்டறையில் பார்க்கிற போதெல்லாம்.உலைக்கு சக்கரம் சுற்றிக் கொண்டிருப்பார்.உம்ம அப்பா இல்லையா என்று அம்மா கேட்டாள்.அவரு தேசாடனம் போயிருக்காரு, இன்னும் ஒரு வாரத்தில வந்துருவாக, நான் பாத்துக்கிடுதேன் ஆச்சி,என்றார். இவருதான் நல்ல வேலை செய்வாரு அவரு, பெரிய ஆசாரிக்கு, இப்ப கண்ணே பத்தலையே என்று அண்ணனும் சொன்னான்.இந்த ஒரு மணி நேரத்தில் நாலைந்து தடவையாவது அவர் வெளியே போய் மூக்குப் பொடி போட்டு வந்திருப்பார்.மூக்கிலும் மீசையிலும் பொடி ஒட்டி இருந்தது.டிராயர் கரியையும் மீறி அங்கங்கே மூக்குப் பொடி தெரிந்தது.
அம்மாவுக்கு ஆசையை அடக்க முடியவில்லை.ஒரு வாரம் போல் ஆனதும், விடியக்காலம் எட்டு மணி வாக்கில், என்னை அனுப்பி பட்டறையில் போய் பார்த்து வரச் சொன்னாள்.நான் போன போது அந்தப் பெரிய பட்டறை ஆள் அரவமே இல்லாமல் இருந்தது.உலையில் தீ, சாமபல் பூத்துக் கிடந்தது.பட்டறை பூராவுமே மண் தரை தான். சாணி போட்டு மெழுகி சில இடங்கள் அழகாய் இருந்தது. சுவர் பூராவும் மண் சுவர். தகரக் கூரை.பட்டறையின் வட மேற்கு மூலையில் வீடு. வீடென்றால் மேலும் நாலு மண் சுவர், அவ்வளவுதான்.எதிர்த்த மூலையில் ஒரு முருங்கை மரம். அதைச் சுற்றி ஒரு குளியலறை மற்றும் கக்கூஸாயிருக்க வேண்டும். பட்டறையின் அகலமான வாசலில் ஒரு மூங்கில்ப் படல்.அதைத் தவிர வேறு கதவே இல்லை.பட்டறை தெருவிலிருந்து உயரமாயிருந்தது. வீடு போன்ற பகுதி இருக்கும் இடம் தான் சற்று மறைவாய் இருக்கும். மற்ற எல்லாம் திறந்த மடம்.
நான், அண்ணாச்சி அண்ணாச்சி, என்று இரண்டு சத்தம் கூப்பிட்டேன், பதில் இல்லை.பட்டறைக்குள் ஏறினேன்.ஈயம் பூசவென்று சில பாத்திரங்கள், உலை அருகே கிடந்தது.நவச்சாரக் கட்டி ஒன்று பாதி உடைந்தது கிடந்தது.ஈயம் பூசப்பட்ட சில பாத்திரங்கள் பள பளவென்று மின்னிக் கொண்டிருந்தது.அவை தீயில் வைத்ததால், வெளிப்புறம் நிறம் மங்கிக் கிடந்தன.மறுபடியும் கூப்பிட்டேன், வீட்டுக்குள் சத்தம் கேட்டது.இதற்குள் பட்டறையின் அரை இருளுக்கு கண் பழகி இருந்தது. அந்த வீட்டின், அதை ஒரு அறையென்றுதான் சொல்ல வேண்டும், வாசலோரம் எங்கள் வீட்டுக் குத்துப் போணி போல் தெரிந்தது.நான் அருகே போனேன். அதே தான்.நன்றாக விளக்கி வைத்திருந்தது.இருட்டு இன்னும் பழகின பின் அருகில் போய்ப் பார்த்தேன், ஒன்றில் முழுக்க தண்ணீர் நிறைத்திருந்தது. அப்படியானால் இதை அவர்கள் புழங்குகிறார்களா? யோசித்துக் கொண்டிருக்கும் போதே உள்ளேயிருந்து அது யாரு என்ற கேள்வி வந்தது.நாந்தான் என்று சொல்லமட்டுமே முடிந்தது.சின்னவர் இருட்டிலிருந்து வந்தார். நேரியல் போல லேசான ஒன்றை இடுப்பில் சுற்றிக் கொண்டே வந்தார்.டிராயர் போட்டிருக்கவில்லை.முன்புறம் சற்று ஈரமாயிருப்பதாய்த் தெரிந்தது.சுவரோரம் பாயில் சுவரைப் பார்த்த படி ஒரு பெண் தும்மலாய்ப் போட்டுக் கொண்டிருந்தாள்.
உலைக்கு அருகே வந்து நின்று கொண்டேன். என்னவோ போலிருந்தது எனக்கு. அவரும் உலைக்கு அருகே வந்து சக்கரத்தைச் சுற்றாமல், துருத்தியைக் கையால் புஸ் புஸ்ஸென்று அடிக்கத் தொடங்கினார். சாம்பல் கனிந்து தீ பற்றிக் கொண்டது.நான் அடுக்கு செய்யவில்லையா என்று கேட்டேன். பெரிய அய்யா வேண்டான்னு சொல்லீட்டாகளே, அண்ணாச்சி வந்து ரூபாயை வாங்கிட்டும் போயிட்டாகளே, இது தகடு கனமாருக்கு. வேற கனம் குறஞ்சதிலதான் அப்படிச் செய்யமுடியும். இன்னிக்கி எங்க பெரிய ஆசாரி ஊர்லேருந்து வந்துருவாரு அவர்ட்ட சொல்லுவோம் தம்பி என்று சொல்லவும் வாசலில் ஊர் போய் வந்த மூட்டை முடிச்சுகளோடு பெரிய ஆசாரியும் அவரது மனைவியும் வந்து நின்றார்கள். உலையிலிருந்து எழுந்து சின்ன ஆசாரி உள்ளே போனார், அவசர அவசரமாக. உள்ளேயிருந்து ஆரத்தியுடன் அந்தப் பெண் வந்தது.என்னை ஒட்டியவாறு சென்றது, சின்னவர் இப்போது டிராயர் அணிந்து கொண்டு வந்தார். நான் சொல்லாமலேயே கிளம்பினேன், குனிந்து, ஆரத்தியயைத் தூரக் கொட்டும் அந்தப் பெண்ணின் மார்புப் பிளவைப் பார்த்தபடியே.
அம்மா பார்த்திராத ரயில் அடுக்கை .நான் சமீபத்தில் பார்த்தேன். இங்கு இடைகாலில், பக்கத்து வீட்டில்.


Visitors