கருட புராணம்.
சொல்லுவாரின்றி
பிரமோதீயஸ் பூமிக்கு
தீ கொணர்ந்த கதையை
உலகம் மறந்த பின்
கழுகு
சிபிச்சக்கரவர்த்தியிடம் வந்தது
”போகோ டி வி”’ குழந்தைகளுக்கோ
’பூச்சாண்டி
மெயிலு வண்டி’யில் வந்த பின்
புறாக்களையும்
சிபியையும் கழுகையும்
தெரியாமலே போயிற்று.
முள்வேலிக்குள்
கிழிந்து கொண்டிருக்கும்
சீனக் கூடாரத்துணிகளுக்கு மேலாக
எதிர்பார்ப்புடன்
பறந்து கொண்டிருக்கின்றன
பல கழுகுகள்.
போதனை பெற்று
சீடர்கள் அகன்ற பின்
இலையுதிர்ந்த மரத்தடியில்
வெயிலிடம் பாடம்
கேட்டுக் கொண்டிருக்கும் புத்தனையும்
அவ்வப்போது வந்து
பார்த்துச் செல்கின்றன
சில கழுகுகள்.
-கலாப்ரியா