Tuesday, March 9, 2010

ஓடும் நதி-22


அப்பொழுதெல்லாம் வாய்க்கால் தண்ணீர் சுத்தமாக இருக்கும். பாட்டப் பத்து அருகே தான் வாய்க்கால் தொடங்கும். அங்கேயும் அதையடுத்து கல்லணையருகேயும் நன்றாய் இருக்கும், ஆனால் அங்கே ஆழம் அதிகமிருக்கும். அதற்கடுத்து பிறாமணக்குடி(அக்ரஹாரம்) முடிவில் ஒரு படித்துறை. ஆற்றுக்குப் போக நேரமில்லாத பள்ளிக்கூடக் காலங்களில் அங்குதான் நாங்கள் குளிப்பது வழக்கம். அங்கே கழுத்து அளவே ஆழம் இருக்கும்.வாய்க்காலின் மேலாக ஒரு குறுகிய பாலம். இரண்டு சைக்கிள்கள் தாராளமாகப் போகலாம். இப்போதென்றால் எப்படியும் அந்த ‘கேப்பில்’ ஆட்டோ போய் விடும் என்று சொல்லலாம்.அதிலிருந்து வாய்க்காலுக்குள், ”விரால்” (டைவ்) அடிக்கலாம்.ஆனால் குதித்ததும் தண்ணீருக்குள் கொஞ்சம் சுதாரித்து நிமிர்ந்து விட வேண்டும். இல்லையென்றால் தலை தரையில் முட்டிவிடும். ஒரு வைகுண்ட ஏகாதசி அன்று அப்படி விரால் அடித்து சரியாய் நிமிரும் முன், முன் வரிசைப் பல்லில் ஒன்று பாதி உடைந்து விட்டது.
நான் நீச்சல் கற்றுக் கொண்டதே எனக்குத் தெரியாது. ஒரு நாள் பாலத்திலிருந்து அத்தனை தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டு விரால் அடித்து, கையையும் காலையும் எப்படியோ ‘தபதப’ வென்று அசைத்து, பத்தடி தூரத்திலிருக்கும் கரைக்கு வந்து சேர்ந்தேன். கரையிலேயே நின்று குளிக்கும் சிவசங்கரன் பாராட்டாய்ச் சொன்னான், ”நல்லபெருமாள் மாதிரியில்லா டைவ் அடிச்சு நீந்துதான்” என்று. நல்லபெருமாள் பாலத்திருந்து பாய்ந்தால், தலை குப்புறப் போக மாட்டான். தண்ணீர் மட்டத்திற்கு கொஞ்சமே கீழாகப் போய், நாற்பது அடி தள்ளி, நல்ல ஆழத்தில் ஆட்களே குளிக்காத இடத்தில், தண்ணீருக்கு வெளியே பாம்பு மாதிரி தலையத் தூக்குவான்.ஆளும் ஒல்லியோ ஒல்லி. அவனை ‘நல்லபாம்பு’ என்றுதான் கூப்பிடுவோம்.அந்தப் பாராட்டைக் கேட்டதும் தான் புரிந்தது, ”ஓஹோ நாம நீச்சல் படிச்சுட்டோம்ன்னு”
சிவசங்கரன் எவ்வளவு பெரிய மரமென்றாலும் ஏறி விடுவான். 1965- இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நாங்கள் ம.தி.தா இந்துக் கல்லூரியிலிருந்து பெரிய ஊர்வலம் வரும் போது, அப்போதைய நெல்லைப் பாராளுமன்ற உறுப்பினர் வீட்டின் தண்ணீர்க் குழாயயைப் பிடித்து சரசரவென்று ஏறி கறுப்புக் கொடியைக் கட்டினான்.ஒரு வாரம் போலீஸ் அவனைத் தேடிக் கொண்டிருந்தது. அவனுக்கு அவ்வளவாய் நீச்சல் வராது.

கி.ரா. மாமா சொல்லுவார், ”நாம எந்த உசுர்ப் பிராணிய தண்ணீல தூக்கிப் போட்டாலும், ‘தத்தக்கா புத்தக்கா’ன்னு நீந்திக் கரை சேர்ந்திரும். இப்ப, நாய் நெறை(ய்)யக் குட்டி போடும். எல்லாத்துக்கும் பால் இருக்காதுன்னு அதில் ஒன்றிரண்டை கண்ணு தொறக்கும் முன்பே பா(ழு)ங்கிணற்றில போட்டுருவாங்க, அப்ப கூட அது நீந்திப் பார்க்கும்.மனுசந்தான் தண்ணீர்ன்னாலே பயப்படுவான்” என்பார்.
அதே மாதிரித்தான் சைக்கிள் பழகறதும். எனக்கு சைக்கிளை முற்றாக, பொறுமையாக கற்றுத் தந்தது, ’பசுங்கிளி’ மணி. அதற்கு முன்னால் நிறையப் பேர் கற்றுத் தந்தார்கள், ஆனால் என் பயத்தையும் ஆர்வமின்மையையும் பார்த்து, ”போடா. இன்னமே நீயே படிச்சுக்க” என்று விட்டு விட்டார்கள். பசுங்கிளி மணிதான்(எப்போதும் பச்சை டிராயரே போட்டிருப்பான்) முக்கியமாக சைக்கிளில் ஏறுவதற்கு நன்றாகக் கற்றுக் கொடுத்தான். ஆனால் அவனை, சைக்கிள் ஓட்டும்போதெல்லாமா நினைத்துக் கொண்டே இருக்கிறேன்.
”சைக்கிள் கற்றுத் தந்த நண்பன்
ஓட்டும்போதெல்லாமா
நினைவோட்டத்திலும் நிற்கிறான்.”
-என்று ஒரு கவிதையில் பொதுவாக இந்த ’ஆசிரியர்களை’ பதிவு செய்த நினைவு.
ஒரு விஷயத்தைக் கற்றுக் கொண்ட பிறகு அதை எப்படி மறப்பது। ஒரு சிநேகிதி சொன்னார், ”கைப்பேசியிலும் சரி, பொத்தான்களை ஒத்தி “டயல்” செய்கிற சாதாரண தொலைபேசியிலும் சரி, பார்வையற்றவர்கள் வசதிக்காக ஐந்தாம் இலக்கப் பொத்தானில் தொட்டு உணரும் வண்ணம் ஒரு தடித்த புள்ளியோ, சிறிய கோடோ இருக்கும்” என்று। (கணிணி விசைப் பலகையின் வலது ஓர எண்களிலும் ஐந்தாம் எண்ணில் இப்படி ஒரு கோடு இருக்கும், -இதில் எண்கள் அமைப்பு கீழிருந்து மேலாக இருக்கும்।) அவர் சொன்ன பிறகு எந்த செல் ஃபோனை தொட்டாலும், ஐந்தாவது எண்ணில் கோடோ, புள்ளியோ,தனித்த, தடித்த அடையாளமோ இருக்கிறதா என்று தன்னையறியாமலே பார்க்கத் தொடங்கி விட்டேன்।இதை இனி என்னிடமிருந்து பிரிக்க முடியுமா, தெரியவில்லை. கதைகளின் கதையும் இது போலத்தான்.

என் பேத்தி படுக்கையில் படுத்துக் கொண்டு, கதை கேட்டு நச்சரித்தாள்.ஒரு கதை சொல்லி முடித்து விட்டு அதன் ‘நீதி’யைச் சொல்ல ஆரம்பிக்கும் போது, அசுவாரஸ்யமாய், தூக்கமா வருது, பேசாமலிரு” என்றாள். நான். ”கதை கேட்க மட்டும் தூக்கம் வரலியோ”என்றேன். பட்டென்று,. “உன் கதையை நீயே வச்சுக்க,” சொல்லி விட்டு திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
”சொன்ன பின் கதை
யாருக்குச் சொந்தம்
முடியுமா, சொன்ன கதையைத்
திரும்ப வாங்கிப்
புலனுக்குள் பூட்ட
கதை சொல்லிக்கு”.

Visitors