Sunday, February 1, 2009

மரணம் என்பதே நித்திரையாம்...
செல்லையாவும் நானும் தான், வகுப்பைக் கட் அடித்து விட்டு, திறந்து கிடந்த தரை டிக்கெட் க்யூ வாசலில் நுழைந்தோம்.கலர்ப் படங்களே அப்போது அபூர்வம் அலிபாபாவும் நாற்பது திருடர்களும், படத்திற்குப் பின் நாடோடி மன்னன் பகுதி கலர், கட்ட பொம்மன், கொஞ்சும் சலங்கை, ஸ்ரீ வள்ளிக்குப் பின், கர்ணன் தான் 1964 –ல் வந்தது. அதுவும் பம்பாய் பிலிம் செண்டரில் பிராஸஸ் செய்யப் பட்டது. கலர் கன்சல்டண்ட் ஜே.எஃப். வாண்டர் அவேரா.தமிழில் ஜெமினியில் தயாரான முதல்க் கலர்ப் படம், ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை.போஸ்டர்களெல்லாம் பிரமாதமாய் இருந்தது. சீநி.சோமு டிசைன்.ஸ்பெஷல் கிளாஸ் என்பதால் யூனி ஃபார்ம் போடவில்லை.இதுதான் சான்ஸ்,நான் தான் கிளாஸ் மானிட்டர்,செல்லதுரை சாரிடம் ஏதாவது பொய் சொல்லிக் கொள்ளலாம் என்று செல்லையா ஆசையயைக் கிளப்பினான்.
சனிக் கிழமை காலைக் காட்சி. படம். எழுத்து போடத் துவங்கி விட்டார்கள்.கார்ட்டூன் சித்திரங்கள் போல கேரி கேச்சர் சித்திரங்கள் ஒரு புறம்அதன் அருகே. எழுத்து.அந்த டிசைனும் சோமு தான்.வெளிச்சத்திலிருந்து இருட்டுக்குள் வந்ததால் கண்ணே தெரியவில்லை.கடைசிச் சித்திரம் உயிர் பெற்று எழுந்த மாதிரி, காஞ்சனாவும் முத்து ராமனும் ``என்ன பார்வை உந்தன் பார்வை.. என்று பாடுவதாகப் படம் தொடங்கும்...கிளியோபட்ரா படத்திலும் இப்படித்தான். அழகான ரோமானியச் சித்திரங்கள் மீது டைட்டில் ஓடும். கடைசிச் சித்திரமாய் ஒரு பெரிய கப்பல்., அது கொஞ்சம் கொஞ்சமாய் உயிர் பெற்று சீசரின் நிஜக் கப்பல் கடலில் மிதப்பதாக படம் ஆரம்பமாகும்.பள்ளிக் கூடம் ஸ்பெஷல் கிளாஸ் எல்லாவற்றையும் மறக்கடித்து விட்டது படம்.நாகேஷும் பாலையாவும் தான் நினைவு பூராவும்.செல்லையா நன்றாகப் பாடுவான்.முதல்த் தடவை பார்க்கும் போதே. பாட்டைக் கேட்டதுமே மனப்பாடமாகி விடும் அவனுக்கு .வசனமும் அப்படித்தான். நாகேஷ் என்றால் உயிர் அவனுக்கு.இடைவேளையின் போதுதான் பார்த்தோம், செல்லப்பா, வைகுண்டராமன், என்று ஷாஃப்டர் ஹை ஸ்கூலே வந்திருந்தது. படத்துக்கு. செல்லையாவுக்கு கொண்டாட்டம் தாங்க முடியவில்லை. மாட்டினால் ஸ்கூல் பூராவுமே மாட்டும்.நமக்கென்ன பத்தோடு பதினொன்னா ரெண்டு அடி வாங்கிக்கிருவோம்., என்று சொல்லிவிட்டு, ’’ஹை செல்லபா, ஐயாம் செல்லாபா..என்றும் ’’தெயெர் யூ ஆர்’’...என்றும் கலகலத்துக் கொண்டிருந்தான்..படத்தில் நாகேஷ் வேகமாக ஒரு டயலாக் பேசுவார், (ஆனால் அப்போது ``பேசுவான்’’ என்றுதான் சொல்லுவோம்., ஏன்னா அவர் காமெடியன் அப்போது.)``அடுத்த வருஷம் ரெண்டு படம் எடுக்கப் போறேன் மசானத்தில் முத்தம், கத்தி முனையில் ரத்தம்’’ அதுக்கு அப்புறம் எவனுமே படம் எடுக்க மாட்டான்....’’ என்று படு வேகமாகச் சொல்லுவார்.தியேட்டரே குலுங்கிக் கொண்டிருக்கையில் முதல்ப் பேர் (மசானத்தில் முத்தம்) யாருக்கும் புரிந்திருக்காது. செல்லைய்யா சரியாகச் சொன்னான்.ஆனால் யாரும் ஒத்துக் கொள்ளவில்லை.ப் படத்தை பலதடவை திரும்பத் திரும்ப பார்க்கும் போதும் அதைக் கண்டு பிடிக்க முடியவில்லை.ரொம்ப நாள் கழித்து பேசும் படம் பத்திரிக்கையில்,காதலிக்க நேரமில்லை படத்தின் கதை, வசனம் முழுதும் போட்டிருந்தார்கள்.(அப்போது அது ஒரு வழக்கம், படம் வெளி வந்து கொஞ்ச நாள் கழித்து பேசும் படத்தில், நல்ல படங்களின் கதை, வசனத்தைப் போடுவார்கள்.)அப்போது தான் செல்லைய்யா சொன்னது சரி என்று எல்லோரும் ஒத்துக் கொண்டான்.
மறு திங்கள்க் கிழமை கிளாஸ்ஸில் செல்லையாதான் மாட்டிவிட்டு விட்டான். நான் சொன்ன பொய்யை சார்வாள் ஒத்துக் கொண்டு உட்காரச் சொன்னதும், செல்லையா,``தெய்ர் யூ ஆர் மாப்பிள்ளை’’ என்று சற்று சத்தமாகவே சொல்லிவிட்டான்.சார் பிடித்துக் கொண்டு விட்டார்,``எந்திரிங்கடா ரெண்டு நாய்ங்களும், ஒஹோ புரொடக்‌ஷன்ஸ் பார்த்துட்டு வந்து கதையா விடறீங்க.’’என்று சொன்னதும் மொத்த வகுப்புமே தெய்ர் யூ ஆர் என்று கத்தியது.``ஓஹோ எல்லாருமே பார்த்தாச்சா’’, என்று செல்லத்துரை சாரும் சிரித்துக் கொண்டே கேட்டார். சொல்லிவிட்டு ``நானும் ஞாயித்துக் கிழமை ஈவ்னிங் ஷோ பாத்துட்டேண்டா,நாகேஷ் பிரமாதமா நடிச்சுருக்கான். இல்லையாடா,நாகேஷ், நாகேஷ் தான் என்னடா, என்று எங்களைப் பார்த்துக் கேட்டார்,நான் பேய் முழி முழிச்சுகிட்டு நின்னேன்.அவர் செல்லையாவிடம் கேட்டார் என்னடா உங்களை என்ன செய்யலாம், நீங்களே சொல்லுங்க, என்று.அவன் சற்றும் தயங்காமல், ``பேசாம கல்ப்பூர ஆரத்தி எடுத்து மங்களம் பாடிடுங்கோ சார் என்றான்,’’அடி செருப்பால, எத்தன தடவைலெ பார்த்தெ வசனத்தை அப்படியே ஒப்பிக்கிற,’’என்று ஆச்சரியாமாய்க் கேட்டார்.வகுப்பில் பல குரல்கள், சார் அவன் ஒரு தடவை பார்த்தாலே கட கடன்னு சொல்லிருவான் சார், பாட்டு சூப்பரா படிப்பான் சார்,என்று சொல்லியது.சரி ஒரு பாட்டு படி, என்றார். ‘’உன்னை அறிந்தால் . நீ உன்னை அறிந்தால்’’,என்று வேட்டைக் காரன் படப் பாடலைப் பாடினான்.முழுவது கேட்டு விட்டு, ஏல நாகேஷ் பாட்டு பாடுறா, என்றார்.`` சீட்டுக் கட்டு ராஜா.. ‘’ என்று ஆரம்பித்தான். சரி, சரி உட்காருங்க என்றுசொன்னார். அன்றிலிருந்து சாருக்கு நாகேஷ் என்று பட்டப் பெயர் வந்தது.
நாகேஷின் மானசீகக் குரு ஜெரி லூயி தான். அதற்காகவே ஜெரி லூயீயின் படங்களை விரும்பிப் பார்போம்., நானும் செல்லையாவும். டீன் மார்டின்னும் ஜெரி லூயியும் நடித்த ஒரு கௌ பாய் படம் போலவே நாகேஷ், அன்னை இல்லம் படத்தில் செய்திருப்பார்.ஜெரியின், ``எரண்ட் பாய்’’ படத்தின் அப்பட்ட மான காப்பிதான், சர்வர் சுந்தரம்.ஆனால் இது தமிழ்த்தன்மையோடு இருக்கும்.சிண்டெர் ஃபெல்லா, படத்தில் ஜெரி,அழகனாக மாறும் மருந்தைக் குடித்துவிட்டு கீழே விழுந்து துடிப்பான், வாஷ் பேஸினை எட்டிப் பிடித்து. எழுந்திருக்க முடியாமல், எழுந்திருந்து தவிப்பார். அதே காட்சி மாதிரி, நீர்க் குமிழியில் நாகேஷ், அலாரம் ஸ்விட்சை எட்ட முயன்று தோற்கிற மாதிரி பிரமாதமாக நடித்திருப்பார்.ஜெரியின், ஃபேமிலி ஜுவெல்ஸ், ஒரு அழகான படம்.அதில் ஏழு வேடங்களில் அற்புதமாக நடித்திருப்பார், அதுதான், நவராத்திரி படத்திற்கு மூலம் என்றால் பொய்யில்லை.
லாரல் ஹார்டி பாணியில் இரண்டு பேர் நகைச் சுவை, முதன் முதலில் கடவுளைக் கண்டேன்,படத்தில் வந்தது.. சந்திர பாபு-நாகேஷ் ஜோடி அமர்க்களப் படுத்தியிருப்பார்கள்.லாரல் ஹர்டி மாதிரியில்லாமல் இது ஒரு வகையில் ஸ்லாப் ஸ்டிக் காமெடி யாக இருக்கும்.போலீஸ்காரன் மகள் படத்திலும் நாகேஷ் சந்திர பாபு உண்டென்றாலும் கடவுளைக் கண்டேன் காமெடி கலக்கலாக இருக்கும்.அதன் தொடர்ச்சியாக பணத்தோட்டம் படத்தில், நாகேஷ் – ஏ. வீரப்பன் நகைச் சுவை பிரமாதமாய் இருக்கும். ஏ. வீரப்பன் ஒரு அற்புதமான கலைஞன்.பின்னாளில் கவுண்ட மணிக்கு காமெடி ட்ராக் எழுகிறவராகி விட்டார்.
பீம் சிங் படங்களான சாது மிரண்டால், மெட்ராஸ் டூ பாண்டிச் சேரி எல்லாம் தமிழ் சினிமாவின் சூப்பர் காமெடி. இந்திய சினிமா என்று எடுத்துக் கொண்டாலே தமிழ்ப் பட நகைச் சுவை போல் வேறு எங்கும் கிடையாது.மஹ்மூத்தெல்லாம் சுத்த அலமபல். 1965 நாகேஷுக்கு ஒரு அற்புதமான வருடம் என்று நினைக்கிறேன்.எங்க வீட்டுப் பிள்ளையின் காமெடி எப்போது வேண்டுமானாலும் சொல்லிச் சொல்லி சிரிக்கக் கூடியது.ஸ்பூனரிஸம் வந்தவர் போல் நாகேஷ் உளறிக் கொட்டுவது. கொண்ட்டாட்டமாய் இருக்கும் ``மாப்பிள்ளைக்கு நாலு பாடி தச்சு ஒரு வேட்டி கட்டும், ச்சேய், நாலு மாடி வச்சு ஒரு வீடு கட்டும்’’
அதன் நூறாவது நாள் விழாவுக்கு எம்.ஜி.ஆர் சரோஜா தேவி,நாகேஷ் என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே வந்தது. லக்‌ஷ்மி தியேட்டரில் கூட்டமான கூட்டம்.சினிமா நட்சத்திரங்கள் நேரில் தோன்றுகிற நூறாவது நாள் விழாவுக்கு டிக்கெட் கட்டணம் மூன்று மடங்காகி விடும். அதோடு வேடிக்கை என்னவென்றால், தரை டிக்கெட் கட்டணம்தான் மிக அதிகமாயிருக்கும். உயர்ந்த வகுப்பென்றால் குறைவாயிருக்கும்.தரை டிக்கெட் 25-ரூபாய் என்றால்.சோஃபா டிக்கெட் 10/-ரூபாயாக இருக்கும்.மாட்னி காட்சியின் இடை வேளையில். மேடையில் தோன்ற வேண்டிய நடிகர்கள், மாலை ஆறு மணிக்கே வந்தார்கள். அவர்கள் வந்ததும் போலிஸ் துரத்தோ துரத்தென்று துரத்தினார்கள்.அது இந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டம் முடிந்திருந்த நேரம்,எம்.ஜிஆர் உச்சத்தில் இருந்தார்.காங்கிரஸ் கல கலத்துக் கொண்டிருந்த நேரம்.போலீஸ் துரத்த ஆரம்பித்ததும், தியேட்டர் முன்னால் கூடியிருந்த நாங்கள், கண்ட தெருவுக்குள் எல்லாம் ஓடிப் புகுந்து தியேட்டரின் பக்கவாட்டுத் தெரு வழியாக, வந்து நின்றோம். அந்தத்தெரு ``தரைப் படத்திற்கு’’ பிரசித்தமான தெரு.(தரையில் படுத்தபடி டூயட் பாடுகிற படம் என்பான் எங்கள் வீட்டுக்கு, கிராமத்திலிருந்து வருகிற குடியானவன்) ரோஸ் கலரில் எம்.ஜி.ஆர்., சரோஜாதேவியை விட ரத்னா மொழு மொழு வென்றிருந்தார்.நாகேஷ் தான் கலக்கிக் கொண்டிருந்தார்.சுமார் பத்தடி உயர மொட்டை மாடியில் நின்று எல்லாருக்கும் கை அசைத்துக் கொண்டிருந்தார்.அவர்களை பக்கத்தில் சென்று பார்க்க வசதியாய் ஒரு மின் கம்பமிருந்தது.செல்லையா விடு விடுவென்று அதில் ஏறி கையிலிருந்த ஸ்கூல் நோட்டை நாகேஷிடம் நீட்டினான், அவர் வாங்கிக் கொண்டு அரைத்தாள் களாகக் கிழித்து கையெழுத்துகள் போட்டு பறக்கவிட்டார். என் கைக்கு ஒன்று சிக்கியது.செல்லையா மின் கம்பியிலிருந்து இறங்குவதற்குள், கூட்டம் எல்லாவற்றையும் பொறுக்க ஆரம்பித்தது.நல்ல அச்சான தமிழ் எழுத்துக்களில், ``அன்பு வாழ்த்துகள், தாய்- நாகேஷ்’’ என்று எழுதிக் கையெழுத்திட்டிருந்தார். சிலருக்கு நாகேஷ் என்று மட்டும் எழுதியிருந்தார்.செல்லையா கெஞ்சிக் கொண்டிருந்தான், ஏண்ட்ட குடுத்திருல, என்று. இரண்டுக்கும் மனசில்லை. நான் ஆறு மணி காட்சிக்கு டிக்கெட் ரிசர்வ் செய்து வைத்திருந்தேன்.சரி அப்போது கையெழுத்து வாங்கிக் கொள்ளலாம்.. என்று அவனிடம் கொடுத்து விட்டேன்.ரொம்ப நாளைக்கு சொல்லிக் கொண்டிருந்தான், சோமு தான் தந்தான் என்று..
ஸ்ரீதர்-நாகேஷ் காம்பினேஷன், ஒரு விதமென்றால்,கே.பால சந்தர் வேறு விதம்.எனக்கும் லாலா மணிக்கும் கே பி யின் படங்களிலியே ரொம்பப் பிடித்தது, `அனுபவி ராஜா அனுபவி’ தான். இரட்டை வேடப் படங்களில் அது ஒரு சிகரம். பணக்காரக் குடும்பம் படத்தில் நாகேஷ் மூன்று நான்கு ரோலில் வருவார் அது கூட இதற்குப் பின் தான்..நாங்கள் பார்த்ததிலேயே முதல் ஞாயிற்றுக் கிழமை மாலைக் காட்சிக்கு தியேட்டரும் கொள்ளாமல், அதற்கு எதிர்த்த ரயில்வே பீடர் ரோடு முழுக்க கார்கள் வந்து நிறைந்திருந்த படம் அது தான்.அந்த கார்களைக் காண்பிப்பதற்காகவே லாலா மணி., படம் முடிவடையும் தருவாயில் வெளியே கூட்டி வந்தான்.

நாகேஷ்,கே.பியின் படங்களில் சும்மா நகைச் சுவைக் காட்சிகளில் மட்டும் நடிக்காமல் அற்புதமான கேரக்டரும் செய்வார். பல படங்களில் கதையை நகர்த்தும் சூத்ரதாரியே அவர்தான். நூற்றுக்கு நூறு, தாமரை நெஞ்சம்.. புன்னகை போன்றவை மறக்க முடியாதவை..தருமியாக வந்து சிவாஜியை தூக்கி சாப்பிட்டு விடுவார்.பாலையாவும் நாகேஷும் இல்லாமல் தில்லானா மோகனாம்பாள் இவ்வளவு வெற்றி பெற்றிருக்குமா என்பது சந்தேகம். அபூர்வ ராகங்களில் அவரின் ரோலை வேறு யாரும் செய்ய முடியாது.கொஞ்சம் கூட மிகை நடிப்பில்லாமல், எதிர் நீச்சல், சுப தினம் போன்றவற்றில் பிரமாதப் படுத்தியிருப்பார்.
தேர்த் திருவிழா படத்தில் நடிக்கும் போது,`என்னப்பா கிழவன் இன்னும் குமரனாகலையா’’, என்று மேக் அப் ரூமில் இருக்கும் `சின்னவரை’ (பெரியவர் சக்ர பாணி) கேலி பேசியதாக வந்த கிசு கிசு வைக் கேட்டு எம்ஜி ஆர் அவரை தன் படங்களிலொதுக்கி வைத்திருந்தார் என்பார்கள்.அதனால் அப்போது சோ, எம்ஜியாரின் எல்லாப் படங்களிலும். வந்தார்.ஆனால் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு எம் ஜி ஆரே வலிய அழைத்ததாகச் சொல்வார்கள்.அந்தப் படத்தில் எம் ஜி ஆரின் எடிட்டிங் திறமை பற்றி நாகேஷ் ஒரு சினிமா இதழில் அற்புதமான ஒரு கட்டுரை எழுதி இருப்பார்.மனப் பூர்வமான பாராட்டு அதில் தொனிக்கும்.

மகளிர் மட்டும் படத்தில் பிணமாகவே வாழ்ந்திருப்பார் நாகேஷ். முக பாவத்தில் அப்படியொரு கண்டினியூட்டி. தமிழ் நாட்டின் எந்த நடிகனுக்கும் சவால் விடுகிற சித்தரிப்பு அது.அவர் ஒரு நல்ல விருதைக் கூட வாங்கவில்லை என்பதே சொல்லும் அவன் ஒரு மகா கலைஞன் என்பதை.

``பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய் மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்.’’ என்கிற சுரதாவின் பாடல் வரிகளைப் பாடி நடித்த, அந்த அற்புதக் கலைஞன் நீர்க்குமிழியாக மறையவே மாட்டான்.அவன் மரணம் ஒரு நித்திரை மட்டுமே.

Visitors