Sunday, December 14, 2008

காட்டுக்கேது தோட்டக்காரன்....



வேலைக்குத் தேர்வான செய்தி ஒரு வழியாகத் தெரிந்தது. ஆனால் ஒரு மாதமாகியும் ஆர்டர் கைக்கு வரவில்லை.அறுபது பேரை தேர்ந்தெடுத்ததில், முப்பது பேருக்கு முதலில் போட்டுவிட்டார்கள்.அதில் என் பெயர் வரவில்லை.மனம் வெறுத்துப் போயிற்று.இதில் வேடிக்கை என்னவென்றால் என்னைப் பார்த்து தேர்வெழுதியவர்களும்,நான் சொல்லித் தந்து தேர்வுக்குப் படித்தவர்களும், முதல் முப்பது பேரில், ஆணை கிடைத்தவர்களில், அடங்கி இருந்தார்கள். அதில் இப்போது ஒருவர் ஏ. ஜி. எம் ஆக இருக்கிறார்.அம்மா சொல்வது போல் ஆறு முழுக்கத் தண்ணி(தண்ணீர்) போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணிதான்.அம்மாவுக்கு நாய்ப் பழமொழிகளில் அப்படியொரு பிடித்தம். அதனால்த் தானோ என்னவோ என் கவிதைகளிலும் நாய் அடிக்கடி வருவதாகப் படுகிறது.சிவசு கூடச் சொல்லுவார்,. ஆர்.பி.பாஸ்கரனுக்குப் பூனை, உங்களுக்கு நாய். அவர் வரைந்து தள்ளுவார், நீங்கள் எழுதித் தள்ளுகிறீர்கள் என்று.
அப்போது ராஜ மார்த்தாண்டன் திருவனந்தபுரத்தில் ஆய்வு மாணவராக இருந்தார்.அவருக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டு விட்டு, கையில் இருந்த இருபது ரூபாய் சொச்சக் காசை வைத்து துணிந்து திருவனந்தபுரத்துக்கு பஸ் ஏறிவிட்டேன்.அது கூட இரண்டு நாள் முந்தி சீட்டாட்டத்தில் ஜெயித்தது.சிவராத்திரி ஸ்பெஷல் ஆட்டம்.நாலணா நாக் அவுட்.மூன்று ஆட்டத்திலும் கார்டு அப்படிப் பிடித்தது.இதெ போல் சுவாமி மலையில் சுப்ரமணிய ராஜு கல்யாணத்திற்குப் போயிருந்த போதும் அப்படி கார்டுகள், அள்ள அள்ள அற்புதமாய் வந்தது, ஒரு வேளை அதே நேரம் வீட்டில் செத்துப் போயிருந்த அப்பா வானில் இருந்து அருள் மழை பொழிந்தாரோ என்னவோ. கடைசி ஆட்டத்திற்கு, பசஙளெல்லாம் போடா நான் வரலைப்பா சின்னத் தாயோளிக்கி கார்டு என்னமா அப்புது இன்னிக்கி,”ஆட்டககாரனுக்கு ரம்மியும், ஜோக்கரும் அண்ணாச்சி, அண்ணாச்சின்னுல்லா கதவைத் தட்டுது.’’நான் வரலைப்பா என்று ஒதுங்கி தூங்கப் போய்விட்டார்கள்.ஷண்முகநாதன் மட்டும்,. எண்ட்ரி டபுள், கம்பல்ஸரி கேம், ஸ்கூட்டெல்லாம் கிடையாது, ஐந்து ரூபாய், வாறியா என்றான்.அவன் ரொம்ப துணிச்சலானவன். எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாதவன். அருமையாக கேரம் விளையாடுவான்.மேலப்பாளையம் க்ளப், பெருமாள் புரம் பி.ஆர் சி க்ளப், ஸ்பிக் டீம் எல்லாவற்றுடனும் மோதி ஜெயித்திருக்கிறான்.பேட்மிண்டனும் நன்றாக விளையாடுவான்.நன்றாக ஸுவாலஜி ரெகார்டுகளுக்குப் படம் போடுவான்.என்னைப் போலவே எல்லாக் கெட்ட பழக்கங்கங்களுக்கும் குட்டிக் குட்டியாய் அறிமுகமானவன்.`வசந்த மாளிகை’ சினிமாவில் வருகிற வசனமொன்றை அடிக்கடி சொல்லிக் கொள்வோம்.``சின்ன எஜமானர் கெட்டுப் போயிட்டாரே தவிர கெட்டவரில்லை’’ என்று எங்கள் சின்னச் சின்ன தவறுகளுக்குச் சமாதானமாய்.
எங்களுடன் ராஜாமணியும் சேர்ந்து கொண்டான்.,சீட்டு விளையாட. கார்டும், மூன்றவது ஆட்டத்திற்கும் நன்றாகவே பிடித்தது.ராஜாமணி இரண்டு ஆட்டத்திலேயே செமத்தியாக பாய்ண்ட் கொடுத்துவிட்டு, முழித்துக் கொண்டிருந்தான்.மூன்றாவது ஆட்டத்தில் அவன் உருகிப் போட்ட முதல் கார்டு ஆட்டின் ஏழு, ஜப்பான் ஆகச் சேர்ந்து டிக் ஆகி விட்டது. எனக்கு ஏழு ஆட்டின் எப்பவுமே ராசி, சீக்கிரம் அதைக் கழித்து விட மட்டேன்..அவன் சீட்டுகளைத் தூர எறிந்து விட்டு, புகைத்து எறிந்திருந்த சிகரெட் துண்டுகளில் இருப்பதிலேயே நீளமான ஒன்றைத் தேடி எடுத்து, பத்த வைத்து எங்களை வேடிக்கை பார்க்க வந்தான்.சண்முகம் நன்றாக விளையாடுபவன்.எனக்கும் சுமாரான கார்டாகவே தோன்றியது.ஆட்டம் நீண்டு கொண்டே போவதைப் பார்த்தால் அவனுக்கும் கார்டு நல்லதாக இல்லை என்று தோன்றியது.. இரண்டு பேருமே கைக்கார்டையெல்லாம் கலைத்து முழுதாக செட்டுகளை மாற்றி மாற்றிப் பார்த்தாயிற்று....ஆட்டம் முடிகிற பாடாயில்லை.இரண்டு பேரும் ஆடுகிற ஆட்டத்தைப் பார்க்க தூங்கிக் கொண்டிருந்த சிலர் விழித்துப் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.இரண்டு பேருக்கும் கையில் இருக்கும் சீட்டுகளைப் பார்த்தால்,இரண்டு இரண்டு பாய்ண்ட், எண்ட்ரி டபுள் என்பதால் நான்கு பாய்ண்ட், தான் இருந்தது. தூக்கக் கலக்கம் வேறு.கண்ணெல்லாம் எரிச்சல். சிகரெட், பீடி என்று குடித்து, தாகமும் பசியும்.பதினைந்து ரூபாய்க் காசுக்கு இவ்வளவு போராட்டமா என்று தோன்றியது.இரண்டு பேரும் எங்கேயோ தவறு செய்திருக்கிறோம் என்று பட்டது. ஆட்டம் எப்பவொ முடிந்திருக்கும். இருவரும் சரியாகக் கவனிக்கவில்லை என்று எல்லோருமே அபிப்ராயப் பட்டனர்.நான் தைரியமாக இரண்டு, ரெண்டு இஸ்பேடில் ஒன்றைக் கழித்தேன்.சண்முகம் அதை எடுத்துக் கொண்டு என்ன நினைத்தானோ திடீரென்று டைமண்ட் ரெண்டைக் கழித்தான். நான் சுதாரிப்பதற்குள் பார்த்துக் கொண்டிருந்த பல கைகள் படக்கென்று அதை எடுத்து என் கார்டுகளிடையே சொருகி `டிக்’ என்று கோரஸாக ஒலித்தனர்.சரியான ஃபிஸ்ஷிங், என்று பாராட்டு மழை வேறு.விளையாட்டைத் தொடர எனக்கு விருப்பமில்லை,முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொள்ளுவோம் என்றேன்.சண்முகம் இன்னும் ஒரு ஆட்டம், நீ கலைத்துப் போடு, நான் கலைத்தால் எனக்கு ராசியே கிடையாது. என்றான்.கலைத்துப் போட்டேன். அவன் சீட்டை ஒவொன்றாக எடுக்க மாட்டான், மொத்தமாக பதிமூனு சீட்டுகளையும் எடுத்தே விரித்துப் பார்ப்பான்.அப்படி எடுப்பதும் ஒரு வகையில் அவனுக்கு ராசி.அன்று ஆர்வக் கோளாறோ என்னவோ, சீட்டை ஒவ்வொன்றாக போடப் போட எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தான்.நான் கலைத்துப் போட்டுவிட்டு, என் சீட்டுகளை கையில் எடுத்தேன்.ஒரே படமாக, கிங்க், குயின், ஜாக்கி, என்று ஒரே படமாக இருந்தது.சரி பாய்ண்ட் அள்ளீட்டுப் போப்போகுது,என்று அவன் முகத்தைப் பார்த்தேன். எப்பவுமே அவன் முகத்தில் இருந்து ஒன்றையுமே கண்டு பிடிக்க முடியாது. சிலருக்கு நல்ல கார்டாக, ரம்மியும், ஏகப்பட்ட ஜோக்கருமாக வந்து எதை எங்கே சேர்ப்பது என்று திண்டாடுவார்கள். நமக்குத் தெரிந்து விடும்,``புள்ள முழிக்கிற முழி பேளறதுக்குத்தாண்டோய்’’
என்று.சத்தம் போடாமல் ஸ்கூட் விட்டு கார்டைக் கவிழ்த்தி வைத்து விடுவார்கள் பலரும். ஆனால் சண்முகம் முகத்தில் அதெல்லாம் வழக்கமாக கண்டு பிடிக்க முடியாது.இந்த முறை அவன் சற்று வேறு மாதிரியான முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.சரி நாம் காலி என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவன் கார்டுகளை ஷோ என்று விரித்துக் கீழே வைத்தான்.நானும் கார்டைக் கீழே போடப் போனவன் ஏதோ உள்ளுணர்வு உந்த அவன் கார்டை, டிக் சரியா என்று பார்த்தேன.இரண்டு ஆட்டின் ஏழுகளும் ஒரு கிளாவர் ஏழும் பல்லிளித்தது வ்ராங் டிக் என்றேன்.அவன் கவிழ்த்தி வைத்த ஒற்றைக் கார்டை திருப்பிப் பார்த்தான். டைமண்ட் ஏழு. ராங் டிக் என்று ஒத்துக் கொண்டான்.எல்லாருக்கும் ஆச்சரியம் அவனா அப்படிச் செய்தது என்று. சரி விடிஞ்சுடுச்சு வா எல்லாருக்கும் பேட்டை ரோடு ஐயர் கடையில் காபி வங்கித்தா என்று சிலர் கிளம்ப, அவன் தான், சேச்சே ஜெயிச்சவன் உடனே செலவழிச்சாலோ கடன் கொடுத்தாலோ அடுத்தாப்ல கார்டு பிடிக்காது என்று தடுத்து விட்டான்.அப்போதுதான் எனக்கு திருவனந்தபுரம் போகலாம் என்ற யோசனை வலுப்பட்டது.
அதற்கு முன்னால் (கசடதபற)மஹாகணபதியுடன் ஒரு தரம் திருவனந்தபுரம் போயிருந்தேன்.அப்போதும் கையில் கல்யாணி அண்ணன் தந்து விட்டிருந்த ஐந்து ரூபாய் மட்டுமே இருந்தது. திருவனந்தபுரம் போய் இறங்கியதும் மஹாகணபதியிடம் விடாப்பிடியாகக் கேட்டு இன்னொரு ஐந்து ருபாய் வாங்கி வைத்துக் கொண்டேன்.அப்படி கேட்டு வாங்கியதன் வெட்கம் வெகு நாட்கள் வரை பிடுங்கித் தின்று கொண்டிருந்தது.இன்றும் கூட்.அப்போது மாதவன் அண்ணாச்சி கடை, செல்வி ஸ்டோர்ஸில் போய் அண்ணாச்சியிடம் நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.அவருக்கு பூர்விகம் திருநெல்வேலிதான்.சுந்தரத் தோழர் தெருவில் அவருக்கு வேண்டியவர்கள் இன்னும் இருந்தார்கள்.அவர் தான் கடை ஆளை துணைக்கு அனுப்பி நகுலன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.அன்றைக்கு ஏதோ பந்த். மத்தியானத்திற்கு மேல்த் தான் பஸ்கள் ஓட ஆரம்பித்தன.அப்போது நகுலனின் அப்பா, அம்மா எல்லோரும் இருந்தார்கள், அம்மா உடல் நலமின்றி படுக்கையில் இருந்தார். முன் வீட்டில் அவரது தம்பி குடும்பம் இருந்தது. அவருடனான முதல் சந்திப்பு அது.நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.சாயந்தரம் வாக்கில் அவரது அம்மாவை பரிசோதிக்க வந்த ஒரு டாக்டருடன் அவரது காரில் என்னை மாதவன் அண்ணாச்சி கடைக்கு அனுப்பி வைத்தார்.அண்ணாச்சி வீட்டிலிருந்து கொண்டு வந்த வேட்டியை உடுத்திக் கொண்டு பத்மனாப சாமி கோயிலுக்குப் போனேன்.கோயிலில் மின் விளக்கே இல்லாமல் பெரிய பெரிய தீபங்கள், திரி விள்ககுகளுடன் கோயில் அழகாக இருந்தது. அப்படியொருவெளிச்சத்தில் ஒரு கோயிலை நான் தமிழ் நாட்டில் பார்த்ததே இல்லை.கோயிலில் கூட்டமே இல்லை,கிட்டத்தட்ட நானும் அனந்தபத்மனாபனும் மட்டும் தான் என்று சொல்லி விடுகிற தனிமை.ரொம்ப நேரம் மூன்று வாசல் வழியாகவும் பார்த்துக் கொண்டேயிருந்தேன். காலடியைப் பார்த்து விட்டு மறுபடி முதல் வாயிலுக்கு வந்த போது அவன் என்னவோ புரண்டு படுப்பது போன்றிருந்தது.சற்று பயத்துடன் வெளியே வந்து விட்டேன். விஷ்ணுபுரம் படிக்கும் போது, இந்த பயம் மறுபடி வந்தது. (ஜெய மோகனுடன் திருவட்டார் கோயிலுக்கு இதே மாதிரி ஒரு சந்தியா காலத்தில் போன போதும் சற்று பயமாயும் எல்லாமே ஏற்கெனெவே ஒரு முறை நடந்து இம்மி பிசகாமல் மறுமுறை நடப்பது போலவும் இருந்தது).
இரண்டாம் முறை போகிறபோது அப்பா இல்லை. இறந்து போயிருந்தார்.நான் ஸ்ரீ பத்மனாபம் கவிதையை எழுதியிருந்தேன்.
அந்தக் கவிதையையும் கோயிலையும் நினைத்தவாறேதான் பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தேன்.ஆனால் இந்த முறை மனதை வேறு ஆசைகள் ஆக்கிரமித்திருந்தன.அப்பா போன பிறகு வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் இல்லாமல் ஆகிக் கொண்டிருந்தது. அப்பாவை நான்தான் கொன்று விட்டது போல் குற்ற உணர்ச்சி ஒரு நாளைக்கு ஒரு தரமாவது தோன்றாமலிருக்காது.படிக்கிற காலத்தில்,அதுவும் இவளின் மறு பிரவேசத்திற்குப் பின் நான் ரொம்ப சுத்தமானவனாகவே இருந்தேன்.அப்பாவின் விருப்பங்களுக்கு எதிராக நான் எம்.எஸ். ஸி படித்து அதில் தேர்ச்சியுறாமல் போனது எனக்கு நேர்ந்த பெரிய விபத்து. இதிலிருந்து என் சரிவுகள் தொட்ங்கியது.மதுரையில் என் தனிமை பலவித பழக்கங்களுக்கு காரணமாய் ஆகி விட்டது.அதற்கு ஊரைக் குறை சொல்லமுடியாது.

இரண்டாம் முறையும் .மாதவன் அண்ணாச்சி கடைக்குப் போய் மார்த்தாண்டனுக்காகக் காத்திருந்தேன்.அவர் வருவதற்கு மாலை ஆகி விட்டது,அண்ணாச்சியிடம் சொல்லிக் கொண்டு வெளியே கிளம்பினோம்.அவர் என் கடிதத்தைக் கையிலேயே வைத்திருந்தார்.அதில் எழுதியிருந்த வரிகளைக் காட்டி சிரித்தபடியே வாங்க மலையாள பூமியின் அழகை, முதலில்``பருகி’’விடலாம் என்று அழைத்துப் போனார்.விரக்தியின் விளிம்பில் இருந்த நான் தாகம் தீர அருந்தத் தொடங்கினேன்.அவருக்கு இன்னும் அந்த மாத ஸ்டைஃபண்ட் வரவில்லை. யாரிடமோ கடன் வாங்கி வந்திருந்தார்.இரண்டு நாள் பொறுத்திருங்கள்...பணம் வரட்டும் என்றார்.
நீண்ட நாளைக்குப் பிறகு, துலாபாரம் படத்திற்குப் பிறகு சாரதாவும் ஷீலாவும் இணைந்து நடிக்கிற பால்க்கடல் படம் மறுநாள் ரிலீஸாகிறது.பெரிய பெரிய சாரதா போஸ்டர்களை சாலையெங்கும் பார்த்ததே போதும் என்ற மாதிரி இருந்தது..இந்த முறை கோயிலுக்கு மட்டும் போகக் கூடாது என்று தோன்றியது.மறுநாள் என்னை அறையில் இருக்க வைத்துவிட்டு அவர் யுனிவர்ஸிட்டிக்குப் போய் விட்டார்.நான் அறையிலிருந்த புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தேன் எஸ்.வி.ஆரின் எக்ஸிஸ்டென்ஷியலிசம்-ஒரு அறிமுகம் அப்போதுதான் வந்திருந்தது. அதைப் படித்துக் கொண்டிருந்தேன்.புதுமைப் பித்தன் கதைத் தொகுப்பு ஒன்று கிடந்தது. அதையும் படித்தேன்.
மாலையில் அவர் வந்து வெளியே போனோம். நான் வாய் திறந்து கேட்கவுமில்லை. அவர் எங்கே கூட்டிப் போகிறார் என்று சொல்லவும் இல்லை.கால் போன போக்கில் நடப்பதாகவே எனக்குப் பட்டது.உள்ளூர அதற்காகவும் இருக்குமோ என்றும் தோன்றியது.தஞ்சை ப்ரகாஷ் உனக்கு எப்போதாவது பெண்ணுடன் அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா என்று ஒரு முறை கேட்ட போது, அது வரை இல்லை என்றேன்.அதன் பின் உனக்கு காதல் பற்றிய கண்ணோட்டம் மாறி விடக்கூடும் என்று சொல்லியிருந்தார். அது நினைவுக்கு வந்தது.இதை வெளிப்படையாக கடிதத்தில் எழுதி விட்டோமோ என்று சற்று மனது உழம்பியது.அந்தத் தெருவுக்கு ஏற்கெனெவே வந்திருக்கிறோமோ என்று நினக்கத்தொடங்கும் போது அவர் ஒரு வீட்டிற்குள் விறுவிறுவென்று போனார்.குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் என்று ரெக்கார்ட் பிளேயர் பாடிக் கொண்டிருந்தது.நானும் அதே விரைவுடன் பின் தொடர்ந்தேன்.
சாந்தாவின் இடுப்பில் ஒரு நீளமான தழும்பு. முண்டும் ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள்.நல்ல சந்தன சோப்பின் மணம், சாயங்காலந்தான் குளித்திருக்க வேண்டும்.ஒரு கட்டில். .ஒரு ஸ்டூலில் ஃபேன். நிற்பதற்கே இடம் இல்லாத சிறிய அறை.கட்டிலில் சாவகாசமாகச் சாய்ந்து அமர்ந்திருந்தாள். கூடிப்போனால் இருபது வயதிருக்கும்.என் துயரங்களுக்கும் 26 வயது முடிஞ்சு போச்சு என்று கோகயம் பத்திரிக்கையில் அப்போதுதான் கவிதை எழுதியிருந்தேன்.
சைக்கிள் பழகும் போது கீழே விழுந்து அந்தத் தழும்பு ஏற்பட்டதாகச் சொன்னாள்.நெய்யாற்றிங்கரை ஊர்.அண்ணன் மனைவி சொல்லி, அண்ணன்தான் இந்த வீட்டில் கொண்டு வந்து விட்டான்.மாதா மாதம் இங்கே வந்து சேச்சியிடம் பணம் வாங்கிக் கொண்டு போவான். அந்த வாழ்க்கை குறித்து அவளுக்கு பெரிய ஆவலாதிகள் ஏதுமில்லை.அந்நேரத்திலும் அவள் பரபரப்பு ஏதுமில்லாமல் இருந்தாள்.என் பரபரப்பை அடங்க வைத்துக் கொண்டிருந்தாள், சாவகாசமான பேச்சின் மூலம். இரவு முழுக்க ஒரு ஆளுடன் மட்டும் என்பதால் வந்த நிம்மதியோ என்று தோன்றியது.
.பால்க் கடல் பற்றிப் பேச்சு வந்தது. `பார்த்தோ’ என்று ஆசையாய்க் கேட்டாள். இல்லை என்றேன்.அவளுக்கு சாரதாவெல்லாம் பிடிக்காது. அவள் அடுத்த தலை முறை. ஷீலாம்மை பிடிக்கும் ஸ்ரீவித்யா பிடிக்கும் என்றாள். செம்மீன் பாட்டை முனுமுனுத்தாள். நான், நதி படம் பர்த்திருக்கிறாயா என்று கேட்டேன். தனக்கு ரொம்ப பிடித்த படம் என்றாள். ``பஞ்சதந்ரம் கதையிலே , பஞ்சவர்ணக் குழலிலே மாணிக்யப் பைங்கிளி மானம் பறக்குந்ந வானம்பாடியெ ஸ்நேகிச்சு-ஒரு வானம்பாடியெ ஸ்நேகிச்சு’’.என்று அழகான குரலில் படினாள். பகீரென்றது குரலைக் கேட்டதும். ``நித்ய விசுத்தமாம் கன்ய மரியமெ, நின்னாமம் வாழ்த்தப் பெறெட்டே....’’ என்று ஜேசுதாஸைப் பாடினாள்.அதைவிட அந்த நஸீர் பாடுகிற முதல்ப்பாடல் நல்லாயியிருக்குமே என்றதும் உற்சாகம் கொப்பளிக்க, ``காயாம் பூ கண்ணில் விடரும், கமலதளம் கவிளில் விடரும்... என்று என் கன்னத்தைக் கிள்ளினாள். கவிளில் என்றால் கன்னமோ என்று கேட்டதும், ஓம், நிங்கள் மலையாளம் அறியுமோ என்றாள்.நான் படுத்திருந்த அவள் வயிற்றில், தினமும் எழுதிப் பார்க்கிற இரண்டெழுத்தை மலையாளத்தில், விரலால் எழுதினேன். அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை.. மீண்டும் மீண்டும் எழுதியபின் `ச’- வை மட்டும் கண்டு பிடித்தாள். சரி விடு சாரே, என்று மறுபடி ஜேசு தாஸை பாடத்தொடங்கினாள்...ஓரிடத்து ஜனனம், ஓரிடத்து மரணம்,,,,, என்று. நான் ஓமனத்திஙகளினு ஓணம் பிறக்கும் போழ் தாமரக் கும்பிளில் பனி நீரு..பாட்டை எடுத்துக் கொடுத்தேன். அவள் கட கடவென்று சிரித்தாள்...தமிழ்ல்ல மொழி மாற்றஞ் செஞ்சதையாக்கும் சார் பாடறது...என்று.அப்படியெங்கில் இதுதானாக்கும் நல்ல பாட்டு என்று ’’ தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு..’’ என்று மலையாளத்தில் பாடினாள்.`அவள் ஒரு தொடர் கதை’ அப்பத்தான் மலையாளத்தில் டப் செய்து வந்திருந்தது.. அது நல்ல படமென்றாள்.அவள் அந்த வீட்டிலுள்ள தோழி மாரோட அந்தப் படத்தை இரண்டு நாள் முன்புதான் பார்த்ததாகச் சொல்லிக் கொண்டிருந்த போது கதவை பட பட வென்று யாரோ தட்டினார்கள். .போலீஸ் ரைடு வருவதாக அவளிடம் சொன்னார்கள்.என்னை உடனே கிளம்பும் படி, நாங்கள் உள்ளே வரும் போது முன் கூடத்தில் உட்கார்ந்திருந்த(பெங்களூர்
ரமணி அம்மாள்),சேச்சி சொன்னாள்.நான் இது ஏமாற்று என்று கத்தினேன்..திரிச்சு நாளை வரூ என்று இரண்டு பேரும் ஒரே நேரத்தில் சொன்னார்கள்.வேணெங்கில் எங்கெயும் லாட்ஜுக்கு போகலாமா என்று கேட்டாள்.
வேண்டாம் பணத்தை திரும்பக் கொடுங்கள். என்றேன்.அவளிடம் தந்திருந்த ஐந்து ரூபாயை எடுத்து நீட்டினாள். நான் மறுத்து விட்டுக் கிளம்பினேன்.ஒருவன் பின்னாலேயே வந்து இந்தா பாதிப் பணம் என்று கொடுத்தான்.நூறு ரூபாய். வழி கேட்டு, வழி கேட்டு அறைக்கு வந்தபோது மார்த்தாண்டன் என்ன ஆச்சு என்று விசாரித்தார்.பணத்தை அவரிடம் கொடுத்தேன்.
சரி வாருங்கள் என்று அருகேயே இருந்த நல்ல பார் ஒன்றுக்குள் கூட்டிப் போனார்.நீண்ட நேரம் சாப்பிட்டுக் கொண்டே இருந்தோம்.நினைவு தப்பி மிதப்பு ஆரம்பித்தது. மார்த்தாண்டன் எனக்கு வேற இடம் தெரியாதே என்றே சொல்லிக் கொண்டிருந்தார் சாந்தாவின் சந்தன சோப் மணமும், இடுப்புத் தழும்பும், மதுக் கூடத்தின் ஆல்கஹால் சூழலை மீறி நினைவில் வந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக படுக்கையில் `சயனித்த கோலத்தில்’ பாடிக் கொண்டிருந்த அவளின் குரல்த் தொடர்ச்சி...
``காட்டுக்கேது தோட்டக்காரன், இதுதான் என் கட்சி....’என்று என்னை,என் சுதந்திரத்தை கிண்டல் செய்வது போலிருந்தது.பிரகாஷின் வார்த்தைகள் பொய்த்துக் கொண்டிருந்தது.குடித்தால், வழக்கமாக வருகிற முகம் மூளை முழுக்க விரியத்தொடங்கியது.

Visitors