Sunday, June 21, 2009

........நாம் சிரிக்கும் நாளே திருநாள்.

வீடு, அடுக்களை ,பாட்டாசல், மேல்த் தார்சால், என்று மூன்றும் கட்டை குத்தியது.கீழ்த் தார்சால் வெறும் தகரச் சாய்ப்பு, ஆனால் வெக்கை தெரியாவண்ணம்,கனத்த பிரப்பந்தட்டி அடித்திருக்கும்.த்கரத்திற்கும் அதற்கும் அரையடி இடைவெளி இருக்கும்.அதில் பூனைகள் சாதாரணமாக நடமாட முடியும்.அதனுள் பூனை நுழைய வசதியாய் ஈசானிய மூலையில் ஒரு திறப்பிருக்கும். மாடி பாத் ரூமின் நீர் போக்குக் குழாய் வரும் வழி அது. குட்டி போட்டிருந்தால் அந்தத் திறப்பை ஒட்டி தாய்ப் பூனை அமர்ந்து இருக்கும்.அதற்குக் கீழ்தான் சைக்கிள் நிறுத்தும் இடம்.அருகே யாராவது போனால் பயங்கரமாக கிறீச்சிடும்.இரண்டு நாள் இந்தக் கூத்து அப்புறம் எங்கே போனது என்று தெரியாமல், போய் விடும். பெரிய அண்ணனைக் கண்டால் மட்டுமே சாதுவாய் இருக்கும். அவனுக்கு நாய், மாடு, பூனை என்றால் சற்றுப் பிரியம். அவன் வளர்க்காத நாய் வகைகளே கிடையாது என்பாள் அம்மா. எனக்குத் தெரிய ஒரு டேபிள் நாய் வளர்த்தான்.சிறியதாய் மேஜை மேல் வைத்தால், அங்கு இங்கு அசையாது. எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கும்., ஒன்றுக்குப் போனது கூடத் தெரியாமல். இதற்காகவே ஒரு மேஜையை செட் அப் செய்து வைத்திருந்தான்.மற்றபடி அவன் மேஜையில் உட்காருகிற ஆளா என்று அக்கா கேலி செய்வாள்.மதினி தோழியாரே, இந்தக் கிண்டல் தானே வேண்டாங்கிறது என்று பொய்யாய்க் கோபிப்பாள்.வரிசையார்(மதினி) தங்கள் நாத்தனார்களை, சற்று தன் வயது ஒத்தவர்களை, தோழியாரே என்று அழைப்பது எங்கள் குடும்ப வழக்கம்.
ஒரு பசு மாட்டை, சித்திரை மாச நயினார் நோன்பு அன்று குளிப்பாட்டும் போது, அது சற்று முரண்டு பிடிக்கவே, அவன் அடித்த அடியைக் காணச் சகிக்காது, அம்மா இன்னமெ இந்த வீட்ல வாயில்லாச் சீவனை வளக்காதீங்க என்று அப்பாவிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டாளாம்.அப்பா எப்படி அம்மா சொன்னதைக் கேட்டார் என்று புரியவில்லை. அதிலிருந்து நாங்கள் மட்டுமே வளர்க்கப் பட்டோம்.ஒரு நயினார் நோன்புக்கு நான் தூக்க மாத்திரைகளை விழுங்கி விட்டு சாகக் கிடந்த போது, அம்மா இதைச் சொல்லியும் அரற்றிக் கொண்டிருந்தாளாம்.நான் பிழைத்து வந்தபின் அவள் எதுவும் சொல்வதில்லை, மறுபடி.
நல்ல உச்சிப் பொழுது, அப்பா கீழத்தார்சாலில் தனது ஈசிச் சேரில் அரைத் தூக்கமாய் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.நான் மன்னாதி மன்னன் படத்தை பேப்பரிலிருந்து வெட்டிக் கொண்டிருந்தேன்.`கலையில் நிலா, களத்திலே புலி,குணத்தில் தங்கம், கொதித்தால் சிங்கம்’ என்று வசனம் போட்டு, ஒரு அழகான விளம்பரம் வந்திருந்தது.இந்த மாதிரி வேலையெல்லாம் பார்த்தாலும் அப்பா ஒன்றுமே சொல்வதில்லை.இவனும் எங்கே உருப்படப் போகிறான், பத்தோடு பதினொன்று தொலையுதான் என்று நினைத்தாரோ என்னவோ.திடீரென்று ஒரு செண்ட் மணம் வீட்டுக்குள் தலை வாசல் வழியாக வந்தது.நெடு நெடுவென்று வளர்ந்த ஒல்லியான ஆள், அழுக்கு பைஜாமா ஷெர்வாணி மாதிரி ட்ரெஸ் போட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தார்.பார்வைக்கு அந்தக்கால இந்தி நடிகர் பால்ராஜ் சஹானி மாதிரி இருந்தார்.தோளில் சின்னப் பெட்டி மாதிரி ஒன்றைக் குறுக்காகத் தொங்கவிட்டிருந்தார்.அரே மாலிக், ஹைசா ஹை என்கிற மாதிரிப் பேசிக் கொண்டே அப்பாவை நெருங்கி, தன் பையிலிருந்து வித விதமான நீளக் காதுக் குடும்பிகளை எடுத்து அரைத்தூக்கத்தில் இருந்தவரின் காதுக்குள் லாவகமாக நுழைத்து,உருட்டி சுண்டைக்காய் பருமனில் அழுக்கை எடுத்து விட்டார்.நான் சற்று பயந்து போனேன்.அப்பா ஒன்றும் பெரிதாகக் கோபப் படவில்லை, வந்தவர் இன்னொரு காதில் அழுக்கு எடுக்க ஆரம்பித்து, இன்னொரு சுண்டைக் காய் எடுத்துக் காண்பித்தார்.அப்புறம் கொஞ்சம் போல் பஞ்சை எடுத்து ஒரு செண்ட் பாட்டில் வாயில் வைத்துச் சாய்த்து,அதை இரண்டு காதிலும் வைத்தான். இரண்டு பேரும் காசுக்கு தர்க்கம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.கடைசியில் ஃபோர் அணாஸ் ஒன்லி என்று அப்பா ஒரு நாலணாவை மட்டும் கொடுத்தார்.அவன் எதோ கெஞ்சிக் கொண்டிருந்தான். அப்பா அருகே நன்றாகக் குத்தவைத்து உட்கார்ந்து கொண்டான்.அப்பாவுக்கு இந்தியோ உருதோ தெரியுமா என்று சந்தேகப்படும் படி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.நீண்ட காலமாக வருகிறவன் போல இருந்தது. அம்மாவின் தலை தெரிந்ததும்,க்யா மாஜி என்று ஒரு செண்ட் பாட்டிலை எடுத்து நீட்டினான், அம்மா சுத்தமாக அதெல்லாம் வேண்டாம் வே என்று உள்ளே போய் விட்டாள்.
என்னைக் காண்பித்து ஏதோ பேசிக் கொண்டிருந்தான். நான் கையிலிருந்தவைகளை ஒளித்து வைக்க முயன்று கொண்டிருந்தேன்.என் அருகே வந்து கையைப் பார்த்து,ஆயுள் பலமாயிருக்கிறது என்கிற மாதிரி சொல்லிக் கொண்டிருந்தான்.அப்பா போத்தி ஒட்டலுக்கு ஒரு சீட்டில் ஏதோ எழுதிக் கொடுத்தார்.இந்நேரம் அங்கெ என்ன இருக்கும், போண்டா கூல்டிரிங்க்ஸ் எதாவது இருக்கும்.என் கையைப் பார்க்கிற எல்லாருமே இதைத்தான் சின்ன வயசில் சொல்லுவார்கள்.
முட்டை விற்கிற நாடார் ஒருவர் வருவார்.அப்பா அப்போது டி.பி யால் கஷ்டப் பட்ட போது தினமும் முட்டை அவரிடம் தான் வாங்குவார்கள். இப்போதும் அந்தப் பழக்கத்திற்கு வந்து முட்டை வேணுமா என்று கேட்டுப் போவார்.கலைந்த தலை ரெண்டு மூனு நாள்த்தாடி,சட்டை போடாமல் கனத்த டைமண்ட் துண்டு மட்டும் போட்டிருப்பார். ரொம்ப பிரிசாலத்தின் பேரில்தான் கைரேகை பார்ப்பார். அவரும் சொன்னார் இது கடைசி வரை படிக்கிற கை என்று.வேலைக்குப் போவானா மேல படிக்கனும்ங்கானே என்று ஒரு தரம் கேட்ட போது சொன்னார்.யார் கையையோ தானாகவே, கையைக் கொண்டாரும் வேய் என்று பார்த்துச் சொன்னார், இது பாம்பு இரைதேடற உச்சிவேளையில் கருத்தரிச்ச ஜாதகர்,இது கூடப் பொறந்ததுகளுக்கு கொஞ்சம் ஆயுள் பலம் கம்மி என்று.சொல்லிவிட்டு அவரே சொன்னார், பாத்தேளா, என் வாய் நிக்காது, என் புருவம் ரெண்டும் ஒண்ணு சேர்ந்திருக்கு பாத்தேளா, நாக்கு கொஞ்சம் கரி நாக்கு,நான் சொன்னா நடக்கும்,அது நல்லதோ கெட்டதோ. என்னால சொல்லாமலும் இருக்க முடியாது.இதுனாலதான் நான் ரேகை பாக்க மாட்டேன்னு தவக்கம் காட்டறது. என்று சொல்லிவிட்டு, காசு கொடுத்ததை வாங்க மறுத்துவிட்டார். வேணும்ன்னா நாலு முட்டை வாங்குங்க, யாவாரமாவது நடந்த மாதிரி இருக்கும் என்று தன் முட்டைக் கூடையை எடுத்து முழங்கையில் மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டார்.
ரொம்ப வருஷங்கள் கழித்து,ஒரு சமயம், அவராகவே அப்பாவின் கையைப் பார்த்து,யாருக்காவது சாப்பாடு போட்டு வேஷ்டி சட்டை தானம் கொடுங்க ஐயா, அப்பவே கவனிச்சதுதான், இங்கன இந்த ரேகையில லேசா ஒரு பெருக்கல்க் குறி மாதிரி இருக்கு,பாத்தேளா, நேரம் வரும்போது சொல்லனும்ன்னு நெனைச்சேன். எதுக்கும் ஜாதகமும் பாருங்க என்றார்.அப்பா ஜாதகம் பார்த்து, சின்னதாய்ப் பரிகாரம் பண்ணி குறுக்குத் துறை கோயில் மடைப்பள்ளியில் எடுபிடி வேலை செய்கிறவனுக்கு தானம் கொடுத்தார்.அவன் அந்த வேஷ்டி நேரியல் எல்லாத்தையும் கட்டிக் கொண்டு புதிதாய்ச் சிரைத்த குடுமியோடு வந்து, வீட்டில் காட்டிக் கொண்டிருந்தான், மாமி பாத்தேளா, எல்லாரும் நல்லாருக்குங்கா,என்று.கொஞ்ச நாள் கழித்து அவன் காக்காய் வலிப்பு வந்து ஆற்றில் விழுந்து ஆற்றோடு போய்விட்டான் என்று சொன்னார்கள். இதைக் கேட்டது அப்பாவின் முகத்தில் ஒரு பய ரேகை ஓடிற்று, இன்னமும் நினைவு இருக்கிறது.
அப்பாவைத்தேடி, அல்லது அப்பாவிடம் எதிர் பார்த்து,பழைய காலத்து ஆட்கள் யாராவது வருவார்கள்.ஒருநாள்ப் பகல் பதினோரு மணி இருக்கும்.தெருவில் நின்று கொண்டிருந்தேன். யாரோ சொன்னார்கள், உங்க வீட்ல நெறைய ஆளா தெரியுதே என்ன, என்று. நான் வீட்டுக்குள் ஒடினேன். பள பளக்கும் தகரங்கள் பல சைசில் நடைக் கூடத்தை ஒட்டிச் சாய்த்து வைத்திருந்தது. அதன் அருகே ஒரு பெண் கிட்டத்தட்ட நரிக் குறத்தி மாதிரி தன் முந்தானையில், அதைத் தொட்டில் போல ஆக்கி குழந்தையைத் தூங்க வைத்திருந்தாள்.இன்னும் இரண்டு பேர் அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். ஐயா எவ்வளவு நாள் கழிச்சு வாரோம் ஒரு வேலையும் இல்லெங்கேங்களே,எத்தனை நெலைக்கண்ணாடி உண்டு வீட்ல, அதையெல்லாம் காட்டவாவது செய்ங்க ஐயா, என்று சொல்லிக் கொண்டிருந்தான்.அதெல்லாம் மக வீட்ல இருக்கு என்று அப்பா சுருக்கமாகச் சொன்னார்.சரி அங்க போய் ரசம் பூசிட்டப் போச்சு என்னாம்மா நான் சொல்றது, என்று வாசல் நிலை ஓரமாய் நின்றிருந்த அம்மாவைப் பார்த்து சொன்னான் ஒருவன்.சின்னம்மாவை எங்க கட்டிக் குடுத்திருக்கு என்று கேட்டான் இன்னொருவன்.யாரும் பதில் சொல்லவில்லை.அந்தப் பெண் அம்மா இந்தப் பிள்ளைக்கி என்னமும் காபித்தண்ணி குடுங்கம்மா என்று கேட்டாள். அம்மா உள்ளே போய் விட்டாள்.உள்ளிருந்து கடுங்காப்பி வாசனை வந்தது.
ஐயா அந்த பீரோல்க் கண்ணாடி ரொம்ப ஒசத்தியான பெல்ஜியம் கண்ண்டியாச்சே, அது எப்படிய்யா இருக்கு,அதுக்கு நான் தான ரசம் பூசனது,அவன் கேள்விகளாய்க் கேட்டுக் கொண்டிருந்தான், அப்பா, ம், ம் என்று வெறும் உம் கொட்டிக் கொண்டிருந்தார்.என்னய்யா உங்க வீட்ட வச்சு இங்க நாலஞ்சு வீடு வேலை கெடைக்கும்ன்னு வந்தோம்.இப்பல்லாம் ரசம் வாங்கறதே பெரும்பாடா இருக்கு. ரொம்ப கட்டுப்பாடு, கண்ணாடிகள்ளாம் எல்லாமே கடையில் தகடால்லா கெடைக்கி,ஒண்ணாவது விரல வச்சுப் பாத்தா இடைவெளி தெரியணுமெ, விரலோட விரல் ஒட்டிருக்கு. அந்தக் காலத்துக் கண்ணாடியில பல்லி ஊர்ந்து போனா வயிறு அழகா, முட்டையோட தெரியுமெ, என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
ஐயா பழைய படமெல்லாம் இருக்காய்யா, அவ்வளவும் ஜெர்மன்ல அச்சடிச்சதுல்லா, அந்த, நெறைய க்ரிஷ்ணர்கள் நிலவுல நெறைய பொன்னுங்க கூட ஆடறமாதிரி ஒன்னு உண்டே அது இருக்கா என்று கேள்வியாய் அடுக்கிக் கொண்டிருந்தான்.மாடி ஹாலில் நிறைய படங்கள் உண்டு.ரவிவர்மா படக் காலண்டர்கள், சன்லைட் சோப், A&F HARVEY LTD, வினோலியா சோப், என்று எத்தனையோ கம்பெணி காலண்டகள்.பெரிய ஃப்ரேமில் அடைத்து மாட்டப் பட்டிருக்கும்.சிசுபாலன் கிருஷ்ணரை கௌரவ சபையில் கேள்வி கேட்கும் படம் ஒன்றைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை.ரொம்ப நாள் கழித்து,போத்தி ஓட்டலில் அதே படத்தைக் காண்பித்து, பத்மனாதன் என்கிற சப்ளையர் சொல்லித்தான் தெரியும்.அவர், சேர்மாதேவிக் காரர், சினிமா ரசிகத் தன்மை எங்களை ஒன்று சேர்த்தது.அந்த ஓட்டலில் இருந்த பல படங்கள், ஓவியங்களை அவர் விளக்கி இருக்கிறார், வாயு புத்திரர்களான அனுமனும் பீமனும் சந்திக்கிற மஹா பாரத ஓவியம் ஒன்று உண்டு. கேட்பாரற்று அது ஒரு ஓரத்தில் இருக்கும்.அதைப் பற்றியெல்லாம் பத்மநாதன் விஸ்தாரமாகச் சொல்லுவார்.தாழம்பூ படத்துக்கு அவர்தான் டிக்கெட் ரிசர்வ் செய்து வைத்திருந்தார். அவர் சேர்மாதேவியில் கிளப்பு நடத்தி நொடித்துப் போய் இங்கே வேலைக்குச் சேர்ந்தவர்.இடையிடையே சிகரெட் பிடிக்க நைசாக சப்ளையை விட்டு விட்டு வெளியே வருவார். உள்ளூர் ஐயர்,போதாதா, கன்னடத்துப் போத்தி அவரை வேலையை விட்டு நீக்க.
எல்லாம் இருக்கு என்று சற்று சலித்தபடி சொல்லிக் கொண்டு அம்மா கடுங்காப்பியை அந்தப் பெண்ணுக்காக நீட்டினாள்.பால் இல்லையோ, ஆமா இந்நேரம் எங்க இருக்கும் என்று அவளே சொல்லிக் கொண்டாள்.கருப்பட்டிக் காப்பி வாசம் அந்த இரண்டு ஆண்களையும் இழுத்ததோ என்னவோ,எங்களுக்கு கிடையாத என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டார்கள்.இதற்குள் அப்பா குளியலறையிலிருந்த ஒரு ரசம் போன கண்ணாடியை எடுத்து வரும்படி பெரிய அண்ணனிடம் சொன்னார்.அது ஒண்ணரைக்கு ஒரு அடி கண்ணாடி.அதை பார்த்ததும் ஐயா இதுக்காக வேலைய ஆரம்பிச்சா கட்டுப் படியாகாதே என்று அதில் ஒருவன் இழுத்தான்.இன்னொருவன் ,குடுங்க ஐயா வந்ததுக்கு உங்க வீட்ல வேலை செய்யாமப் போனா நல்லாருக்காது, என்று வாங்கி அதன் சட்டங்களைப் பிரித்து, கண்ணாடியை எடுத்து பின் புறச் சிவப்பு வர்ணத்தைச் சுரண்ட ஆரம்பித்தான்.மேல்த் தார்சால் எங்கும் மினு மினுக்கும் கண்ணாடி ரசத் துகள் தூசியாய்ப் பரவ ஆரம்பித்தது.
என்ன மாதிரியான வார்ப்பு பாரு என்று இருவரில் இளையவன் போலிருந்தவனிடம் சொன்னான். அவன் முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது.கிட்டத்தட்ட கண்ணாடி அளவான தகடை எடுத்து, ஒரு குடுவையிலிருந்து பாதரசத்தை அதில் விட்டு அவசரமாகப் பரப்பித் தேய்த்தார்கள். அதே அவசரத்தோடு, சுத்தமாக்கியிருந்த பழைய கண்ணாடியை அதில் ஒட்டி எடுத்தார்கள். பள பளவென்று கண்ணாடி மின்னியது.எல்லாரிடமும் பாருங்க ஐயா, பாருங்க தம்பி, அம்மா, என்று காண்பித்தான். அப்பா பேசாமலேயே இருந்தார். அப்புறம் இதெல்லாம் ஒன்றும் புதிசில்லை என்று நினைக்கிற மாதிரிலேசாகச் சிரித்தார். எனக்கும் வியப்பு மேலிட சிரிப்பு வந்தது.அவன் கண்ணடிக்குப் பின்புறம், ரசத்துக்கு மேலாக சிகப்புச்/ஆரஞ்சுச் சாயம் போல ஒன்றைத் துணியில் முக்கி பூசிக் கொண்டிருந்தான். அந்தப் பெண் ஒரு வாரியலைக் கேட்டு வாங்கி,கண்ணாடி ரசத் துகள்களைக் கூட்டி அள்ளினாள்.ஆனாலும், இன்னும், அவர்கள் விடை பெற்றுப் போன பின்னும்,தார்சாலின் சாணமிட்டு மெழுகிய செங்கல்த் தரையிலும், வரிவாளங்களிலும் ஜிகினா போல் மின்னிக் கொண்டிருந்தது.கண்ணாடியை தார்சலிலேயே மாட்டி வைத்தோம்.கண்ணாடிக் குருவிகள் வந்து கொண்டிருந்தன, நீண்ட காலமாய், என் கவிதையில் இன்னும் கொத்திக் கொண்டிருக்கின்றன.

Visitors