Tuesday, February 5, 2013

நன்றி காட்சிப் பிழை திரை= ஃபெப் 2013


சிரிப்பு பாதி அழுகை பாதி...
அந்த வாரக் குமுதம் பார்த்ததும் ஒரே ஆச்சரியம். குமுதத்தின் அந்தப் பக்கத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.அதைக் கவனித்த கணபதியண்ணன் (வண்ணதாசனின் அண்ணன், எங்கள் முழு முதல் குருநாதர்),கேட்டார்,என்ன, வாத்தியார் பட விமர்சனம்ன்னு பாத்துக்கிட்டு இருக்கியா,,,,என்று. இல்லை, குமுதத்தில எப்படி மாயா வரைஞ்ச படம் வந்திருக்கு..என்று பார்க்கிறேன் என்றேன்.அவரும் என்னிடம் புத்தகத்தை வாங்கிப் பார்த்தார்.ஆமா, அதுவும் வாஷ் டிராயிங் இல்லாம கோட்டுச் சித்திரமா இருக்கு..நல்லாவும் இருக்கே..நானும் மாயான்னு கவனிக்கலையே என்றார். தமிழ்ப் பத்திரிக்கைகளைப் பொறுத்தவரை அப்போது பிரபலமானவை விகடன், குமுதம், கல்கி ஆகியவை. மாயா என்கிற மகாதேவன் விகடனில் வரைபவர். பெரும்பாலும் வாஷ்டிராயிங் தான் போடுவார். கோபுலு சிம்ஹா, மணியம் போன்றவர்கள் கோட்டுச் சித்திரங்களுக்குப் பெயர் பெற்றவர்கள்.மாயா, ஒரே ஒரு முறை, வழக்கத்திற்கு மாறாக கோபுலுவுக்குப் பதிலாக  ஜெயகாந்தனின் ‘எனக்காக அழு கதைக்கு கோட்டுச் சித்திரம் வரைந்திருந்தார்.அதைத் தவிர்த்து குமுதத்தில் வந்த, அதுவும் சினிமா விமர்சனத்திற்கு படத்தின் ஸ்டில்லைப் போடாமல் எம்.ஆர்.ராதாவின் கேரிகேச்சர் போன்ற படத்தை வரைந்திருந்தார். கணபதியண்ணன், சரி விமர்சனத்தைப் படிச்சியா, குமுதத்தில் வாத்தியார் படத்திற்கு இப்படி ஒரு நல்ல விமர்சனமான்னு ஆச்சரியமா இருக்கு, படிச்சுப் பாரு,என்றார்.
     எம்.ஜி. ஆர் ஒரு பெரிய கல்லைத் தூக்கிப் போட்டு விட்டார்,தனக்கு நடிக்கத் தெரியாது என்று சொன்னவர்களின் தலையில், என்று ஆரம்பித்திருந்தது விமர்சனம்.thirutaa திருடாதே படம்தான் எம்.ஜி.ஆர். வாழ்வில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்த படம்.அதற்கு அடுத்து வந்த படம் சபாஷ் மாப்பிள்ளே...அதைத்தான் இப்படிக் கொண்டாடி இருந்தது குமுதம்.திருடாதே படத்திற்குக் கூட வழக்கமான 30 மார்க் விமர்சனத்தையே எழுதியிருந்தது.அதற்கப்புறம் கணபதியண்ணன் படம் பார்த்து விட்டு வந்து சொன்னார்,படத்தில் வி.ஆர் ராஜகோபால் நடிப்பும் எம்.ஜி.ஆர் நடிப்பும் நல்லாத்தான் இருக்குப்பா, ஆனா எல்லாத்தையும் விட “ யாருக்கு யார் சொந்தமென்பது என்னை நேர்க்கு நேர் கேட்டால் நானென்ன சொல்வது....பாட்டு பிரமாதம்ப்பா,என்றார்.இல்லையே மனதில் இருக்குது ஒண்ணு அதை கணக்கா காட்டுது கண்ணு...பாட்டுத்தான் நல்லா இருக்கும் என்றேன்.போடா சின்னப் பைய்யா நீயும் உன் ரசனையும்.. என்கிற மாதிரி சிரித்துக் கொண்டார்.பின்னாளில் அந்தப் பாடல்களைக் கேட்கையில் அவர் சொன்னதுதான் சரி என்று புரிந்தது, அண்ணாச்சி அண்ணாச்சிதான் என்றும்.விஷயம் அதுவல்ல.அந்தப் படத்தில் வி.ஆர் ராஜ கோபால் நடிப்பு நன்றாக இருக்கும்.அது அவரது காலம்.தேவர் ஃபிலிம்ஸின் யானைப்பாகன், செங்கோட்டைசிங்கம் என எல்லாப் படங்களிலும் அவர் இருப்பார். எம்.ஜிஆரின் மன்னாதிமன்னன் படத்திலும் நல்ல ரோல்.  அவர் கலைவாணர் என்.எஸ்.கே தயாரிப்பு.குலதெய்வம் படத்திற்குப் பிறகு ‘குலதெய்வம் ராஜகோபால் என்று பட்டம் ஒட்டிக் கொண்டதுஅவர் எப்போது யாரிடம் என்ன சொன்னாரோ, தேவரின் அடுத்த படமான ‘தாய் சொல்லைத் தட்டாதேபடத்தில் ஒரு கொசுறு பாத்திரம் கொடுத்து உட்கார வைத்துவிட்டார்கள்.அதில் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆருடன் இணைந்தார். ராதாவின் பொற்காலம் அது.அவர் இல்லாத படமே இருக்காது. அவரை ஒப்பந்தம் செய்யப் போனால் தொகையை மட்டும்தான் பேசுவார்.படத்தில உங்க ரோல் என்னான்னா, என்று பேசினால், போய்யா, காமெடியன் இல்லேன்னா வில்லன், இல்லேன்னா காமெடி வில்லன்...மூனு ரோல்தானேய்யா எனக்கு.....கிளம்புங்கய்யா..””””””’’’’.”என்று சொல்லி விடுவார் என்பார்கள்.
     சபாஷ் மாப்பிள்ளே எம்.ஜி.ஆர் நடித்து வந்த முழு நீள நகைச்சுவைப் படம். அப்போதெல்லாம் இப்படிப் போட்டுக் கொள்வது ஒரு விளம்பர ஸ்டைல். அடுத்த வீட்டுப் பெண் படத்திற்கு இப்படிப் போட்டார்கள்.அதில் அநேகமாக எல்லா காமெடியன்களும் உண்டு. டி.ஆர்.ராமச்சந்திரன், தங்கவேலு,எம்.சரோஜா, ஏ.கருணாநிதி, ஃப்ரெண்ட் ராமசாமி, எம்.ஆர்.சந்தானம்,பக்கிரிசாமி( இவர்,எப்படி அழகும் நடிப்பும் கலந்த நடிகன் தெரியுமா), சாயிராம், சாரங்க பாணி என்று ஒரு பட்டாளம்.அன்பே வா, ஓரளவு காமெடி கலந்தது.புதுமையான பொழுது போக்குச் சித்திரம் என்ற விளம்பரத்துடன் வந்தது.மற்றப்படி பெற்றால்தான் பிள்ளையா படத்தில் கிட்டத்தட்ட சார்லி சாப்ளின் நடை உடை பாவனையினை எம்.ஜி.ஆர்.கைக் கொண்டிருப்பார். ஆனால் படம் சீரியஸோ சிரியஸ் டைப்.சபாஷ் மீனாபடத்தின் நீட்சியாகவே சபாஷ் மாப்பிள்ளே இருக்கும்.இரண்டிலும் கதாநாயகி மாலினி என்ற நடிகை.மாலினியின் சொந்தப் படம்தான் சபாஷ் மாப்பிள்ளே.சிவாஜி நடிக்க மறுத்ததால் எம்ஜியாரை அணுகியதாகக் கூட ஒரு பேச்சு உலவியது.சிவாஜி,  அறிவாளி, கலாட்டா கல்யாணம், ஊட்டி வரை உறவு என்று நிறைய காமெடி படங்கள் செய்திருக்கிறார்.எம்.ஜி.ஆர் ஒன்றே ஒன்றுதான். (தலைவன், தாயின் மடியில் எல்லாம் பிறகு என்ன என்று கேட்காதீர்கள்.காதில் பூச்சுற்றுவதில் இரண்டு வகை உணடு.)
     குலதெய்வம் ராஜகோபால் போலவே என்.எஸ்.கே தயாரிப்பில், ஏகப்பட்ட நகைச்சுவை நடிகர்கள் வந்தார்கள். புளி மூட்டை ராமசாமி,கொட்டாப்புளி ஜெயராமன், சி.எஸ்.பாண்டியன், தங்கவேலு, சிவசூரியன், காக்கா ராதாகிருஷ்ணன், என்று அவர் பட்டறையின் வார்ப்புகள் கொஞ்சமல்ல.வி.ஆர்.ராஜகோபால் வில்லுப்பாட்டுக் குழுவெல்லாம் கூட வைத்திருந்தார். புளிமூட்டை ராமசாமி ‘மருத நாட்டு இளவரசி படத்தில் எம்.ஜி.ஆர் இன் தோழனாக வருவார்.யாராவது தும்மல் போட்டால் போதும் சுற்றியிருப்பவர்களையும் சேர்த்து ரணகளப் படுத்தி விடுவார். அவரது இந்த வேடிக்கையான கோபமே இறுதிக் காட்சியில் எம்.ஜி.ஆர் மரண தண்டனை பெறுவதிலிருந்து தப்பிக்கவைக்கும். லாரல் ஹார்டியின் ANTICS’ ஆங்கிலப் படத்தில்,ஹார்டிக்கு ஹாரன் சத்தம் என்றாலே அலர்ஜி. இக்கட்டான சமயங்களில் ஒல்லிப் பிச்சான் லாரல் ஹாரன் சத்தம் எழுப்பியோ, ட்ரம்பெட் வாசித்தோ ஹார்டியை உசுப்பேற்றி விடுவார். அந்தக் காமெடியிலிருந்துதான் புளிமூட்டை காமெடி வந்திருக்கும்.அது பின்னும் தொடர்ந்து படகோட்டி படத்தில் நாகேஷுக்கு உசுப்பேற்ற ஏ.வீரப்பன் ஒரு தேய்ந்த ரிக்கார்டைப் போட்டு விடுவார்.அது இன்னும் தொடர்ந்து ஷங்கரின் முதல்வன் படத்தில் வடிவேலுவின் இடுப்பை யார் தொட்டாலும் அடி பின்னுகிற காட்சியாக மாறியிருக்கும்.காமெடியன்கள் மாறலாம் காமெடி மாறாது போலிருக்கிறது.
     கொட்டாப்புளி ஜெயராமனைப் பார்த்தாலே சிரிப்பு வந்து விடும் இத்தனைக்கும் அது ஒரு குழந்தை முகம், மதன் பாப் போல. ஆனால் கே.பி.ஜெ அசட்டுச் சிரிப்பெல்லாம் சிரிக்க மாட்டார்.தூங்காதே தம்பி தம்பி பாடலில்....அந்தப் பாட்டுக்கான காரணமாக தூங்கி விழுபவர்தான் கே.பி.ஜெ. எங்கள் பக்கத்து வீட்டு நடராஜ அண்ணனுக்கு அவர் மேல் பிரியமோ பிரியம்.நெல்லையப்பர் ஹை ரோட்டில் தெப்பக் குளத்திற்கு கொஞ்சம் கிழக்கே ஒரு சைக்கிள் ரிப்பேர் கடையோடு சேர்ந்து டி.எஸ் பாலையா ரசிகர் மன்றம் ஒன்று உண்டு. அதே போல் கொட்டாப்புளி ஜெயராமன் மன்றம் ஒன்று வைக்க வேண்டுமென்று நடராஜண்ணாச்சிக்கு ஆசையோ ஆசை.எங்க வீட்டுப் பெண் படத்தில் ஜெயராமன் சின்ன ரோல் செய்வார். சக்கரவர்த்தி திருமகள் படத்தில் என்.எஸ்.கே வின் முட்டாள்  சீடனாக வந்து, ஒரு கோடு ஒன்றை அழிக்காமல் சிறிதாக்க, அதை விடப் பெரிய கோடு ஒன்றைப் பக்கத்தில் போடணும் என்று கலைவாணரையே அசர வைப்பதைப் பார்த்து விட்டு வந்து அண்ணாச்சி ஏய் கே.பி.ஜேவுக்கு மன்றம் வச்சே ஆகணும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.அவரென்ன அண்ணாச்சி பாலையா மாதிரி திருநெல்வேலிக் காரரா என்றால்... மலையாளத்துக் காரனுக்கு எங்கேயெல்லாமோ மன்றம் இருக்கே என்பார். 
     டி.எஸ்.பாலையாவைப் போல நடிகன் தமிழ் சினிமாவில் யாருமே கிடையாது.அதை அண்ணாச்சி மனப்பூர்வமாக ஒத்துக் கொள்ளுவார்.யாரும் தான்.எந்த ரோலிலும் பின்னி விடுவார்.அவரது நகைச்சுவைக்கு கேட்கவே வேண்டாம்.டி.எஸ்.பாலையா போலவே டி.எஸ் துரை ராஜ் என்று பிரபல நடிகர். மலைக்கள்ளன், செல்லப்பிள்ளை மனம் போல் மங்கல்யம்,கப்பலோட்டிய தமிழன் என்று பிரமாதமாக நடித்திருப்பார். பானை பிடித்தவள் பாக்கியசாலி, ஆயிரங்காலத்துப் பயிர்,என்று இரண்டு படங்கள் தயாரித்தார்.ஒரு நடிகனோ நடிகையோ அதுவும் முன்னணியில் இல்லாமல் படங்கள் தயாரித்தால் அவ்வளவுதான். அம்பேல் ஆகிவிடுவார்கள்.டி எஸ்.துரை ராஜும் அப்படித்தான் ஆனார்.அவரது ஆயிரங்காலத்துப் பயிர் படத்தில் வில்லியாக வந்து பாட்டுப்பாடி(தோட்டத்துப் பூவையின்னும் தொடவேயில்லை,/தோள்களில் ஆண்கள் கைகள் படவே இல்லை”)ஆடிய மாதவி பிற்காலத்தில் பல படங்களில் நாகேஷுக்கு ஜோடியாக காமெடி ரோலில் நடித்தார்.(அவர் நடித்து ஒரு நீலப்படம் இருப்பதாக பரவலான கிசுகிசு ஒன்று உண்டு)அப்புறம் அவர் சீச்சீ இந்தப் பட உலகம் புளிக்கும் என்று சொல்லிவிட்டு சொந்த மண்ணான சிங்கப்பூருக்கே போய்விட்டார்
சிவாஜிகணேசனின் பல பேனர்களின் பல தயாரிப்புகள் அநேகமாக ஊற்றிக் கொண்டன என்றுதான் சொல்ல வேண்டும்.பிரபுராம்(மகன்கள்பெயர்) பிக்சர்ஸ்,சாந்தி(மகள்) பிக்சர்ஸ், கமலா (மனைவி)மூவிஸ்,ராஜாமணி(அம்மா) பிக்சர்ஸ்,என்று அவரோ அவரைச் சார்ந்தவர்கள் பெயரில் மற்றவர்களோ தயாரித்த படங்கள் அவ்வளவாக ஓடவில்லை.சிவாஜி பிலிம்ஸ் புதியபறவை, ராஜாமணி பிக்சர்ஸ் பாசமலர் மட்டுமே சூப்பர் டூப்பர் ஹிட்.பாலையா, எம்.ஆர்.ராதா,போலவே வீ.கே ராமசாமி காமெடி, வில்லன்,காமெடி வில்லன் என்று எல்லா ரோலும் பண்ணுவார்.தங்கவேலுவும் வில்லன் ரோலை அழகாகப் பண்ணுவார்.வி.கே ராமசாமி ஏ.பி நாகராஜனுடன் சேர்ந்து லக்ஷ்மி பிக்சர்ஸ் பேனரில் மக்களைப் பெற்ற மகராசி,வடிவுக்கு வளைகாப்புஎல்லாம் தயாரித்தார்.வடிவுக்கு வளைகாப்பு நீண்ட நாள் தயாரிப்புக்குப்பின் வந்து ஓரளவு வெற்றி பெற்றது. அப்புறம் ஏ.பி.என் தனியே விஜயலக்‌ஷ்மி பிக்சர்ஸ் பேனரில் நவராத்திரி, திருவிளையாடல் எல்லாம் தயாரித்தார். ராமசாமி பாவம் பொன்னான வாழ்வு போல மூன்று நான்கு படங்கள் தயாரித்து நொடித்துப் போனார்.
     தங்க வேலு நடித்த ரம்பையின் காதல் படம் ஹிட் ஆகவே அதைப்போலவே, நான் கண்ட சொர்க்கம் என்று ஒருபடம் தயாரித்தார்.நல்லவேளை அதோடு நிறுத்திக் கொண்டார்.தப்பித்தார். தங்க வேலு எந்தப் பாத்திரமானாலும் பிய்த்து உதறுவார்.நாகேஷ் வரும் வரை ஸ்ரீதர் படங்களின் வெற்றிக்கு தங்கவேலு முக்கிய காரணமாயிருப்பார். ஸ்ரீதர் வசனமெழுதிய யார் பையன் என்.எஸ்.கே காமெடி ஒரு அற்புதம். ஸ்ரீதரின் காமெடி சென்ஸ் தமிழில் யாருக்குமே வாய்க்கவில்லை. சோகம் கொப்பளிக்கும் மீண்ட சொர்க்கம், கல்யாணபரிசாகட்டும் அல்லது போலீஸ்காரன் மகளாகட்டும் அங்கங்கே சிரிப்புமழை இறுக்கத்தைக் குறைக்கும்.கலாட்டா கல்யாணம்இந்திய பாகிஸ்தான் போர் நடந்த சமயம் நடிகர்கள் எல்லாம் யுத்த நிவாரண நிதி பிரிக்க ஊர் ஊராய்ச் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக எழுதப் பட்ட சிறு ஸ்கிட். திருநெல்வேலியிலும் நடந்தது.அன்றைக்கு விஸ்வநாதன் வேலை வேண்டும் பாடலை எம்.எஸ் வி குழுவினர் இசைத்தனர். அப்போது விஸ்வனாதனைப் பார்த்து கிண்டல் செய்தபடி சிவாஜி, விஜயா,சாவித்ரி என்று நடிக நடிகையர்கள் போட்ட ஆட்டம் ஒரு ஹைலைட்.அதிலும் சாவித்ரி நிலை குலைந்து ஆடிய ஆட்டம் இன்னும் நினைவில் இருக்கிறது.எவ்வளவு பெரிய நடிகை,எப்படியெல்லாமோ ஆகிப் போனார்.எத்தனை பேர் தங்கள் மகளுக்கு அவர் பெயரை வைத்தார்கள் தெரியுமா. அவரும் படம் தயாரித்தே நாசமாய்ப் போனார்.
சாவித்திரியும் சந்திரபாபுவும் நல்ல சினேகிதர்கள்.சந்திரபாபு ஒரு மகத்தான கலைஞன். தமிழில் ஸ்லாப்ஸ்டிக் காமெடியின் தந்தை அவர்தான்.அவருக்குமுன்னர் எல்லா காமெடியனும் பக்கம் பக்கமாய் வசனம் பேசித்தான் சிரிக்க வைத்தனர்.அவர் நடனம், பாடல், என்று உடலை ரப்பராக வளைத்து நெளித்து சிரிக்க வைத்தவர். ஸ்டைலான மென்மையான ஸ்டெப்புகளுடனும் அற்புதமாய் ஆடுவார்.கடவுளைக்கண்டேன், பந்த பாசம் படங்களில் அவர் சுகுமாரியுடன் ஆடும் நடனங்கள் என்றைக்கும் டாப் டென். சுகுமாரியும் பிரமாதமான நடிகை. காமெடி ரோலும் சரி குணச் சித்திர ரோலும் சரி. நன்றாகவே செய்வார். அவர் பீம்சிங்கின் மனைவி.அந்தக் காலத்தில் ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் பெற்ற ஒரே காமெடி நடிகர். கவலை இல்லாதமனித,குமார ராஜா படங்களில் அவர் நடிப்பைப் பார்த்து விட்டு, நாங்கள் (கல்யாணி அண்ணன்,கணபதி அண்ணன், நான்) பேசிக் கொள்வோம்.யாருக்காக அழுதான் கதையை சந்திரபாபுவை வைத்து எடுக்கமாட்டார்களா என்று.ஆனால் நாகேஷ் தான் நடித்தார்.அப்பவும் பேசிக் கொண்டோம் இல்லை சந்திரபாபுதான் சரியான தேர்வு என்று.அவரும் அவரது இயக்கத்தில் வந்த ‘தட்டுங்கள் திறக்கப்படும் படத்தில் அப்படி ஒரு தன்னிரக்கமான ஊமைப்பாத்திரத்தில் நடித்து அடி வாங்குவார்.அதை விட அவர் குருடனாக நடிக்கும் கண்ணேபாப்பா பாத்திரம் நன்றாக வந்திருக்கும்.பாவமனிப்பு படம் அவரது கதைதான்.பதிபக்தியில் நடிக்கும் போது பீம்சிங்கிடம் சொன்ன கதை. அவரை வைத்துஅப்துல்லாஎன்ற பெயரில் படமாக்க பீம்சிங் திட்டமிட்டு ஏ.வி.எம் கூட்டுத் தயாரிப்பில் படமாக உருப்பெறும் முன் செட்டியார் சொன்னாரோ சிவாஜி ஆசைப்பட்டாரோ சந்திரபாபுவைச் சம்பந்தப் படுத்தாமலே படம் வந்து சக்கைப் போடு போட்டது.
சந்திரபாபு கதையை வைத்து சினிமாவே எடுக்கலாம்.(பிரபு தேவா கூட நடிக்கலாம்) அவரே பிலிமாலயா சினிமா இதழில் “ஒரு மாடிவீட்டு ஏழையின் கண்ணீர்க் கதைஎன்று ஒரு தொடர் எழுதினார். அடிமைப்பெண் படப்பிடிப்பில் அவரையும் இன்னொரு நடிகையையும் எம்.ஜி.ஆர் எப்படியெல்லாமோ,சரித்திரப் படப்பிடிப்பு என்ற பெயரில் பாடாய்ப் படுத்தினதாக என்று எழுதியிருப்பார்.அந்தத் தொடரும்,பின்னர் நடிகையின் தொடர் ஒன்று, இன்னொரு பத்திரிக்கையிலும் பாதியிலேயே நின்று போயிற்று.அல்லது நிறுத்தப் பட்டது.
எம்.ஆர்.ராதாவின் வாரிசான எம்.ஆர்.ஆர் வாசு தாயைக் காத்த தனயனில் அறிமுகமானார். கையை வெட்டிக் கொண்டு, ரத்தம் போனா உங்க அப்பனாய்யா கொடுப்பான்... என்று ராதாவிடமே வாசு கேட்கும் காட்சியில்தமிழ் மக்கள் உணர்ந்து சிரிப்பார்கள்.வாசு தனித்தும் பல படங்களில் பல ரோல்களில் நடித்தார்.காவியத்தலைவி படத்தில் அவரது சேடிஸ்ட் வில்லன் பாத்திரம் அருமையானது. பிரான், அஷோக் குமார் நடித்தவிக்டோரியா 203 இந்திப் படத்தின் தழுவலான ‘வைரம் தமிழ்ப் படத்தில் அசோகனுடன் பிரமாதமாக நடித்திருப்பார்.எத்தனியோ பேரைப் போல ஆல்கஹால் அவரையும் விழுங்கி விட்டது. ஆல்கஹால் விழுங்கிய இன்னொரு நல்ல கலைஞன், சுருளிராஜன்.காதல் படுத்தும் பாடு படத்தில் அறிமுகமாகி தன் வித்தியாசமான குரல் வளத்தாலேயே ஒரு புது ட்ரெண்டை ஸ்தாபித்தவர்.
பாலசந்தர் யூனிட்டிலிருந்து ஐ.எஸ் ஆர், ஹரி,நீலு, என்றெல்லாம் வந்தார்கள்.விவேக் மட்டுமே விவேகமாக நிலைத்தார். ஸ்ரீதர் யூனிட்டிலிருந்து வந்த டைப்பிஸ்ட் கோபு, மாலி, எல்லாம் சின்னச்சின்ன ரோலை தெளிவாகச் செய்வார்கள்.மாலி ஒரு நல்ல கலைஞன். அனுபவம் புதுமை படத்தில் ஒரு ஜெண்டில் (மேன்) வில்லனாக வருவார், சிம்ப்ளீ சூப்பர்ப் ஆக இருக்கும்.ஏன் தமிழ் சினிமா நல்ல கலைஞனையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை என்று தெரியவில்லை. இன்னொரு மகத்தான மூத்த கலைஞன் வி.கோபாலகிருஷ்ணன். டேவிட் லீனையும் ரேயையும் கரைத்துக் குடித்த கலைஞன்.  எடுபிடி ரோல்களிலேயே நடித்துப் போனார். போயே போய் விட்டார்.ஸ்ரீதர் கண்டுபிடிப்பில் வெண்ணிற ஆடை மூர்த்தி-ஆஷா ஜோடியில் மூர்த்தி மட்டும் தாக்குப் பிடித்தார்.மகேந்திரன் படங்களில் மூர்த்தி நல்ல கேரக்டர் ரோல் செய்திருக்கிறார்.
கலைவாணர்-மதுரம், சந்திரபாபு-பல நடிகைகள், தங்கவேலு-எம் சரோஜா தவிர நகைச் சுவை நடிகனுக்கு டூயட்டோ பாடலோ சிலருக்கே கிடைத்துள்ளது.இவர்களுக்குப் பின் நாகேஷ் மனோரமாவுக்கு நிறைய டூயட் உண்டு. தேவர் படங்களில் அது ஒரு செண்டிமெண்ட் கம் ஃபார்முலா.மற்றப்படி என் நினைவுக்கெட்டிய வரை ஆடி அடங்கும் வாழ்க்கையடா பாடல்தான் நகைச்சுவை நடிகனுக்கான அதிக பட்ச ஆறுதல்.அனுபவிராஜா அனுபவி படத்தில் ஒரு டூயட்,ஒரு தனிப்பாடல் சேர்த்து நாகேஷுக்கு நான்கு பாடல்கள்.நாகேஷ் யாருக்காக அழுதான் தவிர, நிறைய கதாநாயகன் ரோலும் செய்தார்.எதிர்நீச்சல், சுபதினம் போன்றவை ஹிட். பத்தாம் பசலி, எங்களுக்கும் காலம்வரும்,நவக்கிரகம், கைநிறைய காசு (நம்ம மின்னல் அண்ணாச்சி தயாரித்த படம்/பாடம்)எம்.எஸ் வி குழுவில் இசை அமைக்கும் சதன் சில படங்களில் நடித்துள்ளார். வீணை எஸ்.பாலசந்தரின் அவனாஇவன்? படத்தில் நாகேஷ் போலவே வந்து போவார்.யாருலே இது யாரு நாகேஷ் மாதிரி நடிக்கானே என்று கேட்டுக் கொண்டது தமிழ் ரசிக மனம்.இங்கே நடித்தால் சிவாஜி மாதிரி ,சண்டையிட்டால் எம்.ஜி.ஆர் மாதிரி, சிரிப்புக் காட்டினால் நாகேஷ் மாதிரி.நாகேஷ் பண்ணாத ரோலே இல்லை.பிணமாகக் கூட பிணமாகும் வரை கூட நடித்த ஒப்பற்ற கலைஞன்.நல்லவேளை அவர் தியேட்டர்தான் கட்டினார்,படம் எடுக்கவில்லை.
ஏழுமலை,கள்ளபார்ட்நடராஜன், என்னத்தெ கண்ணையா,இடிச்சபுளி செல்வராஜ்,பாண்டு , லூஸ் மோகன், அவர் சகோதரர் நம்பிராஜன்,என்று பாடப்படாத நகைச்சுவை ஹீரோக்கள் ஒரு கட்டுரை நிறைய தேறுவார்கள். மற்றப்படி நம் காலத்து நாயகர்களான கவுண்டர்- செந்தில்,வைகைப்புயல் வடிவேலு எல்லாரின் கதையும் ஏன் தடம் புரண்டு விடுகிறது.சிரிப்புபாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி...என்பது எல்லோரையும் விட சிரிப்பு நடிகர்களுக்கே அதிகம் பொருந்துமோ...Visitors