Sunday, December 28, 2008

`ஆண்டவன் கட்டளை.....’’.




``நான்கு வாரங்களுக்கு எந்த வித ப்ரீ பாஸும் செல்லாது.’’முதன் முதலில் இப்படி போர்டு வைத்தது பாசமலர் படத்திற்காகத்தான் ஸ்ரீ ரத்னா தியேட்டரில் என்று நினைக்கிறேன்.பாசமலர் படத்திற்கு பயங்கர வரவேற்பு. தாய்மார்கள் கூட்டம் அலைமோதியது.ஞாயிற்றுக் கிழமை மாலைக் காட்சிக்கு தரை, பெஞ்சு டிக்கெட்டுகள் முழுவதும் பெண்களுக்கு மட்டும்.கொடுத்தும் கூட்டம் குறையவில்லை. முதன் முதலில் நான்கு வாரங்கள் மாட்னி ஓடி சாதனை படைத்தது அந்தப் படம்தான்.ரொம்ப நாளைக்கு அதுதான் ரெக்கார்ட்.`நானும் ஒரு பெண்’ படம் தான் ஆறு வாரம் வரை மாட்னி ஓடி அதை முறியடித்தது.`மாட்னி ஹோல்டெர்’ என்று ஒரு ஒப்பந்தம். பட விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் காரர்களுக்கும் உண்டு.அந்தக் காலத்தில், அதாவது தரை டிக்கெட். (. சைக்கிள் சீட் அகலத்துக்கு பெஞ்சுகள் போடப்பட்டிருந்தாலும் அது தரைடிக்கெட் என்றே வழங்கி வந்தது.) 31 பைசாவாக இருந்த காலத்தில்,130/-ரூபாய் வசூல் ஆகும் வரை மாட்னி ஓட்டுவார்கள். அதற்கு குறைந்து விட்டால் தினசரி இரண்டு காட்சிகள்,`சனி, ஞாயிறு’ மூன்று காட்சிகள்.1966-ல் தனிப்பிறவி படம்தான் 63 நாட்கள், கடைசி நாள் வரை மாட்னி ஓடியது.125 நாள் மாட்னி ஓடி சாதனை படைத்தது.ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை. ஆனால் அது கலர்ப் படம். எல்லா ரெக்கார்டுகளையும் உடைத்து தூள் தூளாக்கியது.தாய்மார்களின் ஆதரவுடன் ஒரு சாதாரணக் கறுப்பு வெள்ளைப் படம் 175 நாளுக்கு மேலாக மாட்னியுடன் ஓடி சாதனை புரிந்தது. `பணமா பாசமா’. .

ஒவ்வொரு தியேட்டர்காரர்களும் சினிமாப்படப் போஸ்டர் ஒட்ட அவர்களுக்கென்று இடங்களைப் பிடித்து வைத்திருப்பார்கள்.எழுதப்படாத சட்டம் போல் ஒருவர் வழக்கமாக ஒட்டுகிற இடத்தில் இன்னொருவர் ஒட்ட மாட்டார்கள்.அப்படி யாராவது ஒட்டி விட்டால் `போஸ்டர் வார்’ ஆரம்பித்து விடும். அந்தப் பட போஸ்டர்களின் மீது கைவசமிருக்கும் பழைய போஸ்டர்களை நீள வாக்கில் வெட்டி புதுப் போஸ்டர் மேல் ஒட்டி விடுவார்கள்.அப்புறம் சமாதானமாகி விடும். விநியோகஸ்தர்கள் தருகிற எல்லாப் போஸ்டர்களையும் தியேட்டர்காரர்கள் ஒட்டுவதில்லை.அப்போதே, இருப்பதில் சிறிய சைஸான 20க்கு 30 போஸ்டர் ஆறு ரூபாய் வரை வரும்.60 க்கு 40 என்றால் பதினோரு ரூபாய் வரை வரும்.60க்கு 40, நாலு துண்டு சேர்ந்தால் பெரிய `பேனர்போஸ்டர்’. ஜெமினி ஸ்டுடியோஸ் படத்திற்கென்றால் ஆறு துண்டு பேனர் போஸ்டர் தவறாமல் போடுவார்கள். பெரிய தேரைச் சுற்றி மூடியிருக்கும் தகரத்தில் அநேகமாக எல்லாத் தியேட்டர் போஸ்டர்களும் ஒட்டியிருக்கும்.

ஒளி விளக்கு படத்திற்கு`ஈஸ்வர். டிசைன் செய்த ஆறு துண்டு போஸ்டர் ரொம்ப பிரபலம்.அதை விட `தீபாவளி வார’த்திற்கு அவர் வரைந்த நாலு எம்ஜியார் இருக்கிற(தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா’ பாடல் காட்சியில், ரவி காந்த் நிகாய்ச் தந்திரக் காட்சியில் எம் ஜி ஆர் நாலுவித தோற்றத்தில் வருவார்)போஸ்டருக்கு பெரிய கிராக்கி.ஒட்டாமல் ஒதுக்கி வைத்த போஸ்டர்களை, அதை ஒட்டுபவர்களோ அல்லது தியேட்டர் மேனேஜரோ டூரிங்க் டாக்கிஸ்காரர்களிடம், பாதி விலைக்கு கொடுப்பார்கள். அவரகள், விநியோகஸ்தர்களிடம் பேருக்கு ஒன்று இரண்டு போஸ்டர்களை மட்டும் வாங்கிக் கொண்டு மீதித் தேவைக்கு இப்படிப் பெரிய நகரங்களிலுள்ள தியேட்டர்காரர்களிடம் சல்லிசாக வாங்கிக் கொள்ளுவார்கள். .தியேட்டர்களில் விளம்பர வண்டி தள்ளும் துரை என்று ஒருத்தன் எனக்கு அறிமுகம். போஸ்டர் ஒட்டுபவர்கள், முன்னிரவில், அதாவது செகண்ட் ஷோ ஆரம்பித்ததும் தியேட்டரை விட்டுக் கிளம்புவார்கள். போஸ்டர்கள், பசை வாளி சகிதமாக. நகரம் பூராவும் அவர்களுக்கு `நிர்ணயிக்க’ப் பட்ட இடங்களில் ராமுழுக்க ஒட்டி விட்டு, விடியப் போகிற போது ஆற்றுப் பக்கம் வந்து விடுவார்கள். மேல் காலெல்லாம் பசையாக இருக்கும்.

அப்படி ஒரு நாள் ஊருக்குள் எல்லாம் போஸ்டர் ஒட்டி விட்டு, ஆற்று மண்டபத்தின் வெளிச் சுவரில் கடைசிப் போஸ்டரை ஒட்டிவிட்டு, இரண்டு கையிலும் பசையோடும், ஒரு தவிப்போடும் நின்று கொண்டிருந்தான் துரை. ஏதோ செசில் பி டெமிலியின் டென் கமான்மெண்ட்ஸ், வில்லியம் வைலரின் பென்ஹர் போன்ற பிரம்மாண்டப் படங்களின் ஸ்டைலில் `அரச கட்டளை’ப் படப் போஸ்டரின் எழுத்து,அதன் மேல் வாளைப் பிடித்தபடி எம் ஜி ஆர்.அது பக்தா வரைந்தது. எம் ஜி ஆர் குண்டடி பட்டு, பிழைத்து வந்ததும் வந்த, முதல்ப் படம்.படம் முன்பே எடுக்கபபட்டதுதான். சொல்லப்போனால் முதலில் பவானி என்ற பெயரில் எம் ஜி ஆர், எஸ் எஸ் ஆர், பானுமதியெல்லாம் நடிக்க தயாராகி, பாதியிலேயே நின்று போன படம்.எம்ஜியார் பதிப்பாசிரியராக இருந்த `நடிகன்குரல்’.பத்திரிக்கையில் விளம்பரங்கள் எல்லாம் வந்தது.அதில் தான் எம்ஜியார் தனது சுய சரிதையை எழுதி வந்தார்.அதுவும் பாதியிலேயே நின்றுபோனது. அப்புறம், விகடனில் நான் ஏன் பிறந்தேன் என்று வெளிவந்தது.செத்துப் பிழைத்த தலைவர் மேல் அப்போது அப்படியொரு வெறி.போஸ்டரும் நன்றாக இருந்தது.
பொதுவாக பக்தா டிசைனெல்லாம் அப்போது காலாவதியாகிவிட்டது. அந்தக் காலத்தில், N44 என்றுசுருக்கமாகப் போடும் கே. நாகேஸ்வர ராவ், ஜி ஹெச் ராவ், பக்தா இவர்கள்தான் போஸ்டர் டிசைனில் பிரபலம். பக்ஷிராஜா படங்களுக்கும் ராமண்ணாவின் பழைய படங்களுக்கும் `வேந்தன் பப்ளிசிட்டீஸ்’.ஏ வி எம்முக்கு ஜி ஹெச் ராவ்.டப்பிங் படங்கள் என்றால் ஸ்டுடியோ எஸ் .வி. சர்மா, மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு எஸ்.ஏ. நாயர், .இவருடைய வண்ணங்கள் உறுத்தாமல் இருக்கும். பக்தா, ஜி ஹெச் ராவ், வர்ணங்கள் சற்று அடர்த்தியாக இருக்கும்.
தவிரவும் இரண்டு பேரும் மார்பளவு படங்களை வைத்தே டிசைன் செய்வார்கள். லெட்டரிங்கை பார்த்தாலே சொல்லி விடலாம். யார் போஸ்டர் என்று. ஸ்ரீதர் பட்ங்களுக்கு சீநி.சோமு டிசைன் செய்வார்.அவர் ஸ்ரீதரைப் போலவே, சில புதுமைகளைச் செய்தார்.வெறும் போட்டோக்களை ஒட்டி வைத்தது போல் டிசைன் செய்யாமால் அதையே சற்று ஓவியம் போல் செய்தவர். தெய்வத்தாய்,. தட்டுங்கள் திறக்கப் படும், நெஞ்சில் ஓர் ஆலயம் படங்களுக்கெல்லாம்.அவர் வரைந்த போஸ்டர்கள் பெரிய மாறுதலாய் இருந்தது. வீரத்திருமகன் படத்திற்கு சோமு வரைந்த போஸ்டர்கள் வித்தியாசமானவை. பாடலகள் கண்ணதாசன். இதில் பாடல்கள் என்று எழுதாமல் ஏடும் எழுத்தாணியும் வெள்ளை வர்ணத்தில்-சிறியதாக, அதன் மேல் கண்ணாதசன் என்று அடர்ந்த வண்ணத்தில்., அதே மாதிரி வீணை,தபலா, இசைக் கருவிகள் மேல் விஸ்வநாதன்-ராம மூர்த்தி என்று டிசைன் செய்திருப்பார். இந்த நேரத்தில்தான். பேசும்படம் பத்திரிக்கையில் அழகாக லே அவுட்
செய்து கொண்டிருந்த பரணி குமார். முதன் முதலாக் `இருவர் உள்ளம்.’ படத்திற்கு டிசைன் செய்திருந்தார். அந்தப் போஸ்டர் வண்டிப் பேட்டை-ரொட்டி சால்னா கடை அருகே வழக்கமாக ராயல் தியேட்டர் போஸ்டர் ஒட்டுகிற இடத்தில் ஒட்டியிருந்தது. அப்படித்தான் மார்க்கெட் லைப்ரரிக்குச் செல்லவேண்டும்.காலையில் அது ஒரு பழக்கம். நான் அதையே அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்த போது., எதிரே வந்த வண்ணதாசன் என்னுடன் சேர்ந்து கொண்டார்.இரண்டு பேரும் அர்த்த புஷ்டியோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.அப்புறம் போஸ்டரைப் பார்த்தோம். அழகு.
வண்ணதாசன் அற்புதமாகப் படம் வரைவார். பாசமல்ர் படத்திற்குப் போஸ்டர் டிசைன், அதன் தயாரிப்பாளரான மோஹன் ஆர்ட்ஸ், மோஹன் ராம் தான். அதற்கு வைக்கப் பட்டிருந்த கட் அவுட்கள், பானெர்கள் எல்லாம் அற்புதமாய் இருக்கும். கல்யாணி அண்ணன் அதை அப்படியே வரைந்து வைத்திருப்பார்.சிவாஜி துப்பாக்கியால் கண்ணீரைத் துடைக்கிற மாதிரி ஒரு படம்,பென்சில் டிராயிங், இப்போதும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.
பரணியின் படங்களைத் தேடிதேடி ரசிப்போம். கல்யாணியின் கணவன் படத்திற்கு (பக்ஷி ராஜா ஸ்டுடியோஸ் படம்) பரணி வரைந்த டிசைனுக்காகவே படம் போனோம். படம் கூவி விட்டது. எம் ஜிஆர் படத்திற்கு பரணி டிசைன் பண்ண மாட்டாரா என்றிருந்தது.அடிமைப் பெண் படத்திற்கு ஒரு பேனர் போஸ்டர் வரைந்திருப்பார், ஆனால் அது அவ்வளவு நன்றாயிருக்காது. அவர் மனம் போல் வரைய விட்டிருக்க மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.ஸ்ரீதர் படங்களில் வெண்ணிற ஆடை படத்துக்கு பரணியின் கைவண்ணம் அழகாக் இருக்கும்.பரணியின் பாதிப்பில் நிறைய பேர் வந்தார்கள்.உபால்டு அதில் ஒருவர்.வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் பரணி, ஒரு வாய் பேச முடியாத ஓவியராக நடித்திருப்பார்.அதில் அவர் இறந்து போவது போல் காண்பித்திருப்பார்கள். தேவையில்லாத செண்டிமெண்ட் அது. ஆனால் கொஞ்ச நாட்களிலேயே, பரணி காலமான போது, கே.பாலசந்தர் மேல் இனம் புரியாத கோபம் வந்தது.
குழந்தைக்காக படத்திலிருந்து `ஈஸ்வர்.’போஸ்டர்கள் பிரபலமானது.அதற்கு அவர் வரைந்திருந்த ஒரு மசூதியின் பாதிக் கோள வடிவம், அதற்குள் ராமர், சிலுவை எல்லாம் எல்லாப் போஸ்டர்களிலும் சிறிதாக அழகாக, உறுத்தாத குறியீடாக இருக்கும். . இதே ஐடியா பாவ மன்னிப்பு விளம்பரங்களில் சற்று வெளிப்படையாய் பேத்தலாய் இருக்கும்.ஈஸ்வர் டிசைன் செய்யாத படங்களே இல்லை என்ற காலம் இருந்தது..
ஸ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரைக்கும் படத்திற்கு பாண்டு பென்சில் ஸ்கெட்சில் பிரமாதப் படுத்தியிருப்பார் எல்லா விளம்பரங்களிலும்..அற்புதமான கலைஞன். நகைச் சுவையில் அவரை ‘’மொக்கை போட வைத்து’’ புண்ணியம் கட்டிக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா.

துரைக்கு யாராவது டிராயர் பையிலிருந்து பீடியை எடுத்துக் கொடுத்தால் நல்லது., கடைசிப் போஸ்டரை மண்டபத்தில் ஒட்டிய இரண்டு கைகளிலும் ஏகப்பட்ட பசை.என்னிடம் கேட்டான்.அவனது முரட்டு டிரவுசர்ப் பையிலிருந்து பீடியை எடுத்துக் கொடுத்தேன்.பீடியைத் தவிரவும் வெறெதுவோ அசாதாரண வடிவத்தில் ககையில் பட்டது.அதுவும் சின்னபீடிக் கட்டுப்போல இருந்தது. அசட்டுச் சிரிப்பு சிரித்தான்.அவனிடம் ஒரு போஸ்டர் –அரச கட்டளை- கேட்டேன். வீட்டில் வைத்திருப்பதாகச் சொன்னான்.வீட்டுக்கு வாரும். அவனைச் சமீப காலமாகப் பழக்கம்.சில டீக்கடைகளில் தட்டி போர்டு வைத்து குறிப்பிட்ட தியேட்டரின் விளம்பரங்களை வைத்திருப்பார்கள்.அதற்காக போர்டு பாஸ் என்று தருவார்கள்.இரண்டு பேர் போகலாம் பெஞ்சு டிக்கெட்டிற்கு. இந்தப் பாஸை நல்ல படமென்றால் நாலு வாரத்திற்குத் தர மாட்டார்கள்.அதை போஸ்ட் ஒட்டும் துரை போன்றவர்கள் வாங்கி வந்து கடைக்காரரிடம் தருவார்கள்.சிலரிடம் அவன் அதைக் கொடுக்க மாட்டான். தரை டிக்கெட் விலைக்கு விற்று விடுவான். சில நல்ல ஆங்கிலப் படங்களுக்கு அவன் சும்மாவே தந்திருக்கிறான்.பீச் ரெட் என்று ஒரு அற்புதமான படம். போர் முனையிலிருக்கும் வீரர்கள்,வீட்டையும் மனைவி, சொந்தங்களை நினைத்தும், அந்நியோன்யமான நேரங்களை நினைத்தும் மணலில் பெண்ணைப் போல் செய்து, உணர்ச்சிகளைத் தீர்த்துக் கொள்வதாகவும் எல்லாம் வரும்.
ஏற்கெனெவே கேட்டு வைத்திருந்த அடையாளத்தை வைத்து துரையின் வீட்டைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது.முடுக்கு முடுக்காகப் போய்க் கொண்டிருந்தது.ஒரு வீட்டில் இன்னொரு துரை இருந்தான். சினிமாத் தியேட்டரில் போஸ்ட் ஒட்டுகிறவன் என்று சொல்ல தயக்கமாய் இருந்தது. சைக்கிளைத் தெருவில் வைத்து விட்டு வைத்திருந்தேன். பூட்டு சரியாக இல்லை.அவ்வப்போது சாவி கீழே தானாகவே விழுந்து விடும்.பின்னால இருக்கு போங்க என்று சொல்லி விட்டு ஒரு மாதிரியாகப் பார்த்தான் இன்னொரு துரை. கிட்டத்தட்ட வாய்க்கால் ஒன்று வந்து விட்டது. இதற்கு மேல் வீடு இருக்காது என்று திரும்பின போது ஒரு சின்ன்க் குச்சு வீட்டின் தார்சாலில் பசை வாளி தென் பட்டது. இரண்டு மூன்று சத்தம் கூப்பிட்டேன். பதிலே இல்லை.வீடு திறந்திருந்தது .வாய்க்காலிலிருந்து ஒரு கிழவி துவைத்த துணிகளோடு வந்து கொண்டிருந்தாள்.அவளிடம் கேட்டேன் துரை வீடு இதானா என்று.
ஆமா இதான் உள்ளே போ என்று சொல்லி,அவளும் ஒரு மாதிரியாகச் சிரித்தாள்.உள்ளே போனேன்.யாரோ ஒரு ஆள் இடித்துத் தள்ளினாற் போல் வெளியே போனான்.தரையிலிருந்து ஒரு பெண், புடவை எதுவும் இல்லாமல் எழுந்தாள். நான், ``துரை......’’ என்று இழுத்தேன். சற்றுத் தள்ளிக் கிடந்த சேலையைக் காலால் எடுத்தபடியே கத்தினாள். ``ஆமா தொரை, என்னத்த தொறக்க, சீத்துவமில்லாத நாயைத் தேடி வந்துட்டான்..திறந்து வீட்டுல நாய் நுழஞ்ச மாதிரி...’’இதற்குள் சேலையைச் சுற்றியிருந்தாள். அவள் பேச்சுக்கேத்த உருவமில்லை, மூக்குத்தியுடன் மிக அழகாய் இருந்தாள்.வேகமாக வெளியேறினேன். பின்னாலாயே வருவது தெரிந்தது.தார்சாலில் இருந்த பசை வாளியை காலால் எத்துவதும் அது உருளுவதும் கேட்டது.சைக்கிளை நினைத்த படி, வீடுகளாய்க் கடந்து தெருவுக்கு வந்தேன், எல்லா வீட்டிலிருந்தும் சிரிப்பது மாதிரிப் பட்டது.