Monday, December 20, 2010

தில்லித் தமிழ்ச் சங்கம் தமிழ் 2010-கருத்தரங்கம்


நவீன கவிதை செல்லும் திசை

நவீன கவிதை அல்லது இன்றைய கவிதை என்னும்போது, நவீன கவிதையின் அரை நூற்றாண்டுக்கும் மேலான பின்புலத்தைத் தொட்டுச் செல்வது நல்லது என்று நினைக்கிறேன். எழுத ஆர்வமுறுகிற எவரும் முதலில் கவிதையைத் தேர்வு செய்கிறார்கள் என்பது ஒரு எழுதப்படாத விதியாய் இருக்கிறது.நான் பல உரைநடை,சிறுகதை, நாவல் எழுதும் பிரபலமானவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன், “ நான் முதலில் எழுதியது, கவிதை, என்று. இதற்குப் பல காரணிகள் இருக்கலாம். என்றாலும் அவை எல்லாமும் ஒரே அடித்தளத்தில் சமைந்த பலமாடிக் கட்டிடமாகவோ, ஒரு மரத்தின் பல வேறு கிளைகளும், அதன் இலைகளும், பூக்களும் கனிகளுமாகவே இருக்கின்றன.ஒரு இலக்கிய வாசகனுக்கு அவனது தாய்மொழியில் அமைந்த கவிதைகளே மிகப் பெரிய சொத்து எனலாம்.அதிலும் தமிழ் போல, நீண்ட நெடிய வரலாறு கொண்ட ஒரு செம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவனுக்கு இது மாபெரும் வரம். தினசரி வாழ்வில் கூட நாம் சாதாரணமாய், ஒரு நல்ல உரைநடை வரியைப் படிக்க நேரிட்டால், பொதுப்புத்தி சார்ந்து பலரும், ஆகா இது கவிதைஎன்று சொல்வதை நாம் கேட்கிறோம்.அந்த அளவுக்கு கவிதை ஆதியானதும் ஒரு உன்னதம் மிக்கதுமாக இருக்கிறது.காலையில் பரபரப்புடன் இயங்கும் ஹாஸ்டல அல்லது மேன்ஷனின் பாத்ரூம்கள், நடுப்பகலில் அமைதியுடன் இருப்பது போல, இயக்கமின்றி, வெற்று அரட்டையை நாடி நிற்கும், சோர்ந்து இருக்கும் மூளையில் திடீரெனத் தோன்றுகிறது,

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னாருடைத்து”..... என்று ஒரு குறள்.அந்த உருள்பெருந்தேர் என்ற அற்புதமான சொல்க்கட்டு நினவில் ஒரு பெரிய தேரை உருட்டுகிறது. வலிய தேர்ச்சக்கரப் பதிவாய், மனம் திரும்பத் திரும்ப அந்த வார்த்தையைச் சொல்லிச் சொல்லி அதிசயிக்கிறது.இது கவிதைக்கே சாத்தியம். மரபுக்கவிதை என்றில்லை,நவீன கவிதையிலும் “விரிகிறதென் யோனிஎன்ற சொல்ச்சாட்டை சோர்ந்த மூளையைச் சொடுக்கும்போதும் இது சாத்தியமாகிறது. இதையே “நினைவின் விருந்தாளியாக ஒரு கவிதை பிரவேசிக்கும் போது நமது உலகமே மாறிப் போகிறது என்ற ஆங்கில மேற்கோள் நமக்கு உணர்த்துகிறது.

ஆனால் மொழியின் பரிணாமத்தைப் பார்க்கும் போது, “கவிதை என்பது சிறந்த வார்த்தைகளின் சிறந்த வரிசை(POETRY IS BEST WORDS IN BEST ORDER) என்கிற ஒரு விளக்கத்தின் படி, சொல்லாடலின்படி - இதை ஒரு கவிதைக்கான வரையறையாகக் கொள்ள முடியாது, கவிதையை அப்படி எந்த ஒரு வரையறைக்குள்ளும் அடக்க முடியாது-பார்த்தோமானால் கவிதைக்கு முந்தியே பல வெளிப்பாட்டு முறைமைகள் இருந்திருக்க வேண்டும். நாட்டுப்புறப் பாடல்கள், பாணர் பாடல்கள் எல்லாம் இவற்றிற்கு உதாரணம். இந்த இடத்தில் ஒரு தகவலைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.இன்றைக்கு முப்பத்தியிரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குகை ஓவியங்களை ஃப்ரான்ஸின் ஒரு குகையில் கண்டு பிடித்துள்ளார்கள். குகை ஓவியங்களின் முதல்க் கண்டுபிடிப்பு இது என்கிறார்கள். அவை சுண்ணாம்புக்காரையின் மீது தீட்டப்பட்டுள்ளன. அவற்றில், பெண்ணின் பிறப்புறுப்பும், மிருகங்களும் உள்ளன என்பது மனோஆராய்ச்சியாளருக்கும் வரலாற்று ஆசிரியர்களுக்கும், மொழி வல்லுனர்களுக்கும் கூடுதல் சுவாரஸ்யம் தரக் கூடியவை. இதைப் பார்க்கையில் முதன் முதலில் சித்திர எழுத்துக்களாலான ஒரு வகை வெளிப்பாட்டு உத்தியே மானுட சிந்தனையின் ஆதி வித்து என்று உணர முடிகிறது. தவிரவும் உடல் - அதன் வலி, தாகம், பசி, பயம், சுகம் ஆகிய புலனுணர்வுகள் சார்ந்தே சிந்தனை ஆற்றல் வேர் விட்டிருக்கிறது.. அரவிந்தாஸ்மரத்து அன்னை சொல்கிறார். உடலைப் பொறுத்து அதன் உழைக்கும் திறனே அறிவு என்று. இது ஆதி மானுட நிலை பற்றிய பரிணாமத் தேடலின் விளைவு என எண்ண வைக்கிறது. இதிலிருந்து நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள முடிகிறது.ஆதி மனிதனின் உடலுக்கு நேர்ந்த பல அனுபவங்களே அவனைச் சிந்தனையின்பால் செலுத்தியிருக்க வேண்டும்.இதில் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவிற்கு, அவர்களது நிலவியல் அமைப்பு, வாழ்க்கை முறை ஆகியவற்றால் ஏற்பட்ட அனுபவங்களை அவர்கள், ஏதோ ஒரு வெளிப்பாட்டு உத்தியினால், தங்களுக்கிடையே பகிர்ந்து, தொகுத்து,ஏதோ ஒரு கருத்துக்கு வந்திருக்கலாம். இந்த அனுபவப் பகிர்தல் நிகழ்வினை சிந்தனை, மூளை என்ற அலகுகளால் பின்னர் குறிப்பிட்டிருக்கலாம்.

நவீன கவிஞர் திரு க. மோகனரங்கன் இதனையே “மனித மனத்தின் இயக்கமானது சிந்தனை, உணர்ச்சி என்ற இருவேறு எல்லைகளுக்கு நடுவே பல நிலைகளில் நிகழ்கிறது.இதில் சிந்தனை என்பது பொதுவாக நேரிடும் அனுபவங்களைத் தொகுத்து ஆய்ந்தறியும் அறிவு ஒருமுகப்படுத்தும் எண்ணங்கள் அதன் வழி உருவாகும் திட்டவட்டமான கருத்துக்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.இதன் குறியீடாக ‘மூளைஉருவகப் படுத்தப் படுகிறது.மாறாக உணர்வுகள் என்பது நினவுகள் மொழி, இனம் நம்பிக்கைகள்,அதன் காரணமான நெகிழ்ச்சி மற்றும் புலன் மெய்ப்பாடுகள் சார்ந்து ஒரு வசதி கருதி இதயம் என்பதுடன் அடையாளப்படுத்தப் படுகிறது.., என்று தீர்க்கமாகச் சொல்லுகிறார்.

சிந்தனையும் உணர்ச்சியும் என்கிற இருமை(BINARY) ஒன்றுக்கொன்று எதிரானதாகத் தோன்றினாலும், சிந்தனை என்பது தர்க்க பலத்தைக் கொண்ட தத்துவம் சார்ந்து இயங்குகிறது, என்றாலும், உண்மையில் உணர்வின் சாரமில்லாமல் தத்துவம் சாத்தியமில்லை.கவிதை தர்க்க ஒழுங்கை மீறி உணர்வின் பிரவாகமாவே எப்போதும் இருக்கிறது.ஏனெனில் சிந்தனை நிலைப்படுத்துகிற தத்துவமும்,அது நிர்ணயிக்கிற சமூக ஒழுங்கும் காலந்தோறும் சிதைந்து மாறுகிற தன்மையுடையது.இங்குதான் கவிதை கால தேச வர்த்தமானங்கள் தாண்டி நிலைக்கிறது. சமூகச் சிதைவுகளை காட்டி, தத்துவங்களை எள்ளி நகையாடுகிறது.

இயற்கை நிகழ்வுகளும், வாழ்வியல் சித்திரங்களும், அவற்றைக் காட்சிப் படுத்துதல் வழியே அபூர்வமான படிமங்களாக, கவிதையில் இடம்பிடிப்பது, நமது தமிழ்க் கவிதையில் சங்ககாலம் தொட்டு தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.ஆனால் இந்நிகழ்வுசார் படிமங்கள் காலத்திற்கேற்றாற் போல,நவீன கவிதையில் அர்த்த மாறுதல்களை அடைகின்றன..சமூக நிகழ்வுகளுக்கு திட்டவட்டமான வரையறை கிடையாது என்பதால் கோட்பாடுகளையும் சட்டகங்களையும் மீறி புது வியாபகம் கொள்கின்றன.

அகநானூற்றில் ஒரு கவிதை கயமனார் எழுதியது. அதில் ஒரு வரி, வேர்முழுது உலறி நின்ற புழற்கால்

தேர்மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்.. என்று தொடங்கும்..முற்றிலும் காய்ந்த மரத்தில் சிள் வண்டுகள், தேரின் மணிகள் போல ஒலிக்கின்றன...என்ற அர்த்தத்தில்.இந்தக் கவிதை முழுவதுமாக அகச்சுவை கொண்டது. ஆனால் இன்றைய ஒரு கவிதை, சங்கர ராம சுப்ரமணியன் என்ற கவிஞர் எழுதியது......

மலையும் மலை மேல் ஒளிரும்

பசுந்தளிரும்

இன்று புதிது.

அந்த மரத்தைக் குடையத்

தொடங்கியுள்ள

வண்டின் ரீங்காரம் போல்

என் சந்தோஷம்

புராதனம் மிக்கது.

முன்னதில் ஒரு சோகம் நேரிடையாய் இழையோடுகிறது. மேற்சொன்ன இன்றைய கவிதையின் தொனி நமக்கு விவரிக்கும் அனுபவம் வித்தியாசமானது. கவிமனம் பசுந்தளிர் பார்த்து சந்தோஷம் கொள்கிறது. ஆனால் அதே வேளை வண்டுக் குடைச்சலால் மரம் அனுபவிக்கும் துயரையும் அது உணர்கிறது. அதனாலேயே கவிஞன் வண்டின் ரீங்கார இசையைப் புராதானமான ஒன்றாய்க் காண்கிறான். இது ஒரு தொடரும் முரணாகப் படுகிறது அவனுக்கு. நவீன கவிதை பல்வேறு வித வாசிப்புக்கு இடம் தருவதை நாம் அறிய முடிகிறது

அதே போல இதன் அடுத்த வரியில்

வற்றல் மரத்த பொன்தலை ஓந்தி

வெயிற்கவின் இழந்த வைப்பின் பையுள் கொள.- என்று வரும். காய்ந்த அந்த வற்றல் மரத்தில் பொன் நிற ஓந்தி வெப்பம் தாங்காமல் உச்சிக்கு ஏறுகிறது.இப்படியெல்லாம் அற்புதமான காட்சிகள் நம் சங்கக் கவிதையெங்கும் விரவிக் கிடக்கின்றன.இந்தக் காட்சியை வாசிக்கையில் இன்னொரு நவீன கவிதையின் சில வரிகள் நினைவுக்கு வருகிறது.

தவறுதலாய்

புகைக் கூண்டு வழியே

வீட்டிற்குள் வந்துவிட்ட

ஓணானுக்கு

என்ன நிறம்

மாற்றிக் கொள்வது என்று

தெரியவில்லை.- வீட்டிற்குள் பலவகையான வண்ணத் துணிகள், படங்கள். காணாததற்கு வண்ணத் தொலைக் காட்சி எப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது (இது இலவச தொலைக்காட்சிக்கு முந்தியகாலக் கவிதை).இப்போது ஓணானின் நிலை திண்டாட்டம் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ளுவீர்கள் என்று நினக்கிறேன்.இவை எனது கவிதை வரிகள்.

நவீன கவிதையின் பின்புலம் பெரும்பாலும் நடுத்தரவர்க்க மனோபாவத்திலிருந்து உருவானது.கசடதபற என்ற அற்புதமான பத்திரிக்கையும் வானம்பாடியும் ஒரே காலகட்டத்தில் வெளியானது.கசடதபற, ‘எழுத்து, நடை போன்ற பத்திரிக்கைகளின் தொடர்ச்சி என்றாலும், அதில் வெளித்தெரிந்த கவிஞர்கள், தமிழில் ஒரு புதிய திறப்பை உண்டு பண்ணினார்கள்.ஞானக்கூத்தன், பாலகுமாரன், சுப்ரமணிய ராஜு, வா.மூர்த்தி, கல்யாண்ஜி, கலாப்ரியா, தேவதச்சன், ஆனந்த், ஆத்மாநாம், என்று பலர். எல்லோரும் ஏதாவது பணியில் இருந்த அல்லது பணி தேடிக் கொண்டிருந்த நடுத்தர வர்க்க இளைஞர்கள்.(அதற்கு முந்திய தலைமுறையை பிரதிநிதித்துவப் படுத்தும், க.நா.சு, பிச்சமுர்த்தி, கு.ப.ரா . போன்றோர்,முழுநேர இலக்கியவாதிகள், அவர்களது சோதனை முயற்சிகள் பெரும்பாலும் மேலை நாட்டுத் தாக்கத்துடன்.இருந்தது.) இந்த இளைஞர்கள் தங்கள் முன்னோடிகளைப் போல் கவிதையின் உள்ளடக்கத்திற்காக எந்த வகையிலும் மேலைத் தாக்கத்தை சார்ந்திருக்கவில்லை. ஒரு வகையான தமிழ்ப்படுத்துதல் (TAMILISATION) இவர்கள் கவிதைகளின் உள்ளடக்கத்தில் காணப்பட்டது தமிழ்நிலம், தமிழ் வாழ்வு விரிவாகவே பேசப்பட்டது. நகுலன், பசுவய்யா, பிரமிள், ஞானக்கூத்தன் போன்றோர் முந்திய தலைமுறையின் நீட்சியாக இளைய தலைமுறையினருடன் கூடவே வந்தவர்கள். ஞானக்கூத்தனின் சர்ரியலிஸக் கவிதைகளின் பாதிப்பு 70-களின் கவிஞர்களிடம். வெகுவாகவே இருந்தது.

ஆங்கில வார்த்தைகளை சரளமாக உபயோகித்து எழுதப்பட்ட கவிதைகளைப் பார்க்கையில் (அதை எழுதியவர்களேயும், மற்றவர்களும்) எவ்வளவு தூரம் இன்று அதை விடுத்து வந்திருக்கிறர்கள் என்று பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது

உதாரணமாக (எஸ்.கே.)ஆத்மாநாமின் ஒரு கவிதை-1972-ல் கசடதபற இதழில் வெளிவந்தது.

“வாழ்க்கைக் கிணற்றின்

மோக நீரில்

மோதுகின்ற

‘பக்கெட்டுநான்

பாசக்கயிற்றால்

சுருக்கிட்டு

இழுக்கின்ற

தூதன் யார்?

தமிழின் முக்கியக் கவியாகப் பரிணமித்த ஆத்மாநாமின் ஆரம்பகாலக் கவிதைகள் போல 70-களில் நிறையவே வந்தன.ஆத்மாநாம் போலவே பலரும், பின்னாளில் மிகச் சிறந்த கவிதைகளைத் தந்தார்கள். கவிஞர்.சுகுமாரன் குறிப்பிடுவது போல்70-களுக்கு முன் எழுதியவர்கள், பெரும்பாலும் திருமணமானவர்கள்.அவர்களுடைய கவிதைகளில் காதலி என்றால் மனைவிதான் என்ற நிலை இருந்தது. காதல் மட்டுமென்றில்லை. பல்வேறு உளக்கிடக்கைகளை பகிரங்கப் படுத்த தயக்கம் காட்டினார்களோ என்று தோன்றுகிறது. இந்தத் தயக்கம் எல்லாம் உடைபட்டது 70களில். ஞானக்கூத்தன் தொடங்கி கலாப்ரியா ஈறாக பலர் இதன் காரணகர்த்தாக்களாக இருந்தனர். மத்தியவர்க்க அகஜீவிகளின் அந்தரங்க டைரியாக மட்டும் கவிதை தேங்கிய நிலையில், அவ்வறைக்குள் ததும்பி நுரைத்தபடி கலாப்ரியா கவிதைகளினூடாக நிதரிசனத்தின் சாக்கடை உள்ளே நுழைந்தது.....என்கிற ஜெயமோகனின் அவதானிப்பு இதை விளக்கக்கூடும்.எங்கள் தலைமுறையில் மனத்தடையின்றி காதலைச் சொன்னோம் என்றால், அடுத்த தலைமுறை காமத்தைச் சொல்லுவதில் தயக்கம் காண்பிக்கவில்லை என்கிற சுகுமாரனின் பதிவும் உண்மையே.

வானம்பாடி தன்னை ஒரு இயக்கமாக அறிவித்துக் கொண்டு செயல்பட்டது.விலையில்லாக்கவி மடலாக வெளிவந்த மானுடம் பாடும் வானம்பாடிதனது தனித்த தடத்தை தமிழில் பதித்தது.திராவிட அழகியலின் சாரத்துடன் மார்க்ஸீய கண்ணோட்டத்துடன் அதன் கவிதைப் போக்கு அமைந்திருந்தது. இயக்க ரீதியிலான தொனியில் அதன் கவிதைகள் இருந்தாலும் புவியரசு, , சிற்பி, கங்கை, தமிழ்நாடன், ஞானி போன்றோரின் கவிதைகளில் ஒரு தனித்தன்மை இருந்தது.தமிழ்நாடனின் ‘அம்மா அம்மாதொகுப்பு ஒரு கலைக்களஞ்சியமாக இருந்தது.அதே போல் புவியரசின் மீறல், சிற்பியின் ஒளிப்பறவை ஆகியன பரவலான வரவேற்பைப் பெற்றன.அப்துல் ரகுமானின் பால் வீதி குறிப்பிடத்தகுந்த ஒரு தொகுப்பு வானம்பாடியில் வெளியான பல மொழிபெயர்ப்புக் கவிதைகள் எனக்கு உத்வேகம் தந்தவை பல உண்டு. ஒரு கவிதை சட்டென்று நினைவுக்கு வருகிறது.ஆதித்ய பிரதாப்சிங் என்ற இந்திக் கவிஞர் எழுதியது.

வியட்நாம்

அக்கம் பக்கம்

வசந்தமில்லை-ஒரு

கபாலத்தின் மீது

வண்ணாத்திப் பூச்சி

இவை எதிலும் சாராமல் ஆழ் மன அதிசயங்களில் முத்துக்குளித்து அதன் சிக்கலான ரகசியங்களை அருமையாகக் கவிதையில் சொன்னவர் அபி. இவர் அதிகமும் உணரப்படாமல்ப் போனது தமிழின் துரதிர்ஷ்டமே.மோகனரங்கன் சொல்வது போல். “ஓசைகளின் குழப்பத்திலிருந்து மௌனத்தின் தெளிவிற்கு உள்ளிறங்கிச் செல்லும் இவருடைய சொற்கள் அதன் அடங்கிய தொனி காரணமாகவே அதிகம் வெளித்தெரியாமல் தங்கிப் போயினஎன்பதில் ஓரளவு உண்மையிருக்கிறது.

70-களின் கவிதை கவிஞர்கள் பற்றிப் பேசும்போது, நாம் ஏற்கெனவே சொன்னோம், இவர்களது நடுத்தர வர்க்க மனோபாவம் பற்றி. அதன் ஒரு கூறாக ஒரு விஷயத்தைக் காணலாம். இவர்கள், தங்கள் கவிதைகளின் சாரத்தை மேற்கிலிருந்து பெறுவதில் இருந்த முனைப்பு நமது செவ்வியல்க் கவிதைகளின்பால் இல்லை என்பதே அது.ஆனாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, அதாவது இன்றைய தேதியில் நவீனத் தமிழ்க் கவிதைகளை மீள் வாசிப்புச் செய்யும் போது, நம்முடையை செவ்வியல்க் கவிதைகளின் மறைமுகமான தாக்கத்தை பலருடைய கவிதைகளில் உணர முடிகிறது.தேவதச்சன்,தேவதேவன், கலாப்ரியா என்று மூத்த தலைமுறையும் சரி,மனுஷ்யபுத்திரன், ரவி சுப்ரமணியன், கனிமொழி, ஃப்ரான்சிஸ்கிருபா என்று அடுத்த தலைமுறையும் சரி... அவர்களது கவிதைகளில் சங்கக் கவிதைகளோ அதற்குச் சற்றே பிந்திய கவிதைகளோ அவற்றின் உள்ளார்ந்த பாதிப்பு, ஒரு அந்தர நதியாக ஊடோடியிருப்பதைக் காண முடிகிறது.உதாரணமாக மனுஷ்யபுத்திரன் கவிதை ஒன்று.

சொற்களைத் தின்னும் பூதம்

வெற்றுக் காகிதங்களை

உறையிலிட்டு அனுப்பும் பழக்கமுள்ள பெண்

தன் சொற்களைத் தின்னும் பூதத்திடம்

ஒரு நாள் கண்ணீர் மல்கக்கேட்டாள்

வெற்றுக் காகிதங்களை

படித்துக் கொண்டிருக்கும் மனிதனை

ஒரு நாள்

தின்று வர முடியுமா

உன்னால்.

இது முழுக்க முழுக்க ஒரு நவீன கவிதை. ஆனால், ஒரு விதமான வாசிப்பில் பூதம் சதுக்க பூதமாகவும், கண்ணீர் மல்கும் பெண் கண்ணகியாகவும் (மாதவியுமாகவும்) உருக்கொள்வது தவிர்க்க முடியாத செவ்வியல் தாக்கமாவே தோன்றுகிறது.

இதேபோல்

சிலிர்க்கச் சிலிர்க்க

அலையை மறித்து

முத்தம் தரும் போதெல்லாம்

துடிக்கத்துடிக்க ஒரு மீனைப் பிடித்து

அப்பறவைக்கு தருகிறது

இக்கடல்- பிரான்சிஸ் கிருபாவின் கவிதை இது.தன்னளவிலேயே இது அற்புதமான கவிதை. ஆனாலும்

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து.

என்கிற குறள் நினைவில் நிழலாடுவதைத் தவிர்க்க முடியவில்லை.இரண்டின் இயங்குதளமும் சற்றே ஒன்று என்றாலும் இன்றையக் கவிதை வலி உணரும் மனிதனின் கவிதை. மேற்குறிப்பிட்ட மனுஷ்யபுத்திரன் கவிதையில் தலைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.கவிதைகளுக்கு தலைப்பு என்பது மேலை நாட்டுத் தாக்கம்.ஆனால் தமிழில் அது கவிதைகளுக்கு கூடுதல் பரிமாணத்தையும், இருண்மையைப் போக்குகிற/விளக்குகிற விதமாயும் இருந்தது.அது இன்னமும் தொடர்கிறது.

மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து

நோக்கக் குழையும் விருந்து”-

இது வள்ளுவரின், இரண்டு அற்புதமான அவதானிப்புகளை ஒன்றிணைத்துச் செய்யப்பட்ட, கவிதை. இதன் வாசிப்பனுபவம் தரும் மனநிலையோடு ரவி சுப்ரமணியனின் ஒரு அழகான கவிதையைப் பார்ப்போம்.

காரல் கமறும் வேளை

அவனும் நண்பன்தான்

இந்த இடத்திற்கு

இப்போது வருவான்`என

திர்பார்க்கவில்லை

என்னை விரும்பியவளை

பிறகு விரும்பியவன்

திரையரங்க இடைவேளையில்

பக்கத்துப் பக்கத்து தடுப்பில்

சிறுநீர் கழிக்கும் வேளையில்

முகமன் கூறும் சங்கடம் போல்

வணக்கம் சொல்லிக் கொண்டோம்..

இந்த விஸ்கி

இப்போது

மேலும் கசக்க ஆரம்பித்துவிட்டது.

சமகால சராசரி வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளை, அதன் சாதாரணத் தன்மையில் பொதிந்திருக்கிற குரூர அல்லது மூக்கைப் பொத்திக் கொள்ளவைக்கிற ஒரு காரியத்தைக் கூட இன்றைய கவிஞன் அழகியல் நிறைந்த கவிதையாக்குகிறான். இது நமக்கு நம் செவ்வியல் கவிகள் தந்த வரத்தினால் விளைந்தது. இதன் மூலம் நாம் கடந்து வந்திருக்கிற தமிழ்க்கவிதையின் பரப்பும் திசையும் இப்போதும் எப்போதும் மிக ஆரோக்கியமானது என்று தோன்றுகிறது.

ஒரு நல்ல கவிதை புரிவதற்கு முன்பே தன்னை உணர்த்திவிடும்இது எஸ்ராபவுண்ட் சொன்னது.புரியாமையும் இருண்மையும் நவீன தமிழ்க் கவிதைக்கெதிராக வைக்கப் படுகிற ஒரு குற்றச்சாட்டு. இதைக் குற்றச்சாட்டாகக் கொள்ள் முடியாது.நவீன கவிதை சொல்லியதை விட சொல்லாததன் மூலமே அதிகம் உணர்த்துகிறது. இதற்கும் தமிழில் முன் மாதிரிகள் இல்லாமல் இல்லை. ஒட்டணி என்று சொல்லக்கூடிய பிறிதுமொழிதலணி இலக்கணத்தின் பாற்பட்டு பல கவிதைகளை நாம் புரிந்து கொள்கிறோம். இதற்கு உரையசிரியர்கள் பலவகைகளில் உதவியிருந்தாலும், அவ்வுரைகள் முற்றான முடிவுகளில்லை என்பதை உணர்த்துவதே நவீன கவிதையின் இருண்மைக் கூறுகளில் ஒன்று.ஒரு கவிதை காலம் கடந்து நிற்கவேண்டுமெனில் அதன் உள்ளடக்கம், அது பாடப்பெற்ற காலத்தின் நிகழ்வுகளைத் தாண்டி இன்றைய வாழ்நிலைகளுக்கும், இன்றைய சமூக நிகழ்வுகளுக்கும் பொருந்தி வரவேண்டும்.

“இழைதாக முள்மரம் கொல்க கழையுநர்

கைக்கொள்ளுகம் காழ்த்த இடத்து - என்ற குறளுக்கு உரையாசிரியர்கள் தருவது, எதிரிகளை அரசன் முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்பது போல் அமைந்துள்ளது. ஆனால் இன்றைய சூழலில், எல்லோருமே இந்நாட்டு மன்னர்களாகி விட்ட சூழலில், இன்றைக்கு அது சொல்லும் செய்தி என்னவாயிருக்கும். இன்று அது பொருள் இழந்த கவிதையா..இல்லை.. முள்மரம் என்ற படிமத்தை கவலை அல்லது பயம் என்று கொள்வோமானால் அது இன்றைக்கும் பொருத்தமான கவிதையாக்வே இருக்கிறது.இப்படிக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளும் சுவாரஸ்யததைத் தருவதே கவிதை.

தேவதச்சன் எனது காலத்தின் முக்கியமான கவிஞர்.அவருடைய கவிதைகள் தத்துவார்த்தப் பிண்ணனி கொண்டவை. எனினும் மிக எளிமையான சொற்கள் கொண்டவை.

குளத்துப் பாம்பினது

ஆழத்தில்

தாமரைகள் தலைகீழாய் முளைத்திருக்கின்றன.

மத்-

தியான வெயிலின் தித்திப்பு.

படிக்கட்டில்

ஓரிரு அரசிலைகள்.

இன்னும் ஆழத்தில்

சாவகாசமாய் ஒரு

விண் பருந்து”- இந்தக் கவிதையின் வரிகளில் எந்தப் புதிய சொல்லும் இல்லை. ஆனால் கவிதை அற்புதமான சொற்சேர்க்கை கொண்டு விளங்குகிறது..

ஒரு பாம்பு குளத்தினாழத்தில் இருக்கிறது.கவிதை முழுமையும் அதன் பார்வையிலேயே சொல்லப் பட்டிருக்கிறது.அதைப் பொறுத்து, தாமரை தலைகீழாய்த் தெரிகிறது...மத்தியான வெயிலின் கடுமை ஆழக்குளிர்ச்சியில் தெரியவில்லை.அது விண்பருந்திடமிருந்து தப்பித்திருக்கிறது அல்லது அது பற்றி அதன் ஆழத்தில் அதற்கு பயமில்லை.சாவகாசமாய் இருக்கிறது.வானில் உயரே பறக்கும் பருந்துக்கு, பாம்பு தரையை விட அதிக ஆழத்தில் இருக்கிறது.நீ இன்னும் உயரத்திற்குப் போ, அப்போது மகத்தான ஆழங்களை அறிவாய்என்கிற தத்துவார்த்தச் சொல்லாடலைச் சொல்லாமல் சொல்லுகிறது கவிதை. இதை நீங்கள் இன்னும் கூட அற்புதமாக உங்கள் பார்வையில் உணர முடியும்.

80-களின் மத்தியில் அறியப்பட்ட ஒரு முக்கியமான கவிக்குரல் . சுகுமாரனுடையது. அவருடைய பன்மொழி வாசிப்பனுபவம் அவரை ஒரு சிறந்த இலக்கியவாதியாக நிறுவியிருக்கிறது. இறுக்கமான சொற்கள், கச்சிதமான வரிகள்,அதே சமயம், வெற்று அழகியலைத் தூக்கிப் பிடிக்காத உள்ளடக்கம் என்று எனக்குப் பிடித்த கவிஞர்களில் முதலிடத்தைப் பிடிப்பவர். அவரது அருமையான கவிதை-

ஸ்தனதாயினி

இனிய வெண்கலப் பழங்கள்

உன் மர்ர்பகங்கள்

உள்ளே

உயிர் தழைக்கப் பெய்யவெனத்

திரண்டிருக்கும் பால் மேகம்.

ஒன்றில்

தாய்மையின் கசிவு

மற்றதில்

காதலின் குழைவு

உன் இடதுமுலை அருந்துகையில்

என் கண்களில்

குழந்தைமையின் நிஷ்களங்கம்

அப்போது உன் இடதுமுலை

பரிந்து சுரக்கும் ஊற்று

உன் வலதுமுலை அருந்துகையில்

என் கண்களில்

காதலின் உற்சவம்

அப்போது உன் வலதுமுலை

நெகிழ்ந்து பெருகும் அருவி

குழந்தைமையும் காதலும் கனிந்த மனவேளையில்

மார்பகங்களின் இடைவெளியில்

உணர்கிறேன்

அமைதிக் கடலாய் ஒரு மூன்றாவது முலை..

90-களில் தமிழ்க்கவிதை மகத்தான உயரங்களுக்குப் போயிருக்கிறது.அதனால் ஆழமும் அதிகமாய் இருக்கிறது.இந்தக் காலக் கட்டத்தில், எழுதவந்த கவிஞர்கள் பரந்துபட்ட வாழ்க்கை நிலையிலிருந்து கிளம்பியவர்கள், பார்ப்பன வெள்ளாள ஆதிக்கம் மிகுந்திருந்த கவிதையின் சாதிய அடையாளங்களைத் தகர்த்தார்கள். ஃப்ராய்டிய தத்துவம்,சில ஆதித்தடைகள் பற்றி நன்கு விளக்குகிறது.(TOTEM AND TABOO). ஆதிகாலத்தில் எல்லாப் பெண்களும் தனக்கே வேண்டுமென்று எண்ணுகிற தந்தை, வயது வந்த தன் மகன்களை விரட்டி விடுகிறார், அவர்கள் ஒன்று சேர்ந்து தந்தையைக் கொன்று சாப்பிட்டு விட்டு, அந்தக் குற்ற உணர்வோடு, அண்ணன் தங்கை என்ற தடைகளை ஏற்படுத்துகிறார்கள். உடலுக்காவே தன்னை ‘நிறுவஆரம்பித்து பெண்ணை அடிமை கொண்டிருந்த ஆணாதிக்கத்திற்கு எதிராகப் பல பெண்ணியக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தது.பல விலக்கங்களை (டேபூஸ்) பெண்கள் அதன் ஆதித்தன்மையிலிருந்து உணர்ந்து அதை தோலுரித்துக் காட்டுகிறார்கள், தங்கள் கவிதைகளில்.

பெண் என்ற பால் அடையாளத்தால் தான் அடைந்த துயரங்களை தமிழ்க்கவிப்பரப்பில் முதலில் அழுத்தமாகச் சொன்னவர். சுகந்தி சுப்ரமணியன். அதன் பின்னர் உமாமகேஸ்வரி சிறந்த கவிதைகளை எழுதியுள்ளார்.உதாரணமாக

தொட்டி மண்ணிற்குள்

இட்டவிதையின் மௌனம்

கூடவருகிறது என்னோடு.

சமையலறையின் வெம்மையில்

குளீயலறையின் அவசர நிர்வாணத்தில்

படுக்கையறையின் புழுக்க மோகத்தில்

அலைகிறது அதன் அமைதி

என்னுடன்

தன் வீர்யத்தால்

என் பசுமை தழைக்கட்டுமென்று

மென்மையான மொழிகளில் கவிதை சொன்ன இன்னொரு பெண்குரல், கனிமொழியினுடையது.

எமக்கு என்று

சொற்கள் இல்லை

மொழி எம்மை

இணைத்துக் கொள்வதுமில்லை

உமது கதைகளில்

யாம் இல்லை

எனக்கென்று சரித்திரமில்லை

நீங்கள் கற்றுத் தந்ததே நான்

வார்த்துத் தந்ததே நிஜம்

எனக்கென்று கண்களோ

செவிகளோ, கால்களோ

இல்லை

அவ்வப்போது நீ இரவலாய்.

தருவதைத் தவிர.

குட்டி ரேவதி, சல்மா, மாலதிமைத்ரி, சுகிர்தராணி ஆகியோர் தனித்துவமும் தீவிரமும் கூடிய குரலில் சாதனை படைத்து வரும் கவிஞர்கள்.. “பெண்ணையும் பெண்ணுடலையும் அனைத்தையும் பிறப்பித்து ஊட்டி வளர்க்கும் இயற்கையின் உயிர்சக்தியோடு இணையாகவைத்துக் காணுபவராக..மாலதி விளங்குகிறார்., என்கிறார் மோகனரங்கன்.இதை இவருடைய ‘நீலிதொகுப்பு நன்கு விளக்கும். இவர்கள் தவிர பெண் கவிஞர் என்று தனித்துப் பார்ப்பதை அவ்வளவு விரும்பாத ஆனால் அதே சமயத்தில் பெண்ணீயக் கருத்தாக்கங்களுக்கு ஆதரவாளர்களாக விளங்கும், பல கவிஞர்கள், லதாராமகிருஷ்ணன் (ரிஷி)இளம்பிறை, மு.சத்யா, செ.பிருந்தா, தேன்மொழிதாஸ், தமிழச்சி தங்கபாண்டியன், சக்திஜோதி, லாவண்யா, எனப் பெரிய காத்திரமான பட்டியல் உள்ளது.

80 களின் பிற்பகுதியில் தங்கள் ‘கிரணங்கள் கவிதைகள் மூலம் கண்டெடுக்கப்பட்டு 90 களிலும், இன்றளவும் எழுதி வருகிற மிக முக்கியமான கவிஞர்களாக பிரேம் ரமேஷைச் சொல்லவேண்டும்.இருவரும் பலதளங்களில் இயங்குபவர்கள்,பின் நவீனத்துவம் பற்றிய அதிக பட்ச புரிதல்களுடன் இயங்கிவருபவர்கள்..இன்றைய உலகமயமாக்கல் என்கிற சந்தைப் பொருளாதாரம் - உலகையே தங்கள் உற்பத்திப் பொருட்களுக்காக சந்தையாக்குதல்- நுகர் பொருள் வேட்கையை உருவாக்கி வளர்த்தெடுக்க பல அரசியல், கலாச்சார அழகியல் அமைப்புகளை, வளர்ந்த நாடுகள் உருவாக்கி அலைய விட்டிருக்கின்றன. இதன் மூலம், பல்வேறு பட்ட இனக்குழு அடையாளங்களை அழித்து அவர்களின் நிலம், உற்பத்தி,சுயச்சார்பு எல்லாவற்றையும் பிடுங்கி ஒரே மையத்தில், ஒரு முற்றொருமை அடையாளத்தோடு, அவ்வினக்குழுக்களை நிறுத்த முனைகிறார்கள். இதற்கு வளரும் நாடுகளின் அரசியல்வாதிகள் துணை போகிறார்கள்., அவர்கள் செய்வது என்னவென்று தெரிந்தோ தெரியாமலோ.பின் நவீனத்துவம் இம் மையங்களை அழிப்பதில் முனைப்புக் காட்டுகிறது.இந்த அரசியல் கலாச்சார சதிகளை உடைக்க முற்படுவதே பின் நவீனத்துவம்.அவர்களின் அற்புதமான கவிதை ஒன்று-

கண்ணாடிச் சில்லுகள் பதிக்கப்பட்டு

முடிவற்று நீளும் மதில் மீது

நேர்த்தியாக நடந்து செல்கிறது

பூனை என்ற ஒரு சொல்

ஆம் ஒரு சொல்

அதைக் கொஞ்சம் பின் தொடர்ந்தால்

அது ஒரு வாக்கியமாவதையும்

வாக்கியத்தின் நீண்ட அசைவில்

கண்ணாடிச் சில்லொன்று பொத்து விட்டால்

மதிலின் பக்கவாட்டில் வழியும் குருதி

கவிதையாவதையும் வாசிக்கலாம்

அது பூனையைப் பற்றிய கவிதையாக இருக்குமென்று

நீங்கள் எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள்.

ரமேஷ் பிரேமின் இன்னொரு கவிதை,

இமயவரம்பன்

பனையோலையில் நீ எழுதிய

காதல் கடிதம் தனது

மெய்யெழுத்துக்களின் மீது புள்ளிகொண்டு

அச்சேறுகிறது செவ்விய கவிதையாய்

யோனிப் பிளவை

சரிசமமாக அரிந்த ஆப்பிளின்

உட்பகுதிக்கு உவமை கூறியிருந்தாய்

சங்கம் மருவிய காதலனே

உன் காலத்தில்

காஷ்மீரத்து ஆப்பிள்

தமிழ் மண்ணில் கிடைத்ததா

சங்கம் மருவிய காலமும், மெய்யெழுத்துக்களின் மேல் புள்ளி வைக்கும் முறை ஏற்பட்ட காலமும், காஷ்மீர் ஆப்பிளும் ஒன்றுக்கொன்று முயங்கி நிற்கின்றன.ஆனால் கவிதை முழுமையாக இருக்கிறது.கொஞ்சமான புரிதலுடன் சொன்னால், காலத்தின் மையம் அழிக்கப்ப்ட்டு நிற்கிறது இந்தக் கவிதையில்.

தாயகத்தமிழ்க் கவிதைகளின் பரந்துபட்ட தன்மை, இறுக்கம், சிக்கலான படிமம், இவையெல்லாம் அதிகம் பாதிப்பேற்படுத்தாமல்,பெரிதும் சென்றொழிந்த காலத்து மீட்டல்களிலிருந்து விலகிச் செல்ல முடியாத துயரைச் சொல்லுகிற விதமாய் அமைந்துள்ள ஈழக்கவிதைகள், மனதை தைத்து நம் கையாலாகாத்தனத்தை பகடி செய்கின்றன.சேரன், வ. ஐ.ச ஜெயபாலன், கருணாகரன், திருமாவளவன், சிவரமணி, தமிழ்நதி என்று நீளும், இந்தப் பட்டியல். சிவரமணியின் வித்தியாசமான கவிதைகள் முக்கியமானவை.

90 களுக்குப் பின் வந்த கவிஞர்கள் ஏராளம்.இது தவிர்த்து இணையத்தில் எழுதிக் கொண்டிருப்பவர்கள் இன்னும் ஏராளம் அதிலும் நல்ல கவிதைகள் கிடைக்கின்றன.

90 களுக்குப் பின்னான முக்கியமான கவிஞர் பாலை நிலவனின் கவிதை ஒன்றைப் பார்க்கலாம்

சாட்சியம்

இந்த நிலா ஒளியைத்தான்

நான் யாசித்தது.

ஒரு பழத்தைப் பிழிவது போல்

பிழிந்து அத்ன் சாற்றை

இப்படிஎன் கையில் ஊற்றுங்கள்.

ஒரு மிடறு குடித்தபின் பாருங்கள்.

சகதியும் அகோரமுமான நான்

ஒளித்துண்டாய் விழுவேன்

என் மீது நீங்கள் சுமத்தும்

குற்றங்களுக்கெதிராய்.....

அதுவரைக்கும் இப்படித்தான்.

ஒரு கொடியைப் போன்று காற்றில் அசைந்து கொண்டிருக்கும்

உங்களால் கழற்ற முடியாத

என் வன்மம்.

எதற்கு இந்த வன்மம். ஏன் கவிஞன் அந்நியப்பட்டு நிற்கிறான். நவீன வாழ்வின் பதற்றம் இளைஞர்களை சமூக அரசியல் நிகழ்வுகளில் ஒன்ற விடாமல் செய்திருக்கிறது.. இந்த வகையான அந்நியமாதல் இளைஞர்களின் வாழ்க்கையில் காலந்தோறும் நிகழ்வதுதான்.ஆனால் நவகாலனீய ஆதிக்கத்தின் நிழலில் அவர்களால் நிம்மதியாய் உறங்க முடிய்வில்லை. இது அகவயச் சிக்கல் என்ற போதும் புறக்காரணிகளின் தாக்குதலே அச்சிக்கலுக்கு காரணம்.அவர்களுக்கு நேரிடும் வலி கூட்டுணர்வின் வலி. ஆனால் ஒவ்வொருவரின் மொழியும் தனியாக ஒலிக்கிறது.முந்திய காலகட்டங்களில் தனித்தனி தீவுகளாக அந்நியப்பட்ட இளைஞர்களைக் காண நேரிட்டது .இப்போது ஒவ்வொருவரும் ஒரு தீவாக இருப்பதாகக் கொள்ளலாம்.

பாலை நிலவனின் வார்த்தைகளில் சொல்வதானால், முற்றிலுமாகச் சிதைந்து விட்ட நவீன வாழ்வில், அதன் மீது ஓயாத எதிர்வினை புரிந்து கொண்டிருக்கும் துயர் மிகுந்த வேலையே கவிஞனுக்குச் சாசுவதமாகி விட்டது.தார்மீகமான நம்பிக்கைகள் அழிந்துவிட்ட பெருநகரத்தில் வீடும் அது சார்ந்த அறங்களும் நழுவி விட்டன.கலைஞன் வீட்டைத் துறக்க எத்தனிக்கும் போதெல்லாம் வீடு ஒரு பூனை போல அவன் காலைச் சுற்றுகிறது..தப்பிக்கும் வழியற்றவன் கவிஞன்.ஒரு பூனை போல தன் வீட்டை அவன் சுமந்தாக வேண்டும்.சமூகம் வனவிலங்காகிவிட்ட பின்பு அதில் வாழ்பவனும் வனவிலங்காகி விடுகிறான்.சமூகம் பார்வையற்றது. கலைஞனோ எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

ரசனை வாசகனாக ஒரு கவிதையை பின் தொடர்பவருக்கு இந்தக்காலக் கவிதைகள் பேரதிர்ச்சியைத் தருவதில் வியப்பில்லை மொழியின் பெருங்குகையினுள்நுழைந்து விட்டவனாகவே இன்றையக்கவிஞன் இருக்கிறான். இதற்கு முந்தைய காலகட்டங்களில் ‘அனுபவங்களின் கொந்தளிப்பாக மொழி கவிதையில் செயல்பட்டது. இன்று அது புதிர்மொழியாகச் செயல் படுகிறது. வாழ்வை புதிர் வழிப்பாதைகளால் கடக்க நேரிடுவதால் இது நேரிட்டிருக்கலாம்.

இன்றைய கவிஞர்களில் முக்கியமானவர்களாக யூமா வாசுகி,கரிகாலன், யவனிகா ஸ்ரீராம், சங்கரராம சுப்ரமணியன், லக்ஷ்மி மணிவண்ணன், கடற்கரய், முகுந்த் நாகராஜன்,வா.மணிகண்டன் என்று பலபேரைச் சொல்லலாம்.பட்டியல் முழுமையானதில்லை

நவீனகவிதை வரலாற்றில், ஒடுக்கப்பட்டவர்களின் ஓங்கிய குரல் ஒலிக்க ஆரம்பித்தது 90-களில்தான்.பெண்ணியக்குரல் போலவே தலித்தியம் தன் முழ் வீர்யத்துடன் தடம் பதித்தது.மராத்திய, கன்னட தலித் எழுச்சியைத் தொடர்ந்து தமிழிலும் தலித் எழுத்துக்கள் தோன்றின. இது அம்பேத்கார் நூற்றாண்டை சரியானபடி கொண்டாடும் விதமாக அமைந்ததைக் குறிப்பிட வேண்டும்.தலைமுறை தலைமுறையாக ஒடுக்கப்படவர்களின் ‘தலைமுறைக்கோபம்ஒரு புதிய அழகியலுடன் வெளிப்பட்டது.அன்பாதவன், விழி.பா.இதயவேந்தன், மதிவண்ணன், கண்மணிகுணசேகரன், ஆதவன்தீக்ஷண்யா, ரவிக்குமார்,என்.டி.ராஜ்குமார்.... என பல படைப்பாளிகள் தோன்றினர்.விளிம்புநிலை மனிதர்கள் பற்றி, நான்,பழமலய் போன்றவர்கள் எழுதியிருந்தாலும், மேற்குறிப்பிட்ட புதியவர்களின் இரவல் அனுபவமற்ற கவிப்பரப்பு வேர்வையும் ரத்தமும் சதையும் கொண்டது.ஆனாலும் தலித்திய நாவல்கள், சிறுகதைகள் ஏற்படுத்திய உச்சபட்ச தாக்கத்தை தலித்திய கவிதைகள் உண்டாக்கவில்லை என்ற ஆதங்கத்தினையும் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

இன்றைய கவிதையின் திசை என்று எடுத்துக் கொள்ளும்போது இன்று முனைப்புடன் இயங்குகிற பழைய புதிய தலைமுறைக் கவிஞர்களின் கவிதைகள் அனைத்தையும் சொல்லவேண்டும். அந்த வகையில் இந்தக் கட்டுரை அமைந்திருப்பதாகவே எண்ணுகிறேன்.இந்த கட்டுரைக்கு பல கவிஞர்களின் நூல்கள் குறிப்பாக, க.மோகன ரங்கனின் சொல், பொருள், மௌனம்நூல், சுகுமாரன், கரிகாலன், பாலைநிலவன், பிரேம் ரமேஷ் ஆகியோரின் கட்டுரைகள் உதவியாயிருந்தன, அவர்களுக்கு என் நன்றி.

Visitors