பாதை நொடியின்
ஒவ்வொரு
குலுக்கலுக்கும்
நொதித்த திரவம்
பீப்பாயின்
பக்கவாட்டில் வழிந்து
பாளைச் சொட்டை
சுவைத்து
மயங்கியிருந்த வண்டுகளை
வெளித்தள்ளின.
கிறக்கம் நீங்க நீங்க
வண்டியின் வேகத்திற்கு
ஈடு கொடுத்து
அவை பறந்து
பறந்து விழுந்தன
நிழலில் நிறுத்தி
முற்றாய்ச் சுடாத
கலயத்தில் சாய்த்த
திருட்டுக்கள்ளை
மாந்தி மாடுகளுக்கும்
தந்தான்
இப்போது பாதையில்
நொடியே இல்லை
வண்டிக்கும் மாடுகளுக்கும்
வண்டியோட்டிக்கும்
-
கலாப்ரியா
கலாப்ரியாவின் கவிதைகளைப்பற்றி இரண்டுவகையான எதிர்வினைகளை நான் சந்திப்பதுண்டு. சிறுகுழந்தைகளுக்கு அவரது பல கவிதைகளை கொஞ்சம் அவர்களின் மொழியில் மாற்றிச் சொல்வேன். அவை முகம் மலர்ந்து புன்னகைக்கும். அதேபோல எல்லா நல்லவாசகர்களும் சட்டென்று அவரது வரிகளால் பற்றவைக்கப்படுகிறார்கள்.
மலையாளத்தின் பெருங்கவிஞர் அக்கித்தம் நம்பூதிரிப்பாட் என்னிடம் உடனே ஒரு தமிழ்க்கவிதையைச் சொல் என்றார் ஒரு சிறு சந்திப்பில். நான் கலாப்ரியாவின் ஒரு கவிதையைச் சொன்னேன். ஒரு கணம் திகைத்தபின் ‘கவிதை என்றால் இப்படி இருக்கவேண்டும். கண்ணாடியில் நம்முடைய பிம்பத்தைப்பார்க்க என்ன விளக்கம் தேவை?’ என்றார். அவ்வரியே அழகான ஒரு கவிதையாக இருந்தது
கல்பற்றா நாராயணன் சொன்னார். சமீபத்தில் ஒரு மாத்ருபூமி நாளிதழ் கட்டுரையில் அவர் முகப்புவரியாக கலாப்ரியாவின்
“அந்திக் கருக்கலில்
திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது
எனக்கதன் கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும் எனக்கதன்
பாஷை புரியவில்லை.”
என்ற வரியை கொடுத்திருந்தார். நாளிதழானதனால் ஒரேநாளில் அவ்வரி அதிபிரபலம் அடைந்து இரண்டுநாட்கள் செல்பேசியை அணைத்து வைக்க நேர்ந்தது.
‘இனி அந்த வரி கொஞ்சம் கொஞ்சம் மாற்றம் பெற்று நிரந்தரமாக பண்பாட்டில் இருக்கும்’ என்றார் கல்பற்றா நாராயணன்.
ஆனால் பல கவிதை வாசகர்களுக்கு கலாப்ரியா கவிதைகள் புரிவதில்லை. பலருக்கு அவற்றில் என்ன இருக்கிறதென தெரிவதில்லை.
அவர்களை கவனித்தால் ஒன்று தெரியும், அவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட வகையான வாசிப்புக்குப் பழகிப்போனவர்கள். அவர்கள் கவிதை என்றால் படிமம் மட்டுமே என்று நினைப்பவர்கள். உள்ளர்த்தம் தேடுபவர்கள். கவிஞன் சொல்லவருவதென்ன என்று பார்ப்பதே வாசிப்பு என நினைப்பவர்கள்.
நல்ல வாசகன் கவிதை முன் குழந்தை போல கண்ணையும் கருத்தையும் கொடுத்து நிற்கத்தெரிந்தவன். நல்ல கவிதை கூர்மையால் அல்ல கள்ளமின்மையால் மட்டுமே வாசிக்கத் தக்கது. ஒருகவிதை இயல்பாக நம்மில் உருவாக்கும் எண்ணங்களே அது சொல்ல வரும் விஷயம். அது கவிதையில் உள்ளது அல்ல, நாம் எடுத்துக்கொள்வது மட்டுமே.
ஒரு சிறியபறவை வான்வெளியில் கும்மாளமிடுவதைக் கண்டு மனம் மகிழ்கிறோம். சிந்தனைகளில் ஆழ்கிறோம். அது நமக்கு முடியுமென்றால் அந்தபறவை அப்படி கும்மாளமிடுவதன் சித்திரம் ஒன்றை மட்டும் அளிக்கும் கவிதை ஏன் நமக்கு அந்த எழுச்சியையும் சிந்தனைகளையும் அளிக்கக்கூடாது?
அது வெறும் தற்செயல்காட்சி அல்ல. கண்முன் விரியும் பல்லாயிரம் காட்சிகளில் அதைமட்டும் நம் பிரக்ஞை தேர்வு செய்கிறது. ஏனென்றால் அந்தக் காட்சியுடன் நம்முடைய அகத்தில் உள்ள ஏதோ ஒன்று — அது ஓர் எண்ணமோ உணர்வோ தரிசனமோ ஏதோ ஒன்று – தன்னை அடையாளம் கண்டுகொள்கிறது.
ஆகவே அந்த புறக்காட்சியை நாம் பார்க்கும்தோறும் அந்த அகத்தைத்தான் பார்க்கிறோம். புறக்காட்சியை பற்றி சிந்திக்கும்தோறும் அகத்தைத்தான் சிந்திக்கிறோம்
புறத்தே நாம் காணும் ஒவ்வொன்றும் அக எண்ணங்களால் ஆனது. நமது அகம் புறக்காட்சிகளின் வடிவில் மட்டுமே நம்மால் காணத்தக்கது.
இது நம் மரபில் புதிய விஷயமல்ல. புறத்தே நம் எண்ணங்களுடன் கலந்து நமக்கு காட்சியளிப்பதையே புறம் என்றார்கள் முன்னோர். அகத்தில் புறக்காட்சிகளின் வடிவில் காட்சியளிப்பதே அகப்புறம். அகத்தின் தீண்டலே இல்லாத தூய புறக்காட்சி இருக்கலாம், அது உச்சநிலையில் அறியப்படலாம். அது புறப்புறம் என்று சொல்லப்பட்டது. புறமே இல்லாத தூய அகம் ஒன்று உண்டு என்பதும் ஒரு ஞானநிலை ஊகமே
சங்க இலக்கியம் முதல் நம் மரபின் கவித்துவமே இவ்வாறு தன்னியல்பாக அகம் ஏற்றப்பட்ட புறக்காட்சி சித்தரிப்பில்தான் உள்ளது. சங்கப்பாடல்களில் எப்போதும் வெறும் புறவர்ணனைகள் மட்டுமே உள்ளன. ஆனால் அவை அந்த மனநிலையின் பிரதிபலிப்புகளும் கூட
அந்த மரபின் நீட்சியாக நம்மால் அடையாளப்படுத்திக்கொள்ளத்தக்க நவீனக் கவிஞர் கலாப்ரியா. படிம உருவக இடையீடுகள் இல்லாத தூயகவிதைக்காக தவமிருப்பவர் என தன்னைச் சொல்லிக்கொள்ளும் படைப்பாளி.
கலாப்ரியாவின் மேற்கண்ட கவிதை என்ன சொல்லுகிறது? கள் பீப்பாயுடன் காளைவண்டியில் செல்லும் ஒருவனின் சித்திரத்தை மட்டுமே.
கள் ததும்புகிறது. கள் விரும்பி ஒட்டியிருக்கும் ஈக்களை கள்ளே விலக்குகிறது. போதை கலையக்கலைய ஈக்கள் துரத்தி வருகின்றன. வண்டியை நிறுத்தி மாடுகளுக்கும் கொடுத்து தனக்கும் குடிக்கிறான். அதன்பின் காலமே இல்லை. நகுலன் சொல்வது போல ஒரு ‘சொரூப’ நிலை
இவ்வளவையும் ரசித்தால் போதும். இந்தக்காட்சி ஒரு கண நேர மின்னலாக கண்முன் வரவேண்டும் என்பதற்காகவெ இது வெறும் மூவரி கவிதையாக உள்ளது. இதைக் கண்டதுமே வரும் மன எழுச்சியும் புன்னகையும்தான் இக்கவிதை
நேரமிருந்தால் இக்காட்சி எதற்கு பிரதிநிதி என யோசித்துப்பார்க்கலாம். அது கவிதை அனுபவம் அல்ல, சிந்தனை அனுபவம்
-ஜெயமோகன்