Friday, November 9, 2012
Monday, November 5, 2012
நன்றி:காட்சிப்பிழை திரை-நவம்பர் இதழ்
காப்பி, ட்டீ, முறுக்கெ, பாட்டுப் புஸ்த்தேம்........
எம்.ஏ
சார்வா(ள்).... எனக்கு அத்தான் முறை. எம்.அருணாசலம் என்பதற்குப் பதிலாக எம். அன்பு
என்று பெயர் வைத்திருக்கலாம்.அன்பு என்றால் அவரிடம்தான் படிக்க வேண்டும். அவர்
அபூர்வமாகக் கோபப் பட்டார். எதிர் நடைபாதையில் நின்று கொண்டிருந்த அவரைக்
கவனிக்கவில்லை. படம் டிக்கெட் கொடுத்து விடுகிற அவசரம், தியேட்டரை நோக்கி வேகமாகப்
போனேன். குறுக்கே வந்த பஸ்ஸைக் கவனிக்கவில்லை.ஒரு ’ஆசை’தான்
பிழைத்தேன்.மயிரிழையில் தப்பித்தேன் என்பதை இப்படிச் சொல்லுவார்கள் திர்நவேலிப்
பக்கம்.( ஒரு ’அசை’ என்று கூட இருந்திருக்கலாம்.)” ஏண்டா..சினிமாப் படம்ல்லாம் திரும்ப போடவே
மாட்டானா.....”என்று கரெக்டாக பாய்ண்டைப் பிடித்தார்.உண்மையில், சனி,ஞாயிறு காலைக்
காட்சிகளில் சில ஆங்கில, இந்திப் படங்களை ஒரு முறைதான் போடுவார்கள். குறைந்த
கட்டணத்தில் திரையிடுவார்கள். சாதாரணக் கட்டணம் தரை டிக்கெட் 31 பைசா என்றால்,
இதற்கு 18 பைசா. ‘JASON AND THE ARGONAUTS” என்றொரு படம். சனிக்கிழமை பார்த்தவர்கள் நல்லாருக்குலே,கண்டிப்பா பாரு
என்று சொல்லியதால் அவசரமாக வந்தேன்.அதற்கேற்றார்ப் போல கூtட்டமும் இருந்தது.எனக்கு
ஆச்சரியம் எப்படி இந்த நியூஸெல்லாம் வேகமாகப் பரவுகிறது என்று. எல்லாமுமாகச்
சேர்ந்து என்னில் ஒரு அவசரத்தை உண்டாக்கி விட்டது. தரை டிக்கெட்டிற்கு கூட்டம் அடி
பிடியாய் இருந்தது. இந்த மாதிரி கூட்ட நேரங்களில், இந்த மாதிரிப் படங்களுக்கு
முதலில் பெஞ்சு டிக்கெட் கவுண்டரைத் திறந்த பிறகுதான் தரை டிக்கெட் கதவைத்
திறப்பார்கள்.
எம்.ஏ. சார்வா “ வா, வா, பெஞ்சுக்குப்
போகலாம், இன்னம இந்தக் கூட்டத்தில் வேற இடிபடப் போறியா.... நானும்தான் படம்
நல்லாருக்கு என்று கேள்விப்பட்டே வந்துருக்கேன்...” என்றார்.சரி என்று
வாயைமூடிக் கொண்டு அவர் பின்னால் பெஞ்சு டிக்கெட் கியூவிற்குள் நுழைந்தேன்.அத்தான்
தமிழ்வாணனின் பெரிய ரசிகர்.அநேகமாக விகடன் குமுதம் சுதேசமித்திரன்(புத்தகம்)
எல்லாம் வாங்குவார். எது தவறினாலும் ’கல்கண்டு’இதழைத் தவற விட
மாட்டார். தமிழ்வாணனின் எல்லாத் தொடர்களையும் பைண்ட் செய்து வைத்திருப்பார்.லீவு
நாட்களில் மட்டும்தான் தருவார்.அறை வீட்டில் பத்திரமாகப் பெட்டிக்குள்
வைத்திருப்பார்.படித்துவிட்டு பத்திரமாக திருப்பித் தர வேண்டும்.ஒரு வாரத்தில்
தரவில்லையென்றால், அந்த அக்கா வீட்டிற்கு வந்து விடுவாள்,”ஏல அத்தான் ஏதோ
புஸ்தகம் தந்தாகளாமில்லா.”.என்று கேட்ட படி.என் அம்மா சொல்லுவாள், ”ஏல நீ மெதுவாவே
குடுலெ, அப்படியாவது பாப்பா இங்கன வந்து போயி இருக்கட்டும்..” என்று.அம்மாவுக்கு
அந்த பாப்பக்காவை ரொம்பப் பிடிக்கும்.
தரை, பெஞ்சு, எல்லாம் நிரம்பி வழிந்தது.படம்
பிரமாதமாக இருந்தது.அத்தானுக்கு ஏற்கெனவே கிரேக்கப் புராணமெல்லாம் ரொம்பப்
பிடிக்கும். அவர் சொன்ன மாதிரியே சில மாதம் கழித்து படத்தை மறுபடி,
திரையிட்டார்கள்.ஆனால் இம்முறை ப்ரிண்ட் மோசமாக இருந்தது.ஒரே பிரிண்ட் தானே
மதுரைக்குத் தெற்கே எல்லாம் சுற்றி வரவேண்டும்.அந்த அத்தான்தான் சொன்னார், “ டேய்,
லெட்சுமியில் இந்த வாரம் போட்டிருக்கிற படம் தான் ‘என் கடமை’படத்தின் கதை,” என்று.
அகாதா கிறிஸ்டியின் நாவலான ’murder she said’என்ற படம்.இதை லட்சுமி தியேட்டர் மேனேஜரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.
அவர் உடனே தியேட்டரில் தட்டிபோர்டு, விளம்பர வண்டி எழுதுபவரைக் கூப்பிட்டு அதை
வாசலில் சற்று உயரத்தில் வைத்திருக்கும் போர்டில் எழுதச் சொன்னார். அந்த ஆள் என்னை
முறைத்துக் கொண்டே அந்த போர்டை அவிழ்த்து எழுத ஆரம்பித்தார். ”சும்மா
கெடக்க மாட்டாணுவ, மன்றம் மயிருன்னு வந்திருவானுவோ... “ என்று
முனுமுனுத்தார்.அவருக்கும் எங்களுக்கும் ஏற்கெனவே ஆகாது. ஆனால் நன்றாகத்தான்
எழுதியிருந்தார், உலை மூடியில் இருந்த வஜ்ஜிரம் போட்டுக் கரைத்த நீலக்கலரைத்
தொட்டு, ”மக்கள் திலகம்
எம்.ஜி ஆர் நடித்த ‘என் கடமை’ திரைப் படத்தின் கதை.”
படம் பார்த்து விட்டு மேனேஜர் சொன்னார் தம்பி சொன்னது
சரிதான்.இதையேதான் கொஞ்சம் மாத்தி, கிழவிக்குப் பதிலா எம்.ஜி.ஆரைப் போட்டு
எடுத்திருக்கான்” என்று.அவரே,”அடுத்த வாரம் SHADOW OF THE CAT” என்று ஒரு
படம் சார்ட் (CHARTCHART) போட்டிருக்கு நல்ல
படம்ன்னாங்க..பாருங்க”, என்றார். உண்மையிலேயே நல்ல படம்தான்.அத்தானிடம் சொன்னேன்.அவரும் தவறாமல்
ஆஜராகி இருந்தார் படத்துக்கு. “அத்தான் இதே மாதிரி ஒரு கதையை தமிழ்வாணன்
எழுதிருக்காருல்லா..”கான்ஸ்டபிள் கண்ணம்மா..” என்றோ என்னவோ ஒரு பெயர். என்றேன். அதை அத்தான் அவ்வளவாய் ரசிக்கவில்லை.ஆனால்
படம் நன்றாயிருக்கும்.ஒரு பணக்காரக் கிழவிக்கு நேரடி வாரிசுகளே இருக்காது.ஒரு பூனை
மட்டும்தான் துணை.அவளை அவளது சொந்தக்காரர்கள் கொன்று விடுவார்கள்.பூனைதான்
சாட்சி.பூனை ஒவ்வொருவரையும் நமபத் தகுந்த விதத்தில் கொல்லும். ரொம்ப லாஜிக்காகவும்
இயல்பாகவும் கெட்டிக்காரத்தனமாகவும் இருக்கும். ‘மவுஸ் ஹண்ட்’ என்று சமீபமாகக்
கூட ஒரு படம், எலியை வைத்து, இதே டைப்பில் வந்தது. (பூனை, எலி, நான் ஈ ஞாபகம்
வருகிறதா..) http://www.imdb.com/title/tt0055438/ சாண்டோ சின்னப்பா தேவர் ’ஷேடோ ஆஃப் த கேட்’படத்தை உல்ட்டா செய்து எடுக்கப் போவதாகவும் அதற்காக ஒரு பூனையை ட்ரெயின்
பண்ணுவதாகவும் செய்திகள் வந்தன.ஆனால் தமிழ்ப் பூனைகள் ஒத்துழைக்கவில்லை
போலும்.பேசாமல் அவர் பாம்பை வைத்து வெள்ளிக் கிழமை விரதமும் ஆட்டை வைத்து ஆ.
அலமேலுவும் எடுத்து விட்டார். சிவக்குமார் நன்றாக ஒத்துழைத்தார்.
சென்ற இதழ்க் கட்டுரையைப் படித்த கோவை ஓவியர்
ஜீவா ‘முக நூல்ப் பேச்சில்’ சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.உலகசினிமாவும் ஓவியமும் அவருக்கு
அத்துப்படி.தெய்வமகன் திரைப்படம் ‘MERI SURAT, THERI ANKHEN..”என்ற இந்திப் படத்தின் தழுவல், தாயின் கருணை இல்லை என்று அந்தப் படத்தின்
சுட்டியை தந்தார்.அது அப்படியே தாயின் கருணை கதைதான்.ஜி.வி.அய்யர் மேல் இருந்த
மரியாதை குறைந்து விட்டது. ஜீவாவிடம் நான் சொன்னேன், உலகத்தில் மொத்தமே ஏழு
திரைக்கதைகள்தான் உண்டு என்பார்கள், இந்தியாவில் எல்லா மொழிகளிலும் ஒரே கதைதான்
உண்டு போலிருக்கிறதுஅதுவும் ஹாலிவுட்டிலிருந்து திருடியதுதான் என்று.இப்போது தென்
அமெரிக்க(ஸ்பேனிஷ்), கொரிய,ஈரான் படங்களிலிருந்தும் திருடுகிறார்கள்.
குரோசொவாவின் செவன் சாமுராய் படத்தை திருடாத
மொழிகளே இல்லை என நினைக்கிறேன்.ஹாலிவுட்டில் ’டர்ட்டி டஸன்’என்று
எடுத்தார்கள். இந்தியில் அதை உல்ட்டா செய்து ’கொட்டேஷிகே’ என்று
எடுத்தார்கள்.அதில் டூ பீஸ் இகினி உடையில் நீச்சலடிக்கும் அல்க்க்க என்ற
வாளிப்பைப் பார்ப்பதற்கே மறுபடி மறுபடி பார்த்தோம். அல்க்காவின் அந்த அழகைப் பார்த்த
தமிழ்த் தயாரிப்பாளர்கள், ‘மதனமாளிகை’ திரைப்படத்தில் ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது..” என்று அல்க்காவை மிதக்க விட்டுப் பார்த்தார்கள்..”. இன்னும், ”இரண்டு கைகள்
நான்காக, ஆறாக மாறி வில்லன்களைப் பழிவாங்கும் கதைகள்” எல்லாக் காலத்திலும் வரும்
போலிருக்கிறது.சமீபத்தில் ஏதோ தொலைக் காட்சியில் ‘நூற்றுக்கு நூறு’ ஓடியது. நல்ல
படமாச்சே என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.அதில் ஒரு சம்பவத்தைப் பலரது கோணத்தில்
மறுபடி மறுபடி சொல்கிறார் பால சந்தர்.திடீரென்று உரைத்தது ஆஹா இது குரோசோவாவின்
‘ரஷோமான்’ உத்தியல்லவா என்று. 100/100 கதையே, சிட்னிபாய்ட்டர் நடித்த
TO SIR, WITH LOVE படத்தின் 90% ‘இன்ஸ்பிரேஷன்’ என்பார்கள். பாலசந்தருக்கு
இப்படி நிறைய ‘இன்ஸ்பிரேஷன்’ வரும். சர்வர் சுந்தரம் ‘எர்ரண்ட்பாய்’ என்ற ஜெரிலூயி
படத்தின் அப்பட்டமான தழுவல். நாணல், டெஸ்பரேட் அவர்ஸ். அபூர்வ ராகங்கள்- ஃபார்ட்டி
கேரட்ஸ், ஃப்யூரி ஆஃப் லவ். கேசனோவா -70 படத்தை கொஞ்சம் விலகித் தழுவி நான்
அவனில்லை,அப்படியே தழுவி ‘மன்மத லீலை. அமர் பிரேம் என்ற ஷக்தி சமந்தாவின் படத்தை
தழுவி வெள்ளி விழா எடுத்தார். ரிஷி கேஷ் முகர்ஜியின் ’சத்யகாம்’ படத்தின்
கார்பன் காப்பி, ‘புன்னகை’என்று குமுதத்தில் எழுதி
இருந்தார்கள்.ஆனால் நீர்க்குமிழியைத் தழுவி ஆனந்த் படத்தை ரிஷிகேஷ்முகர்ஜி
இந்தியில் எடுத்தார்.
இதில் பெரிய வேடிக்கை. ’பெக்கெட்’ என்றொரு
பிரமாதமான ஆங்கிலப்படம்.அறுபதுகளின் மத்தியில் வந்த்து.எங்கள் கல்லூரி ஆங்கிலத்
துணைப் பேராசிரியர், முத்துகிருஷ்ணன், இதைப் பார்க்கும்படி சொன்னார். கதையையும்
சொன்னார்.(ஃப்ரெஞ்சுநாவல் என்று நினைவு).சொன்னவர் சும்மா இருக்காமல்.” என்னப்பா
உங்க சிவாஜிகணேசனெல்லாம், இதில பீட்டர் ஒ டூல் ன்னு ஒருத்தன் நடிக்கான் பாரு,
சிவாஜியெல்லாம் பிச்சை வாங்கணும்.”என்று சொல்ல வகுப்பில் நாங்கள் அவருக்கு சாதகமாக, இன்னொரு குரூப் பாதகமாக
சத்தம் எழுப்பி ஒரே கலாட்டாவாகிவிட்டது.அவர் வாபஸ் பெற்றுக்
கொண்டார்.ரிச்சர்ட்பட்டன், பீட்டர் ஓ டூல் ஆகியோரின் நடிப்பு அற்புதமாக
இருக்கும்.கதைப்படி பீட்டர் இங்கிலாந்து அரசர், கேன்டெர்பெரி சர்ச்சின் பிஷப்
அவருக்கு ஒத்துப் போகமாட்டார். அதனால் தனது நண்பனான,லும்பன் ரிச்சர்ட் பட்டனை
சர்ச்சுக்குள் நல்ல பேர் எடுக்கவைத்து பிஷப் ஆக்குவார். ஆனால் மனம் மாறிய ரிச்சர்ட்
அவரது இஷ்டத்திற்கு கட்டுப்படாமல் மக்களுக்காக நிற்பான்.அவன் கொல்லப் பட்டு
விடும்போது நட்பு முன்னால் வரும். பிரமாதமான படம்.குல்ஸார் அண்ட் ரிஷிகேஷ் முகர்ஜி
கம்பெனி இதை அப்படியே பெரிய தொழிற்சாலை முதலாளியின் மகன், அவனது உலுத்தனான நண்பன்,
அவனை தொழிற்சங்கத்துக்குள் ஊடுருவ விட்டு தொழிற்சங்கத்தை உடைக்கப் பார்ப்பது,
நண்பன் உண்மையிலேயே தொழிலாளர்களின் தோழனாகி
உயிரை விடுவது என்று களத்தை மட்டும் மாற்றி ’நமக்ஹராம்’என்று
இந்தியில் எடுத்தார்.அமிதாப் ராஜேஷ்கன்னா நடித்தது.பிரமாதமாக ஓடியது.சிறந்த
கதைக்காக தேசீய விருது கூட கிடைத்த நினைவு.குல்ஸார் ஒரு ஜப்பானியக் கதையை/படத்தைத்
தழுவி ’கோஷிஷ்’ என்று ஒரு படம் எடுத்தார்.வாய் பேச இயலாத காதும் கேளாத இரண்டு மாற்றுத்
திறனாளிகளின் கதை. சஞ்சீவ் குமார் ஜெய பாதுரி நடித்த அருமையான படம்.ஆனால் ஜப்பான்
கதைக்கு இந்திய தேசிய விருது குல்ஸாருக்கு கிடைத்தது. இதை தமிழ்ப் படுத்தி, கமல்
ஹாசனும், சுஜாதாவும் நடிக்க நம்மை படுத்தி எடுப்பார்கள்.
பெக்கெட் மாதிரியே அந்தோனி குயின் கூனனாக
நடித்து, ஜீனாலோலா பிரிகிடாவுக்காக உயிரை விடும் “ஹன்ச்பேக் ஆஃப் நாட்ரடாம்” படத்தின்
இன்ஸ்பிரேஷனாக தமிழில் ’மணியோசை’ என்று ஒரு
படம் வந்தது.கல்யாண் குமார் கூனனாக நடிப்பார். கமல்ஹாசனின் ‘குணா’வுக்கும்
நாட்டர்டாம் கூனனுக்கும் பல ஒற்றுமைகளைக் காண முடியும். மணியோசைக்கு அப்புறம்
‘குனிந்தவர்’ பேரழகன் சூர்யா.
சவுண்ட் ஆஃப் மியூசிக் இந்தியில், ஜூலி ஆன்ட்ரூஸுக்குப் பதில் ஆண் பாத்திரமாக
ஜிதேந்திரா நடிக்க ’பரிச்சய்’ ( இதுவும் குல்ஸாரென்று நினைவு) ஆகி தமிழில், சஸ்பென்ஸ் திரில் சேர்த்து
சாந்திநிலையம் ஆகியது. பிக்மேலியன் நாடகம் மை ஃபேர் லேடியாகி தமிழில் மனம் ஒரு
குரங்கு, ஏணிப்படிகள் என ஜீவித்திருக்கிறது.நன்றாகப் படிப்பவரும் கொஞ்சம்
அறிவாளியானவருமான ஜாவர் சீதாராமன், டால்ஸ்டாய் ரசிகர். ’பேரண்ட் ட்ராப்’ படத்தை ’குழந்தையும்
தெய்வமுமாக்கினார், ராமு படத்தில் எஸ்.வி.சுப்பையா பாத்திரம் டால்ஸ்டாயின் கதா
பாத்திரம்.’ப்ராஸ் பாட்டில்’,சாபூ அன் தி மேஜிக் ரிங்” படங்களை ‘பட்டணத்தில் பூதமாக்கினார்.ஆனந்த ஜோதியின் மூலக்கதையை
ரிப்போர்ட்டர் ராஜு இந்திப்படத்திலிருந்து எடுத்துக் கொண்டார்.
’TAMING OF THE
SHREW’,” கதையைத் தழுவி மட்டும் தமிழில் பத்து படங்களும்,
படங்கள் தோறும் கதநாயகியை ஓட்டுகிற பாடல்களும் வந்திருக்கும்.’அறிவாளி’ தொடங்கி
வைத்தது, சிவாஜியே சவாலே சமாளி, பட்டிக்காடா பட்டணமா, என்று பெண்ணுக்கு
மூக்கணாங்கயிறு மாட்டிய படங்கள் பல. ’பெரிய இடத்துப் பெண்’ ஜெய்சங்கர்
நடிக்க,காதல்பறவை ஆயிற்று.ரவிச்சந்திரன் நடிக்க ‘குமரிப்பெண்’ ஆயிற்று. கமல்
நடிக்க ‘சகலகலா வல்லவன்’ என்று மறு அவதாரமெடுத்தது.” யார் காதிலும் பூச்சுற்றும்.....” இந்த சகல கலா வல்லவ மறு அவதாரத்துக்கும் தமிழில் அளவே கிடையாது.எம்.டி.வாசுதேவ
நாயரின் கதையை சேதுமாதவன் இயக்க கன்னியாகுமரி என்று ஒரு மலையாளப்படம்.தமிழ் சினிமா
உலகையேபுரட்டிப் போட்ட”பதினாறு வயதினிலே’ படத்துக்கு இன்ஸ்பிரேஷன் ஆயிற்று. கே.எஸ்
கோபாலகிருஷ்ணனின் கற்பகம் கதைதான் பாக்கியராஜின் முந்தானை முடிச்சாக ஆகிற்று. இதற்காக
வழக்குப் போட்ட கோபாலகிருஷ்ணனை,சமாதானப்படுத்தி நீங்கள் ஏ.வி.எம் பேனரில் படம்
ஒன்று செய்யுங்கள் என்று சொல்ல, அவர் தன் கதையான ‘படிக்காத மேதை’யை கமல்ஹாசனை
வைத்து ’பேர் சொல்ல ஒரு பிள்ளை’யாக்கினார்.பி.வாசு அதையே சின்னத்தம்பியாக்கி பெரிய இயக்குநராகினார்.அவரே
ஷம்மி கபூர் நடித்த ’புரஃபசர்’ படத்தை ‘நடிகன்’ என்ற பெயரில் சத்ய்ராஜ் நடிக்க இயக்கி வெற்றி வாகை சூடினார்.குகநாதன் ஒரு
படம் இதே படத்தைத் தழுவி எடுத்திருக்கிறார். ப்ரொஃபஸர் படமே ஒரு ஆங்கிலப்படத்தின்
தழுவல் என்று ஸ்க்ரீனில் படித்த நினைவு.
டி.என் பாலு “உயிர் மேல் ஆசை” என்று ஒரு
படம் எடுத்தார்.வெளிநாட்டிலிருந்து, அதுவரை பார்த்திராத தன் பாட்டியைப் பார்க்க
பேரன் வருவான்.அவன் வரும் விமானம் விபத்துக்குள்ளானது என்று ஒரு செய்தி. விபத்தில்
தப்பி காட்டுக்குள் காலொடிந்து தவிக்கும் ஸ்ரீகாந்தை கதாநாயகி காப்பாற்றி
அடைக்கலம் தருவதாக ஒரு ப்ளாட் நகரும்.பாட்டியைக் கொல்ல பல ஐடியாக்கள் போட்டு அதை
தானே முறியடிப்பதாக ஜெய்சங்கரை வைத்து ஒருப்ளாட் நகரும்.படம் பார்ப்பவர்கள்
கடைசியில் ( கடைசிவரை எங்களைப்போல அப்பாவிகள் கண்டிப்பாக இருப்பார்கள்,
சுந்தரமூர்த்தி நாயனார் என்றொரு படம் கே சோமு இயக்கியது.பண்டரி நாத் , ஜோத்லட்சுமி
நடித்தது, மொத்த தியேட்டரிலும் நான் மட்டும் கடைசி வரை இருந்தேன்.) ஸ்ரீகாந்த்
கதைக்கே சம்பந்தமில்லாத பாத்திரம்,ஜெய்சங்கர்தான் உண்மையான பேரன் என்று அதிசயிப்பார்கள்.ஆனால்
கதைக்கே சம்பந்தமில்லாத பாத்திர சமாச்சாரத்தை, கதையின் அந்த சாயலை எங்கேயோ கேட்ட
மாதிரி,அதுவும் சமீபத்தில் படித்ததாக இருக்கிறதே என்று யோசித்தால்..சுஜாதாவின்
முதல்க் கதையான ’சசி காத்திருக்கிறாள்’ நினைவில் ஆடியது.படமும் கதையும் ஒரே வாரத்தில் வந்தது. ஆக இரண்டுக்கும்
மூலம் வேறு ஏதோ என்று தோன்றியது.வெகு காலம் கழித்து சுஜாதாவிடம் இதைச்
சொன்னேன்.சிரித்தார்.
அந்தக் காலத்தில் ஒரு ஜோக் உலவியது.சஃபையர்
தியேட்டரில் இருந்து, ஒரு ஆங்கிலப் படம் முடிந்து கூட்டம் வெளியேறுகிறது.ஏ.எல்
நாராயணன்( மாடர்ன் தியேட்டர்சின் இந்தி,இங்லிஷ் டூ தமிழ் ரீமேக் படங்கள்
அத்தனைக்கும் வசனம் இவர்தான்.காமெடி சென்ஸ் அதிகம் உள்ளவர். திருடாதே படக்
காலத்தில் கண்ணதாசனிடம் காமெடி ட்ராக் எழுதிக் கொண்டிருந்தார்.)வருகிறார்
கூட்டத்தோடு. அண்ணேனண்ணேன் என்று ஒரு குரல் கூப்பிட்டுக் கொண்டே வந்து தோளில்
கைபோடுகிறது.”அண்ணேன் இதை தமிழில் நான் பண்ணலாம்ன்னு இருக்கேன், நீங்க விட்டுக்
கொடுக்கணும்” என்கிறார். அட போப்பா, டி.என்.பாலு, இதை ஏற்கெனவே இந்தியில் ஜாவேத்
அக்தாரோ, சலிம் ஜாவெத்தோ சுட்டு படம் ஷூட்டிங்ல இருக்குப்பா .”அது வந்த
அப்புறம், நீ வேணும்ன்னா காட்சிகளை சுட்டுக்கோ, ’கிஸ்கிஸ் கில்கில்’ படம்
பாத்துட்டு ’நான்’ படத்தில் பண்ணினியே அது மாதிரி....என்றாராம்.
Subscribe to:
Posts (Atom)